Monday, March 23, 2020

நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

நானிலம் புகழும்

நாவரசர் ஒளவை நடராசன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ஆரவாரத் துணுக்குகளை உதிர்ப்பவர்களாக உள்ளனர். அவ்வாறில்லாமல், நகைச்சுவையாக, அதே நேரம் அறிவார்ந்த கருத்துகளைப் பேசும் நாவரசர்.  இவரது உரை வளமும் குரல் வளமும் கேட்டவர்களை இவர் பக்கம் பிணைத்துப் புகழ் ஏணியில் இவரை ஏற்றுகின்றன. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் உரை வளம் இவரின் சொல்வளமாக மாறித் தமிழ் உலகை மகிழ்விக்கிறது.
குடும்பம்:   
 தமிழறிஞர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி – உலோகாம்பாள் இணையரின் திருமகனாக சித்திரை 32. 1967 / 24.04.1936 இல் இன்றைய  திருவண்ணாமலை (அன்றைய வடஆர்க்காடு) மாவட்டத்திலுள்ள செய்யாறு என்னும் ஊரில் பிறந்தார். தமக்கை, மூன்று தங்கையர், நான்கு தம்பியர் உடையவர். மனைவி குழந்தை நல மருத்துவர் தாரா நடராசன் அரசின் மருத்துவக் கல்லூரித் தலைமையாளராக( Dean)ப் பணி நிறைவு பெற்றவர். மரு. கண்ணன் நடராசன், முனைவர் அருள் நடராசன், மருத்துவர் பரதன் நடராசன்  என்னும் நன்மக்கள் மூவர் இவ்விணையருக்கு உள்ளனர்.
கல்வி
தமிழில் முதுகலைப் பட்டம்(மதுரை தியாகராசர் கல்லூரி), இளமுனைவர் பட்டம்(சென்னை பச்சையப்பன் கல்லூரி)முனைவர் பட்டம் பெற்றவர். இவர் அளித்துள்ள ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் தலைப்பில் இள முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும்(1958) ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும் இவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் ஆய்வுப் புலமையையும் உணர்த்துவன.
நாநலம்
நாநலம் என்னும் நலனுடைமை இவருக்கு மாணவப்பருவத்திலேயே வாய்த்தது. அதனால் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில்  பல்வேறு கல்லூரிகளுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இளைஞர் கூட்டம் இவரால் ஈர்க்கப்பட்டு இவரை மொய்த்தன. படித்தபின்பு பணியாற்றும் பொழுதும் இவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் இருந்தது. அல்லது இளைஞர்கள் இருந்த இடத்தில் இவர் இருந்தார். அந்தப் பேச்சுத்திறமைதான் இவரைக் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஞ்சிராமச்சந்திரன் முதலானவர்களின் அன்பிற்கு ஆட்படுத்த வைத்தது. இதுவே உரிய காலத்தில் மும்முதல்வர்களால் சிறப்பு மிக்கப் பணிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்புகளை நல்கியது.
பணி
மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பயிற்றுநராக இவரது பணி வாழ்க்கை தொடங்கியது. பின் தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோசி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொழுது மாணாக்கர்கள்பலர் வெளியே செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இவர் வகுப்பு எடுக்கும் பொழுது பிற வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களும் இவர் பாட உரையைக் கேட்க வந்து நெருக்கியடித்து உட்கார்ந்து கொள்வார்களாம். அவ்வாறு பாடங்களையும் நகைச்சுவையாகவும் பிறரை ஈர்க்கும் வகையிலும் விளக்கியுள்ளார்.
அடுத்துப் புதுதில்லியில் அனைத்து இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றி வானலை வழியும் புகழ் பெற்றார். அங்கிருந்து விலகிய பின்னர், காந்தி-இராமலிங்கர் பணி மன்றச் செயலாளராகப் பணியாற்றி அருட்பணிகளையும் தமிழ்ச்சிறப்புகளையும் பரப்புவதில் ஈடுபட்டார். இப்பணி அவருக்கு எண்ணற்ற ஆன்றோர்கள் அறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.
மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க இவர் தமிழகஅரசில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். அதே எண்ணங் கொண்டிருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். பின்னர் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரானார்(1975-84). இந்திய ஆட்சிப்பணித் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணியாற்றும் அரசு செயலர் பணியிடத்தில் அப்போதைய முதல்வர்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன் இவரை அமர்த்தி,  தமிழ் வளர்ச்சி- பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றச் செய்தார்(1984-92). இவருக்கு முன்னரும் பின்னரும் இ.ஆ.ப. அல்லாத எவரும் அரசு செயலராகப் பணியாற்றியதில்லை என்னும் சிறப்பு இவருக்குரியது. அதிகாரப் பகட்டு இல்லாமல் எளிமையாய் யாவருடனும் பழகும் நேர்த்தியும் அடுத்தவர் கருத்துகளுக்குச் செவிமடுத்து அவர்களை மதிக்கும் பண்பும் எந்நாளும் எப்பொழுதும் இவர் அறையில் பலரும் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது.
பின்னர் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதாவினால் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை (1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை) வகித்தார். 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக  இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.
வழிகாட்டி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். உலகின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். 1982-இல் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகள் மூலம் திறம்படப் பணியாற்றித் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இவர் பொறுப்பிலிருந்தும் வாளாவிருக்க வேண்டிய சூழல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக  இருந்த பொழுது ஏற்பட்டது. ஆனால், பிற எல்லா நிலைகளிலும் இவரது சுறுசுறுப்பும் விரிந்து பரந்த அறிவும் தமிழுலகு தழைக்கவும் தமிழன்பர்கள் உயரவும் உதவின என்பதில் ஐயமில்லை.
