Thursday, September 12, 2013

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்




ஏடுகாத்த பீடுடைச்  செல்வர் தாமோதரனார்

-          இலக்குவனார் திருவள்ளுவன், thiru2050@gmail.com

  பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட  அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம். அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய்  அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில்  அரங்கேறின. இத்தகைய அரும் பணியில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்களுள் முதன்மையானவர்களுள் ஒருவராகத் திகழ்பவரே ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்.

  அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி அச்சேற்றியவர் என்றால் அனைவரும் குறிப்பிடுவது அறிஞர் .வே.சா. அவர்களைத்தான். அவரது பணி போற்றுதற்குரியது என்றாலும் அவருக்கும் முன்னோடியாகப் பதிப்புச் செம்மல்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரனாரும் ஆவர். பதிப்புப் பணியில், உலகில்  நமக்குக் கிடைத்துள்ள முதல் வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை  முழுமையாகப்பதிப்பித்த, தாமோதரனாரே முன்னோடி என்றும் அவர் யாழ்ப்பாணத்துக்காரர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு .வே.சா. குறிப்பிடப்படுவதாகவும் பலருக்கு வருத்தம் உண்டு. உண்மையில் இலங்கை அல்லது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. பொதுவாகவே பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களையே முன்னிலைப்படுத்தி மகிழும் போக்கு அவ்வகுப்பினருக்கு வழங்கப்படும்  முதன்மையால்  நிலவுகின்றது.   மேலும் தமிழ் வரலாறு இந்தியத்தால் மறைக்கப்பட்டு  உலகு தழுவிய தமிழ் வரலாறு  உணர்த்தப்படாமையாலும் பிற நாட்டு நல்லறிஞர் வரலாறு மறைவாகப் பேசப்படும் நிலை உள்ளது. தாமோரதரனார்தான் தன்  வழிகாட்டி என்று கூறும் அறிஞர் .வே.சா. அவர்களே, "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும்.’’ என  டி.. இராசரத்தினம் பிள்ளை அவர்களின்  'தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் கூறியுள்ளமையால், அறிஞர் தாமோதரனாரின் பதிப்புப்பணியைப் பாராட்ட வேறு சான்று தேவையில்லை.

 உண்மையில், திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் (முதல் நூல் பதிப்பாண்டு 1812), .முத்துசாமிப் பிள்ள(1816), புதுவை நயனப்ப முதலியார் (1835), முகவை இராமாநுசக் கவிராயர் (1840), களத்தூர் வேதகிரி முதலியார் (1832), மழவை மகாலிங்கையர் (1847), தாண்டவராய முதலியார்  (1824), திருத்தணிகை .விசாகப் பெருமாளையர்  (1828), திருத்தணிகை .சரவணப் பெருமாளையர்  (1830),  திருவேங்கடாசல முதலியார்  (1830), காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எசு. சபாபதி முதலியார் (1837), தொண்டை மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர்(1824), மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை(1851), யாழ்ப்பாணம் நல்லூர் .ஆறுமுக நாவலர் (1849), வடலூர் இராமலிங்க அடிகள் (1851), காயல்பட்டினம் செய்குஅப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் (1842), என அறிஞர் தாமோதரனாருக்கு முன்னரே அறிஞர் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலால் தாமோதரனார் பதிப்புப்பணியில் முனைப்பாக  ஈடுபட்டார். தாமோதரனாரின் தூண்டுதலால் .வே.சா. பதிப்புப்பணியி்ல் தளராமல் ஈடுபட்டார். எனவேதான்,  தமிழ்த்தென்றல்  திரு.வி.. அவர்கள்  பதிப்புப்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுகநாவலர். சுவர்களை எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கட்டமைத்தவர் சுவாமிநாத அய்யர்எனப் பதிப்புப்பணிகளைப் பாராட்டி உள்ளார்.

  அறிஞர் சி.வை.தா. பதிப்பித்த நூல்கள்  நீதிநெறி விளக்கம் (1852), தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்(1868),  வீரசோழியம்(1881), இறையனாரகப்பொருள்(1883), தணிகைப்புராணம்(1883),  தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம்(1889),  சூளாமணி (1889), தொல்காப்பியம்எழுத்ததிகாரம்(1891),  தொல்காப்பியம் சொல்லதிகாரம்(1892) ஆகியனவாகும். பதிப்புப்பணியுடன் கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை, காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்) முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டார்.

