Sunday, September 17, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி)

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை

  1. 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என் நீதிமன்ற வேலையை முடித்தவுடன் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஒன்றுகூடி காலஞ்சென்ற எனது நண்பர் பி. எம். சிவஞான முதலியார் மூலமாக என் பிரிவைப்பற்றி ஏதோ உபசார வார்த்தைகளை கூறிய பிறகு “நீங்கள் மறுபடியும் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வந்து கலந்து கொண்டால் எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும்” என்று கூறியபோது “அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்கள் கேட்பதை மறுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு முக்கிய காரணம் ஒருமுறை நீதிபதியாயிருந்த பிறகு மறுபடியும் வழக்குரைஞராகப் போவது சரியல்ல என்று நான் தீர்மானித்ததேயாம். மறு நாள் ஒரு தினசரி ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் (Reporter) என்னிடம் வந்து “இனி உங்கள் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறீர்கள்” என்று கேட்டபோது, “ஈசுவரன் எனக்கு இனி அருளும் ஆயுட்காலத்தையெல்லாம் தமிழ் நாடகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் தொண்டு செய்யத் தீர்மானித்திருக்கிறேன்” என்று பதில் கூறினேன். அன்று முதல் இந்நாள் வரை அந்த இரண்டு தொண்டுகளையும் என்னாலியன்ற அளவு செய்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன். பிறகு வழக்குரைஞராகப் புகவேண்டுமென்று என்னை வற்புறுத்திய என் பல பந்துக்களுக்கும் சிநேகிதர்களுக்கும் நான் கூறின பதிலை இங்கு எழுதுகிறேன். அவர்கள் என்னிடம் வந்து “நீங்கள் ஏன் மறுபடியும் வழக்குரைஞராகச் சேரலாகாது?” என்று கேட்டதற்கு நான் “ஏன் மறுபடியும் வழக்குரைஞராகும்படிக் கேட்கிறீர்கள்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள் “இல்லை நீங்கள் 7 வருடம் அரசு உத்தியோகத்தில் இல்லாதபடியால் உங்களுக்கு ஓய்வூதியம் (Pension) கூட ஒன்றும் கிடையாதே. ஆகையால் மற்றவர்கள் செய்வதுபோல் நீங்கள் மறுபடியும் சுலபமாக வழக்குரைஞராக (Advocate) ஆகி வேலை பார்த்து பணம் சம்பாதித்து சுகமாய் வாழலாமே என்று கேட்கிறோம்” என்றார்கள். அதற்கு நான் “மறுபடியும் இந்த வேலை பார்த்து கட்டப்பட்டுப் பணம் சம்பாதித்து அடையவேண்டு மென்கிற சுகத்தை அந்தக் கட்டமெல்லாம் இல்லாமல் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. அதையேன் தடுக்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன்.

சிலர் உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளின் பொருட்டு நீங்கள் அப்படிச் செய்யலாகாதா? என்று கேட்டதற்கு அடியிற் கண்டபடி பதில் உரைத்தேன்:- “ஈசன் கருணையினால் எனக்கிருப்பது ஓர் ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களும். அப்பிள்ளைக்கு நான் சம்பாதித்து வைத்த பொருளே போதுமானது. என் இரண்டு குமாரத்திகளையும் தக்க இடத்தில் விவாகம் செய்து கொடுத்து விட்டேன். அவர்கள் தங்கள் புருசன் வீட்டில் பரமேசுவரன் கருணை யினால் சுகமாக வாழ்கிறார்கள். இப்படியிருக்க எதற்காக நான் மறுபடியும் நீதிமன்ற வழக்கு வேலையில் கட்டப்பட வேண்டும்”. என்று சொல்லி “என் இச்சைப்படி, தமிழுக்காக உழைப்பதைத் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, September 16, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2)

அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2

மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்’ என்ற சந்தோசத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கட்டம் தீர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாசுத்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே?

பாடங் கேட்ட சந்தோசத்தோடு நானும் என் தந்தையாரும் சாகைக்கு வந்து போசனம் செய்தோம். என் தந்தையார் திண்ணையில் சிரமபரிகாரம் செய்துகொண்டார். நான் அருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்து வந்தேன்.

கோபாலகிருட்டிண பாரதியாரைக் கண்டது

அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில்கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். அவரைக் கண்டவுடன் என் தகப்பனார் எழுந்து, “பாரதியாரவர்களா?” என்று கேட்டுக்கொண்டே திண்ணையைவிட்டு இறங்கினார். அக்கிழவர், என் தந்தையாரைப் பார்த்துவிட்டு, “யார்? வேங்கடசுப்பையரா? ஏது இவ்வளவு தூரம்?” என்று கூறியவாறே நாங்கள் இருந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தார். என் தந்தையார் அந்த முதியவரை நமசுக்கரிக்கும்படி கூறவே நான் வணங்கிவிட்டு நின்றேன்.

“இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று பாரதியார் கேட்டார்.

“இவன் என் குமாரன்.”

“என்ன செய்துகொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து வருகிறானா?”

“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று வந்திருக்கிறேன்.”

“அப்படியா? சந்தோசம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான். நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”

இந்த விசயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன். “நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன். அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால் உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என் தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக இருந்தேன்.

“இவனுக்குச் சங்கீதத்தில் எந்த மட்டும் அப்பியாசம் செய்துவைத்திருக்கிறீர்கள்? கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்கள் வருமா?”

“எனக்குத் தெரிந்த மட்டிலும் சொல்லி வைத்திருக்கிறேன். கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களில் எனக்குத் தெரிந்தவற்றிற் சிலவற்றை இவனும் பாடுவான்.”

“அப்படியா! அந்தக் கீர்த்தனங்களைக் கேட்டு எவ்வளவோ நாளாகிவிட்டது. எங்கே [1] ‘குசுமகுந்தளாம்பிகையே’ என்ற கீர்த்தனத்தைப் பாடப்பா; கேட்கலாம்” என்று பாரதியார் என்னைப் பார்த்துச் சொன்னார். நான் அதைப் பாடினேன்.

