Sunday, September 10, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என்சுயசரிதை’ 13 : வழக்குரைஞராகவேலைபார்த்தது 2/2 – தொடர்ச்சி)

என் சுயசரிதை

7. முதிர் பருவம்

நான் எனது 51-ஆவது வயதில் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் முதன்மை மாநில நடுவராக(C.P.M.) வேலை பார்த்தேன். மேற்கண்டபடி நீதிபதியாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன்.

நான் நீதிபதியாக முதல் நாள் உட்கார்ந்தபோது வழக்குரைஞர்களின் தரப்பாக காலஞ்சென்ற சீமான் சேசாச்சாரியார் அவர்கள் என்னை வரவேற்றுச் சில வார்த்தைகள் பேசியபோது அதற்கு நான் பதில் சொன்னபோது “நான் நீதிபதி வேலை நடத்துங்கால் மனிதர் எவருக்கும் பயப்படாது தெய்வம் ஒன்றிற்கே பயந்து நடப்பேன்” என்று உரைத்தது ஞாபகமிருக்கிறது. அதன்படி தினம் நான் நிதிமன்றத்திற்குப் போய் என் நாற்காலியில் உட்காரு முன் நியாயப்படி விசாரித்துத் தீர்மானம் கொடுக்க எனக்குப் புத்தியையும் மன உறுதியையும் கொடுக்கும்படியாக ஈசனைத் தொழுத பிறகே உட்காருவேன். சாதாரணமாக 25 வருடங்களுக்கு மேல் சிறுவழக்கு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வியவகாரங்கள் நடத்திய படியால் இந் நீதிமன்றத்தில் நீதிபதி வேலை பார்ப்பது எனக்குச் சுலபமாக இருந்தது.

சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் சில விசயங்கள் எழுத விரும்புகிறேன். என் தமையனார் 1894-ஆம் வருசம் வக்கீலாக வழக்கு நடத்திய போது இந்தச் சின்ன நீதிமன்றத்தில் மாத்திரம் 32 ஆயிரம் வழக்குகளுக்குக் குறையாமலிருந்தன! அது குறைந்து கொண்டே வந்து. நான் 1898-ஆம் வருசம் வழக்குரைஞரானபோது ஏறத்தாழ 25 ஆயிரம் வழக்குகள் வருடத்திற்குத் தீர்மானிக்கப்பட்டன. நான் நீதிபதியான போது ஏறத்தாழ 20 ஆயிரம் வழக்குகள் இருந்தன. வருடம் ஒன்றிற்குத், தற்காலம் 5 அல்லது 6 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் இல்லை.

நீதிபதியான ஒரு வாரத்திற்கெல்லாம் வழக்குகளை, சீக்கிரம் முடிக்கும் வழியைக் கற்றுக் கொண்டேன். இதற்கு இரண்டு மூன்று குணங்கள் அநுகுணமாய் இருந்தன. அதாவது அக் காலத்தில் சாதாரணமாக மாறுபாடிகள் வழக்குகள் தான் அதிக மாயிருந்தன. வழக்குரைஞராயிருந்த போது ஏறக்குறைய எல்லா மாறுபாடிகளும் என்னிடம் தங்கள் வழக்குகளை ஒப்புவிப்பார்கள். இதனால் அவர்கள் கணக்கு ஊழல்களெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகவே அவர்களுடைய வழக்குகள் நான் நீதிபதியாக இருக்கும் போது என் முன் வந்தால் அவர்கள் கணக்குகளின் மருமங்களையெல்லாம் அறிந்திருந்தபடியால், அவர்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவது அசாத்தியமாயிருந்தது. இதைக் கண்ட மாறுபாடிகள் தங்கள் வழக்குகள் என் நீதிமன்றத்திற்கு முன்பு வராதபடி செய்ய முயன்றனர். இதையறிந்த அக்கால முதன்மை நீதிபதியாக இருந்த திவான் பகதூர் சி.ஆர். திருவேங்கடாச்சாரியார் இதைத் தடுத்து வந்தனர். மாறுபாடிகள் என் நீதிமன்றத்திற்கு முன்பாக வருவதற்கே அஞ்சுவார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் என்னை எப்போதாவது சந்தித்தால் “என்னாங்க சாமி, வக்கீலாக எங்ககிட்டே கட்டணம் (Fees) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்போ எங்க வாயிலே மண்ணை போடுகிறீர்களே” என்று கேட்பார்கள். இரண்டாவது, வழக்குரைஞர்கள் தங்கள் – வழக்குகளைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அடிக்கடி கேட்காம லிருக்க ஓர் உத்தி செய்தேன். வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்று கேட்கும் வழக்குரைஞர்களை யெல்லாம் மறு வழக்குநாட்கள்(வாய்தாக்கள்) எதிர்ப்பட்சத்திற்கு தினம் படி (Day fees) கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுவேன். இதனால் இரண்டு நன்மைகள் உண்டாயின. ஒன்று கட்டாயமாக ஒத்திவைப்பு வேண்டியவர்கள் தான் இதற்கு உடன்பட்டு கேட்பார்கள், இரண்டாவது இதனால் வழக்குரைஞர்களுக்கு மாத வரும் படி அதிகமாகியது. நான் நீதிமன்றத்தை விட்டு விலகியபின் எனது சிநேகிதர்களான பல வழக்குரைஞர்கள் என்னைச் சந்திக்கும் போது “உங்களுடன் எங்களுக்கு நாட்செலவு வரும்படி அற்றுப் போச்சுது” என்று முறையிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட மார்க்கங்களின் மூலமாக வழக்குகளைத் துரிதமாகத் தீர்மானிக்கும் வழிகண்டபின் தினம் என் நீதிமன்ற வழக்குகளை முடித்துவிட்டு முதல் நீதிமன்றத்திலிருந்து வழக்குகளை அனுப்பும்படி தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் அனுப்புவேன். ஒரு சமயம் முதல் நீதிபதியும் மூன்றாவது நீதிபதியும் ஏதோ அவசர நிமித்தமாய் நீதிமன்றத்திற்கு வராமவிருந்தபோது மூன்று நீதிமன்ற வழக்குகளையும் நான் கவனித்தது ஞாபகமிருக்கிறது

