Showing posts with label தமிழ்ப்போராளி. Show all posts
Showing posts with label தமிழ்ப்போராளி. Show all posts

Monday, September 25, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்


 

தமிழ்ப்போராளி

பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) 

5. ஞாலப் போராளி

தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய  பேராசிரியரே  ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப்  போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம் 9:  செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)  பேராசிரியர்  இலக்குவனார் தம் பெயருக்கேற்ப‌ே வாழ்நாளெல்லாம் வாழ்ந்தார் என்றும் அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்: “குறிக்கோளைப் பெயராகக் கொண்ட பெருமகனார், தம் வாழ்வாகவே அதனைக் கொண்டமைக்கு, அவர் புரிவு தெரிந்த நாள் முதல் பிரிவு நேர்ந்த நாள் முடிய உள்ள வரலாற்றின் எவ்வொரு பகுதியும் சான்றாக விளங்குதல் கண்கூடு.” (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)
 “வாழ்க்கைப் போர் இல்லாமை, இலக்குவனார் வாழ்வில் ஊடே ஊடே இருந்த காலமும் உண்டு. ஆனால்,மொழிப் போர் இல்லா நாள் அவர் வாழ்வில் இருந்ததே இல்லை!” என்று கூறும் முதுமுனைவர் இரா.இளங்குமரன், “மெய்யான மொழிப் போராளி ஒருவர் எப்படி இருப்பார் என்பதை வரைந்து காட்ட வேண்டும் என்றால்,அவர் இலக்குவனார் வரைவாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. அவரை அறிந்தார் அவரோடு பழகினார் எவரும் இதனை மெய்யாக அறிவர்.” என அறுதியிட்டு உரைக்கின்றார். (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்).
படிப்பது அறிவு வளர்ச்சிக்காக என்று சிலரும் பணியில் அமருவதற்காக எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், பேராசிரியர் இலக்குவனாரோ படிப்பின் பயன் உரிமைகாக்கும்  போராளியாகத் திகழ்வது என்று கூறியுள்ளார்.
“தமிழகத்தின் உரிமைக்கும், தமிழ் மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறுகடனாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இஃதேயாம்”
என்று பேராசிரியர் இலக்குவனார் தம் வாழ்க்கைப்  போர் நூலில் குறிப்பிடுகின்றார். எனவே,  பேராசிரியர் இலக்குவனாரிடம்  இயல்பாக இருந்த குறை களையும் பண்பும் தீங்கினை எதிர்க்கும் உணர்வும் புலவர் படிப்பால் அவரைப்  போராளியாக்கியது எனலாம்.
பேராசிரியர்  இலக்குவனார் எண்ணம், செயல் யாவும் தமிழர் நலன் சார்ந்ததே. எனவேதான், தாம் எழுதிய ‘கருமவீரர் காமராசர்’ நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறித்துள்ளார்:
“தமிழ் எமது உயிர்; தமிழன் உயர்வே தமிழ்நாட்டின் உயர்வு. தமிழ்நாட்டில் தமிழுக்குத்தான் உயர்வு உண்டு. தமிழ்நாடு ஏனைய நாடுகள்  போல் உரிமையாட்சி பெற்றுத் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். குலமும் குடியும் ஒன்றே, வழிபடும் கடவுளும் ஒன்றே. யாதும் ஊரே யாவரும் கேளிர். குறள் நெறியோங்கினால் குடியர சோங்கும். என்ற கொள்கைகளே எம் வாழ்வை இயக்குவன. யாம் ஒரு புலவர் எழுத்தாளர் ஆகவே யாம் யாவர்க்கும் பொதுவான நிலையில் உள்ளோம். கட்சி காரணமாக விருப்போ வெறுப்போ கொள்ளவேண்டிய நிலையில் இல்லோம், ஆனால், தமிழ்ப்பகைவர் எமது பகைவராவர். தமிழ் நண்பர் எமது நண்பராவர்.”
  பிற  போராளிகள் வாழ்வில் குறிப்பிட்ட களத்தில் நின்று மக்கள் நலம் காத்தார்கள். ஆனால்,  பேராசிரியர்  இலக்குவனார் சந்தித்த  போர்க்களங்கள் மிகுதி. இவரைப்போல் வேறு யாரும் இத்தனைப்  போர்க்களங்களைச்  சந்தித்ததில்லை எனத் தமிழாய்வாளர்கள் கூறுவது சரிதானே!
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, September 23, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