“நல்லது; பையனுக்குச் சாரீரம் இருக்கிறது. இதை வீண் பண்ணிவிடக் கூடாது. மேலும் மேலும் அப்பியாசம் செய்து வர வேண்டும்” என்று சொல்லிவிட்டு வேறு சில கீர்த்தனங்களையும் பாடும்படி சொன்னார். நான் பாடினேன். என் தகப்பனாரும் சில கீர்த்தனங்கள் பாடினார். நாங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றைப் பாடினோம்.

“இந்த மாதிரி கீர்த்தனங்களை இங்கே யார் பாடுகிறார்கள்? இந்தப் பிள்ளை இவ்வளவு நன்றாகப் பாடுவதைக் கேட்க எனக்குச் சந்தோசமாக இருக்கிறது.”

“எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதம்தான். இவனை இங்கேயே விட்டுவிட்டுப் போகலாமென்று எண்ணி வந்திருக்கிறேன். தாங்கள் இவனுக்குச் சங்கீத அப்பியாசம் செய்து வைக்கவேண்டும்” என்று என் தகப்பனார் பாரதியாரைக் கேட்டுக்கொண்டார்.

“அதற்கு என்ன தடை? எனக்கும் பொழுது போகும்” என்று அவர் சம்மதித்தார்.

என் தந்தையாரும் பாரதியாரும் பழைய சமாசாரங்களைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பேச்சினால் பாரதியார் கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களில் எவ்வளவு விருப்பமுடையவரென்பது தெரிந்தது. பின்பு சாகைக்கு வந்து பார்ப்பதாக என் தந்தையார் சொல்லவே பாரதியார் விடைபெற்றுச் சென்றார்.

பாரதியாரிடம் சங்கீத அப்பியாசம் செய்தது

மறுநாள் விடியற்காலையிலேயே நானும் என் தந்தையாரும் பாரதியார் தங்கியிருந்த சாகைக்குச் சென்றோம். அவர் அக்காலத்தில் தம் மாணாக்கராகிய இராமசாமி ஐயருடைய வீட்டில் வசித்து வந்தார். இராமசாமி ஐயர் மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கைங்கரியம் செய்வார்.

அன்றே நான் பாரதியாரிடம் சங்கீத அப்பியாசத்தைத் தொடங்கினேன். அது முதல் பெரும்பாலும் தினந்தோறும் விடியற்காலையில் பாரதியாரிடம் போய் வரலானேன். சில நாட்களில் மாலைவேளைகளில் செல்வதும் உண்டு; பிற்பகலில் அவரோடு காவேரித் துறையாகிய துலாக்கட்டத்துக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்து வருவேன். துலாக்கட்டத்தில் அக்காலத்தில் முன்சீப் கச்சேரி இருந்தது. மாயூரம் முன்சீபாக வேதநாயகம் பிள்ளை உத்தியோகம் பார்த்து வந்தார். அவர் தமிழ் வித்துவானென்று நான் கேட்டிருந்தேன். தூரத்தில் இருந்தபடியே அவர் கச்சேரி பண்ணுவதை நான் சில சமயங்களில் கவனிப்பேன்.

பாரதியாரோடு பழகப் பழக அவர் பெரிய மகானென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அவர் சாரீரம் கம்மலாக இருந்தது. அதனால் அவர் சில வருசங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று தனியே இருக்கும் நேரங்களில் அதை வாசித்துப் பொழுதுபோக்கி வந்தார். காலைவேளைகளிலும் மாலைவேளைகளிலும் மாயூரநாதர் கோயிலிலுள்ள அகசுத்தீசுவர சுவாமி சந்நிதியில் நெடுநேரம் யோகம் செய்துகொண்டேயிருப்பார்.

வேடிக்கையாகப் பேசுவதிலும் கதைகள் சொல்லுவதிலும் அவர் வெகுசமர்த்தர். ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையோடு ஒரு புராண கதையைச் சம்பந்தப்படுத்திச் சொல்வார். பொழுதுபோவதே தெரியாது. பேசும்போது அடிக்கொரு தரம் பழமொழிகள் அவர் வாக்கிலிருந்து வரும்.

அவரிடம் நான் பல கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டேன். அவர் இயற்றிய கீர்த்தனங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களுக்கு உரிய மெட்டையும் இராகதாளங்களையும் அவர் சொல்லிக் காட்டினார். சில சமயங்களில் அவர் மாணாக்கராகிய இராமசாமி ஐயரும் எனக்குக் கீர்த்தனங்களைச் சொல்லித் தருவார்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.

அடிக்குறிப்பு

1. இக்கீர்த்தனம் உடையார்பாளையம் சிவாலயத்திலுள்ள அம்பிகை விஷயமானது.

Sunday, September 10, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என்சுயசரிதை’ 13 : வழக்குரைஞராகவேலைபார்த்தது 2/2 – தொடர்ச்சி)

என் சுயசரிதை

7. முதிர் பருவம்

நான் எனது 51-ஆவது வயதில் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் முதன்மை மாநில நடுவராக(C.P.M.) வேலை பார்த்தேன். மேற்கண்டபடி நீதிபதியாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன்.

நான் நீதிபதியாக முதல் நாள் உட்கார்ந்தபோது வழக்குரைஞர்களின் தரப்பாக காலஞ்சென்ற சீமான் சேசாச்சாரியார் அவர்கள் என்னை வரவேற்றுச் சில வார்த்தைகள் பேசியபோது அதற்கு நான் பதில் சொன்னபோது “நான் நீதிபதி வேலை நடத்துங்கால் மனிதர் எவருக்கும் பயப்படாது தெய்வம் ஒன்றிற்கே பயந்து நடப்பேன்” என்று உரைத்தது ஞாபகமிருக்கிறது. அதன்படி தினம் நான் நிதிமன்றத்திற்குப் போய் என் நாற்காலியில் உட்காரு முன் நியாயப்படி விசாரித்துத் தீர்மானம் கொடுக்க எனக்குப் புத்தியையும் மன உறுதியையும் கொடுக்கும்படியாக ஈசனைத் தொழுத பிறகே உட்காருவேன். சாதாரணமாக 25 வருடங்களுக்கு மேல் சிறுவழக்கு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வியவகாரங்கள் நடத்திய படியால் இந் நீதிமன்றத்தில் நீதிபதி வேலை பார்ப்பது எனக்குச் சுலபமாக இருந்தது.

சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் சில விசயங்கள் எழுத விரும்புகிறேன். என் தமையனார் 1894-ஆம் வருசம் வக்கீலாக வழக்கு நடத்திய போது இந்தச் சின்ன நீதிமன்றத்தில் மாத்திரம் 32 ஆயிரம் வழக்குகளுக்குக் குறையாமலிருந்தன! அது குறைந்து கொண்டே வந்து. நான் 1898-ஆம் வருசம் வழக்குரைஞரானபோது ஏறத்தாழ 25 ஆயிரம் வழக்குகள் வருடத்திற்குத் தீர்மானிக்கப்பட்டன. நான் நீதிபதியான போது ஏறத்தாழ 20 ஆயிரம் வழக்குகள் இருந்தன. வருடம் ஒன்றிற்குத், தற்காலம் 5 அல்லது 6 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் இல்லை.

நீதிபதியான ஒரு வாரத்திற்கெல்லாம் வழக்குகளை, சீக்கிரம் முடிக்கும் வழியைக் கற்றுக் கொண்டேன். இதற்கு இரண்டு மூன்று குணங்கள் அநுகுணமாய் இருந்தன. அதாவது அக் காலத்தில் சாதாரணமாக மாறுபாடிகள் வழக்குகள் தான் அதிக மாயிருந்தன. வழக்குரைஞராயிருந்த போது ஏறக்குறைய எல்லா மாறுபாடிகளும் என்னிடம் தங்கள் வழக்குகளை ஒப்புவிப்பார்கள். இதனால் அவர்கள் கணக்கு ஊழல்களெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகவே அவர்களுடைய வழக்குகள் நான் நீதிபதியாக இருக்கும் போது என் முன் வந்தால் அவர்கள் கணக்குகளின் மருமங்களையெல்லாம் அறிந்திருந்தபடியால், அவர்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவது அசாத்தியமாயிருந்தது. இதைக் கண்ட மாறுபாடிகள் தங்கள் வழக்குகள் என் நீதிமன்றத்திற்கு முன்பு வராதபடி செய்ய முயன்றனர். இதையறிந்த அக்கால முதன்மை நீதிபதியாக இருந்த திவான் பகதூர் சி.ஆர். திருவேங்கடாச்சாரியார் இதைத் தடுத்து வந்தனர். மாறுபாடிகள் என் நீதிமன்றத்திற்கு முன்பாக வருவதற்கே அஞ்சுவார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் என்னை எப்போதாவது சந்தித்தால் “என்னாங்க சாமி, வக்கீலாக எங்ககிட்டே கட்டணம் (Fees) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்போ எங்க வாயிலே மண்ணை போடுகிறீர்களே” என்று கேட்பார்கள். இரண்டாவது, வழக்குரைஞர்கள் தங்கள் – வழக்குகளைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அடிக்கடி கேட்காம லிருக்க ஓர் உத்தி செய்தேன். வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்று கேட்கும் வழக்குரைஞர்களை யெல்லாம் மறு வழக்குநாட்கள்(வாய்தாக்கள்) எதிர்ப்பட்சத்திற்கு தினம் படி (Day fees) கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுவேன். இதனால் இரண்டு நன்மைகள் உண்டாயின. ஒன்று கட்டாயமாக ஒத்திவைப்பு வேண்டியவர்கள் தான் இதற்கு உடன்பட்டு கேட்பார்கள், இரண்டாவது இதனால் வழக்குரைஞர்களுக்கு மாத வரும் படி அதிகமாகியது. நான் நீதிமன்றத்தை விட்டு விலகியபின் எனது சிநேகிதர்களான பல வழக்குரைஞர்கள் என்னைச் சந்திக்கும் போது “உங்களுடன் எங்களுக்கு நாட்செலவு வரும்படி அற்றுப் போச்சுது” என்று முறையிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட மார்க்கங்களின் மூலமாக வழக்குகளைத் துரிதமாகத் தீர்மானிக்கும் வழிகண்டபின் தினம் என் நீதிமன்ற வழக்குகளை முடித்துவிட்டு முதல் நீதிமன்றத்திலிருந்து வழக்குகளை அனுப்பும்படி தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் அனுப்புவேன். ஒரு சமயம் முதல் நீதிபதியும் மூன்றாவது நீதிபதியும் ஏதோ அவசர நிமித்தமாய் நீதிமன்றத்திற்கு வராமவிருந்தபோது மூன்று நீதிமன்ற வழக்குகளையும் நான் கவனித்தது ஞாபகமிருக்கிறது

சாதாரணமாக 4 மணிக்குள் நீதிமன்ற வேலையை முடித்துக் கொண்டு சபைக்குப் போய் விடுவேன். சாயங்காலம் ஐந்து மணியானவுடன் எந்த வழக்கானாலும் நடத்தாது ஒத்திவைத்து விடுவேன். ஐந்து மணிக்குமேல் நீதிமன்றம் நடப்பது தவறு என்பது என் அபிப்பிராயம். நான் வழக்குரைஞராக இருந்தபோது ஐந்து மணிக்கு மேல் வழக்குகளை நடத்துவதை ஆட்சேபித்திருக்கிறேன். 1926-ஆம் வருசம் நான் நீதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். முன்னாள் இரவு மரித்த என் மனைவியின் தேகத்தை இடுகாட்டிற்குக் கொண்டு போய் சம்சுகாரம் செய்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டுப் பூசையை வழக்கம் போல் முடித்துவிட்டு உணவு கொண்டு நீதிமன்றத்திற்கு வழக்கம் போல் போனேன். அப்பொழுது. சுமார் 11 மணியிருக்கும். இதற்குள் எனக்கு துக்ககரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டு முதல் நீதிபதியாக இருந்த சிரீமான் திருவேங்கடாச்சாரியார் நான் அன்று நீதிமன்றத்திற்கு வரமாட்டேனென்று என் நீதிமன்ற வழக்குகளை யெல்லாம் ஒத்திவைப்பதற்காகத் தன் நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டார். நான் நீதிமன்றத்திற்கு வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே என் அறைக்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு “திரு. சம்பந்தம் இன்றைக்கு ஏன் நீதிமன்றத்திற்கு வந்தாய்” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டார். அதற்கு நான் “என்னை மன்னிக்க வேண்டும். என் மனைவி நோயாயிருந்தபோது என்னால் இயன்ற அளவு சிகிச்சை செய்து பார்த்தேன். இறந்த பின் துக்கப்பட்டு என்ன பயன். என் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்குக் கட்டம் கொடுப்பதில் என்ன பலன்? இன்றைக்கு என் நீதிமன்றத்தில் வாதிப் பிரதிவாதிகளும் சாட்சிகளும் சேர்த்து சுமார் 100 பெயர்களிருக்கலாம். இத்தனை பெயர்களும் மற்றொரு நாள் வரும்படியான கட்டத்திற்கு நான் அவர்களை உள்ளாக்கக் கூடாதென்று தீர்மானித்து வந்தேன் இங்கு; அன்றியும் நீதிமன்றத்திற்க வந்து வேலை பார்த்தால் என் துக்கத்தைக் கொஞ்சம்மறந்திருப்பேன்” என்று சொல்லி அவரை என் நீதிமன்ற வழக்குகளையெல்லாம் என் நீதிமன்றத்திற்கே அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டேன். இச் சந்தர்ப்பங்களில் நான் தலைமைநீதிபதியாகச் சிலகாலம் பொறுப்பு வகித்தபோது நடந்த ஒரு வியவகாரத்தை இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் ஐந்தடித்தவுடன் கீழே சிறுவழக்கு நீதிமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்து ஐந்து மணிக்குமேல் வேலை செய்து கொண்டிருந்த குமாசுக்களையெல்லாம் அழைத்து “அரசார் உங்களுக்கெல்லாம் ஐந்து மணி வரையில் வேலை செய்யச் சம்பளம் கொடுக்கிறார்களே யொழிய வேறில்லை. ஆகவே நீங்கள் ஐந்தடித்தவுடன் கட்டுக்களைக் கட்டிவிட்டு வீட்டிற்குப் போங்கள். மறு நாள் சரியாக பத்தரை மணிக்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எல்லாரையும் வீட்டிற்கனுப்பினேன்.

சின்ன நீதிமன்றப் பிணையாட்கள் (Bailiff) சாதாரணமாக இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே இதைத் தடுக்க ஒரு சிறிது நான் முயன்றேன் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை ஒரு வழக்குரைஞர் ஒரு பிணையாளர் இலஞ்சம் வாங்கிக்கொண்டு பிரதிவாதியைப் பிடிக்காமலிருக்கிறான் என்று என்னிடம் வந்து முறையிட்டார். நான் மத்தியான போசனத்திற்காக 2 மணிக்கு என் அறைக்குப் போனவுடன் அந்தப் பிணையாளை அழைத்து அந்தப் பிரதிவாதியை சாயங்காலத்திற்குள் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிப்பாய்க் கூறினேன். இதன் பலனாக நான் 3 மணிக்கு நீதிமன்றத்திற்குப் போகுமுன் அந்தக் கட்சிக்காரனைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். இம்மாதிரியாக நான் கொஞ்சம் கண்டிப்பாயிருந்ததினால் என் காலத்தில் பிணையாளிகள் லஞ்சம் வாங்குவதே நின்றுவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் மேல் அதிகாரிகள் கவனித்தால் இவ்வழக்கம் மிகவும் குறையும் என்பது என் அபிப்பிராயம்.

இவ்வாறு நான் கண்டிப்பாய் இருந்தபடியால் வழக்குரைஞர்கள் பெரும்பாலர்களுடைய அன்பினைப் பெற்றேன் என்று நினைக்கிறேன். நான் எனது 55-ஆவது வயதில் இவ்வேலையினின்றும் விலகியபோது அவர்கள் எனக்கு ஒரு தேநீர் விருந்து கொடுத்தனர். அன்றியும் நீதிமன்றச் சிப்பந்திகளும் தனியாக வேறொரு தேநீர் விருந்து கொடுத்தனர்.

இதற்கிடையில் சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்க்கும்படி நேரிட்டது. அக்காலமெல்லாம் நீதிமன்ற வேலையெல்லாம் மத்தியானத்திற்குள் முடித்துக்கொண்டு என் நீதிமன்ற வீடுபோய் சேர்வேன், ஒரு நாளாவது சாயங்காலத்தில் நீதிமன்ற வேலை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. அதுசமயம் இப்போதிருப்பதுபோல், அத்தனை மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் கிடையா. தற்காலம் இந்த மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டும் ஐந்து உதவித்தொகை (Stipendiary) நீதிமன்றங்களுக்கு என்ன வேலையிருக்கிறதென ஆச்சரியப்படுகிறேன்.

சுமார் 4 வருசங்கள் நான் நீதிபதியாயிருந்தபோது ஒரே ஒரு வழக்கில்தான் என் தீர்மானம் உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது என்று எழுத விரும்புகிறேன்.

மேற்கண்டபடி உரிமை வழக்கு நீதிமன்றத்திலும் குற்ற வழக்கு நீதிமன்றத்திலும் நான் நியாயாதிபதியாக இருந்திருக்கிறேன். இவ்விரண்டில் உரிமை மன்ற நீதிபதியாக யிருந்ததுதான் என் மனதிற்குப் பிடித்தது. ஏனென்றால் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகுளில் என்னையுமறியாதபடித் தவறாகத் தீர்மானித்தாலும் வழக்கி் தோற்றக் கட்சிக்காரனுக்கு சொல்ப நட்டத்துடன் போகிறது. நடுவராக நான் தவறாக ஒருவனைத் தண்டித்தால் அவனுடைய வாழ்க்கையே அழிந்தாலும் அழியுமல்லவா?

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, September 09, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 – தொடர்ச்சி)

அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2

“தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகமடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள்.

பிள்ளையவர்கள் இதற்கும் இவ்வாறு பொருள் கூறி, “இந்த இரண்டு செய்யுட்களுக்கும் இப்போது நீர் பொருள் கூறும்” என்று சொன்னார். நான் கேட்டவாறே உரைத்தேன். பிறகு இலக்கண சம்பந்தமான சில சிறு கேள்விகளைக் கேட்டார். நான் விடை சொன்னேன்.

“இந்தச் செய்யுள் எவ்வகையைச் சார்ந்தது?”

“இது கலிநிலைத்துறை”

“வெண்பாக்களைச் சீர்பிரித்து அலகூட்டுவீரா?”

“ஏதோ தெரிந்த வரையிற் செய்வேன்.”

உடனே சில வெண்பாக்களை எப்படிச் சொன்னால் தளைபிறழ்ந்தனவாகத் தோற்றுமோ அப்படியே சொல்லித் தனித்தனியே சீர் பிரித்துச் சொல்லச் சொன்னார். நான் ஜாக்கிரதையாகச் சீர்பிரித்துச் சொன்னேன்.

“நெல்லுக் கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கு மாங்கே பொசியுமாம்”

என்ற செய்யுளைச் சீர்பிரித்துச் சொல்லுகையில், “நெல்லுக்-கிறைத்தநீர்-வாய்க்கால்-வழியோடிப்” என்று தனித்தனியே பிரித்து அலகூட்டிச் சொன்னேன்.

“நெல்லுக்-கிறைத்த-நீர் வாய்க்கால்-வழியோடி, என்று பிரித்தால்தானே மோனை அமைகிறது? நீர் பிரிக்கும்போது மூன்றாம் சீர் வாய்க்கால் என்றல்லவோ ஆகிவிடும்? அப்போது மோனை இராதே!” என்றனர்.

“அப்படியே பிரித்தால் வெண்டளை பிறழ்ந்து விடும். இறைத்த-நீர்வாய்க்கால் என்பது ஆசிரியத்தளையும்: நீர்வாய்க்கால்-வழியோடி என்பது கலித்தளையும் ஆகிவிடும். வெண்பாவில் பிறதளை விரவாது” என்று விடை பகர்ந்தேன்.

“நல்லது. யாப்பிலக்கணத்தை நன்றாகப், படித்திருக்கிறீர்.”

“காரிகை பாடம் சொன்ன ரெட்டியாரவர்கள் மிகவும் தெளிவாக எனக்குக் கற்பித்தார்கள்.”

அப்போது பிள்ளையவர்கள் ரெட்டியாரை மிகவும் பாராட்டிப் பேசினார்.

அன்று பிள்ளையவர்கள் என் தமிழறிவு இவ்வளவினதென்பதை ஒருவாறு பரிசோதித்து அறிந்துகொண்டாரென்றே எண்ணினேன். அவர்கள் வாயிலிருந்து இரண்டு செய்யுட்களுக்குப் பொருள்கேட்டு அப்படியே சொல்லிவிட்டோமென்ற ஒரு திருப்தியும், “இன்றே பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்” என்ற எண்ணமும் எனக்கு உண்டாயின.

“என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம் ஆரம்பித்துவிடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார். அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்துவிட்டதென்றே தோற்றியது.

“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கிவிட்டோமே” என்று நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன். என் தந்தையார், “நாளைக்கு நல்லதினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.

“மெத்த சந்தோசம். அப்படியே செய்யலாம்” என்று தம் உடன்பாட்டை அவர் தெரிவித்தார்.

பாடம் ஆரம்பித்தது

மறுநாள் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். முதலில் நைடதத்தை அவர் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அதில் சில பாடல்களைப் படிக்கச் செய்து அவற்றின் பொருளைக் கூறினார். அங்கேயுள்ள விசேடங்களை விளக்கியும் இலக்கணச் செய்திகளைப் புலப்படுத்தியும் வந்தார். நான் அந்த நூலை முன்பே பல தடவை படித்திருந்தும் அவர் கூறிய முறையிற் பாடம் கேட்கவில்லையாதலால் எனக்கு அவருடைய போதனை அதிக இன்பத்தை உண்டாக்கியது. அவர் பாடம் சொல்லும்போது எனக்கு எந்தச் சொல் விளங்காதோ அதற்கு மாத்திரம் பொருள் சொல்வார்; எனக்கு எந்த விசயம் தெரியாதோ அதை மாத்திரம் விளக்குவார்.

சில பாடல்கள் ஆனவுடன், “இன்னும் சில தினங்களில் இந்த நூலை முடித்துவிடலாம். பிறகு வேறு ஒரு நூலைத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டு, “அப்பா சவேரிநாது” என்று கூப்பிட்டார். அவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அங்கே வந்தார்.

“நாளை முதல் இவருக்கு நைடதத்தைப் பாடம் சொல்லி வா” என்று அவருக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே மறு நாள் முதல் நான் அம்மாணாக்கரிடமே பாடங் கேட்டு வரலானேன்.

சவேரிநாத பிள்ளை

சவேரிநாத பிள்ளை என்பது அவர் பெயர். அவர் உரோமன் காதொலிக்கக் கிறித்தவர்; பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டு வந்தார். அவரைப் பார்த்தால் யாரும் கிறித்தவரென்று சொல்லார். விபூதி அணிந்திருப்பார். பிள்ளையவர்களிடத்தில் அவருக்கு அளவற்ற பக்தி உண்டு. ஆசிரியருடைய குடும்பக் காரியங்களெல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். எப்போதும் உத்சாகமுள்ளவராகவே இருப்பார்; வேடிக்கையாகப் பேசுவார். எவ்வளவு துக்கமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் தம்முடைய பேச்சால் அந்த நிலையை மறக்கச் செய்வார்; சிநேகம் செய்வதற்கு யோக்கியமானவர்; தமிழ்ப் பாடலிலுள்ள பொருள்களை இரசமாக எடுத்துச் சொல்வார்; அடிக்கடி வேறு விடயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவரோடு சேர்ந்து இருந்தால் பொழுதுபோவதே தெரியாது.

நான் அவரிடம் பாடங் கேட்டபொழுது அவருடைய கல்வி ஆழமானதன்று என்ற எண்ணமே எனக்கு முதலிற்பட்டது. அதனால், அவர் பாடஞ் சொல்லும்போது சமற்காரமாக அவர் கூறும் விசயங்களை அனுபவிக்க முடியவில்லை. இனிமையாகப் பொழுதுபோவதை நான் விரும்பவில்லையே. அதிகமாக விசயங்களைத் தெரிந்துகொள்ளவே விரும்பினேன். நைடதம் முன்னமே படித்த நூல்தானே? அதை மீட்டும் அவரிடம் கேட்கும்போது அவர் இரசமாகச் சொன்னாலும், நான் அறியாத கருத்தையோ, இலக்கணத்தையோ அவர் விளக்காமையால் எனக்கு இன்பமுண்டாகவில்லை. சில இடங்களில் நான் அறிந்த விசயம்கூட அவருக்குத் தெரியவில்லை. அவர் பாடம் சொல்லுவார். நான் இடைமறித்து, “இந்தச் செய்யுள் என்ன அலங்காரம்?” என்று கேட்பேன். அவருக்குத் தெரியாது. “பார்த்துத்தான் சொல்லவேண்டும்” என்று மழுப்புவார். நான் படித்த புத்தகத்தில் உரையில் இன்ன அலங்காரம் என்று குறித்திருக்கும். அதை விளக்கும்படிக் கேட்பேன். “அந்த அலங்காரத்தின் இலக்கணம் இதில் எவ்வாறு அமைந்திருக்கிறது?” என்று வினவுவேன். எனக்குத் திருப்தி உண்டாகும்படி விளக்க அவரால் இயலாது. அவர் என்னைக் கேள்வி கேட்பதுபோய் நான் சந்தேகம் தீர்த்துக்கொள்வதுபோல அவரைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்.

“எவ்வளவோ கட்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தோம். இங்கு வந்தும் பிள்ளையவர்களிடம் நேரிற் பாடங் கேட்க இயலவில்லையே! எங்கே போனாலும் நம் அதிர்ட்டம் நம்மைப் பின்தொடருகிறதே!” என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று.

“இந்த நிலை மாறவேண்டும். இதற்கு என்ன வழி?” என்று யோசிக்கலானேன்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.

Sunday, September 03, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராகவேலைபார்த்தது தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2


இப்படிச் சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வழக்குகளை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் வழக்கு என்று கண்டறிந்தால் நீதிமன்றத்தில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் தொகுப்புரை (Sum up) செய்ய வேண்டி வரும்போது நான் வேறொன்றும் சொல்லாமல் “இந்த வழக்கில் நீதிமன்றத்தார் காலத்தை இன்னும் எடுத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை” என்று முடித்திருக்கிறேன். இப்படி செய்ததினால் நீதிபதிகள் இதர கேசுகளில் நான் வற்புறுத்திப் பேசினால் அவற்றில் ஏதோ உண்மை இருக்கவேண்டுமென்று என்னைப் பொறுமையுடன் கேட்டிருக்கின்றனர். இதைப்பற்றி சில நீதிமன்ற வழக்குரைஞர்கள் நான் செய்தது தவறு “நிசமோ தப்போ கடைசிவரையில் மன்றாடித்தான் தீரவேண்டியது வழக்குரைஞர் கடமை” என்று என்னிடம் கூறியிருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மதிப்புமிகு நீதிபதி பாடம் முன்பாக நான் ஒருமுறை நடத்திய போது பிரதிவாதிக்காக வக்காலத்து வாங்கிக்கொண்ட நான் வாதியையும், வாதி சாட்சிகளையும் இரண்டு நாள் குறுக்கு கேள்விகள் (Cross Examination) கேட்டேன். அது முடிந்தவுடன் பிரதிவாதிக்காக சாட்சிகள் ஒருவரையும் நான் கூப்பிடவில்லை. அன்றியும் தொகுப்புரை (Sum up) செய்ய வேண்டி வந்த போது “வாதியின் சாட்சிகளை குறுக்குவிசாரணை (Cross) பண்ணவேண்டியதை என் கடமைப்படி செய்தேன். தொகுப்புரை செய்யவேண்டியது என் இச்சையில் இருக்கிறது. அதை செய்து நீதிமன்றத்தார் அவர்களுடைய காலத்தை வழக்கில் வீணாகப் போக்குவதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று கூறி உட்கார்ந்தேன். பாடம் துரை நான் செய்தது சரியானது என்று ஒப்புக்கொண்டு ஏதோ புகழ்ந்தனர். கட்சிக்காரர்கள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டு இந்த வழக்கை வெல்வது கடினம் என்று எனக்குத் தோன்றினால் கட்சிக்காரர்களிடம் உண்மையைக் கூறி “ஏன் எனக்குக் கட்டணம் கொடுக்கிறீர்கள் ? இந்த பணத்தை ஏதாவது தருமம் செய்யுங்கள்” என்று சொல்லியனுப்பி இருக்கிறேன் பல தடவைகளில்.

இப்படிச் செய்ததால் கட்சிக்காரர்களுடைய நட்பைப்பெற்று எனக்குச் சிறுவழக்கு நீதிமன்றத்தில் முக்கியமாக அதிக வழக்குகள் வந்தன. இதுதான் பிறகு மேல் அதிகாரிகள் என்னைச் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததற்கு அடித்தளமாக இருந்ததென நம்புகிறேன்.

குறுக்குக் கேள்விகள் கேட்பதில் கொஞ்சம் வல்லவன் என்ற பெயர் பெற்றபடியால் எனக்குச் சென்னையிலும், வெளியிலும் குற்ற வழக்குகள் கிடைத்தன. இந்த அனுபவம் பிறகு சிலகாலம் முதன்மை மாநக நடுவராக நியமிக்கப்பட்டபோது எனக்கு உபயோகமாயிருந்தது.

நான் முக்கியமாக வழக்கு நடத்திய சில நீதிபதிகளைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் வழக்குரைஞராக வேலை செய்ய ஆரம்பித்தபோது சிறுவழக்கு நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்தவர் டி. (இ)ரொசொரியோ (D. Rozorio) என்பவர். அவர் மிகுந்த பொறுமையான சுபாவமுடையவர். அவர் தினம் சரியாகப் பதினோரு மணிக்கு நிமிடம் தவறாமல் நீதிமன்றத்துக்கு வந்து உட்காருவார். அன்றியும் வழக்குகளைச் சீக்கிரம் தீர்மானிப்பார். இந்த இரண்டு குணங்களையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பிறகு அதே நீதிமன்றத்தில் அதே நாற்காலியில் சிறுவழக்கு நீதிபதியாக நான் சில வருசம் நடவடிக்கை நடத்திய போது இவ்விரண்டும் எனக்கு மிகவும் பயனளித்தன. ஆனால் அவருடைய பொறுமையை நான் கற்றுக் கொள்ளவில்லை!

சிறுவழக்கு நீதிமன்றத்தில் என்காலத்தில் மற்றொரு நீதிபதியாக இருந்தவர் மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார். அவரிடம் நான் கற்றது வழக்கில் முடிவில் தொகுப்புரை (Sum.up) செய்யும்போது முக்கியமான அம்சங்களை எவ்வளவு சுருக்கமாய்ச் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது. இவருடன் பல்லினப் பொதுமன்றத்தில்(Cosmopolitan Club) சனிக்கிழமைகளில் சீட்டாடுவேன். அச்சமயம் நீதிமன்றத்தில் நடக்கும் பல வேடிக்கைகளைப்பற்றிய கதைகளை மேசையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கெல்லாம் சொல்லி சிரிப்புண்டாக்குவார். அவற்றுள் ஒன்றை இங்கு எழுதுகிறேன். ஒருநாள் “சம்பந்தம், நான் நீதிமன்றத்திற்கு வரும்போது மிகவும் தலைகுனிந்தபடி வருகிறேனே அதற்குக் காரணம் தெரியுமா?” என்று கேட்டார். “வணக்கமாய் வருவது நல்லது என்று நீங்கள் அப்படிச் செய்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன். அதற்கவர் “அது. ஒருபுறமிருக்கட்டும். நான் முதல் முதல் நீதிமன்றத்தில் என் ஆசனத்தில் உட்கார வரும்போது தலை நிமிர்ந்து கொண்டு வந்தேன். அப்போது கயிற்றிழுப்பு விசிறி(பங்கா) நீதிமன்றத்துக்குப் பின்புறமிருக்கும். வேலையாள் வேகமாய் விசிறியை இழுத்துவிட்டான். உடனே என் தலை குட்டை விசிறியால் தாக்கப்பட்டு எகிறிப் போய் விழுந்தது. அது முதல் நான் வரும்போதெல்லாம் மிகவும் தலை குனிந்து கொண்டுவர ஆரம்பித்தேன்” என்று பதில் சொன்னார். இது நடந்தபோது நீதிமன்றத்தில் இப்போதிருப்பது போல் மின்சார பங்கா (electric fan) கிடையாது.

இதன்பிறகு இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் சர் வி. சி. தேசிகாச்சாரியார். சாதாரணமாக இவர் நீதிமன்றத்தில் எனக்கு அதிக வழக்குகள் கிடைக்கும். இதற்குக் காரணம் நான் அவரது நன்மதிப்பைப் பெற்றதே என்று நினைக்கிறேன். இவர் ஒரு சிநேகிதரிடம் ஆங்கிலத்தில் சொன்னதாக அந்த சிநேகிதர் எனக்குத் தெரிவித்ததைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “தங்கள் கட்சிக்காரர்களின் ஊழல்களை மறைத்து நீதிமன்றத்தார் கண்ணில் மண்ணைப் போட்டு வழக்குகளை வெல்ல விரும்பாத வழக்குரைஞர்கள் இரண்டு பெயர்கள்தான். ஒருவர் பி. எம். சிவஞான முதலியார், மற்றொருவர் சம்பந்த முதலியார்” என்றனராம்.

உரிமையியல் வழக்குகளில் கட்டணம் (Fees) தொடர்பில் நீதிமன்றத்தார் சட்டப்படி, ஒவ்வொரு வழக்கிற்கும் என்ன கட்டணம் உண்டோ அதற்குக் குறைவாக வாங்குவதில்லை என்று தீர்மானித்து அதன்படியே நடந்துவந்தேன்.

எனது ஆருயிர் நண்பரான சி. இரங்கவடிவேலு முதலியார் தானும் பி. எல். பரிட்சையில் தேறினவுடன் அவரை எனது இளையராக (Junior) வைத்துக்கொண்டு நீதிமன்ற வேலையைப் பார்த்துவந்தேன். அவர் 1923-ஆம் வருசம் எனது துரதிர்ட்டத்தால் காலவியோகமாக வழக்குரைஞர் வேலையில் முன்பே குறைந்திருந்த ஆர்வம் மிகவும் குன்றியது. ஆகவே சீமான் சர் சி. பி. இராமசாமி ஐயர் அவர்கள் 1924-ஆம் ஆண்டு என்னை அழைத்து சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதி வேலையை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன், இதனுடன் என் நடுப்பருவ அனுபவங்களை முடித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, September 02, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2 – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2

பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று சிரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோச உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி நமக்கு ஒரு குறைவும் இல்லை” என்ற நம்பிக்கை என் அந்தரங்கத்திலிருந்து ஒளிவிட்டு வந்தது.

கனவும் பயனும்

என் தந்தையாரும் அன்று இரவு என்னைப் போலவே அமைதியாகத் தூங்கவில்லை. அதற்குக் காரணம் என்னைத் தனியே விட்டுச்செல்ல வேண்டுமே என்ற கவலைதான். அதே ஞாபகத்தோடு அவர் படுத்திருந்தார்.

படுக்கையிலிருந்து காலையில் எழுந்தவுடன், “சாமா” என்று என்னை அழைத்தார். “இராத்திரி நான் ஒரு சொப்பனம் கண்டேன். தம்பதிகளாகிய ஒரு கிழவரும் கிழவியும் வந்து என்னிடம் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, ‘உன் பிள்ளைக்குக் கொடு; அவனைப்பற்றிக் கவலைப்பட வேண்டா’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அது முதல் எனக்கு மிக்க தைரியம் உண்டாகிவிட்டது. உனக்கு சேமம் உண்டாகுமென்றே நம்புகிறேன். நீ கவலைப்படாமல் இரு” என்று சொன்னார். எனக்கோ அச்சமயத்தில் ஒரு கவலையும் இல்லை. ஆனாலும் அவர் என் கவலையைப் போக்குபவரைப் போலத் தம்முடைய கவலைக்கு ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டார்.

பொழுது நன்றாக விடிந்தது. காலை நியமங்களை முடித்துக்கொண்டு நாங்கள் இருவரும் பிள்ளையவர்கள் வீட்டுக்குச் சென்றோம். முதற்கட்டில் சைவச்செல்வர்கள் சிலருடன் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் புன்னகையோடு, “வாருங்கள்; உட்காருங்கள்” என்று சொன்னார். முதல் நாள் அவருடைய வார்த்தையில் அயலாரை உபசரிப்பதுபோன்ற தொனி இருந்தது. இரண்டாம் நாளோ அவர் வாய் என் தந்தையாரை வரவேற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் பார்வை என்மேல்தான் விழுந்தது. அவர் குரலில் ஒரு பற்றோடு கூடிய அன்பு தொனித்தது. முதல் நாள் எங்களை அயலாராக எண்ணிய அவர் அன்றைத் தினம் தம்மைச் சேர்ந்தவர்களாகவே எண்ணினார் போலும்!

