Monday, November 23, 2015

வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்




வ.உ .சி. - va.u.si.
தலைப்பு-வ.உ.சி.பன்முக ஆளுமை : thalaippu_vu.si._panmugaaalumai
  வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
  இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்.
  மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை ஆகிய நான்கு நூல்களை இயற்றிய நூலாசிரியராகவும், இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவராகவும் திருக்குறளுக்கும் தொல்காப்பியத்துக்கும் பதிப்பாளாராகவும் இருந்திருக்கிறார்.
  அத்துடன் கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
  இது மட்டுமன்றி சிறந்த மேடைப்பேச்சாளராகவும் பத்திரிகை ஆசிரியராவும் விளங்கியிருக்கிறார்.
  அத்துடன் இயேம்சு ஆலென்(James Allen) என்கின்ற பிரித்தானியத் தத்துவ எழுத்தாளர் எழுதிய “As a man Thinketh, Out from the heart, The part of prosperity, The way to peace” ஆகிய நூல்களைத் தமிழில் எண்ணமே வாழ்வு /மனம் போல வாழ்வு, அகமே புறம், ஆற்றலுக்கு வழி / வலிமைக்கு மார்க்கம், அமைதிக்கு வழி / சாந்திக்கு மார்க்கம் என மொழி பெயர்த்திருக்கிறார்.
  19 ஆம் நூற்றாண்டில் தமிழகத் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். “நமது தலைவர்கள் இங்கிலீசில் பேசுவதையும் யோசிப்பதையும் நிறுத்தினால் ஒழிய நமது மொழி மேன்மைப்பட இடமில்லை” என்ற  கருத்தை பாராதியார் மேற்கோள்காட்டியதைக் கருத்தில் எடுத்த வ.உ.சி “மொழிப்பற்று வழி நாட்டுப்பற்று உருவாகும் அதனால் தலைவர்கள் தமிழில் பேசவேண்டும்” எனத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
  பல பதின்மங்கள் கடந்த இன்றையக் கால கட்டத்திலும் ஆங்கிலத்தில் பேசுவதும் ஆங்கிலத்தில் சிந்திப்பதும் தமிழ்த்தலைவர்களைப் பற்றியிருக்கும்  ஒரு தீராத் தொற்றுநோய் போலவே தெரிகிறது. வ.உ.சி என்ற எளிய தமிழ் ஆளுமையின் வரலாற்றில் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள இருக்கின்றது. வ.உ.சி போன்ற எளிய தலைவர்கள் மறைந்தும் வாழ்ந்துகொண்டும் வழிகாட்டிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
இரவி இந்திரன்

Saturday, November 21, 2015

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 07: ம. இராமச்சந்திரன்

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippuகவிதைஇலக்கணம்-கவிமணி :kavithai_kavimani_malarummaalaiyum

