Saturday, April 15, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) – இலக்குவனார் திருவள்ளுவன்




[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங)

  இவ்வாறு சென்னையில் வேலைவாய்ப்பு முயற்சிகளினால் அலைந்து கொண்டிருந்த பேராசிரியர், கலைத்தந்தை கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் தம்மைச் சந்திக்க விரும்புவதாக அறிந்து மதுரை சென்றார்; தமிழ்ப் புலமையும் தமிழ்உணர்வும் மிக்க கலைத்தந்தை பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராக நியமித்தார். அப்பொழுது முதல்வர் பணியிடமும் ஒழிவாகத்தான் இருந்தது.  அதற்கு ஆங்கிலத்துறையைச் சேர்ந்த திரு. வரதாச்சாரி என்பவரை நியமித்தார். துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றி உள்ள தகுதி மிக்கப் பேராசிரியரையே அவர் முதல்வராக அமர்த்தி இருக்கலாம்.  “தமிழார்வலருக்கே தமிழ்ப் பேராசிரியரை முதல்வராக அமர்த்த எண்ணம் வராவிடில் பிறர் எங்ஙனம் தமிழ்ப்பேராசிரியரை மதிப்பர்” என்ற எண்ணம் பேராசிரியர் இலக்குவனாருக்குத்  தோன்றியது.
 தாம் பணியாற்றும் கல்விநிலையங்களில் எல்லாம் அக்கால, இக்காலப் புலவர்கள் விழாக்களை நடத்துவது பேராசிரியர் வழக்கமாயிற்றே. அதேபோல் ஒரு முறை பாவேந்தர் பாரதிதாசன் விழா நடத்தினார். மூன்றுநாள் நடைபெற்ற பாரதிதாசன் விழாவில் ஒவ்வொரு நாள் விழா இறுதியிலும் தமிழ் வாழ்த்தே பாடப்பட்டது. விரல்விட்டு எண்ணும் மாணவர்கள்  நாட்டுப்பாடலைப் பாடாமல் அதற்கு அவமதிப்பு செய்து விட்டதாக எதிர்ப்பு தெரிவித்தனர். வெளியில் இருந்த பேராயக் கட்சியினர் இவர்களுக்குப் பக்கத்துணையாக இருந்து, ‘தேசத்துரோகி இலக்குவனாரைக் கைது செய்’ என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ் என்றாலே ஒவ்வாமையாக என்றும் கருதும் பேராயக் கட்சியினர் பேராசிரியருக்குத் தொல்லைகள் தந்தமையைப் பேராசிரியர் இலக்குவனார் பொருட்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ் விழாவில் தமிழ்ப்பாடல் பாடுவதே முறை என உறுதியாய் நின்று அதனை எதிர்கொண்டார் பேராசிரியர் இலக்குவனார்.
  தமிழ்ப்பற்று மிக்க தாளாளர், தமிழறிஞர்கள் அணி செய்யும் தமிழ்த்துறை ஆகியவற்றால் நீண்ட காலம் – சூலை 1959 முதல் சூன் 1965 வரை – தியாகராசர் கல்லூரியில்தான் பேரா. இலக்குவனார் பணியாற்றினார். எதிர்ப்புகளுக்கிடையே தமிழ்ப்பணி ஆற்றியவர், தமிழ்ச்சூழல் வாய்த்த பொழுது வாளா விருப்பாரா? வழக்கம்போல் பொதுமக்களுக்கான தமிழ் வகுப்புகள், இலக்கியப் பரப்புரைகள், இதழ்ப்பணிகள் எனத் தமிழ்த் தொண்டுகளில் தம் வாழ்வைச் செலவிட்டார். மதுரையில் தமிழ்க்காப்புக் கழகம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
   இதுவரை பேராசிரியர் இலக்குவனார் நிறுவிய அமைப்புகள் நிறுவிய இடங்களில் மட்டும்  தொண்டாற்றின. ஆனால், தமிழ்க்காப்புக் கழகம் நாடெங்கும் கிளைகளாய் விரிந்தது. கோலார் முதலான  பிற மாநிலப்பகுதிகளிலும் காலூன்றியது.
 “வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில்,
 ஆங் கிலமா வேண்டும்?
 ‘மாணுயர்ந்த செந்தமிழால் வரைக’ என
 அன்னவர்க்குச் சோல்ல வேண்டும்!
 அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சோல்
  ஆக்குவதே அன்றி, அச்சோல்
 குறைவற்ற தொடராகக் குற்றமற்ற
  சோல்லாக அமையு மாயின்
 மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தா?
 தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?
 குறியுற்ற மறவர்களே! இப்பணியை
முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும்.”
என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அத்தகைய கூட்டத்தை உருவாக்கும் அமைப்பாகத் தமிழ்க்காப்புக் கழகத்தை நடத்தினார் பேராசிரியர்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, April 09, 2017

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!


பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

 முனைவர் அ. அறிவுநம்பி
முனைவர் அ. அறிவுநம்பி

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

  புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (பங்குனி 27, 2048 / 09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன்.
  முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக் குறிப்பிடலாம்.அறிவுநம்பி அவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்த பெருஞ்சிறப்பிற்கு உரியவர்கள்.சேதுபதி மன்னரின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதிய பெருமை மிக்க புலவர்களுள் இவரின் முன்னோர் குறிப்பிடத்தக்கவர்.
 அவர்தம் திருப்பெயர் சரவணப்பெருமாள் என்பதாகும்(இச் சரவணப் பெருமாள் என்ற பெயரின் அடிப்படையில் தம் மகனுக்குச் சரவணன் எனப் பேராசிரியர் அறிவுநம்பி பெயரிட்டுள்ளமை அவர்தம் மரபு பேணும் பழக்கத்தைக் காட்டும்).தனிப்பாடல் திரட்டில் இவர்தம் பல பாடல்கள் உள்ளன.சேதுபதி மன்னர் மேல் விறலிவிடு தூது பாடியமையும் கந்த வருக்கச் சந்த வெண்பா உள்ளிட்டவை பாடியமையும் புலமை நலம் மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.
 புலவர் சரவணப்பெருமாள் அவர்களின் மகனார் பூவார்சாமி என்பதாகும். அவர் மகன் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்து ஒய்வுபெற்றவர். இவர்களும் வள்ளுவர் கண்ட உயிரினங்கள்,கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் என்னும் தமிழ் நூல்களை வழங்கியவர். பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார் அவர்களுக்கும், இராசலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்தான் (10.11.1952) நம் மதிப்பிற்குரிய முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள்.பிறந்த ஊர் காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.
  தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாசுநகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக் குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்.கவியரசு முடியரசனார், புலவர் ஆ.பழனி ஐயா உள்ளிட்டவர்கள் இங்கு இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கியவர்கள் ஆவர்.புகுமுக வகுப்பை அழகப்பர் கல்லூரியிலும்,இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பையும் நிறைவு செய்த பின்னர் முதுகைலத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1976).
  பின்னர் முனைவர் பட்டத்திற்குத் தமிழகத்தில் நடைபெறும் தெருக்கூத்துகள் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்(1980). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கி(1981-86),புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியர் பணியேற்று(1986-97),பேராசிரியராக மிளிர்ந்து(1997-98), துறைத்தலைவராக, இயக்குநராக, முதன்மையராக(Dean) பணியாற்றும் பெருமை பெற்றவர்.
  இதுவரை இவர் நெறிப்படுத்த 18 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆகும். முதுகலையில் பாடம் பயிற்றுவித்த பட்டறிவு இவருக்கு 26 ஆண்டுகளாக உண்டு. தமிழக, புதுவை அரசுகளின் பல்வேறு அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் உறுப்பினராக இருந்து பல பணிகளைச்செய்து வருபவர்.
 கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, ஆட்சிக்குழு என இப்பொறுப்புகள் அமையும். பல்வேறு கருத்தரங்குகளின் அமைப்பாளராக இருந்து நடத்திக் காட்டியவர். பயிற்சியரங்குகள் பலவற்றிற்குப் பொறுப்பேற்று நடத்திக் காட்டியவர்.
  உலக அளவில் நடைபெற்ற 13கருத்தரங்குகளில் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர். தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 40 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்குக் கல்விப் பயணம் மேற்கொண்டவர். இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
  நாட்டுப்புறவியல்,சங்க இலக்கியம், அரங்கக்கலை, சொற்பொழிவுக்கலைபற்றிய பல பயிலரங்குகளில் பயிற்றுநராக விளங்கியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்கு உரியவர்.
  முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் பல்வேறு தமிழ்ப் பணிகளை, திறன்களை அறிந்த நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன.அவற்றுள் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது முதல் வகுப்புப் பெற்றமைக்குத் தங்கப்பதக்கம் பெற்றதும். கம்பவாணர் பரிசில்,சிறந்த உலக மாந்தன் விருது(1999), தொல்காப்பியர் விருது(புதுச்சேரி அரசு) பெற்றமையும் குறிப்படத் தக்கனவாகும்.
பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை
01.கூத்தும் சிலம்பும், 1977
02.தமிழகத்தில் தெருக்கூத்து, 1986
03.நாட்டுப்புறக் களங்கள், 1989
04.தமிழரின் வழிபாட்டுச் சிந்தனைகள், 1990
05.தமிழர் மறந்த தமிழர் மரபுகள், 1991
06.பாவேந்தரின் பன்முகங்கள். 1992
07.தமிழரின் தெய்வநெறிச் சிந்தனைகள், 1993
08.இலக்கிய வித்தகங்கள், 1994
09.தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும்,1995
10.வளர்தமிழ்க் களங்கள், 1996
11.கம்பரின் அறவியல், 1997
12.பல்துறைத் தமிழ், 1998
13.கம்பர்காட்டும் மள்ளர் மாண்பு, 1999
14.புள்ளிகள்(கவிதை நூல்), 2000
15.இலக்கியங்களும் உத்திகளும், 2001
16.தமிழியல் சிந்தனைகள், 2002
17.செந்தமிழ்ச் செம்மல்கள், 2003
18.இலக்கிய நோக்குகள், 2004
19.சிலம்பின் எதிர்க்குரல், 2005
20.பொருள் புதிது, 2006
21.இலக்கியத் தளங்களில், 2007
பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்களின் முகவரி:
முனைவர் அ.அறிவுநம்பி
15,கலைவாணி நகர், இலாசுப்பேட்டை,
புதுச்சேரி- 605 008
பேசி :
இல்லம் 0413- 2256699

