Friday, November 02, 2018

முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ
  பிற துறைகளில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால்தான் அறிவியல் தமிழ் வளர்ந்து கொண்டுள்ளது. அத்தகையவர்களுள் ஒருவராகவும் இலக்கியத் தமிழ் ஈடுபாட்டாளராகவும் திகழ்பவரே முனைவர் பொறிஞர் மு.பொன்னவைக்கோ.
  முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்தில் (இப்போதைய விழுப்புரம் மாவட்டம்) வானூர் வட்டத்தில் உள்ள செங்கமேடு என்னும் சிற்றூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,  மன்னர் பாரி வள்ளல் பரம்பரையைச் சார்ந்த தெய்வத்திரு. சு.முருகேசர், தெய்வத்திருவாட்டி மு.பொன்னிக்கண்ணு அம்மையார் வாழ்ந்தனர். இவ்விணையரின் மக்கள் எழுவருள் இளையமகனாகத் தை 17, 1975/30.01.1944 அன்று பிறந்தவர் இரத்தினசபாபதி. பெற்றோர் சூட்டிய பெயரைத் தமிழ்ப்பற்றின் பெயரால், சபாபதி என்ற சொல்லுக்கு அவைக்கோ என்றும் இரத்தினம் என்னும் சொல்லுக்கு மாற்றாக அம்மாவின் பெயரிலிருந்து பொன் என்ற சொல்லை எடுத்து அவைக்கோவிற்கு முன் சேர்த்தும்  பொன்னவைக்கோ என 1968-ஆம் ஆண்டு பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டில் மாற்றிக் கொண்டார்.

கல்வி
  1950இல் திண்ணைப்பள்ளியில் இவரது கல்விக்கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து தொடக்கக்கல்வியை செங்கமேட்டு அரசுத் தொடக்கப் பள்ளியிலும்(1952-1956) உயர்நிலைப்பள்ளிக் கல்வியை வழுதாவூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும்(1957-1963) பெற்றார். எல்லா நிலைகளிலும் முதல் மாணாக்கனாய்த தேறி ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.   பள்ளியில் பயின்ற காலத்திலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றுக் கவிஞரானார்.
  மின் பொறியியல் பட்டத்தையும் [B.E.(Electrical)-1969] முதுஅறிவியல்-பொறியியல் பட்டத்தையும் [M.Sc. (Eng.)-1972] சென்னையில் உள்ள கிண்டி பொறியியற் கல்லூரியில்  பெற்றார். இங்கு அவரின் தமிழ்ப்பற்றிற்கு  மடைகால் திறக்கப்பட்டது. ‘தமிழ் மன்றச் செயலாளராக’ப் பணியாற்றித் தமிழ்த் தொண்டாற்றினார். 4000 அறிவியல், பொறியியல் கலைச்சொற்கள் அடங்கிய ‘கலைச்சொல்’ தொகுப்பினை இத்தமிழ் மன்றத்தின் மூலம் வெளியிட்டார். படிக்கும் பொழுதே கல்லூரி ஆண்டு மலர்களிலும் கலைக்கதிர், தென்மொழி முதலான இதழ்களிலும் கட்டுரைகள் வெளியிட்டார். படிக்கும் பொழுது இவர் பெற்ற படைப்பார்வம் இன்றுவரை தொடர்ந்து அறிவியல் தமிழ்ப்படைப்பாளராகத் திகழ்கிறார்.
  புதுதில்லியில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் (I.I.T.) மின்முறைமைத் திட்டமிடல்(Power System Planning) ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்(1983).
பின்வருவன முனைவர் பொன்னவைக்கோவின் வல்லமைத் துறைகளாகும்.
மின்திறன் முறைமைத் திட்டமிடல்(Power system Planning)
இணையவழிக் கல்வி(Virtual Education)
கணியப்பொறியியல்(Software Engineering)
கணிணி ஒப்புருவாக்கமும் படிம ஆக்கமும் (Computer Simulation and Modeling)
செயலாக்க ஆய்வு உத்திகள்(Operation Research Techniques)
மரபு வழிக் கணிப்புநெறி              Genetic Algorithm.
நரம்பு வலைமப்பணி(Neural Network)
தெளிவிலி ஏரணம்(Fuzzy Logic)
கணிணிப் பாடத்திட்ட மேம்பாடு(Computer curriculum Development).
வழி நடத்திய ஆய்வுத்திட்டங்கள்:
முனைவர் பட்ட ஆய்வுகள் (15), இளமுனைவர் (M.Phil) பட்டஆய்வுகள் (16), முதுகலை பொறியியல் பட்ட ஆய்வுகள் (7), இளங்கலை பொறியியல் பட்டம் ஆய்வுகள் (40) ஆகிய வகுப்புகளுக்கான ஆய்வு வழிகாட்டியாகத் திறம்பட நெறிப்படுத்தி யுள்ளார்.
பன்மொழியறிவு
  1. தமிழ், 2. ஆங்கிலம், 3. இந்தி, 4. பிரஞ்சு, 5. அரபி, 6. செருமன். மொழிகளைப் படிததவர்.
  2. மலையாளம், 2. கன்னடம், 3 தெலுங்கு மொழிகளைப் புரியும் அறிவர்.
பணிப்பாங்கு
தமிழ்நாடு மின்வாரியத்தில் புலப்பொறியாளராகத் தன் பணிவாழ்க்கையைத்(1969-1970) தொடங்கினார். அடுத்து அங்கேயே உதவிப்பொறியாளர் ஆனார். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் கழகத்திலும்(IISc) புதுதில்லியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனத்திலும்(BHEL) உதவிபொறியாளராகவும்ப் பணியாற்றினார்.
புதுதில்லியில் ஊரக மின்வாரியத்திதல் தனியதிகாரியாகப் பணி மாறிச்சென்றார்(1977 – 1984) எனவே, அடுத்து ஐந்தாண்டுகள் இலிபியாவில் பணியாற்றினார். இலிபியாவில் திருபோலியில் மின்கட்டமைப்பு நிறுவனத்தில்(ECCO, Tripoli) ஆட்சிக்குழுச்செயலர் & அறிவுரைஞர் ஆகப்(1984-1986) பணியாற்றினார்.