  அறிஞர் சி.வை.தாமோதரனார் அவர்களைப்பற்றிய அறிஞர்கள் சிலரின் பாராட்டுரைகள் வருமாறு: அறிஞர் கா.சு.பிள்ளை, ‘‘தமிழ் நூல்களை அச்சியற்ற முயன்றவருள் மிக உழைத்தவர்’’ எனப் பாராட்டி உள்ளார். ‘‘தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பிதது ஒல்காப் புகழ்மேவியவர் ’’ என அறிஞர் .வே.சா. அவர்கள் பாராட்டி உள்ளார்கள்.
‘‘ஏட்டி லிருந்த வருந்தமிழ் நூல்க ளெனைப்பலவுந்
தீட்டி வழுக்களைத் தச்சினி லாக்குபு செந்தமிழ்சேர்
நாட்டி லளித்துயர் தாமோ தரேந்திர னண்ணுபுகழ்
பாட்டி லடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே ’’
என்கிறார் சுன்னாகம் .குமாரசாமிப்புலவரவர்கள்
‘‘உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த் தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் பெருநோக்கமா யிருந்தது என்கிறார் வையாபுரியார். ‘‘கோடி புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே  என்கிறார் மேதை வேதநாயகம்பிள்ளை அவர்கள்
தாமோ தரம்பிள்ளை சால்பு எடுத்துச் சாற்ற எவர்
தாமோ தரம் உடையார்என்கிறார் செம்மொழிஅறிஞர் பரிதிமாற்கலைஞர் எனப்படும்
வி. கோ. சூரியநாராயணசாத்திரியார்.

  அறிஞர் தாமோதரனார் இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதப் பிள்ளை- பெருந்தேவி அம்மாள்  ஆகியோர்  மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார். தொடக்கத்தில் 12  ஆம் அகவைக்குள்ளாகத் தம் தந்தையாரிடமே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் முதலான இலக்கிய இலக்கண நூல்கள் சிலவற்றை முறையாகப் பயின்றார். சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும்  கற்றுக் கொண்டார். இதன்பின்னர் தெல்லிப்பளை அமெரிக்க ஊழியக் கல்லூரியில் (மிசின் பாடசாலையில்) சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தொடர்ந்து வட்டுக்கோட்டைப் பல்கலைக் கல்லூரியில் (யாழ்ப்பாணத்தில் 'செமினறி' சாத்திரக் கலாசாலையில்) 9 ஆண்டுகள் ஆங்கிலம், கணக்கு,அறிவியல், தத்துவம் கற்றுத் தேர்ச்சி பெற்றார். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  இங்குதான் இவரது முதல்பதிப்புப்பணி அரங்கேறியது(1852 ஆம் ஆண்டு: நீதிநெறி விளக்கம்). ஆங்கிலக்கல்வி  பயிலக் கிறித்துவராக  மாறி, சி.எல். டபிள்யூ. கிங்க்சுபரி  எனப்பெயர் சூட்டிக் கொண்டவர் மீண்டும் சைவச்சமயத்திற்கு மாறினார்.

  யாழ்ப்பாணத்துப் பாதிரியார்  'பேர்சிவல்', சென்னையில் இருந்து வெளியிட்ட , 'தினவர்த்தமானி' எனும் தமிழ் இதழின் ஆசிரியர்  பொறுப்பேற்றார். இக்  காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலிரண்டு பட்டதாரிகளும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத சி.வை. தாமோதரனாரும்  டி.சி.டபிள்யூ விசுவநாதரும் ஆவர். அறிஞர் தாமோதரனார்  பல்கலைக்கழகப்பட்டம் பெற்றதும் கள்ளிக்கோட்டை அரசுப் பள்ளியில் உதவியாசிரியாராகப் பணியில் சேர்ந்தார். கல்விப்பணியுடன் பணியாட்சியிலும் (நிருவாகத்திலும்) சீர்திருத்தங்கள் செய்து சிறந்து விளங்கியமையால், அரசாங்க வரவு செலவுக்கணக்குச்சாலையில் கணக்காய்வாளர் பணிகிடைத்து அப்பதவியிலும் சிறந்து விளங்கினார். இதன்  தொடர்ச்சியாக கேட்பாளர் (விசாரணைக் கர்த்தர்) என்னும் பணியில் சேர்ந்தார். 1871 ஆம் ஆண்டில் சட்டத்துறையில் பட்டம் (பி.எல்.) பெற்றார். இவரின்  தமிழ்ப்புலமை பாராட்டப்பட்டுச்  சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.

1882 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் கும்பகோணத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்து 1887ஆம் ஆண்டில் புதுக்கோட்டை அரசில் சில ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார்.  அப்பொழுது தலைமை நீதிபதி என்ற முறையில மன்னருக்கு மாற்றாக அவர்சார்பில் தலைமை ஆட்சியாளராகவும் இருந்தார். 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'இராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.

