Tuesday, December 27, 2011


புரட்சியில் பூத்த மலர்

க.இந்திரசித்து
பதிவு செய்த நாள் : 27/12/2011



புரட்சியில் பூத்த மலர்
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, லெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வரலாற்றை மறைமலை இலக்குவனார் நிரல் படத் தொகுத்தும், வகுத்தும், ஆய்ந்தும் இந்நூலில் எழுதியுள்ளார்.
தமிழ் மொழி காப்புப் போரில் புரட்சி வீரராகப் போராடிய சி.இலக்குவனார் தமிழ்ப் போராசிரியர்கள் தன்மானத்தோடு வாழ்ந்து காட்டவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். விடாமுயற்சியும், தளரா உழைப்பும் கொண்டு தன்னிகரில்லா பேராசிரியராக உயர்ந்து நிற்கிறார்.
1.இளமையும் கல்வியும், 2. கல்விப்பணி, 3.கவிதைப்பணி, 4.இதழாசிரியர், 5.நூலாசிரியர், 6.ஆராய்ச்சியாளர், 7.திருக்குறள் உரை நுட்பமும் ஆய்வுத்திறனும், 8.ஓய்வில்லா உழைப்பு, 9.பன்முக ஆளுமை என்னும் ஒன்பது தலைப்புகளில் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்வும், பணியும் பாங்குடன் படைக்கப்பட்டுள்ளன. இந்நூலை எழுதியுள்ள மறைமலை இலக்குவனாரின் மொழிநடை தனித்தமிழ் அருவியாய்த் தாலாட்டுகிறது. மொழிநடைச் சுவையில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பக்கத்தில் நிற்கும் தகுதியை மறைமலை இலக்குவனார் பெற்றுள்ளார்.
கார்ல் மார்ச்சு, தன்னுடைய பொதுவுடைமைக் கருத்துக்களுக்காக செர்மமி, உருசியா, பெல்சியம், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அவரைத் தம் நாட்டு எல்லையிலிருந்து துரத்தி அடித்ததைப் போலவே சி. இலக்குவனாரையும் அவருடைய தமிழியல் கொள்கைகளுக்காக ஒவ்வொரு கல்வி நிறுவனமும் துரத்தி அடித்த செய்தியைப் படித்துப் பார்த்து, படித்துப் பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. விரிந்த மனப்பான்னையின்மை, அறிவியல் பார்வையின்மை,தொலை நோக்கின்மை, மாணவர் நலன் கருதாமை, தன்னலமே பெரிதாகப் பேணுதல் போன்ற இழிகுணங்கள் கொண்ட கயவர்களின் கைகளில் அன்றைய கல்வி நிறுவனங்கள் செயல் பட்டமையை கண்டு, அளப்பரிய அவலம் கொண்டு நெஞ்சம் தவிக்கிறது. (கல்வித்துறையில் தொழிற்சங்கங்கள் தோன்றிய இந்நாட்களிலும் இது தொடர்கதையாய்த் தொடர்வதே கண்கூடு). “பேராசிரியர் இலக்குவனாரைப் போல பணியாற்றிய இடங்களிலெல்லாம் மாறி மாறிப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வேறு எவரும் இலர் எனலாம்” (ப.54) என்னும் கூற்று அன்றைய கல்வித்துறை எப்படிப்பட்ட பிற்போக்கு மூடர்களின் கைக்குகைகளுக்குள் அகப்பட்டு, அல்லாடிக் கிடந்தன என்பதைப் பளிச்சென சுட்சுகிறது. ஒரு பேராசிரியர் எவ்வளவு இன்னலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் “துரத்தப்பட்டேன்” என்னும் தலைப்பிலேயே கவிதை படைக்கும் அவலத்திற்கு ஆளாகி இருக்கவேண்டும்? “புறநெறியில் சென்று பொல்லாங்கு கூறி என்னைத் துரத்தினர். துரத்தப்பட்டதால் அடைந்துள்ள துயரங்கள் எண்ணற்றன. என் உள்ள குமுறலை வெளிப்படுத்தினால்தான்  என் உளம் அமைதியுறும் போலிருந்தது. என்னுள்ளொலி இம்மறவழிச் செயலை மக்கள் மன்றில் முறையிடப் பணித்தது. அதன் விளைவே இந்நூல்” (ப.55) என்று இந்நூல் தோன்றியதற்கான காரணத்தை பேராசிரியர் சி.இலக்குவனார் கூறியுள்ளார்.
பகடியம் என்னும் புது உத்தியில் பண்டைய தமிழ்க் கவிதைகளை எடுத்துக்கொண்டு அதில் தன் கருத்துகளை, தன் காலச் சூழ்நிலைகளை எழுதியுள்ளார்.
“யாண்டு பலவின்றியும் நரையுளவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
ஆண்ட நம் மக்கள் அடிமைகளாயினர்
பூண்ட நம் பண்பு போலியதாகின்று
நற்றமிழ் மறந்தனர் நானிலமதனில்
பிறமொழிப் பற்றில் பெரியோராயினர்
தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை
ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்
தமிழைக் கற்றோர் தாழ்நிலை யுறுவதால்
தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்
அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே
என்ற பாடல் இதற்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
குறிக்கோள் முழக்கம்:
‘எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ் பரப்ப’ என்பதே இலக்குவனாரின் குறிக்கோள் முழக்கமாகும். அதற்கிணங்க, ‘சங்க இலக்கியம்’, ’இலக்கியம்’, ‘திராவிடக் கூட்டரசு’, ’குறள் நெறி’, ‘Dravidian Federation’ ஆகிய இதழ்களை நடத்தினார். பேராசிரியராக இருந்து கல்விப் பணியாற்றியதோடு இதழாசிரியராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தார். ‘குறள்நெறி’ இதழை நாளிதழாக நடத்தி இதழியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.  வட்டத்தொட்டிக் குழுவினர். ‘கம்பன் புகழ் பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்: சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’ என்று கூறிய முழக்கத்தை மறுத்து, ‘சங்கத்தமிழ் பாடி தமிழர் புகழ் வளர்போம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழைத் தோற்றுவித்தார். “ஆண்டுதோறும் ஒரு நூலாவது எழுதி வெளிவர வேண்டும், நம் வயதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடகூடாது. நாம் எழுதிய நூல்களைக் கொண்டுதான் கணக்கிட வேண்டும்” (ப.96) என்று இலக்குவனார் கூறுவதற்கேற்ப, இருபது தமிழ் நூல்களையும் ஒன்பது ஆங்கில நூல்களையும் படைத்துள்ளார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொல்காப்பியம் குறித்து இவர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் மாபெரும் அறிவுக் கொடையாக விளங்குகின்றன.
சில முடிவுகள்:
  1. தொல்காப்பியரின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
  2. ஆரியரின் வருகைக்கு முன்னரே தமிழ் தனக்கெனத் தனியான வரிவடிவம் பெற்றிருந்தது.
  3. தொல்காப்பியரால் அந்தணர்மறை எனக்கூறப்படுபவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல.
  4. ஒலிநிலைப்பாடும், ஒலியழுத்தமும் தொல்காப்பியரால் ஆய்ந்து கூறப்பட்டுள்ளன.
  5. தொல்காப்பியம் பல்வேறு மொழியியற் கோட்பாடுகளையும் இலக்கியக் கோட்பாடுகளையும் மொழிகின்றது.
  6. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பாகுபாடு பற்றி தொல்காப்பியத்தில் எவ்விடத்தும் குறிப்பிடவில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தின் கல்விக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது பேராசிரியர் கொண்டுவந்த தீர்மானங்களின் உள்ளடக்கத்தில் உள்ள சிந்தனைகள் இவருடைய தொலைநோக்குப் பார்வையைச் சுட்டுகின்றன. இவருடைய தீர்மானங்கள்:(ப.28)
  1. தமிழ்நாட்டுக் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். அதன் அறிகுறியாக வித்துவான் முன்னிலை வகுப்புத் தேர்விலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  2. கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாக மொழியாகவும், ஏனைய மொழிகள் இரண்டாம் பாகமொழியாகவும் அமைதல் வேண்டும்.
  3. தமிழ்ப்பாடத் தேர்வில் திருக்குறளுக்கெனத் தனிக் கேள்வித்தாள் ஒன்று அமைதல் வேண்டும்.