ஆடத் தெரிந்தவர் கால் ஓரிடத்தில் நிற்காது. அதுபோல் திறமையானவர்கள் இயங்கிக்கொண்டே இருப்பார்கள். பொன்னவைக்கோவும் இவ்வாறு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். இலிபியாவில் இவரது பணி கல்வித்துறையின்பக்கம் மடைமாற்றமானது. ஃகூன்(HUN) நகரில்   நிறுவனத்தில்(HIMEE) பேராசிரியராகப்(1986 – 1989) பணியேற்றார்.
அடுத்துத் தமிழகம் திரும்பினார். திருச்சிராப்பள்ளியில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியிலும்(1989 – 1993)மண்டலப் பொறியியல் கல்லூரியிலும்(1993 – 1995) கணிப்பொறித்துறையின் தலைமைப்பேராசிரியர் ஆகக் கல்விப்பணியைத் தொடர்ந்தார்.
ஈடற்ற இணையத் தமிழ்ப்பணி
தமிழ் வழிக் கணிணியியலையும் கணிணி வழித் தமிழியலையும் வளர்க்கும் பேரார்வத்தில் செயல்பட்டார். இதற்கேற்ப தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தின் முதல் இயக்குநராகப் (2000 – 2003) பொறுப்பேற்றார்.
உலக மக்கள் பல் வேறு வளர்நிலைகளில் தமிழைக் கற்கவும் தமிழ், தமிழர் வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலை முதலானவற்றின் சிறப்புகளை அறியவும்  சான்றிதழ்க்கல்வி, பட்டயக்கல்வி, பட்டக்கல்வியை நடைமுறைப்படுத்தினார். மின்-நூலகம்அமைத்துச் சங்க இலக்கியம் முதல் இக்காலம்வரை இலக்கியங்களைப் படிக்கவும் தரவிறக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார்.
அடுத்துத் திரு இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகத்தின் இணையக்கல்வி இயக்குநராகப்(2003-2007) பணியாற்றினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாங்கான பணிகள்
இவரது சிறப்பான கல்விப்பணியும் ஆட்சிப்பணியும்  அரசால் அறியப்பெற்றுப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தராக(2007 – 2010) அமர்த்தப்பட்டார்.
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே!
என்னும் பாவேந்தர பாரதிதாசன் கட்டளையை ஏற்று இப்பல்கலைக்கழகத்தின் ஆட்சி மொழியாக – கல்விமொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்தினார். தமிழ் வழிபாட்டு மொழியாக நிலைப்பதற்கு வழி வகுக்கும் வண்ணம் அருட்சுனைஞர் பட்டயப்படிபை அறிமுகப்படுத்தினார். மாணாக்கர் எம் மொழியினராக, எந்நாட்டவராக இருப்பினும் தமிழைப்படிக்க விதி வகுத்தார். முனைவர்பட்ட ஆய்வேடுகள் தமிழில் தரப்பட வேண்டும் என்னும் விதிகளை உருவாக்கி ஆய்வாளர்கள் தமிழறிய வழி வகுத்தார்.
 மேலைநாடுகளில் மேற்படிப்பு படிக்க 4 ஆண்டு பட்டப்படிப்பு தேவை. எனவே, பல்கலைக்கழகநல்கை ஆணையத்திற்குக்  கருத்துரு அளித்து அதன் ஏற்பில் நான்காண்டு பட்டப்படிப்பைப் பல்கலைகழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் தொடங்கினார்(2009).
மின்னியல்-மின்னணுவியல் பொறியாளர்கள் நிறுவனத்தின் (Institute of Electrical and Electronics Engineers) கருத்துக்கற்றை(IEEE Spectrum) என்னும் ஆங்கில இதழைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடர்ந்து வர வழி செய்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்  அறிவியல் தொழில்நுட்ப இதழ் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுடன் வெளியிட ஏற்பாடு செய்தார்.
செய்தி மடல், ஆண்டறிக்கை என எல்லாவற்றிலும் தமிழ் இடம் பெறச்செய்து பல்கலைக்கழகத்தைத் தமிழ் மணமாக்கினார்.
 இவரது பணிக்காலத்தில் 32 நூல்களைப்  பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டு்ளளது.
 மீநுண்அறிவியல் தொழில் நுட்பமையம்(Centre for Nano Science and Nano Technology),உயர் அழுத்த ஆய்வு மையம் (High Pressure Research Centre), புவியியல் தகவல் முறைமை (GIS Technology Centre),உயிரியத் தொழில்நுட்ப மையம், சித்தா-ஆயுர்வேதா மருந்துகள் ஆய்வு மேம்பாட்டு மையம், கலைஞர் வளர்தமிழ் ஆய்வு மையம், நேரு உயராய்வு மையம், அண்ணா இருக்கை, உயிரின வதையின்றி கணிப்பொறி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி உயிரியஆய்வு செய்ய சுவிட்சர்லாந்து  உதவியுடன் மகாத்மா காந்தி-தோரன்கேம்ப்பு ஆய்வு மையம், என ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் கல்வி நலனுக்குமாகப் பல மையங்களைத் தோற்றுவிததார்.
மேலும் கலைஞர் இலக்கிய களஞ்சிய வெளியீட்டுப் பணி, ஓலைச்சுவடிகளை இணையத்தில் பொதிவு(PDF) வடிவில் இடம்பெறச்செய்து பகுப்பாய்விற்கு உதவுதல் முதலான பணிகளையும் மேற்கொண்டார்.
விளையாட்டிற்கான ஓடு தடம், சிறப்பான விளையாட்டுத்திடல், கைப்பந்து, மட்டைப்பந்து, எறிபந்து, கூடைப்பந்து விளையாட்டுத் தளங்கள், மாணவர் குறைதீர் மையம், பெண்கள் விடுதிகளுக்கும் ஆண்கள் விடுதிகளுக்கும் தனித்தனி உணவகங்கள், அன்றாட வருகையாளர்களுக்காக இரண்டு இடங்களில் சிற்றுண்டிச் சாலைகள், விருந்தினருக்கு உண்டி உறையுள்வசதி என மாணாக்கர், ஆசிரியர்கள், பணியாளர்கள், வருகையாளர்கள் என அனைத்துத்தரப்பினர் நலத்திலும் கருத்துசெலுத்தி அனைவர் பாராட்டையும் பெற்றுள்ளார்.
 வணிக வளாகம், வருகைதரு பேராசிரியர் குடியிருப்பு, திருமணமான மாணவர் குடியிருப்பு,  தொடக்கப்பள்ளி, ஐந்தடுக்கு மருத்துவமனை போன்றவற்றிற்கான திட்டங்களை அளித்துப் பணிகளைத் தொடக்கி வைத்துள்ளார்.