பணி ஓய்விற்குப்பின்பு பதிப்புப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். இவர் வழங்கிய பதிப்புரைகள் ஆராய்ச்சித் திறனும் புலமைச்சிறப்பும் மிக்கன.  தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்  பெறுவன. இவரது உரைநடைகளைத் தொகுத்துத் தாமோதரம் என்னும் பெயரில் நூல் வந்துள்ளது. இவரைப்பற்றிய வரலாற்று நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் வந்துள்ளன.

  ஓலைச்சுவடிகளின் பதிப்புப்பணியின் துயரம் குறித்து அறிஞர் தாமோதரனார், ‘‘என் சிறு  பருவத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரிய வரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகின்றது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகின்றது; ஒன்றைப் புரட்டும்போது துண்டாய்ப் பறக்கிறது. இனி, எழுத்துகளோவென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது ’’ எனத் தம் கலித்தொகைப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.   

    அக்காலச் சூழலாலோ இதழாசிரியராக இருந்ததாலோ தாமோதரனாரின் நடையில் அயற் கலப்பு இருக்கும். எனினும் உள்ளம் தூய தமிழைக்காப்பதாகவே இருந்தது. எனவேதான், 'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' எனத் தமிழறிஞர்களிடம் வினவித் தமிழ்த்தாயைக் காக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தினார். தம்ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவின் ஆதி மொழி தமிழே என்றும் சங்க இலக்கியம் யாவும் தனித்தமிழ் நூல்களே என்றும் இவர் நிறுவுகிறார். ஆரிய சம்பந்த மின்றித் தமிழ்க் கிரந்தங்கள் கிடையாஎன்போருக்கு, ‘‘இது பிறவிக் குருடன் சூரிய சந்திர ருண்மையை மறுத்த தொக்கும். இதனை முன்னரே நிராகரித்திருக்கின்றேன். இதன் பொய்மையை மதுரைச் சங்கத்து நூல்களுள் ஒன்றையாவது பார்த்து உணர்வாராக. இக் கலித்தொகையே இதற்குச் சான்று பகரும்’’ என்கிறார். ஆரியர்கள் வடமேற்குத்திசையிலிருந்து வந்தவர்கள் அவர்கள் வரும் முன்னர் இந்நாடு முழுவதும் இருந்தவர்கள் தமிழர்களே, தொல்காப்பியம் இயற்றிய பின் சென்ற காலம் எவ்விதத்தானும் பன்னீராயிரம் வருடத்திற் குறையாது, என்பனவெல்லாம் அறிஞர் தாமோதரனாரின் ஆய்வுரைகளாகும்.

  ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது  எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும்  மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ் மொழிக்கான பெயர் திராவிடம் என்றும் அதிலிருந்துதான் தமிழ் வந்ததென்றும் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் தெளிவாகப் பின்வருமாறு விடை பகர்கிறார் தாமோதரனார்.

இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குமிழ் சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித், தனக்கிணையில்லா மொழி என்னும் பொருள் பயப்பது. அங்ஙனமாயின், தமியேன் என்பது போல இழிவுபொருளன்றோ பயக்கு மெனின், அற்றன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் எனவும் நிற்பனவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க. செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமிழென வழங்கிய தென்பாருமுளர். அஃதெவ்வாறாயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரே யாமெனக் கொள்க. இதை ஒழித்துத் திராவிடமென்னும் வடமொழியே தமிழென்றாகியதெனச் சற்று ஆலோசனையின்றிக் கூறுவாருமுளர். அவர் மதஞ் சாலவும் நன்றாயிருந்தது!! தமிழிலே தமிழ் என்னும் பதம் வருமுன்னர்ச் சமசுகிருதத்திற் றிராவிடம் என்னும் மொழி உளதாகில் இப் பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ? உலகத்தில் எஞ்ஞான்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற் றமிழுக்கோர் பெயரிருந்ததில்லை யென்றுஞ் சமசுகிருதத்திலிருந்து அதற்குப் பெயர் வந்ததென்றுஞ் சொல்வது யார்க்கும் நகைவிளைக்குமே. இஃதொன்றோ! யாதொரு தமிழ்மொழியில் இரண்டோரெழுத்துச் சமசுகிருத மொழிக்கொப்ப நிகழுமாயின் அது சமசுகிருதத்தினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலைத்தேயவாசிகளின் இங்கிலீசு முதலிய அந்நிய மொழிகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர் மதர் என்பனவாதியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணுமுன் அத்தேசத்தா ரெல்லாந் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச்சொல் இல்லாதிருந்தனரென் றன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா, மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்? தருக்கத்திற் காகதாலீய நியாயத்தினுண்மை அறியாமலும் ஆரியமொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம். இவர் வாய்க்கு விலங்கிட யாராலும் முடியும்!

