Showing posts with label பெருந்தலைச் சாத்தனார். Show all posts
Showing posts with label பெருந்தலைச் சாத்தனார். Show all posts

Monday, September 20, 2021

பெருந்தலைச் சாத்தனார்: 5 : ந. சஞ்சீவி

 அகரமுதல




(பெருந்தலைச் சாத்தனார் 4 சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 23

3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி)


இவ்வாறு சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ந்து இனிதிருந்த சாத்தனார் சில காலம் கழித்துச் சங்கம் நிறுவிச் செந்தமிழ் புரக்கும் மாடமலி கூடல்மாநகர் காண விழைந்தார்; அவ்வாறே தொல்லாணை நல்லாசிரியர் கூடியிருந்து தமிழாய்ந்து வந்த அப்பழவிறல் மூதூரை அடைந்தார்; அவண் இருந்த சான்றோர்களுடன் உவப்பத் தலைக்கூடி, பன்னாள் இன்புற்றிருந்தார்; பின்னர்த் தம் ஊர் திரும்பும் வழியில் பாண்டியர் படைத்தலைவனும், கோடை மலைக் கிழவனும், வேளிர் குலத் தலைவனும் சிறந்த கொடையாளன் என்ற புகழ் படைத்திருந்தோனுமாகிய கடிய நெடுவேட்டுவன் என்பானைக் கண்டு பரிசில் வேண்டினர். அவன் எக்காரணத்தாலோ, புலவர்க்கு விரைந்து பரிசில் வழங்காது நீட்டித்தான். பெருமிதம் மிக்க நம் புலவர் அது கண்டு பொறாது வெகுண்டார்! வேட்டுவனை நோக்கி, ‘அஞ்சி வந்தடைந்த பகைவர்க்குப் புகலிடமே, போர் உடற்ற நினைந்தார் வலியழிக்கும் வாட்போரின் மிக்க படையுடையோனே, முல்லை வேலியுடைய கோடை மலைத் தலைவனே, தப்பாது மான் கூட்டங்களைத் தொலைக்கும் சினமிக்க நாய்களையும் வில்லையும் உடைய வேட்டுவனே, செல்வத்தால் சிறந்த சேர சோழ பாண்டியரே ஆயினும், அவர் எம்மை விரும்பிப் போற்றாது ஈதலை யாம் சிறிதும் விரும்பேம். உலகத்தில் பெருமழை பெய்ய வேண்டி நீர் முகக்கக் கடலுள் திரண்டு இறங்கிய முகில் நீர் முகவாது மீளாதது போலப் பரிசிலர் சுற்றம் அரசர்களிடம் களிறும் தேரும் பெறாது வறிதே மீள்வதில்லை. உன்னைப் பாடி வந்த யாமோ, அவை பெறாது போகின்றோம். வேட்டுவனே, நோயின்றி வாழ்வாயாக!’ எனக் கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார்,

கடியநெடு வேட்டுவன் புலவர் பெருமானார் தன்னை ‘நோயின்றி வாழ்வாயாக!’ என நொந்த உள்ளத்தோடு குறிப்பு மொழியால் சினந்துரைத்துச் செல்வதையறிந்து நடுங்கினான்; விரைந்து சென்று புலவர் பெருமானாரை வணங்கி, தன் பிழை பொறுக்க இறைஞ்சினான். வேட்டுவன் பண்பறிந்த புலவரும் இரங்கினார்; அவன் அவைக் களத்திற்கு மீண்டார்; அவன் அன்புடன் போற்றி அளித்த செல்வமெல்லாம் பெற்றுப் பேருவகை கொண்டார்; தம் உள்ளத்து உவகையை வெளிப்படுத்த அவன் அளியும், பண்பும், வலியும், வண்மையும் போற்றி அரியதோர் அகப்பொருட்பாடலையும் பாடி மகிழ்வித்தார்; பின்பு அவன்பால் விடை கொண்டு தம் ஊர் ஏகி இனிது வாழ்ந்திருந்தார்.