பார் போற்றும் தமிழ்ப்பேராயப் பணி
பணிக்கால நிறைவிற்குப் பின்னர்,  தி.இரா.நி.(SRM) பல்கலைக்கழக முதன்மைக் ௧ல்வி அதிகாரி(2010-2011), அதன் துணைவேந்தர்(2011-2014), பாரத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்(2014 – 2017) அதன் இணைவேந்தர்(4/2017-9/207) எனக்கல்விப்பணியாற்றி இப்பொழுதுநிகர்நிலைப் பல்கலைக் கழகமாகிய விநாயகா கல்விக்குழும ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்விப்பணியாட்சியராகத்(Provost)  திகழ்கிறார்.
 தி.இரா.நி.(எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகத்தை முன் மாதிரிப் பல்கலைக்கழகமாக மாற்றும் முனைப்புடன் சிறப்பாகப் பணி யாற்றியுள்ளார். இவரது பணிகளில் நின்று புகழ் தரும் நிலையான பணி தமிழ்ப்பேராயம்(Thamizh Academy) உருவாக்கியது. தமிழின் மரபுச் செல்வங்களை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லுதல், புதிய தமிழ்ப் படைப்புகளையும், தமிழ்ப்பணி ஆற்றி அருந்திறல் ஆற்றியுள்ள தமிழ் அறிஞர்களையும் பாராட்டி, உரூபா 22 இலட்சம் பெறுமான 11 விருதுகளை வழங்குதல், தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழ் ஆராய்ச்சியைச் செழுமைப்படுத்துதல், அறிவியல் தமிழை வளர்த்தல், தமிழ்ச் சமயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டயம், சான்றிதழ் படிப்புகளை வழங்குதல், அயலகத்தமிழ் ஆசிரியப் பட்டயப் படிப்பு வழங்குதல், கருத்தரங்கு, பயிலரங்கு, ஆய்வரங்குகள் நடத்துதல், கணினித்தமிழ்ப் பயிற்சியளித்தல், தமிழ் கணியப்பொருள்(மென்பொருள்) உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளைத் தமிழ்ப்பேராயம் ஆற்றிவருகின்றது.
படைப்புச்சிறப்பு
24 புத்தகங்கள், 114 ஆய்வுத்தாட்கள், 54 ஆய்வறிக்கைகள் முதலான படைப்புகளுடன்
  1. ‘கணிமொழி சி’ – தமிழ்க் கணிப்பொறி மொழி
  2. ‘இணைய மொழி யாவா’ – தமிழ்க் கணிப்பொறி மொழி
  3. ‘இணையத் தளம் தேடு பொறி’, – தமிழ்த்தேடு பொறி
  4. தமிழ் விசைப்பலகை (TamilNet 99 Key Board)
  5. தமிழ் அனைத்து எழுத்தரு தரப்பாடு (TACE-16)
ஆகிய உருவாக்கங்களும் இவருக்குப் பெருமை சேர்ப்பன.
சிறப்பிக்கும் விருதுகள் சில
‘பாரதி சேவைச்செம்மல்’ விருது(பாரதியார் சங்கம், சென்னை,2014), ‘திருவள்ளுவர் விருது’ (செந்தமிழ்ச்செல்வர்) – சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் – 2014, ‘செந்தமிழ்க் காவலர்’ விருது – திருவள்ளுவர் மன்றம், இராசபாளையம் – 2014, சாதனைத்தமிழர் விருது – பாரதி தமிழ்ச்சங்கம், கொல்கத்தா– 2012, பாரத ஒளி விருது,இளவரசர் இறையாண்மை முறைமை பெருந்தகை அண்டார்டிகா பெருந்தகை விருது(Knights of Sovereign order of Princes and Knights of Antarcticland),பிரேசிலில் வழங்கிய மதிப்புறு சான்றர்(Certificate of Honour), பாராட்டுச்சான்றிதழ், வாணாள் அருந்திறலர் விருது, தமிழுக்குச் சிறப்பான பணியாற்றுநர் விருது,சிறந்த பொறியாளர் விருது 2000, தென்னாப்பிரிக்க விருது 2017, சிறந்த திட்ட உரு விருது என நம் நாட்டிலும் பல்வேறு அயலக நாடுகளிலும் இவரது பணிகளைப்பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர்.
அயலகப் பயணங்கள்
1. அமெரிக்கா(1981). 2. கனடா(1981), 3. இங்கிலாந்து(இலண்டன்)(1981, 87), 4. சுவிட்சர்லாந்து(1987), 5. இத்தாலி(1987), 6. மால்டா(1987), 7. இலிபியா(1984-89), 8. நேபாளம்(1982), 9. சிங்கப்பூர்(2000),10. இலங்கை(2000, 2001, 2002), 11. மலேசியா(2001, 2007. 2013, 2014), 12. சப்பான்(2000, 2007), 13. தென்ஆப்பிரிக்கா(2002, 2014), 14. மரூசியசு(2002), 15. ஆத்திரேலியா(2013), 16. சீனா(2004, 2006), 17. கி.செருமனி(2005), 18. கானா(2004, 2006. 2012), 19. நெதர்லாந்து(2005), 20. தாய்லாந்து(2007, 2013), 21. தாய்வான்(2012) என முப்பதுக்கும் மேற்பட்ட அயலகப் பயணங்களை மேற்கொண்டு 21 நாடுகளுக்குப் பணியாற்றவும் பரப்புரை யாற்றவும் சென்று வந்துள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்கழகத் தலைவர்(2017 முதல்),  உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத் துணைத்தலைவர்(மே 2015 முதல்), தமிழகப்புலவர் குழு உறுப்பினர் (2014 முதல்) முதலான பல்வேறு பொறுப்புகள் மூலம் தமிழ்த் தொண்டும் தொழில்நுட்ப அமைப்புகளில் ஏற்றுள்ள பொறுப்புகள் மூலம் கணிநுட்பப் பணிகளும் ஆற்றி வருகிறார்.
