Showing posts with label வா.மு.சே.. Show all posts
Showing posts with label வா.மு.சே.. Show all posts

Friday, December 08, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 

அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து
பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள்
என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கினால், ‘தவம் வென்றது போல்தான் வரும் நலமே’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
  பொதுவாக, மேடை மீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தாம் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக் கரவொலி பேச்சாளர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன் காட்டுவதில்லை. இந்த நிலையைப் பெருங்கவிக்கோவின் பாட்டு சூடாகச் சுட்டுகிறது.
நின்று தலைநிமிர்த்தி நெடும் பேச்சுப் பேசிவிட்டுக்
கூட்டத்தின் கரவோசைச் குளிர்ச்சியிலே – மெய்மறந்து
நீட்டிப் படுத்தலன்றி நேர்மையாய் யான் என்று
திறமை காட்டிச் செயலாக்கம் செய்தவர் யார்?
“சிறுமைத்தனத்தில் திறமை கொன்று சீரழிந் தேகுவதோ! வறுமை வாழ்வைப் பெரிதாய்க் கண்டு மனம் இழப்பதுவோ?” என்று கேட்கும் கவிஞர், மனிதனாக நடப்பது எவ்விதம் என்று கூறுவது சிந்திக்கத் தூண்டுவதாகும்.
மனிதன் என்பது பொதுச் சொல் எனினும்
மலரும் முகங்கள் பலவிதம் – இந்த
தனித்தனி மனிதர் நடக்கும் வழிகளும்
தனித் தனியாகப் பலவிதம்!
போனவன் போக்கில் போவேன் என்பது
புரியாத் தனத்தின் வித்தாகும் – நெஞ்ச
மானத் தன்மை வகுக்கும் வழிமுறை
மதித்து நடப்பதே சொத்தாகும்
அறிஞரைப் போற்றி, அவர்களை வழிகாட்டியாக ஏற்று, அவர்கள் காட்டிய பாதையில் நடக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. பெருங்கவிக்கோவின் புதிய பார்வை அதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இல்லை. அதற்கான காரணத்தை அவர் தெளிவாகச் சொல்லுகிறார்.
முன்னே தோன்றிய அறிஞனைப் போற்றினும்
முழு அடிமை நீ ஆகாதே – அடடே
பின்னே அவனை நீ வெல்வது உண்மை
பேரறிவாளன் நீ மறவாதே
நெஞ்சம் இருப்பதோ கையளவில் தான்
நினைவோ உலகை வெல்லும் – எந்த
வஞ்சம் வரினும் வாழ்வோ தாழ்வோ
வாகை உறுதி கொள்ளும்
மற்றவர் தீய குற்றம் தனை மிதி! மனிதத் தன்மை ஊட்டு! இவ்வாறு மனத்தை வீறு கொள்ளும்படி தூண்டும் கவிஞர்,
ஊட்டி வளர்த்தவர் காட்டிக் கொடுப்பாரேல்
உந்திப் பழித் தொதுக்கு! – மனமே
நாட்டில் பிழைக்கத் தெரிந்த மனிதரவர்
நம்பிப்பின் செல்லாதே!
என்று விழிப்புணர்வு ஊட்டுகிறார். சோர்வு அடையாதபடி ஊக்கத்தோடு உழைக்க வேண்டும் என்றும் அவர் ஊக்கப்படுத்துகிறார்.
ஏற்ற அறக்கொள்கை எவரும் மதிக்காமல்
இன்னல் தருவதாயிருந்தால் – மனமே
போற்றலிலாத தென்றெண்ணிச் சோராதே நீ
பொங்கி நல முடிப்பாய்!
மான வாழ்வி லொரு மாசு புகுந்திடில்
வாய்மை நெருப்பாலே – மனமே
ஆனமுறையில் பொசுக்கி முன்னேறு நீ
ஆக்கம் தனைத் தேடு!
என்றும் நல்வழி புகட்டுகிறார்.
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