சின்னாள் சென்ற பின் சாத்தனார் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும், தோட்டி மலைக்கு உரியவனும், ‘இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிறோடு என்றும் மழை சுரந்தென்ன’ ஈயும் வள்ளியோனும் ஆகிய ‘கழல்தொடித் தடக்கைக் கலிமான்’ நள்ளி என்பான் இளவல் இருங்கண்டீரக்கோ என்பவனைக் காணுதற்கு அவனிடத்துச் சென்றார். அவ்வமயம் அவ்விடத்துப் பெண் கொலை புரிந்த நன்னன் என்னும் வேளிர் குலத் தலைவன் வழி வந்தோனாகிய இளவிச்சிக்கோ என்பவனும் வந்து ஒருங்கே அமர்ந்திருந்தான். அவண் சென்ற புலவர் கண்டீரக்கோப்பெரு நள்ளியின் தம்பி இளங்கண்டீரக் கோவை மட்டும் தழுவி மகிழ்ந்து அளவளாவிவிட்டு, இளவிச்சிக் கோவைத் தழுவாதிருந்தார். அது கண்டு இளவிச்சிக்கோ நாணமுற்றுப் புலவர் பெருமானாரை நோக்கி, ‘புலவீர், என்னை மட்டும் புல்லாமைக்குக் காரணம் யாதோ?’ என வினவினான். அதற்குப் புலவர், ‘காரணம் கூறுவேன்: தொன்று தொட்டே விண் முட்டும் உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்துள்ள நெடுந்தூரமான இடங்கட்குத் தம் கணவர் சென்றிருந்தாலும் பாடி வரும் புலவர்க்குப் பெண்டிரும் தம் கணவன்மார் நிலை நின்று மெல்லிய பிடி யானைகளைப் பரிசிலாகக் கொடுக்கும் வண்புகழ்க் குடியிற்றோன்றிய கண்டீரக்கோவின் தம்பி இவன். ஆகலின், பெரிதும் விரும்பிப் புல்லினேன்; நீயோ, பொய்யா நாவின் புலவர் பெருமக்கள் வசைக்குரியவனாய்ப் பெண் கொலைசெய்த நன்னன் மருகன். அன்றியும், உன் குடியில் தோன்றிய உன் முன்னோன் ஒருவன் பாடிவரும் வயங்குமொழிப் புலவர்க்கு அடைத்த கதவினனாயிருந்து அழியாப்பழி எய்தினான். அது முதல் நின் மணங்கமழ் மலையை எம்மவர் பாடுதல் நீங்கினர். அதனால் யானும் நின்னை முயங்கினேன் இல்லை,’ என விளக்கம் கூறினார். இவ்வாறு புலவர் பெருமானார் அஞ்சாது பெருமித உணர்வுடன் கூறிய பதில் இளவிச்சிக்கோவைச் சிந்தனைக் கடலில் ஆழ்த்தியது.

இந்நிகழ்ச்சிக்குச் சின்னாள் கழித்து மூவன் என்னும் சிற்றரசனிடம் சாத்தனார் பரிசில் கடாவிச் சென்றார். அவன் தன்பால் வந்த புலவரைப் போற்றிப் பரிசில் கொடாது காலந்தாழ்த்தான். அது கண்டு ஆற்றொணாச் சினங் கொண்டார் சாத்தனார். அவனுக்கு நல்லறிவு புகட்ட நினைந்து, ‘ பொய்கைக்கண் மேய்ந்த நாரை நெற் போரின் கண்ணே உறங்கும் நெய்தற்பூக்களை உடைய வயலின் கண் முற்றிய நெல்லை அறுக்கும் உழவர்கள் ஆம்பல் இலையில் கள்ளை வார்த்து உண்டுவிட்டு அருகிலுள்ள கடலின் அலை ஒலியையே தாளமாகக்கொண்டு ஆடும் நீர்வளம் நிறைந்த ஊர்களையுடைய நன்னாட்டு வேந்தே, பல கனிகளையும் உண்ண விரும்பி ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து மலை முழைகள் எதிரொலி முழங்கச்சென்று அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து ஓய்ந்ததாக வருந்திப் பழம் பெறாதே மீளும் பறவைகள் போல நின் விரும்புதற்குரிய பண்புகள் என்னை ஈர்த்து வர வந்து உன் புகழ் பாடிய பரிசிலன் யான். வறியேனாய் மீளக் கடவேனோ? வாட்போர் வல்லோனே, நீ ஒன்றை ஈந்திலையாயினும், யான் அதற்கு வருந்துவேன் அல்லேன்; நீ நோயின்றி இருப்பாயாக! பெரும, நீ என் மாட்டுச் செய்த இவ்வன்பின்மையை நின் நாளோலக்கமன்றிப் பிறர் அறியாது ஒழிவாராக!’ என்று கூறி அகன்றார்.

