Showing posts with label குறள்நெறி. Show all posts
Showing posts with label குறள்நெறி. Show all posts

Tuesday, September 08, 2015

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!

திருவள்ளுவரைப் போற்றி

திருவள்ளுவர்01

Ilakkuvanar+01

இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!

தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.
  “இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று வாழ்வும் அவர்களுக்கு வழிகாட்டுவதே இன்றியமையாத பணியாகும்” என்னும் பேராசிரியர் சி. இலக்குவனா், அனைவருக்கும் குறள்வழியைக் காட்டுவதே சிறந்த பணி என்கின்றார். திருக்குறளை ஏன் போன்ற வேண்டும் என்பதற்கு அவர் பின்வருமாறு ‘குறள்நெறி’ இதழில் விளக்குகிறார்:-
  திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், திருக்குறளைத் தமிழில் இயற்றியிருந்தாலும் அவர் அந்நூலைச் செய்தது உலகத்திற்காகவே ஆகும் அதன் காரணமாக அது உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.
   வள்ளுவர் தமிழகத்தில் தோன்றி தமிழில் எழுதியிருந்தாலும், தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால் தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப் பகைவர்களும், மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதன் நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும், நாமும், நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மை அடையத் துணைபுரியும்.
   குறள் நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று சிலருக்கு – ஏன் உயர்ந்த சமயத் தலைவர்களுக்குக் கூட – உண்மையான பொருள் தெரியவில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளாமல் – குறளைக்கும் குறளுக்கும் பொருள் புரியாமல் – குறள் என்பது கோள் சொல்லக்கூடியது என்று கருதி மக்களிடத்தில் உரைத்தும் வருகிறார்கள்.
  மன்பதையில் சாதிப்பாகுபாடும், அரசியல் கட்சிகள் பாகுபாடும் வலிமை பெற்று நிற்கின்றன. பாகுபாடுகள், வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமானால் மக்கள் அனைவரும் குறள்நெறியைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும்.
குறள்நெறிதான் நம் வாழ்க்கை நெறி என்பதை மக்கள் உணர வேண்டும் அல்லவா? அதை எடுத்துரைக்க வேண்டியது ஆன்றோர்கள் கடமை அல்லவா? அதற்கு ஓர் எளிய வழியாகத்தான் திருவள்ளுவர் நினைவைப் பலவகைகளிலும் போற்ற வேண்டும் என்கிறார் பேராசிரியர் இலக்குவனார். திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு வருவதற்கு முன்னரே தொலைநோக்குப் பார்வையுடன் இது குறித்துச் சிந்தித்தார் அவர். திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டினைப் பல்வகைகளிலும் சிறப்பாகக்கொண்டாடுவதன் மூலம் திருவள்ளுவர் புகழ் பரப்பித் திருக்குறள் நெறியை உலக மக்கள் பின்பற்றச் செய்யலாம் என நம்பினார். அதற்காகவே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டினைச் சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும் என அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வேண்டுகோள் விடுத்தார். நாம் எவ்வாறு திருவள்ளுவர் நினைவைப் போற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ் வேண்டுகோள்கள் வருமாறு:-
திருவள்ளுவர் நினைவாண்டு
கி.பி. 1969 சனவரித் திங்கள் பதினான்காம் நாள் (தை முதல் நாள்) திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டு நிறைவுறுகிறது. ஆதலின் அந்தத் தை முதல் அடுத்த தை வரை (1969 முழுவதும்) திருவள்ளுவர் நினைவு ஆண்டாகவே கருதப்பட வேண்டும். உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் நினைவாகப் பின்வரும் செயல்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.
 1.    இந்த ஆண்டில் பிறக்கும் ஆண்குழந்தைகட்குத் திருவள்ளுவர் என்றும் பெண் குழந்தைகட்குத் தமிழ் மறைச் செல்வி என்றும் பெயர் இடுதல் வேண்டும்.
 2.    திருவள்ளுவர் நினைவாக ஆங்காங்கு நினைவுச் சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்த வேண்டும்.
 3.    ஒவ்வொரு நாளும் அவரவர் கடமைகளைத் தொடங்குவதற்கு முன்பு திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரத்தைப் படித்துவிட்டே தொடங்கல்  வேண்டும்.
 4.    நாம் எழுதும் கடிதங்களில் ஏதேனும் ஒரு திருக்குறளை எழுதிவிட்டே கடிதங்களைத் தொடங்க வேண்டும்.
 5.    நாம் பிறரைச் சந்தித்து வணக்கம் தெரிவிக்கும் போது ‘வள்ளுவர் வணக்கம்’ என்று கூற வேண்டும்.
 6.    ‘திருக்குறளில் கூறியுள்ளவாறே வாழ்வோம்‘ என்று நாள்தோறும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு வள்ளுவர் நெறியில் வாழ்தல் வேண்டும்.
 7.    எந்த நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் கல்வி நிலையங்களிலும் பொதுவிடங்களிலும் வள்ளுவருக்கு வணக்கம் கூறி வள்ளுவர் நெறியில் வாழ்வோம் என்று உறுதி கூறித் தொடங்குதல் வேண்டும்.
 8.    திருவள்ளுவர் பெயரால் அறப்பணிக்குழு ஒன்றை அமைத்து வையகமெங்கும் தமிழர் நெறியைப் பரப்ப தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும்.
 9.    திருக்குறளில் புலமை பெற்றுள்ள அறிஞர்கட்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்குதல் வேண்டும்.
 10. தமிழ்க்கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆய்வதற்கும் பரப்புவதற்கும் திருவள்ளுவர் பெயரால் பல்கலைக் கழகம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.
 11.  வள்ளுவர் நெறியை வையகமெங்கும் பரப்பத்தக்க, தமிழக அறிஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் திருவள்ளுவர் பெயரால் தமிழ் ஆராய்ச்சித் துறைகள் அமைக்க வேண்டும்.
 12.   இந்த ஆண்டில் எடுக்கப் பெறும் திரைப்படங்கள் தொடக்கத்தில் திருவள்ளுவர் படத்தையும், சில குறட்பாக்களையும் காண்பித்தல் வேண்டும். கதை நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு திருக்குறள் கருத்துக்களை மிகுதியாகப் பரப்புதல் வேண்டும்.
இவ்வாறு திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடி மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த பசி, பிணி, பகை நீங்கி எல்லோரும்  இன்புற்றிருக்கும் நிலையைத் தோற்றுவிப்போமாக!

