(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்
13/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
14/ 69
மரபுக்கதை, வனதேவதைக்கதை, நாட்டார் கதை ஆகியவற்றிலிருந்து தொன்மம் வேறுபட்டது என்பதை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தொன்மங்களிலிருந்து அரிய உவமைகளைப்பெறுவது புறநானூற்றுக் கவிஞர்களுக்குக் கைவந்த கலை என்பதையும் விளக்குகிறார். இவற்றை யெல்லாம் வெளிப்படுத்தும் பல பாடல்களை நமக்கு விளக்குகிறார். இவற்றை நுட்பமாக நோக்கும்போது புறநானூற்றுக் காலத் தமிழ்க் குமுகாயத்தில் விண்ணுலகத் தொன்மங்கள் ஆதிக்கம் செலலுத்தவில்லை என்பதை அருமையாக எடுத்துரைத்துள்ளார்.
அடுத்து வரும் ஐந்தாவது கட்டுரையில் தமிழ்க்கவிதைகள் கூறும் சிறப்பான அறக்கருத்துகளையும் சமற்கிருத நூல்கள் தெரிவிக்கும் அறமற்ற செய்திகளையும் ஒப்பிட்டுக் கூறுகிறார்.
தமிழில் நீதி இலக்கிய மரபு தொன்மையானது, பெருமைக்குரியது. முதலில் மேலைநாட்டாரைக் கவர்ந்தவை நமது நீதி நூல்களே. இதனை விளக்கும் பொழுது போப்பு அடிகளார் கூறும் கருத்தை முன் வைக்கிறார். நாலடியார் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் போப்பு அடிகளார், “தமிழ்க்கவிதைகளிலுள்ள நீதிக் கருத்தைச் சொல்லும் ஒவ்வொரு பாவிற்கும் கூட ஒரு சமற்கிருதச் செய்யுளை அதனோடு நெருக்கமுடையதாகக் காட்ட முடியும். ஆனால், இத்தகைய ஒற்றுமை கொண்டுள்ள பாக்கள் பலவற்றுள் அழகு, இயல்பாய் இயங்கல், அகத்தூண்டுதல்,சுருக்கம், தெளிவு ஆகிய தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்க்கவிதையே மூலமென்று நிறுவப்படக் காணலாம்” எனத் தமிழ் நூல்களின் சிறப்பையும் சமற்கிருத நூல்களுக்கு மூலமாய் அமைந்துள்ள தன்மையையும் கூறுகிறாா்.
புறநானூற்றுப் பாடல்கள் உயர்ந்த அறக்கருத்துகளை இலக்கியமாக்கித் தருதலில் வெற்றி பெறுகின்றன. இதன் அருமையை வடநூலார் போற்றும் பத்ருஅரியின் நீதி சதகத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பார் எளிதில் உணர்வர். அந்நூலில் வரும் சில பகுதிகளைப் படித்த அளவிலேயே அங்கு நீதியும் இல்லை, இலக்கியமும் இல்லை என்பதை அறிய முடியும் எனத் தெளிவாக உணர்த்துகிறார்.
தம்மபதம் கூறும் நீதிகள் புறநானூறு, திருக்குறள் கூறும் நீதிகளிலிருந்து எந்தஅளவுக்கு மாறுபடுகின்றன எனவும் எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார்.
வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கி ஆழ்ந்து எண்ணி உயர் வாழ்விற்கு உரிய கருத்துகளைப் புறநானூறு கவிதையாக்கித் தர நீதி சதகம் மூட நம்பிக்கைகள் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பெறப்பட்ட எண்ணங்களைக் கலையுணர்வின்றிச் சொல்லக் காணலாம். இவ்வுண்மையையும் நீதி சதகக் கருத்துகள் பல வற்றை எடுத்துக்காட்டாகக் கூறிப் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.
போராண்மை மன்னர்களும் உலாவும் பாவலர்களும் : புறநானூற்று ஆய்வுகள் (Warring Kings and Wandering Bards: Studies in Puranaanuru)(2012)
புறநானூறு குறித்துத் தனி நூல்கள் எழுதியதுடன் மட்டுமல்லாது பிற நூல்களிலும் புறநானூற்றுப்பாடல்களை விளக்கங்களுடன் அளித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கில நூல்களிலும் மொழிபெயர்ப்புடன் விளக்கங்கள் தந்துள்ளார். அதுபோல் இந்நூலில் சங்கக்கால மன்னர்களையும் சங்கப்புலவர்களையும் பற்றிய ஆய்வுக் கருத்துகளைச் சிறப்பாக அளித்துள்ளார்.
இந்நூலில் பின்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
1.புறநானூறு:கவிதை வடிவங்கள், கருப்பொருள்கள், பாங்கு ஆகியவற்றின் திரட்டு( Purananuru: A Repertoire Of Poetic Forms, Themes and Motifs)
- புறநானூறு வீரப்பாவியமா?(Is Purananuru Heroic Poetry?)
3.எருமன் தைகெனின் கற்பனை: புறநானூற்றின் காலமும் சால்பும் ( Herman Tieken’s Personal Conjectures: The Date And Nature Of Purananuru)
- வேந்தே எங்களுக்குச் செல்வம் வேண்டா: சங்கப்புலவர்களின் இறுமாப்பு / பெருமிதம் (“We Don’t Want Wealth, O KIng” The Prerogatives Of Sangam Poets)
- பரணரின் பாக்கள்: புதிய வரலாற்று ஆய்வை நோக்கி (The poetry of Paranar: Towards A New Historicist Study)
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 15/ 69)
No comments:
Post a Comment