நிறைமொழி மாந்தராகிய சாத்தனார் நெஞ்சு புண்பட்டுக் கூறிய சொற்கள் கூர்வேலினும் ஆற்றல் பொருந்தியவை யல்லவோ? ‘நீ நோயின்றி இருப்பாயாக!’ எனப் புலவர் பெருமானார் எவ்வளவு மனம் நொந்து கூறினாரோ! சொல்லேருழவரின் நெஞ்சைப் புண்படுத்திய மூவன் வாழ்வு சின்னாளிலேயே பாழ்பட்டது. தெறலருந்தானக் கணைக்கால் இரும்பொறை என்ற சேரமன்னன் மூவனைப் போரில் வென்று அவன் பல்லைப் பிடுங்கித் தன் தலை நகராய தொண்டி நகரத்துக் கோட்டை வாயில் கதவில் அழுத்தினானாம். இச்செய்தியை நற்றிணைப் பாடலொன்று நமக்கு அறிவிக்கின்றது.

பெரியாரைப் பேணா(துஒழுகின் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.’         (குறள், 892)

என்பது பொய்யாமொழியன்றோ?

செந்தமிழ்ச் சான்றோராகிய சாத்தனாரின் இத்தகைய பெருமிதமிக்க வரலாறு தமிழிலக்கியம் கற்பார்க்குக் கருதுந்தொறும் கழிபேருவகை அளிக்க வல்லது.
வறுமைத்தீத் தம்மையும் தம் குடும்பத்தையும் சுட்டு வதக்கினாலும், அட்டாலும் சுவை குன்றாத் தீஞ்சுவைப் பால் போல ஒழுக்கம் தளராது-உணர்வு குன்றாது-கடமை மறவாது-வாழ்ந்து மன்னா உலகத்து மன்னுதல் குறித்துத் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்த பெரும்புலவர் சாத்தனாரின் வறுமையிலும் பெருமிதம் நிறைந்த வாழ்வு நமக்கும் வையகத்திற்கும் என்றென்றும் நின்று நிலவி ஒளி காட்ட வல்ல தலை சிறந்த கலங்கரை விளக்கம் ஆகும்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்

Thursday, September 16, 2021

பெருந்தலைச் சாத்தனார்: 4 : ந. சஞ்சீவி

     17 September 2021      No Comment



(பெருந்தலைச் சாத்தனார் 3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 22

3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி)

 

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.’         (குறள், 657)