Friday, April 07, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ)

  இந்தச் சூழலில் பேராசிரியர் இலக்குவனாருக்கு நாகர்கோயிலில் உள்ள தென்திருவிதாங்கூர்  இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பணி கிடைத்ததால் அங்கே சென்று தம் தொண்டுகளைத் தொடர்ந்தார். முதலில் தமிழ் முதுகலை தொடங்குவதற்குரிய ஏற்பிசைவைப் பெற்றுத் தொடங்கச் செய்தார். முதல்வராக இருந்த முனைவர் பா.நடராசன் மத்திய அரசின் பொருளியல் வல்லுநராகச் சென்றமையால் முதல்வர் பணியிடம் ஒழிவிடமாயிற்று. மூத்த பேராசிரியரான பேராசிரியர் இலக்குவனாருக்கு வரவேண்டிய முதல்வர் பதவியை வேறு சாதியினர் என்பதால் வழங்க மனமின்றி முதல்வர் பொறுப்பு வழங்கினர். வழக்கம்போல் விழாக்களும் தமிழ்எழுச்சி உரைகளும்  பொதுமக்களுக்கான இலக்கிய விளக்கங்களும் இங்கும் தொடர்ந்தன. திருவள்ளுவர் விழாவை மாபெரும் ஊர்வலத்துடன், யானையின்மீது திருவள்ளுவர் படத்தை ஏற்றி, மக்களிடையே நடத்தினார்.
  கல்லூரியில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கொணர்ந்தார். ஆனால் கல்லூரி ஆட்சிக் குழுவினருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. தாங்கள் இழுத்த இழுப்பிற்கு வருவார் என எதிர்பார்த்தால் இவரோ நேர்மைப் பாதையில்தான் செல்வேன் என்கிறாரே. மாணவர்களுக்குத் தர  வேண்டிய உதவித் தொகைகளை ஆண்டு இறுதியில் தந்தால் போதுமானது; அதுவரைக்கும் அதனை  வேறு  வகையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஆட்சிக்குழுவினர் கூற்று. யாரும் செய்யாததைச் செய்யச் சொல்லவில்லை என்பது அவர்கள் வாதம். பேராசிரியரோ பல்வேறு இடர்ப்பாடுகளுடனும் வறுமைச் சூழலிலும் பயிலும் மாணவர்களுக்கு அவர்களுக்கு எனத் தரும் அரசு நிதியை விரைவில் வாங்கி உடனுக்குடன் தருவதே முறை என அவ்வாறே செய்து வந்தார். முறைகேட்டிற்கு ஒத்துழைக்காத முதல்வர் நமக்கு எதற்கு என எண்ணிய ஆட்சிக்குழுவினர் வேறொரு தமிழ்ப்பேராசிரியரை வரவழைத்து முதல்வராக்க எண்ணினர். துணைவேந்தரோ தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பேராசிரியர் சி.இலக்குவனார் இருக்கும் பொழுது இன்னொரு பேராசிரியர் எதற்கு? அவரே முதல்வராக இருக்கட்டும் என்றார். ஆனால் முறைகேட்டிற்கு ஒத்துழைக்காதவரை நீக்குவதில் பிடிவாதமாக இருந்த ஆட்சிக் குழுவினர் பதின்நிலைப்பள்ளியின் முதல்வர் ஒருவரை இங்கே முதல்வராகக் கொணர்ந்தனர்.