  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் இலக்குவனார் விடுத்த வேண்டுகோள்கள் கனவாகவே உள்ளன. இருப்பினும் காலம் இன்னும் இருக்கிறது. இனியேனும் இவற்றை நாம் நிறைவேற்றலாம்!   ‘வாழ்க வளமுடன்’ என அந்த அமைப்பினர் கூறுவதுபோல், நாம் ‘வள்ளுவர் வணக்கம்’ எனக் கூறலாமே! மடல்கள், அழைப்பிதழ்கள் ஆகியவற்றில் திருக்குறளை எழுதிவிட்டுத் தொடங்கலாமே! நம் பிள்ளைகளுக்குத் திருவள்ளுவர் என்றும் தமிழ்மறைச் செல்வி என்றும் பெயர் சூட்டலாமே! குறள்நெறிச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமே! திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் திருவள்ளுவர், திருக்குறளுக்கு இடம் தரலாமே! குறள்நெறி ஆய்வையே முதன்மை நோக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறள் ஆராய்வுப் பல்கலைக்கழகம் நிறுவலாமே! உலகெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் திருக்குறள் துறைகள் ஏற்படுத்தலாமே!
  மேற்குறித்தவாறான ஒவ்வொன்றையும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தத்தம் பகுதிகளில் செய்படுத்தத் தொடங்கினால் குறள்நெறிக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் கண்ட கனவு நனவாகும்! தெய்வப்புலவர் திருவள்ளுவரை உலக மக்கள் நன்கறிவர்! மேற்குறித்த 12 வேண்டுகோள்களையும் திருக்குறள் செம்மல் இலக்குவனார் தந்த கட்டளைகளாக எண்ணி நாம் பின்பற்றுவோம்! குறள் கூறும் மாந்தராக வாழ்வோம்!
இலக்குவனார் வழியில் குறள்நெறி போற்றுவோம்!
குறள்நெறி போற்றிக் குவலயம் காப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan_kuralkuuttam03

