(பெருந்தலைச் சாத்தனார் 4 சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 23

3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி)


இவ்வாறு சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ந்து இனிதிருந்த சாத்தனார் சில காலம் கழித்துச் சங்கம் நிறுவிச் செந்தமிழ் புரக்கும் மாடமலி கூடல்மாநகர் காண விழைந்தார்; அவ்வாறே தொல்லாணை நல்லாசிரியர் கூடியிருந்து தமிழாய்ந்து வந்த அப்பழவிறல் மூதூரை அடைந்தார்; அவண் இருந்த சான்றோர்களுடன் உவப்பத் தலைக்கூடி, பன்னாள் இன்புற்றிருந்தார்; பின்னர்த் தம் ஊர் திரும்பும் வழியில் பாண்டியர் படைத்தலைவனும், கோடை மலைக் கிழவனும், வேளிர் குலத் தலைவனும் சிறந்த கொடையாளன் என்ற புகழ் படைத்திருந்தோனுமாகிய கடிய நெடுவேட்டுவன் என்பானைக் கண்டு பரிசில் வேண்டினர். அவன் எக்காரணத்தாலோ, புலவர்க்கு விரைந்து பரிசில் வழங்காது நீட்டித்தான். பெருமிதம் மிக்க நம் புலவர் அது கண்டு பொறாது வெகுண்டார்! வேட்டுவனை நோக்கி, ‘அஞ்சி வந்தடைந்த பகைவர்க்குப் புகலிடமே, போர் உடற்ற நினைந்தார் வலியழிக்கும் வாட்போரின் மிக்க படையுடையோனே, முல்லை வேலியுடைய கோடை மலைத் தலைவனே, தப்பாது மான் கூட்டங்களைத் தொலைக்கும் சினமிக்க நாய்களையும் வில்லையும் உடைய வேட்டுவனே, செல்வத்தால் சிறந்த சேர சோழ பாண்டியரே ஆயினும், அவர் எம்மை விரும்பிப் போற்றாது ஈதலை யாம் சிறிதும் விரும்பேம். உலகத்தில் பெருமழை பெய்ய வேண்டி நீர் முகக்கக் கடலுள் திரண்டு இறங்கிய முகில் நீர் முகவாது மீளாதது போலப் பரிசிலர் சுற்றம் அரசர்களிடம் களிறும் தேரும் பெறாது வறிதே மீள்வதில்லை. உன்னைப் பாடி வந்த யாமோ, அவை பெறாது போகின்றோம். வேட்டுவனே, நோயின்றி வாழ்வாயாக!’ எனக் கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார்,

கடியநெடு வேட்டுவன் புலவர் பெருமானார் தன்னை ‘நோயின்றி வாழ்வாயாக!’ என நொந்த உள்ளத்தோடு குறிப்பு மொழியால் சினந்துரைத்துச் செல்வதையறிந்து நடுங்கினான்; விரைந்து சென்று புலவர் பெருமானாரை வணங்கி, தன் பிழை பொறுக்க இறைஞ்சினான். வேட்டுவன் பண்பறிந்த புலவரும் இரங்கினார்; அவன் அவைக் களத்திற்கு மீண்டார்; அவன் அன்புடன் போற்றி அளித்த செல்வமெல்லாம் பெற்றுப் பேருவகை கொண்டார்; தம் உள்ளத்து உவகையை வெளிப்படுத்த அவன் அளியும், பண்பும், வலியும், வண்மையும் போற்றி அரியதோர் அகப்பொருட்பாடலையும் பாடி மகிழ்வித்தார்; பின்பு அவன்பால் விடை கொண்டு தம் ஊர் ஏகி இனிது வாழ்ந்திருந்தார்.

சின்னாள் சென்ற பின் சாத்தனார் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும், தோட்டி மலைக்கு உரியவனும், ‘இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிறோடு என்றும் மழை சுரந்தென்ன’ ஈயும் வள்ளியோனும் ஆகிய ‘கழல்தொடித் தடக்கைக் கலிமான்’ நள்ளி என்பான் இளவல் இருங்கண்டீரக்கோ என்பவனைக் காணுதற்கு அவனிடத்துச் சென்றார். அவ்வமயம் அவ்விடத்துப் பெண் கொலை புரிந்த நன்னன் என்னும் வேளிர் குலத் தலைவன் வழி வந்தோனாகிய இளவிச்சிக்கோ என்பவனும் வந்து ஒருங்கே அமர்ந்திருந்தான். அவண் சென்ற புலவர் கண்டீரக்கோப்பெரு நள்ளியின் தம்பி இளங்கண்டீரக் கோவை மட்டும் தழுவி மகிழ்ந்து அளவளாவிவிட்டு, இளவிச்சிக் கோவைத் தழுவாதிருந்தார். அது கண்டு இளவிச்சிக்கோ நாணமுற்றுப் புலவர் பெருமானாரை நோக்கி, ‘புலவீர், என்னை மட்டும் புல்லாமைக்குக் காரணம் யாதோ?’ என வினவினான். அதற்குப் புலவர், ‘காரணம் கூறுவேன்: தொன்று தொட்டே விண் முட்டும் உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்துள்ள நெடுந்தூரமான இடங்கட்குத் தம் கணவர் சென்றிருந்தாலும் பாடி வரும் புலவர்க்குப் பெண்டிரும் தம் கணவன்மார் நிலை நின்று மெல்லிய பிடி யானைகளைப் பரிசிலாகக் கொடுக்கும் வண்புகழ்க் குடியிற்றோன்றிய கண்டீரக்கோவின் தம்பி இவன். ஆகலின், பெரிதும் விரும்பிப் புல்லினேன்; நீயோ, பொய்யா நாவின் புலவர் பெருமக்கள் வசைக்குரியவனாய்ப் பெண் கொலைசெய்த நன்னன் மருகன். அன்றியும், உன் குடியில் தோன்றிய உன் முன்னோன் ஒருவன் பாடிவரும் வயங்குமொழிப் புலவர்க்கு அடைத்த கதவினனாயிருந்து அழியாப்பழி எய்தினான். அது முதல் நின் மணங்கமழ் மலையை எம்மவர் பாடுதல் நீங்கினர். அதனால் யானும் நின்னை முயங்கினேன் இல்லை,’ என விளக்கம் கூறினார். இவ்வாறு புலவர் பெருமானார் அஞ்சாது பெருமித உணர்வுடன் கூறிய பதில் இளவிச்சிக்கோவைச் சிந்தனைக் கடலில் ஆழ்த்தியது.