  இன்னொரு சாரார் தமிழ் என்னுந் தென்மொழி பதமே வடமொழியிற் றிராவிடமென மரீஇயது என்பர். இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாறுந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவுபற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுதமென்றாற் போலத், தமது துணிவை நாட்டுவான் புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போலி யாதாரங்கள் காட்டி வாய்வல்லான் சொல்லே மன்று கொளுமென்று வாளா நம்பித் தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவரல்லர். ஏமசந்திரநாநார்த்தத் தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதற் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது. . . . . . . . மேலுந் திராவிடம் மென்ப தென்னை? தமிழ் தெலுங்கு கன்னடம் மராட்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து மொழியையுந் திராவிடமெனவே அஃது இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொற் வடமொழியிற் கோடி மண்டலத்தின் குறியீடாகவே நின்றதென்க. அன்றியும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருடப் மொழிக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் றமிழ் திராவிடமாயதூஉந் திராவிடந் தமிழாயதூஉம் இரண்டுந் தவறென் றுணர்க.

 
தற்காலத்தில் இங்கிலீசு பிராஞ்சியாதிக்க மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள்ள ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழி யென்றெவ்வாறு பெறப்படும். குறள் ஒளவையாடல் திரிகடுகம் நான்மணிக்கடிகை பஞ்சமூலம் ஏலாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபான்மைய?....இவையெல்லாஞ் சம்சுகிருதத்தினின்று பிறந்தனவாமே!! இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்பமிட்டு வடிந்து, நிலம் நீர் எனப் பொதுவெழுத்தான் வரினுந் தமிழ் தமிழே என்று வற்புறுத்துவான் பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மீரெழுத்தானு மிலங்குந் தமிழ்மொழிஎன்று சூத்திர மியற்றிய சுவாமிநாதசேதிகரே, தம்மரபின் முன்னோர் மதத்தையும் மறந்து, “நூலுரை போதகா சிரியர்மூவரு முக்குண வசத்தான் முறைபிறழ்ந் தறைவரேஎன்னுந் தன்விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற் போல, ‘அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென் - றறையவு நாணுவ ரறிவுடையோரேயென்று மாழ்கினர். இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும், அம்மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எம்மொழிக்குஞ் சிறப்பெழுத்துச் சில்லெழுத்தேயாம். உரப்பியும் எடுத்துங் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஐவர்க்கத்தையுங் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத்தாலொரு மொழி யின்றேயென்று சம்சுகிருதத்தையும் புரட்டிவிடலாமே. இங்கிலீசு மொழியில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் F,Z  இரண்டாதலால் இரண்டெழுத்தாலொரு மொழியின்றேயென அதனையும் மறுப்பார்போலும். இரண்டுக்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்றமாம். உண்மை உரைப்பின் உரோமாபுரிமொழியாகிய இலத்தீனுக்கும் இங்கிலீசுக்குமுள்ள சம்பந்தமே சம்சுகிருதத்திற்குந் தமிழுக்குமுள்ளதெனக் கொள்க. அளவில்லாத கிரந்தங்களை யுடையதாயினும் இலத்தீன்மொழி விரவாத கிரந்தமொன்றும் இங்கீலீசில் இல்லாதவாறு போலவே சம்சுகிருதமொழி சுற்றிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லாத திருக்கலாமாகவே, “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று ளொன்றே யாயினுந் தனித்தமிழுண்டோஎன இலக்கணக் கொத்துடையார் முழங்கிய முழக்கம் வெற்றொலியாயினமை அறிக. அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி யிலக்கணங்களுங் குறியீடுகளும் வினைத்தொகை குறிப்புவினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணைக் கூறுபாடும் பால் விதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஐந்திணை யியல்புகளும் அவற்றின் துறைகளும் வெண்பா கலிப்பா கலித்துறை முதலிய செய்யுளிலக்கணங்களும் இவைபோல்வன பிறவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் றோன்றாது ஆதியிலக்கணமாகிய அகத்தியத்தில் முற்ற உரைக்கப்பட்டமையால் தமிழ் சம்சுகிருதத்தினின்று பிறவாத தன்மொழி(தற்பாசை) என்பது பசுமரத் தாணிபோல் நாட்டப்படும். இவை யெல்லாம் ஒருவர் காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப்படற் பாலனவா? அகத்தியர் மகாரீசுவரர், அன்னோர் இவற்றைக் கற்பித்தல் எளிதன்றே யெனின், நன்று கடாயினாய், ஐந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்து முறைமை சூத்திர முறைமைகளின் சிறப்பினைச் சீரிதிற் கண்டும். யாதொருகிரமமும் முன்னெடுபின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமையானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தென்று உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் மொழியினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோதமென்க.
இவை போலும் அறிஞர்.வை சி.தாமோதரனாரின் ஆழமான கருத்துகள் தமிழுக்கு என்றும் வலிவும் பொலிவும் நல்குவனவன்றோ!
  அறிஞர் தாமோதரனார், தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் 'முன்னோடி' எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்து ஒன்பதாம் அகவையில், 1901ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் நாள், இவ்வுலக வாழ்வை நீத்தார்.