கவிஞர் முடியரசன்- இ.மறைமலை


thalaippu_kavignarmudiyarsan
  கனி தமிழ்க் கவிதைபுனைந்த கரங்கள் கயிறு திரிக்கத் தொடங்கிவிட்ட இன்று, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டாம் கண்ணான செந்தமிழைக் கட்டாயத் திணிப்பால் கடுகிவரும் காட்டுமொழியாம் இந்தி அழித்து வரும் இடுக்கண்ணான வேளையிலே, தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தலையாய கவிஞர், தன்னுயிரை நல்குதற்கும் தயங்காது மொழிப்போரில் பங்கு கொண்ட பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கட்குப் பாவின்பம் நல்கிவரும் பாவலர் முடியரனேயாவார் என முட்டின்றிச் சொல்லவியலும். மறைமலையடிகளாரின் மாண்புடைத் தனித்தமிழ் இயக்கத்தைத் தகர்த்தெறிய முற்பட்ட, தீந்தமிழில் திரைக்கவிகளை எழுதித்திரட்டிவிட்ட சில தான்தோன்றிகளைப் போலன்றித், தமிழாலே உயிர் வளர்த்தும் தமிழ்காக்க வகையறியாக் கள்ளதாசர்களைப்போலன்றித், தமிழ்க்கவி உலகிற்குத் தானே தலைவன் எனப் பறையறையும் தம்பட்டங்களைப்போலன்றிக் குடத்திலிட்ட விளக்காகக் குணமென்னும்குன்றேறி நின்ற பான்மையராய் விளங்குகிறார். அவரது மொழிப்பற்று சூழ்நிலை வயத்தால் எழுந்ததன்று; பருவநிலையால் பெருகிவரும் காட்டாறுபோலன்றித் தண்ணென்றொழுக்கம் தழுவிச் செல்லும் வற்றாத ஆறுபோன்று நிலைத்த பான்மையுடையது.
  செந்தமிழ் நாட்டினைத் தந்தையர்நாடெனத் தலைமேல் போற்றி அருந்தமிழ்க் கவிதை விருந்தளித்த பெருங்கவிஞன் பாரதி, குன்றிய தோளுடைய இன்றைய தமிழரின் இழிநிலை போக்கிடத் தமிழியக்கம் கண்ட தனிப்பெருந்தகையோன் பாரதிதாசன் ஆகியோர், விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து நடாத்துபவர், தோற்றம் மறைவிலாத் தொல்தமிழ் இன்று வேற்றவரின் மொழியால் வெதும்பி வாடுவதை ஆற்றாது கனன்றெழுந்து ஊற்றாகப் பெருகிவரும் உணர்வுகளை ஆற்றொழுக்காய் அருந்தமிழில் அமைத்து நயமிக்க கவிதைகளாக நமக்களித்த முடியவரனேயாவார் என்பதற்கு அவரது கவிதைகளே கரி பகரும்.
  அவரது புதுமை நோக்கிற்கு ஒரு சான்று: நிலவு, விண்மீன்கள், தாமரை ஆகியவற்றை ஒரு சேரக்காணின் நடன அரங்கத்திற்கு ஒப்பிடுதல் கம்பர் வழிவந்தோர் மரபு. குலவி சீர்த்தமிழறிஞர் நிலவுதமிழ்ப்பெருமை பரப்ப மேடையேறி நிற்கும்போது, கல்லெறிந்து காயப்படுத்தும் கீழ்மக்கள் நிறைந்த தமிழ்நாட்டுப் பேச்சு மேடையை நினைவுகூர்கிறார் கவிஞர்.
மதியுடையோர் பேசுவதைக் கேட்டல்நன்று
மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம்
அதுமகிழ வானத்து மேடைஏறி
அம்புலியார் சொற்பொழிய, முகிலன் ஓடி
எதிரியெனக் கூட்டத்துள் ஒளி மறைத்தான்
இடியிடித்தான்,குழப்பத்தை ஆக்கிவிட்டான்
இதிலென்ன கண்டனனோ? மதியர்நாளை
ஏறாமல் இருப்பாரோ மேடைமீது?
என அழகாகத் தமிழ்நாட்டுப் பேச்சு மேடையைச் சொற்போர் புரிவோருடன் கற்போர் புரிவோரை வருணனை செய்கிறார்.
“இதிலென்ன கண்டனனோ? மதியர்நாளை
ஏறாமல் இருப்பாரோ மேடைமீது?”
என்ற வரிகளில் அங்கதம் ஒலிக்கிறது. கல்லால் அடித்துவிடுவதால் அறிஞர் வாயிலாக வெளிப்படும் உண்மையை மறைத்துவிடல் இயலாது எனும் உண்மையை உணர்த்துகின்றார். இவர் காலத்துக்கேற்ற கவிஞர் எனக்காட்ட  இஃதொன்றே சாலும்.
  இக்காலம் தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கேடுகாலமாய் அமைந்துள்ளது. இதனைத் தன் நூல்தோறும் கவிதோறும் உணர்த்துகிறார் கவிஞர். மொழியை வளப்படுத்தும் தனித்தமிழ் இயக்கத்திற்கும் கவிஞரது பாடல்கள் துணை நிற்கின்றன. தென்றலின் மென்சுகத்தில் திளைக்கும் கவிஞர்