குடும்பம்
 தஞ்சை மாவட்ட அச்சுதமங்கலம் ஊரைச் சேர்ந்த மறைத்திரு விசய கோபாலசாமி(உடையார்)-மறைத்திருவாட்டி வி. தாமரைவதனி அம்மையார் இணையரின் இளைய மகளான திருவாட்டி முனைவர் பூமா இவரின் இல்லத்தரசியாவார். மனையறிவியலிலும் குமுகவியலிலும் பட்டங்கள் பெற்றுள்ள இவர் சைவச்சமையல் உலகம்  அசைவச்சமையல் உலகம் ஆகிய நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார்.
அமெரிக்கா, பிரான்சு. லண்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, மால்டா, இலிபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, சப்பான், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு  முதலான அயல்நாடுகளுக்கும் சென்று வந்தவர். திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ கணவருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்கிறார்.
இவ்விருவருக்கும் கல்வியில் சிறந்த நன்மக்கள் இருவர் உள்ளனர். மூத்தவர் முனைவர் பொறியாளர் பொ.பூங்கோவன், அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சேண்டகிளாரா நகரில் அமைந்துள்ள பிரோகேடு(Brocade) நிறுவனத்தில் துணைத்தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் மனைவி பொறி. பரணி பூங்கோவன் மைக்கிரோசாஃப்ட்டு நிறுவனத்தில் கணிப்பொறிப் பொறியாளராகப்  பணியாற்றுகிறார்.
இளைய மகன் முனைவர் பொறி.பொ.கோவேந்தன் அயலகங்களில் சில புகழ்மிகு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இப்போது மாணாக்கர்களுக்கான செய்முறை அறிவியல் கல்வியைக் கற்பிக்கும் தூலருன் (DooLurn) என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் மனைவி மருத்துவர் சரசுவதி கோவேந்தன். சென்னை இ.தொ.க.(I.I.T) மருத்துவ மனையில் மருத்துவராகப் பணியில் உள்ளார்
மூத்தவர் வழி நித்திலா பூங்கோவன்(15) எனும் பேத்தியும் நிரல் பூங்கோவன்(8) என்னும் பேரனும் உள்ளனர். இளையவர் வழி யூகி கோவேந்தன்(8) என்னும் பேரன் உள்ளார்.
 கால் பதித்த இடங்களில் எல்லாம் முத்திரை பதிக்கும் வித்தகரான முனைவர் பொறிஞர் மு. பொன்னவைக்கோ மூவாத்தமிழ் போலும் என்றென்றும் வாழ்க!
 இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, October 31, 2018

கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்-இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

கணித்தமிழ் அறிஞர் நதெய்வசுந்தரம்

 எல்லார்க்கும் எல்லா நிலைகளிலும் எல்லாப்பணிகளிலும் கணிப்பொறி என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. எனவே, கணிப்பொறி பயன்பாடு சார்ந்த அறிவியலறிவு நமக்குத் தேவை. தொன்மை வாய்ந்த தமிழ் மொழி புத்திளமையுடன் திகழக் கணிப்பொறி பயன்பாடு தேவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கணிப்பொறிப் பயன்பாட்டைத் தமிழில் அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தவும் கூடிய கணித்தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர்களில் குறிப்பிடத்தக்கவராகப் பேராசிரியர் முனைவர் ந.  தெய்வசுந்தரம் உள்ளார்.
பேரா. ந. தெய்வசுந்தரம் பயன்பாட்டு நிலைகளிலும் ஆய்வு நிலைகளிலும கணியன்களை(softwares) உருவாக்கித் தமிழுலகம் பயனுற உழைக்கிறார்.
அ) உருவாக்கிய பயன்பாட்டுக் கணியன்கள் (Application software)
                சுவிதா – தமிழ்ச்சொல்லாளர் (1999)
                தமிழ்ச்சொல் 2000
                மென்தமிழ் 2007 – தமிழ்ச் சொல்லாளர்
                பேச்சுத் தமிழ்க் கல்வி – பல்லூடகக் கணியன்(மென்பொருள்)
(சென்னைப் பல்கலைக்கழகம்)
                எழுத்துத் தமிழ்க் கல்வி – பல்லூடகக் கணியன்(மென்பொருள்)
(சென்னைப் பல்கலைக்கழகம்)
ஆ) ஆய்வுத் துணைமைகள்(Research Tools)
தமிழ் உருபன் பகுப்பி (Morphological Parser for Tamil)
                தமிழ்ச் சொற்பிழைதிருத்தி (Tamil Spell-checker)
                தமிழ்ச் சந்திப்பிழைதிருத்தி
                தமிழ் – ஆங்கிலம் கணிணி மின்- அகராதி (Tamil – English Reversible digital dictionary)
                கணினித்தமிழ் மைய இலக்கணம் (ப.ந.ஆ. ஆய்வுத்திட்டம்) (Computational Core Grammar of Tamil ( UGC                                                                          Major Project)
இயந்திரமொழிபெயர்ப்பு: தமிழ் – ஆங்கிலம் – இந்தி (ப.ந.ஆ. – UGC ஆய்வுத்திட்டம்) .
                தமிழ் தரவுத் தொகுப்பு ஆய்வு  (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்).
                தமிழ்ப் பிழை பார்ப்பி (தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்நாடு அரசு).
சிங்கப்பூர் எழுத்துத்தமிழ் தரவகம் (2018)
பிறப்பு
தமிழ் வளர்க்கும் திருநெல்வேலியில்  திரு. சிவ. நயினார்-திருமதி ந. பாப்பு அம்மாள் இணையரின் திருமகனாக  வைகாசி 19, 1981 /1.06.1950 இல்  தெய்வசுந்தரம் பிறந்தார்
கல்வித் தகுதிகள்
இயற்பியல் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர், தமிழின்பால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் முதுகலையிலும் மொழியியல் முதுகலையிலும் பட்டங்கள் பெற்றார். மொழியியல் துறையிலேயே பேராசிரியர் பொற்கோ அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு ‘தமிழில் இரட்டைவழக்குச் சூழல்  ( Diglossic situation in Tamil)
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் மேற்படிப்பு முதுநிலை ஆய்வு மேற்கொண்டார் (1981-83)
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் ப.ந.ஆ.(  1983-1985 ) முதுநிலை ஆய்வாளராக ஈராண்டுகள்  ஆராய்ச்சி மேற்கொண்டார்.
