Showing posts with label சமற்கிருத நூல்கள். Show all posts
Showing posts with label சமற்கிருத நூல்கள். Show all posts

Sunday, May 02, 2021

சமற்கிருத நூல்கள் இழிகாமத்தையே இயம்புகின்றன! – ப. மருதநாயகம்

 அகரமுதல

     03 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 33/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

34/ 69

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)

சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தன் குறுந்தொகைக்கும் சத்தசாயி தொகுதிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுத் தருவதைப் பேரா.ப.மருதநாயகம் எடுத்துரைக்கிறார். குறிப்பால் பொருளுணர்த்தும் உள்ளுறை உவமம் போன்ற உத்திகள் சமற்கிருதத்திற்குச் சென்றன என்றும் அவற்றைத் தொடக்கத்தில் கடன் பெற்ற வால்மீகியும், வியாசரும் அசுவகோசரும் தங்களின் இராமாயணம், மகாபாரதம், புத்தசரிதம் ஆகியவற்றில் திறம்படக் கையாளவில்லை என்றும் சியார்சு ஆருடு கூறியிருப்பதை நினைவு படுத்துகிறார்.

சங்க இலக்கியங்களில் வரும் பெண்ணின் உடல் உறுப்பு வருணனையில் அருவருப்பை(விரசத்தை)க் காணமுடியாது. ஆனால் பிராகிருத இலக்கியங்களிலும் சமற்கிருத இலக்கியங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்திக் காமஉணர்வைத் தூண்டும் வகையில் உள்ளன என்பதையும் விளக்குகிறார். இக்கட்டுரை மூலமாக அகநானூற்றிற்கும் காதாசபுதசதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளதைப் பேரா.ப.மருதநாயகம் எடுத்துக் காட்டியுள்ளார். 

தென்னகத்து அறிஞர்களின் சமற்கிருத நூல்களில் தமிழின் தாக்கம் மிகுதியாக உள்ளது என்பதை இறுதிக்கட்டுரையான ‘ஆதிசங்கரரும் தமிழும்’ தெளிவுபடுத்துகிறது. மேலும், சமற்கிருத நூலார், இடைச்செருகல்கள் மூலம் செய்த மோசடிகள் குறித்துச் செருமானிய அறிஞர் பருனெல் கூறியுள்ளதை நமக்கு விளக்குகிறார். எல்லாக் கூறுகளிலும் இந்தியர்கள் தயாரித்த கள்ள ஆவணங்கள் மிகவும் அலங்கோலமானவையும் திறனற்றவையும் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் வடபுலத்து இலக்கணக்காரர்கள் தமிழர்களுடைய மொழியை ஆய்வதற்கு முன்னரே தமிழர்கள் பிற மொழிச் சார்பில்லாத எழுத்து முறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்கு வலுவான ஏதுக்கள் இருக்கின்றன என்கிறார்.

சங்கரரின் ‘விவேகசூடாமணி’யில் பழந்தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கைக் காணலாம். அவர் எழுதியதாகக் கருதப்படும் ‘செளந்தரியலகரி’ பழந்தமிழ் இலக்கியங்களுக்கும்   காரைக்கா லம்மையாருக்கும் கடன்பட்டுள்ளதையும் பார்க்கலாம். மேலும், ஆதிசங்கரர் தமது தத்துவக் கோட்பாட்டை உருவாக்க நாட்டார் பாடல்களுக்கும் நாயன்மார் பாடல்களுக்கும் கடன்பட்டிருப்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இவ்வாறு நூல் முழுவதும் சமற்கிருத இலக்கியங்கள் தமிழுக்குக் கடன்பட்டுள்ளதை விளக்குகிறார்.  பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள பழம்நூல்களெல்லாம் சங்க இலக்கியங்களுக்கு முந்தையவை எனத் தவறாகவும் பொய்யாகவும் கூறிய காலம் மலையேறிவிட்டது எனப் பன்னாட்டு அறிஞர்கள் வாயிலாகப் பேரா.ப.மருதநாயகம் விளக்கியுள்ளார். சமற்கிருத நூல் ஒன்றிற்கும் பழந்தமிழ் நூல் ஒன்றிற்கும் ஒற்றுமை காணும் போதெல்லாம் அகச்சான்றுகள் கொண்டு சமற்கிருத நூலே தமிழ் நூலில் இருந்து கடன்பெற்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டுவதில் தவறில்லை எனத் தெளிவுபடுத்துகிறார்.

சமற்கிருதப்புலவர்கள் கருத்துகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களைத் தழுவியும் கடன்வாங்கியும் சமற்கிருத இலக்கியங்கள் படைத்துள்ளனர். ஒப்பீட்டு அளவில் தமிழ் இலக்கியங்கள் சிறப்பிற்குச் சமற்கிருத இலக்கியங்கள் ஈடாகா என்பதைப் பேரா.ப.மருதநாயகம் இந்நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.