இது பிறந்த மலை எங்கள் தமிழகமே
எனும்போது சிலிர்க்கும் உள்ளம்
எனத் தென்றலுக்கும் தனக்கும் உள்ள உறவை எண்ணி மேலும் மகிழ்வெய்துகிறார். தென்றல் மகிழ்விப்பதையும் வாடை வாட்டுவதையும் எண்ணுங்கால் வடக்கிருந்து வருபவையால் (குறிப்பாக இந்தியால், வடமொழியால்) துயருழந்து வாடுவதையும் தெற்கு இன்பம் படைப்பதையும் எண்ணி மகிழ்கிறார்.
  ஆற்றின் இயக்கம், சார்பற்றுத் தனித் தியங்கவல்ல தமிழ்மொழியில் பிறமொழிகள் கலந்தபோதும் நேர்வுற்று மாசின்றி இயங்கும் பண்பை மட்டும் கவிஞருக்கு நினைப்பூட்டவில்லை. கரையெழுப்பிய கரிகாலனையும் ஆட்டணத்தி வரலாற்றையும் ஏட்டுச்செல்வம் அழித்தொழித்த பதினெட்டாம் பெருக்கையும் நினைப்பூட்டுகிறது. கடலோவெனின் யாதும் ஊர், பிறரெல்லாம் கேளிர் என்ற பற்றுடைய தமிழினத்தார் பரந்த மனப்பான்மையை நினைப்பூட்டுகிறது. சகமெல்லாம் போற்றும் சங்க இலக்கியங்களை அழித்து, புகாரையும் அழித்து இன்று சிங்கநிகர் பன்னீர்ச்செல்வத்தையும் செத்தொழியச் செய்த கடல் நாகையினையும் தரங்கம்பாடியையும் தன் அலைக்கையால் அழிக்கழிக்கிறது. நம் முன்னோர் நெய்த னலெனப் பெயர் சூட்டி, ” இரங்கல் உரிப்பொருளாம் என உரிமைப் பொருளும் தந்ததனால் அழித்தழித்து நம்மை இரங்கச் செய்கிறது என நயத்தோடு கூறுகிறார்.
  தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை. கோவில்களிலும் வேறேதோ மொழி வழங்குகிறது. எனவே,
… தமிழ்நாடும் கோவில்மன்றும்
நாதியற்ற சொத்தோ? உம் சொந்தமன்றோ?
சென்றந்த உரிமைபெற வீரம் இல்லை?
இவ்வினா தமிழ் வழங்காக் கோவிலுள்ளே தலைகாட்டேன் என்று கூறிவிட்டுக் கோயிலிலிருந்து வடமொழியை நீக்க வகை செய்யாது கடமையைத் தட்டிக் கழிக்கும் வீரர்க்கு ஒரு சாட்டையடி! கவிஞன் இருளில் வாழும் தன் தனிமைத் துயரைக் களைதற்குப் பாடும் ஒரு கருங்குயில் எனச் செல்லி(Poet Shelly) கூறுகிறான். சாதிச் சழக்காற்றினால், செல்வ வேறுபாட்டால் ஏற்றத்தாழ்வு பெற்றிருக்கும் இருளடைந்த மன்பதையில் ஒருவர்தான் முடியரசன். அவரது பாவெங்கும் பொதுவுடைமை இயக்கமே தலைதூக்கி நிற்கிறது.
  அரைவயிறு மட்டும் உண்டு இளைப்பாறும் உழைப்பாளியின் சிறு குடிசைமீதும், பெருவயிற்றுப் பணக்காரன் மாடமீதும், வேறுபாடின்றி ஒளிவீசும் நிலவு ஒன்றே கவிஞருக்குப் பொதுவுடைமை ஆட்சியின் மாண்பினைக் காட்டுகிறது. அவரது கவிதைகளின் தொகுதியில் தொழில் ‘உலகு’ என்னும் பகுதியில் அவரது புரட்சிக் கருத்துகள் இடம் பெறுகின்றன. வளமிக்க நாடெனக் கூறப்படும் இந்த நாட்டில் வாழ ஒரு வழியின்ற வறுமைதன்னால் உளம்நொந்து கூலிகளாய்ச் செல்லுகின்றார் ஒப்பற்ற தமிழினத்தார். இந்நிலை பொறுக்காது,
விதி விதி என்று மக்கள்
வீணினில் மாய்ந்து சூழ்ச்சிச்
சதியினில் சிக்கி அந்தோ!
சாய்ந்திடும் நிலைமை கண்டும்
மதியொரு சிறிது மின்றி
மாற்றிட மனமு மின்றி
வதிவது நன்றோ ?நாட்டீர்!
வளமிகக் காண்போம் வாரீர்!
என அறைகூவல் விடுக்கின்றார் கவிஞர்.
  வீரம் மிக்க தமிழ் மறவரே! இலங்கை, பருமா, நாட்டோர், கிழங்கென்றும் கீரையென்றும் எண்ணி நம்மைக் கீழாக்கிவிட்ட இந்த நிலை ஒழிக்கக் களங்காண வாரீர்! கவியரசர் தலைமையிற் படை திரள்போம் வாரீர்! மொழி காக்க, இனங் காக்க வாரீர்! வாரீர்!
-முனைவர் மறைமலை இலக்குவனார்
மாணவப்பருவத்தில் எழுதிய கட்டுரை
குறள்நெறி  தை 02, 1996 / 15.01.65
kuralneri_muthirai_small01

Monday, December 29, 2014

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!


55puthiyapaarvai_ilakkuvanar

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார்.
“பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.
இந்துமதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில்கொள்ள வேண்டியன.
சமயச்சார்பற்ற அரசில் சமயத் தொடர்பான நாட்களுக்கு விடுமுறை விடுவது எதற்கு? நிலநூல் வானநூல் பெருகியுள்ள இக்காலத்திலும், திங்களில் சென்று உறைவதற்குத் திட்டமிடும் இந்நாளிலும், ஞாயிற்று மறைப்புக்கு (Solar eclipse) விடுமுறை விடுகின்றது எற்றுக்கு? இவையெல்லாம் பிராமணர்களின் செல்வாக்கைத்தானே சுட்டுகின்றன. சமயச் சார்பற்றது என்னும் போர்வையில் பிராமணீயமாம் இந்துமதமே ஆட்சி புரிகின்றது.
சட்டம் செய்தால் மட்டும் போதாது. உள்ளங்களும் திருந்த வேண்டும். சாதிமத வேறுபாடுகள் ஒழிந்த மன்பதையை உருவாக்க உளமார உழைத்தல் நாட்டுநலன் நாடுவார் அனைவரின் கடனாகும். கல்விநிலையங்கள் இத்துறையில் முன்னோடிகளாகத் தக்கவழி காட்ட வேண்டும்.’’
குறள்நெறி (மலர்2 இதழ்22): கார்த்திகை 16, 1997 : 1.12.65
இவ்வாறு சாதி சமயமற்ற மன்பதை உருவாகக் கல்விநிலையங்களே வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 46
தரவு : பாபு கண்ணன்