நற்புலவர் ஏடெல்லாம் நாடிநலங் காணாமல்
உற்றசெல் உள்நுழைந் துய்ந்திடும் - பெற்றியைக்
காணாமற் காத்திட்ட சி. வை. தா மோதரனைப்
பேணுதலே நம்பெற்றிப் பேறு. (புலவர். நா. சிவபாதசுந்தரனார்)
என நாம் அறிஞர் சி.வை.தாமோதரானரின் பார்புகழ் போற்றிப் பைந்தமிழ் காப்போம்!


---000---

Tuesday, September 03, 2013

இலக்குவனார் - மயிலாடன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1973 செப்டம்பர் 3 - தமிழர்கள் நினைவு கூர வேண்டிய முக்கிய நாள். நமது பேராசிரியர் சி. இலக்குவனார் அன்றுதான் மறைந்தார்.
தந்தை பெரியாரின் சீடர்; திராவிட இயக்கத் தீரர் - மூடநம்பிக்கையின் வைரி. தமிழுலகிற்கு தலை சிறந்த நூல்களைத் தந்த பெருமகன். தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெரும் புலவர். இலக்குவனார் மொழி பெயர்த்த அந்த நூலைத் தான் முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகம் சென்ற போதும் தன்னோடு எடுத்துச் சென்று தமிழன் பெருமையை, தமிழன் சீர்த்தியை அமெ ரிக்கப் பெருமகன்களுக்கு வழங்கியதன் மூலம் அறியச் செய்தார்.
எழிலரசி, தமிழிசைப் பாடல்கள், மாணவர் ஆற்றுப் படை, துரத்தப்பட்டேன், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து எனும் செய்யுள் நூல்கள், எல்லோரும் இந் நாட்டு மன்னர் (இரு தொகு திகள்) அமைச்சர் யார்? வள்ளுவர் வகுத்த அரசியல் தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ் கற்பிக்கும் முறை ஆகிய ஆய்வு நூல்கள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்) கரும வீரர் காமராசர், என் வாழ்க்கைப் போர் ஆகிய வரலாற்று நூல் களையும் வழங்கிய எழுத்து வள்ளல் இலக்குவனார்.
சங்க இலக்கியம், (கிழமை இதழ்) இலக்கியம் (திங்கள் இருமுறை இதழ்) திராவிடக் கூட்டரசு (திங்கள் இருமுறை) குறள் நெறி (திங்கள் இரு முறை), குறள் நெறி (நாளிதழ்) ஆகிய தமிழ் இதழ்களையும், ஆங்கில இதழ்கள் னுசயஎனையை குநனநசயவடி (திங்கள் இருமுறை) முரசயட சூநச (திங்கள் இரு முறை) ஆகிய இதழ்களையும் நடத்திய எழுச்சித் தமிழர் அவர்.
அவர்தம் சிறப்புக் கருதி அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அடைமொழிகள் தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல் காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படை தளபதி, செந் தமிழ்ப் படையின் மானச் செம்மல் என்ற பெருமைமிகு மணிமகுடங்களுக்குச் சொந் தக்காரர்.
அவருடைய தமிழ் -தமிழர் உணர்வால் ஓரிடத்தில் நிரந்தரமாகப் பணியாற்ற முடியாமல் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டவர் - ஆனா லும் உள்ளம் தளராத உருக்கு நெஞ்சுக்குச் சொந் தக்காரர்.
1965 இந்தி எதிர்ப்பின் போது சிறைப் பிடிக்கப்பட் டார். அவர் பற்றி நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் என்ன சொன்னார் தெரி யுமா?
இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந் தவர், இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால் அரசுக்கும், அமைச்சர்களுக் கும் பாதுகாப்பு இராது என்று சொல்லப்பட்டது - இலக்குவனாரின் உணர்வுக் கான வெள்ளிக் கீற்றே!
இலக்குவனார் வழியில் பேராசிரியர் மறைமலை உள் ளிட்ட அவரின் செல்வங்கள் தமிழ்த் தொண்டு சிறப்பாக ஆற்றி வருவது பாராட்டிற் குரியது!
- மயிலாடன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திராவிட இயக்க அறிஞரைத் திராவிட இயக்க இதழ் மறவாமல் நினைவுகூர்வது மகிழ்ச்சிக்குரியது. விடுதலைக்கும் மயிலாடனுக்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 