சாதாரணமாக 4 மணிக்குள் நீதிமன்ற வேலையை முடித்துக் கொண்டு சபைக்குப் போய் விடுவேன். சாயங்காலம் ஐந்து மணியானவுடன் எந்த வழக்கானாலும் நடத்தாது ஒத்திவைத்து விடுவேன். ஐந்து மணிக்குமேல் நீதிமன்றம் நடப்பது தவறு என்பது என் அபிப்பிராயம். நான் வழக்குரைஞராக இருந்தபோது ஐந்து மணிக்கு மேல் வழக்குகளை நடத்துவதை ஆட்சேபித்திருக்கிறேன். 1926-ஆம் வருசம் நான் நீதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். முன்னாள் இரவு மரித்த என் மனைவியின் தேகத்தை இடுகாட்டிற்குக் கொண்டு போய் சம்சுகாரம் செய்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டுப் பூசையை வழக்கம் போல் முடித்துவிட்டு உணவு கொண்டு நீதிமன்றத்திற்கு வழக்கம் போல் போனேன். அப்பொழுது. சுமார் 11 மணியிருக்கும். இதற்குள் எனக்கு துக்ககரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டு முதல் நீதிபதியாக இருந்த சிரீமான் திருவேங்கடாச்சாரியார் நான் அன்று நீதிமன்றத்திற்கு வரமாட்டேனென்று என் நீதிமன்ற வழக்குகளை யெல்லாம் ஒத்திவைப்பதற்காகத் தன் நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டார். நான் நீதிமன்றத்திற்கு வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே என் அறைக்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு “திரு. சம்பந்தம் இன்றைக்கு ஏன் நீதிமன்றத்திற்கு வந்தாய்” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டார். அதற்கு நான் “என்னை மன்னிக்க வேண்டும். என் மனைவி நோயாயிருந்தபோது என்னால் இயன்ற அளவு சிகிச்சை செய்து பார்த்தேன். இறந்த பின் துக்கப்பட்டு என்ன பயன். என் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்குக் கட்டம் கொடுப்பதில் என்ன பலன்? இன்றைக்கு என் நீதிமன்றத்தில் வாதிப் பிரதிவாதிகளும் சாட்சிகளும் சேர்த்து சுமார் 100 பெயர்களிருக்கலாம். இத்தனை பெயர்களும் மற்றொரு நாள் வரும்படியான கட்டத்திற்கு நான் அவர்களை உள்ளாக்கக் கூடாதென்று தீர்மானித்து வந்தேன் இங்கு; அன்றியும் நீதிமன்றத்திற்க வந்து வேலை பார்த்தால் என் துக்கத்தைக் கொஞ்சம்மறந்திருப்பேன்” என்று சொல்லி அவரை என் நீதிமன்ற வழக்குகளையெல்லாம் என் நீதிமன்றத்திற்கே அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டேன். இச் சந்தர்ப்பங்களில் நான் தலைமைநீதிபதியாகச் சிலகாலம் பொறுப்பு வகித்தபோது நடந்த ஒரு வியவகாரத்தை இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் ஐந்தடித்தவுடன் கீழே சிறுவழக்கு நீதிமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்து ஐந்து மணிக்குமேல் வேலை செய்து கொண்டிருந்த குமாசுக்களையெல்லாம் அழைத்து “அரசார் உங்களுக்கெல்லாம் ஐந்து மணி வரையில் வேலை செய்யச் சம்பளம் கொடுக்கிறார்களே யொழிய வேறில்லை. ஆகவே நீங்கள் ஐந்தடித்தவுடன் கட்டுக்களைக் கட்டிவிட்டு வீட்டிற்குப் போங்கள். மறு நாள் சரியாக பத்தரை மணிக்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எல்லாரையும் வீட்டிற்கனுப்பினேன்.

சின்ன நீதிமன்றப் பிணையாட்கள் (Bailiff) சாதாரணமாக இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே இதைத் தடுக்க ஒரு சிறிது நான் முயன்றேன் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை ஒரு வழக்குரைஞர் ஒரு பிணையாளர் இலஞ்சம் வாங்கிக்கொண்டு பிரதிவாதியைப் பிடிக்காமலிருக்கிறான் என்று என்னிடம் வந்து முறையிட்டார். நான் மத்தியான போசனத்திற்காக 2 மணிக்கு என் அறைக்குப் போனவுடன் அந்தப் பிணையாளை அழைத்து அந்தப் பிரதிவாதியை சாயங்காலத்திற்குள் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிப்பாய்க் கூறினேன். இதன் பலனாக நான் 3 மணிக்கு நீதிமன்றத்திற்குப் போகுமுன் அந்தக் கட்சிக்காரனைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். இம்மாதிரியாக நான் கொஞ்சம் கண்டிப்பாயிருந்ததினால் என் காலத்தில் பிணையாளிகள் லஞ்சம் வாங்குவதே நின்றுவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் மேல் அதிகாரிகள் கவனித்தால் இவ்வழக்கம் மிகவும் குறையும் என்பது என் அபிப்பிராயம்.

இவ்வாறு நான் கண்டிப்பாய் இருந்தபடியால் வழக்குரைஞர்கள் பெரும்பாலர்களுடைய அன்பினைப் பெற்றேன் என்று நினைக்கிறேன். நான் எனது 55-ஆவது வயதில் இவ்வேலையினின்றும் விலகியபோது அவர்கள் எனக்கு ஒரு தேநீர் விருந்து கொடுத்தனர். அன்றியும் நீதிமன்றச் சிப்பந்திகளும் தனியாக வேறொரு தேநீர் விருந்து கொடுத்தனர்.

இதற்கிடையில் சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்க்கும்படி நேரிட்டது. அக்காலமெல்லாம் நீதிமன்ற வேலையெல்லாம் மத்தியானத்திற்குள் முடித்துக்கொண்டு என் நீதிமன்ற வீடுபோய் சேர்வேன், ஒரு நாளாவது சாயங்காலத்தில் நீதிமன்ற வேலை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. அதுசமயம் இப்போதிருப்பதுபோல், அத்தனை மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் கிடையா. தற்காலம் இந்த மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டும் ஐந்து உதவித்தொகை (Stipendiary) நீதிமன்றங்களுக்கு என்ன வேலையிருக்கிறதென ஆச்சரியப்படுகிறேன்.

சுமார் 4 வருசங்கள் நான் நீதிபதியாயிருந்தபோது ஒரே ஒரு வழக்கில்தான் என் தீர்மானம் உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது என்று எழுத விரும்புகிறேன்.