இயல் – 3

இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய கவிஞர்களில் பாட்டுக்கொரு புலவன் பாரதி1 முதலிடம் பெறுகிறார். எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் இவையே பாரதியாரின் கவிதை வெற்றிக்கும் காரணமாக விளங்கிற்று. அடிமை வாழ்வில் சிக்கித் தவித்த மக்களுக்குப் பாரதியின் கவிதை அமுதாக (ஒளடதம்) அமைந்தது. சோர்ந்து கிடந்த மக்களும் வீர உணர்வு கொண்டு சீறி எழுவதற்குத் தூண்டு கோலாய் விளங்கின பாரதியின் கவிதைகள்.
  இருபதாம் நூற்றாண்டில் பல கவிஞர்கள் கவிதைகள் பாடியிருப்பினும் நாட்டு விடுதலையைப் பாடிய கவிஞர்களே மக்கள் மனத்தில் இடம் பெற்று விளங்கினார்கள். பாரதியாருக்கு அடுத்த நிலையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்களும், தேவி என்று அழைக்கப்பெறும் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களும் சுத்தானந்த பாரதியார், திரு.வி.க.வும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார்கள். திரு.வி.க. ‘நவசக்தி’ இதழ் நடத்தினார். பெண்ணின் பெருமை பேசினார். சமயப் ‘பொது வேட்டல்’ பாடினார்.
 மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்தல் வேண்டும். விடுதலை வேட்கையின் சின்னமாகத் தேசியக் கொடி விளங்க வேண்டும் என்னும் அவாக் கொண்டு,
வீரர் துணிந்தேறி நட்ட கொடி – இது
                வெற்றி விருதா யெடுத்த கொடி;
யாரும் இறைஞ்சி வணங்குங் கொடி – நமக்
                கென்றும் சுதந்திரம் ஈட்டும் கொடி.2
என்று பாடினார் தேசிக விநாயகம் பிள்ளை.
  சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்கள் பிறர்க்கு அஞ்சி நடுங்கி வாய்மூடிக் கிடந்தனர். ஏழை எளிய மக்களையும் சிங்கம்போலச் சீறி எழச்செய்தார் பாரதியார்.
‘              பறையருக்கும் இங்கு தீயர் புலயருக்கும் விடுதலை
                பரவரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுதலை’ 3
என்று விடுதலைப்பண் பாடி விடுதலைக்கனலை கொழுந்து விட்டு எரியும்படிச் செய்தார்.
  இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லாக் கவிஞராக விளங்கும் பாரதியாரைப் பின்பற்றி, பாரதிக்குத் தாசனாக விளங்கிய கனக சுப்பிரத்தினம் அவர்கள் பின்னாளில் பெருங்கவிஞராக விளங்கினார்கள். பாரதிதாசன் என்றே சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் அவர், நாட்டு விடுதலை பற்றி அதிகம் பாடியதாகத் தெரியவில்லை. அவர் தொடக்க காலத்தில் கதர் இராட்டினப் பாட்டு’ பாடியுள்ளார். எனினும் நாட்டு விடுதலையினும் மொழி விடுதலைக்கு முதல் இடம் கொடுத்தார். எனவே பாரதிதாசன் கவிதைகளில் மொழி உணர்ச்சி பற்றிய கவிதைகளே மிகுதியும் இடம் பெற்றுள்ளன.
‘              தமிழுக்கும் அழுதென்று பேர் அந்தத்
                தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 4
என்று தமிழ் மொழியைத் தம் உயிராகக்கருதினார் பாரதிதாசன்.
‘               கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
                கழையிடை ஏறிய சாறும்,
                பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சு
                பாகிடை ஏறிய சுவையும்,
                நனிபசு பொழியும் பாலும் – தென்னை
                நல்கிய குளிரின் நீரும்,
                இனியன என்பேன் எனினும் – தமிழை
                என்னுயிர் என்பேன் கண்டீர்’ 5
என்று தமிழ் மொழியே தம் வாழ்வாக அமைந்துள்ளமையும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
  கவிஞர் வரிசையில் முதலிடம் பெற்றவர் பாரதிதாசன். தமிழின் சிறப்புபற்றிப் பாடியதோடு சீர்திருத்தக் கொள்கைபற்றியும் நிறையப் பாடியுள்ளார். காரணம் தந்தை பெரியாரோடு பெரிதும் நட்பு கொண்டிருந்தமையே.
  ‘பெண்குழந்தை தாலாட்டு’ என்ற கவிதையில்
‘              வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
                தூண்ட விளக்காய்த் துலங்கும் பெருமாட்டிஎன்றும்
‘              எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
                பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே 7
என்றும் முறையே சாதிப் பாகுபாட்டையும் மூடத்தனத்தையும் இடித்துக்கூறக் காண்கிறோம்.
குறிப்புகள்
  1. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை மலரும் மாலையும், பாடல் எண். 100.
  2. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மலரும மாலையும், பாடல் எண். 865
  3. பாரதியார் மகாகவி பாரதியார் கவிதைகள், ‘தேசிய கீதங்கள்’ அருணா பதிப்பகம், மதுரை 1962, ப-27.
  4. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள் பதின்மூன்றாம் பதிப்பு, பாரி நிலையம், சென்னை 1964, ப-89.
  5. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், ப-87.
  6. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், ப-100
  7. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், பக்.127-128
(தொடரும்)
ஆய்வாளர் ம. இராமச்சந்திரன்