விருதுகள்
அரசுகளாலும் அமைப்புகளாலும் இவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளன.  அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு
  1. தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது
  2. இந்திய ஒன்றிய அரசின் ‘தாமரைத்திரு’(பத்மசிறீ) விருது(2011)
  3. இலங்கை, கம்பர் கழகத்தின் ‘“தன்னேரில்லாத தமிழ் மகன்’ விருது
  4. தமிழக அரசின் 2009ஆம் ஆண்டிற்கான ‘அறிஞர் அண்ணா ‘விருது
  5. கொழும்புக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் புகழ்’ விருது (2012)
  6. தினத்தந்தி நாளிதழின் ‘சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது. (2014)
நூல்கள்
நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் இவர் ஆற்றியுள்ள தொடக்கவுரைகள், மையக் கருத்துரைகள், சிறப்புரைகள் முதலியன இலக்கியச் சிறப்பு மிக்கன. ஆங்கிலத்திலும், தமிழிலும்  ஆய்வுக் கட்டுரைகளை  எழுதியுள்ளார். ஒளவை நடராசனார்க்கு இருக்கும் அறிவு வளத்திற்கு எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கலாம். இருந்தாலும் இவரது  பணிச்சூழலும் இலக்கியச் சூழலும் அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. எனினும் இவரது சொற்பொழிவுகள் சில நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை வருமாறு:
  1. வாழ்விக்க வந்த வள்ளலார்
  2. பேரறிஞர் அண்ணா
  3. கம்பர் காட்சி
  4. கம்பர் விருந்து
  5. திருப்பாவை விளக்கம்
  6. திருவெம்பாவை விளக்கம்
  7. சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
  8. அருளுக்கு ஔவை சொன்னது
  9. Self Confidence
  10. Saying of Stalwart
  11. Art Panaroma of Tamils
  12. Thirukkovaiyar
மொழிபெயர்ப்புத் திறன்    .
மொழிபெயர்ப்பிலும் சொல்லாக்கங்களிலும் இவரது பணி சிறப்பானதாகும். அரசின் ஆணைய அறிக்கைகள் முதலானவற்றில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் நீண்ட தொடர்களைப் பயன்படுத்திப் படிப்போரை மிரளச் செய்து கொண்டிருந்தனர். அப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்து, எளிய சிறிய சொற்கள் மூலம் மொழிபெயர்ப்புகளை வழங்கித் தமிழின் சிறப்பைப் புரியச் செய்தார். 
பணிப்பாங்கும் பழகும் பண்பும் 
            இவரது செயல் திறனும் சொற்றிறனும்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித் தலைவி செ.செயலலிதா ஆகிய  மூன்று முதல்வர்களின் அன்பிற்கு இவரை ஆட்படச் செய்தன.
இவர் உயர்பணிகளில் இருந்த பொழுதிலும் இவரை நாடி இருபால் இளைஞர்களும் குழுமி இவரின் வழிகாட்டுதல்களைப் பெற்றனர். அதனால் இளம் பேச்சாளர்கள் பலரை உருவாக்கினார். அத்தகையோர்தான் பிற்காலத்தில் – அஃதாவது இக்காலத்தில் – மேடைப் பேச்சாளர்களாகவும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவும் விளங்குகின்றனர்.  இன்றைக்கு மேடையில் முழங்கும் பலரும் இவரது வழிகாட்டுதலால் உருவானவர்களே!
   எந்தப் பணியில் இருந்தாலும் கூட்டங்களுக்கான அழைப்பை ஏற்றுச் சொற்பொழிவாற்றச் செல்லத் தவறுவதில்லை. நகைச்சுவையுடனும் புதிய புதிய தகவல்களுடனும்  இலக்கியச் சுவையுடனும் ஆற்றும் இவரது உரைகள் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பாரையும் மகிழ்விக்கின்றன. பட்டிமன்றங்களில் இவர் பாங்குடன் ஆற்றும் உரைகள் துணுக்குத் தோரணங்களாக அமையாமல் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் அமைந்தன. எனவே, பொதுமக்களிடையே இவருக்கென ஓர் அன்பர் கூட்டம் இன்றும் இருக்கிறது.
வாழ்க வாழ்கவே
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கத்தையே வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படும்,  
தந்தையார் உரைவேந்தர் வழியில் உரையாளராக உலகத்தமிழர்கள் போற்ற வாழும், 
நாவரசர் ஒளவை நடரசானார்  நானிறலம் சிறக்க நூறாண்டுகள் கடந்தும் நற்றமிழ்த் தொண்டாற்றி வாழ்வாராக!
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, November 16, 2019

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது




உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்

தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து இன்று – நவம்பர் 17 – உலகத்தமிழ்நாள் கொண்டாடுகின்றன. பாராட்டிற்குரிய நிகழ்வாக இது உள்ளது. தாய்மொழி நாள் என ஒன்று யுனெசுகோ அறிவிப்பிற்கிணங்கக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த நாளில் இந்திய அரசு சமசுகிருத நாளைத்தான் கொண்டாடுகிறது. தமிழையும் பிற மொழிகளையும் புறக்கணிக்கிறது. ஆனால், உலகத்தமிழ் நாள் என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட முடியும். தமிழ்நாட்டுச் சூழலை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் தமிழர்கள் வாழும் அந்தந்தப் பகுதிகளுக்குரிய சூழலை அடிப்படையாகக் கொண்டு, கதை, கவிதை, பிற படைப்புகள் வர இந்த நாள் உந்துதலாக இருக்க வேண்டும். தமிழையும் தமிழரையும் மேம்படுத்த இந்தநாளில் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்த வேண்டும்.
