Showing posts with label scholars. Show all posts
Showing posts with label scholars. Show all posts

Tuesday, December 27, 2011


புரட்சியில் பூத்த மலர்

க.இந்திரசித்து
பதிவு செய்த நாள் : 27/12/2011



புரட்சியில் பூத்த மலர்
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, லெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வரலாற்றை மறைமலை இலக்குவனார் நிரல் படத் தொகுத்தும், வகுத்தும், ஆய்ந்தும் இந்நூலில் எழுதியுள்ளார்.
தமிழ் மொழி காப்புப் போரில் புரட்சி வீரராகப் போராடிய சி.இலக்குவனார் தமிழ்ப் போராசிரியர்கள் தன்மானத்தோடு வாழ்ந்து காட்டவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். விடாமுயற்சியும், தளரா உழைப்பும் கொண்டு தன்னிகரில்லா பேராசிரியராக உயர்ந்து நிற்கிறார்.
1.இளமையும் கல்வியும், 2. கல்விப்பணி, 3.கவிதைப்பணி, 4.இதழாசிரியர், 5.நூலாசிரியர், 6.ஆராய்ச்சியாளர், 7.திருக்குறள் உரை நுட்பமும் ஆய்வுத்திறனும், 8.ஓய்வில்லா உழைப்பு, 9.பன்முக ஆளுமை என்னும் ஒன்பது தலைப்புகளில் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்வும், பணியும் பாங்குடன் படைக்கப்பட்டுள்ளன. இந்நூலை எழுதியுள்ள மறைமலை இலக்குவனாரின் மொழிநடை தனித்தமிழ் அருவியாய்த் தாலாட்டுகிறது. மொழிநடைச் சுவையில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பக்கத்தில் நிற்கும் தகுதியை மறைமலை இலக்குவனார் பெற்றுள்ளார்.
கார்ல் மார்ச்சு, தன்னுடைய பொதுவுடைமைக் கருத்துக்களுக்காக செர்மமி, உருசியா, பெல்சியம், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அவரைத் தம் நாட்டு எல்லையிலிருந்து துரத்தி அடித்ததைப் போலவே சி. இலக்குவனாரையும் அவருடைய தமிழியல் கொள்கைகளுக்காக ஒவ்வொரு கல்வி நிறுவனமும் துரத்தி அடித்த செய்தியைப் படித்துப் பார்த்து, படித்துப் பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. விரிந்த மனப்பான்னையின்மை, அறிவியல் பார்வையின்மை,தொலை நோக்கின்மை, மாணவர் நலன் கருதாமை, தன்னலமே பெரிதாகப் பேணுதல் போன்ற இழிகுணங்கள் கொண்ட கயவர்களின் கைகளில் அன்றைய கல்வி நிறுவனங்கள் செயல் பட்டமையை கண்டு, அளப்பரிய அவலம் கொண்டு நெஞ்சம் தவிக்கிறது. (கல்வித்துறையில் தொழிற்சங்கங்கள் தோன்றிய இந்நாட்களிலும் இது தொடர்கதையாய்த் தொடர்வதே கண்கூடு). “பேராசிரியர் இலக்குவனாரைப் போல பணியாற்றிய இடங்களிலெல்லாம் மாறி மாறிப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வேறு எவரும் இலர் எனலாம்” (ப.54) என்னும் கூற்று அன்றைய கல்வித்துறை எப்படிப்பட்ட பிற்போக்கு மூடர்களின் கைக்குகைகளுக்குள் அகப்பட்டு, அல்லாடிக் கிடந்தன என்பதைப் பளிச்சென சுட்சுகிறது. ஒரு பேராசிரியர் எவ்வளவு இன்னலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் “துரத்தப்பட்டேன்” என்னும் தலைப்பிலேயே கவிதை படைக்கும் அவலத்திற்கு ஆளாகி இருக்கவேண்டும்? “புறநெறியில் சென்று பொல்லாங்கு கூறி என்னைத் துரத்தினர். துரத்தப்பட்டதால் அடைந்துள்ள துயரங்கள் எண்ணற்றன. என் உள்ள குமுறலை வெளிப்படுத்தினால்தான்  என் உளம் அமைதியுறும் போலிருந்தது. என்னுள்ளொலி இம்மறவழிச் செயலை மக்கள் மன்றில் முறையிடப் பணித்தது. அதன் விளைவே இந்நூல்” (ப.55) என்று இந்நூல் தோன்றியதற்கான காரணத்தை பேராசிரியர் சி.இலக்குவனார் கூறியுள்ளார்.
பகடியம் என்னும் புது உத்தியில் பண்டைய தமிழ்க் கவிதைகளை எடுத்துக்கொண்டு அதில் தன் கருத்துகளை, தன் காலச் சூழ்நிலைகளை எழுதியுள்ளார்.
“யாண்டு பலவின்றியும் நரையுளவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
ஆண்ட நம் மக்கள் அடிமைகளாயினர்
பூண்ட நம் பண்பு போலியதாகின்று
நற்றமிழ் மறந்தனர் நானிலமதனில்
பிறமொழிப் பற்றில் பெரியோராயினர்
தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை
ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்
தமிழைக் கற்றோர் தாழ்நிலை யுறுவதால்
தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்
அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே
என்ற பாடல் இதற்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
குறிக்கோள் முழக்கம்:
‘எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ் பரப்ப’ என்பதே இலக்குவனாரின் குறிக்கோள் முழக்கமாகும். அதற்கிணங்க, ‘சங்க இலக்கியம்’, ’இலக்கியம்’, ‘திராவிடக் கூட்டரசு’, ’குறள் நெறி’, ‘Dravidian Federation’ ஆகிய இதழ்களை நடத்தினார். பேராசிரியராக இருந்து கல்விப் பணியாற்றியதோடு இதழாசிரியராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தார். ‘குறள்நெறி’ இதழை நாளிதழாக நடத்தி இதழியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.  வட்டத்தொட்டிக் குழுவினர். ‘கம்பன் புகழ் பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்: சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’ என்று கூறிய முழக்கத்தை மறுத்து, ‘சங்கத்தமிழ் பாடி தமிழர் புகழ் வளர்போம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழைத் தோற்றுவித்தார். “ஆண்டுதோறும் ஒரு நூலாவது எழுதி வெளிவர வேண்டும், நம் வயதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடகூடாது. நாம் எழுதிய நூல்களைக் கொண்டுதான் கணக்கிட வேண்டும்” (ப.96) என்று இலக்குவனார் கூறுவதற்கேற்ப, இருபது தமிழ் நூல்களையும் ஒன்பது ஆங்கில நூல்களையும் படைத்துள்ளார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொல்காப்பியம் குறித்து இவர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் மாபெரும் அறிவுக் கொடையாக விளங்குகின்றன.
சில முடிவுகள்:
  1. தொல்காப்பியரின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
  2. ஆரியரின் வருகைக்கு முன்னரே தமிழ் தனக்கெனத் தனியான வரிவடிவம் பெற்றிருந்தது.
  3. தொல்காப்பியரால் அந்தணர்மறை எனக்கூறப்படுபவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல.
  4. ஒலிநிலைப்பாடும், ஒலியழுத்தமும் தொல்காப்பியரால் ஆய்ந்து கூறப்பட்டுள்ளன.
  5. தொல்காப்பியம் பல்வேறு மொழியியற் கோட்பாடுகளையும் இலக்கியக் கோட்பாடுகளையும் மொழிகின்றது.
  6. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பாகுபாடு பற்றி தொல்காப்பியத்தில் எவ்விடத்தும் குறிப்பிடவில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தின் கல்விக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது பேராசிரியர் கொண்டுவந்த தீர்மானங்களின் உள்ளடக்கத்தில் உள்ள சிந்தனைகள் இவருடைய தொலைநோக்குப் பார்வையைச் சுட்டுகின்றன. இவருடைய தீர்மானங்கள்:(ப.28)
  1. தமிழ்நாட்டுக் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். அதன் அறிகுறியாக வித்துவான் முன்னிலை வகுப்புத் தேர்விலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  2. கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாக மொழியாகவும், ஏனைய மொழிகள் இரண்டாம் பாகமொழியாகவும் அமைதல் வேண்டும்.
  3. தமிழ்ப்பாடத் தேர்வில் திருக்குறளுக்கெனத் தனிக் கேள்வித்தாள் ஒன்று அமைதல் வேண்டும்.