(ஙீ‌ஙோ)

  தம் உடல் நலனைக்கருதாமல் தமிழ் நலனைக் கருதி வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாருக்குத் திடீர் நலக்குறைவு ஏற்பட்டது. செருப்புக் கடியால் காலில் ஏற்பட்ட புண் உடனே கவனிக்கப்படாமையால் முற்றி விட்டது; மருத்துவமனையில் சேர்ந்தார்.  பேராசிரியருக்கு நீரிழிவு நோய் உண்டு. அதனால் புண் புரையோடிப் போனதை மருத்துவர்களே கவனிக்கவில்லை. முருகன் தம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பேராசிரியர்  நம்பிக்கை இழந்தார். தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் உள்ளனவே எனக் கருதினார். தம் மரண வாக்கு மூலம்போல் தமிழ் விடுதலை குறித்து அறிக்கை விட எண்ணினார். தாம் கூறும் அறிக்கையை எழுதுமாறு வேண்டியபொழுது அருகிலிருந்தோர் அவர் நலம் அடைந்து வருவார், ஆதலில் இப்பொழுது அறிக்கைவேண்டா என மறுத்தனர். பின்னர் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுபடவேண்டும் என அறிக்கை விட்டால் சிறையில் அடைப்பர் என்றனர். தாம் நோயாளியாக இருப்பதால் இங்கே காவலுடன் இருக்கப்போகிறேன்.  வேறு வேறுபாடு இருக்காது என்றார்.  சிறையில் அடைத்தாலும் சிறையில் உயிர் போவதால் பிறருக்கு எழுச்சியாவது ஏற்படும் என்றார். ஆனால், அவரது அறிக்கையைப் பின்னர் எழுதலாம் என ஒத்திப் போட்டதால் அவர் கருதிய கருத்துகள் வெளிவராமல் போயிற்று.
  இதற்கிடையில் பேராசிரியர் இலக்குவனாரின் உடல்நலக்கேடு அறிந்து கலைஞரும் இனமானப் பேராசிரியரும் சென்னைக்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டினர். அதற்கான ஏற்பாடுகளுக்கு அவர்கள் முன் வந்தாலும் மதுரை மருத்துவர், மதுரையிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார். பேராசிரியர் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனை இயங்கும் தெருவில் முதல்வர் கலைஞர் உரையாற்ற வந்தார். அப்பொழுது தம்மைக் காண அவர் வருவார் எனப் பெரிதும் பேராசிரியர் இலக்குவனார் நம்பினார். ஆனால், அவர் வரவில்லை. அப்படி வராமல் போனது பெரிதும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பேராசிரியர்  இலக்குவனாருக்கு அளித்தது. இந்த அதிர்ச்சி அவர் உடல்நிலையில் சீர் கேட்டை உண்டாக்கிற்று. இதுவரை அவர் உடலில் உறங்கிக் கொண்டிருந்த நோய்கள் ஒவ்வொன்றாக விழித்து எழுந்து அவரை வாட்டின. ஒரு நோய்க்குரிய மருந்து மற்றொரு நோய்க்கு ஒவ்வாமையாக மாறியது. வாழ்க்கை முழுவதும் போராடிய பேராசிரியர் வாழ்வின் இறுதியில்கூட நோயுடன் போராடியே உலக வாழ்வை (ஆவணி 18, தி.பி.2004 / செட்டம்பர் 03, 1973 அன்று) நீத்தார். ஓயாத உழைத்த உலகப் போராளி மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். தமிழுலகம் அழுதது.
“இந்தியை எதிர்க்கு முன்பே ஏனைய மொழிக்க லப்பைச்
 சிந்திய தமிழ்வ ளர்ப்புச் செயலிலக் குவனார்க் காணோம்
 .. ..  ..
 பல்கலைக் கழக ஆட்சிப் பதவியின் தகுதி யெல்லாம்
 மல்கிய புலவ ரேனும் மதுரையில் ஏமாறுண்டார்
 .. ..  ..
 இந்தியை எதிர்த்து வீழ்த்தி இருந்தமிழ் மீட்டுக் காக்கும்
 செந்தமிழ்ப் படையின் மானச் செம்மலை இழந்தோம் என்போம்
..                   ..                    .. ”
என மொழி ஞாயிறு பாவாணர் அழுது அரற்றினார்.
  பேராசிரியர் இலக்குவனார் கனவு கண்ட ஆட்சி அமைந்தும்கூட அவரின் தமிழ்க்கனவுகள் நனவாகாமலேயே கனவுருவாய் மாறிவிட்டார். தமிழர்களின் நீடுதுயிலை நீக்கப் போராடிய உலகப் போராளியை நீடுதுயில் தழுவிக் கொண்டது. ஆரிய நோயைப் போக்கிய மன்பதை மருத்துவர் தம் நோயைக் கவனிக்காமையால் நோய்க்கிரையானார். தமிழ்த்தாய் தன் தவமகனை அழைத்துக் கொண்டாள்.
இந்நிலை ஒருவர் உண்டோ இலக்குவ னாரை ஒப்பார்
 இன்னலே தமிழ்க்கு நேரில் இன்னுடல் ஈய வல்லார்
என்னும் பாவாணரின் வரிகளே, பாரில் உள்ளோரின் அவலக்குரல் ஆனது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, July 22, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி)

