(பெருந்தலைச் சாத்தனார் 2 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 21

3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி)


குமணனது நாடுற்ற சாத்தனார் கண்களும் கருத்தும் ஏமாற்றமடைந்தன. அவர் காவிரி நீரைக் காண வந்த டத்துக் கானல் நீரைக் கண்டார்; அரிமா வீற் றிருக்குமென ஆவலுடன் காண விழைந்த அரியணையில் நரிமா அனைய நெறி யில்லான் இருப்பது கண்டார். ‘அறத்திற்கும் அருளுக்குமோ வீழ்ச்சி! மறத்திற்கும் கயமைக்குமோ வெற்றி! இக்கொடுமைக்குத் தமிழகத்திலோ இடம்!’ எனக் கொதித்தார்; தம்மை -தம் குடும்பத்தை – வாட்டி வதைக்கும் வறுமையின் கொடுமையையும் அக்கணமே மறந்தார்; தம் வாழ்வினும் நாட்டின் புகழும் அறத்தின் வெற்றியுமே பெரியன எனக் கருதும் பெற்றியார் அல்லரோ பெருந்தலைச் சாத்தனார்?

இன்மை ஒருவர்க்(குஇளிவன்றுசால்பென்னும்
திண்மைஉண்டாகப் பெறின்.’         (குறள், 988)

என்ற அருமறைக்கு ஒர் இலக்கியமன்றோ அப்புலவர் பெருமானது வாழ்க்கை? கூழுக்கு ஆட்படாத அவர் உள்ளம் செயற்கரிய செய்யத் துணிந்தது. வயிற்றுக்கு இரை தேடி வேறு திசை நோக்கிச் செல்லலினும் வள்ளியோன் குமணனையே காணத் துடித்தது அவர் நெஞ்சம். புலவர் குடி புரக்கும் அவன் புகழைக் குன்றின் மீதிட்ட விளக்காக்க உறுதி கொண்டார் புலவர். வள்ளல் புகுந்த காடு நோக்கி வண்டமிழ்ப் புலவரும் விரைந்தார்; அங்கு அறத்தின் நாயகன் அருந்தமிழ்ச் சுவையில் தோய்ந்த நெஞ்சினனாய் இருக்கக் கண்டார். செந்தமிழ்ப் புலவரைக் கண்டான் குமண வள்ளல்; தன் நிலை மறந்தான்; அவரைத் தன் மார்புறத் தழுவி மகிழ்ந்தான்; இன்மொழி கூறி வரவேற்றான்,

மாரிகாலத்துக் கதிரவன் போலக் கானகத்திடை மறைந்திருந்த குமண வள்ளலைத் தேடிச்சென்று புலவர் கண்ட வேளையில் இளங்குமணன் ஆணையிட்டு அறையச் சொல்லிய பறையொலி ஒன்று எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. காட்டிலே வாழினும் குமண வள்ளலால் நாட்டிலே ஆட்சி புரியும் தனக்குக் கேடு நேரும் என மதியிழந்த இளங்குமணன் கருதலானான். குமண வள்ளல்மீது மக்கள் கொண்டுள்ள அன்பே அவனை எதிர்க்கும் படையாகத் திரளக்கூடும் என அவனைச் சூழ்ந்திருந்த சிறுமதியாளர் அவனுக்கு அச்சம் ஊட்டினர். அச்சத்தால்-அழுக்காற்றால்-அறிவு கெட்டிருந்த இளங்குமணன், தன் அண்ணன் தலைக்கே உலை வைக்க நினைத்தான். அடவியில் வாழும் அண்ணன் தலையைக் கொய்து கொண்டு வருவார்க்குக் கோடி பொன் பரிசிலென்னும் பறையொலி எங்கும் கேட்கச் செய்தான். அச்செய்தி கேட்டான் குமண வள்ளல்; வருந்தினானில்லை; ‘இந்த என் தலைக்கோ கோடி பொன்! உடன் பிறந்த உள்ளன்பு போலும் எம்பி என் தலைக்கு இவ்வளவு விலை ஏற்றி வைத்தது!’ என எண்ணி மகிழ்ந்தான். அகழ்வாரைத் தாங்கும் நிலத்திலும் பொறையும் பண்பும் பயனும் மிகப் படைத்த பெரியோன் அல்லனோ குமணன்! ‘மாண்டு மடிந்த வள்ளல்களுள் எவர்க்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு-என் தலைக்குக் -கிடைத்ததே!’என்று எண்ணி உவகை கொண்டான்.