எனும் மறைமொழி அறியாதவரா நம் புலவர் பெருமானார்? கடல் போலக் குமுறிய புலவர் நெஞ்சில் கருத்து மின்னல் ஒன்று மின்னியது. அம்மின்னல் ஒளி அவர்க்கு ஒரு நல்வழி காட்டியது. எழுச்சி கொண்டார் புலவர். உணர்ச்சிக் கடலாயிருந்த அவர் உள்ளம் உறுதி மலை யாயிற்று. அவர் தம் துயரெல்லாம் மறந்தார்; வறுமைத் தீயில் வேகும் தம் மனைவியார் சிந்தும் கண்ணீரையும், பசிக்கொடுமைக்கு இரையாகிய தம் அன்புச் செல்வத்தின் அலறலையும் மறந்தார்; தம் வாழ்வினும் நாட்டின் நல் வாழ்வும், அருளின் வெற்றியுமே பெரியவெனக் கருதினார். அக்கணமே குமண வள்ளலிடம் விடை பெற்றுக் கொண்டு காடும் மலையும் பின் ஒழிய, ஒலியினும் ஒளியினும் வேகமாய்ப் பறந்தோடிச் சென்றார் இளங்குமண னிடம், நெட்டைக் கனவில் நீந்திக்கொண்டு தன்னை மறந்து அரியணையில் கிடந்தான் இளங்குமணன். அறத்தின் திருவுருவைக் கானகத்திற்கு அனுப்பிவிட்டு இறுமாந்திருந்த அவன்பால் வாயிற்காவலர் விரைந்தோடி, வாளும் கையுமாய்ப் புலவர் ஒருவர் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். அவன், ‘தடையின்றி வர விடுக!’ என்றான். சிந்தனையில் ஆழ்ந்தது அவன் உள்ளம். ‘வாளும் கையுமாய்ப் புலவரா!…… அண்ணன் தலைக்கு விலை வைத்தோமே!…. என்னாயிற்றோ!’ என நினைந்தான். அவன் தலை சுழன்றது; மனம் கலங்கியது. ‘அண்ணன் தலைக்கு விலை வைத்த-வாள் வைத்த கயவன் நீ!’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் அவன் உள்ளத்தினுள்ளே ஒலித்தது. இளங்குமணன் இதயம் துடித்தது. புலவரும் உருவிய வாளுடன் உள்ளே புகுந்தார். இளங்குமணன் வாளுடன் வரும் வண்டமிழ்ப் புலவரைக் கண்டான். ‘அண்ணன் தலை என் கையிலா!’ என்று அலமந்து நடுங்கியது அவன் மனம். தானாடாவிடினும் தன் சதை ஆடுமன்றோ? அவன் தன் பால் வந்த தண்டமிழ்ப் புலவர்க்கு இருக்கை அளித்து, அவர் வாயினின்று வரும் சொல் நோக்கி நின்றான். அவன் தோற்றத்தையும் துடிப்பையும் கூர்ந்து நோக்கியவராய்ச் செவ்வியறிந்து அவன் செவிகளில் செந்தமிழ் அமுதை வார்க்கலானார் சாத்தனார்:

‘எப்பொருளும் நிலையாத இந்நிலவுலகின் கண்ணே நிலை பெறுதலைக் கருதியவர், தம் புகழை இந்நிலமிசை நிறுத்தித் தாம் மறைந்தனர். அணுகுதற்கரிய தலைமை யுடைய பெருஞ்செல்வர், வறுமையால் இரப்போர்க்கு ஒன்றும் ஈயாமையால் பழமை சான்ற கொடையாளரைப் போலப் பின்னும் தம் பெயரை நிறுத்தி உலகத்தோடு இடையறாது தொடர்ந்து புகழுடன் இன்றும் விளங்குதலை அறியாது போயினர். யான் பாவலர்க்குப் பரிசிலாகச் சிறந்த யானைகளை மிகுதியாகக் கொடுக்கும் அழிவில்லா நற்புகழ் சான்ற வலிய குதிரையையுடைய தலைவனைப் பாடி நின்றேன். ‘பாடி வந்த பரிசிலன் பயனின்றி வாடினனாகப் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது!’ என நினைந்து, தன்னிற்சிறந்த பொருள் வேறின்மையால், தன் தலையை எனக்குத் தருவதற்காக வாளைத் தந்தான் நின் தமையன்! அவனைக் கண்டு வென்றி மிக்க உவகையால் ஓடி வந்தேன்!’ என்ற பொருள் பொதிந்த பாடலைக் கூறினார் சாத்தனார்:

மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே,
துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்(குஈஇ யாமையின்
தொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே;
தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடியல் யானை பாடுநர்க்(குஅருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனெ னாகக் ‘கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடிழந் ததனிறு நணியின் னாதென
வாள் தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்;
ஆடுமலி உவகையொடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே.’         (புறநானூறு. 165)

நல்லிசைப் புலவரின் நற்றமிழ்ச் சொற்களைக் கேட்டான் இளங்குமணன்; நாணினான், வாள் தந்தனனே தலை எனக்கீய,’ என்ற புலவரது மொழி அவன் நெஞ்சைப் பிளந்தது. ஆறாத்துயர் உற்றான் : கண்ணீர் வடித்துக் கற்சிலைபோல நின்றான். சாத்தனார் இளங்குமணன் கண்ணீர் வெள்ளத்தைக் கண்டார். கடைத்தம்பியாய் இருந்த அவன் கல் நெஞ்சும் கரைந்து உருகும் நீர்மையை அறிந்தார்; வசையில்லாக்குடியில் தோன்றிய அவன்பால் விலங்கு மனம் அழிந்து தெய்வமனம் முகிழ்த்தலை உணர்ந்தார்; உவகை கொண்டார்.

