Tuesday, December 19, 2017

நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.2 /2

(நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1 /2 தொடர்ச்சி)

நான் கண்ட வ. உ. சி. 

  வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வணிகத்திற்கே கேடு விளைவித்தன. இதனை யறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஓட்டித் தமிழ் நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள். அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச் செல்லும் தலைவராயிருந்தவர். அவர் ஒருமுறை சிறை சென்றபோது,  தூத்துக்குடி தொடர்வண்டி நிலையமும், அரசு கட்டடங்களும் தூள் தூளாக்கப்பட்டன. நெருப்புப் பொறிகளும் பறந்தன. அரசாங்கமே நடுங்கி அஞ்சுகின்ற அளவுக்கு அவர் ஒர் வீரமனிதராகக் கருதப்பட்டார்.
  அவருடைய தமிழ்ப் பற்றுத் தமிழ்நாட்டிலே நன்கு மதிக்கப் பெற்றிருக்கிறது. அதுதான் ‘திருக்குறள் வ.உ.சிதம்பரம் பிள்ளை பதிப்பு’ என்பதாகும். இது இன்னும் நம்மிடையே இருந்து கொண்டு அவர்களையும் அவர்களது தமிழ்ப்பற்றையும் நினைப்பூட்டி வருகிறது. திரு.பிள்ளை சிறையிலிருப்பார். வீட்டிலிருந்து செய்தி வரும். வருகின்ற செய்தி ‘குழந்தைக்குத் துணி யில்லை; உணவுக்கு வழியில்லை’ என்றிருக்கும். கண்கள் கலங்கும்; மனம் கலங்காது. இத்தகைய செய்திகள் பலவற்றை அரசாங்க அதிகாரிகள் அவரிடம் அனுப்பி வைப்பார்கள். காரணம் எந்த வகையிலானும் மன்னிப்பைப் பெற்று, விடுதலை பெற்று அவர் வெளியேற வேண்டும் என்பதுதான். இருமுறை ஆயுட்காலத் தண்டனை; அந்தமான் தீவுக்கு நாடு கடத்தும் தண்டனைகளைப் பெற்று, செக்கிழுத்து வாடி வதங்கி அடைத்துப்போன காதுகளுக்கு, இச்செய்திகள் எட்டும். மடிவதில் மனம் கொண்டாரேயன்றி மன்னிப்பில் மனம் கொள்ளவில்லை. ஒரு நாட்டுத் தலைவன் மனைவியையும் மக்களையும் காப்பாற்றத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமை யினால், அவர்கள் முன்வந்து உதவி செய்யவில்லை. அவர் வாழ வகையின்றி வருந்தினார். ”இப்படிப்பட்ட மக்களுக்காகச் சிறை புகுந்து, செக்கிழுத்து மடிவதும், தன்னை நம்பியுள்ள மனைவி மக்களை இப்படிப்பட்டவர்களிடம் உயிரோடு ஒப்புவித்து, அவர்களையும் மடியச் செய்வதும் நியாயமாகுமா?” என்று சிறையில் பல ஆண்டுகள் எண்ணி எண்ணி வருந்தி நொந்தார்.
  கடைசியாக ஒரு நாள் நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்தது. மீண்டும் வழக்கறிஞர் தொழிலை நடத்தி னார்கள். திரு.பிள்ளைஅவர்களோடு சேர்ந்து நான்கு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் பேசும் சில ஊர்களுக்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழுக்காக அவர்மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அதற்காகவே என்மீது அவருக்குப் பற்றுதல் உண்டு. தமிழ் ஒன்றே எங்களைப் பிணைத்தது. அரசியலிலே நாங்கள் இருவரும் மாறுபட்ட கொள்கை யுடையவர்கள்; மாறுபட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள். ஒருநாள் தட்டப்பாறையில் சந்தித்து “உங்களைப்போன்றவர்கள்  நீதிக் கட்சியை விட்டுக் காங்கிரசுகட்சிக்கு வந்து சேரவேண்டும்” எனக் கூறினார்கள். எனது இளமை முறுக்கினாலும், இரத்தத் திமிரினாலும் அவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கடுஞ் சொற்களைக் கூறிவிட்டேன். இன்றைக்கு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆயின என்றாலும், இன்றைக்கும் அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. அச் சுடுசொல் :-.
 ”தங்கள் அறிவும், திறமையும், உழைப்பும், தமிழர் நலனுக்குப் பயன்படாமல், அறியாமையின் காரணமாகப் பிறர் நலனுக்குப் பயன்படுகிறது. அத் தவற்றை நானும் செய்யவேண்டுமா?” என்பதுதான். இதற்காக அவர்கள் எனக்களித்த தண்டனை, அவர்களின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, பலமணி நேரம் நிலைமையை விளக்கி, எனது கருத்தை மாற்றி, அவர் தவறு செய்யவில்லை என மெய்ப்பித்ததுதான். பொதுவாக அவர் உள்ளத்தைத் திறந்து காட்டி, தம்முள்ளத்தே மறைத்து வைத்திருந்த பல செய்திகளையும் கூறிக் கண் கலங்கினார்கள். வருந்தினேன்; எனது வலக்கையால் அவரது கண்ணீரைத் துடைத்ததுதான் இன்றைக்கு ஆறுதலாக இருக்கிறது. அவர் கூறிய செய்திகளை வெளியிடும் காலம் இன்னும் வரவில்லை. அவரது மனைவியார் என் வயிற்றிற்கு ஒருவேளை உணவளித்தார்கள். அவரோ என் அறிவுக்குப் பல நாள் உணவை யளித்து மறைந்தார்கள். அவர் அளித்த உணவு ”எவரையும் வையாதே; வைவது தமிழனின் பண்பல்ல-பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே. எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு, தவறு என்று கண்டால் தீமை யற்றச் சொற்களால் அச்சமற்றுக் கூறு” என்பதுதான். திரு. பிள்ளை அவர்களின் அறிவுரையும் அறவுரையுமாகிய இது எனக்குப் பயன்பட்டது. உங்களுக்கும் பயன்படுமா? முயலுங்கள். நான் சிலருடைய திருவடிகளை நினைத்து அடிக்கடி வணங்குவேன். திரு.பிள்ளை அவர்கள் திருவடிகளும் அதில் சேர்ந்ததுதான். காரணம் பொய் பேசுவதில்லை என்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கையாகக் கொண்டு உண்மையையே பேசி வந்தார்கள். அதுமட்டு மல்ல, உயிர் போகும்வரை ஒழுக்கத்தைக் கையாண்டு வந்த ஒரே தலைவர் அவர் என்பதினாலுமேயாம்.
வாழ்க வ. உ. சி. புகழ்!
வாழ்க அவர் பிறந்த நாடு!
முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Friday, December 15, 2017

நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1/2

நான் கண்ட வ. உ. சி.  1/2

 திருவாளர் வ.உ. சிதம்பரம்(பிள்ளை) அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு.பிள்ளைஅவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம். பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். (உ)லோக மான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள். பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்ற மெல்லாம், இந்நாட்டின்மீதும் மக்களின்மீதும் அன்பு கொண்ட ஒன்றுதான்.
  இக்காலத்தில் சிறைக்குச் செல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும், முதல் வகுப்பும் முந்திரிப்பருப்பும் அல்வாவும் ஆரஞ்சுப் பழமும் கிடைக்கு மென்று. அந்தக் காலத்தில் அனைவருக்கும் தெரியும் செக்கிழுத்துச் சீரழியவேண்டுமென்பது. கற்கள் உடை படச் செய்யவேண்டும்: இன்றேல் பற்கள் உடைபட்டு விடும்.குத்துவதெல்லாம் நெல்லாக இருக்கும்; உண்ப தெல்லாம் களியாக இருக்கும். இக்காலம் சிறைக்குச் சென்றவர்கள் போற்றுதலும் பூமாலையும் பெறுகிற காலம். அக்காலம் துற்றுதலும், துயரமும் பெறுகின்ற காலம். முடிவாகக் கூற வேண்டுமானால், எல்லாச் சாதி யினரும் சிறைக்குச் சென்றவர்களை வெறுத்துச் சமூகத்தில் ஒதுக்கி வைத்த காலமது எனக் கூறலாம். அப்படிப் பட்ட காலத்தில்தான், திரு.பிள்ளை அவர்கள் சிறை: புகுந்தார்கள்; செக்கும் இழுத்தார்கள். களைப்பு மிகுதியினால் குடிக்கத் தண்ணிர் கேட்டுத் தண்ணிர் பெறாமல் சவுக்கடியையே பெற்றார்கள். சில நாட்கள் அல்ல; பல ஆண்டுகள். நாட்டுப் பற்றுக் காரணமாக உயிர் போகும் வேதனையைப் பெற்று வாடிவதங்கி வருந்த உழைத்தவர்கள் திரு.பிள்ளை அவர்கள் ஆவர்.
  படிப்பு இல்லாமல் தேசத்தொண்டு செய்யப்போனவ ரல்லவர் அவர்; அக் காலத்திலேயே கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்கள். தொழிலில்லாமல் தேசத்தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர்அவர். வழக்குரைஞர் தொழில் செய்து கொண்டிருந்தவர். வருமானமில்லாமையால் தேசபக்திக்காட்டப் புறப்பட்ட  வழக்கறிஞர்களைச் சேர்ந்தவர் அல்லர் அவர்; தொழிலில் நல்ல வருமானத்தைப் பெற்று வந்தனர். புகழுக்கும், பெருமைக்கும் ஆசைப்பட்டுப் பொதுத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர், எவ்வளவு கத்திப் பேசினாலும் இந்துவும் சுதேசமித்திரனும் ஏழுஎட்டு வரிகூட எழுதா அக்காலத்தில் தேசத்தொண்டு செய்து வந்தவர். அவரது அருஞ்செயலையும், பெருங் குணத்தையும், உள்ளத் துய்மையையும், உழைப்பின் சிறப்பையும் விளக்க இதை விட வேறெதுவும் கூறவேண்டியதில்லை.
  உயர்ந்த அறிவாளிகள் உயிரோடிருக்கும்போது, அவர்களைச் சிறிதும் மதியாமல், அறிவைப் போற்றாமல், செயலை வாழ்த்தாமல், நடத்தையைப் பின்பற்றாமல், வருந்தும்போது ஒருவேளை உணவுக்கும் வழி செய்யாமல், மாண்டபிறகு மணிமண்டபம் கட்டுவதும், காலடிபட்ட மண்ணை எடுத்துக் கண்களில் ஒத்துவதும் ”மாண்டாயோ மன்னவனே” என மாரடித்து அழுவதும்: படம் திறப்பதும், பாக்கள் பாடுவதும், பூமாலை சாற்றிப் போற்றிப் புகழ்வதும் ஆகிய பழக்கத்தைக் கொண்ட இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டில்தான் திரு. பிள்ளை அவர்களும் பிறந்தார்கள்; அதனாலேயே அவர்களும் இக் கூற்றுக்கு இலக்கானார்கள். இன்னும் ஒருபடி தாண்டி, வாழ்ந்தபோது வைது கொண்டிருந்தவர்கள் மாண்டபிறகு மாறி நாட்டிற்கு அவர் பெயரும், ஊருக்கு அவர் சிலையும் வேண்டுமென, ஊருக்கு முன்னே ஒடோடி ஆலோசனை கூறும் மக்களுள்ள இத்தமிழ் நாட்டிலே திரு.பிள்ளை அவர்கள் பிறரால் வையப்பெறாமலும் வாழ்த்தப் பெறாமலும் வாழ்ந்துவந்தது ஒரு சிறப்பேயாகும். திரு.பிள்ளை அவர்களின் பேச்சு இரத்தக் கொதிப்பையும் நரம்புத் துடிப்பையும் மட்டும் அல்ல, எலும்புகளையும் உருகச் செய்யும். உணர்ச்சி கலந்த அரசியல் ஆவேசப் பேச்சுகள் திரு.பிள்ளை அவர்களோடு மறைந்து ஒழிந்தன.
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Wednesday, December 13, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 


உலகத்தில், அன்றாட நடைமுறையில் காணப்படுகிற முரண்பாடுகள் கவிஞர் உள்ளத்தில் தைக்கின்றன. அந்த உறுத்தல் அவரது உணர்வில் சூடேற்றுகிறது. சீற்றமாகச் சொற்கள் கொதித்து வெடிக்கின்றன.
இதோ ஓர் எடுத்துக்காட்டு:
உண்ட சோறு செரிக்காத திருடர்க் கெல்லாம்
     உபசரணை செய்கின்றீர் உண்டிச் சாலை
கொண்டு கூட்டிச் செல்கின்றீர் வாங்கிப்போட்டுக்
     குடல் நிரப்பி ஆனந்தம் அடைகின்றோரே அந்தோ
திண்டாடும் ஏழைமகன் விடுதி வாசல்
     தெருவோரம் நின்றானே கவனித் தீரா?
முண்டங்காள் உம் கண் என்ன குருடா? அந்த
     முழுப்பசியுள் மகன்பசியை எண்ணி னீரா?
நாட்டின் நிலைமையை நினைத்துப் பெருங்கவிக்கோ பாடியுள்ள பாடல்கள் சுடுசரங்களாகவே பாய்கின்றன. தன் கருத்துகளை வெளிப்படையாக முழக்கமிடுவதில் அவர் எவருக்கும் அஞ்சுவதேயில்லை. இன்றைய நிலையைச் சுட்டிக்காட்டும் பாடல்கள் சில இதற்குச் சான்று கூறும் –
பெருங்கொள்ளைக் காரரெல்லாம் இன்று நாட்டின்
பெருஞ்செல்வன் ஆகிவிட்டார்! இன்பே இல்லாக்
கருங்கல்போல் நெஞ்சுடையா ரெல்லாம் இன்று
கருணைமிகு வள்ளலெனப் பெயரெ டுத்தார்!
அருஞ்செயலைச் செய்கின்றோன் சாக, ஒன்றும்
அறியாத அயோக்கியனோ உயர்ந்து வாழ்ந்தான்!
துரும்பாக இவரையெலாம் மதிக்கும் நாளே
தொழத் தகுநல் சான்றோர்க்கு விழாநாள்
…        …        …       …      ஏதுசெய்தும்
தம்படிகள் சுருட்டுவதே நோக்கம் வைய
அரங்கத்தில் உழைப்போர்கள் வாட, உண்மை
அயராது போற்றுபவர் ஓட, தீய
கரங்கொண்ட கயவர்கள் வலிமை கொண்டார்!
கவினுலகை ஆள்கின்றார் விடிவுண்டாமோ?
சந்தையிலே விற்கின்ற பொருளாய் நம்மைச்
சனநாயகப் பெயரால் வாட்டி ஆட்டு
மந்தையென மேய்க்கின்றார்! அறிஞரெல்லாம்
வால்பிடித்து வாழ்கின்றார் ஆள்வோர் தம்மை!
சிந்தனையைக் கூர்மை செய்வோர் இலையா? உண்டு!
தினக்கூலி வாங்கியவர் ஊமையானார்!
நிந்தனைகள் கூறுவதாய் நினைக்க வேண்டாம்!
நிலையீது! இதை மாற்ற என்பா போர்வாள்!
எல்லாம் இறைவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருப்பது மக்களின் இயல்பாக இருக்கிறது. இந்த நிலை கவிஞருக்குச் சீற்றம் தருகிறது. அவருடைய சிந்தனைச் சீற்றம் மூடி மறைக்காத சொற்களாகப் பாய்ந்து புரள்கிறது. அவற்றில் பெருங்கவிக்கோவின் முற்போக்கு எண்ணம் கனல்கிறது.
வஞ்சச் செயலால் வாழும் சிறுமதியர்
தஞ்சமாய் எல்லாம் தனி இறைவன் செயலென்பார்!
கூடிக் கெடுக்கும் குணங் கெட்டார் கூடத்தான்
நாடியே எல்லாம் நனி இறைவன் செயலென்பான்
பேடிக்குணத்தார் பித்தலாட்டக் கொடியவர்கள்
வாடிக்கை யாயெல்லாம் வாழிறைவன் செயலென்பார்!
அடுத்துக் கெடுப்பவர்கள், அடங்காது நடப்பவர்கள்
படுத்துக் கிடந்தே பால்தேனும் பழரசமும்
விதவிதமாய் உண்பவரும் வெல் இறைவன் செயலென்பான்
கூனிக் குறுகிக் கும்பி வயிற்றுக்காக
ஆனமட்டும் போராடி அயர்ந்தாரும் கூடத்தான்
எல்லாம் இறைவன் இனிய செயல் என்கின்றான்!
குடிப்பதற்குக் கூழ்கூடக் கும்பிக்கு இல்லாமல்
வெடித்துக் குமுறுகின்ற வீரன் ஏழைமகன்
துடிக்கும் பொழுதினிலும் தூயஇறை செயலென்பான்
படித்த படிப்பும் பாடமெலாம் ஈதொன்றே!
கட்டழகி இன்பம் கனியழகி நஞ்செய்யிலே
நட்டு உழைக்கும் நனியழகி நம் நாட்டில்
உடுத்துதற்கும் கூட ஓராடை நூலாடை
எடுக்க முடியாமல் ஏழ்மையிலே வாடுகின்றாள்!
எல்லாம் இறைவன் செயலென்றே! ஆனாலும்
வல்லச் செருக்குடைய வனிதை மாடியிலே
உல்லாச மாயிருக்கும் ஓரத்துச் சன்னலுக்கும்
சில்லாடைப் பட்டாலே திரையிட்டு வாழ்கின்றாள்!
இவர்களும் கூடத்தான் இறைவன் செயலென்பார்!
தவமும் பாவமும் சரிசமமா சிந்தியுங்கள்!
என்ன கொடுமை? இழிவான மடமையிது!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