தமிழறிஞர்களையும்தமிழ்க்கலைஞர்களையும் போற்றும் நாளாக இந்த நாள் இருக்க வேண்டும். எனவே, உலகத்தமிழ்நாளை வாழ்த்துவோம்!
இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியராகவும் நக்கீரராகவும் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளே நவம்பர் 17. தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் களப்போராளியாகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார் மட்டுமே! எனவே, அவரது பிறந்த நாள் உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடப்படுவது பொருத்தத்திற்கும் சிறப்பிற்கும் உரியது.
தந்தை பெரியார் அவருக்குத் ‘தமிழர் தளபதி’ எனப்பட்டம் சூட்டி மகிழுந்தில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தி மகிழ்ந்தார். தமிழக அரசின் காவல் துறை அவரை ‘இந்திஎதிர்ப்புப் போரின் படைத் தளபதி’ என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளியது. இரண்டுமே அவரின் பணிக்கான அங்கீகாரமே! 1967 இல் ஆட்சியில் இறந்து இறங்கிய காங்கிரசு இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர். அந்த மொழிப்போரைத் தலைமை தாங்கி நடத்தியவர் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் என்னும் பொழுது 1967 முதல் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருப்பதற்குக் காரணம் அவரின் மொழிப்போர் உழைப்பே எனலாம்.
இலக்குவனார், திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் மாணாக்கராக இருக்கும் பொழுதே தொல்காப்பியத்தை முழுமையாகக் கற்றார். அக்கல்லூரியில் மொழியியல் குறித்து ஆங்கில நூல்கள் மிகுதியாக இருந்தன. அனைத்தையும் நன்கு கற்றார். கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் பல முறை படித்து அதன் நிறைகுறைகளை அறிந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கல்லூரி முதல்வர் பி.சா.சு. தொல்காப்பியத்தை நடத்தும் பொழுது ஆரியத் தழுவலாகத் திரித்துக் கூறும் பொழுதெல்லாம் உடனுக்குடன் மறுத்துத் தொல்காப்பியம் மூலநூலே என்பதை மெய்ப்பித்தார். இதனால் உடன்படித்த மாணவர்களின் நாயகனாகத் திகழ்ந்தார். அப்பொழுது ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்து உலகெங்கும் பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார்.  அதற்கேற்பப் பின்னாளில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் திறனாய்வுரையும் எழுதி முனைவர் பட்டமும் பெற்றார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்து வெளிநாடு சென்ற பொழுது சென்ற இடங்களில் எல்லாம் கொடுத்து வந்தார்.
படிக்கும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியம் எழுதினார். அதற்குப் பின்னரும் இலக்குவனார் ‘துரத்தப்பட்டேன்’ முதலான பல்வேறு தனித்தமிழ்ப் பாடல்களை எழுதினார். இது குறித்துக் கவிஞர் சுரதா, “பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்காப்புப் போரில் களத்தில் நின்றமையால் தமிழுலகம் நோபள் பரிசுபெறும் தகுதியுடைய கவிஞரை இழந்து விட்டது” என்று கூறியுள்ளார். தமிழ்க்காப்புப்போரில் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்குவனார் செலவழித்தமையால் அவரது படைப்புப்பணி குறைந்தது. எனினும் அவர் முப்பதிற்கும் மேற்பட்ட  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, அமைச்சர் யார்?, திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம், வள்ளுவர் வகுத்த அரசியல் முதலான தமிழ் நூல்களையும்   Origin and Growth of Tamil, The Making of Tamil Grammar, A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians, Semantemes and Morphemes in Tamil Langugage, Tamil Language. Tholkappiam in English with Critical Studies முதலான ஆங்கில நூல்களையும் எழுதித் தமிழின் சிறப்புகளை உலகறியச் செய்தார்.
அறியாமையாலும் வஞ்சகத்தாலும் ஆயிரக்கணக்கான தமிழ் இலக்கியங்களை ஆடிப்பெருக்கின் பொழுது ஆற்றிலே தொலைத்தனர் நம் முன்னோர். அவ்வாறு சங்க இலக்கியங்களும் அழிந்து போயிருக்கும். ஆனால் அதனைக் காத்துப் பரப்பிய பெருமைக்குரியவர் இலக்குவனார். திருநெல்வேலியில் ‘வட்டத் தொட்டி’ என்னும் குழுவினர் நடத்திய ஒரு கூட்டத்தில் “சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்” என்னும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஆற்றிலே தமிழ் இலக்கியங்களை அழித்த மூடர்கள் கடலிலும் அழிக்க முன் வந்தனர். சங்க இலக்கியம் என்றென்றும் வழிகாட்டும் மக்கள் இலக்கியம்  என்பதை உணர்த்தி அதனைத் தடுத்தவர் இலக்குவனார். மக்களிடம் இலக்கியங்களைக் கொண்டு செல்லாமையால்தான் இந்த அவலம் நேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்ட இலக்குவனார் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். அதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்புகளை எளிய நடையில் மக்களிடையே பரப்பினார். “சங்கத்தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்” என்று மக்களை முழங்கச் செய்தார். எனவே, சங்கத்தமிழைச் சுவைத்த தமிழ் மக்கள் அதனைக் காக்கவும் போற்றவும் தொடங்கினர். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ்ப்புலவர்களுக்கு விழா எடுத்தார். சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கச் செய்து வளரும் தலைமுறையினர் அதன் சிறப்புகளை உணரச்செய்தார். தாம், சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியதுடன் நில்லாது, பிற அறிஞர்களையும் தொடர்பு கொண்டு அவ்வாறு எழுதத் தூண்டுதலாக அமைந்தார்.
சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு,Dravidian Federation, Kural Neri     முதலான தமிழ், ஆங்கில இதழ்கள் மூலம் பொது மக்களிடையேயும் தமிழ் நெறிகள் பரவக் காரணமாக இருந்த இதழியல் அறிஞர் இலக்குவனார்.
தந்தை பெரியார், தமிழ் இலக்கியங்களும் தமிழ்ப்புலவர்களும் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதாக எண்ணிக் கொண்டிருந்தார். அந்த எண்ணத்தைப் போக்கியவர்களில் இலக்குவனாரும் முதன்மை இடத்தில் உள்ளார். முதலில் சிலப்பதிகாரத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்த பெரியார், இலக்குவனாரின் சிலப்பதிகாரச் சிறப்புரைகளை வெளியிட்டார். இலக்குவனாரின் திருக்குறள் உரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டார். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழம் மூலம் வாரந்தோறும் திருக்கறள் சொற்பொழிவு ஆற்றி வந்தார் இலக்குவனார். இது குறித்துப் பெரியார்,  “தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும். இராமாயணம். பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செதுவந்துள்ளமை அறிவோம். ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்”. (விடுதலை, 04.04.1952) எனக் குறிப்பிட்டார்.
அது மட்டுமல்ல திராவிடர் கழக மாநாடுகளுடன் திருக்குறள் மாநாடுகளும் நடத்தச் செய்தார். திருக்குறள் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த பெரியாரையே திருக்குறள் மாநாடு நடத்தச் செய்த பெருமைக்குரியவர் இலக்குவனார்.
இலக்குவனாரை இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனக் கூறுவதன் காரணம் தமிழுக்கு எதிராக யார் கூறினாலும், அவர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவரா? உயர் செல்வரா? என்று பார்க்காமல் உடனே துணிந்து கண்டிப்பதுதான். எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். 1952இல் தமிழக ஆளுநராக சிரீ பிரகாசா என்பவர் இருந்தார். அவர் கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். உடனே இலக்குவனார் வெகுண்டெழுந்து அவரைக் கண்டித்தார். மேலும்,
“இனிமேலாவது, விகடம் என்றெண்ணி அறிவற்ற இந்த வீண் மொழிகளைத் திரு சிரீபிரகாசா விளம்பாமலிருக்கட்டும். வயது முதிர்ச்சியின் காரணமாக அறிவு நிலை தடுமாறி அவர் இப்படி உளறினாலும் அதனைக் கேட்டுத் தம் தன்மானத்தையும் மறந்து, அங்குக் கூடியிருப்பவர்கள் இருக்க வேண்டா. அதற்கு மாறாக ஆரியப் பண்பாட்டிலே ஊறித்திளைத்து, அவர்கள் குண இயல்புகளைக் கூறும் திரு சிரீ பிரகாசாவுக்கு மற்ற பெண்களின் உயர்ந்த பண்பாடுகளை எடுத்தோதி அவரைத் திருத்துவதுதான் அவர்கள் கடமை. உங்கள் தீர்ப்பென்ன?” (திராவிடக் கூட்டரசு 31.10.52  மலர் 1 இதழ் 7) என உரைத்தார். தமிழ்ப்பண்பாட்டைப் பழித்துக் கூறியவர் ஆளுநராக இருந்தாலும் எதிர்ப்பைக்காட்டாத அஞ்சா நெஞ்சர் அவர்.
இன்றைய தமிழ் எழுச்சி ஊர்வலங்களுக்கு எல்லாம் வித்திட்டவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரே ஆவார். தாம் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் வீதிக்கு வந்து மக்களை ஒன்று திரட்டித் தமிழ்க்காப்பு ஊர்வலங்களை நடத்தி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினார். அவற்றில் ஓர் ஊர்வலமான  25.8.63 இல் நடைபெற்ற தமிழ்க்காப்புக் கழக ஆண்டுவிழா ஊர்வலம் குறித்துப் புலவர்மணி இரா.இளங்குமரன் கூறியதைப் பார்ப்போம்(செந்தமிழ்க்காவர் சி.இலக்குவனார்: பக்கம் 48):
 “தமிழே உணர்வான ஊர்வலம்; தமிழே முழங்கிய ஊர்வலம்; தமிழுக்காகவும் ஒரு பெரும்படை உண்டு என்பதை மெய்ப்பித்த ஊர்வலம்! கட்சிகளின் ஊர்வலமே கண்ட பொதுமக்களுக்குப் புதுப்பொலிவான – எழுச்சிமிக்க இளையரும் முதியரும் நடையிட்டு வந்த ஊர்வலம்! தெருத்தோறும் கூடியும்,மாடி தோறும் ஏறியும் பொது மக்களும் முழக்கமிட நிகழ்ந்த ஊர்வலம்!”
இவ்வாறு அறிஞர்களிடையே இருந்த தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர். தமிழ் படித்தவர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை மக்களிடம் உண்டாக்கியவர். தமிழர்களின் தேசிய மொழி தமிழே என அறிவுறுத்தியவர். இந்தியத் துணைக்கண்டம், மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என வலியுறுத்தியவர். தமிழ் காக்க இரு முறை சிறை சென்ற பேராசிரியர். தனித்தமிழை வலியுறுத்தும் தமிழ்க்காப்பு உணர்வை மாணவர்களிடமும் மக்களிடமும் ஊட்டியவர். அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குப் பல்வேறு பன்முகச் சிறப்புகள் கொண்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த நாளை உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடுவது மிகப் பொருத்தமே!