இளங்குமணன் தன் பாழ் நெஞ்சின் பான்மை உணர்ந்த அக்கணமே அரியணை-யினின்றும் இழிந்து, புலவர் திருவடிகளில் வீழ்ந்து, ” அருந்தமிழ்ப் பெரியீர், எவ்வாறேனும் கானகம் பற்றியுள்ள என் அண்ணனை நாடாளும் காவலன் ஆக்க வேண்டும். தீ நெறிப்பட்ட என் வாழ்வு இனியேனும் நன்னெறி காணத் துணை புரிய வேண்டும்,” என்று இரந்தான். பாய்மா பூட்டிய தேரின் மீது புலவரை அமரச்செய்து கானகம் நோக்கி விரைந்தான் இளங்குமணன். வான் வழங்கியற்கை வளியென, அதனினும் கடுஞ்செலவுடை மனமெனப் பறந்தது தேர். கல்லும் முள்ளும் நிறைந்த அருவழியெல்லாம் கடந்து சென்று அருட்கோமானைக் கண்டனர் இருவரும். தன் எதிரில் நாணி நின்ற இளங்குமணனைக் குழந்தைபோல வியந்து நோக்கினான் குமணன். ஒளி வீசும் கண்களுடன் நின்ற புலவர் பெருமானார், உவகை பொங்கும் நெஞ்சுடன் ஈரநன்மொழி பல புகன்று இருவரையும் இன்புறச் செய்தார்; அதன் பின் குமண வள்ளலை நோக்கி, ‘நல்லிசைத் தோன்றலே, இனி நாடாளும் பொறுப்பை நீயே ஏற்க வேண்டும்’ என்றார். அரசாளும் பெருந்துன்பத்தினின்றும் நீங்கி இயற்கைச் சூழலின் இனிமையில் மூழ்கியிருந்த குமண வள்ளலோ, சற்றே தயங்கினான். ஆனால், என் செய்வான்! அவன் தலையும் அவன் உடைமை அன்றே. அது புலவர் பெருமானது உரிமையன்றோ? அதற்கு மணி முடி புனைய அவர் விரும்பின், அதை மறுக்க அவனால் இயலுமோ? எனவே, அவன் சான்றோரின் கருத்துக்கு இசைந்தான். நாடு திரும்பினான்; மணி முடி புனைந்தான்; செங்கோல் ஏந்தினான்; அருளாட்சி புரியத் தலைப்பட்டான். அறிந்தனர் புலவரும் பாணரும்; அளவிலா மகிழ்வு கொண்டனர். ‘கொடை வள்ளல் குமணன் வாழ்க! வள்ளலின் தலை காத்த பெருந்தலைச் சாத்தனார் பெருந்தலைச் சாத்தனாரே! அவர் வாழ்க! நீடு வாழ்க!’ என்ற வாழ்த்தொலி எண்டிசையிலும் எதிரொலித்தது. ‘அறம் வென்றது!’ ‘தமிழ் வென்றது!’ என மாந்தர் யாவரும் இன்பக் குரவையாடினர்; பாடினர்; பண்டுபோலக் குமணவள்ளலின் திருநாட்டில் கலை முழங்கியது; கருணை பெருகியது; எழில் நிறைந்தது; இன்பம் சுரந்தது.

மீண்டும் மணி முடி தாங்கிக் குடி புறங்காக்க ஒருப்பட்ட குமண வள்ளலின் திருவோலக்கத்தில் சின்னாளே தங்கினார் சாத்தனார். வறுமையால் துயருறும் தம் தலைவியாரது துயரமும் மழலைச் செல்வத்தின் அவலமும் களைய அவர் உள்ளம் துடித்தது. புலவர் பெருமானரது இதயத் துடிப்பை உணர்ந்தான் குமணவள்ளல். தம் ஒழுக்கத்தோடியைந்த உணர்வால்-சொல்லால்-செயலால் செயற்கருஞ்செயல் புரிந்த செந்தமிழ்ப் பெரியாரைப் பிரிய அவன் மனம் ஒருப்படவில்லை. அவன் பெரிதும் வருந்தினான். எனினும், தன் பிரிவினும் மிக்க பெருங் துயரம் நிறைந்த வறுமை வாழ்வு வாழ்ந்து நலியும் நற்றமிழ்ச் செல்வரின் குடும்பத்தை நினைந்தான்; தன் துயர் மறந்தான்; பொன்னும், மணியும், பாய்மாவும், மதகளிறும் ‘போதும், போதும்’ எனப் புலவர் கூறி மறுக்கும் அளவிற்கு வாரி வழங்கினான். அருள் ஒழுகும் குமண வள்ளலின் கரம் ஈந்த செல்வமனைத்தையும் பெற்ற சாத்தனார் பெருமகிழ்வு கொண்டார்; அளக்கலாகாச் செல்வச் சிறப்புடன் தம் ஊர் மீண்டார் : குடும்பத்தின் வறுமைப் பிணியைக் களைந்தார்: ஆம்பி பூத்த அடுப்பில் அறுசுவை உண்டி நாளும் அடும்படி செய்தார்; துயரக் கண்ணீர் வடித்து வாழ்ந்த தம் மனைவியார் பெருமிதமும் பூரிப்பும் கொண்டு வாழும்படி செய்தார். பாலின்றி அழுது துடித்த தம் குழவி குறையேதுமின்றி அரசிளங்குழவி போல விளங்கச்செய்தார். சான்றோரின் தமிழகம் விருந்தோம்பும் அரண்மனையாய் விளங்கியது.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள் 

Sunday, September 12, 2021

பெருந்தலைச் சாத்தனார்: 3 : ந. சஞ்சீவி

 அகரமுதல




(பெருந்தலைச் சாத்தனார் 2 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 21

3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி)


குமணனது நாடுற்ற சாத்தனார் கண்களும் கருத்தும் ஏமாற்றமடைந்தன. அவர் காவிரி நீரைக் காண வந்த டத்துக் கானல் நீரைக் கண்டார்; அரிமா வீற் றிருக்குமென ஆவலுடன் காண விழைந்த அரியணையில் நரிமா அனைய நெறி யில்லான் இருப்பது கண்டார். ‘அறத்திற்கும் அருளுக்குமோ வீழ்ச்சி! மறத்திற்கும் கயமைக்குமோ வெற்றி! இக்கொடுமைக்குத் தமிழகத்திலோ இடம்!’ எனக் கொதித்தார்; தம்மை -தம் குடும்பத்தை – வாட்டி வதைக்கும் வறுமையின் கொடுமையையும் அக்கணமே மறந்தார்; தம் வாழ்வினும் நாட்டின் புகழும் அறத்தின் வெற்றியுமே பெரியன எனக் கருதும் பெற்றியார் அல்லரோ பெருந்தலைச் சாத்தனார்?

இன்மை ஒருவர்க்(குஇளிவன்றுசால்பென்னும்
திண்மைஉண்டாகப் பெறின்.’         (குறள், 988)

என்ற அருமறைக்கு ஒர் இலக்கியமன்றோ அப்புலவர் பெருமானது வாழ்க்கை? கூழுக்கு ஆட்படாத அவர் உள்ளம் செயற்கரிய செய்யத் துணிந்தது. வயிற்றுக்கு இரை தேடி வேறு திசை நோக்கிச் செல்லலினும் வள்ளியோன் குமணனையே காணத் துடித்தது அவர் நெஞ்சம். புலவர் குடி புரக்கும் அவன் புகழைக் குன்றின் மீதிட்ட விளக்காக்க உறுதி கொண்டார் புலவர். வள்ளல் புகுந்த காடு நோக்கி வண்டமிழ்ப் புலவரும் விரைந்தார்; அங்கு அறத்தின் நாயகன் அருந்தமிழ்ச் சுவையில் தோய்ந்த நெஞ்சினனாய் இருக்கக் கண்டார். செந்தமிழ்ப் புலவரைக் கண்டான் குமண வள்ளல்; தன் நிலை மறந்தான்; அவரைத் தன் மார்புறத் தழுவி மகிழ்ந்தான்; இன்மொழி கூறி வரவேற்றான்,