Monday, September 03, 2012

இலக்குவனார் -மயிலாடன், விடுதலை

  விடுதலை : திங்கள், 03 செப்டம்பர் 2012 15:52
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வாய்மேடு எனும் கிராமத்தில் சிங்காரவேலருக்கும் இரத் தினம் அம்மையாருக்கும் பிறந்த (17.11.1910) இலட்சு மணன் தான் பிற்காலத்தில் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் என்ற ஏற்றம் பெற்ற பெருமகன்.
தந்தை பெரியார் அவர் களின் படை வரிசையில் ஆற்றல் மிகுந்த தளபதி. அவர்தம் நினைவு நாள் இந்நாள் (3.9.1973).
திருவையாறு தமிழ்க் கல்லூரியில் படித்த இவர் தொல்காப்பியத்தையே ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை  மிக்கவர். முனைவர் பட்டமும் பெற்றவர்! (அதனுடைய எச்சம்தான்  அவரின் மகன் பேராசிரியர் மறைமலை இலக்குவன் போலும்!)
இலக்குவனார் அவர் களால் ஆங்கில மொழி யாக்கம் செய்யப்பட்ட தொல்காப்பியத்தைத் தான் முதல் அமைச்சர் அண்ணா மேற்கொண்ட தம் வெளி நாட்டுப் பயணத்தின்போது யேல் பல்கலைக் கழகத்திற் கும் அளித்தார். வாடிகன் போப்புக்கும் கொடுத்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது தான் தமிழ்க் காப்புக் கழகத்தினைத் தொடங்கி னார் (6.8.1962) தமிழ்க் காப்புக் கழகத்தின் கொள்கை என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழியக்கம் கூறும் குறிக்கோள்களே.
இது ஒன்று போதாதா இலக்குவனாரின் வீரஞ் செறிந்த இனமானம், மொழி மானம் மேம்பட்ட பகுத்தறிவு உள்ளத்திற்கு?
சமயமெனும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது! -என்ற அடிநாதம் தானே தமிழியக்கம்.?
முதல் அமைச்சர் பக்தவத்சலம் ஆட்சியில் இலக்கு வனார் மீது தொடுத்த வழக் குகள் ஒன்றா - இரண்டா? 14 வழக்குகள். அனைத்தை யும் நெஞ்சு நிமிர்வோடு சந்தித்தார்.
இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர், உள்ளம் கவர்ந்த வர். இதழ் நடத்துபவர், அவர் வெளியே இருந்தால் அரசுக்கும்  அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது என்றார் அரசு வழக்குரைஞர்.
எந்த அடிப்படையில் இம்முடிவு என்று எதிர் வினா தொடுக்கப்பட்டது அரசு வழக்கறிஞர் எனக்குள்ள தெளிவால் கூறுகிறேன் என்றார். இதற்கு இலக்குவனார் தரப்பில் பதிலடி என்ன தெரியுமா?
அப்படியானால் என் தெளிவால் கூறுகிறேன். இம்மாநிலத்திற்குக் கேடு முதல்வர் பக்தவத்சலனாரால் ஏற்படுகிறது. அவரை வெளியே விடாமல் சிறைப்படுத்தினால் கேடெல்லாம் ஒழிந்துவிடும் என்கிறேன்.
ஒப்புக் கொள்வீர்களா? நீதி மன்றம் ஒப்பிச் சிறைப்படுத்த ஆணை தருமா? என்பது தான் அந்தப் பதிலடி.
இந்தத் துணிவு எத்தனைப் பேருக்கு வரும்?
இனமானம், மொழிமானம் இரண்டையும் இரு விழி எனக் கொண்ட அந்த வீரத் திருமகனை நினைவு கூர்வ தோடு அந்த   உரத்தையும் பெறட்டும் தமிழினம்!
- மயிலாடன்