உலகெங்கும் உலகத்தமிழ் நாள் கொண்டாடும் காலம் விரைவில் வரட்டும்! தமிழ்ப்போராளி இலக்குவனாரின் பின் வரும் முழக்கத்தை நடைமுறைப்படுத்த உலகத் தமிழ் நாள் உதவட்டும்!
தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
தரணியோர் மதித்திடச் செய்குவோம்
பூ.(இ)ரியாசு அகமது
நன்றி : தினச்செய்தி 17.11.2019 (விரிவு)

Tuesday, September 17, 2019

தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற 

அறிவுச்சுடர் சோமசுந்தரர்

   கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் பலரும் பழமைக்குப் பாலமாகத் திகழ்ந்து அளப்பரும்  தமிழ்த்தொண்டாற்றி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்களவர், சைவச் சித்தாந்தப் பெரும்புலவர், வைதிக சைவச் சித்தாந்தச் சண்ட மாருதம், பரசமயக்கோளரி என்று பல  பட்டங்கள் பெற்ற சோமசுந்தர(நாயக)ர் ஆவார்.
  சோமசுந்தர(நாயக)ர், இராமலிங்க நாயகர் – அம்மணி அம்மையார் ஆகிய இல்லற இணையரின் மூத்தமகனாக ஆவணி 02, 1877 / ஆகத்து 16, 1846 அன்று சென்னையில் பிறந்தவர். இவரி்ன் தந்தை சைவ நெறியினராகவும் தாய் வைணவராகவும் விளங்கினர். தந்தையார் தம் மனைவியின் விருப்பத்திற்கிணங்க அனைவருக்கும் வைணவப் பெயர்களையே சூட்டியுள்ளார். தம்பியர் திருவேங்கடசாமி(நாயகர்), நாதமுனி(நாயகர்), வரதராச(நாயக)ர், தங்கை தாயாரம்மை ஆவர். அதன்படி இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்பதாகும் ஆனால், இவர் அச்சுதானந்த சுவாமிகளிடம் சேர்ந்து சைவநெறியாளராக மாறிய பொழுது சோமசுந்தரம் எனப் பெயர் சூட்டிக் கொண்டார். தமிழ்ப்பழங்குழுவினரே நாயகர் என அழைக்கப்பெற்றனர் என்று, இவரைத் தமிழ்க்குடியினர் என மறைமலையடிகள் விளக்கியுள்ளார்.
    சோமசுந்தர(நாயக)ர்  பள்ளியில் தெலுங்கும் ஆங்கிலமும்  கற்றார்; புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.
  சோமசுந்தர(நாயக)ர் சிவஞானம்  என்னும் பெண்ணின் நல்லாளை மணம் புரிந்து இல்லறம் நடத்தினார். இவர்களுக்கு, சகதாம்பாள், விசாலாட்சி, உலோகாம்பாள் என மூன்று பெண்மக்களும் சிவபாதம் என்னும் மகனும் பிறந்தனர்.
  சோமசுந்தர(நாயக)ர் பிள்ளைமைப் பருவத்தில் நன்னூல், யாப்பருங்கலக்காரிகை,   முதலான இலக்கண நூல்கள், திருக்குறள், நாலடியார், முதலான அறநூல்கள், பெரியுராணம், கந்தபுராணம்,  திருவிளையாடல் புராணம்,   கம்பராமாயணம்,  வில்லிபுத்தூரார் பாரதம், முதலான புராண நூல்கள், தேவாரம், திருவாசகம் முதலான 11 திருமுறைகள், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான 14 சித்தாந்த நூல்கள், ஒழிவிலொடுக்கம், வள்ளலார் சாத்திரம், திருப்போரூர் சன்னதி / சந்நிதி முறை முதலான எண்ணற்ற நூல்களை நன்கு கற்றுப் புலமை பெற்றார்; இளமைக்காலத்தில்,  கைவல்யம், ஞானவாசிட்டம்,  பிரவோத சந்திரதோயம்,  பிரபுலிங்கலீலை முதலான மாயாவாத நூல்களையும் கற்றார்; அடுத்து நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தினையும் இதன்உரை நூல்களையும்  ஆராய்ந்து கற்றார்.
   சோமசுந்தர(நாயக)ர் தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கராகப் பணியாற்றினார். ஆனால், உயிர்க்கொலை புரிந்து தோலை எடுத்து விற்பனைபுரியும் கொலைக்கூடத்தில் பணியாற்றவிருப்பமின்றி  வேலையை விட்டார்.  பின்னர் அவர், சென்னை நகராண்மைக்கழகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்து பணியாற்றினார். ஆனால், 1881 இல் திருவொற்றியூரில் நடைபெறும் மகிழடி விழாவிற்குச்செல்ல அரைநாள் விடுப்பு கேட்டதற்கு, அது புல்லிய காரணமென்றுகூறி விடுப்பு மறுக்கப்பட்டது. “பொய்யான காரணங்களுக்கு விடுப்பு தருவோர் மெய்யான காரணத்திற்கு அரைநாள் விடுப்பு மறுக்கிறார்கள்” எனக் கூறி வேலையைவிட்டு நீங்கி விட்டார். 