இந்நிகழ்ச்சிக்குச் சின்னாள் கழித்து மூவன் என்னும் சிற்றரசனிடம் சாத்தனார் பரிசில் கடாவிச் சென்றார். அவன் தன்பால் வந்த புலவரைப் போற்றிப் பரிசில் கொடாது காலந்தாழ்த்தான். அது கண்டு ஆற்றொணாச் சினங் கொண்டார் சாத்தனார். அவனுக்கு நல்லறிவு புகட்ட நினைந்து, ‘ பொய்கைக்கண் மேய்ந்த நாரை நெற் போரின் கண்ணே உறங்கும் நெய்தற்பூக்களை உடைய வயலின் கண் முற்றிய நெல்லை அறுக்கும் உழவர்கள் ஆம்பல் இலையில் கள்ளை வார்த்து உண்டுவிட்டு அருகிலுள்ள கடலின் அலை ஒலியையே தாளமாகக்கொண்டு ஆடும் நீர்வளம் நிறைந்த ஊர்களையுடைய நன்னாட்டு வேந்தே, பல கனிகளையும் உண்ண விரும்பி ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து மலை முழைகள் எதிரொலி முழங்கச்சென்று அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து ஓய்ந்ததாக வருந்திப் பழம் பெறாதே மீளும் பறவைகள் போல நின் விரும்புதற்குரிய பண்புகள் என்னை ஈர்த்து வர வந்து உன் புகழ் பாடிய பரிசிலன் யான். வறியேனாய் மீளக் கடவேனோ? வாட்போர் வல்லோனே, நீ ஒன்றை ஈந்திலையாயினும், யான் அதற்கு வருந்துவேன் அல்லேன்; நீ நோயின்றி இருப்பாயாக! பெரும, நீ என் மாட்டுச் செய்த இவ்வன்பின்மையை நின் நாளோலக்கமன்றிப் பிறர் அறியாது ஒழிவாராக!’ என்று கூறி அகன்றார்.

நிறைமொழி மாந்தராகிய சாத்தனார் நெஞ்சு புண்பட்டுக் கூறிய சொற்கள் கூர்வேலினும் ஆற்றல் பொருந்தியவை யல்லவோ? ‘நீ நோயின்றி இருப்பாயாக!’ எனப் புலவர் பெருமானார் எவ்வளவு மனம் நொந்து கூறினாரோ! சொல்லேருழவரின் நெஞ்சைப் புண்படுத்திய மூவன் வாழ்வு சின்னாளிலேயே பாழ்பட்டது. தெறலருந்தானக் கணைக்கால் இரும்பொறை என்ற சேரமன்னன் மூவனைப் போரில் வென்று அவன் பல்லைப் பிடுங்கித் தன் தலை நகராய தொண்டி நகரத்துக் கோட்டை வாயில் கதவில் அழுத்தினானாம். இச்செய்தியை நற்றிணைப் பாடலொன்று நமக்கு அறிவிக்கின்றது.

பெரியாரைப் பேணா(துஒழுகின் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.’         (குறள், 892)

என்பது பொய்யாமொழியன்றோ?

செந்தமிழ்ச் சான்றோராகிய சாத்தனாரின் இத்தகைய பெருமிதமிக்க வரலாறு தமிழிலக்கியம் கற்பார்க்குக் கருதுந்தொறும் கழிபேருவகை அளிக்க வல்லது.
வறுமைத்தீத் தம்மையும் தம் குடும்பத்தையும் சுட்டு வதக்கினாலும், அட்டாலும் சுவை குன்றாத் தீஞ்சுவைப் பால் போல ஒழுக்கம் தளராது-உணர்வு குன்றாது-கடமை மறவாது-வாழ்ந்து மன்னா உலகத்து மன்னுதல் குறித்துத் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்த பெரும்புலவர் சாத்தனாரின் வறுமையிலும் பெருமிதம் நிறைந்த வாழ்வு நமக்கும் வையகத்திற்கும் என்றென்றும் நின்று நிலவி ஒளி காட்ட வல்ல தலை சிறந்த கலங்கரை விளக்கம் ஆகும்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்