இந்நிலையில் அவன் தன்னைக் கண்ட புலவரின் உள்ளக் கருத்தை உணரத் துடித்தான் . ‘புலவீர், நீவிர் என்பால் வேண்டுவது யாதோ?’ என அருள் கனிந்த மொழிகளால் கேட்டான். புலவரும் தம் துயர வாழ்க்கையை நினைந்தவராய் அக்கொடுமையைக் கல்லும் கேட்டுக் கரைந்துருகும் வண்ணம் சொல்லோவிய மாக்கிக் காட்டினார்; தம் இல்லத்தில் அடுதலை மறந்து நெடுநாளாக அடுப்பில் ஆம்பி பூத்திருக்கும் அவலத்தை-வாட்டும் பசியால் வதையுறும் தம் மனைவியாரின் பாலற்ற மார்பினை வறிதே சுவைத்துச் சுவைத்து வாய் விட்டுக் கதறும் பச்சிளங் குழந்தை படும் வேதனையை-அது கண்டு ஆவி சோர்ந்து அழுது நிற்கும் தம் மனைவியாரின் துன்பத்தை-துயரத்தை யெல்லாம் கேட்டார் கண்கள் நீர் சிந்தும் வண்ணம் நவின்றார் புலவர். இன்மை தீர்க்கும் குடிப்பிறந்த அவ் வேந்தன், புலவரின் துயர் நிறைந்த மொழிகள் கேட்டு இதயம் உருகினான்; சான்றோரின் தமிழகத்துக்கு நேர்ந்த நிலை நினைந்து கண் கலங்கினான். தன் காடுறை வாழ்வினும் கோடி மடங்கு இன்னாததாய் விளங்கியது புலவரின் வாழ்வு அவனுக்கு. பொன்னும் மணியும் வாரி இரைத்த தன் வண்மை நிறைந்த கைகள் பயனற்றுக் கிடக்கும் நிலை கண்டு அவன் மனம் நொந்தான்; நாடி வந்தவர்க் கெல்லாம் நறுஞ்சோலையாய்ப் பயன் பட்ட தன் வாழ்க்கை, யாருக்கும் உதவாத கொடும்பாலையாகி விட்டதே என மனம் குமுறினான். இந்நிலையில் அண்மையிலே அவன் கேட்டிருந்த செய்தி அவன் அகச் செவிகளில் முழங்கியது. அவன் முறுவல் பூத்தான்; பெருமகிழ்வு கொண்டான்; ‘சாவினும் துன்பம் நிறைந்தது வேறில்லைஆனால்நாடி வந்த நல்லோர்க்கு ஈய முடியாத நிலையில் அச்சாவினும் இனியது வேறெதுவுமில்லை,’ என்று சான்றோர் சாற்றிய மணி மொழியை நினைந்தான்; வாழ்வில் என்றும் கண்டிராத இன்ப உணர்ச்சி அவன் உடலை-உள்ளத்தை-உயிரை ஆட் கொண்டது.

சாதலின் இன்னாதது இல்லைஇனி(து)அதூஉம்
ஈதல் இயையாக் கடை.’         (குறள், 280)

என்ற திருவாக்கு அவன் தலையை அவனுக்கு நினைப்பூட்டியது. அவன் உடன் பிறந்த தம்பியால் அது பெற்றிருக்கும் விலையை எண்ணினான் பூரித்தான். வள்ளலின் கை சரேலென உடைவாளை உருவியது. அவன் எடுத்த வாளை இருந்தமிழ்ப் புலவர்பால் நீட்டினான். அருந்தமிழ்ப் பெரியீர், அந்த நாள் வந்திலிர்! யான் கானுறையும் இந்த நாள் வந்தீர்! யாது செய்வேன்! பொன்னும் களிறும், முத்தும் மணியும், துகிலும் மதுவும் வரையாது கொடுக்கும் வழியறியேன். ஆனால், இதோ வாள்! இதோ என் தலை! இத்தலையைக் கொண்டுபோய் என் தம்பிகைக் கொடுப்பின்அவன் கோடி பொன் தருவான். தயங்காது ஏற்க!’ என்றான்.

அவன் உணர்வும், உரையும், ஒரு பெருஞ்செயலும் அவனுக்கு முன் வாழ்ந்து அழியாப் புகழ் படைத்த வள்ளல்கள் புகழை எடுத்து விழுங்கி விழுப்புகழ் காணும் பெற்றியவாய் விளங்கின. ‘வசையில் விழுத்திணைப் பிறந்த வள்ளியோன்’ வாய் மொழி கேட்டார் புலவர்; துணுக்குற்றார்; அவர்மேனி அதிர்ந்தது; கண்கள் சுழன்றன. அவர், ‘காலம் தாழ்க்கின் என்னாகுமோ?’ என்று கவன்றவராய்க் கண்ணிமைப் பொழுதில் அவன் கையகத்திருந்த வாளைப் பற்றினார் கையில் இறுகப்பற்றிய வாளுடன் குமண வள்ளல் திருமுகம் நோக்கினார்; சற்று நேரம் கற்சிலை போல நின்றார்; பின்பு மெல்ல மெல்ல உணர்வு பெற்றவராய்ப் புலவரின் வறுமையைப் போக்கபைந்தமிழ் வளர்ப்போனது வாழ்வைக் காக்க தலையையே கொடுக்கும் தலைக்கொடையாளியின் பண்பை உள்ளினார்உருகினார். ‘இணையில்லா வள்ளலே, தலைக் கொடையாளியே, உன் தலை கொண்டோ என் வாழ்வு ஒளி பெற வேண்டும்?’ என்ற எண்ணம் புலவர் நெஞ்சை உணர்ச்சிக் கடலாக்கியது.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்