மாரிகாலத்துக் கதிரவன் போலக் கானகத்திடை மறைந்திருந்த குமண வள்ளலைத் தேடிச்சென்று புலவர் கண்ட வேளையில் இளங்குமணன் ஆணையிட்டு அறையச் சொல்லிய பறையொலி ஒன்று எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. காட்டிலே வாழினும் குமண வள்ளலால் நாட்டிலே ஆட்சி புரியும் தனக்குக் கேடு நேரும் என மதியிழந்த இளங்குமணன் கருதலானான். குமண வள்ளல்மீது மக்கள் கொண்டுள்ள அன்பே அவனை எதிர்க்கும் படையாகத் திரளக்கூடும் என அவனைச் சூழ்ந்திருந்த சிறுமதியாளர் அவனுக்கு அச்சம் ஊட்டினர். அச்சத்தால்-அழுக்காற்றால்-அறிவு கெட்டிருந்த இளங்குமணன், தன் அண்ணன் தலைக்கே உலை வைக்க நினைத்தான். அடவியில் வாழும் அண்ணன் தலையைக் கொய்து கொண்டு வருவார்க்குக் கோடி பொன் பரிசிலென்னும் பறையொலி எங்கும் கேட்கச் செய்தான். அச்செய்தி கேட்டான் குமண வள்ளல்; வருந்தினானில்லை; ‘இந்த என் தலைக்கோ கோடி பொன்! உடன் பிறந்த உள்ளன்பு போலும் எம்பி என் தலைக்கு இவ்வளவு விலை ஏற்றி வைத்தது!’ என எண்ணி மகிழ்ந்தான். அகழ்வாரைத் தாங்கும் நிலத்திலும் பொறையும் பண்பும் பயனும் மிகப் படைத்த பெரியோன் அல்லனோ குமணன்! ‘மாண்டு மடிந்த வள்ளல்களுள் எவர்க்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு-என் தலைக்குக் -கிடைத்ததே!’என்று எண்ணி உவகை கொண்டான்.

இந்நிலையில் அவன் தன்னைக் கண்ட புலவரின் உள்ளக் கருத்தை உணரத் துடித்தான் . ‘புலவீர், நீவிர் என்பால் வேண்டுவது யாதோ?’ என அருள் கனிந்த மொழிகளால் கேட்டான். புலவரும் தம் துயர வாழ்க்கையை நினைந்தவராய் அக்கொடுமையைக் கல்லும் கேட்டுக் கரைந்துருகும் வண்ணம் சொல்லோவிய மாக்கிக் காட்டினார்; தம் இல்லத்தில் அடுதலை மறந்து நெடுநாளாக அடுப்பில் ஆம்பி பூத்திருக்கும் அவலத்தை-வாட்டும் பசியால் வதையுறும் தம் மனைவியாரின் பாலற்ற மார்பினை வறிதே சுவைத்துச் சுவைத்து வாய் விட்டுக் கதறும் பச்சிளங் குழந்தை படும் வேதனையை-அது கண்டு ஆவி சோர்ந்து அழுது நிற்கும் தம் மனைவியாரின் துன்பத்தை-துயரத்தை யெல்லாம் கேட்டார் கண்கள் நீர் சிந்தும் வண்ணம் நவின்றார் புலவர். இன்மை தீர்க்கும் குடிப்பிறந்த அவ் வேந்தன், புலவரின் துயர் நிறைந்த மொழிகள் கேட்டு இதயம் உருகினான்; சான்றோரின் தமிழகத்துக்கு நேர்ந்த நிலை நினைந்து கண் கலங்கினான். தன் காடுறை வாழ்வினும் கோடி மடங்கு இன்னாததாய் விளங்கியது புலவரின் வாழ்வு அவனுக்கு. பொன்னும் மணியும் வாரி இரைத்த தன் வண்மை நிறைந்த கைகள் பயனற்றுக் கிடக்கும் நிலை கண்டு அவன் மனம் நொந்தான்; நாடி வந்தவர்க் கெல்லாம் நறுஞ்சோலையாய்ப் பயன் பட்ட தன் வாழ்க்கை, யாருக்கும் உதவாத கொடும்பாலையாகி விட்டதே என மனம் குமுறினான். இந்நிலையில் அண்மையிலே அவன் கேட்டிருந்த செய்தி அவன் அகச் செவிகளில் முழங்கியது. அவன் முறுவல் பூத்தான்; பெருமகிழ்வு கொண்டான்; ‘சாவினும் துன்பம் நிறைந்தது வேறில்லைஆனால்நாடி வந்த நல்லோர்க்கு ஈய முடியாத நிலையில் அச்சாவினும் இனியது வேறெதுவுமில்லை,’ என்று சான்றோர் சாற்றிய மணி மொழியை நினைந்தான்; வாழ்வில் என்றும் கண்டிராத இன்ப உணர்ச்சி அவன் உடலை-உள்ளத்தை-உயிரை ஆட் கொண்டது.