 இதற்கிடையில் நேர்மைக்குக் குறுக்கே இருக்கும் இக்கல்லூரியை விட்டு நீங்கப் பேராசிரியரும் முடிவெடுத்தார். அப்போதைய தமிழக  முதல்வர் பெருந்தலைவர் காமராசர், பேராசிரியர் இலக்குவனார் தலைநகரில் பணியாற்ற       வேண்டியவர் என்னும் கருத்தினைப் பேராசிரியரிடமே வெளிப்படுத்தி உள்ளார்; ஆதலின் “சென்னைக்கு வாருங்கள் சீரிய பணியில் அமர்த்துகிறேன்” என்று முன்பு கூறியிருந்தார். எனவே, சென்னை சென்று முதல்வரைச் சந்தித்தார். எந்தப்பணியில் அமர்த்த வாய்ப்புகள் உள்ளன எனப் பெருந்தலைவர் கேட்டதற்குப் பேராசிரியர், மாநிலக்கல்லூரியின் தலைமைப் பேராசிரியர் பதவியும் தமிழ்வளர்ச்சித்துறையில் இரு பதவிகளும் ஆளின்றி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், செயலகத் துறையினர் பேராசிரியர் இலக்குவனாரின் புலமைக்கும் நேர்மைக்கும் ஏற்ற பணியைத் தேடுவதாகத் தட்டிக் கழித்ததால் முதல்வர் மீண்டும் வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறினார். அவ்வாறு வாரம் ஒரு முறை சந்தித்து ஒரு திங்கள் ஆன பின்பும் பயனில்லை. எனவே, இனியும் காத்திருந்து மீண்டும் மீண்டும் சந்திப்பதில் பேராசிரியருக்கு விருப்பம் இல்லை.  இது குறித்துப் பேராசிரியர் இலக்குவனாரிடம், “காமராசர் கூறிவிட்டால் செய்யாமல் இருக்க மாட்டார். அவருடன் பலநாள் சுற்ற வேண்டும். அவருடனேயே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிட்டும் என்றனர்.  அவ்விதம் இருக்க இயலாது என்று ஊர் திரும்பி விட்டேன்”  என்று தம் வாழ்க்கையேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 சில நாட்கள் கழித்துக் கூட்டம் ஒன்றிற்காகப் புதுச்சேரி வந்த பேராசிரியர் சென்னை சென்றார். நேர்மைப் பாதையில் பணிநீக்கப் படுகுழிகள் அவரைத் துன்பத்தில் தள்ளியும் மன உறுதியுடனும் எதிர்காலக் கவலையுடனும் பணிக்காக அலைந்துள்ளார். இது குறித்துப் பேராசிரியர் பின் வருமாறு தெரிவிக்கின்றார்.
 “சென்னையிலேயே தங்கி என்ன பணி புரியலாம் எனத் திட்டமிட்டுப் பல்வேறு துறைகள் பற்றி ஆய்ந்தேன். புத்தகங்கள் எழுதிக் கொடுத்துப் பொருள் ஈட்டலாம் என்று கருதிப் பதிப்பகங்கள்தோறும் சென்றேன். பயிற்சிக் கல்லூரிகளில் பணிபுரியலாம் என்று பயிற்சிக் கல்லூரிகளை நாடினேன். செய்தி இதழ்களில் பணி தேடலாம் என்று செய்தி இதழ் நடத்துவோரைக் கண்டேன். காலையில் சிற்றுண்டி அருந்தி விட்டுப் பகலெல்லாம் பல இடங்கட்குச் சென்று அலைவதையே தொழிலாகக் கொண்டேன். எதிர்காலம் இருள் சூழ்ந்தது போல் தோன்றினும் யான் உள்ளம் தளரவில்லை. நேர்மையாக ஒழுகுபவர்க்கு இன்னல்தானே செல்வம் என்று அறிந்திருந்தேன்.