 பிற சமய நெறிகளில் ஆராய்ச்சியறிவு பெற்றுத் தாம் கொண்டிருந்த  சைவநெறிப் புலமையால், நாடெங்கும் சைவநெறிச் சொற்பொழிவுகள் ஆற்றி இறைநெறித் தொண்டராகத் திகழ்ந்துள்ளார்கள். இவரின் சமற்கிருதப் புலமையால், பிராமணர்களும் இவரைப் போற்றி மதித்தார்கள். தொன்மங்களில் சொல்லப்பட்ட இழிவான கட்டுக் கதைகளை மறுத்தும் அயலாரால் சிவமதத்தில் நுழைக்கப்பட்ட கொள்கைக் குழப்பங்களை அகற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றியமையால் முற்போக்காளர்களும் இவரது உரையை விரும்பிக் கேட்டனர். இவரது உரைச்சிறப்பை யறிந்த விவேகானந்தர் 1900 இல் சென்னை வந்திருந்தபொழுது இவரின் ‘சைவ சித்தாந்த’  உரையைக்கேட்டு மகிழ்ந்துள்ளார். பல்லாயிரம் செற்பொழிவுகள் நிகழ்த்திய பெரியார் இவருக்கு முன்னரும் பின்னரும் எவருமில்லை என்னும் சிறப்பிற்குரியவர் இப்பெருந்தகையார்.
 இவரது நூல்கள் பெரும்பாலும் சமற்கிருதக் கலப்பாகவே இருக்கும். ஆனால், சொற்பொழிவுகள் நல்ல தமிழில் அமைந்திருக்கும். நல்ல  தமிழில் சொற்பொழிவாற்றியவர் நல்ல தமிழில்  நூல்களை எழுதாமல் போனது தமிழுலகிற்கு இழப்பே ஆகும்.
“சோமசுந்தரத்தின் மாணவர் மறைமலையடிகள் பிற்காலத்தில் தனித் தமிழில் ஈடுபாடு கொண்டதால் சோமசுந்தரமும் தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார்” என்று பிறர் குறிப்பிடுவது தவறாகும்.  1916 இல் தனித்தமிழ்இயக்கம் அமையும் சூழல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கு முன்னர் இருந்தே மறைமலையடிகள்  தனித்தமிழ் ஈடுபாட்டில் கருத்து செலுத்திவந்தார். எனவே, பிற்காலத்தில்தான் தனித்தமிழ்  ஈடுபாடு மறைமலையடிகளுக்கு வந்தது என்பது தவறாகும். எனவே, அதனால் தனிததமிழில் பேசவும் எழுதவும் சோமசுந்தரர்  ஈடுபாடு கொண்டார் என்பதும் தவறாகும்.
  இது குறித்து மறைமலையடிகள் விளக்கும் பொழுது அக்காலத்தில்,  சமற்கிருதப் புலவர்கள் தமிழ்நெறிக்கு மாறாக எழுதி வந்தமையால், சமயநூல் படைப்பாளர்கள்,  அவற்றை மறுப்பதற்காக இத்தகைய நடையைத் தேர்ந்தெடுத்திருந்திருக்கிறார்கள் என்கிறார். எனினும்,
“இங்ஙனமாக வடநூல் தமிழ்நூல்களில் அரிதின்  உணர்தற்பாலனவாய்க் கிடந்த சமய நுண்பொருள்களையெல்லாம் எண்ணிறந்த சொற்பொழிவுகளானும் பற்பல நூல்களானும் வெளிப்படுத்தி, இத்தென்னாட்டின்கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடரென உலவித் தமிழ்மக்கள் உள்ளத்துப் பரவியஅறியாமை இருளைப் போக்கி, அவர்க்கு அறிவொளி காட்டிய சித்தாந்த ஆசிரியரான சோமசுந்தரநாயகரவர்கள் தாம்அரிது முயன்றெழுதிய பல நூல்களையுந் தனிச் செந்தமிழ் உரை நடையில் எழுதியிருந்தனர்களாயின் அது தமிழுக்கும் அவை தமிழ்மக்கட்கும் விலையிடுதற்கரிய முழுமணிகள் நிறைந்த கருவூலமாய்ச் சிறந்து திகழா நிற்கும்”  என்றும் மறைமலையடிகள்  கூறுகிறார்.
 அதே நேரம்,  “அவர்கள் இயற்றிய பல தமிழ்ச்செய்யுட்களானும் ஆசார்யப் பிரபாவம் என்னும் தமதரிய  நூலின் பல இடங்களில் அவர்கள்  செந்தமிழ்ச் சுவை பெருகவெழுதிய உரைப்பகுதிகளானும்   இவர் தனித்தமிழில் எழுதும் வல்லமை பெற்றவர் என்பது நன்கறியப்படும்” என்கிறார் மறைமலையடிகள் .
 மேலும் இவரது 39 அகவைக்குப் பின்னரே தனித்தமிழ்ப் பேரிலக்கணமான தொல்காப்பியமும் தனித்தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலியனவும் வந்தமையால் அவற்றைப் படிக்கும் வாய்ப்பு பெறாமையும் தனித்தமிழ் நடை இல்லாமைக்குக் காரணம் என்கிறார் மறைமலையடிகள்.
“நாயகரவர்களின் அரிய பெரிய ஆராய்ச்சியுரைகள் தனிச்செந்தமிழ் உரைநடையில் எழுதப்பட்டிருக்குமாயின் அவை தமிழுக்குப் பெரியதோர் அறிவுக்களஞ்சியமாய் இருந்திருக்கும். ஆனால், அவை வடசொற்கலப்பு மிகுதியும் உடைய உரைநடையில் அமைந்தததே தமிழ்மொழிக்கு ஒரு பேரிழப்பாயிற்று.”