Monday, April 24, 2017

பாராட்டப்பட வேண்டிய வா.மு.சே. – வல்லிக்கண்ணன்




ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

  பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது சரியான நோக்கு இல்லை.  பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் கூடப், பாரதிதாசன். கண்ணதாசன், பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் என்ற ஒரு சில பெயர்களை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் முழுமையான பார்வை ஆகாது.  பாரதிக்குப் பின்னரும் நல்ல கவிதை எழுதுகிறவர்கள் பலர் தோன்றியுள்ளனர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய பெயர்கள் பரவலாகப் பேசப்படுவதில்லை. குறிப்பிட்டுச் சொல்லப் படுகிற சிலரது பெயரும் கவிதைகளும் கூட குறுகிய சிறு வட்டத்தினுள்ளேயே ஒடுங்கிப் போகிறது. பாரதிக்குப் பிறகு, வியந்து பாராட்டப் படவேண்டிய அளவுக்குக் கவிதைகள் எழுதியுள்ள ச.து.சு. யோகியார், கம்பதாசன், தமிழ் ஒளி, கலைவாணன் போன்றவர்களின் திறமை தமிழ்நாட்டில் போதிய கவனிப்பைப் பெற்ற தில்லை. அவர்கள் உயிருடன் இருந்தபோதும் அவர்களோ அவர்களின் படைப்புகளோ உரிய அங்கீகரிப்பை இந் நாட்டில் பெற முடிந்ததில்லை. அவர்களது மறைவுக்குப் அவர்களுடைய கவிதைகளும் மறதிப் பாழில் மங்கிப் போயின.
 பாரதிதாசன் ஒரு காலக்கட்டத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றார். அதை அடுத்து பாரதிதாசன் பரம்பரை’  என்று பலர் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டனர். அவர்களிடையிலும் சிலர்தான் கவனிப்புப் பெறமுடிந்தது. சுரதா, முடியரசன், வாணிதாசன், நாரா. நாச்சியப்பன் என்று. அதுவும் குறுகிய காலக் கவனிப்புதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து கவிதை எழுதுகிறவர்கள் பெயர்வெளிச்சம் பெற முடிகிறது. அல்லது திரைத்துறையில் வெற்றி பெறுகிறவர்கள் புகழ் வெளிச்சம் அடைய முடிகிறது. அரசியல் கட்சியின் ஆதரவோ, திரைத்துறையின் துணையோ பெற்றிராத கவிஞர்கள் உரிய கவனிப்பைப் பெறத் தவறி விடுகிறார்கள். அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், உயிர்ப்பும் எழுச்சியும் நிறைந்த கவிதைகள் படைத்துள்ள சில: கவிஞர்கள் பரவலான கவனிப்பைப் பெறமுடிந்துள்ளது. என்று சொல்வதற்கில்லை. தொ.மு.சி. இரகுதாதன், கே.சி. எசு. அருணாசலம் போன்ற சிலரது திறமையும் ஆற்றல் நிறைந்த படைப்புகளும், அவை பெற்றிருக்க வேண்டிய அளவு கவனத்தைத் தமிழ் இலக்கிய நேயர்களிடையே பெற்றுவிடவில்லைதான். அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரளவு தெரிய வந்திருக்கலாம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம, திறமையாளர்களின் திறமையும் படைப்பு:ம் உரிய முறையில் எடுத்துச் சொல்லப் படுவதில்லை. இதுவே முழு முதல் காரணம் ஆகிவிடாது. திறமையாளர்களும் அவர்களது சாதனைகளும் போதுமான கவனிப்பைப் பெறமுடியாமல்போவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. என்றாலும், இது முதன்மையான காரணமாகும். ஆர்வமுள்ள வாசகர்கள் குறைவாக இருக்கிறார்கள். படிப்பவர்களிலும் கவிதைகளைத் தேடிப் படிக்கிறவர் எண்ணிக்கை குறைவுதான். கவிதைகளை- அதிலும் மரபுவழிப் பட்ட படைப்புகளை படிப்பவர்கள் மிகவும் குறைவு. – – – – ஆனால் படிக்காமலே அல்லது ஒருவரின் ஒரு சில எழுத்துக்களைப் படித்து விட்டு, தடலடியாகக் கருத்து சொல்கிற இயல்பு-ஓங்கி அடித்து ஒதுக்கி விடுகிற போக்கு அதிகமாகவே வளர்ந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். வாசகர்களின், நேயர்களின், மனப் பண்பு நன்னிலை அடைய வேண்டும். படித்துப் பார்த்து, கருத்து சொன்னாலாவது, “பரவா யில்லை.; போகிறது! இவர் சுவை இப்படி… இது இவருடைய கருத்து’” என்று கொள்ளலாம். ஆனால், பலரும் படிக்காமலே’அறுதியிட்டு உறுதி கூற’த் துணிவது சரியான போக்கு அல்ல. ஒவ்வொரு படைப்பாளியின் மொத்த எழுத்துகளையும் ஆய்வு செய்து, நல்லனவற்றை எடுத்துக் கூறும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்குமானால், இந்தப் போக்கு ஒரளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ் நாட்டில் அத்தகைய திறனாய்வு முயற்சிகள் செய்யப்படவில்லை. இது பெரும் குறை பாடேயாகும்.
  பெருங்கவிக்கோ என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ள வா.மு.சேதுராமன் அவர்களின் சாதனைகளும் இந் நாட்டில் சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை. இது வருத்தத்துக் குரியது. கவிஞர் சேதுராமன் மரபுவழிக் கவிதையில், நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தன்மையில், பாராட்டப்பட வேண்டிய அளவு சாதனைகள் புரிந்திருக்கிறார். அவருடைய கவிதை நூல்கள் பெரும்பாலானவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனால் அவருடைய ஆற்றலையும், படைப்புகளின் தன்மையையும் நான் அறியமுடிந்தது. அவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம் என்று கருதினேன். அதன் விளைவே இந்த நூல். இது பூரணமான திறனாய்வு இல்லை. பெருங்கவிக்கோவின் படைப்புகளில் நான் சுவைத்து மகிழ்ந்த நல்ல இயல்புகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய முனைந்துள்ளேன். கவிஞரின் படைப்புகளைப் படித்து மகிழ இஃது ஒரு  தூண்டுதலாக அமைந்தால் நல்லது.
வல்லிக்கண்ணன்
முன்னுரை: ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்