மேற்கண்டபடி உரிமை வழக்கு நீதிமன்றத்திலும் குற்ற வழக்கு நீதிமன்றத்திலும் நான் நியாயாதிபதியாக இருந்திருக்கிறேன். இவ்விரண்டில் உரிமை மன்ற நீதிபதியாக யிருந்ததுதான் என் மனதிற்குப் பிடித்தது. ஏனென்றால் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகுளில் என்னையுமறியாதபடித் தவறாகத் தீர்மானித்தாலும் வழக்கி் தோற்றக் கட்சிக்காரனுக்கு சொல்ப நட்டத்துடன் போகிறது. நடுவராக நான் தவறாக ஒருவனைத் தண்டித்தால் அவனுடைய வாழ்க்கையே அழிந்தாலும் அழியுமல்லவா?

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, September 09, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 – தொடர்ச்சி)

அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2

“தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகமடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள்.

பிள்ளையவர்கள் இதற்கும் இவ்வாறு பொருள் கூறி, “இந்த இரண்டு செய்யுட்களுக்கும் இப்போது நீர் பொருள் கூறும்” என்று சொன்னார். நான் கேட்டவாறே உரைத்தேன். பிறகு இலக்கண சம்பந்தமான சில சிறு கேள்விகளைக் கேட்டார். நான் விடை சொன்னேன்.

“இந்தச் செய்யுள் எவ்வகையைச் சார்ந்தது?”

“இது கலிநிலைத்துறை”

“வெண்பாக்களைச் சீர்பிரித்து அலகூட்டுவீரா?”

“ஏதோ தெரிந்த வரையிற் செய்வேன்.”

உடனே சில வெண்பாக்களை எப்படிச் சொன்னால் தளைபிறழ்ந்தனவாகத் தோற்றுமோ அப்படியே சொல்லித் தனித்தனியே சீர் பிரித்துச் சொல்லச் சொன்னார். நான் ஜாக்கிரதையாகச் சீர்பிரித்துச் சொன்னேன்.

“நெல்லுக் கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கு மாங்கே பொசியுமாம்”

என்ற செய்யுளைச் சீர்பிரித்துச் சொல்லுகையில், “நெல்லுக்-கிறைத்தநீர்-வாய்க்கால்-வழியோடிப்” என்று தனித்தனியே பிரித்து அலகூட்டிச் சொன்னேன்.

“நெல்லுக்-கிறைத்த-நீர் வாய்க்கால்-வழியோடி, என்று பிரித்தால்தானே மோனை அமைகிறது? நீர் பிரிக்கும்போது மூன்றாம் சீர் வாய்க்கால் என்றல்லவோ ஆகிவிடும்? அப்போது மோனை இராதே!” என்றனர்.

“அப்படியே பிரித்தால் வெண்டளை பிறழ்ந்து விடும். இறைத்த-நீர்வாய்க்கால் என்பது ஆசிரியத்தளையும்: நீர்வாய்க்கால்-வழியோடி என்பது கலித்தளையும் ஆகிவிடும். வெண்பாவில் பிறதளை விரவாது” என்று விடை பகர்ந்தேன்.

“நல்லது. யாப்பிலக்கணத்தை நன்றாகப், படித்திருக்கிறீர்.”

“காரிகை பாடம் சொன்ன ரெட்டியாரவர்கள் மிகவும் தெளிவாக எனக்குக் கற்பித்தார்கள்.”

அப்போது பிள்ளையவர்கள் ரெட்டியாரை மிகவும் பாராட்டிப் பேசினார்.

அன்று பிள்ளையவர்கள் என் தமிழறிவு இவ்வளவினதென்பதை ஒருவாறு பரிசோதித்து அறிந்துகொண்டாரென்றே எண்ணினேன். அவர்கள் வாயிலிருந்து இரண்டு செய்யுட்களுக்குப் பொருள்கேட்டு அப்படியே சொல்லிவிட்டோமென்ற ஒரு திருப்தியும், “இன்றே பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்” என்ற எண்ணமும் எனக்கு உண்டாயின.

“என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம் ஆரம்பித்துவிடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார். அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்துவிட்டதென்றே தோற்றியது.

“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கிவிட்டோமே” என்று நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன். என் தந்தையார், “நாளைக்கு நல்லதினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.

“மெத்த சந்தோசம். அப்படியே செய்யலாம்” என்று தம் உடன்பாட்டை அவர் தெரிவித்தார்.

பாடம் ஆரம்பித்தது

மறுநாள் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். முதலில் நைடதத்தை அவர் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அதில் சில பாடல்களைப் படிக்கச் செய்து அவற்றின் பொருளைக் கூறினார். அங்கேயுள்ள விசேடங்களை விளக்கியும் இலக்கணச் செய்திகளைப் புலப்படுத்தியும் வந்தார். நான் அந்த நூலை முன்பே பல தடவை படித்திருந்தும் அவர் கூறிய முறையிற் பாடம் கேட்கவில்லையாதலால் எனக்கு அவருடைய போதனை அதிக இன்பத்தை உண்டாக்கியது. அவர் பாடம் சொல்லும்போது எனக்கு எந்தச் சொல் விளங்காதோ அதற்கு மாத்திரம் பொருள் சொல்வார்; எனக்கு எந்த விசயம் தெரியாதோ அதை மாத்திரம் விளக்குவார்.

சில பாடல்கள் ஆனவுடன், “இன்னும் சில தினங்களில் இந்த நூலை முடித்துவிடலாம். பிறகு வேறு ஒரு நூலைத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டு, “அப்பா சவேரிநாது” என்று கூப்பிட்டார். அவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அங்கே வந்தார்.

“நாளை முதல் இவருக்கு நைடதத்தைப் பாடம் சொல்லி வா” என்று அவருக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே மறு நாள் முதல் நான் அம்மாணாக்கரிடமே பாடங் கேட்டு வரலானேன்.

சவேரிநாத பிள்ளை

சவேரிநாத பிள்ளை என்பது அவர் பெயர். அவர் உரோமன் காதொலிக்கக் கிறித்தவர்; பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டு வந்தார். அவரைப் பார்த்தால் யாரும் கிறித்தவரென்று சொல்லார். விபூதி அணிந்திருப்பார். பிள்ளையவர்களிடத்தில் அவருக்கு அளவற்ற பக்தி உண்டு. ஆசிரியருடைய குடும்பக் காரியங்களெல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். எப்போதும் உத்சாகமுள்ளவராகவே இருப்பார்; வேடிக்கையாகப் பேசுவார். எவ்வளவு துக்கமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் தம்முடைய பேச்சால் அந்த நிலையை மறக்கச் செய்வார்; சிநேகம் செய்வதற்கு யோக்கியமானவர்; தமிழ்ப் பாடலிலுள்ள பொருள்களை இரசமாக எடுத்துச் சொல்வார்; அடிக்கடி வேறு விடயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவரோடு சேர்ந்து இருந்தால் பொழுதுபோவதே தெரியாது.