1965ஆம் ஆண்டு அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்பதற்காக ‘தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம்’ மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதன் காரணமாக இவர் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். தமிழ் மொழிக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்க அணியமாக இருந்த இவரின் நெஞ்சுரத்தை இந்நிகழ்வு எடுத்தியம்புகிறது.

எக்கரணியத்தை முன்னிட்டும் யாருக்காகவும் கொள்கையில் பேராசிரியர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. அறிஞர் அண்ணாவின் மீது அன்பு கொண்டிருந்தபோதும் (ப66மற்றும்67) அவர் கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று கூறிய கருத்தைப் பேராசிரியர் ஏற்கவில்லை (ப.17). அதனால் அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் இவருக்கு  ‘நன்னிலம் நண்பர்க்கு’ என்னும் தலைப்பில் விடையெழுதியுள்ளார். திருமணமாகாத இளம் பேராசிரியர் பா.நமச்சிவாயம், முதுகலை வகுப்பிற்குப் பாடமாக ‘குடும்ப விளக்கை’ நடத்தினார். அப்போது அங்கு வந்த பாரதிதாசன் திருமணமாகாத அவருக்கு அப்பாடத்தை நடத்தத் தகுதியில்லை என்று கூறி, திருமண மான மாணவர் ஒருவரைப் பாடம் நடத்தப் பணித்தார். இது கண்டு வெகுண்டெழுந்த பேராசிரியர் இலக்குவனார், “அப்படியானால் இளங்கோ அடிகளும், திருத்தக்கதேவரும் திருமணம் புரிந்துகொண்டா இல்லற இன்பம் பற்றிப் பாடினார்கள்” என்று கூறி பாவேந்தரையும் மறுத்துரைத்து, நீதியின் பக்கம் நின்ற பேராசிரியரின் செயலை மறைமலை இலக்குவனார் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதர், ஒரு பேராசிரியர், ஒரு நூலாசிரியர், ஒரு ஆராய்ச்சியாளர், ஒர் இதழாசிரியர் இப்படியும் வாழ்ந்திருக்க முடியுமா என்ற மலைப்பை  ஏற்படுத்துகின்றது இந்நூல். பேராசிரியர் சி. இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடிக்கும் போது மனதின் அடியாழத்தில் குற்ற உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க இயலாததாகிறது. தமிழால் ஊதியம் பெறும் நாம் சிறிதளவாவது தமிழ் ஊழியமும் செய்யலாமே என்ற எண்ணத்தை எற்படுத்துவதே இந்நூலின் வெற்றி எனலாம்.

நன்றி: முதற்சங்கு, தீராநதி




0

No comments: