செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத் தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய், செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின் தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.
தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால் இன்று நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் தமிழ் மணம் வீசுகின்றது. எங்கும் தமிழ்ப் பேச்சுக் கேட்கின்றது. தமிழ்! தமிழ்! என்னும் முழக்கம் யாண்டும் வானைப் பிளந்து எழுகின்றது.
திரு.வி.க.வினுடைய எழுத்துகளில் அழகு ததும்பும். இனிமை சொரியும். இசை நடனமிடும் அவர் எழுத்தோவியங்கள் உயர்தனிச் செம்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவன. அவர் இயற்றியுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் இலக்கியமாகத் தோன்றும். ஒவ்வொரு குறிக்கோளை விளங்கி நிற்கும். அவர் யாத்த நூல்களுள் ‘பெண்ணின் பெருமை’, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்னும் பாரதி கருத்துக்கு ஏற்புடையது. ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்னும் இராமலிங்க அடிகளாரின் அடியொற்றியது. ‘கடுவன் காட்சியும் தாயுமானாரும்’, அறிவே தெய்வம் என்று கூறிய தாயுமானாரின் பொன்மொழியை விளக்கும் பான்மையது. ‘கிருத்துவின் அருள்வேட்டல்’, அன்பே கடவுள் எனும் இயேசுநாதரின் கட்டளைக்குரியது. இங்ஙனம் பல உயர் குறிக்கோள்களை விளக்குவதற்கு எழுந்த நூல்கள் யாவும் இலக்கியம் என்னும் பெயருக்கேற்ப அமைந்தனவாம். இலக்கியம் என்றால் குறிக்கோளை இயம்புதல் என்று தானே பொருள்.
அவர் வழிநின்று நற்றமிழ்த் தொண்டாற்றுதல் நம்மனோர் கடனாகும். புலவரைப் போற்றும் நாடே பொன்னாடாகும். செந்தமிழ்ப் புலவராம் திரு.வி.க.வைப் போற்றுவோம். நம் செந்தமிழ் காப்போம் என உறுதி பூண்போம். வாழ்க திரு.வி.க.வின் புகழ்! வளர்கதமிழ்!
தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி. இலக்குவனார்
000
திரு.வி.க.வின்கருத்துத்துளிகள்
தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும்
பெண்மணியின் வாழ்விலே மூன்று நிலைகள் முறை முறையே அரும்பி மலர்ந்து கனிதல் வேண்டும். அவை பெண்மை, தாய்மை, இறைமை என்பன. இம்மூன்றினுள் மிகச் சிறந்தது தாய்மை. பெண்மை, தாய்மை மலர்ச்சிக்கென ஏற்பட்டது. தாய்மை மலர்ந்தால் இறைமை தானே கனியும். இறைமை கனிவுக்குத் தாய்மை இன்றியமையாதது. தாய்மை மலராவிடத்தில் இறைமை கனியாது. தாய்மை மலராத பெண்மையும் சிறப்புடையதன்று. ஆதலின் தாய்மை சிறந்ததென்க. தாய்மையாவது அன்பின் நிறைவு! அன்பின் விளைவு! அன்பின் வண்ணம்!
தமிழ்த்தென்றல்திரு.வி.க.:
திருக்குறள்விரிவுரை: அறத்துப்பால்: பக்கம்.614
000
பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும்
மனிதன் எத்தகைய வழக்க வொழுக்கமுடையனாயினும் ஆக; எத்தகையத் தொழின் முறையின் ஈடுபட்டவனாயினும் ஆக; அரசனாயிருப்பினும் இருக்க; ஆண்டியாயிருப்பினும் இருக்க; நீதிபதி தொழில் செய்யினுஞ் செய்க; வாயில்காப்பு வேலை புரியினும் புரிக; எவரெவர் எந்நிலையில் நிற்பினும் நிற்க; எக்கோலங் கொள்ளினுங் கொள்க. மெய்யறிவுஎன்னும்ஞானம்பெறஎவருங்காட்டுக்குப்போகவேண்டியதில்லை. நடு நாட்டில் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் உறவினர் இவரோடு வாழ்ந்தும், பலவகைத் தொழில்களைச் செய்தும் ஞானியாகவே இருக்கலாம். வேண்டு ஒன்றே; அது, நாம் பிறர்க்காக வாழ்கிறோம்’ என்று எண்ணங் கொண்டு வாழ்வதேயாகும்.
தமிழ்த்தென்றல்திரு.வி.க. :
மனிதவாழ்க்கையும்காந்தியடிகளும்: பக்கம்.23
000
திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது
திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது.
திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின்எழுத்தோவியம்திருக்குறள் என்று கூறலாம்.
திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார்.. உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந் நினைவையூட்டும்? அ·து உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை.
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற.
தமிழ்த்தென்றல்திரு.வி.கல்யாணசுந்தரனார்
000
திருக்குறளின்படிஒழுகுங்கள்!
தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு, திருவள்ளுவர் பிறந்தநாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்திபூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாதவாறு காத்துக்கொள்ளும் கிராம ஆட்சியை -பழைய கிராமப் பஞ்சாயத்தை – தொழிலாளர் ஆட்சியை பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து, வீடுபேற்றை அளிக்கவல்ல ஞான அரசியலைப் பெற முயலுங்கள். இதன் பொருட்டு உங்கள் உடல் பொருளை ஆவி மூன்றையும் தத்தஞ் செய்யவும் சித்தமாயிருங்கள். உங்கள் முயற்சியால் எல்லா நலனும் ஆண்டவனருளால் விளையும்.
–தமிழ்த்தென்றல்திரு.வி.கல்யாணசுந்தரனார்
000
கீர்த்தனையால்விளைந்தநலன்சிறிது; தீங்கோபெரிது!
தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.
கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின… இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன. அவ்வணியைத் தாங்க அவற்றால் இயலவில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின் தோலில் சிறிது நேரம் நின்று, அரங்கம் கலைந்ததும் சிதறி விடுகிறது. இதுவோ இசைப்பாட்டின் முடிவு?
மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல் பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.
சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர். சிலம்பொலி, சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய நூல்கள் மூலமும் சிலப்பதிகாரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துள்ளவர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையத்தில் சுப்பராயன் – பழனியம்மாள் இணையரின் மகனாக புரட்டாசி 09, 1959 / 24.09.1928 இல் பிறந்தார். (திசம்பர் 22 1929 இல் பிறந்ததாகச் செய்தித்தாள்களில் குறிப்பு உள்ளது.) மனைவி செல்லம்மாள். ஆண் மக்கள் தொல்காப்பியன், கொங்குவேள் பெண் மக்கள் மணிமேகலை , கெளதமி, நகைமுத்து.
கல்விப்பட்டம்: கணக்கில் இளமறிவியல் பட்டம். தமிழ் முதுகலை, ஆசிரியப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர். திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் ஆய்வுத் தலைப்பு ‘இக்காலக் கவிதை உத்திகள்’ என்பதாகும். செம்மொழி நூல்களோடு ஒப்பிட்டு இன்றைய கவிதை உத்திகள் பற்றி வெளியிடப்பட்ட இவருடைய ஆய்வுகள் மிகச் சிறப்பாக உள்ளன.
கணக்கு ஆசிரியராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தமிழார்வம் இவரைத் தமிழ்ப்பணியின் பக்கம் ஈர்த்து விட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ்பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றித் தமிழ் வளர்ச்சிக்கு வெகுவாகப் பாடுபட்டவர்.
1954 ஆம் ஆண்டு சொல்லின் செல்வர் இரா.பி. சேது(ப்பிள்ளை) இவருக்கு வழங்கிய ‘சிலம்பொலி’ பட்டமே இவரின் அடையாளமாக நிலைத்து விட்டது. தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருது(1997), பாவேந்தர் விருது(1999) உட்பட 46 விருதுகள் பெற்ற விருதாளர்.
செம்மொழித் தமிழோடு தொடர்புடைய முயற்சிகளிலும் பழந்தமிழர் மரபினையும் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பல அருவினைகள் நிகழ்த்தியுள்ளார்.
முதல் அருவினை இவர் எழுதியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகள். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்கள் மிகவும் குறைவு. அவரை அணிந்துரை நாயகர் என்றே அழைத்துப் பெருமை செய்வதைக் காண்கிறோம். பழைய இலக்கிய மரபில் சொல்வதென்றால், தமிழில் ஆயிரம் அணிந்துரைகள் எழுதியவர் என்று இவருக்கு ஒரு பரணி பாடலாம்.
இரண்டாவது அருவினை இவருடைய தொடர் சொற்பொழிவுகள். இவருடைய தொடர் சொற்பொழிவுகள் பழந்தமிழ் மரபினையும், இன்றைய வளர்ச்சிகளையும் எடுத்துக் காட்டும். வகையில் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்து இன்று வருகின்ற புதிய இலக்கியங்கள் வரை அனைத்தையும் நன்கு ஆய்ந்து திறம்பட எடுத்துக் கூறுவதில் பெரும் வல்லமை பெற்றவராவார்.
பொதுவாக இராமாயணம், மகாபாரதம் போன்றவையே தொடர் சொற்பொழிவுகளாகச் செய்யப்பட்டன. ஆனால் இவரோ மற்றவர்கள் பெரும்பாலும் சொல்லாத இலக்கியங்களை எடுத்துத் தொடர் சொற்பொழிவுகளாகச் செய்திருக்கிறார். மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, இராவண காவியம் , பெருங்கதை, சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சீறாப் புராணம், தேம்பாவணி போன்ற இவருடைய தொடர் சொற்பொழிவுகள் இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவர் நிகழ்த்தியுள்ள இலக்கியச் சொற்பொழிவுகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டும். இந்த அளவு பல்வேறு இலக்கியங்களை ஆண்டுக்கணக்கில் தொடர் சொற்பொழிவாகச் செய்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம். தன்னுடைய 22 ஆவது அகவையிலிருந்து இன்று வரை ஏறத்தாழ 62 வருடங்களாகச், சிறிதும் ஓய்வு ஒழிச்சலின்றி, தமிழே மூச்சாக, தமிழே பேச்சாக, இலக்கிய பணியாற்றிக் கொண்டிருக்கும் சிலம்பொலி செல்லப்பனார், தமிழ் கூறும் நல்லுலகில் இதுவரை யாரும் நிகழ்த்தாத அருவினையாக, மிக அதிக எண்ணிக்கையில் இலக்கியச் சொற்பொழிவாற்றியுள்ளார்.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள், சீவக சிந்தாமணி, இராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், இராசநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகியவை தொடர்பான தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இலக்கியங்களை மக்கள் மனத்தில் பதித்தவர் எனலாம்.
குறிப்பாக, மணிமேகலை(18 பொழிவுகள்), சிலப்பதிகாரம்(10 பொழிவுகள்), சங்க இலக்கியம்(18 பொழிவுகள்), சீவக சிந்தாமணி குறித்த தொடர் சொற்பொழிவு-15 பொழிவுகள், பெருங்கதை(25 பொழிவுகள்), பிரபந்த இலக்கியங்கள்(12 பொழிவுகள்), சீறாப் புராணம் (20 பொழிவுகள்), முதலாகப் பல்வேறு இலக்கியங்கள் குறித்து இவர் தொடர்சொற்பொழிவுகள் ஆற்றி மக்கள் மனத்தில் இலக்கிய ஆர்வத்தை விதைத்தார். இராவண காவியம் குறித்து மட்டும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 22 பொழிவுகள், நாமக்கல்பாவேந்தர் இலக்கிய பேரவையில் 12 பொழிவுகள், சென்னை சிந்தனையாளர் மன்றத்தில் 12 பொழிவுகள் எனத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றித் தமிழ் இனமான உணர்வை மக்களுக்கு ஊட்டினார்.
இவை தவிர நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேருரையாற்றியுள்ளார். இவர் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடோ, முதன்மைக் கருத்தரங்குகளோ இல்லையென்று கூறினால் அது மிகையாகாது. இவர் கலந்து கொள்ளாத, சொற்பொழிவாற்றாத தமிழ்மேடை எதுவும் இருக்குமா என்பது ஐயமே.
செம்மொழித் தமிழோடு தொடர்புடைய பழந்தமிழரின் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் இலக்கிய நூல்கள் எழுதி வெளியிட்டமை, ஆய்வு அணிந்துரைகள் வழங்கியமை, செம்மொழி நூல்கள்- காப்பியத் தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் சொற்பொழிவுகள்-தொடர் சொற்பொழிவுகள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாலடியார், பெருங்கதை ஆகியவற்றை ஆய்ந்து தெளிவுரை எழுதியமை, எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகள் , மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் ஆகியன இவர் தமிழன்னைக்குச் சூட்டிய அழகு அணிகலன்களாகும்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் அருவினை ஆற்றியவர்; சிலம்பொலியார் அணிந்துரைகள் (6 தொகுதிகள்) என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய அணிந்துரைகள் செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக, தமிழியல் வரலாற்று ஊற்றுக்கண்ணாக இன்றியமையாச் சிறப்பினவாக விளங்குகின்றன.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் , அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பையேற்றுச் சென்று, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற செம்மொழி நூல்கள்பற்றித் தேன்மழை பொழிந்தது போன்ற அருமையான சொற்பொழிவுகளை நிகழ்த்திச் செம்மொழி ஆர்வத்தை வளர்க்கவும், பரப்பிடவும் வழி செய்தார். கடல்மடை திறந்தது போல் தடையின்றிப் பேசும் பேச்சாலும், கேட்கக் கேட்கத் திகட்டாத தேன் சுவைக்கு ஒப்பான சொற்பொழிவுகளாலும் செம்மொழித் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தார்.
சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார், ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் ‘இளங்கோ விருது’வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும்.
திருக்குறள் சான்றோர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உயர் நோக்கில் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு அவர்கள் அறிஞர்களைக் கொண்டு உரையாற்றச் செய்து அவற்றை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று நான் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
திருவள்ளுவர் வழித்தோன்றல்கள்
திருவள்ளுவர் பெயரைத் தாங்கித் திருக்குறள் வழியில் வாழும் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன். இவருடைய பெற்றோர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்-இ.மலர்க்கொடி இணையர் இவருக்குப் பிறக்கும் பொழுது சூட்டிய பெயரே திருவள்ளுவன் என்பதுதான். தம் பெயரைக் காப்பாற்றும் வண்ணம் திருக்குறள் வழியில் வாழ்ந்து வரும் நற்பெருமகனாராகத் திகழ்கிறார். தமிழ்க்காப்புப் போராளி சி.இலக்குவனார் குறித்து வையகம் நன்கறியும். தமிழ்க்காப்பிற்காக இரு முறை சிறை சென்றவர்; திருவள்ளுவருக்குச் சிறப்பான விழாக்கள் எடுத்தவர்; திருக்குறள் வகுப்புகள் நடத்தி மக்களைத் திருவள்ளுவர் வழியில் வாழச் செய்தவர்; குறள்நெறி என்னும் திங்களிதழ், திங்களிருமுறை தமிழ் இதழ், திங்கள் இருமுறை ஆங்கில இதழ், தமிழ் நாளிதழ் நடத்தி மக்களிடையே குறள்நெறியைக் கொண்டு சென்றவர். அவருடைய மக்களுள் ஒருவரான இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறள் சான்றோராக வாழ்வதில் வியப்பு ஏதும் இல்லை அல்லவா?
திருக்குறள் ஈடுபாட்டின் தொடக்கம்
இவர் 6-ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் ஆண்டுதோறும் பள்ளியிலும் பிற அமைப்புகளிலும் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றுள்ளார். இவ்வாறு முதன்முறையாக ஆறாம் வகுப்பில் 5 அதிகாரங்களைப் படித்து அவற்றில் ஒன்றை ஒப்பிக்க வேண்டும் என்றபொழுது ஏற்பட்ட ஆர்வமே இவரைத் திருக்குறளில் ஈடுபடச் செய்துள்ளது. முதல் போட்டியிலேயே முதல் பரிசு பெற்றதும் திருக்குறளை எப்பொழுதும் படிக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, போட்டி நோக்கத்தில் இல்லாமலே திருக்குறள்களைப் படித்தார். உயர்நிலைப் பள்ளி முடிக்கும் முன்னரே அறத்துப்பால், பொருட்பால் முழுமையும் மனப்பாடமாக அறிந்திருந்தார்.
குறள்நெறியைப் பின்பற்றும் கடப்பாடு
இவர் 8-ஆம் வகுப்புப் படிக்கும் பொழுது ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தை ஒப்பித்துப் பரிசு பெற்றார். பரிசு பெற்றதால் படித்ததன்படி ஒழுக வேண்டும் என்று புலால் உண்பதைக் கைவிட்டார். இளம் மாணவப் பருவத்திலேயே திருக்குறள் படி வாழ்தல் வேண்டும் என்ற உணர்வுடன் இவர் இருந்துள்ளார் எனில் எத்தகைய பெருஞ்சிறப்பு அது. இப்படி ஒருவரைக் காணுதல் அரிதல்லவா? இத்தகையவரைப் பற்றி நான் பேசுகிறேன் என்றால் எனக்கும் சிறப்புதானே!
திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டில் புதிய செயற்பாடுகள்
திருவள்ளுரின் 2000 ஆம் ஆண்டுப் பிறப்புதொடங்குவதற்கு முன்னர் இவரின் தந்தையார் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் 1968 ஆம் ஆண்டு இறுதியில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று மடல் எழுதும் முன்னர்த் திருக்குறளை எழுதித் தொடங்க வேண்டும் என்பது. அது முதல் அனைத்து மடல்களிலும் திருக்குறளை எழுதித் தொடங்கினார். இவரது மடல்களைப் படிக்கும் நண்பர்களும் உறவினர்களும் மறுமடல் எழுதும் பொழுது இவரைப் பின்பற்றித் திருக்குறளை எழுதினர். இவ்வாறு பிறருக்குத் திருக்குறள் ஆர்வத்தை உண்டாக்கினார்.
இவ்வாறு மாணவப்பருவத்திலேயே திருக்குறளைப் பின்பற்றவும் பரப்புவும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
அது முதற்கொண்டு தம்முடைய எல்லாப் பேச்சுகளிலும் எல்லாக் கட்டுரைகளிலும் ஏற்ற திருக்குறளைப் பயன்படுத்தித் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்; திருக்குறள் கருத்தரங்கங்களில் கட்டுரை படித்துத் திருக்குறளின் சிறப்புகளைப் பரப்பி வருகிறார்.
மாணவப்பருவத்திலேயே தமிழ் அமைப்புகள் வழித் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தினார். 1973 இல் தந்தையார் இறந்தபின் இறுதிக்கடன் நாளில் திருக்குறள் ஒப்பித்தல், திருக்குறள்பற்றிய பேச்சுப் போட்டியை நடத்தினார். அது முதற்கொண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, திருக்குறள் பயிற்சி, திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் வழிச் சிறார் முதல் பெரியோர் வரை திருக்குறளில் ஈடுபாடு காட்டவும் திருவள்ளுவரைப் போற்றவும் வழிகாட்டுகிறார்.
பணிகள் வாயிலாகத் திருக்குறள் வழியில் பிறரை வாழச்செய்தவர்
எப்பொழுதுமே கள்உண்ணாமை, சூது ஒழித்தல், பிறன்மனை விழையாமை முதலிய குறள்நெறிப்படி வாழும் குறள்நெறியாளர் இவர். பிறரையும் இவ்வழிகளைப் பின்பற்றி வாழச்செய்த பெருமகனார் இவர். இவர் சிறைத்துறையில் நன்னடத்தை அலுவலராகப் பணியாற்றும் பொழுது குற்றவாளிகளையும் இளங்குற்றவாளிகளையும் சென்றவிடங்களில் எல்லாம் மனத்தை அலைய விடாமல் நன்றின்பால் திருப்பிப் பொய்யாமை, கள்ளாமை, கள் உண்ணாமை, விலைக்கு உடல் விற்காமை என ஒழுக்க நெறிகளில் வாழச்செய்து சிறந்த சீர்திருத்தப்பணிகளை ஆ்ற்றியுள்ளார்.
கலைகள் வாயிலாகத் திருக்குறள் பரப்பும் திருக்குறள் கலைஞர்
திருக்குறள் முத்தமிழ் விழா நடத்தி அதில் இவரே, திருக்குறட் பாக்களுக்குக் காவடி மெட்டு அமைத்தும் பிற நாட்டுப்புற மெட்டு அமைத்தும் காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம் முதலான நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். திருக்குறளை நாட்டுப்புறக் கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்றவர் இவர் ஒருவரே! ‘திருக்குறள் இசையமுது’ முதலான பிறரது திருக்குறள் இசைப் பாடல்களையும் மேடையேற்றம் செய்து கலைகள் வாயிலாகத் திருக்குறளை மக்களிடம் பரப்பியுள்ளார்.
குறட்பாக்களுக்குக் காலத்திற்கேற்ற விளக்கம் தரும் திருக்குறள் ஆய்வறிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறளுக்கு முழுமையான உரை நூல் எழுதினார் எனில் அது மிகச் சிறப்பாக அமையும். ஏனெனில் அவர் கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் திருக்குறளுக்குத் தரும் விளக்கங்கள் வாழ்வியலுக்கு ஏற்ற மக்கள் உரையாக விளங்குகின்றன. சான்றுக்குச் சில பார்ப்போம்.
பற்றிலர் என மொழிப்பற்றிலரைக் குறித்தல்
அற்றாரைத்தேறுதல்ஓம்புகமற்றவர்
பற்றிலர்நாணார்பழி. (திருக்குறள் 506)
என்னும் குறளுக்குப் பெரும்பாலோர் சுற்றம் அற்றவர் என்றே குறிக்கின்றனர். மணக்குடவர் ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க என்கிறார். பரிப்பெருமாள், ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க என்கிறார். பரிதி, பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை நம்பாதே என்கிறார். இவர் மொழிப்பற்று அற்றாரை நம்பக் கூடாது எனப் பொருத்தமான இக்காலத்திற்கேற்ற விளக்கம் தருகிறார்.
எண் எழுத்து என்பதற்கு மொழியைக் காக்க வேண்டும் என்ற விளக்கம்
எண்ணென்பஏனைஎழுத்தென்பஇவ்விரண்டும்
கண்என்பவாழும்உயிர்க்கு. (திருக்குறள் 392)
இதற்குப் பெரும்பாலோர் எண்ணும் எழுத்துமாகிய இரு கலைகள் என்றும் இரு பொருள்கள் என்றும் விளக்கம் தந்துள்ளனர் புத்துரை எழுதுபவர்கள் எண் என அறிவியலையும் எழுத்து எனக் கலையியலையும் கூறுவதாகக் கூறுவர்.
ஆனால் இலக்குவனார் திருவள்ளுவன் காலத்திற்கேற்பப் பொருத்தமான விளக்கம் தருகிறார்.
எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் அவ்வப்பொழுது சிலர் எழுத்தைச் சிதைத்து வருகின்றனர்; எண்ணையும் அழியச் செய்கின்றனர். எழுத்து அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும். எனவே, மொழியும் இனமும் அழியாமல் இருப்பதற்காக மொழியின் பகுதிகளாகிய எண்களையும் எழுத்துகளையும் அஃதாவது நாம் தமிழ் எண்களையும் எழுத்துக்களையும் கண்களெனப் போற்றிக் காக்கத் திருவள்ளுவர் வலியுறுத்துவதாக விளக்கம் தருகிறார்.
நெருநல்என்பதற்குநேற்றிருந்தநிலைமையைக்கூறுதல்
நெருநல்உளனொருவன்இன்றில்லைஎன்னும்
பெருமைஉடைத்துஇவ்வுலகு. (திருக்குறள் 336)
இத் திருக்குறளுக்கு யாக்கை நிலையாமையாக, நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இறந்துவிட்டான் என்பர் பெரும்பாலோர்.
இலக்குவனார் திருவள்ளுவன் காலத்திற்கேற்ற விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரு பொறுப்பில்/பதவியில்/செல்வநிலையில்/செல்வாக்குடன் இருந்தவன் இன்று அதனை இழந்து நிற்கும் பதவி, செல்வாக்கு, செல்வம் நிலையாமையக் குறிப்பிடுகிறார். இது மிகவும் எக்காலத்திற்கும் ஏற்றதாக உள்ளது.
மொழி யறிவினையும் மொழி வளர்ப்பையும் குறித்தல்
இவரது குறள்வழிச் சிந்தளை வளத்திற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு அகரமுதல இதழின் (மார்கழி 16 – மார்கழி 22, 2048) தலையங்கம் ஒன்றில் பின்வருமாறு குறித்துள்ளார்:
நாட்டுமக்கள்மீது அன்பும் நாட்டுமொழி அறிவும் நாட்டையும் மொழியையும் முன்னேற்றும் திறமையும் பதவிகள் மீது பேராசையின்மையும் உடையவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும் குறைகளையும் வெளிப்படுத்தி வருபவரே மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன். நூலாசிரியர், இதழாசிரியர், கதை எழுத்தாளர், பதிப்பாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு அணிசெய்யும் வகையில் தொண்டாற்றி வருபவர்.