தமிழ்நல உறுதிமொழிஞர் 04 : மரு.பொன்முடி


தமிழ்நல உறுதிமொழிஞர் 04 : மரு.பொன்முடி

பெயர்:
மரு.வ. பொன்முடி
பணி:
மருத்துவப்பணி
தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள்:
புணர்ச்சியிலக்கணத்தின் பயன்பாடுபற்றி எடுத்துரைத்தல். "தமிழ்வெல்லத்தாழி" என்னும் புணர்ச்சிவிளக்கநூலை வெளியிட்டிருத்தல்.
தமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:
புணர்ச்சியில் பிழையற்றதாக நூல்களைத் திருத்திப்பதிப்பித்தல்
முகவரி:
முகவரி : எண் 1/1, கேலக்சியடுக்ககம், நுளம்பூர், சென்னை 37
மின்வரி: dr.ponmudi@gmail.com




Wednesday, November 18, 2015

ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!

கீ.இராமலிங்கனார் :kee.ramalinganaar

ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!


  தமிழகத் தலைமைச் செயலகம் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரை இன்றைக்கு ஓரளவுக்காவது ஆட்சிமொழி நிருவாகம் தமிழ்மொழியில் நடைபெறுவதற்கு மூல காரணமாகத் தமிழறிஞர் ஒருவர் இருந்துள்ளார். அவரை இப்போது தெரிந்து கொள்வோம். அவர் பெயர் கீ.இராமலிங்கனார்.
  1956ஆம் ஆண்டில் மொழிவழி மாகாணமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் பிரித்தானியரின் ஆங்கிலமொழியே தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே ஆங்கில அடிவருடிகள் சிலர் ஆங்கில மொழியில் எழுதுவது போலத் தமிழில் எழுத முடியாது என்றும், தமிழில் வரைவுகளும், குறிப்புகளும் எழுதினால் மற்றவர்களுக்குப் புரியாது என்றும் வாதாடி வந்தனர்.
  தமிழ்நாட்டில் தமிழ்ஆட்சி மொழிச்சட்டம் வந்த போதும் கூட இவர்கள் எள்ளி நகையாடுவதை நிறுத்திக் கொள்ள வில்லை. அப்போது ‘தமிழால் முடியும்’ என்று ஆட்சிமொழிச் சட்டத்திற்கு உயிரூட்டியவர்தான் தமிழறிஞர் கீ.இராமலிங்கனார்.
  இவர் சென்னையிலிருந்து முப்பது கல் தொலைவு கொண்ட ‘கீழச்சேரி’ எனும் சிற்றூரில் ஐப்பசி 28, 1920  / 12.11.1899ஆம் ஆண்டு இரத்தின முதலியார்- பாக்கியத்தமாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இராமலிங்கம் என்று பெயர் சூட்டினர்.
  தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியிலும், சென்னை சிவன் பள்ளியிலும் படித்த இராமலிங்கம் அதன் பிறகு 1924ஆம் ஆண்டு வெசுலி கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் சேர்ந்து இளங்கலை(சிற்றூரில்பி.ஏ.) பட்டம் பெற்றார். அப்போதே தமிழ்த் தென்றல் திரு.வி.க., சைவ அடிகளார் சச்சிதானந்தம் ஆகியோரிடம் பாடம் கேட்டுத் தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.
 1924இல் சென்னை தலைமைச் செயலகத்தில் மேல் நிலை எழுத்தராக பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும். தமிழின் மீதான ஈடுபாடு குறைய வில்லை. 1934இல் புலவர் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழில் ஆற்றல் மிகுந்த அறிஞராகத் திகழ்ந்தார். 1935இல் நகராட்சி ஆணையராக, சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடி நாயக்கனூர் ஆகிய நகரங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நகராட்சியின் தெருக்களுக்குத் தமிழ்ப் பெருமக்களின் பெயர்களைச் சூட்டினார். இளங்கோ தெரு, தொல்காப்பியர் தெரு, அப்பர் தெரு, சிலப்பதிகாரத் தெரு, மணி மேகலை தெரு என்று படிப்பறியா தமிழ் மக்களும் உச்சரித்து அழைக்கும்படி செய்தார்.
 தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் வருவதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சித்துறை சொற்களை அகரவரிசையில் தொகுத்து ‘ஆட்சிச்சொல்’ (1940) என்ற பெயரில் நூலாக வெளியிட்ட பெருமை இவருக்கே உண்டு. இவர் 1926இல் சார் பதிவாளராகப் பணியாற்றிய போதே விற்பனை ஆவணங்கள் முழுவதும் தமிழ்மொழியில் எழுதும்படி தூண்டியதோடு, அவற்றை எந்தவிதத் தடையுமின்றி பதிவு செய்திடவும் துணை நின்றார்.
  ஆட்சிக்குரிய தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை நூற்றுக்கும் மேல் ‘தமிழ்நாடு’ எனும் ஏட்டில் எழுதினார். ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் பெயரில் அவற்றைத் தொகுத்து மீண்டும் நூலாக வெளியிட்டார். 1958இல் ஆட்சிமொழித் தனி அலுவலராகப் பொறுப்பேற்று ஆட்சித்தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினார்.
  இராமலிங்கனாருக்குத் ‘தமிழ்’ ஒரு கண் என்றால், ‘சைவநெறி’ மற்றொரு கண்ணாகும். இவர் எழுதிய தமிழ் ஆட்சிச்சொற்கள் (1959), ஆட்சிச் சொல் அகராதி (1958), ஆட்சித்துறைத் தமிழ் (1968), ஆட்சித்தமிழ் (1976) தமிழில் எழுதுவோம் (1978) ஆகிய நூல்கள் தமிழுக்கு மகுடம் சூட்டுபவை.
  அதே போல், இவர் எழுதிய வழி காட்டும் வான் பொருள், உண்மை நெறி விளக்கம், திருவெம்பாவை, ஐந்து நிலைகள் ஆகிய நூல்கள் இறையியல் தத்துவங்களைத் தாங்கி நிற்பவையாகும்.
  தமிழர் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களும் கூட இவரால் எழுதப்பெற்றதாகும். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை என்பதை அழுத்தந் திருத்தமாக இந்நூலில் விளக்கிடுவார்.
  தமிழர் இல்லங்களில் ஆரியப் புரோகிதரின் சமசுகிருத மொழியை ஏற்கக் கூடாது என்பதைப் பின்வருமாறு கூறுகிறார்;
“தாயை நீக்கி ஒருவன் மணஞ் செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி மணஞ்செய்து கொள்வோர்களைத் தெய்வமும் தமிழினச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும்”
 ஒருமுறை இராமலிங்கனார் மூத்தவாளும், வாய் வீச்சவாளுமான காஞ்சி சந்திரசேகந்திர சரசுவதியின் தமிழ் வெறுப்பு மனத்தை அம்பலப்படுத்திடவும் துணிந்தார். அவர் உணவுப் பங்கீட்டு அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் சங்கராச்சாரியைச் சந்திக்க நேரிட்டது. அப்போது சங்கராச்சாரியார் தமிழ் ‘நீசபாசை’ என இழிவாகக் கூறித் தமிழில் பேச மறுத்து விட்டு, சமசுகிருதத்தில் பேசியதை அவரால் ஏற்க முடியவில்லை. சங்கராச்சாரியை சந்திக்கும் போதும், விடை பெறும் போதும் தமிழ்மொழிக்கு வணங்கிடும் தனது தலையை சங்கராச்சாரிக்கு வணங்க மறுத்து தானொரு தன்மானத் தமிழன் என்பதைச் சங்கராச்சாரிக்கு வெளிக்காட்டினார்.
  பின்னர் சங்கரமடம் என்பது “பிராமணர்களின் கூடாரமே” என்று ஒரு பேட்டியில் ஓங்கி ஒலித்தார்.
  ‘தமிழால் முடியும்‘ என்றுரைத்து அல்லும் பகலும் அயராது ழைத்த ஆட்சிசொற் சிற்பியாம் இராமலிங்கனார் 1986இல் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார்.
  இராமலிங்கனார் அவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில அடிவருடிகள் தற்போது உயர்நீதி மன்றத்தில் தமிழால் முடியாது என்று பழைய பல்லவியைப் பாடி வருகின்றனர்.
‘தமிழால் முடியும்’ என்பதே இராமலிங்கனார் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தீர்ப்பாகும். அவரின் பிறந்த நாளில் பலமுறை உரக்கச் சொல்வோம்!
தமிழால் முடியும்! தமிழால் முடியும்!! தமிழால் முடியும்!!!