(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 33/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

34/ 69

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)

சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தன் குறுந்தொகைக்கும் சத்தசாயி தொகுதிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுத் தருவதைப் பேரா.ப.மருதநாயகம் எடுத்துரைக்கிறார். குறிப்பால் பொருளுணர்த்தும் உள்ளுறை உவமம் போன்ற உத்திகள் சமற்கிருதத்திற்குச் சென்றன என்றும் அவற்றைத் தொடக்கத்தில் கடன் பெற்ற வால்மீகியும், வியாசரும் அசுவகோசரும் தங்களின் இராமாயணம், மகாபாரதம், புத்தசரிதம் ஆகியவற்றில் திறம்படக் கையாளவில்லை என்றும் சியார்சு ஆருடு கூறியிருப்பதை நினைவு படுத்துகிறார்.

சங்க இலக்கியங்களில் வரும் பெண்ணின் உடல் உறுப்பு வருணனையில் அருவருப்பை(விரசத்தை)க் காணமுடியாது. ஆனால் பிராகிருத இலக்கியங்களிலும் சமற்கிருத இலக்கியங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்திக் காமஉணர்வைத் தூண்டும் வகையில் உள்ளன என்பதையும் விளக்குகிறார். இக்கட்டுரை மூலமாக அகநானூற்றிற்கும் காதாசபுதசதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளதைப் பேரா.ப.மருதநாயகம் எடுத்துக் காட்டியுள்ளார். 

தென்னகத்து அறிஞர்களின் சமற்கிருத நூல்களில் தமிழின் தாக்கம் மிகுதியாக உள்ளது என்பதை இறுதிக்கட்டுரையான ‘ஆதிசங்கரரும் தமிழும்’ தெளிவுபடுத்துகிறது. மேலும், சமற்கிருத நூலார், இடைச்செருகல்கள் மூலம் செய்த மோசடிகள் குறித்துச் செருமானிய அறிஞர் பருனெல் கூறியுள்ளதை நமக்கு விளக்குகிறார். எல்லாக் கூறுகளிலும் இந்தியர்கள் தயாரித்த கள்ள ஆவணங்கள் மிகவும் அலங்கோலமானவையும் திறனற்றவையும் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் வடபுலத்து இலக்கணக்காரர்கள் தமிழர்களுடைய மொழியை ஆய்வதற்கு முன்னரே தமிழர்கள் பிற மொழிச் சார்பில்லாத எழுத்து முறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்கு வலுவான ஏதுக்கள் இருக்கின்றன என்கிறார்.

சங்கரரின் ‘விவேகசூடாமணி’யில் பழந்தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கைக் காணலாம். அவர் எழுதியதாகக் கருதப்படும் ‘செளந்தரியலகரி’ பழந்தமிழ் இலக்கியங்களுக்கும்   காரைக்கா லம்மையாருக்கும் கடன்பட்டுள்ளதையும் பார்க்கலாம். மேலும், ஆதிசங்கரர் தமது தத்துவக் கோட்பாட்டை உருவாக்க நாட்டார் பாடல்களுக்கும் நாயன்மார் பாடல்களுக்கும் கடன்பட்டிருப்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இவ்வாறு நூல் முழுவதும் சமற்கிருத இலக்கியங்கள் தமிழுக்குக் கடன்பட்டுள்ளதை விளக்குகிறார்.  பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள பழம்நூல்களெல்லாம் சங்க இலக்கியங்களுக்கு முந்தையவை எனத் தவறாகவும் பொய்யாகவும் கூறிய காலம் மலையேறிவிட்டது எனப் பன்னாட்டு அறிஞர்கள் வாயிலாகப் பேரா.ப.மருதநாயகம் விளக்கியுள்ளார். சமற்கிருத நூல் ஒன்றிற்கும் பழந்தமிழ் நூல் ஒன்றிற்கும் ஒற்றுமை காணும் போதெல்லாம் அகச்சான்றுகள் கொண்டு சமற்கிருத நூலே தமிழ் நூலில் இருந்து கடன்பெற்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டுவதில் தவறில்லை எனத் தெளிவுபடுத்துகிறார்.

சமற்கிருதப்புலவர்கள் கருத்துகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களைத் தழுவியும் கடன்வாங்கியும் சமற்கிருத இலக்கியங்கள் படைத்துள்ளனர். ஒப்பீட்டு அளவில் தமிழ் இலக்கியங்கள் சிறப்பிற்குச் சமற்கிருத இலக்கியங்கள் ஈடாகா என்பதைப் பேரா.ப.மருதநாயகம் இந்நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.

இந்நூல் பாடநூலாக வைக்கப்படவேண்டும்; இந்நூல் கட்டுரைகள் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்;  அப்பொழுதுதான் நம் நாட்டு மொழி வரலாற்றையும் தமிழின் முதன்மைநிலையையும் அறியும் தலைமுறை உருவாகும். இந்நூலை வெளியிட்ட  தமிழ்ப்பேராயம் பெரிதும் பாராட்டிற்குரியது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 35/ 69 )