திருவாரூர் (தஞ்சாவூர்) மாவட்டம் கடலங்குடியில் ஆவணி 24, 1972 / 8.9.1941 அன்று பழனியப்ப(பிள்ளை)-தங்கபாப்பு இணையரின் திருமகனாகப் பிறந்தார். இவர் மனைவி தமிழறிஞர் முனைவர் தாயம்மாள் அறவாணன் தமிழ்நூல் படைப்பாளர். மகன் அறிவாளன், மருமகள் வாணி அறிவாளன்.
கல்வி
தஞ்சாவூர் விட்டுணுபுரம் சியார்சு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்(1959), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று (1959-63) புலவர் பட்டம் பெற்றார். அங்கேயே கீழ்த்திசை மொழி இளங்கலை (பி.ஓ.எல்.) பட்ட வகுப்பில்(1963-65) சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். உடன் பேச்சு ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றில் சான்றிதழ்த் தேர்ச்சியும் பெற்றார். தமிழ் முதுகலையைத் திருனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் பெற்றார்(1967). இதிலும் முதல் வகுப்பில் முதன்மை பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில், மானுடஇயல்(1972), தொல்லியல்(1973) சான்றிதழ்கள், இலக்கிய இளங்கலை(பி.லிட்.)(1974), இலக்கிய முதுகலை(எம்.லிட்.)(1975) பட்டங்கள் பெற்ற பின்னர் முனைவர் பட்டம் பெற்றார்(1977). ஆய்வு அளிப்பேட்டுத் தலைப்பு: தொல்காப்பியம் – அகத்திணையியல், புறத்திணையியல் உரைவேறுபாடுகள் என்பதாகும்.
சொற்பொழிவாளர்
சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் அறவாணன் படிக்கும் பொழுதே தன் திறமையை வெளிப்படுத்தினார். மாணாக்க நிலையிலும் ஆசிரிய நிலையிலும் ஆங்கிலச் சொற்பொழிவுப் போட்டிகள், தமிழ்ச் சொற்பொழிவுப் போட்டிகள், பிற போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வாங்கிக் குவித்தார்.
அறிந்தபிறமொழிகள்
ஆங்கிலம், ஃபிரெஞ்சு, உருசியன் முதலான பிற மொழிகளையும் அறிந்தவர். சென்னைப்பல்கலைக்கழகத்தில் உருசியன்(1971), பிரான்சில் கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு மொழியில் (1978)சான்றிதழ்த் தேர்ச்சியுற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சிப் படைப்புகளை வழங்கி வருகிறார்.
பணியாற்றியஇடங்கள்
பாளையங்கோட்டையில் உள்ள தூய சேவியர் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்த கல்வியாண்டில்(1968-69) பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணிப் பொறுப்பேற்றார். அதற்கடுத்த கல்வியாண்டில்(1969-70) முன்னர்ப் பணியாற்றிய தூய சேவியர் கல்லூரியில் மீண்டும் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970இல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர் 7 ஆண்டுகள் இங்கே பணியாற்றினார். மேற்கு ஆப்பிரிக்கா செனகாலில் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடஇயல் ஆராய்ச்சியாளராக 1977-82 இல் பணியாற்றி அயல் மண்ணில் தமிழ்த் தொண்டாற்றினார். திராவிட-ஆப்பிரிக்கர்களின் பழக்கவழக்கப் பண்பாட்டு ஒற்றுமைகள் என்னும் தலைப்பில் ஆய்வேடு அளித்தார். இதனடிப்படையில் சில நூல்களைப் பின்னர் எழுதினார்.
1982 இல் தாயகம் திரும்பியவர் சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியில் சேர்ந்து 1987 வரை பணியாற்றினார். அதற்கடுத்த 11 ஆண்டுகள்(1987-98) புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். தொடர்ந்து வந்த 3 ஆண்டுகள் (1998-2001)மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் (திருநெல்வேலி) துணைவேந்தராக சீர்மிகு பணிகளை யாற்றினார்.
1982இல் வேலையில் சேர்ந்த நாள் முதல் விடுப்பு எடுக்காமல் அயராது பணியாற்றியமைக்காக இலயோலா கல்லூரி ஆட்சிக்குழு, ஆண்டுதோறும் பத்தாயிரம் உரூபாய்ப்பரிசு அளித்துச் சிறப்பித்தது.
கட்டுரையாளர்
மாணவ நிலையிலும் ஆசிரிய நிலையிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை அளித்துப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றார். 1960 முதல் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். தவத்திரு (உ)லூர்து எத்தனப்பள்ளி அடிகளார் நினைவு ஆராய்ச்சிக் கட்டுரைப் பரிசு, வயவர் ஆர்.கே. சண்முகம்(செட்டியார்) தமிழ் ஆராய்ச்சி விருது(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)(1963), இராணி சேது பார்வதி(பாய்) வரலாற்று ஆராய்ச்சிப் பரிசு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)(1964) முதலியன குறிப்பிடத்தக்கன. மேலும் 1983-84இல் மிகுதியான ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டமைக்குச் சிறப்புப் பரிசும் பெற்றார்.