இந்நூல் பாடநூலாக வைக்கப்படவேண்டும்; இந்நூல் கட்டுரைகள் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்;  அப்பொழுதுதான் நம் நாட்டு மொழி வரலாற்றையும் தமிழின் முதன்மைநிலையையும் அறியும் தலைமுறை உருவாகும். இந்நூலை வெளியிட்ட  தமிழ்ப்பேராயம் பெரிதும் பாராட்டிற்குரியது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 35/ 69 )



Monday, April 12, 2021

அறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்

 

அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

13/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

14/ 69

மரபுக்கதை, வனதேவதைக்கதை, நாட்டார் கதை ஆகியவற்றிலிருந்து தொன்மம் வேறுபட்டது என்பதை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தொன்மங்களிலிருந்து அரிய உவமைகளைப்பெறுவது புறநானூற்றுக் கவிஞர்களுக்குக் கைவந்த கலை என்பதையும் விளக்குகிறார். இவற்றை யெல்லாம் வெளிப்படுத்தும் பல பாடல்களை நமக்கு விளக்குகிறார். இவற்றை நுட்பமாக நோக்கும்போது புறநானூற்றுக் காலத் தமிழ்க் குமுகாயத்தில் விண்ணுலகத் தொன்மங்கள் ஆதிக்கம் செலலுத்தவில்லை என்பதை அருமையாக எடுத்துரைத்துள்ளார்.

அடுத்து வரும் ஐந்தாவது கட்டுரையில் தமிழ்க்கவிதைகள் கூறும் சிறப்பான அறக்கருத்துகளையும் சமற்கிருத நூல்கள் தெரிவிக்கும் அறமற்ற செய்திகளையும் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

தமிழில் நீதி இலக்கிய மரபு தொன்மையானது, பெருமைக்குரியது. முதலில் மேலைநாட்டாரைக் கவர்ந்தவை நமது நீதி நூல்களே.  இதனை விளக்கும் பொழுது போப்பு அடிகளார் கூறும் கருத்தை முன் வைக்கிறார். நாலடியார் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் போப்பு அடிகளார், “தமிழ்க்கவிதைகளிலுள்ள நீதிக் கருத்தைச் சொல்லும் ஒவ்வொரு பாவிற்கும் கூட ஒரு சமற்கிருதச் செய்யுளை அதனோடு நெருக்கமுடையதாகக் காட்ட முடியும்.  ஆனால், இத்தகைய ஒற்றுமை கொண்டுள்ள பாக்கள் பலவற்றுள் அழகு, இயல்பாய் இயங்கல், அகத்தூண்டுதல்,சுருக்கம், தெளிவு ஆகிய தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்க்கவிதையே மூலமென்று நிறுவப்படக் காணலாம்” எனத் தமிழ் நூல்களின் சிறப்பையும் சமற்கிருத நூல்களுக்கு மூலமாய் அமைந்துள்ள தன்மையையும் கூறுகிறாா்.

புறநானூற்றுப் பாடல்கள் உயர்ந்த அறக்கருத்துகளை இலக்கியமாக்கித் தருதலில் வெற்றி பெறுகின்றன. இதன் அருமையை வடநூலார் போற்றும் பத்ருஅரியின் நீதி சதகத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பார் எளிதில் உணர்வர். அந்நூலில் வரும் சில பகுதிகளைப் படித்த அளவிலேயே அங்கு நீதியும் இல்லை, இலக்கியமும் இல்லை என்பதை அறிய முடியும் எனத் தெளிவாக  உணர்த்துகிறார்.

தம்மபதம் கூறும் நீதிகள் புறநானூறு, திருக்குறள் கூறும் நீதிகளிலிருந்து எந்தஅளவுக்கு மாறுபடுகின்றன எனவும் எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார்.

வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கி ஆழ்ந்து எண்ணி உயர் வாழ்விற்கு உரிய கருத்துகளைப் புறநானூறு கவிதையாக்கித் தர நீதி சதகம் மூட நம்பிக்கைகள் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பெறப்பட்ட எண்ணங்களைக் கலையுணர்வின்றிச் சொல்லக் காணலாம். இவ்வுண்மையையும் நீதி சதகக் கருத்துகள் பல வற்றை எடுத்துக்காட்டாகக் கூறிப் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.

போராண்மை மன்னர்களும்  உலாவும் பாவலர்களும்  : புறநானூற்று ஆய்வுகள் (Warring Kings and Wandering Bards: Studies in Puranaanuru)(2012)

புறநானூறு குறித்துத் தனி நூல்கள் எழுதியதுடன் மட்டுமல்லாது பிற நூல்களிலும் புறநானூற்றுப்பாடல்களை விளக்கங்களுடன் அளித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கில நூல்களிலும் மொழிபெயர்ப்புடன் விளக்கங்கள் தந்துள்ளார். அதுபோல் இந்நூலில் சங்கக்கால மன்னர்களையும் சங்கப்புலவர்களையும் பற்றிய ஆய்வுக் கருத்துகளைச் சிறப்பாக அளித்துள்ளார்.

இந்நூலில் பின்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

1.புறநானூறு:கவிதை வடிவங்கள், கருப்பொருள்கள்,  பாங்கு  ஆகியவற்றின் திரட்டு( Purananuru: A Repertoire Of Poetic Forms, Themes and Motifs)

  1. புறநானூறு வீரப்பாவியமா?(Is Purananuru Heroic Poetry?)

3.எருமன் தைகெனின் கற்பனை: புறநானூற்றின் காலமும் சால்பும் ( Herman Tieken’s Personal Conjectures: The Date And Nature Of Purananuru)

  1. வேந்தே எங்களுக்குச் செல்வம் வேண்டா: சங்கப்புலவர்களின் இறுமாப்பு / பெருமிதம் (“We Don’t Want Wealth, O KIng” The Prerogatives Of Sangam Poets)
  2. பரணரின் பாக்கள்: புதிய வரலாற்று ஆய்வை நோக்கி (The poetry of Paranar: Towards A New Historicist Study)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

 



(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 15/ 69)