 என்றும் மறைமலையடிகள் தெளிவாகக்  கூறுவதால், சமயம் சார்ந்த நூல்களில் சமற்கிருதக் கலப்பு நடையே இவரின் நடையாக இருந்தது எனலாம்.
  செந்தமிழ்நடையில் பெரு விருப்பு கொண்டிருந்த  மறைமலையடிகள் தம் ஆசிரியர்போல் சமற்கிருதம் கலந்தும் சில நூல்கள் எழுதினார். தம் ஆசிரியரிடம் எவ்வாறு எழுத வேண்டும் என்று கேட்டதற்குச் சோமசுந்தர(நாயக)ர், “நீ என் நடையைப் பின்பற்ற  வேண்டா. உன் செந்தமிழ்நடை இனிமையாக உள்ளது. அதையே பின்பற்றுக” எனக் கூறி மறைமலையடிகளின் தமிழ்நடைக்கு ஊக்கமளித்துள்ளார்.
நூல்கள்:
 வேதசமாசம், பிரம்மசமாசம்  ஆகிய வழியில், உருவவழிபாடு கூடாதென்று வெளிவந்த நூலொன்ற‌ை மறுத்து 22 ஆம் அகவையில் எழுதிய  வேதபாஃக்யசமசகண்டநம  என்பதே இவரது முதல் நூலாகும்.
  சோமசுந்தர(நாயக)ருக்கும் மறைமலையடிகளுக்கும் இடையே ஆசிரியர் மாணவர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டுத் தந்தை-மகன் உறவுபோல் பிணைப்பு இருந்தது. சோமசுந்தர(நாயக)ர் மாசி 11, 1932 / பிப்.22, 1901 அன்று மறைந்தபோது மறைமலை யடிகள் ‘சோமசுந்தரக் காஞ்சி‘யைப் பாடினார். மேலும் ‘சோமசுந்தரக் காஞ்சியாக்கம்,  ‘சோமசுந்தர நாயகர் வரலாறு‘ என்னும் நூல்களையும் மறைமலையடிகள் எழுதினார்.
வான்மதி மீனினநீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ
   மல்லலங் கற்பமரஞ் சிவம்வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ
நான்முக னான்மறையுட் பொருள்கூற  நலத்தக வந்ததுவோ
  நல்லகல்லாலமர் நம்பர் கைகாட்டுரை நாட்டவெ ழுந்ததுவோ
மான்மக ணாமகடூ மகள்கூடி வளந்தர வந்ததுவோ
   மாதவவாழ் வொடுமில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவே
சூன்முதிர் வண்பயனூன் முறைதந்து சுரந்திமட வந்ததுவோ
   சோமசுந்தர னெனூநாம மொடிங்கு நீ தோன்றிய தெங்குருவே
நாயினிழிந் தவெம்புன்மை களைந்து நலந்தர வந்தனையோ
  நல்லது தீயது நன்றுபகுத்து நவின்றிடவந்தனையோ
தாயினுமென் னுயர்தந்தை யினும்முயர் தன்மையில் வந்தனையோ
  தண்டமிழிற் படுவண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ
காயினுமல் லதுவப்பினு  மன்பது காட்டிட வந்தனையோ
  கன்மனமி யாவுமொர்நன் மனமாயெமைக் காத்திட வந்தனையோ
என மறைமலையடிகள் சோமசுந்தரக் காஞ்சியில் தன் ஆசான் சோமசுந்தர(நாயக)ர் குறித்துக்  கூறியுள்ளமை சோமசுந்தரரின் சிறப்பையும் இருவர்கிடையேயிருந்த உறவையும் தெள்ளிதின் விளக்குகின்றது.
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி18092019

Monday, September 02, 2019

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார்

தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் தனித்தமிழ் உணர்வை ஊட்டிப் பரப்பிய அறிஞர்கள் பலர் உள்ளனர். ஆசிரியப் பணி மூலமும் இயக்கங்கள் மூலமும் பரப்புரை மூலமும் படைப்புகள் மூலமும் இதழ்கள் மூலமும்  விழாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் எனப் பலவகைகளில் தனித்தமிழ் பரப்பித் தூய தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார்[தோற்றம்:  கார்த்திகை 01,  தி.பி.1940(17.11.1909); மறைவு: ஆவணி 18, தி.பி.2004 (03.09.1973)]  மட்டுமே!
அவருக்கு வழங்கிய பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் நூற்றுக்கு மேற்பட்டன.  அவற்றுள், இலக்கணச் செம்மல், சங்கத்தமிழ் வளர்த்த சான்றோர், செந்தமிழ்மாமணி, செந்தமிழ் நலம் பேணும் செல்வர், தமிழ் ஞாயிறு, தொல்காப்பியச்செல்வர், முத்தமிழ்க்காவலர், தமிழ் மொழியின் தனிச்செல்வர், தமிழ்க் கொண்டல், தமிழ்த்தாய் முதலிய பட்டங்கள் அவரின் பிறமொழிக் கலப்பில்லாத செந்தமிழ்ப்புலமையையும் அவற்றை மக்களிடையே கொண்டு சென்ற பரப்புரைகளையும் உணர்த்துவன.
