Showing posts with label சி.இலக்குவனார். Show all posts
Showing posts with label சி.இலக்குவனார். Show all posts

Monday, September 25, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்


 

தமிழ்ப்போராளி

பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) 

5. ஞாலப் போராளி

தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய  பேராசிரியரே  ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப்  போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம் 9:  செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)  பேராசிரியர்  இலக்குவனார் தம் பெயருக்கேற்ப‌ே வாழ்நாளெல்லாம் வாழ்ந்தார் என்றும் அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்: “குறிக்கோளைப் பெயராகக் கொண்ட பெருமகனார், தம் வாழ்வாகவே அதனைக் கொண்டமைக்கு, அவர் புரிவு தெரிந்த நாள் முதல் பிரிவு நேர்ந்த நாள் முடிய உள்ள வரலாற்றின் எவ்வொரு பகுதியும் சான்றாக விளங்குதல் கண்கூடு.” (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)
 “வாழ்க்கைப் போர் இல்லாமை, இலக்குவனார் வாழ்வில் ஊடே ஊடே இருந்த காலமும் உண்டு. ஆனால்,மொழிப் போர் இல்லா நாள் அவர் வாழ்வில் இருந்ததே இல்லை!” என்று கூறும் முதுமுனைவர் இரா.இளங்குமரன், “மெய்யான மொழிப் போராளி ஒருவர் எப்படி இருப்பார் என்பதை வரைந்து காட்ட வேண்டும் என்றால்,அவர் இலக்குவனார் வரைவாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. அவரை அறிந்தார் அவரோடு பழகினார் எவரும் இதனை மெய்யாக அறிவர்.” என அறுதியிட்டு உரைக்கின்றார். (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்).
படிப்பது அறிவு வளர்ச்சிக்காக என்று சிலரும் பணியில் அமருவதற்காக எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், பேராசிரியர் இலக்குவனாரோ படிப்பின் பயன் உரிமைகாக்கும்  போராளியாகத் திகழ்வது என்று கூறியுள்ளார்.
“தமிழகத்தின் உரிமைக்கும், தமிழ் மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறுகடனாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இஃதேயாம்”
என்று பேராசிரியர் இலக்குவனார் தம் வாழ்க்கைப்  போர் நூலில் குறிப்பிடுகின்றார். எனவே,  பேராசிரியர் இலக்குவனாரிடம்  இயல்பாக இருந்த குறை களையும் பண்பும் தீங்கினை எதிர்க்கும் உணர்வும் புலவர் படிப்பால் அவரைப்  போராளியாக்கியது எனலாம்.
பேராசிரியர்  இலக்குவனார் எண்ணம், செயல் யாவும் தமிழர் நலன் சார்ந்ததே. எனவேதான், தாம் எழுதிய ‘கருமவீரர் காமராசர்’ நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறித்துள்ளார்:
“தமிழ் எமது உயிர்; தமிழன் உயர்வே தமிழ்நாட்டின் உயர்வு. தமிழ்நாட்டில் தமிழுக்குத்தான் உயர்வு உண்டு. தமிழ்நாடு ஏனைய நாடுகள்  போல் உரிமையாட்சி பெற்றுத் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். குலமும் குடியும் ஒன்றே, வழிபடும் கடவுளும் ஒன்றே. யாதும் ஊரே யாவரும் கேளிர். குறள் நெறியோங்கினால் குடியர சோங்கும். என்ற கொள்கைகளே எம் வாழ்வை இயக்குவன. யாம் ஒரு புலவர் எழுத்தாளர் ஆகவே யாம் யாவர்க்கும் பொதுவான நிலையில் உள்ளோம். கட்சி காரணமாக விருப்போ வெறுப்போ கொள்ளவேண்டிய நிலையில் இல்லோம், ஆனால், தமிழ்ப்பகைவர் எமது பகைவராவர். தமிழ் நண்பர் எமது நண்பராவர்.”
  பிற  போராளிகள் வாழ்வில் குறிப்பிட்ட களத்தில் நின்று மக்கள் நலம் காத்தார்கள். ஆனால்,  பேராசிரியர்  இலக்குவனார் சந்தித்த  போர்க்களங்கள் மிகுதி. இவரைப்போல் வேறு யாரும் இத்தனைப்  போர்க்களங்களைச்  சந்தித்ததில்லை எனத் தமிழாய்வாளர்கள் கூறுவது சரிதானே!
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, September 23, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