சாதலின் இன்னாதது இல்லைஇனி(து)அதூஉம்
ஈதல் இயையாக் கடை.’         (குறள், 280)

என்ற திருவாக்கு அவன் தலையை அவனுக்கு நினைப்பூட்டியது. அவன் உடன் பிறந்த தம்பியால் அது பெற்றிருக்கும் விலையை எண்ணினான் பூரித்தான். வள்ளலின் கை சரேலென உடைவாளை உருவியது. அவன் எடுத்த வாளை இருந்தமிழ்ப் புலவர்பால் நீட்டினான். அருந்தமிழ்ப் பெரியீர், அந்த நாள் வந்திலிர்! யான் கானுறையும் இந்த நாள் வந்தீர்! யாது செய்வேன்! பொன்னும் களிறும், முத்தும் மணியும், துகிலும் மதுவும் வரையாது கொடுக்கும் வழியறியேன். ஆனால், இதோ வாள்! இதோ என் தலை! இத்தலையைக் கொண்டுபோய் என் தம்பிகைக் கொடுப்பின்அவன் கோடி பொன் தருவான். தயங்காது ஏற்க!’ என்றான்.

அவன் உணர்வும், உரையும், ஒரு பெருஞ்செயலும் அவனுக்கு முன் வாழ்ந்து அழியாப் புகழ் படைத்த வள்ளல்கள் புகழை எடுத்து விழுங்கி விழுப்புகழ் காணும் பெற்றியவாய் விளங்கின. ‘வசையில் விழுத்திணைப் பிறந்த வள்ளியோன்’ வாய் மொழி கேட்டார் புலவர்; துணுக்குற்றார்; அவர்மேனி அதிர்ந்தது; கண்கள் சுழன்றன. அவர், ‘காலம் தாழ்க்கின் என்னாகுமோ?’ என்று கவன்றவராய்க் கண்ணிமைப் பொழுதில் அவன் கையகத்திருந்த வாளைப் பற்றினார் கையில் இறுகப்பற்றிய வாளுடன் குமண வள்ளல் திருமுகம் நோக்கினார்; சற்று நேரம் கற்சிலை போல நின்றார்; பின்பு மெல்ல மெல்ல உணர்வு பெற்றவராய்ப் புலவரின் வறுமையைப் போக்கபைந்தமிழ் வளர்ப்போனது வாழ்வைக் காக்க தலையையே கொடுக்கும் தலைக்கொடையாளியின் பண்பை உள்ளினார்உருகினார். ‘இணையில்லா வள்ளலே, தலைக் கொடையாளியே, உன் தலை கொண்டோ என் வாழ்வு ஒளி பெற வேண்டும்?’ என்ற எண்ணம் புலவர் நெஞ்சை உணர்ச்சிக் கடலாக்கியது.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்