ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35
கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார்.
நம் நாட்டு நாடகத்தை நசுக்கி விட்டார்!
நாசத்தால் கலைத்தாயைக் கொல்கின்றார்கள்
கும்மிருள்தான் சூழ்ந்ததின்று! பல நல்லோர்கள்
குடிப்பதற்குக் கூழின்றி, ஆடை யின்றி
அம்மம்மா, பெருந்துன்பச் சேற்றில் வீழ்ந்தார்
அம்மணிகள் வறுமையினால் கற்பைவிற்று
விம்முகிறார் மனதுக்குள்! வெளியே வந்து
வேடிக்கை காட்டுகிறார்! அந்தோ அந்தோ!
என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.
‘பொதுத் தொண்டு’ குறித்துப் பாடும்போது, இன்றைய நிலையை வேதனையோடு அவர் குறிப்பிடுகிறார்.
இன்றுஎவன் நம் முன்னால் ஆள்கின்றானோ
இவனே நம் கடவுளென எண்ணி அன்னான்
பன்றியைப் போல் நடந்தாலும் பாதம் போற்றிப்
பணிகின்றோம்! நாயை விடக் கீழாய் முன்னோர்
நன்றியினை மறந்து விட்டோம் புத்தன் ஏசு
நற்காந்தி நபிகள் பிரான் போன்றோர் கொள்கை
கொன்று விட்டோம் குழிதோண்டிப் புதைத்தும் கூடக்
கொஞ்சமேனும் நாணமின்றி இருக்கின்றோம் நாம்!
பெரும் புகழைப் பெறவேண்டும் என்றால் நாட்டில்
பேசுதல் போல் செயவேண்டும்! உயிரை ஈந்தும்
அருஞ்செயலைச் செயவேண்டும்! அன்புவேண்டும்
அநியாயம்! நம்மவர்கள் என் செய்கின்றார்?
வருந்துகின்ற தீச்செயலைச் செய்தேனும் நல்
வாய்ப்பதனை ஏற்படுத்திப் புகழாம் இன்ப
விருந்து பெற நினைக்கின்றார்! இந்தப் போக்கை
விரட்டுகின்ற போர்ப்படையாம் என்றன் பாட்டு!
ஒழுக்கமில்லாப் பொதுவாழ்வு ஓட்டைப்பானை; உயிரில்லா நடைப்பிணமும் அதுவே என்று கூறும் கவிஞர், “படுதுரோகம் செய்யும் ஈனர் தம்மை இழுத்து வந்து சந்தியிலே நிறுத்த வேண்டும்; அவரை எல்லாம் கழுவேற்றுகின்ற நாளே விழாநாள் ஆகும்” என்று சீற்றமாய்ப் பேசுகிறார்.
நாட்டின் நிலையும் மக்களின் நிலையும் எண்ண எண்ணச் சீற்றம்தான் வெடிக்கிறது. பெருங்கவிக்கோவிற்கு. இக்கொடுமைகள் எல்லாம் மாறுவதற்கு வழியே இல்லையா என்று கொதிக்கிறது அவர் உள்ளம்.
உழைக்கின்ற மகனுக்குக் கஞ்சி இல்லை
உழுகின்ற உழவனுக்கு உடுத்த இல்லை
அழைக்கின்றார் அறிஞர்பேர் சொல்லி ஆனால்
அவர் பெரிய அயோக்கியராய் வாழ்ந்து விட்டு
தழைக்கின்ற கொள்கைக்கு மதிப்பொன்றுண்டா?
தக்க முறை நீதிநேர்மையாய் நடந்தால்
பிழைப்பதற்கு வழியுண்டா? குற்றம் கொன்று
பெரும்பூமி வாழ்பவர் யார்? சிந்தியுங்கள்!
மக்களெல்லாம் முழுக்குருடர்! குருடர்க்குப் போய்
மற்றுமொரு முழுக்குருடன் வழியைக் காட்டத் போல்
தக்கோன் போல் வடிவெடுத்தான், நடித்துக் காடடித்
தமிழர்களை யேமாற்றுகின்றான்! ஈதை
முக்காலும் அறிகின்ற சான்றோ ரெல்லாம்,
முழுவயிற்றுக் கஞ்சிக்காய் வாழ்வை விற்றார்!
எக்காலம் இக்கொடுமை மாற்றுவோம் யாம்?
என்னருமைப் பாவலரே! எண்ணிப் பாரீர்!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
No comments:
Post a Comment