“இராத்திரி ஆகாரம் சௌகரியமாக இருந்ததா? நீங்கள் தங்கியுள்ள சாகை வசதியாக இருக்கிறதா?” என்று வினவினார்.

“எல்லாம் சௌகரியமாகவே இருக்கின்றன. நேற்று இராத்திரி கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்தோம். இவனுடைய சேமத்தைக் குறித்து சந்நிதியில் பிரார்த்தனை செய்தேன். இராத்திரி தூக்கத்தில் நான் ஒரு சொப்பனம் கண்டேன்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் “என்ன சொப்பனம் அது?” என்று கேட்கவே தந்தையார் அதை எடுத்துரைத்தார். “இது நல்ல சகுனம். சிரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் கிழவர், கிழவி என்று சொல்வது இந்தத் தலத்தில் வழக்கம். உங்கள் கனவில் தோன்றியவர்கள் அவ்விருவருமே. நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டா; இவர் சேமமாக இருப்பார்” என்று அந்தக் கனவுக்குப் பொருள் கூறினார் அப்புலவர் கோமான்.

என் தந்தையார் தம் கனவில் சிரீ மாயூரநாதரே எழுந்தருளியதாக நம்பித் திருப்தி அடைந்தார்; நானோ பிள்ளையவர்கள் நேரே இருந்து. “நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்படவேண்டா” என்று கூறியதுபற்றித் திருப்தியுற்றேன்.

பேச்சினிடையே அனுபவ வார்த்தைகள்

அப்பால் அங்கே வந்திருந்த கனவான் ஒருவர் ஆறுமுக நாவலரைப் பற்றிய சில செய்திகளைச் சொன்னார். நாவலர் சிதம்பரத்தைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றதும் அவர் வரவை அறிந்து யாழ்ப்பாணத்து வித்துவான்களும் பிரபுக்களும் கடற்றுறையில் அவரை எதிர்கொண்டழைத்துச் சென்று உபசரித்ததும் பிறவுமாகிய சமாசாரங்களை அவர் சொன்னார். மற்றொருவர் வடலூரில் இராமலிங்க வள்ளலார் இருந்ததையும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் விரிவாகக் கூறினார். பிறகு பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் அரியிலூர் முதலிய ஊர்களைப்பற்றி விசாரித்தனர். அங்கே உள்ளவர்கள் வித்துவான்களிடம் காட்டும் ஆதரவையும் பிறருக்குத் தங்களால் இயன்ற உபகாரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஏழைகளுக்கும் இருப்பதையும் தகப்பனார் எடுத்துச் சொன்னார்.

காட்டுப் பிரதேசங்களென்று நாம் சொல்லுகிறோம். அங்கேதான் சீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக ஆகச் சுயநலமும் அதிகமாகின்றது. நாகரிகமுள்ள இடங்களில் உபகாரச் சிந்தையுள்ளவர்களை அருமையாகத்தான் பார்க்கிறோம்” என்று பிள்ளையவர்கள் கூறினர்.

அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவரது அனுபவத்திலிருந்து எழுந்தவை என்று பிற்காலத்தில் நான் அறிந்தேன்.

பரீட்சை

பிறகு நாங்கள் விடைபெற்றுச் சென்று பகல் உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர் திருநாகைக் காரோணப் புராணத்தை வருவித்து என்னிடம் அளித்து. “இதில் ஏதேனும் ஒரு செய்யுளை எடுத்துப் படியும்” என்று சொன்னார். நான் அந்தப் புத்தகத்தைப் பிரித்து நாட்டுப் படலத்திலுள்ள ஒரு செய்யுளை அமைதியாக இசையோடு மெல்லப் படிக்கலானேன். நான் படித்த செய்யுள் வருமாறு:

புன்மை சால்கிழங் ககழ்ந்திடும் போதெதிர் போதும்
அன்மை தீர்மணி சுரையிரும் பாலகற் றிடுவார்
வன்மை மேவிய தாயினு மாண்பறி யாரேல்
மென்மை மேவிழி பொருளினு மிழிந்ததாய் விடுமே”
 (நாட்டுப்படலம், 38).

முதலில் ஒரு முறை மனத்துள் படித்துப் பார்த்த பிறகே வாய்விட்டுப் படித்தேன். ஆதலால் நான் தடையில்லாமல் படிக்க முடிந்தது. பிள்ளையவர்கள் அந்தச் செய்யுளின் பொருளைத் தெளிவாக எனக்குச் சொன்னார்; பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறினார்; பதசாரமும் சொல்லி விளக்கினார்.

“குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் காட்டில் தங்களுக்கு ஆகாரமாக உதவுகின்ற கிழங்குகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அப்பொழுது பூமியில் புதைந்துகிடக்கும் மணிகள் வெளிவருகின்றன அவற்றைக் கடப்பாறையினாலே ஒதுக்கிவிட்டு மேலும் தோண்டுகிறார்கள். அவர்களுக்குக் கிழங்கினிடம் உள்ள மதிப்பு மணியினிடம் இல்லை. உலகத்தில் எவ்வளவு சிறந்த பொருளாயிருப்பினும் அதன் பெருமையை அறியாதவரிடம் அகப்பட்டால் மிகவும் இழிந்த பொருளைப் போலாகிவிடும்.

“இந்த விசயம் அப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்க் காவியங்களில் நாட்டு வருணனையில் இத்தகைய செய்திகளை அமைப்பது புலவர் மரபு. அப்படி வருணிக்கும்பொழுது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து வகை நிலங்களையும் அவற்றில் நிகழும் செய்திகளையும் தனித்தனியே விரிவாக வருணிப்பார்கள். இந்த வருணனை, மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் இயல்பையும் செயல்களையும் சொல்லுமிடத்தில் வருகின்றது. வருணனையோடு உலக இயல்பாகிய நீதி ஒன்றும் இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது.

“அடுத்த பாடலையும் படியும்” என்று பிள்ளையவர்கள் சொல்லவே நான் படித்தேன்:-

முறிவி ராயபைம் பொழிலிற்செம் முழுமணிநோக்கிச்
செறிவ தீயெனக் குடாவடி வேறுகான் சென்று
பிறவி லாவிர வழலெனப் பிறங்கவுள் வெதும்பும்
அறவி லாரெங்குச் சாரினுஞ் சுகமடை யாரால்.”

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.