சென்னைப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார் (1985-91). இணைப் பேராசிரியர் (1991- 97), பேராசிரியர் (1997 – 2010), மொழியியல் ஆய்வுப் பிரிவு இயக்குநர் (1999 – 2010) எனப்பல நிலைகளில் பணியாற்றி நிறைவாகத் தமிழ் மொழித்துறை துறைத்தலைவர் (2006 – 10) ஆகப்பணியாற்றினார். மாணாக்கர்களிடையே தமிழ் இலக்கியம், மொழியியல் சார் கருத்துகளை விதைத்ததுடன் கணித்தமிழில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படும் வண்ணம் பணியாற்றினார்.
 இப்போது சென்னையில் உள்ள என் டி எசு. லிங்க்சாப்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளார். கணினித்தமிழ் ஆராய்ச்சியிலும் அதனடிப்படையில் தமிழுக்கான மென்பொருள் உருவாக்கத்திலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட இளமுனைவர் பட்ட ஆய்வினருக்கும் 25 முனைவர் பட்ட ஆய்வினருக்கும் வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

வல்லமை
பேரா.ந.தெய்வசுந்தரம் பின்வரும் துறைகளில் வல்லமையாளராகத் திகழ்கிறார்.
            தமிழ் இலக்கணம்
            கணிணித்தமிழ்
          நரம்பிய மொழியியல் (Nuero linguistics)
            நலிவிய மொழியியல் (Clinical Linguisitcs)
            மொழிக்கல்வி
நூலாக்கம்
            தமிழ் இரட்டைவழக்கு
            தமிழ் – தானியங்கு ஒலிநாடாவழிக் கல்வி (நூல் + 6 ஒலிப்பேழைகள்)
            இன்றைய தமிழ்
            தமிழில் மொழியியல் ஆய்வுகள்
ஆய்வுக் கட்டுரைகள்
தமிழியல், மொழியியல், கணித்தமிழ் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட கருத்தரங்க, ஆய்விதழ்க் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
கல்வி & ஆய்வு அயல்நாட்டுப் பயணம்
கல்விப்பணியும் ஆய்வுப்பணியும் சார்ந்த பின்வரும் அயலகப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
            சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் (2001)
           கணினிமொழியியல் ஆய்வுமையம், கோபன்ஃகேகன்     பல்கலைக்கழகம், தென்மார்க்கு (2004)( Copenhagen Business School, Denmark)
            ‘சிம்’ பல்கலைக்கழகம், சிங்கப்பூர்(2009,2011)
  மலேசியா பல்கலைக்கழகம், கோலாலாம்பூர் (2011, 2017)
            கல்வி அமைச்சகம், சிங்கப்பூர் அரசு (2011) (தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி)
            உலகத் தமிழாசிரியர் கழக மாநாடு, சிங்கப்பூர் – 2011
            உலகத் தமிழாசிரியர் மாநாடு, (2013) , மலேசியா
            பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு (2016) மலேசியா
ஏற்ற பொறுப்புகள்
செயற்குழு உறுப்பினர், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம்
உறுப்பினர், அறிவியல் கலைச்சொல்லாக்கக் குழு (இந்திய நடுவண் அரசு)
உறுப்பினர், நிதிநல்கைக் குழு, இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம், (உயர்கல்வித் துறை, இந்திய நடுவண் அரசு)
உறுப்பினர், தமிழகப் பல்கலைக்கழங்களில் பாடத்திட்டக் குழுக்கள்
இவரது கணித்தமிழ் சார்ந்த பணிகளை அரசும் மதித்து இவருக்கு முதலமைச்சரின் தமிழ்க்கணிமை விருது-2013 (Chief Minister Award for Tamil Computing -2013) வழங்கியது. இவ்விருது நிறுவப்பட்டதும் முதல் விருதே இவருக்குத்தான் வழங்கப்பெற்றது என்னும் பொழுது இவரது சிறப்பை விளக்க வேறு தேவையில்லை.
தமிழ் தொன்மைச்சிறப்புடன் திகழ்ந்தாலும் வளர்நிலையிலும் உள்ளது. எனவே, முழுமையான கணியன்களை உருவாக்குவது அரிதான செயல். பல் வேறு நிலைப்பாடுகளில்தான் உருவாக்க முடிகிறது. எனவே, பேராசிரியர் முனைவர் ந. தெய்வசுந்தரம் மேற்கொண்டு செம்மையாக்கத்திற்கும் புதியன படைப்பதற்கும் உழைத்து வருகிறார்.
அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!’ என்னும் நிலையை நாம் அடைய இவரது கணித்தமிழ்ச் செயல்பாடுகள் பேரளவு உதவியாக இருக்கின்றன. அரசுகளும் அமைப்புகளும் இவருக்குத் துணை நின்றால் இவர் மேலும் தமிழன்னைக்கு அணி சேர்க்கும் வண்ணம் உழைப்பார் என்பது திண்ணம்.
[பேராசிரியருடன் தொடர்பு கொள்ள:
பேசி : 97890 59414; மின் வரி: < ndsundaram@hotmail.com > ]
கணித்தமிழ் ஆராய்ச்சிச் செயற்பாட்டாளர் பேரா. தெய்வசுந்தரம் நீடு வாழ்க!
 –இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, October 29, 2018

செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி!

  18ஆம் நூற்றாண்டில் ‘பொன்பரப்பியனான வனகோபரன்’என்னும் சோழர்கள் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்து வந்த சிற்றரசன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட ஊரே ‘பொன்பரப்பி’. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொன்பரப்பி ஊர் தமிழர் உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ளதுபோல் செம்மொழி வினைவலர் இராமசாமி பிறந்தமையால் செம்மொழிச் செயலாக்க வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது. ‘செம்மொழியார்’, ‘செம்மொழிச்  செம்மல், எனச் செந்தமிழரால் போற்றப்படும் அறிஞர் செம்மொழி இராமசாமி பொன்பரப்பியில் ஆவணி 26, தி.பி.1980/10.09.1949 அன்று பிறந்தார்.
படிப்பும் கல்விப் பணியும் ஆய்வுப்பணியும்
   தான்பிறந்த ஊரான பொன்பரப்பியிலேயே 11 ஆம் வகுப்பு வரை படித்தவர், இவ்வகுப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.
  பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து தஞ்சாவூர்  மன்னர்    சரபோசி    அரசினர்    கலைக்    கல்லூரியில்,  புகுமுக   வகுப்பினையும்  இளம்   அறிவியல்   (வேதியியல்) பட்டப்  படிப்பினையும்  முடித்தார். கல்லூரிக்  காலத்தில்  காந்தியப்   பற்றாளராகத் திகழ்ந்தார்.  காந்திய நெறியில் எளிமையாக வாழ்ந்து அனைவருடனும் பழகிய இவரின் பாங்கு கல்லூரியில் இவருக்கென ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது.  கல்லூரியிலும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேறினார்.
  இவரது பணி, அரியலூர்  மாவட்டம் அழகாபுரம்  அரசு  உயர்நிலைப்  பள்ளியில்  அன்னிலை(தற்காலிக) அறிவியல்  ஆசிரியராகத் தொடங்கியது. இளமைத் துடிப்பு, எளிமை வாழ்வு, உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு, மாணவர்களின் ஈர்ப்பு முதலியவற்றால் அனைவரும் போற்றச் செயல்பட்டுத் தொடக்கப் பணியிலேயே நல்லாசிரியராகப் பெயர் பெற்றார்.
  முதுகலைப்படிப்பை 1970இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல்துறையில் பெற்றார். அறிவியல் மாணவர் படிப்பிற்கு இவரது தமிழறிவு துணை புரிந்தது. ஆம், அறிவியல் பட்டப்படிப்பில் தமிழில் பெற்ற உயர் மதிப்பெண்ணால் இவருக்குப் பல்கலைக்கழக நல்கை(ஆணை)யம் வழங்கும் திங்கள் மாணவ உதவித்தொகை((UGC Studentship) கிடைத்தது. இதனால் இடர்ப்பாடின்றி முதுகலைப்பட்டத்தை முடித்து முதல் வகுப்பில் தேறினார். முதுகலையில் வங்காள மொழியைப் படித்துத் தன் மொழி ஒப்பியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
  முனைவர்  பட்ட  ஆய்விற்குச்  சேர முயன்றவர் அதற்கிடையில்  காலத்தை வீணாக்க விரும்பவில்லை. காந்தி அமைதி நிலையத்தில் தங்கி முதுகலைப்பட்ட வகுப்பிற்குச் சென்று வந்திருந்தார். அங்கேயே ஆங்கில இலக்கணப் பயிற்சிவகுப்பைத் தொடங்கினார். மாணவர்கள் மட்டுமல்லாமல்,  ஆசிரியர்கள், அலுவலர்கள் எனப் பலத் தர்பபினரும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற்று இவர் முயற்சிக்குச் சிறப்பான பெயரைப் பெற்றுத் தந்தனர். முனைவர்  ஆய்வு வகுப்பில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்து 1972 முதல் 1975 வரை இவர் நடத்திய  ஆங்கில இலக்கண வகுப்புப் பயிற்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து சிறந்துள்ளனர்.
 இக்காலக்கட்டத்தில் ‘அருள் தனிப்பயிற்சி மையம்’ என்னும் கல்வி அமைப்பைச் சிதம்பரம், புவனகிரி, செயங்கொண்டம் ஆகிய நகரங்களில் உருவாக்கினார். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தந்தார். இப்பயிற்சி மையங்கள் மூலம் 11ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தித் தேர்வு பெறச்செய்து கல்விப்பணியில் முத்திரை பதித்தார். எனினும் முனைவர் ஆய்வில் கூடுதல் கருத்து செலுத்த  வேண்டியமையால் இப்பணியைத் தொடர இயலவில்லை.
அண்ணாமலைப்பல்கலைக்கழக மொழியியல் ஆய்வு மாணாக்கனாக 1972 திசம்பரில் சேர்ந்த இவருக்கு 1973 சூன் முதல் பல்கலைக்கழக நல்கை(ஆணை)யத்தின் உதவித்தொகை கிடைத்தது. பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் மேற்பார்வையில் தமிழ்,    ஆங்கிலப்    பெயரெச்சத் தொடர்கள்  –  ஓர்  உறழ்வாய்வு’ (A Contrastive Analysis of the Relative Clauses in Tamil and English) என்னும் தலைப்பில் முனைவர் ஆய்வினை மேற்கொண்டார்.
 அறிஞர்களின் தனிக் கவனத்தைப் பெற்ற மாற்றிலக்கணக் கோட்பாட்டினைப் பின்பற்றித் தன் ஆய்வை மேற் கொண்டிருந்தமையால் இவரது ஆய்விற்கு வரவேற்பு இருந்தது. முனைவர் ஆய்வாளராக இருந்து கொண்டே  ஈராண்டுப் பகுதி நேர இந்திமொழிப் பட்டயவகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேறினார். இக்காலத்திலேயே  இவருடைய  முதுகலைப்    பட்ட    ஆய்வேடான ‘படையாட்சி    வழக்குத்    தமிழ்’ அண்ணாமலைப் பல்கலைக்     கழகத்தினால்     ஆங்கிலத்தில்     நூலாக     வெளியிடப்பட்டது [Padayachy  Dialect  of  Tamil (Annamalai Nagar: Annamalai University Publication No.63, 1978)]. இந்நூல் கிளைமொழி  ஆய்வு   மேற்கொள்வோருக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
ஊதியப்பணிகள் ஊடாகத் தமிழ்த்தொண்டு
 1983  இல் ஒன்றியப்  பொதுப்  பணித்  தேர்வாணையத்தின்(Union Public Service Commission) மூலம்  தமிழ்  விரிவுரையாளர்  பணி  கிடைத்தது. இது நடுவண்  அரசுப்  பணியாகும்.  அறவே தமிழ்  அறிமுகம்  இல்லாத பிற  மாநிலத்தவருக்கும்  பிற  நாட்டினருக்கும் பத்து  மாதக்  காலத்  தீவிர  முழு  நேரப்  பயிற்சியின்  மூலம்  தமிழ்  கற்றுக்கொடுக்கும் இந்தப் பணி புதுமையானது; உலகில் வேறெங்கும் காணப்படாதது. பல்வேறு மொழியினருடனும் பல்வேறு நாட்டினருடனும் உறவாடும் வாய்ப்பு இவருக்கு ஒரு பெரும் பேறாக அமைந்தது.