தினமணி, தினமலர், குமுதம், கல்கி, சுதேசமித்திரன், தமிழ்நாடு, செந்தமிழ்ச்செல்வி, மறவன் மடல், முத்தாரம், மக்கள் செங்கோல், தாமரை, ஆராய்ச்சி, இளந்தமிழன், தமிழ்க்கலை, தென்மொழி, கொங்கு, கலைமகள், தமிழ்மாருதம், மலேசிய நண்பன், தமிழ்முரசு, அறிக அறிவியல் முதலான பல்வேறு இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம் பெற்றுப் பொது மக்களனின் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன.
திராவிட ஆராய்ச்சி மையம், இந்திய நடுவண்மொழி நிறுவனச் செம்மொழித் திட்டம்(மைசூர்), தமிழ் சாகித்ய அகதமி(தமிழக அரசு), தமிழாராய்ச்சி நிறுவனம், தென்னகப் பண்பாட்டு மையம், தமிழ்வளர்ச்சிக் குழு(தமிழக அரசு), இந்திய, மாநில, அயல்நாடுகளில் தமிழ்வளர்ச்சிக்குழு(தமிழக அரசு), தமிழ்ப்பல்கலைக்கழக ஆட்சி மன்றம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன ஆட்சிக்குழு, புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன மொழிபெயர்ப்புக்குழு (பாரதிதாசன் கவிதைகள்), மதுரை தோக்கு பெருமாட்டி(Lady Doak) கல்லூரியின் கல்விக்குழு, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தெரிவுக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து தொண்டாற்றியுள்ளார்.
உயர்கல்வியின் தமிழ்ப்பகுதிக் குழு(தமிழக அரசு) (1995), உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்புக்குழு (1997), சிறந்த புத்தக வெளியீட்டுத்தேர்வுக்குழு(தமிழ்வளர்ச்சித் துறை, தமிழக அரசு) (1997), ஆகியவற்றில் தலைவர் பொறுப்பேற்று வழி நடத்தியுள்ளார்.
உலகச் சைவ மன்றத்தின்(இலண்டன்) துணைத்தலைவர், சிகாகோ உலகத் தமிழ் மொழிக் கூட்டமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (கோலாலம்பூர், மலேசியா) அறக்கட்டளை உறுப்பினர், புது செர்சி தமிழ்ச்சங்கத்தின் நேற்று, இன்று, நாளை செயல்பாட்டின் ஒருங்கிணைப்பாளர், கணக்கெடுப்பு 2000 சிந்தனை வட்டம், புது செர்சி அமைப்பின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் எனப் பிற பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயலாற்றியுள்ளார்.
நூல்கள்
பண்பாட்டுப் பழக்க வழக்கங்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும் இவரது கருத்துகள் ஒரு சாராரால் எதிர்ப்பிற்கும் மறு சாராரால் அறுவை மருத்துவம் எனப் பாராட்டிற்கும் உள்ளாகின்றன.
தமிழர் குமுகவியல், பண்பாடு, வாழ்க்கை முன்னேற்ற நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், வரலாறு, தன் வரலாறு, கல்வி, பயண நூல், திறனாய்வு, இலக்கணம், சிறுகதைத் தொகுப்புகள், புதினம், அறிவியல், அற இயல், பொது எனப் பல துறைகளிலும் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவருடைய ஆய்வுகள்(His studies), மானிடவியல் ஆய்வுகள்(Anthropological studies), பாம்பு வழிபாடு(The serpent cult), திராவிடர்கள் (பதிப்பு நூல்)(Dravidians), தமிழியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்(Research papers on Tamilology) ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
சிலர் எண்ணுவதுபோல் இவர் குறைகளைமட்டும் கூறுபவர் அல்லர். தமிழ்ச் சமுதாயம் நோயும் மருந்தும், தமிழ்ச்சமூகம் அவலங்களும் தீர்வுகளும், தமிழர் வருந்தவும் திருந்தவும், தமிழர் உணரவும் உயரவும் முதலான நூல் தலைப்புகள் இதனை உணர்த்தும். எனவே, பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன், மன்பதை நூல் மருத்துவர் என அழைக்கப்பெறலாம்.
தமிழர் களைகளும் கவலைகளும், தமிழர் + தன்னம்பிக்கை = தற்கொலை, தமிழரின் எழுச்சியும் வீழ்ச்சியும், தமிழர் தடங்கள் தடுமாற்றங்கள், தமிழா எழுந்து வா, இலஞ்சம் எனும் நஞ்சு, நீயே வெல்வாய், உயருங்கள், பொறு புறக்கணி புறப்படு, புரட்சிப் பொறிகள், தமிழர் சிந்தனை புதிது, தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும், தமிழா! தலைமை தாங்க வா முதலான நூல்கள் இவர் எப்பொழுதும் தமிழரிடையே உள்ள அவலங்களையும் அவற்றைப் போக்குவத ற்குரிய வழிமுறைகளையுமே சிந்தித்து வந்துள்ளார் என்பதை உணர்த்தும்.