நான் அவரிடம் பாடங் கேட்டபொழுது அவருடைய கல்வி ஆழமானதன்று என்ற எண்ணமே எனக்கு முதலிற்பட்டது. அதனால், அவர் பாடஞ் சொல்லும்போது சமற்காரமாக அவர் கூறும் விசயங்களை அனுபவிக்க முடியவில்லை. இனிமையாகப் பொழுதுபோவதை நான் விரும்பவில்லையே. அதிகமாக விசயங்களைத் தெரிந்துகொள்ளவே விரும்பினேன். நைடதம் முன்னமே படித்த நூல்தானே? அதை மீட்டும் அவரிடம் கேட்கும்போது அவர் இரசமாகச் சொன்னாலும், நான் அறியாத கருத்தையோ, இலக்கணத்தையோ அவர் விளக்காமையால் எனக்கு இன்பமுண்டாகவில்லை. சில இடங்களில் நான் அறிந்த விசயம்கூட அவருக்குத் தெரியவில்லை. அவர் பாடம் சொல்லுவார். நான் இடைமறித்து, “இந்தச் செய்யுள் என்ன அலங்காரம்?” என்று கேட்பேன். அவருக்குத் தெரியாது. “பார்த்துத்தான் சொல்லவேண்டும்” என்று மழுப்புவார். நான் படித்த புத்தகத்தில் உரையில் இன்ன அலங்காரம் என்று குறித்திருக்கும். அதை விளக்கும்படிக் கேட்பேன். “அந்த அலங்காரத்தின் இலக்கணம் இதில் எவ்வாறு அமைந்திருக்கிறது?” என்று வினவுவேன். எனக்குத் திருப்தி உண்டாகும்படி விளக்க அவரால் இயலாது. அவர் என்னைக் கேள்வி கேட்பதுபோய் நான் சந்தேகம் தீர்த்துக்கொள்வதுபோல அவரைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்.

“எவ்வளவோ கட்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தோம். இங்கு வந்தும் பிள்ளையவர்களிடம் நேரிற் பாடங் கேட்க இயலவில்லையே! எங்கே போனாலும் நம் அதிர்ட்டம் நம்மைப் பின்தொடருகிறதே!” என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று.

“இந்த நிலை மாறவேண்டும். இதற்கு என்ன வழி?” என்று யோசிக்கலானேன்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.

Sunday, September 03, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராகவேலைபார்த்தது தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2


இப்படிச் சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வழக்குகளை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் வழக்கு என்று கண்டறிந்தால் நீதிமன்றத்தில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் தொகுப்புரை (Sum up) செய்ய வேண்டி வரும்போது நான் வேறொன்றும் சொல்லாமல் “இந்த வழக்கில் நீதிமன்றத்தார் காலத்தை இன்னும் எடுத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை” என்று முடித்திருக்கிறேன். இப்படி செய்ததினால் நீதிபதிகள் இதர கேசுகளில் நான் வற்புறுத்திப் பேசினால் அவற்றில் ஏதோ உண்மை இருக்கவேண்டுமென்று என்னைப் பொறுமையுடன் கேட்டிருக்கின்றனர். இதைப்பற்றி சில நீதிமன்ற வழக்குரைஞர்கள் நான் செய்தது தவறு “நிசமோ தப்போ கடைசிவரையில் மன்றாடித்தான் தீரவேண்டியது வழக்குரைஞர் கடமை” என்று என்னிடம் கூறியிருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மதிப்புமிகு நீதிபதி பாடம் முன்பாக நான் ஒருமுறை நடத்திய போது பிரதிவாதிக்காக வக்காலத்து வாங்கிக்கொண்ட நான் வாதியையும், வாதி சாட்சிகளையும் இரண்டு நாள் குறுக்கு கேள்விகள் (Cross Examination) கேட்டேன். அது முடிந்தவுடன் பிரதிவாதிக்காக சாட்சிகள் ஒருவரையும் நான் கூப்பிடவில்லை. அன்றியும் தொகுப்புரை (Sum up) செய்ய வேண்டி வந்த போது “வாதியின் சாட்சிகளை குறுக்குவிசாரணை (Cross) பண்ணவேண்டியதை என் கடமைப்படி செய்தேன். தொகுப்புரை செய்யவேண்டியது என் இச்சையில் இருக்கிறது. அதை செய்து நீதிமன்றத்தார் அவர்களுடைய காலத்தை வழக்கில் வீணாகப் போக்குவதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று கூறி உட்கார்ந்தேன். பாடம் துரை நான் செய்தது சரியானது என்று ஒப்புக்கொண்டு ஏதோ புகழ்ந்தனர். கட்சிக்காரர்கள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டு இந்த வழக்கை வெல்வது கடினம் என்று எனக்குத் தோன்றினால் கட்சிக்காரர்களிடம் உண்மையைக் கூறி “ஏன் எனக்குக் கட்டணம் கொடுக்கிறீர்கள் ? இந்த பணத்தை ஏதாவது தருமம் செய்யுங்கள்” என்று சொல்லியனுப்பி இருக்கிறேன் பல தடவைகளில்.

இப்படிச் செய்ததால் கட்சிக்காரர்களுடைய நட்பைப்பெற்று எனக்குச் சிறுவழக்கு நீதிமன்றத்தில் முக்கியமாக அதிக வழக்குகள் வந்தன. இதுதான் பிறகு மேல் அதிகாரிகள் என்னைச் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததற்கு அடித்தளமாக இருந்ததென நம்புகிறேன்.

குறுக்குக் கேள்விகள் கேட்பதில் கொஞ்சம் வல்லவன் என்ற பெயர் பெற்றபடியால் எனக்குச் சென்னையிலும், வெளியிலும் குற்ற வழக்குகள் கிடைத்தன. இந்த அனுபவம் பிறகு சிலகாலம் முதன்மை மாநக நடுவராக நியமிக்கப்பட்டபோது எனக்கு உபயோகமாயிருந்தது.

நான் முக்கியமாக வழக்கு நடத்திய சில நீதிபதிகளைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் வழக்குரைஞராக வேலை செய்ய ஆரம்பித்தபோது சிறுவழக்கு நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்தவர் டி. (இ)ரொசொரியோ (D. Rozorio) என்பவர். அவர் மிகுந்த பொறுமையான சுபாவமுடையவர். அவர் தினம் சரியாகப் பதினோரு மணிக்கு நிமிடம் தவறாமல் நீதிமன்றத்துக்கு வந்து உட்காருவார். அன்றியும் வழக்குகளைச் சீக்கிரம் தீர்மானிப்பார். இந்த இரண்டு குணங்களையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பிறகு அதே நீதிமன்றத்தில் அதே நாற்காலியில் சிறுவழக்கு நீதிபதியாக நான் சில வருசம் நடவடிக்கை நடத்திய போது இவ்விரண்டும் எனக்கு மிகவும் பயனளித்தன. ஆனால் அவருடைய பொறுமையை நான் கற்றுக் கொள்ளவில்லை!

சிறுவழக்கு நீதிமன்றத்தில் என்காலத்தில் மற்றொரு நீதிபதியாக இருந்தவர் மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார். அவரிடம் நான் கற்றது வழக்கில் முடிவில் தொகுப்புரை (Sum.up) செய்யும்போது முக்கியமான அம்சங்களை எவ்வளவு சுருக்கமாய்ச் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது. இவருடன் பல்லினப் பொதுமன்றத்தில்(Cosmopolitan Club) சனிக்கிழமைகளில் சீட்டாடுவேன். அச்சமயம் நீதிமன்றத்தில் நடக்கும் பல வேடிக்கைகளைப்பற்றிய கதைகளை மேசையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கெல்லாம் சொல்லி சிரிப்புண்டாக்குவார். அவற்றுள் ஒன்றை இங்கு எழுதுகிறேன். ஒருநாள் “சம்பந்தம், நான் நீதிமன்றத்திற்கு வரும்போது மிகவும் தலைகுனிந்தபடி வருகிறேனே அதற்குக் காரணம் தெரியுமா?” என்று கேட்டார். “வணக்கமாய் வருவது நல்லது என்று நீங்கள் அப்படிச் செய்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன். அதற்கவர் “அது. ஒருபுறமிருக்கட்டும். நான் முதல் முதல் நீதிமன்றத்தில் என் ஆசனத்தில் உட்கார வரும்போது தலை நிமிர்ந்து கொண்டு வந்தேன். அப்போது கயிற்றிழுப்பு விசிறி(பங்கா) நீதிமன்றத்துக்குப் பின்புறமிருக்கும். வேலையாள் வேகமாய் விசிறியை இழுத்துவிட்டான். உடனே என் தலை குட்டை விசிறியால் தாக்கப்பட்டு எகிறிப் போய் விழுந்தது. அது முதல் நான் வரும்போதெல்லாம் மிகவும் தலை குனிந்து கொண்டுவர ஆரம்பித்தேன்” என்று பதில் சொன்னார். இது நடந்தபோது நீதிமன்றத்தில் இப்போதிருப்பது போல் மின்சார பங்கா (electric fan) கிடையாது.

இதன்பிறகு இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் சர் வி. சி. தேசிகாச்சாரியார். சாதாரணமாக இவர் நீதிமன்றத்தில் எனக்கு அதிக வழக்குகள் கிடைக்கும். இதற்குக் காரணம் நான் அவரது நன்மதிப்பைப் பெற்றதே என்று நினைக்கிறேன். இவர் ஒரு சிநேகிதரிடம் ஆங்கிலத்தில் சொன்னதாக அந்த சிநேகிதர் எனக்குத் தெரிவித்ததைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “தங்கள் கட்சிக்காரர்களின் ஊழல்களை மறைத்து நீதிமன்றத்தார் கண்ணில் மண்ணைப் போட்டு வழக்குகளை வெல்ல விரும்பாத வழக்குரைஞர்கள் இரண்டு பெயர்கள்தான். ஒருவர் பி. எம். சிவஞான முதலியார், மற்றொருவர் சம்பந்த முதலியார்” என்றனராம்.

உரிமையியல் வழக்குகளில் கட்டணம் (Fees) தொடர்பில் நீதிமன்றத்தார் சட்டப்படி, ஒவ்வொரு வழக்கிற்கும் என்ன கட்டணம் உண்டோ அதற்குக் குறைவாக வாங்குவதில்லை என்று தீர்மானித்து அதன்படியே நடந்துவந்தேன்.

எனது ஆருயிர் நண்பரான சி. இரங்கவடிவேலு முதலியார் தானும் பி. எல். பரிட்சையில் தேறினவுடன் அவரை எனது இளையராக (Junior) வைத்துக்கொண்டு நீதிமன்ற வேலையைப் பார்த்துவந்தேன். அவர் 1923-ஆம் வருசம் எனது துரதிர்ட்டத்தால் காலவியோகமாக வழக்குரைஞர் வேலையில் முன்பே குறைந்திருந்த ஆர்வம் மிகவும் குன்றியது. ஆகவே சீமான் சர் சி. பி. இராமசாமி ஐயர் அவர்கள் 1924-ஆம் ஆண்டு என்னை அழைத்து சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதி வேலையை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன், இதனுடன் என் நடுப்பருவ அனுபவங்களை முடித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, September 02, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2 – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2

பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று சிரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோச உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி நமக்கு ஒரு குறைவும் இல்லை” என்ற நம்பிக்கை என் அந்தரங்கத்திலிருந்து ஒளிவிட்டு வந்தது.

கனவும் பயனும்

என் தந்தையாரும் அன்று இரவு என்னைப் போலவே அமைதியாகத் தூங்கவில்லை. அதற்குக் காரணம் என்னைத் தனியே விட்டுச்செல்ல வேண்டுமே என்ற கவலைதான். அதே ஞாபகத்தோடு அவர் படுத்திருந்தார்.

படுக்கையிலிருந்து காலையில் எழுந்தவுடன், “சாமா” என்று என்னை அழைத்தார். “இராத்திரி நான் ஒரு சொப்பனம் கண்டேன். தம்பதிகளாகிய ஒரு கிழவரும் கிழவியும் வந்து என்னிடம் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, ‘உன் பிள்ளைக்குக் கொடு; அவனைப்பற்றிக் கவலைப்பட வேண்டா’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அது முதல் எனக்கு மிக்க தைரியம் உண்டாகிவிட்டது. உனக்கு சேமம் உண்டாகுமென்றே நம்புகிறேன். நீ கவலைப்படாமல் இரு” என்று சொன்னார். எனக்கோ அச்சமயத்தில் ஒரு கவலையும் இல்லை. ஆனாலும் அவர் என் கவலையைப் போக்குபவரைப் போலத் தம்முடைய கவலைக்கு ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டார்.

பொழுது நன்றாக விடிந்தது. காலை நியமங்களை முடித்துக்கொண்டு நாங்கள் இருவரும் பிள்ளையவர்கள் வீட்டுக்குச் சென்றோம். முதற்கட்டில் சைவச்செல்வர்கள் சிலருடன் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் புன்னகையோடு, “வாருங்கள்; உட்காருங்கள்” என்று சொன்னார். முதல் நாள் அவருடைய வார்த்தையில் அயலாரை உபசரிப்பதுபோன்ற தொனி இருந்தது. இரண்டாம் நாளோ அவர் வாய் என் தந்தையாரை வரவேற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் பார்வை என்மேல்தான் விழுந்தது. அவர் குரலில் ஒரு பற்றோடு கூடிய அன்பு தொனித்தது. முதல் நாள் எங்களை அயலாராக எண்ணிய அவர் அன்றைத் தினம் தம்மைச் சேர்ந்தவர்களாகவே எண்ணினார் போலும்!

“இராத்திரி ஆகாரம் சௌகரியமாக இருந்ததா? நீங்கள் தங்கியுள்ள சாகை வசதியாக இருக்கிறதா?” என்று வினவினார்.

“எல்லாம் சௌகரியமாகவே இருக்கின்றன. நேற்று இராத்திரி கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்தோம். இவனுடைய சேமத்தைக் குறித்து சந்நிதியில் பிரார்த்தனை செய்தேன். இராத்திரி தூக்கத்தில் நான் ஒரு சொப்பனம் கண்டேன்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் “என்ன சொப்பனம் அது?” என்று கேட்கவே தந்தையார் அதை எடுத்துரைத்தார். “இது நல்ல சகுனம். சிரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் கிழவர், கிழவி என்று சொல்வது இந்தத் தலத்தில் வழக்கம். உங்கள் கனவில் தோன்றியவர்கள் அவ்விருவருமே. நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டா; இவர் சேமமாக இருப்பார்” என்று அந்தக் கனவுக்குப் பொருள் கூறினார் அப்புலவர் கோமான்.

என் தந்தையார் தம் கனவில் சிரீ மாயூரநாதரே எழுந்தருளியதாக நம்பித் திருப்தி அடைந்தார்; நானோ பிள்ளையவர்கள் நேரே இருந்து. “நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்படவேண்டா” என்று கூறியதுபற்றித் திருப்தியுற்றேன்.

பேச்சினிடையே அனுபவ வார்த்தைகள்

அப்பால் அங்கே வந்திருந்த கனவான் ஒருவர் ஆறுமுக நாவலரைப் பற்றிய சில செய்திகளைச் சொன்னார். நாவலர் சிதம்பரத்தைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றதும் அவர் வரவை அறிந்து யாழ்ப்பாணத்து வித்துவான்களும் பிரபுக்களும் கடற்றுறையில் அவரை எதிர்கொண்டழைத்துச் சென்று உபசரித்ததும் பிறவுமாகிய சமாசாரங்களை அவர் சொன்னார். மற்றொருவர் வடலூரில் இராமலிங்க வள்ளலார் இருந்ததையும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் விரிவாகக் கூறினார். பிறகு பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் அரியிலூர் முதலிய ஊர்களைப்பற்றி விசாரித்தனர். அங்கே உள்ளவர்கள் வித்துவான்களிடம் காட்டும் ஆதரவையும் பிறருக்குத் தங்களால் இயன்ற உபகாரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஏழைகளுக்கும் இருப்பதையும் தகப்பனார் எடுத்துச் சொன்னார்.

காட்டுப் பிரதேசங்களென்று நாம் சொல்லுகிறோம். அங்கேதான் சீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக ஆகச் சுயநலமும் அதிகமாகின்றது. நாகரிகமுள்ள இடங்களில் உபகாரச் சிந்தையுள்ளவர்களை அருமையாகத்தான் பார்க்கிறோம்” என்று பிள்ளையவர்கள் கூறினர்.

அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவரது அனுபவத்திலிருந்து எழுந்தவை என்று பிற்காலத்தில் நான் அறிந்தேன்.

பரீட்சை

பிறகு நாங்கள் விடைபெற்றுச் சென்று பகல் உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர் திருநாகைக் காரோணப் புராணத்தை வருவித்து என்னிடம் அளித்து. “இதில் ஏதேனும் ஒரு செய்யுளை எடுத்துப் படியும்” என்று சொன்னார். நான் அந்தப் புத்தகத்தைப் பிரித்து நாட்டுப் படலத்திலுள்ள ஒரு செய்யுளை அமைதியாக இசையோடு மெல்லப் படிக்கலானேன். நான் படித்த செய்யுள் வருமாறு:

புன்மை சால்கிழங் ககழ்ந்திடும் போதெதிர் போதும்
அன்மை தீர்மணி சுரையிரும் பாலகற் றிடுவார்
வன்மை மேவிய தாயினு மாண்பறி யாரேல்
மென்மை மேவிழி பொருளினு மிழிந்ததாய் விடுமே”
 (நாட்டுப்படலம், 38).

முதலில் ஒரு முறை மனத்துள் படித்துப் பார்த்த பிறகே வாய்விட்டுப் படித்தேன். ஆதலால் நான் தடையில்லாமல் படிக்க முடிந்தது. பிள்ளையவர்கள் அந்தச் செய்யுளின் பொருளைத் தெளிவாக எனக்குச் சொன்னார்; பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறினார்; பதசாரமும் சொல்லி விளக்கினார்.

“குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் காட்டில் தங்களுக்கு ஆகாரமாக உதவுகின்ற கிழங்குகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அப்பொழுது பூமியில் புதைந்துகிடக்கும் மணிகள் வெளிவருகின்றன அவற்றைக் கடப்பாறையினாலே ஒதுக்கிவிட்டு மேலும் தோண்டுகிறார்கள். அவர்களுக்குக் கிழங்கினிடம் உள்ள மதிப்பு மணியினிடம் இல்லை. உலகத்தில் எவ்வளவு சிறந்த பொருளாயிருப்பினும் அதன் பெருமையை அறியாதவரிடம் அகப்பட்டால் மிகவும் இழிந்த பொருளைப் போலாகிவிடும்.

“இந்த விசயம் அப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்க் காவியங்களில் நாட்டு வருணனையில் இத்தகைய செய்திகளை அமைப்பது புலவர் மரபு. அப்படி வருணிக்கும்பொழுது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து வகை நிலங்களையும் அவற்றில் நிகழும் செய்திகளையும் தனித்தனியே விரிவாக வருணிப்பார்கள். இந்த வருணனை, மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் இயல்பையும் செயல்களையும் சொல்லுமிடத்தில் வருகின்றது. வருணனையோடு உலக இயல்பாகிய நீதி ஒன்றும் இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது.

“அடுத்த பாடலையும் படியும்” என்று பிள்ளையவர்கள் சொல்லவே நான் படித்தேன்:-

முறிவி ராயபைம் பொழிலிற்செம் முழுமணிநோக்கிச்
செறிவ தீயெனக் குடாவடி வேறுகான் சென்று
பிறவி லாவிர வழலெனப் பிறங்கவுள் வெதும்பும்
அறவி லாரெங்குச் சாரினுஞ் சுகமடை யாரால்.”

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.

Sunday, August 27, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம் – தொடர்ச்சி)

என் சுயசரிதை  : அத்தியாயம் 6. வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2

என் தமையனார் ஐயாசாமி முதலியார் இதற்கு முன்பாகவே உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தார். ஆகவே அவரது அறையிலேயே நான் வழக்குரைஞராக அமர்ந்தேன். எழுத்தர், வேலையாள் முதலிய சௌகர்யங்களுக்கெல்லாம் நான் கட்டப் படாதபடி ஆயிற்று.

நான் பதிவு (enrol) ஆன தினமே அவருக்கு பதிலாக ஒரு வழக்கை நடத்தினேன். சென்னையில் சிறுவழக்கு நீதிமன்றத்தில் நான் முதல்முதல் ஒரு வழக்கில் கட்டணம் பெற்றது, அந் நீதிமன்றத்தில் பதிவாளர் முன்பாக. சேம்சு சார்ட்டுசுக்காக ஒரு சிறு வழக்கை நடத்தி வெற்றி பெற்றேன்.

அதுமுதல் சின்ன நீதிமன்றத்திலேயே பெரும்பாலும் வழக்குரைஞர் வேலை பார்த்து வந்தேன். சில சமயங்களில் நகர உரிமைமன்றத்திற்கும் (City Civil Court) போவேன். சீக்கிரம் காவல்துறை நீதிமன்றத்துக்கும் போக ஆரம்பித்தேன். உயர்நீதிமன்றத்தி்ல் கார்த்திகை பிறைபோல் தோன்றுவேன்! இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். முதல் இரண்டு வருசம் என் வழக்குரைஞர் வரும்படி சராசரியாக மாதத்திற்கு 50 உரூபாய் முதல் 10 உரூபாய் வரை இருந்தது. பிறகு உயர்ந்து கொண்டு போய் சுமார் 1000 உரூபாய் சம்பாதித்தேன். இருந்தபோதிலும் நான் வழக்குரைஞாகப் பெரும் பதவியையாவது ஊதியத்தையாவது பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கு முக்கிய காரணம் வழக்குரைஞர் உத்தியோகத்தில் என் மனம் பலமாக ஈடுபாடாததேயாம். பெரிய வழக்குரைஞர் என்று பெயர் எடுத்து ஏராளமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நான் விரும்ப வில்லை. வெளிப்படையாகக் கூறுமிடத்து என் மன உற்சாக மெல்லாம் தமிழ் நாடகங்களில் நடித்தும், தமிழ் நாடகங்களை எழுதியும் பெரிய பெயர் எடுக்கவேண்டுமென்றே இருந்தது! இதன் பொருட்டு என் ஓய்வுக் காலத்தையெல்லாம் சட்டப்புத்தகங்களையும் சட்ட அறிக்கைகளையும் படிப்பதில் செலவிடாது சுகுண விலாச சபைக்காக உழைப்பதிலேயே செலவழித்தேன். இதற்காக நான் எப்பொழுதும் வருத்தப்பட்டவனன்று. இப் பொழுதும் வருத்தப்படவில்லை; சந்தோசமே படுகிறேன். நான் கொஞ்சம் பிரபல நடிகனும் நாடக ஆசிரியனுமான பிறகு ஒரு நாள் ஆந்திர நாடகப் பிதா மகனான பல்லாரி வி.. கிருட்டிணமாச்சார்லு அவர்கள் தன்னுடைய அனுபவத்தை எனக்குத் தெரிவித்து “நீ சிறந்த வழக்குரைஞராக வேண்டுமென்றால் நாடகத்தைத் தூரத்தில் விட்டுவிட வேண்டும்” என்று போதித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது போதனையை நான் ஒப்புக்கொள்ள வில்லை என்று எழுதவேண்டியது அநாவசியம்’

நான் வழக்குரைஞராகப் பணம் சம்பாதிக்கும் போது, என் இல் வாழ்க்கை சுகமாய் நடத்தவும், என் நாடகங்களை அச்சிட வேண்டியதற்கும் போதுமான பொருள் கிடைத்தால் போதும் என்று உழைத்துவந்தேன். மேற்சொன்ன காரணங்கள் பற்றியே கூடுமான வரையில் எனது வழக்குரைஞர் வேலையையெல்லாம் சுகமாய்க் காலம் கழிக்கக் கூடிய சிறுவழக்கு நீதிமன்றத்தில் பெரும்பாலும் நகர் உரிமையியல் மன்றத்தில் சில பாகமும் காவல்துறை நீதிமன்றத்தல் சில பாகமும் வைத்துக்கொண்டேன். எப்பொழுதாவது கடினப்பட்டு உழைக்கவேண்டிய பெரிய வழக்குகள் வந்தால் அவற்றை மெல்ல, எனக்கு அவகாசமில்லை’ என்று தட்டிவிடுவேன்.

இக்காரணம் பற்றியே கட்சிக்காரர்கள் என்னிடம் வருவதென்றால் காலை 9½ மணிக்குள் வரவேண்டும் என்றும் சாயங் காலங்களில் 5 மணிக்குமேல் ஒருவரும் வரக்கூடாது என்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்டேன்.
இந்த நிபந்தனையினின்றும் சுமார் 25 வருடங்கள் நான் வழக்குரைஞராக வேலை பார்த்த காலமெல்லாம் மாறவில்லை. இராத்திரியில் யாராவது என் வீட்டிற்கு வந்து ‘அவசர வழக்கு’ என்று என்னைத் தொந்தரவு செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பதில், ஏற்பாடு செய்து கொண்டேன். அதாவது “உங்கள் வழக்கு இன்றிரவு ஏதாவது நடக்கப் போகிறதா? இல்லையே! நாளைக் காலை 11 மணிக்குத்தானே. வழக்கு (case). ஆகவே தயவுசெய்து நாளை காலை வீட்டிற்கு வந்துவிடுங்கள்” என்று பதில் சொல்லி அனுப்பிவிடுவேன். இந்த வழக்கத்தை அறிந்த என் வழக்கமாக வரும் கட்சிக்காரர்கள் என்னைச் சாயங்காலங்களில் தொந்தரவு செய்வதில்லை. மற்றவர்களிடமும் “இந்த வழக்குரைஞர் சாயங்காலத்திற்குமேல் நீதிமன்ற வழக்குகளைப் பார்க்கமாட்டார். கட்டணம் (Fees) கொடுத்த போதிலும் நாளை காலை கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். ஆகையால் அவரை 5 மணிக்குமேல் போய்ப் பார்ப்பதில் பிரயோகன மில்லை”, என்று தடுத்துவிடுவார்கள்.