 தமிழ்நாடு தவிர்ந்த  பிற  மாநில  ஆசிரியர்கள்  நூற்றுக்  கணக்கானவர்களுக்கும்  சீனா,  ஃபிரான்சு, சுவிட்சர்லாந்து,   சுவீடன்,   அமெரிக்கா,   மொரிசியசு,   இரீயூனியன்   போன்ற   நாடுகளைச் சார்ந்தவர்களுக்கும்  தமிழ்  கற்பித்த  பட்டறிவு  இவருக்கு  வாய்த்தது.  தமிழ்  கற்பிப்பதோடு அன்றிப்  பல்வேறு  ஆய்வுப்  பணிகளை  மேற்கொள்ளும்  வாய்ப்பும்  இங்கே  இவருக்குக் கிடைத்தது.
 உள  மொழியியல்,  மொழிபெயர்ப்பியல்,  கோட்பாட்டு  மொழியியல்  போன்ற துறைகளில் தனது அறிவை வளப்படுத்திக் கொண்டார். காலப்போக்கில்,  இணைப்  பேராசிரியர்,  பேராசிரியர் போன்ற  உயர்   பணிகள்    இவருக்குக்      கிட்டின.  இவரது      மேற்பார்வையிலும் வழிகாட்டுதலிலும் முனைவர்   பட்டம்   பெற்றவர்கள்   எண்மர்.   இவர்களுள்   சிலர்   நம் நாட்டின்   மத்தியப்   பல்கலைக்கழகங்களிலும்   வெளிநாட்டுப்   பல்கலைக்    க  ழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணிபுரிந்துவருகின்றனர்.
  இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் உயர்கல்வித்துறையில் மைசூரில் இந்திய    மொழிகளின்    நடுவண்    நிறுவனம் இயங்குகிறது. இதில் 1989 மே 19 இல் தற்காலிகப்பணியில் சேர்ந்தார். பேராசிரியர் – துணை இயக்குநர்   பொறுப்பு வரை உயர்ந்தார். இந்திய   மொழிகளில்   நூல்கள்,  சிற்றிதழ்கள் வெளிவருவதை  ஊக்குவிக்கும்  திட்டத்தினை அறிமுகப்படுத்தி நூலாசிரியர்கள், இதழாசிரியர்கள் வளர்ச்சிக்கு உதவினார்.
  மைதிலி,  போடோ,  நேபாளி,  சந்தாளி ஆகிய    புதிய    பட்டியல்    மொழிகளின்    வளர்ச்சிக்கான    திட்டத்தினையும்    சிறப்பாகச் செயற்படுத்தி அம்மொழிகளின் நல்வாழ்விற்கும் உதவினார். மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டார். சாகித்திய  அகாதமியோடு  இணைந்து  சிறந்த  இந்தியப் புதினங்களைப்     பிறமொழிகளில்     மொழிபெயர்க்கும்     பணியினைச்     செம்மையாகச் செய்தார்.  மைசூர்,   பூனே, கௌகாத்தி,     பட்டியாலா,     இலக்குனௌ,     சோலன்,     புவனேசுவர்     ஆகிய     நகர்களில் இயங்கிவந்த நிறுவனத்தின் ஏழு   மண்டல   மொழிமையங்களையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்து அம்மையங்களின் மேம்பாட்டிற்கும் உதவினார்.
 பல்வேறு       பல்கலைக்கழகங்களில்       முனைவர்       பட்ட       ஆய்வுகளுக்கு மதிப்பீட்டாளராகவும்  வாய்மொழித்  தேர்வாளராகவும்  பணியாற்றியனார்.  சாகித்ய  அகாதமி விருதுகள்   தேர்வுக்   குழுவில்   ஆயராக(jury)  இருந்துவருகிறார்.   கல்லூரி,   பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சிகள்       நூற்றுக் கணக்கானவற்றில் உரையாற்றியவர்.  தாமே    முன்னின்று    உலக    அளவிலான,    தேசிய    அளவிலான மாநாடுகள்,   கருத்தரங்குகள்,   பயிலரங்குகள்   முதலானவற்றை   நடத்தியவர்.   பல்வேறு பல்கலைக்கழகங்களில்   பாடத்திட்டக்   குழு   உறுப்பினராகவும்   பணி   நியமனக்   குழு உறுப்பினராகவும்  பணியாற்றியவர்.  அரசுப்  பணி  தொடர்பாக  நேபாளம்,  மொரிசியசு, மலேசியா போன்ற அயல்நாடுகளுக்குச் சென்றுவந்திருக்கிறார்.
  செம்மொழித்தகுதியேற்பில் தகைமைப்பணி
  தமிழின் செம்மொழித்தன்மை பல்லாயிரம் ஆண்டு தொன்மையையும் உலக மொழிகளில் முதன்மையையும் உடையது. கடந்த இரு நூற்றாண்டுகளாகத் தமிழறிஞர்களும் அமைப்பினரும் தமிழுக்கான செம்மொழித்தன்மைக்கு அரசின் அறிந்தேற்பு வழங்கக் குரல் கொடுத்து வந்துள்ளனர். இதன்பயனாக 2004    அக்டோபர்    12    இந்திய    அரசால்    தமிழுக்குச்    செம்மொழி      ஏற்பு வழங்கப்பட்டது. இதற்கான  அடிப்படைப்  பணிகளை மேற்கொண்டது  இந்திய  மொழிகளின்   நடுவண்  நிறுவனம்தான்.  பரிந்துரைகளை வடிவமைத்து  அனுப்பியதிலும்  அறிவிப்பு  வருவதற்கு  முன்பு  அமைச்சக  அளவில்  எழுந்த சில சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் முயற்சியிலும்  அதன் இயக்குநருக்கும் வழிகாட்டிய பேராசிரியர் இராமசாமியின்பங்கு சிறப்பானது.
  செம்மொழி  ஏற்பின்  தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழுக்கான  ஒரு  வரைவுத்  திட்டம்  2005  இல்  உருவாக்கப்பட்டு  அதைச்  செயற்படுத்தும் பணி    இந்திய    மொழிகள்    நடுவண்    நிறுவனத்திடம்    ஒப்படைக்கப்பட்டது.  நிறுவன இயக்குநர்  இத்திட்டத்திற்கான    தலைமைப்    பொறுப்பினை    பேராசிரியர்    இராமசாமியிடம்   ஒப்படைத்தார்.   பல்வேறு   இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும்   இடையில்  புதிய திட்டத்தைச் செயற்படுத்தினார்.