தன்மானத்தமிழ் உணர்வு ஆசிரியர்களின்  மாணாக்கராகப் பள்ளியில் இவர் படித்தது இவரின் கிடைத்தற்கரிய பேறு என்று சொல்ல வேண்டும். இவர்களால் பள்ளி வாழ்க்கையிலேயே தூயதமிழ் உணர்வு இவரிடம் முளைவிட்டுப் பரவலாயிற்று. பள்ளியில் பாராட்டு விழா, வழியனுப்பு விழா முதலான விழாக்கள் நடைபெறும்பொழுது நல்ல தமிழில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.
புலவர் கல்லூரி மாணாக்கனாக இருந்த பொழுது உடன் படித்த நண்பர்களை இணைத்துக் கொண்டு விடுமுறைகளில் தூயதமிழ்ப் பரப்புரை மேற்கொண்டார். இளம்புலவர் வகுப்பில் படிக்கும்பொழுது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்க் குறும்பாவியத்தை எழுதினார். படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப்பாவலாகத் திகழ்ந்து தூயதமிழ் வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
வகுப்பில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி.சா.சுப்பிரமணிய(சாத்திரியார்)தொல்காப்பியத்தின் தொன்மையைச் சமசுகிருத நூல்களுக்குப் பின்னராகக் கற்பித்தார். தமிழ்ச்சொற்களின் மூலமாகச் சமசுகிருதச் சொற்களைக் காட்டினார். தூயதமிழ்க்காப்பு என்பது பிற மொழிச்சொற்களை அகற்றி நல்ல நடையைப் பேணுவது மட்டுமல்ல. தமிழின் மீது திணிக்கப்பட்ட அயல்கருத்துக் கறைகளைப் போக்குவதும்தான் என்பதே இலக்குவனாரின் இலக்கு. எனவே, அவற்றை உடனுக்குடன் ஆதாரங்களுடன் மறுத்தார். இதன்மூலம் உடன் பயில்வோருக்கும் தமிழ்க்காப்பு உணர்வு வரலாயிற்று.
தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து முதல்வராகப் பணி நிறைவு பெற்றது வரை தூயதமிழை வளர்க்கும் பணிகளிலேயே ஈடுபட்டார். வருகையின் பொழுது “Yes Sir”, “Present Sir”  என்றெல்லாம் சொல்வதற்கு முற்றுப்புள்ளி இட்டார். “உள்ளேன் ஐயா” எனச் சொல்ல வைத்தார்.  பின்னர் “உள்ளேன் ஐயா” என்பது தமிழ்நாடு முழுவதும் பரவியது.  விளையாட்டிலும் அனைவரும் எண்களைத் தமிழில் சொல்லவும் ‘Love all’ என்று சொல்லாமல் ‘அன்பே கடவுள்’ என்று சொல்லவும் வைத்தார்.  வகுப்பில் பிற சொற்கள் கலப்பில்லாமல் நல்ல தமிழிலேயே பேசவேண்டும் என்ற உணர்வை விதைத்தார். அப்படி யாரும் தவறுதலாகப் பிற மொழிச்சொல்லைப் பயன்படுத்தினால், “ஐயா, நம் வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமா ஐயா. அதற்காகவா நான் இத்தனை பாடுபடுகிறேன் ஐயா” என வருந்தி உரைப்பார்.
பேராசிரியர் இலக்குவனார் “இனிய எளிய தமிழைப் பயன்படுத்த வேண்டும். அதுவே தமிழ் வளரும் வழி.” என்னும் நோக்கம் கொண்டவர். எனவேதான் சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு முதலான திங்களிதழ், திங்களிருமுறை இதழ்கள், நாளிதழ் எனப் பலவகைகளிலும் இதழ்கள் மூலம் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு சேர்த்து மக்களின் அறிஞராகத் திகழ்ந்து தூய தமிழைப் பரப்பினார். ‘Dravidian Federation’, ‘Kural Neri’ ஆகிய ஆங்கில இதழ்கள் நடத்தி அவற்றின் மூலம் தூய தமிழ்ப்பண்பாட்டையும் தூய தமிழ் நெறியையும் தமிழ் அறியாதவர்க்கு உணர்த்தினார்.
இவர் பாடங்கள் நடத்தும் பொழுது தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்கள், தமிழ்ச்சொற்களின் தொன்மை, தமிழ்ச்சொற்களில் இருந்து உருவான சமசுகிருதச் சொற்களை மூலச்சொற்களாகக் காட்டும் அறியாமை ஆகியவற்றை விளக்கினார். “தமிழைச் சிதைக்கும் அயற்சொற்களை அகற்றுவதும் இனி அயற்சொற்கள் நுழையாமல் தடுப்பதுமே தமிழாசிரியர் கடமை” என்ற அவர் தாமும் அவற்றைப் பின்பற்றினார். புலவர் விழாக்களையும் இலக்கிய விழாக்களையும் நடத்தித் தூயதமிழ் உணர்வுகளை மாணாக்கர்களிடையே பரப்பினார். தனிப்பட்ட வகுப்புகள் நடத்திப் பொதுமக்களும் தமிழ்ப்புலவராக வழி வகுத்தார். மக்களிடையேயும் தூய தமிழ் உணர்வைப் பரப்பினார். மக்கள் பெயர்களைத் தமிழில் சூட்டவும் கடைப்பெயர்களைத் தமிழில் இடவும் ஊர்வலங்கள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார். தமிழுக்காக ஊர்வலம் நடத்துவதில் இவரே முன்னோடி! தனித்தமிழ்க்காப்புத் தலைவராகப் பன்முகச்சிறப்புடன் திகழ்ந்து  தூயதமிழ் பரப்பியவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.
தூயதமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நாமும் மொழித்தூய்மை பேணுவோம்! தமிழின் புகழை நிலைக்கச் செய்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 03.09.2019