இன்பம் விழையான் இடும்மைஇயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன்
 என்னும் வள்ளுவர் வாய்மொழி நினைவுக்கு வரும்.
 தனிமுறையில் நடத்தும் கல்லூரியாளர்கள் அறநெறிகோடி ஆசிரியர்களை வேலைவிட்டு நீக்குவதைத் தடுத்து நிறுத்தும் வழி முறை உண்டாகவில்லை. அறம்கூறவையம் சென்று முறையிடுவது என்றால் பெரும் பொருள் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுமே என்ற   அச்சத்தால் பெரும்பாலோர் அங்கும் செல்வதில்லை. தொடக்கக்கல்விக் கூட ஆசிரியர்க்கும்  உயர்நிலைக் கல்விக்கூட ஆசிரியர்க்கும் ஓரளவு காப்பு உண்டெனிலும் கல்லூரி ஆசிரியர்கட்கு எவ்விதக்காப்பும் இல்லை. எல்லாக் கல்வி நிலையங்களையும் அரசு ஏற்று நடத்தும் நாள்தான் ஆசிரியர் காப்பு பெற்ற நாளாகும். இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.”
 இதன்மூலம் தனியார் கல்லூரிகளின் ஆசிரியர்கள் பணிக்காப்பின்மை குறித்து நாம் அறிந்து கொள்ளலாம். இதை விட நேர்மைச் செயலாலும் தமிழ்த் தொண்டுகளாலும் தம் வாழ்க்கையைப் போர்க்களமாக மாற்றிக் கொண்ட பேராசிரியர் இலக்குவனாரின் ஈக உணர்வையும் செம்மாப்பையும் புரிந்து கொள்ளலாம். சாதிகள் அடிப்படையில் கல்விக்கூடங்கள் உருவாவதால் ஏற்படும் மன்பதை அவலம் குறித்தும் கவலைப்படும் பேராசிரியர், அதனைப்பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
 “சாதிகள் கூடாது என்று மேடைகள் தோறும் முழங்குகின்றனர். சாதிகளை அரசு ஆவணங்களில் குறித்தல் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால், சாதிகளின் பேரால் கல்வி  நிலையங்கள் தோன்ற உதவுகின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தத்தம் சாதிகள் பேரால் கல்லூரிகளை அமைத்துக்கொண்டு தத்தம் சாதி ஆசிரியர்களையே பணிக்கு அமர்த்துகின்றனர். தத்தம் சாதி மாணவர்களையே பொறுக்குகின்றனர். இவ்வகையில் அரசும் குறுக்கிடுவதில்லை. உதவியும் புரிகின்றது. இவ்விரங்கத்தக்க சூழ்நிலை என்றுதான் நீங்குமோ?”
 இன்றைக்குச் சிறுபான்மையர் உரிமை என்ற அடிப்படையில் கல்விநிலையங்கள் பெரும்பான்மை தோன்றித் தமிழரைச் சிறுபான்மையர் ஆக்கிக் கொண்டு வருகின்றன. பேராசிரியர் இலக்குவனார் கூறுவதுபோல், அரசே கல்வி நிலையங்களை நடத்தும் நிலை வர வேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் அனைத்து வகையினருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தி உள்ளார். அத்தகு நிலை வரவேண்டும். அந்நாள் எந்நாளோ!
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்