  இவ்வாறு பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்கடமையே  கண்ணாகப் பணியாற்றினாலும் பணியிலும் சிக்கல்கள் தவறாமல் தொடர்ந்தன. ஆனால், முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கு இதைக் கொணரப் பேராசிரியர் இலக்குவனார் விழையவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளும்கட்சியாய்த் தி.மு.க.மாறியதுமே “எங்களில் ஒருவர் நீங்கள்” எனக் கூறினார்கள். இவ்வாறு அமைச்சரவையில் பேராசிரியர் சேர வேண்டும் என்பதைப் பேரறிஞர் குறிப்பாக உணர்த்தினார். ஆனால் மூத்த தலைவர்கள் நீங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக விளங்குகிறீர்கள்; உங்களுக்குக் கட்சி அரசியல் ஒத்து வராது என வலியுறுத்தினர். ஆகவே, பேராசிரியர் கட்சித்தலைவர்களே அமைச்சர்களாக ஆகட்டும் என, அதனை நாடவில்லை. பேரறிஞரைச் சந்திக்க ஒருமுறை பேராசிரியர் இலக்குவனார் தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருந்த பொழுது அவர் தம்மைச் சந்திக்க வரிசையில் காத்திருப்பதைப் பார்த்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அதிர்ச்சி உற்றார். தன்னைச் சந்திக்கப் பிறரைப் போல் அலுவலகம் வந்து காத்திருக்கக்கூடாது என்றும் எப்பொழுது சந்திக்க விரும்பினாலும் வீட்டிற்கு இரவு 10.00மணிக்கு மேல் வந்தால் தானே வெளியே வந்து அழைத்துப் பேராசிரியர் இலக்குவனாருக்குச் செவிமடுப்பதாகவும் கூறினார். “தமிழுக்குச் செய்யவேண்டியனவற்றை என் செவியில் சொல்லுங்கள் நான்செய்து முடிக்கின்றேன்” என்றும் சொன்னார். இத்தகைய பெருந்தன்மையும் தமிழ்உணர்வும் கெழுதகைநட்பும் கொண்ட முதல்வர் பேரறிஞரிடம் பேராசிரியர் இலக்குவனார் பணிச்சிக்கல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் தலைவராக இருந்து முதல்வராக வந்த பேரறிஞரிடம் எந்த ஒரு வேலையும் இன்றி அன்பினால் அவரைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து அவரைச் சூழ இருந்தமையால் இல்லத்தில் சந்திப்பதே ஏற்றது என்பதைப் பேராசிரியர் இலக்குவனார் புரிந்து கொண்டார்.
 சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியர் இலக்குவனார் பணியாற்றும் பொழுதுதான் சென்னையில் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் மாநாடுகளில் பேராசிரியரைப் பங்கு கொள்ளச் செய்திருப்பின் தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்பியிருப்பார். கட்சிக் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ளும் அரசுகள் அதற்கான உரிய வாய்ப்பை வழங்கவில்லை. பேராயக்கட்சி வழங்கும் என்று எதிர்பார்க்க இயலாதுதான். எனவே, முதலாம் உலகத்தமிழ் மாநாட்டில் அவருக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இது குறித்து முன்னர்ப் பின்வருமாறு பேராசிரியர் எழுதியிருந்தார்:

தமிழ் ஆராய்ச்சி மாநாடா? அரசியல் மாநாடா?

கோலாலம்பூரில் கூடவிருக்கும் உலகத் தமிழறிஞர் மாநாடு பற்றி முன்பொரு தடவை எழுதியிருந்தோம். முற்றிலும் தமிழுக்கு முதன்மை கொடுக்கும் தமிழ் ஆராய்ச்சி மாநாடாக விளங்குவதற்குரிய கருத்துகளையும் வெளியிட்டிருந்தோம்.
 அம்மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து செல்வோரையும் அதற்குத் தலைமை ஏற்றிருப்போரையும் நோக்குமிடத்து அது ஒரு  தமிழ் ஆராய்ச்சி மாநாடாகுமா என்று வினவத் தோன்றுகின்றது. இங்கு எல்லா நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களே முன்னிற்பது போல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குச் செல்லும் குழுவுக்கும் முதலமைச்சரே தலைமை ஏற்றுள்ளார். இக்குழுவில் இடம் பெற்றுள்ளோரை நோக்கும்போது அரசியல்கட்சி அடிப்படையில் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளவராகவே காணப்படுகின்றனர். செல்வோர் நாற்பதுக்கு மேற்பட்டவர் எனினும் செய்தி இதழ்களிலும் வானொலியிலும் அரசியல் தலைவர்கள் பெயர்களே முழங்கப்பட்டன. தமிழறிஞர் (டாக்டர்) மு.வ.வும் இக் குழுவில் செல்கின்றார். அவரை இக்குழுவுக்குத் தலைவராக அமைத்திருந்தால் தமிழுக்கு முதன்மை கொடுத்ததாகக் கருதப்பட்டிருக்கும்.
 தமிழறிஞர்கள் எனப்படுவோர் தந்நலம் ஒன்றையே கருதி நாட்டு நலத்தையும் மொழி நலத்தையும் புறக்கணிக்கும்வரை தமிழறிஞர்கள் மதிக்கப்பட மாட்டார்கள். ஆதலின் தமிழறிஞர்கள் அரசியலில் பங்குகொண்டு நாட்டுப் பணிபுரிய முன்வரல் வேண்டும்.
 பண்டைத் தமிழ் நாட்டில் தமிழ்ப் புலவர்கள் அரசியலில் முதன்மையிடம் பெற்று ஆட்சி செம்மையாக நடைபெறத் துணைபுரிந்தனரே! ஏன் இக்காலப் புலவர்களும் அவர்கள் வழியைப்பின்பற்றி வாழ்வியலின் ஒரு பகுதியாம் அரசியலில்  ஈடுபடுதல் கூடாது? தமிழறிஞர்கள் அரசியலில் ஈடுபட்டுத் தலைமையிடம் பெற்றாலன்றித் தமிழ் முதன்மையிடம் பெறாது.

 குறள்நெறி : 15.4.66
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்