இந்தக் கோட்பாட்டினால் எனக்கு ஒரு பெரிய நன்மை கிடைத்தது. சாதாரணமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாற்பது ஐம்பது வயதாவதற்குள் நீர் வியாதி, குன்ம நோய் முதலிய ஏதாவது வியாதிக்கு உள்ளாகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விசயமே. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காலக்கிரமப்படி போசனம் கொள்ளாததும், தக்கபடி சாயங் காலங்களில் உடற்பயிற்சி(வியாயாமம்/exercise) எடுத்துக் கொள்ளாததுமாம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கின்றார். எத்தனை சிறந்த வழக்குரைஞர்கள் சுமார் 50 வயதிற்குள் வியாதிக்கு ஆளாகி மடிந்திருக்கின்றனர்! தேகத்தில் சிறு வயது முதல் தக்க பலமில்லாத நான் இப்ப ஏதாவது வியாதிக்கு ஆளாகாமல், தடுத்தது காலக்கிரமப்படி போசனங் கொண்டதும் சாயங் காலங்களில் ஏதாவது உடற்பயிற்சியும் எடுத்துக்கொண்டு தக்கபடி ஓய்வையும் எடுத்துக்கொண்டு ஓய்வுக் காலங்களில் மனத்திற்கு உற்சாகத்தையும் சந்தோசத்தையும் அளிக்கத்தக்க மனதிற்கினிய தொழில் (Hobby), ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நடந்துவந்ததே, இதுவரையில் ஈசுவரன் கிருபையில் என் தேக நலத்தைக் காப்பாற்றிக்கொண்டு வரச் செய்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

நான் வழக்குரைஞனாக நடவடிக்கை நடத்திய காலத்தில் எனக்கே மற்றொரு நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டேன். அதாவது கட்சிக்காரர்கள் என்னிடம் வந்தால் அவர்கள் வழக்கு பொய்யானது, தப்பானது; நியாயமல்ல என்று என் புத்திக்குப் பட்டால் அவர்கள் வழக்கை எடுத்துக்கொள்ளக் கூடாதென்பதாம். இதனால், என்னிடம் வந்த பல வழக்குகளை ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் இதனால் நான் ஒரு நன்மை பெறாமல் போகவில்லை. அதாவது “சம்பந்தம் சாதாரணமாக தப்பான வழக்குகளை எடுத்துக்கொள்ளமாட்டான்” என்னும் பெயர் பெற்றேன் என்று நினைக்கிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வேன். “ஐயா, வைத்தியனிடம் போய் உங்களுக்கு ஒரு வியாதி இருக்க அதை மறைத்து வேறொன்றைக் கூறினால் அந்த வைத்தியன் உங்கள் உண்மையான வியாதியைக் குணப்படுத்த முடியுமா? அதுபோல வழக்குரைஞனாகிய என்னிடம் உண்மையைக் கூறுங்கள். பிறகு உங்கள் வழக்கிற்குப் பரிகாரம் தேடுகிறேன்” என்று சொல்வேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, August 26, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2

 


(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2)



பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2

பரீட்சை

இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக்கவிஞர் பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்” என்றார். அந்த மகாவித்துவானுக்கு முன், காட்டுப்பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக்கொண்ட நான் எவ்வளவு சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம் நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி இராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை, “தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்” என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல் சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பலகாலமாகப் பிழைபட்ட பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன்வந்தது. என் நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன். நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான் சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்லவேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை. எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.

“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின் சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” என்னும் பாடலைச் சாவேரி இராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும் சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.

“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான் இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.

நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான் “பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டு, “நிகண்டை மனனம் செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய்விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.

சந்தேகப் பேச்சு

அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.

அப்புலவர் பெருமான் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். அவர் எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்.

“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்தவண்ணமாக இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்துகொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய்விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்துவிடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”

அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விசயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

தவம் பலித்தது

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம் இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இனிமேல் இவன் விசயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது சொன்னேன்; வேண்டிக்கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது.

அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப் படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அக்கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர் வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான் இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது.

“இவ்வூரில் பந்துக்கள் யாரேனும் இருக்கிறார்களோ? இவருடைய ஆகாரத்துக்காக ஏற்பாடு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.

“இவ்வூரில் நண்பர்களும் பந்துக்களும் இருந்தாலும் அவர்கள் செல்வமுள்ளவர்களல்லர். அவர்களுக்குச் சிரமம் கொடுப்பது உசிதமாக இராது. தாங்களே ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களை வைத்துப் போசித்துப் பாடஞ்சொல்லி வருகிறார் என்ற செய்தியைப் பலர் கூறக் கேட்டிருந்தமையின் இவ்வாறு எந்தையார் சொன்னார்.

பிள்ளையவர்கள்: “திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய ஆகார விசயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என் வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விசயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்; அது பற்றி வருந்துகிறேன்.”

எந்தையார்: “அப்படியானால் இவ்வூரில் இருக்கும் வரையில் இவன் ஆகாரச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று அனுப்பிவிடுகிறேன். இவனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடங்கேட்க ஆரம்பிக்கலாம்.”

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அசுத்தமன சமயமாகிவிட்டமையால் நாங்கள் மறுநாட் காலையில் வருவதாக விடைபெற்றுக்கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்.

நாங்கள் போகும்போது எங்கள் மனத்தை அமிழ்த்திக்கொண்டிருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது போல இருந்தது. என் தந்தையார் அடிக்கடி, “சாக்கிரதையாக இருப்பாயா? தேக சௌக்கியத்தைக் கவனித்துக்கொள்வாயா? கடிதம் எழுதுவாயா? வருத்தப்படாமல் இருப்பாயா?” என்று பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். என்னைத் தனியே விட்டுச்செல்வதற்கு அவர் உள்ளம் ஏவ்வளவு தத்தளித்ததென்பதை அவை விளக்கின.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.