(ஙீ‌ஙோ)

  தம் உடல் நலனைக்கருதாமல் தமிழ் நலனைக் கருதி வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாருக்குத் திடீர் நலக்குறைவு ஏற்பட்டது. செருப்புக் கடியால் காலில் ஏற்பட்ட புண் உடனே கவனிக்கப்படாமையால் முற்றி விட்டது; மருத்துவமனையில் சேர்ந்தார்.  பேராசிரியருக்கு நீரிழிவு நோய் உண்டு. அதனால் புண் புரையோடிப் போனதை மருத்துவர்களே கவனிக்கவில்லை. முருகன் தம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பேராசிரியர்  நம்பிக்கை இழந்தார். தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் உள்ளனவே எனக் கருதினார். தம் மரண வாக்கு மூலம்போல் தமிழ் விடுதலை குறித்து அறிக்கை விட எண்ணினார். தாம் கூறும் அறிக்கையை எழுதுமாறு வேண்டியபொழுது அருகிலிருந்தோர் அவர் நலம் அடைந்து வருவார், ஆதலில் இப்பொழுது அறிக்கைவேண்டா என மறுத்தனர். பின்னர் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுபடவேண்டும் என அறிக்கை விட்டால் சிறையில் அடைப்பர் என்றனர். தாம் நோயாளியாக இருப்பதால் இங்கே காவலுடன் இருக்கப்போகிறேன்.  வேறு வேறுபாடு இருக்காது என்றார்.  சிறையில் அடைத்தாலும் சிறையில் உயிர் போவதால் பிறருக்கு எழுச்சியாவது ஏற்படும் என்றார். ஆனால், அவரது அறிக்கையைப் பின்னர் எழுதலாம் என ஒத்திப் போட்டதால் அவர் கருதிய கருத்துகள் வெளிவராமல் போயிற்று.
  இதற்கிடையில் பேராசிரியர் இலக்குவனாரின் உடல்நலக்கேடு அறிந்து கலைஞரும் இனமானப் பேராசிரியரும் சென்னைக்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டினர். அதற்கான ஏற்பாடுகளுக்கு அவர்கள் முன் வந்தாலும் மதுரை மருத்துவர், மதுரையிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார். பேராசிரியர் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனை இயங்கும் தெருவில் முதல்வர் கலைஞர் உரையாற்ற வந்தார். அப்பொழுது தம்மைக் காண அவர் வருவார் எனப் பெரிதும் பேராசிரியர் இலக்குவனார் நம்பினார். ஆனால், அவர் வரவில்லை. அப்படி வராமல் போனது பெரிதும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பேராசிரியர்  இலக்குவனாருக்கு அளித்தது. இந்த அதிர்ச்சி அவர் உடல்நிலையில் சீர் கேட்டை உண்டாக்கிற்று. இதுவரை அவர் உடலில் உறங்கிக் கொண்டிருந்த நோய்கள் ஒவ்வொன்றாக விழித்து எழுந்து அவரை வாட்டின. ஒரு நோய்க்குரிய மருந்து மற்றொரு நோய்க்கு ஒவ்வாமையாக மாறியது. வாழ்க்கை முழுவதும் போராடிய பேராசிரியர் வாழ்வின் இறுதியில்கூட நோயுடன் போராடியே உலக வாழ்வை (ஆவணி 18, தி.பி.2004 / செட்டம்பர் 03, 1973 அன்று) நீத்தார். ஓயாத உழைத்த உலகப் போராளி மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். தமிழுலகம் அழுதது.
“இந்தியை எதிர்க்கு முன்பே ஏனைய மொழிக்க லப்பைச்
 சிந்திய தமிழ்வ ளர்ப்புச் செயலிலக் குவனார்க் காணோம்
 .. ..  ..
 பல்கலைக் கழக ஆட்சிப் பதவியின் தகுதி யெல்லாம்
 மல்கிய புலவ ரேனும் மதுரையில் ஏமாறுண்டார்
 .. ..  ..
 இந்தியை எதிர்த்து வீழ்த்தி இருந்தமிழ் மீட்டுக் காக்கும்
 செந்தமிழ்ப் படையின் மானச் செம்மலை இழந்தோம் என்போம்
..                   ..                    .. ”
என மொழி ஞாயிறு பாவாணர் அழுது அரற்றினார்.
  பேராசிரியர் இலக்குவனார் கனவு கண்ட ஆட்சி அமைந்தும்கூட அவரின் தமிழ்க்கனவுகள் நனவாகாமலேயே கனவுருவாய் மாறிவிட்டார். தமிழர்களின் நீடுதுயிலை நீக்கப் போராடிய உலகப் போராளியை நீடுதுயில் தழுவிக் கொண்டது. ஆரிய நோயைப் போக்கிய மன்பதை மருத்துவர் தம் நோயைக் கவனிக்காமையால் நோய்க்கிரையானார். தமிழ்த்தாய் தன் தவமகனை அழைத்துக் கொண்டாள்.
இந்நிலை ஒருவர் உண்டோ இலக்குவ னாரை ஒப்பார்
 இன்னலே தமிழ்க்கு நேரில் இன்னுடல் ஈய வல்லார்
என்னும் பாவாணரின் வரிகளே, பாரில் உள்ளோரின் அவலக்குரல் ஆனது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, September 19, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) – இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ)

 தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம்.
“இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும் ’ என்று கூறிக் கொச்சை வழக்குகளை எழுதி மொழியைச் சிதைத்து வருகின்றனர். வழக்கு மொழி என்பது இலக்கணம் அற்றது அன்று. அதுவும் திருத்தமுடையதாகவே இருக்க வேண்டும் என்பது தொல்காப்பியர் கொள்கை. அன்றியும் பேசுவதுபோல் எழுத வேண்டுமா எழுதுவதுபோல் பேசவேண்டுமா என்ற ஆராய்ச்சியும் இன்று நிலவுகின்றது. பேச்சு வழக்கு வேறு எழுத்து வழக்கு வேறு என்றாலும் இரண்டும் இலக்கண நெறிக்குக் கட்டுப்பட்டன என்பதே தொல்காப்பியர் கூற்று. மொழியை உருவாக்குவதில் கற்றோர்க்கும் கல்லார்க்கும் பங்குண்டு. கற்றவர்கள் தொகை குறைவு. கல்லாதவர் தொகை மிகுதி. இது பெரும்பான்மையோர் காலம். ஆதலின் கல்லாரைப் பின்பற்றிக் கற்றார் மொழியை வளர்த்தல் வேண்டும் என்பர் சிலர். ஆனால், தொல்காப்பியர் கருத்தோ அற்றன்று. எல்லாத்துறைகளிலும் கற்றோர் வழியே மற்றையோர் செல்ல வேண்டும் என்பது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே. நிகழ்ச்சி அவர்கட்டாகலான என்று கூறியுள்ளார். கற்றோர் கையாளும் நூன்மொழிதான், இனிமை, தூய்மை, வளமை, செம்மை, ஒண்மை, நுண்மை முதலிய பண்புகளைக் கொள்ள முடியும். செந்தமிழ் என்னும் பெயரே சான்று பகரும். எழுத்துமொழிதான் பேச்சு மொழியைத் திருத்திச் செம்மைப்படுத்தி இனிமையாக்கி  வளமுறச் செய்து நிலைக்கச் செய்யும்.” (பேச்சுமொழியும் எழுத்து மொழியும் : குறள்நெறி 1.8.68)
ஊடகங்கள் வாயிலாகத் தமிழ்க் கொலை நடைபெற்று வரும் இக்காலக்கட்டத்திலாவது, நாம் விழித்தெழுந்து எழுத்து நடையைப்போற்றித் தமிழை வாழ வைக்க வேண்டும். கலப்பும் சிதைவும் அற்ற தமிழ்நடை குறித்துப் பேராசிரியர் இலக்குவனார் (கையெழுத்தில் அமைந்த) தம் வாழ்க்கைப் பாவியத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
 “தலைநகர் சென்னையில் தமிழின் வாழ்வு
 கற்றோ ராலும் கல்லா ராலும்
 சிதைவுற்றதுவே;செந்தமிழ் மொழியில்
 அயல்சொல் கலந்தே அளவளாவுதல்
 கற்றவர் என்பவர் நற்றொழிலாயது.
 சொற்களைச் சிதைத்துச் சொல்லாடுதலைக்
 கல்லார் இயல்பாய்க் கைக் கொண்டனரே
 அன்றியும்
 மறுமலர்ச்சிதனை வண்டமிழ்க் களித்திட
 முனைவோர் போன்று முத்தமிழ் மொழியில்
 வேற்றுமொழியின் வேண்டாச் சொற்களை
 நூலறிவில்லார் நுவலும் கொச்சையைப்
 புகுத்தி எழுதி புதுமை படைத்தனர்
 இலக்கணம் எதற்கு எழுத்தாளர்க்கு
 இலக்கணம் அறிந்தோர் எழுத்தாளராகார்
 என்று செம்மாந்தெங்கும் இருந்தனர்.
 மரபு நெறியில் வளர்வதே செம்மொழி
 இன்றும் தமிழ்மொழி நின்று நிலவுதல்
 தொல்காப்பிய நெறி தொடர்ந்து செல்வதே
 ஆதலின் அந்நெறி அனைவரும் போற்ற
 நற்றமிழ் மரபில் நன்னூல் பெருக்கிட
 புலவர்கள் படையைப்பெருக்கிடச்செய்”க
என்பதே பேராசிரியர் இலக்குவனார் வேண்டுகோள். அழிவிலிருந்து தமிழன்னையை மீட்டெடுக்க நாம் ஒவ்வொருவரும் இலக்குவனார் கூறும் வழியில் தமிழ்நெறி காக்கும் படைஞராக மாற வேண்டும்! தமிழ் மொழியையும் தமிழினத்தையும் தமிழுலகையும் காக்க வேண்டும்!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, September 16, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்






தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே)

பயிற்று‌ ‌மொழி குறித்த அரசின் வஞ்சகச் ‌செயல்பாடுபற்றிய ‌பேரா.இலக்குவனாரின் கருத்து வருமாறு:
 தமிழ்ப் பயிற்று மொழியை விரும்பாத ஒருவரைத் தலைவராகக் கொண்ட வல்லுநர்க் குழுவை நியமித்தது. அதன் பயனாகப்  பயிற்று மொழி உரிமை கொடுத்து விட்டோம் என்று கூறி விட்டது.
 எந்த நாட்டிலும் இந்த உரிமை கிடையாது. அங்கெல்லாம் இவ்வாறு வேற்று மொழியில் பயில உரிமை கேட்டால், நாட்டுப் பற்றற்ற தன்மையாகக் கருதப்பட்டு, மிகவும் வெறுக்கப்படும். இங்கு உரிமை கிடைத்து விட்டது. இன்று ஆங்கிலத்தில் பயில உரிமை கிடைத்ததைக் கருதி, நாளைக்கு இந்தியில் பயில உரிமைக் கிளர்ச்சி செவோரும் தோன்றுவர். பின்னர், தெலுங்கர், மராத்தியர், குசராத்தியர் போன்றோரும் கிளர்ச்சி தொடங்கக் கூடும்.
 கல்லூரியில் இவ்வுரிமை கிடைத்தவுடன் உயர்நிலைக் கல்விக் கூடங்களிலும் இவ் வுரிமை வேண்டும் என முழங்கத் தொடங்கி விட்டனர். உயர்நிலைக்கல்விக் கூடங்களில் தமிழ் பயிற்றுமொழி நிலை பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் அதனை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ள உரிமை யளித்தால், ஆங்கிலேயர் ஆட்சியையே மீண்டும் கொள்ளும் அடிமை நிலைக்கு ஒப்பாகும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாவதற்கு ஒரு நாளும் இசைதலே கூடாது. கல்லூரிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழித் திட்டத்தை அகற்ற ஆவன செய வேண்டும். எல்லாக் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி இருக்குமேல் மாணவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் அதனையே ஏற்பர்; ஏற்குமாறு தள்ளப்படுவர். தமிழ்ப் பயிற்றுமொழி வெறுக்கப்படும். ஒதுக்கப்படும்.
 மதுவிலக்குச் சட்டத்தைப் புறக்கணித்து மது அருந்த உரிமை கேட்டால், மறுக்கப்படுவதுபோல், தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தை வெறுத்து அயல்மொழி வழியாகப் படித்தலுக்கு உரிமை கேட்பதையும் மறுக்கும் துணிவு அரசுக்கு வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்தான் எல்லா நிலைகளிலும் பயிற்றுமொழி என்பதனை ஏற்றுக் கொண்ட கொள்கையை உறுதியாக்குவது தமிழக அரசின் தவிர்க்கலாகாக் கடமையாகும்.
 அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வேண்டாத கிளர்ச்சி வென்றதனால், தமிழ் உரிமை பறி போயிற்று; கல்வி நிலை யங்களில் இருந்து தமிழ் விலகும் நிலை வந்து விட்டது. தமிழ்ப் பற்றாளர்களே விழிமின்! எழுமின்! தமிழைக் காக்க விரைந்து செயல்படுமின்! ஊர்கள்தோறும் தமிழ்க்காப்புத் தொண்டர்படை அமையுமின்! உயிர் கொடுத்தேனும் உயிரனைய தமிழைக் காக்க வம்மின்!
குறள்நெறி (மலர் 4: இதழ் 3): தை 18, 2002: 31.1.71

   மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ஒழிவிடமாயிற்று. பேராசிரியர்தான் அடுத்த துணைவேந்தர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்பார்த்தனர். துணைவேந்தர் பணியமர்த்தத்திற்கான பெயர்ப்பட்டிப்பில்(panel) பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரும் இடம் பெற்றது. பேராசிரியர் இலக்குவனார் பெயர் துணைவேந்தராக அறிவிக்கப்பட்டதாகச் செய்தி வந்து பல தரப்புகளிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. ஆனால், செல்வாக்கு உள்ளவர்களின் சொல்வாக்கிற்கு இரையானதால் பேராசிரியர் இலக்குவனார் துணைவேந்தராக அமர்த்தப்படவில்லை. முதல் பட்டிப்பில் அவர் பெயர் இருந்ததாகவும் இரண்டாவது பட்டிப்பில் அவர் பெயர் இல்லை என்பதால் பணியமர்த்த இயலவில்லை என்றும் மழுப்பலான கருத்து தெரிவிக்கப்பட்டது. இத்தகைய மற்றொரு பட்டிப்பு (panel) என்பது முதலும் கடைசியுமாக அப்பொழுது மட்டும்தான் இடம் பெற்றது. பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலான தமிழறிஞர்கள்  அரசிற்குக் கண்டனம் தெரிவித்தனர். மாணவர்கள், தமிழன்பர்கள் என அணி அணியாக வந்து பேராசிரியரைச் சந்தித்துத் தங்கள் குமுறலைக் கொட்டினர். பேராசிரியர் அமைதியாகத் தமிழ்ப்பேராசிரியரைத்தானே அரசு துணைவேந்தராக அமர்த்தி உள்ளது. மகிழ்ச்சி கொள்வோம் என அமைதிப்படுத்தினார்.
  முதலில் வந்த செய்தியால் பேராசிரியரே மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்னும் கருத்து பலரின் உள்ளங்களில் பதிந்து விட்டது. இன்றும் கூட அவரைப்பற்றிப் பேசுபவர்கள் மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார் என்று கூறும் அளவிற்கு ஆழமான கருத்துப் பதிவாக அமைந்து விட்டது. தமிழுக்காக வாழும் போராளி, பல்வேறு போராட்டங்களுக்கிடையே தமிழ்க்கனவுகளை நிறைவேற்றும் போராளி, துணைவேந்தரானால், பயிற்சி மொழிக்கனவை நிறைவேற்றித் தமிழக மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருப்பார் எனக் கருத வேண்டிய அவர் மாணவரே, யார் துணைவேந்தராக இருந்தால் என்ன என்று தடுமாறியதன் விளைவே தமிழுக்குப்பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. எல்லாம் தமிழில், கல்வியின் உச்ச நிலை வரை தமிழில் என்றெல்லாம் நடைமுறைப்படுத்த கனவு கண்ட பேராசிரியருக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றதும் வருத்தம் வந்தது. ஆனால், பதவியை எதிர்நோக்கி வாழ்பவரல்லரே அவர். எனவே, இதனை மறந்து விட்டுத் தம் போர்ப்பணியில் மீண்டும் ஈடுபட்டு விட்டார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்