Friday, August 31, 2012

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி


                                                    குமரித்தமிழ் வானம்
தமிழ்ப்பேரறிஞர்
பேராசிரியர் சி.இலக்குவனார்
நினைவுச் சொற்பொழிவு
நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி
இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002
வாழ்த்துரை
-       இலக்குவனார் திருவள்ளுவன்
பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி
குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர் திரு சுரேசு ஆற்றும் அரும்பணியால் ஆன்றோர்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பாகிறது. வானம் உள்ளளவும் தமிழ் வானத்தின் பணியும் தொடரட்டும்!
தமிழ்வானத்தின் திங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இத்திங்கள்  தமிழ்ப்பேரறிஞர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு அமைந்துள்ளது அறிந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் உணர்வாளர் கவிஞர் நா.முத்திலவேனார் தலைமையில் குறள்நெறி ஆய்வறிஞரும் இதழாளரும் ஆன முனைவர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பது பொருத்தமானதே!
தண்டமிழ்த் தொண்டர் தமிழ்வானம் செ.சுரேசு அவர்கள் தொடக்கவுரை யாற்ற, தமிழ்த்தேசியப்பேரவையாளர் ந.மணிமாறன் அவர்கள் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவது பேராசிரியரின் தமிழ்ப்பணியை நினைவுகூரவும் அவர் வழி நாம் நடைபோடவும் பெரிதும் உதவியாக அமையும் என்பதில் ஐயமிலலை.
இந்நிகழ்வில் என் வாழ்த்துரையும் இடம பெறச் செய்தமைக்கு முதலிலேயே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மொழிக்காகச் சிறை சென்ற ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்மட்டும்தான். தமிழர் தளபதி எனத் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் அவர்களைத் தமிழ்ப்பகைஅரசின் காவல்துறை இந்திஎதிர்ப்புத் தளபதி எனக் குற்றம் சுமத்தி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைத்ததில் வியப்பொன்றும் இல்லை. அத்தகைய பெருமைக்கும் போற்றுதலுக்கும்  உரிய பேராசிரியச் செம்மலுக்கு விழா எடுப்பவர்களைப் பாராட்டுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் அவர்கள், தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிஞரல்லாத மக்களுக்கு அறிமுகப்படுத்தியதால்தான் இன்றைக்கும் அவை வாழ்கின்றன. வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை உலக மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் பேராசிரியர். அபபணியின் பெரும்பகுதி நடைபெற்றது இம்மாவட்டத்தில் அப்பெருந்தகை பணியாற்றிய பொழுதுதான்.
தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பையும் உயர்தனிச் செம்மொழியாகத் திகழும் சீர்மையையும் அயலவர் அறிய ஆங்கிலத்தில் தமிழ்மொழி குறித்து < Semantemes and Morphemes in Tamil Language, Tamil Language- Introduction, Tamil Language – Phonetics,Tamil Language, Tamil Language – Semantics,Tamil Language Syntax ஆகிய > நூல்கள் எழுதி வெளியிட்டு அருந் தொண்டாற்றியதும் இம்மண்ணில்தான்.
குமரிமண்ணிலுள்ள தெ.தி.இந்துக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுதுதான் அணிவணக்கத்தைத் திருவள்ளுவர் படத்திற்கு வழங்கச் செய்து உலகப்பெரும்புலவரைப் போற்றினார் பேராசிரியர். இதுவரை யாரும் நிகழ்த்தியிராத அளவிற்குத் திருவள்ளுவருக்கு – மாபெரும் ஊர்வலத்துடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் மாணாக்கர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், தமிழன்பர்கள், பொதுமக்கள் சூழத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தை யானைமீது வைத்து – மிகச்சிறப்பான விழா எடுத்ததும் இம்மண்ணில்தான்!
தனியார்கல்லூரி ஆசிரியர்கள் நிலைமை இன்றைக்கும் மோசமாகத்தான் இருக்கின்றது. வீரர்களை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது தனியார் கல்லூரிகளில்தான். அவர்களின் உரிமைக்காகப் பலவழிகளிலும் போராடிப் பெரும்பாலான உரிமைகளை மீட்டுத்தந்தவர் பேராசிரியர். இங்குதான் நேர்மைக்கு இடமில்லை எனச் சாதிப் போர்வையில் பேராசிரியர் விரட்டி யடிக்கப்பட்டார். விரட்டியடித்த கல்லூரியினரேபேராசிரியர் பணிக்காலம்தான் கல்லூரியின் பொற்காலம் எனக் கூறி அவரை மீண்டும் முதல்வராகப் பணியமர்த்தியதும் இம்மண்ணில்தான்.