1965ஆம் ஆண்டு அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்பதற்காக ‘தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம்’ மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதன் காரணமாக இவர் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். தமிழ் மொழிக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்க அணியமாக இருந்த இவரின் நெஞ்சுரத்தை இந்நிகழ்வு எடுத்தியம்புகிறது.

எக்கரணியத்தை முன்னிட்டும் யாருக்காகவும் கொள்கையில் பேராசிரியர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. அறிஞர் அண்ணாவின் மீது அன்பு கொண்டிருந்தபோதும் (ப66மற்றும்67) அவர் கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று கூறிய கருத்தைப் பேராசிரியர் ஏற்கவில்லை (ப.17). அதனால் அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் இவருக்கு  ‘நன்னிலம் நண்பர்க்கு’ என்னும் தலைப்பில் விடையெழுதியுள்ளார். திருமணமாகாத இளம் பேராசிரியர் பா.நமச்சிவாயம், முதுகலை வகுப்பிற்குப் பாடமாக ‘குடும்ப விளக்கை’ நடத்தினார். அப்போது அங்கு வந்த பாரதிதாசன் திருமணமாகாத அவருக்கு அப்பாடத்தை நடத்தத் தகுதியில்லை என்று கூறி, திருமண மான மாணவர் ஒருவரைப் பாடம் நடத்தப் பணித்தார். இது கண்டு வெகுண்டெழுந்த பேராசிரியர் இலக்குவனார், “அப்படியானால் இளங்கோ அடிகளும், திருத்தக்கதேவரும் திருமணம் புரிந்துகொண்டா இல்லற இன்பம் பற்றிப் பாடினார்கள்” என்று கூறி பாவேந்தரையும் மறுத்துரைத்து, நீதியின் பக்கம் நின்ற பேராசிரியரின் செயலை மறைமலை இலக்குவனார் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதர், ஒரு பேராசிரியர், ஒரு நூலாசிரியர், ஒரு ஆராய்ச்சியாளர், ஒர் இதழாசிரியர் இப்படியும் வாழ்ந்திருக்க முடியுமா என்ற மலைப்பை  ஏற்படுத்துகின்றது இந்நூல். பேராசிரியர் சி. இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடிக்கும் போது மனதின் அடியாழத்தில் குற்ற உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க இயலாததாகிறது. தமிழால் ஊதியம் பெறும் நாம் சிறிதளவாவது தமிழ் ஊழியமும் செய்யலாமே என்ற எண்ணத்தை எற்படுத்துவதே இந்நூலின் வெற்றி எனலாம்.

நன்றி: முதற்சங்கு, தீராநதி




0

Thursday, November 17, 2011

வான்புகழாளர்கள்

  1.பெரும்போராளி 

பேராசிரியர் சி.இலக்குவனார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



(தமிழ் வளர்த்து நினைவில் வாழும் புகழ்வாணர்கள் பற்றிய தொடர் இத்தலைப்பில் வெளிவரும். அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள் பற்றிய தொடர் வண்டமிழ் வலவர்கள் என்னும் தலைப்பில் வரும். அறிஞர்கள் பற்றித் தெரிவிக்க விழையும் குறிப்புகள் இருப்பின் நட்பு இணைய இதழுக்கு அனுப்ப வேண்டுகின்றோம். – ஆசிரியர்)
1. பெரும்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
வையம் உள்ளளவும் வாழும் வளர்தமிழுக்கு வாழ்வு தந்த வான்புகழாளர்கள் எண்ணற்றோர் உள்ளனர். கடந்த நூற்றாண்டில் தங்கள் எழுத்தால் தமிழை நிலைக்கச் செய்த சான்றோர்கள் மிகுதியாக உள்ளனர். எண்ணம், சொல், எழுத்தால் மட்டுமன்றித் தம்முடைய செயல்பாட்டால் தமிழுக்குக் கேடயமாக விளங்கிய பெரும் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் எனல் பொருந்தும். உலகில் நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக எனப் போராடிச் சிறை சென்ற செம்மல்கள் பலர் உள்ளனர். ஆனால், மொழிக்காகச் சிறைவாழ்வை ஏற்ற ஒரே கல்வியாளராகப் பேராசிரியர் திகழ்கிறார். அயல் மொழிகளால் தமிழுக்கு ஏற்படும் சிதைவுகளை எழுத்தாலும் உரையாலும் களைந்த அறிஞர்களிடையே களம் பல கண்டு தமிழியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய ஆன்றோர் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள்.
பள்ளிஇறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர் சுற்றத்தார் தெரிவித்தவாறு கலைஅறிவியல் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அல்லது பணியில் சேர்ந்திருக்கலாம். ஆனால், தம்முடைய தமிழாசிரியர் உயர்மிகு பொன்னண்ணாக்களத்தில்வென்றார் ஆற்றுப்படுத்தியவாறு புலவர் பட்டம் பெற விரும்பித் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்தார். அவ்வாறு அவர் வேறு வகையாக முடிவெடுத்திருப்பின் பல உயர்நிலைகளை அடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் உயர்நிலையடைய தமிழ்த்தாய் அவரைப் புலவர் மாணாக்கராக அழைத்துக் கொண்டாள். புலவர் படிப்பில் பேராசிரியர் காட்டிய ஆர்வமும் ஆழ்ந்த கல்வியும் அவரை மெருகேற்றியதுடன் தமிழன்னையின் மீது சிலர் பூசிவரும் கறைகளையும் போக்க உதவியது. கல்லூரி நூலகத்தில் உள்ள மொழியியல் தொடர்பான ஆங்கில நூல்கள் அனைத்தையும் படித்ததால், அந்த நூற்றாண்டில் மேனாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்புலவர்கள் தெரிவித்திருந்த சிறப்பை உணர்ந்தார். எனவே, அவற்றைப் புலப்படுத்த உறுதி கொண்டு பணியாற்றினார்.
தொல்காப்பியம் கற்றறிந்தவர்களிடையேயே அறிமுகமாகா அக்காலத்திலேயே தொல்காப்பியச் சிறப்புகளைப் பிறருக்கு உணர்த்தினார். தொல்காப்பிய உரை விளக்கங்கள் அளித்தார். தமிழ்நாட்டு வரலாற்றினை எழுத விரும்புவோர் தொல்காப்பியத்தைக் கற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொல்காப்பியச் சிறப்புகளை உரை வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பரப்பினார். தொல்காப்பியத்தின் காலம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பின்னர் மேல்வரம்பு கி.மு.10 ஆம் நூற்றாண்டு எனவும் கீழ் வரம்பு கி.மு.7 ஆம் நூற்றாண்டு எனவும் வரையறுத்தார்.
அயல்நாட்டினர் அருந்தமிழ்ச் சிறப்பை உணர வேண்டும் என்பதற்காக ஆங்கில நூல்களையும் எழுதினார். தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil) என்னும் நூல் மூலம் இயற்கை மொழியாய்த் தமிழ் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் அதன் செம்மொழிச் சிறப்பையும் விளக்கினார்.
சிறப்பு மிக்க தமிழ் இலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் இலக்கண ஆக்கம் (The Making of Tamil Grammar) என்னும் நூலை வெளியிட்டார்.
தமிழ்ச்சொற்களின் சிறப்பையும் தொன்மையையும் புரிந்து கொள்ளும் வகையில் ‘தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வுச் சுருக்கம்-இலக்கணப் புலவர்களின் காலமுறைமை’ (A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians) என்னும் ஆய்வேட்டை வெளியிட்டார். இவ்வாய்வேட்டின் மூலம், ஆரியச் சொற்கள் எனத் தவறாகக் கருதப்பட்டுவந்த சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் தமிழ்ச் சொற்களின் மூலத்தைக் கொண்ட ஆரியச் சொற்களையும் உணர்த்தித் தமிழ்ச் சொல் வளத்தை வெளிப்படுத்தினார்.
19, 20ஆம் நூற்றாண்டு மேனாட்டு மொழியியலறிஞர்கள் கருத்துகளோடு ஒப்பிட்டுத் தமிழின் மொழியியல் சிறப்பை விளக்கும் வகையில் மொழியியல் நூல்களையும் வெளியிட்டார். தமிழ்மொழியின் முதல்நிலைச்சொற்களும் இடைநிலைச் சொற்களும் (Semantemes and Morphemes in Tamil Language), ஒலியனியல் (Phonetics), சொல்லியல் (Semantics), முதலான நூல்களை வெளியிட்டார். பின் இவற்றைத் தொகுத்தும் பகுத்தும் தமிழ் மொழி (Tamil Language)என்னும் நூலை வெளியிட்டார். இவற்றின் மூலம் தமிழின் தனித்தன்மையைப் பேராசிரியர் நன்கு எளிமையாயும் செறிவாயும் விளக்கியுள்ளார். ஓரளவு ஆங்கில அறிவு உடையவர்கள்கூடப் பெரிதும் பயனுறும் வகையில் இந்நூல்கள்அமைந்துள்ளன என அறிஞர்களால் பெரிதும் இவை போற்றப்பட்டன.
பேராசிரியரின் நூல்களுள் மகுடமாக அமைந்தது, அவரது தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பும் ஆராய்ச்சி உரையும் (Tholkappiyam in English with Critical Studies) ஆகும். தமிழகத்தின் பண்பாட்டு வாயிலான தொல்காப்பியத்தை இன்றைக்கும் பன்னாட்டினரும் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ள சிறப்பு மிக்க நூல் இதுவே ஆகும்.
இவ்வாறாக அன்னைத் தமிழின் சிறப்பை அனைத்து நாட்டினரும் தெரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் ஆங்கிலத்தில் சிறப்பான நூல்களை அளித்த மேதை இலக்குவனார் அவர்கள் தமிழ் மக்களுக்காகத் தமிழிலும் பல நூல்களைப்படைத்து அளித்துள்ளார்.
புலவர் மாணாக்கராக இருந்த பொழுதே சிறந்த படைப்பாளராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி‘ என்னும் அவருடைய தனித்தமிழ்க் கதைப்பாவியம் அக்காலச் சீர்திருத்தப்படைப்புகளிலும் தனித்தமிழ்ப்படைப்புகளிலும் மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் முதலிடத்தைப் பெற்றதென ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படுகிறது.
பேராசிரியரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை – கல்லூரிப்பணியினின்று நீக்கப்பட்ட அவலத்தை – மரபு நடையிலும் புதுக்கவிதைப் போக்கிலும் எழுதிய ‘துரத்தப்பட்டேன்’ என்னும் பாவியம் அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரின் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. ‘என் வாழ்க்கைப்போர் (இளமைப்பருவம்)’ என்னும் தன்வரலாற்று நூல் பேராசிரியரின் தமிழ்ப்போர்க்களத்தைக் காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றிய பேராசிரியரின் ‘‘அம்மூவனார், மாமூலனார் காதல் காட்சிகள்(சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்), இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’’ ஆகியன சங்க இலக்கியச் சிறப்புகளை ஆழமாகவும் எளிமையாகவும் மக்களிடையே உணர்த்தின; பழந்தமிழர் உயர்வைப் பாரறியச் செய்து வருகின்றன.
குறட்பணியை வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த பேராசிரியரின் ‘‘அமைச்சர்யார்?, எல்லோரும் இந்நாட்டுமன்னர், திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம்’’ முதலானவை பல்வேறு கண்ணோட்டங்கள் வாயிலாக வள்ளுவத்தை மக்களிடையே பரப்புவதில் வெற்றி கண்டன. பின் மூன்று நூல்கள் இன்றைக்கும் திருக்குறளை வழிகாட்டியாகக் கொள்வதற்கு வரவேற்பைப் பெற்று வருகின்றன.
‘‘தொல்காப்பிய ஆராய்ச்சி, பழந்தமிழ்,’’ ஆகிய நூல்கள் பழந்தமிழ் வளத்தையும் நலத்தையும் நன்கு அறிய உதவுகின்றன.
‘தமிழ் கற்பிக்கும் முறை’ தமிழைப் பிழையின்றியும் எளிமையாகவும் அயல் மொழியினரும் கற்கும் வகையிலும் தமிழ் கற்பிக்க தக்க வழிகாட்டிநூலாக அமைந்தது.
கருமவீரர் காமராசர் பற்றி அறியவும், அரசு தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அறிவுறுத்தவும் அமைந்த நூலே பேராசிரியரின் ‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூலாகும்.
தமிழிசைப்பாடல்கள், ‘மாணவர் ஆற்றுப்படை’, வாழ்த்துப்பாக்கள், நினைவுப் பாக்கள் முதலான பல வகையிலும் அமைந்த பாடல்கள் ஆகியன பேராசிரியரின் பாடற்புலமைக்குத் தக்க சான்றுகளாகும்.
இதழ்களிலும் மலர்களிலும் வெளிவந்துள்ள பேராசிரியரின் கட்டுரைகளும் தமிழையே மூச்சாகக் கொண்ட அவரின் சீர்மையையும் நுண்மையையும் விளக்குவனவாக அமைந்துள்ளன.
படிப்போரை மட்டும் பாங்குற வழிநடத்தும் படைப்புப் பணியுடன் பேராசிரியர் நின்று விடவில்லை. ‘‘சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, Kuralneri’’ முதலான பல இதழ்கள் நடத்தியும் பொதுமக்களிடம் தமிழ்ச்சிறப்பையும் தமிழுக்கு நேர்ந்து வரம் தீங்குகளையும் அவற்றைக் களைய வேண்டிய கடமைகளையும் விளக்கினார். அவரது மக்கட் பணியே ‘தமிழர் தளபதி’ எனத் தந்தை பெரியாரால் அவரைப் போற்றச் செய்தது.
தாம் பணியாற்றிய நகர்கள் யாவிலும் தமிழ் அமைப்புகள் நிறுவி இலவசத் தமிழ் வகுப்புகள் நடத்திப் பொதுமக்களிடம் தமிழ்க்கல்வி மீதான ஈடுபாட்டை உருவாக்கினார். தமிழ் வழிக்கல்விக்காகவும் அன்னைத் தமிழே அனைத்திலும் முதன்மை பெற வேண்டும் என்பதற்காகவும் முழக்க ஊர்வலங்கள் நடத்தியும் தமிழ்மறுமலர்ச்சி விழாக்களையும் புலவர்களைப் போற்றும் விழாக்களையும் நடத்தியும் தமிழ்க்காப்பினை மக்கள் இயக்கமாக மாற்றினார். பேராசிரியர் நிறுவித் தலைமை தாங்கிய தமிழ்க்காப்புக்கழகத்தின் செயற்பாடுகள் இந்தித்திணிப்பை எதிர்ப்பதில் மாணவர்களையும் இளைஞர்களையும் பொதுமக்களையும் ஈடுபடச் செய்தன. தமிழ் உரிமைப் பெருநடைப்பயணத்தால் பேராசிரியர் தளையிடப்பட்டுப் பதவியை இழந்தாலும் சிறை மீண்டபின்பும் வாழ்நாள் இறுதிவரையும் தமிழ்ப்பணியையே தொடர்ந்தார்.
கல்விப்பணியுடன் தமிழ்நலப்பணிகளையும் ஆற்றிய ஒரே பேராசிரியராக முத்தமிழ்ப் போர்வாள் முதுபெரும் புலவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் திகழ்ந்ததால்தான் வான்புகழ் கொண்டு வையகமெங்கும் சிறப்பிக்கப்படுகிறார்.
பேராசிரியர் இலக்குவனார் கார்த்திகை முதல்நாள்(தி.பி.1940) நவம்பர் 17 ஆம் நாள்(கி.பி.1909) பிறந்தார். இவ்வாண்டும்(தி.பி.2042,கி.பி.2011) இரு நாள்களும் இணைந்து வந்துள்ளன. இந்நாளில் பேராசியரின் தமிழ் பரப்பிய தகைமையையும் போர்ப்பண்பையும் நாமும் கொண்டு தமிழ் சிறக்கவும் தமிழர் தன்னுரிமையுடன் திகழவும் உலகத் தமிழர் உயரவும் பாடுபட உறுதி கொள்வோம்.

Saturday, September 04, 2010

மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா


த்தலகுண்டு' தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம். அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது.வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பி.எஸ்.ராமையா பிறந்தார்.படிக்க வசதியில்லை. ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட ராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார். படித்த படிப்பு நாலாவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவரவில்லை.மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்யபவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார். 18 வயது வாலிபரான ராமையா, செய்யாத தொழிலில்லை. பார்க்காத வேலையில்லை.முன்பே நெஞ்சில் கனலை வளர்த்துக்கொண்டிருந்த தேசிய இயக்கம், ராமையாவைச் சிலிர்த்து எழச் செய்தது. காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.சிறையில், வ.ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார். மனதில் புதுத் தெம்பு ஏற்பட்டது.காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார். ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார். தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.1932-இல் மீண்டும் சென்னைக்கு வந்த ராமையாவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற  குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார்.முன்பே ஜே.ஆர்.ரங்கராஜு நாவல்கள், ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் முதலியவற்றைப் படித்திருந்ததால், படைப்பிலக்கிய ஆர்வமும் சேர்ந்திருந்தது."ஆனந்த விகடன்' சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார். அதற்குக் கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான். அவர் தீவிர தேசிய இயக்கக் கொள்கை உடையவர். பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார் ராமையா. முதலிடம் பெற்ற கதைக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. ராமையா எழுதிய "மலரும் மணமும்' கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் ராமையா. கதையை வெளியிட்டு, எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும் என்று பத்திரிகையில் எழுதிய பிறகே, எழுதியது தான்தான் என்று தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார்.அதன்பிறகு, பத்திரிகை உலகப் பணி அவரைக் கவர்ந்தது. "ஜயபாரதி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்களின் லட்சியத்தை வெளியிடும் ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்களைப் பற்றி இந்தத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும். 1933-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதுதான் மணிக்கொடி. ஸ்டாலின் சீனிவாசனின் ஆர்வமும், லட்சியமும்தான் மணிக்கொடி பிறக்கக் காரணம். "மணிக்கொடி' இதழ் பி.எஸ்.ராமையாவை மிகவும் கவர்ந்தது. "மணிக்கொடி'க்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார்.""மணிக்கொடி காலத்துக்குப் பின் தமிழ்நடையில் படிப்பவர், கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில், அறிஞர் அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஒருபடி மேலே நிற்கிறார். ப.ஜீவானந்தத்துக்கு எழுத்திலும் பேச்சிலும் விசையும் வேகமும் கொண்ட தமிழ்நடை கூடியிருக்கிறது; கனல் இருக்கிறது'' என்ற தம் தூய கணிப்பை தாம் எழுதிய "மணிக்கொடி காலம்' என்ற தொடரில் எழுதி, தமிழுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா. "மலரும் மணமும்' வெளிவந்தபோது அவருக்குச் சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் தெரியாது. "மலரும் மணமும்' பிரசுரமான பிறகு அவருக்குப் புதிய உற்சாகம் ஏற்பட்டது. "மணிக்கொடி'யின் வளர்ச்சியில் நகமும் சதையுமாக இருந்த ராமையா, பல சிறுகதைகள் எழுதிக் குவித்தார்.ராஜாஜியிடமிருந்து கட்டுரை வாங்கி "மணிக்கொடி'யில் வெளியிட்டார் ராமையா. பலருக்கு அதில் அதிருப்தி. "கல்கி'யைத் தவிர வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதாத ராஜாஜி, "மணிக்கொடி'யில் தொடர்ந்து எழுதுவதாக வாக்களித்தார். ஆனால், அதை வெளியிடும் பேறு "மணிக்கொடி'க்கு இல்லை.சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பி.எஸ்.ராமையா அழுத்தமான கொள்கை உடையவர். "இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்' என்றார்.சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையாவின் பண்பு, எழுத்து, வாழ்க்கை மூன்றையும் அறிந்தவர். தன் புதினம் வெளிவருவதற்கு முன்பே தன் சொந்தச் செலவில், "ராமையாவின் சிறுகதைப் பாணி' என்ற நூலை வெளியிட்டார். சிறுகதை இலக்கியத்தைப் பெரிதும் விரும்புபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும். ராமையாவின் வாழ்க்கைச் சரிதத்தை விவரமாக அறிய, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற "மணிக்கொடி காலம்' என்ற நூலைப் படிக்க வேண்டும்.அவர் வளர்த்த, தியாகம் செய்த, சிறிது காலத்துக்குக் (மணி) கொடியைத் தாங்கிப்பிடித்த "மணிக்கொடி' என்று வாசகர்களும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் மார்தட்டிக் கொள்பவர்களும் பேசும்படியாகச் செய்த "மணிக்கொடி'யிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர், ராமையா தன் புது வாழ்க்கையை முடிவு செய்துவிட்டார். திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார்; நாடகம் எழுதினார்; திரைப்படத் தயாரிப்புக்கு உதவினார். ஆனால், அவர் வாழ்க்கையை நடத்தியது, சிறுகதைக் கலைக்குத் தொண்டு செய்வதன் மூலமாக ஆனந்த விகடன், தினமணி கதிர் (முதல் ஜன்மம்), குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி, சன்மானத் தொகையைப் பெற்றார். சி.சு.செல்லப்பாவின் பட்டியல்படி அவர் 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார்.1957-இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்' என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "போலீஸ்காரன் மகள்' என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.பி.எஸ். ராமையா, வெற்றிலை, சீவலுடன் புகையிலை போடும் பழக்கத்தால், அவரது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.பி.எஸ்.ராமையா, 1983-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி (78வது வயதில்) காலமானார் என்ற செய்தியைக் கேட்டு எழுத்துலகமும், வாசகர் உலகமும் கண்ணீர் விட்டது.சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதையும் மணிக்கொடிக்காக அவர் செய்த தியாகத்தையும் எழுத்தில் அடக்கிவிட முடியாது.

Sunday, January 24, 2010

'கொங்குக் குலமணி' - சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார்



செந்தமிழ்ப் புலவராய் இருந்து தமிழை வளர்த்தோரைக் காட்டிலும், வேறு வேறு துறைகளில் புலமை பெற்றவரே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்துள்ளனர்.
ந.மு.வேங்கடசாமி நாட்டார், உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து பின் புலவராகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசச் செட்டியார், வணிகராய் இருந்து பின்னர் புலமை நலங்கனிந்தவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலான பெருமக்கள், வழக்கறிஞர் தொழில் புரிந்து வண்டமிழில் தேர்ச்சி பெற்றவராவர். பா.வே.மாணிக்க நாயக்கர், பொறியாளராய் இருந்து, பின் மொழித்தேர்ச்சி பெற்றவர். புலவரேறு வரதநஞ்சைய பிள்ளை, ஊர்க்காவலராய் இருந்து, பின் ஒண்டமிழில் தேர்ச்சி பெற்றவர். சைவ ஞாயிறு கோவைக்கிழாரும் வழக்குரைஞராய் இருந்து, பிறகு தண்டமிழில் மேதையானவர். கோவைக்கிழார் கல்லூரியில் கற்றபாடம், இயற்பியல், சட்டவியல்.
கோவைக்கிழார் தமிழ் இலக்கண, இலக்கியங்களை, திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோரிடம் கற்றுக்கொண்டார். கோவைக்கிழாரின் இயற்பெயர், இராமச்சந்திரன் செட்டியார்.
1888-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மருதாசலம் செட்டியார்-கோனம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
தொடக்கக்கல்வியை கோவை நகராட்சிப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை லண்டன் மிஷின் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1912-இல் பி.எல். பட்டமும் பெற்றார். கோவையில் வழக்குரைஞராய் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். அத்தொழிலில் அவர் மனம் ஈடுபடவில்லை. தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொண்டார்.
சென்னையில் படிக்கும் காலத்திலேயே சமுதாயப் பணியிலும் ஈடுபட்டார். தாம் வழக்குரைஞர் தொழிலுக்குச் சென்றபிறகு, தம் குலத்துச் சிறுவர்களுக்குப் பணிபுரிய விரும்பி, "தேவாங்கர் சிறுவர் சபை' என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் செயலராக இருந்து பணிபுரிந்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டிப் பணிபுரிந்தார். அச்சபை இன்றும் கோவை-சுக்கிரவாரப்பேட்டையில் இயங்கிவருகிறது.
கோவைக் கிழார், 1918-ஆம் ஆண்டில் கோவை நகராட்சியின் துணைத் தலைவரானார். 1943, 1946 ஆகிய ஆண்டுகளில் பட்டதாரித் தொகுதியில் நின்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுபினராக வெற்றி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சி ஆலோசகராக இருந்தார்.
கோவையில் தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்தார். அதன் ஆட்சிக்குக்குழு உறுப்பினராய் இருந்தார். கோவைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் செயலாளராகப் பணிபுரிந்தார்.
சென்னை சுவடிச்சாலை, தஞ்சை சரஸ்வதிமகால் புத்தகசாலை ஆகியவற்றிலும் இவர் உறுப்பினராய் இருந்தார். கோவை-அரசுக் கல்லூரி பழைய மாணவர் கழகத்திலும், கோவை-காஸ்மோபாலிடன் கிளப்பிலும் (இறுதிக்காலம் வரை) தலைவராய் இருந்தார். இவர் இடம்பெறாத கல்விக் கழகங்களோ, பொதுப்பணி மன்றங்களோ, சமயச் சபைகளோ, பொழுதுபோக்கு அமைப்புகளோ, பொதுமாநாடுகளோ இல்லை என்றே கூற வேண்டும்.
தம் குலத்தினர் நெசவுத் தொழில் ஒன்றிலே நின்று, உயரும்போது உயர்ந்தும், தாழும்போது தாழ்ந்தும் துன்புறுதலைக் கண்டு உள்ளம் வருந்தினார். அத்தொழிலை வளமுடையதாக்கப் பல கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார். மாநாடுகள் பலவற்றை நடத்தினார். அவர்களின் குறைகளைப் போக்க முயன்றார்.
கோவைக்கிழார், சென்னை-ராஜதானியின் அறநிலையத்துறை ஆணையாளராக இருந்தபோது, கோயில்களின் வருவாயில் ஒரு பகுதியை, சமய வளர்ச்சிக்கென ஒதுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியிடுதல், நூல் நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினார். கோயில்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறைப் பதிகங்களைக் கல்லில் பதித்தல், தல வரலாறுகள் எழுதுதல், கோயில் குடமுழுக்குகளை ஆகம முறைப்படி செய்தல் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தமிழ் நாடெங்கும் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறப் பாடுபட்டார்.
சமய ஆதீனங்களான தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, மயிலம் முதலியவற்றில் தமிழ்க் கல்லூரிகள் தோன்றக் காரணமாக இருந்தார். கொங்குநாட்டுப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பிலும் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாருடன் சேர்ந்து தோற்றுவித்தார், அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். திருமடத்தின் சார்பில் உயர்நிலைப் பள்ளி தோன்றவும் காரணமாக இருந்தார்.
கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக கோவைக்கிழார் இருந்தபோது, "கொங்குமலர்' என்னும் திங்கள் இதழை நடத்தினார். சைவசித்தாந்த சமாஜத்தின் இதழான, "சித்தாந்தம்' இதழுக்கும் ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார்.
தஞ்சை சரஸ்வதி மகாலில் உறுப்பினராய் இருந்தபோது, "இராமப்பய்யன் அம்மானை' என்ற நூலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக "தமிழிசைக் கருவிகள்' என்ற நூலையும் பதிப்பித்து வெளிப்படுத்தினார்.
கோவைகிழார், தமிழ் நாட்டின் வரலாற்றையும், புலவர்களின் வரலாற்றையும், கல்வெட்டு-செப்பேடுகளின் துணையால் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத "கொங்குநாட்டு வரலாற்றை' பலரும் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்னும் அச்சில் ஏறாத நூல்களும் பல உள்ளன.
கோவைக்கிழாரின் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு, 1930-இல் "இராவ்சாகிப்' என்ற பட்டத்தையும் 1938-இல் "இராவ்பகதூர்' என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தது. சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம், "செந்தமிழ்ப்புரவலர்' என்ற பட்டத்தையும் சென்னை மாநிலச் தமிழ்ச்சங்கம், "சிந்தாந்தப்புலவர்' என்ற பட்டத்தையும் மதுரை ஆதீனம் "சைவஞாயிறு' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டியது. கொங்குநாட்டு வரலாறு என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசளித்துப் போற்றியது. கோவை நன்நெறிக்கழகம் பொற்பதக்கம் வழங்கிப் போற்றியது. தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
இச்சான்றோர், 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரின் சமாதி பேரூர் தமிழ்க்கல்லூரித் தோப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி



னொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய ""ஏ மனிதா'' என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் திருக்குறளார் வீ.முனிசாமி.விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913}ஆம் ஆண்டு செப்டம்பர் 26}ஆம் தேதி வீராசாமி பிள்ளை}வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார்.1935}ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய திருக்குறள் பரப்பும் திருக்குறளாரின் பணி, அரை நூற்றாண்டையும் கடந்தது.1941}ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள் அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார். தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப்பிள்ளை, இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.தந்தை பெரியார் 1948}இல் சென்னை ராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கல்விக்கடல் சக்ரவர்த்தி நயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.புராண, இதிகாச நூல்களை சோறு, குழம்பு போலவும், திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்துக்கொண்டிருந்த அக்காலத்தில், திருக்குறளை சோறாகவும் குழம்பாகவும் வைத்துக்கொண்டு, புராண இதிகாசங்களை ஊறுகாயாக வைத்துக்கொள்வதுதான் முறையான செயல் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையே தனது வாழ்வின் அடிப்படை நோக்கமாகக் கொண்டார் திருக்குறளார் வீ.முனிசாமி.பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய திருக்குறளார், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். பாமரர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையிலான அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பியது.""இந்த உலகத்தில் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும். ரொம்ப வருடங்களாக இங்கிருந்த ஆலமரம் புயல் காற்றிலே விழுந்துவிட்டது. இங்கிருந்த பெரிய கட்டடம் மழை பெய்து இடிந்துவிட்டது. அதோ போகிறாரே 10 வருடங்களுக்கு முன்பு அவர் லட்சாதிபதியாக இருந்தார். இப்போ, எல்லாம் செலவழித்து ஏழையாகிவிட்டார். இது அழியும் செல்வம். ஆனால் கல்வி அப்படிப்பட்டதல்ல. அவர் 10 வருடங்களுக்கு முன்பு எம்.ஏ., பாஸ் செய்திருந்தார். இப்போது அது எல்லாம் செலவாகி எஸ்.எஸ்.எல்.சி. ஆகிவிட்டார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்'' கேடில் விழுச்செல்வம் என்ற குறளுக்கு, திருக்குறளார் அளித்த எளிய விளக்கம் இது.அதே போல் ""எல்லோரிடத்திலும் எல்லாவிதமான கேள்விகளும் கேட்டுவிடக்கூடாது. எந்த வருடத்தில் பிறந்தீர்கள் என்று கேட்கலாம். எத்தனை வருடங்கள் இருக்கலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூடாது. யார் யாரோ போய்விட்டாங்களே, நீங்க எப்போது பேறதாயிருக்கீங்க என்று கேட்டுவிடக்கூடாது'' என்கிற திருக்குறளாரின் பேச்சு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரம், சிரித்து மறக்கப்படாது சிந்திக்க வேண்டும்'' என வலியுறுத்தினார் திருக்குறளார்.இலக்கியம், இலக்கணம் என்றாலே முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் கூட, திருக்குறளாரின் பேச்சின் ரசிகர்களானார்கள். வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலக்கட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.பெரியார், பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர், டாக்டர் மு.வ., கி.ஆ.பெ.விசுவநாதம், ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி, உ.வே.சா., மகாவித்வான் தண்டபாணி தேசிகர், சுவாமி சகஜானந்தா, சுவாமி விபுலானந்த அடிகளார், சர்.பி.டி.இராசன், சி.பா.ஆதித்தனார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.திருக்குறளாரின் பணியை ""குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே'' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.1949}ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், "குறள் மலர்' இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லியிலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் திருக்குறளாரின்÷திருக்குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.நாடாளுமன்ற உறுப்பினராக (1952}1957) இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார். நாடாளுமன்றத்தில் அப்போது மக்களவைத் தலைவராய் (சபாநாயகர்) இருந்த அனந்தசயனம் அய்யங்கார், திருக்குறளார் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நல்ல ஆர்வமும் ஊக்கமும் கொடுத்தார். இக்காலகட்டத்தை தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாழும் தமிழர்களிடையே குறட்பாக்களை எடுத்துப் பேசுவதற்கு திருக்குறளார் பயன்படுத்திக் கொண்டார்.1981}ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.வள்ளுவர் வழிப்பயணம், வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை, வள்ளுவர் பூங்கா, வள்ளுவரும் பரிமேலழகரும், திருக்குறள் இன்பம், வள்ளுவரைக் காணோம், திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை, வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி என 30 நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப் பொதுமறை}திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறளாருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது.தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன. ஆனாலும், 23.1.1951}இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்து, வள்ளுவர் வழி நடந்த திருக்குறளார் வீ.முனிசாமி 1994}ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.திருக்குறள் உள்ளவரை திருக்குறளார் வீ.முனிசாமியின் பெயரும் புகழும் நின்று நிலைக்கும்.
கருத்துக்கள்

I HAVE TRIED MY BEST TO GET HIS AUDIOS ON "THIRUKKURAL". IN HIS WORDS, "A MANITHA - WHILE SOWING A SEED ITSELF WE CAN SAY THAT THIS WILL GROW AS MANGO TREE OR NEEM TREE. BUT IN THE CHILD STAGE, WE CAN NOT SAY THAT HE WILL BECOME AN ENGINEER, A DOCTOR OR A TEACHER." I LOVE TO HEAR THIS IN HIS VOICE IN A HUMOROUS TONE. T.L. SUBRAMANIAM, SHARJAH, UAE

By T.L. SUBRAMANIAM
1/24/2010 12:48:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அருந்தமிழ்த் தொண்டர்-அரங்கசாமி நாயக்கர்



தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர் மிகப்பலர். அவருள் ஒரு சிலரையே இன்று நாமறிந்து போற்றி வருகிறோம். எஞ்சியுள்ளோரின் தமிழ்த் தொண்டும் அவர்தம் வரலாறும் வெளிப்படாமல் இருக்கின்றன. அத்தமிழ்த் தொண்டர்கள் தம் வரலாறு முழுவதுமாக வெளிப்பட்டாலன்றி, தமிழிலக்கிய வரலாறும் முற்றுப்பெறாததாகவே அமையும். ஆதலால், தமிழன்பர்கள் தாமறிந்த தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்றை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இதுவும் ஒருவகைத் தமிழ்த்தொண்டே.அரங்கசாமி நாயக்கர்,1884-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், தந்தை பற்றிய விவரம் அறியக்கிடைக்கவில்லை. சு.அரங்கசாமி நாயக்கர், மேனாள் பிரெஞ்சிந்தியப் பகுதியான காரைக்காலைச் சேர்ந்த திருநள்ளாறு வட்டம், இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், குறிப்பாகப் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும் பெரும் பங்காற்றியவர். பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய பெருந்தகை. இவர் திருநள்ளாறு நகர மன்றத் தலைவராக நெடுங்காலம் பணியாற்றினார். ஏழைகள் மீது இரக்கம் மிக்கவர். தந்தை பெரியாரிடம் கொண்ட ஈடுபாட்டால் தம் இல்லத்திலேயே தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் சமபந்தி உணவளித்து மகிழ்ந்தவர்.மணியாச்சியில் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி அனுப்பி உதவியவர் இப்பெருமகனாரே ஆவார் என்ற செவிவழிச் செய்தியும் உண்டு.இவரும் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர்கள் சிலரும் சேர்ந்து, "பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிகை' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தனர். விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளோடு, தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இப்பத்திரிகையில் இடம்பெற்றன. குறிப்பாக தமிழ்மொழி பற்றியும், தமிழிலக்கணம் பற்றியும் அரங்கசாமி நாயக்கர் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரைகளை நூல் வடிவாக்கி வெளியிட்டோர் அரங்கசாமியின் நண்பர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களுமாகிய, காரைக்கால் வ.பொன்னையா மற்றும் திருநள்ளாறு, தேனூர் பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுமாவர். இந்நூல் பொறையாறு, "ரத்னா விலாஸ் பிரஸ்' என்ற அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டு 3.2.1944-இல் வெளியிடப்பட்டது. "குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம்' என்பது நூலின் பெயர். நூலின் முகவுரையில் தமிழின்கண் வடமொழிக் கலப்புப் பற்றிய கருத்தினை வெளியிட்டுள்ளார். தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற் கலப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார் அரங்கசாமி நாயக்கர். மேலும் தெய்வத் தொடர்பிற்கு வடமொழி உதவியது என்ற கருத்தினையும் வெளியிட்டுள்ளார். ""தெய்வ சம்பந்தங்களுக்கு மாத்திரம் வடசொற்களை வைத்துக்கொண்டு தமிழைத் தனித் தமிழாக்கிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது'' எனவும் அரங்கசாமி நாயக்கர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது.அத்துடன், ""ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'' என்ற தொடரினைக் குறித்து தம் கருத்தினைச் சுட்டியுள்ளார். ""அது "ஐந்திரம் அல்ல', "ஐந்திறம்', ஆகவே இருக்க வேண்டும். அதன் விவரம் வேறு கூறுவாய்'' என்று கூறியுள்ளார் (ஆனால் இந்நூலில் இதுபற்றிய செய்தி ஒன்றும் இடம் பெறவில்லை). மற்றும் வீரசோழிய இலக்கணம் பற்றியும் தம் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். "பிழைகளைத் திருத்தி அமைப்பதுவே நமது இவ்வாரம்ப இலக்கணத்தின் நோக்கம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்நூலின் நோக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்திலக்கணம் மட்டுமே இயம்புகிறது என்பதையும் சுட்டியுள்ளார்.தமிழின் ஒலிப்புமுறை, நகர, னகர பேதங்கள், லகர, ளகர பேதங்கள், ழகர, ளகர பேதங்கள், மயக்கம் (மெய்ம்மயக்கம்), முதலிடை, கடைநிலை எழுத்துகள், புணர்ச்சி என்ற தலைப்புகளில் எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலாசிரியர் பல செய்திகளை விளக்கிக் கூறியுள்ளார். இதுவே இந்நூல் தரும் செய்தியாகும். நூல் சிறிதாயினும், முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுமானால் மொழிப் பிழைகள் குறைந்து பிழையின்றி எழுதும் திறம் பெறுவர் என்பதில் ஐயமில்லை.அரங்கசாமி நாயக்கர், தம் வாழ்நாளில் பெரும் பகுதிகளை விடுதலைப் போராட்டத்திலும், சமுதாய மேம்பாட்டுப் பணிகளிலும் செலவிட்டார் என்றாலும் தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது கொண்டிருந்த நீங்காப் பேரன்பினால், தாம் நடத்திய பத்திரிகையில், தமிழின் முன்னேற்றத்திற்கான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டுத் தொண்டாற்றியுள்ளார்.இப்போது இந்நூல் கிடைத்தற்கரியதாய் இருப்பதால், தமிழக அரசும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இதுபோன்று மறைந்து கிடக்கும் நூல்களை வெளியிடும் பணிகளை மேற்கொள்ளல் வேண்டும்.இவ்வாறு வெளிச்சத்திற்கு வராத தமிழ்த் தொண்டர்களையும், தமிழ் நூல்களையும் தமிழன்பர்களும், தமிழ் ஆர்வலர்களும் வெளிப்படுத்துவாராக! அயராமல் உழைத்த அரங்கசாமி நாயக்கர், 1943-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
தமிழவேள் உமாமகேசுவரனார்



பண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் "வேள்' என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர். ஒருவர், "வேள்' பாரி; மற்றொருவர் "வேள்' "எவ்வி'. சங்க காலத்துக்குப் பிறகு முதன்முதலாக "வேள்' எனும் பட்டத்தைப் பெற்றவர்தான் உமாமகேசுவரனார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான வடவாற்றுக்கும் வெண்ணாற்றுக்கும் இடையில் உள்ள "கருந்திட்டைக்குடி' எனும் கிராமத்தில், 1883-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் வேம்பப்பிள்ளை-காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.÷வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேசுவரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமானார். எனவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார். தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேசுவரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். உமாமகேசுவரனாரின் சிற்றன்னை இவரைத் தம் மூத்தமகன் போலவே வளர்த்துவந்தார். தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.நேர்மையான வழியில் செல்ல விரும்பிய அவருக்கு, அப்பணியில் நீடிக்க விருப்பமில்லை. எனவே, சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர், தஞ்சை கே.சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.தம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார். இவருக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று பிள்ளைகள். மூன்றாவது பிள்ளை, பிறந்து நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். தமது மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் உமாமகேசுவரனார்.துன்பத்துக்கு மேல் துன்பமாக, அவரது மூத்தமகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தினார். அதன் வழியாக ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பொருள் வசதி செய்ய வழிவகுத்தார்.உமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர, அவரது வழக்குரைஞர் பணி மிகவும் உதவியாக இருந்தது. தம்மிடம் வரும் கட்சிக்காரர்களிடம் ""இவ்வளவு தொகை தர வேண்டும்'' எனக் கேட்கமாட்டார். பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார். இவரது நேர்மையை அறிந்த அன்றைய அரசு, அவரை "அரசு கூடுதல் வழக்குரைஞர்' பணியில் அமர்த்தியது.தஞ்சை வட்டக்கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார். அவரது பதவிக்காலத்தில் வரகூர்-அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி-கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். இவர் பொறுப்பேற்ற போது நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன. உமாமகேசுவரனார் அந்த எண்ணிக்கையை நூற்று எழுபதாக உயர்த்தினார்.கூட்டுறவு இயக்கத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தால், 1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் நாள், கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார். 16.2.1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார். இதேபோல 1938-இல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார். இவற்றுக்கெல்லாம் உமாமகேசுவரனாரின் சிறந்த நிர்வாகத் திறனே காரணம்.1911-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தொடங்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக உமாமகேசுவரனாரைத் தேர்ந்தெடுத்தனர். இன்று ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும். அன்றே தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம் சார்பில் 6.10.1916-இல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். மேலும், சங்கத்தின் சார்பில் 1928-29-இல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. உமாமகேசுவரனார் சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே "தமிழ்ப்பொழில்' என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார். 1915-இல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928-30-இல் "கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்' எனும் கட்டடம் கட்டப்பட்டது.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் "தமிழவேள்' பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார் உமாமகேசுவரனார்.துறையூரில் நடைபெற்ற மாவட்டத் தமிழர் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புரை, நெல்லைப்பாலம் இந்துக் கல்லூரியில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை போன்றவை உமாமகேசுவரனாரின் பேச்சாற்றலை விளக்குவன. "தமிழ்ப்பொழில்' இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன. இவரது முயற்சியால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஓர் இடம் கிடைத்தது.தமிழில் நிறைய கலைச்சொற்கள் உருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட உமாமகேசுவரனார், தமிழ்ப்பொழில் இதழில் சாமிவேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தார்.ஞானியாரடிகளின் மணிவிழாவின் போது, "செந்தமிழ்ப் புரவலர்' எனும் பட்டத்தை ஞானியாரடிகள் அவருக்கு அளித்தார். சைவசமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், மற்ற சமயங்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. மாறாக பிற சமயங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளார்.தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார்.பிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். அப்போது அவரது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1941-ஆம் ஆண்டு மே 9-ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.கரந்தைத் தமிழ்ச் சங்கம், ராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி, உமாமகேசுவரர் மேல்நிலைப் பள்ளி, கரந்தை கலைக் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், தமிழ்ச் சங்க நூல் நிலையம், படிப்பகம், தமிழ்ப்பெருமன்றம், தமிழ்ப்பொழில்-இதழ் ஆகியவை அனைத்தும் அவரது நினைவைப் பெருமையுடன் நிலைநிறுத்துகின்றன.

Sunday, October 25, 2009

பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா



தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். ராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவைப் பற்றி, ""ஜகந்நாதராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை'' என்று காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் கூறியுள்ளார். 1933-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி, ராஜபாளையத்தில், குருசாமிராஜா - அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த அவர், மிக மிக எளிமையானவர்; அனைவரிடமும் குழந்தை மனத்துடன் பழகும் தன்மை கொண்டவர். சுயமாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கிய, இலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும், புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், முத்தொள்ளாயிரம் நூலை தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆக்கம் செய்து ஜகந்நாதராஜாவே வெளியிட்டுள்ளார். புவிப்பேரரசரும் கவிப்பேரரசருமான கிருஷ்ணதேவராயர், நமது ஆண்டாள் வரலாற்றை "ஆமுக்த மால்யதா' என்று தெலுங்கில் காவியம் செய்தார். அக்காவியத்தை தமிழாக்கம் செய்ததற்காக, சாகித்ய அகாதெமி முதன் முதலில் தனது மொழிபெயர்ப்புக்கான விருதை ஜகந்நாதராஜாவுக்கு அளித்துச் சிறப்பித்தது. தென்காசியில் பணிசெய்தபோது, ரசிகமணி டி.கே.சி.யுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக இலக்கியங்களைப் படித்து, தன்னை மேன்மேலும் வளர்த்துக்கொண்டார். சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கு நாவல் "சேரி'யைத் தமிழாக்கம் செய்துள்ளார். "வடமொழி வளத்திற்கு தமிழரின் பங்கு' என்ற ஆய்வு நூல் செய்துள்ளார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்று "தமிழக, ஆந்திர வைணவத் தொடர்புகள்' என்ற ஆய்வு நூலையும் எழுதினார். பிராகிருத மொழிப் பேரிலக்கியம் "காதாசப்தசதி'. இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார் ஜகந்நாதராஜா. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக "தமிழும் பிராகிருதமும்' என்ற ஆய்வு நூல் எழுதினார். மேலும் வஜ்ஜாலக்கம், தீகநிகாயம், நாகானந்தம், கலாபூர்ணோதயம், வேமனா பாடல்கள், சுமதி சதகம், மகாயான மஞ்சரி, தேய்பிறை குந்தமாலா, காந்தியின் குருநாதர் ஆகிய நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார். தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய, "பாரதி காலமும் கருத்தும்' என்ற நூலை சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் தரிசனம், காவிய மஞ்சரி, கற்பனைப் பொய்கை ஆகிய நூல்களுடன் ஆபுத்திர காவியம் என்ற பெரிய காவியத்தையும் எழுதியுள்ளார். இவை தவிர அவர் எழுதிய பல நூல்கள் இன்றும் கையெழுத்துப் படிகளாவே உள்ளன. இவை வெளிவந்தால் தமிழ் இலக்கியம் மேலும் வளம் பெரும் என்பது உண்மை. இவரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர், இலக்கிய அறிஞர், தத்துவ மேதை, தென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன், பல எழுத்தாளர்களின் செவிலித்தாய், பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர் ஜகந்நாதராஜா. "ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் மாநாடுகள், புதுதில்லி, லக்னெü, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்தபோது, அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன. 1958-ஆம் ஆண்டு, பூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மணிமேகலை இலக்கியத்தில் ஜகந்நாதராஜாவுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகப் பல ஆய்வுகளைச் செய்தது மட்டுமல்லாமல், 1958-இல் மணிமேகலை மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தார். அம்மன்றம், ஆக்கப்பூர்வமான பல இலக்கியப் பணிகளைச் செய்து, சென்ற ஆண்டு பொன்விழாவும் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல அறிஞர்கள் ஜகந்நாதராஜாவைக் காண வருவார்கள். அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகி, அவர்களின் ஐயப்பாடுகளை நீக்கி அனுப்பிவைப்பார். தன்னிடம் இருந்த நூல்களை (பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்கள்) தனி நூலகமாக ஆக்கினார். "ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்' என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் ராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். ராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர். 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, குடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த ஜகந்நாதராஜா, 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் எழுதியுள்ள பல நூல்களை வெளிக்கொணர்வதே தமிழ் இலக்கிய உலகம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.