Friday, December 08, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 

அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து
பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள்
என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கினால், ‘தவம் வென்றது போல்தான் வரும் நலமே’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
  பொதுவாக, மேடை மீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தாம் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக் கரவொலி பேச்சாளர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன் காட்டுவதில்லை. இந்த நிலையைப் பெருங்கவிக்கோவின் பாட்டு சூடாகச் சுட்டுகிறது.
நின்று தலைநிமிர்த்தி நெடும் பேச்சுப் பேசிவிட்டுக்
கூட்டத்தின் கரவோசைச் குளிர்ச்சியிலே – மெய்மறந்து
நீட்டிப் படுத்தலன்றி நேர்மையாய் யான் என்று
திறமை காட்டிச் செயலாக்கம் செய்தவர் யார்?
“சிறுமைத்தனத்தில் திறமை கொன்று சீரழிந் தேகுவதோ! வறுமை வாழ்வைப் பெரிதாய்க் கண்டு மனம் இழப்பதுவோ?” என்று கேட்கும் கவிஞர், மனிதனாக நடப்பது எவ்விதம் என்று கூறுவது சிந்திக்கத் தூண்டுவதாகும்.
மனிதன் என்பது பொதுச் சொல் எனினும்
மலரும் முகங்கள் பலவிதம் – இந்த
தனித்தனி மனிதர் நடக்கும் வழிகளும்
தனித் தனியாகப் பலவிதம்!
போனவன் போக்கில் போவேன் என்பது
புரியாத் தனத்தின் வித்தாகும் – நெஞ்ச
மானத் தன்மை வகுக்கும் வழிமுறை
மதித்து நடப்பதே சொத்தாகும்
அறிஞரைப் போற்றி, அவர்களை வழிகாட்டியாக ஏற்று, அவர்கள் காட்டிய பாதையில் நடக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. பெருங்கவிக்கோவின் புதிய பார்வை அதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இல்லை. அதற்கான காரணத்தை அவர் தெளிவாகச் சொல்லுகிறார்.
முன்னே தோன்றிய அறிஞனைப் போற்றினும்
முழு அடிமை நீ ஆகாதே – அடடே
பின்னே அவனை நீ வெல்வது உண்மை
பேரறிவாளன் நீ மறவாதே
நெஞ்சம் இருப்பதோ கையளவில் தான்
நினைவோ உலகை வெல்லும் – எந்த
வஞ்சம் வரினும் வாழ்வோ தாழ்வோ
வாகை உறுதி கொள்ளும்
மற்றவர் தீய குற்றம் தனை மிதி! மனிதத் தன்மை ஊட்டு! இவ்வாறு மனத்தை வீறு கொள்ளும்படி தூண்டும் கவிஞர்,
ஊட்டி வளர்த்தவர் காட்டிக் கொடுப்பாரேல்
உந்திப் பழித் தொதுக்கு! – மனமே
நாட்டில் பிழைக்கத் தெரிந்த மனிதரவர்
நம்பிப்பின் செல்லாதே!
என்று விழிப்புணர்வு ஊட்டுகிறார். சோர்வு அடையாதபடி ஊக்கத்தோடு உழைக்க வேண்டும் என்றும் அவர் ஊக்கப்படுத்துகிறார்.
ஏற்ற அறக்கொள்கை எவரும் மதிக்காமல்
இன்னல் தருவதாயிருந்தால் – மனமே
போற்றலிலாத தென்றெண்ணிச் சோராதே நீ
பொங்கி நல முடிப்பாய்!
மான வாழ்வி லொரு மாசு புகுந்திடில்
வாய்மை நெருப்பாலே – மனமே
ஆனமுறையில் பொசுக்கி முன்னேறு நீ
ஆக்கம் தனைத் தேடு!
என்றும் நல்வழி புகட்டுகிறார்.
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்