சாதிவெறியினரால் 1952 இல் விருதுநகரில் இருந்து  துரத்தப்பட்டார்   மன்பதை காக்கும் தமிழ்ப் போ்ராளிபேராசிரியர் சி.இலக்குவனார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் காமராசை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞர் சி.டி.நாயுடு எனப்பெறும் கோ.துரைசாமி அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டார் பேராசிரியர். இதனால் நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு நாடாரை எதிர்ப்பதா என்று விரட்டப்பட்டபொழுது தலைவரும் அமைதி காத்தார். அத்தேர்தலில் பேராசிரியர் அவர்கள் தலைவர் காமராசரை எதிர்த்துத் தவறாக ஒன்றும் பேசவில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாட்டிற்குத்  தொணடாற்ற வேண்டும் என்றும் அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம்  நம் நாடு அறிவியல் உலகில்  பல புதுமைகளைக் காண வேண்டும் என்றும் பேசினார்.
தாம் நடுநிலையாளர் என்பதை உலகிற்கு உணர்த்த  கருமவீரர் காமராசர் எனப் பேராசிரியர் நூல் எழுதி வெளியிட்டதும் இம்மண்ணில்தான். பேராசிரியர் கருதியவாறே முதல்வரான பெருந்தலைவர் பேராசிரியரின் தமிழ்ச்சார்பினையும் தன்னலம் கருதாத்  தொண்டுகளையும் புரிந்து கொண்டு அவரைச் சிறப்பு செய்யஎண்ணியதும் இம் மண்ணில் பேராசிரியர் இருந்தபொழுதுதான். பொதுக்கூட்டம் ஒன்றில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு பார்வையாளராக அமர்ந்திருந்த பேராசிரியரை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து நலம் உசாவிப் பெருந்தலைவர் காமராசர் எளிமையில் உயர்ந்தவராகத் தம்மை உலகிற்கு  உணர்த்திய நிகழ்வு நடந்ததும் இம்மண்ணிலதான. பேராசிரியர் தமிழ்நாட்டின் தலைநகரில்தான் பணியாற்ற வேண்டும்; அவரது தொண்டு சுருங்காமல் விரிய வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் தலைநகருக்கு அழைத்ததும் இம்மண்ணில்தான்.
இன்றைக்கு அரசால்  ஏற்கப்பபெற்று தமிழ்த்தாய் வாழ்த்தாக மனோண்மணியம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடல் பாடப்படுவதை அனைவரும் அறிவர். பேராசிரியர் அவர்கள், இப்பாடலை முதலில் தமிழ்வாழ்த்தாக மேடைநிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடச் செய்து அறிமுகப்படுத்தியதும் இதே மண்ணில்தான்.
தமிழ் உரிமைப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின்  போர்க்குணங்களையும் தமிழுக்குக் கேடயமாக விளங்கிக் காத்த உரிமைப் போராட்டங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்வது அப்போர்க்குணம் அழியாமல் நம்மிடம் பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். கல்வி, ஆட்சி, கலை, வழிபாடு என எல்லா நிலைகளிலும் தமிழே இருக்கப் போராடியவர் பேராசிரியர் அவர்கள். தமிழின் பேரால் போராட்டங்கள் நடத்தி ஆட்சியில் அமர்ந்தவர்களே  நேற்றைக்கும் இன்றைக்கும் எனத்  தமிழ்ப்பகைச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  தமிழ்ப்பகையை எதிர் கொண்டவர்களே இன்றைக்குத் தமிழ்ப்பகைக்கு நட்பாகப் போனதால் தமிழன்பர்கள் கையறு நிலையில் இருக்கின்றனர். இந்நிலையை மாற்றித் தமிழுக்கு அன்பரெனில் நமக்கும் அன்பரே! தமிழுக்குப் பகை எனில் நமக்கும் பகைவரே! என நாம் உறுதியுடன் தமிழ்க்காப்புப் போரில் ஈடுபட  அவரது நினைவு நமக்குத் துணை நிற்கட்டும்!
தம்வாழ்வையே தமிழ்நலம்  நாடிய பேராட்டக்களமாக அமைத்துக் கொண்டவர் பேராசிரியர்.   அவர் வழியில் வாழ அவரது குறிக்கோளை  நினைவு கொள்வோம்!
அவரது  குறிக்கோளின்படி . . . . மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை, தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்கு பெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும் காலத்துக்கேற்ப மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும், ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி நம் வாழ்நாட்பணி எனக் கொள்வோம்.
இலக்குவனார் வழி நின்று இன்தமி்ழ் காப்போம்!