தொல்தமிழர் காலம், தொல்வழிபாட்டுக் காலம், அயலவர் காலம், நாயக்கர் காலம், இசுலாமியர் காலம், பாண்டியர் காலம், சோழப் பேரரசின் காலம் எனக் காலமுறையிலே தமிழர் வரலாற்று நூல்களை அளித்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். இவரின் தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள் என்னும் நூலை விழிப்புணர்வு பெற வேண்டிய ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். வரலாற்று நூல்களில் ‘ஈழம்: தமிழரின் தாயகம்’ என்பது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
சிறந்தபுத்தகங்களுக்கானபரிசுகளும்விருதுகளும்
பேரா.க.ப.அறவாணன், ‘சைனரின் தமிழிலக்கண நன்கொடை’ (1978), ‘தமிழர் பிறந்தகம்’(1986), ‘தமிழர்தம் மறுபக்கம்’(1990), ‘படைப்பாளி+சமுதாயம்= இலக்கியம்’ (1997), என்னும் நூல்களுக்காகத் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
‘கவிதையின் உயிர், உள்ளம், உடல்’ நூலுக்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்(1994), ‘தமிழ்ச் சமுதாய வரலாறு’ நூலுக்குச் சென்னைத் தமிழ்ச்சங்கம் (1996), ‘இலஞ்சம் எனும் நஞ்சு’ நூலுக்குப் பல்மருத்துவர் தெய்வசிகாமணி அறக்கட்டளை (திருச்சி)(2011), ‘தமிழ் மக்கள் வரலாறு (நாயக்கர் காலம்)’ நூலுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு பேரவை(நாகர்கோயில்)(2013) எனத் தமிழமைப்புகளும் இவரது நூற்சிறப்பை உணர்ந்து விருதுகள் வழங்கியுள்ளன.
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? என்னும் நூல், தினத்தந்தியின் நூறாயிரம் உரூபாய்ப் பரிசினைப் பெற்றது.
சிறந்த சிறுகதைக்கான விருதுகளைத் திண்டுக்கல் மொழியியல் நிறுவனமும் திருவாரூர் இயற்றமிழ் அகமும் வழங்கியுள்ளன. சிறந்த கட்டுரைக்கான விருதினைத் திண்டுக்கல் திருவள்ளுவர் மன்றம் வழங்கியுள்ளது.
விருதுகள்
அமெரிக்கன் தன் வரலாற்றாளர் நிறுவனம்(American Biographical Institute) 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது அளித்தது.
1986 இல் அனைத்திந்தியக் கிறித்தவ அமைப்பின் கல்வி நிறுவனம்(புதுதில்லி), சிறந்த பேராசிரியர் விருது அளித்தது.
குன்றக்குடி ஆதினம் வழங்கிய கபிலர் விருது, திருவள்ளுவர் மன்றம்(கோவில்பட்டி) வழங்கிய திருவள்ளுவர் விருது, திருக்குறள் பேரவை(திருச்சி) வழங்கிய தமிழ் ஞாயிறு விருது, முருகாலயம்(சென்னை) வழங்கிய மாவீரன் பூலித்தேவன் விருது, பண்ணைத் தமிழ்ச்சங்கம்(சென்னை) வழங்கிய தமிழறிஞர் விருது, கேம்பிரிட்சு வரலாற்று மையம்(இங்கிலாந்து) வழங்கிய 1998 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது முதலியன இவரது சிறப்பைத் தமிழன்பர்கள்போற்றியதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது நூறாயிரம் உரூபாய், இராசா வயவர் முத்தையா(செட்டியார்) விருது நூறாயிரம் உரூபாய், திரு. சி.பா. ஆதித்தனார் விருது நூறாயிரம் உரூபாய் முதலியன இவர் பெற்ற சிறப்பான விருதுகளாகும்.
பயணம்மேற்கொண்டநாடுகள்
ஆத்திரேலியா(1992), ஆத்திரியா(1984), கனடா(1994,1996,1999,2000), செக்கோசுலோவிக்கியா(1977), தென்மார்க்கு (1984), ஃபிரான்சு(1977, 1978, 1980, 1994, 2000), காம்பியா(1978), செருமனி(1980, 1981, 1984,1993,1994,1996,1999), ஆங்காங்கு(1979), இத்தாலி(1978,1979), சப்பான்(1979), மலேசியா(1979,1994,1996,1997,1998,1999), மொரிசியசு(1996), நைசீரியா(1997), செனகால்(1997-1981), சிங்கப்பூர்(1979,1981,1992,1994,1996,1997,1998,1999,2000), தென் ஆப்பிரிக்கா(1996), இலங்கை(1975,1995), சுவிட்சர்லாந்து(1993), இங்கிலாந்து (1997,1978,1979,1980, 2000), அமெரிக்கா(1979, 1994, 1996, 2000) முதலான 20 நாடுகளுக்கும் மேற்பட்ட அயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மன்பதை நூல் மருத்துவர் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் வழியில் தமிழரிடையே ஏற்பட்டுள்ள அயல் தாக்க நோய்களை அறிந்து தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுத்துத் தமிழராய்த் தலை நிமிர்ந்து வாழ்வோம்!