   திட்டச் செயற்பாட்டின்படிச் செம்மொழித்   தமிழ் உயராய்வு    மையம்    உருவாக்கப்பட்டது;  2007  ஆகட்டுத்   திங்களில்   செம்மொழித்   தமிழாய்வு மத்திய  நிறுவனம்  தோற்றுவிக்கப்பட்டது; இந்நிறுவனம் 2008 மே 19 அன்று  சென்னைக்கு மாற்றப்பட்டது. எல்லாப் பணிகளிலும்   மையமாக   இருந்து   செயற்பட்டவர்   பேராசிரியர்  முனைவர் இராமசாமியே.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப்பணிகள்
 செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தில் பணியாட்சியுடன் குடியரசுத்தலைவர்கள் விருதுகள் வழங்குதல், உலகளாவிய நிலையில் தமிழறிஞர்கள் ஆய்வுப்பணிகளில் ஈடுபடல், முனைவர்பட்ட ஆய்வினருக்கும் மேலாய்வினருக்கும் உதவித்தொகைகள் வழங்குதல்,  தமிழ்நாட்டிலும்  உலகின் பிற பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான  மாநாடுகள்,     பயிலரங்குகள்,     கருத்தரங்குகள் நிகழ்த்துதல், சங்க    இலக்கிய நூல்களும்    தொல்காப்பிய    மூல,    உரை    நூல்களும்    இலவயமாக    வழங்குதல் எனப் பலவற்றிலும் நெறிப்படுத்திச் செம்மொழித்தமிழ் பரவிட உதவினார். இவரது இத்தகைய பணிகளால், பழந்தமிழ்  இலக்கிய இலக்கண    மரபுகள்    குறித்த    விழிப்புணர்வு    நாடெங்கிலும் உருவாக்கப்பட்டது.
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழிச் செய்தி மடல்’  சிறப்பாக வெளிவரப் பணியாற்றி இதழியல் பணியிலும் முத்திரை பதித்தவர் பேரா.இராமசாமி.
  பேராசிரியர்   இராமசாமி    2008   ஆகட்டு   இறுதியில்   மைசூர்   இந்திய மொழிகளின்    நடுவண்    நிறுவனத்திலிருந்து    பணிநிறைவு    பெற்றார்.  இருப்பினும் இவரது சிறப்பான பணிகளால், 29.09.2008 அன்று செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவராக ஒப்பந்தப் பணியில் சேர்ந்தார்.
 இந்நிறுவனத்தைச் சட்டப்படிப் பதிவு செய்தல், தமிழக அரசால் பெரும்பாக்கத்தில்    வழங்கப்பட்ட    17 காணி நிலத்தைச் சமன்படுத்திக் கட்டுமானத்திற்கு ஏற்றதாக ஆக்குதல் முதலான பணிகளையும் ஆற்றினார். 30.10.2013 அன்று  செம்மொழி நிறுவனப் பணிகளிலிருந்து விடுவிப்பு பெற்றார்.
 தனிப்படவும் பிற அறிஞர்களோடு இணைந்தும்     இவர்     எழுதி     வெளியிட்டுள்ள   நூல்கள்,     ஆய்வுக்     கட்டுரைகள், மொழிபெயர்ப்பு  நூல்கள்  பலவாகும்.  தமிழ் நூல் வளத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவர் படைத்த நூல்கள் பின் வருமாறு:-
பள்ளிநிலைப்பாடநூல்களில் மொழிப்பயன்பாட்டின் இணக்கத்தன்மை [Compatibility  of  Language  Use in School Level Textbooks (Mysore: CIIL, Monograph No.38, 1986].
இருமொழியம், இருமொழிக் கல்வி, பயிற்று மொழி குறித்த நூல் விளக்கம்- இணை ஆசிரியர் [An  Annotated  Bibliography  on  Bilingualism,  Bilingual  Education  and  Medium  of  Instruction (Joint authorship) (Mysore: CIIL, 1990)].
தமிழ்நடைக்கையேடு- இணை ஆசிரியர்.
ஆய்வுக்கோவை, புலமை, திராவிட மொழியியல் முதலான ஆய்விதழ்களில் மொழியியலுக்கு வளம் சேர்க்கும் ஆய்வுக்கட்டுரைகள் அளித்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு
  1. இந்தியர்கள் பிந்துவதேன்? – மொழி ஒரு காரணம்(1974)
  2. காலங்கரந்த பெயரெச்சம்(1975)
  3. முனைவர் இரங்கனின் மாற்றிலக்கண மொழியியல் குறித்த நூல் அறிமுகம் (1976)
  4. தொல்திராவிட இலக்கிய ஆய்வில் தொல்காப்பியரின் சொற்பொருளியல் அணுகுமுறை(1978)
  5. தொல்காப்பியரின் மொழிப்பொருட் சிந்தனைகள்(1978)
  6. எதிர் மறைப் பெயரெச்சத்தின் ஈறு(1978)
  7. ஆனந்தரங்கம் நாட்குறிப்பு ஆய்வுரைகளில் தமிழ்மொழிநிலை(1991)
  8. நீல பத்மநாபனின் கூண்டினுள் பட்சிகள் – ஒரு பார்வை
  9. தாய்மொழியும் பயிற்சி மொழியும் – (ஒரு) தொடர் போராட்டம்(2001)
  10. இந்திய இலக்கியங்களில் குழந்தை இலக்கிய வளர்ச்சி(2002)
  11. தமிழை இரண்டாம் மொழியாகக்கற்பித்தலில் இலக்கணத்தின் பங்கு(2003).
  பெரும்பாலான கட்டுரைகளை இவர் இரு மொழிகளிலும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகளுக்கு உலகளாவிய வரவேற்பு உள்ளது இவர் புலமையின் தனிப்பெருஞ்சிறப்பாகும்.
மொழி பெயர்ப்புப்பணி
முன்னர்க் குறிப்பிட்டுள்ளமைபோல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை அளித்துள்ளார்.
புரட்சி செய்
குறுந்தொகைப்பாடல்கள் சில
ஆகியவற்றைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார்.
சொந்த நாட்டிலேயே அந்நியர்கள்
அடல் பிகாரி வாசுபாய்
ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
சொற்பொழிவுகள்
  இவை தவிர, அறிஞர் முனைவர் செம்மொழி க.இராமசாமி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பங்கேற்றுத் தனித்தமிழுணர்வும் செம்மொழித் தமிழ் இலக்கிய ஈடுபாடும் மாணாக்கர்களுக்கு ஏற்படும் வகையில் சிறப்பான சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். இவை நூல் வடிவம் பெற்றால் தமிழுக்கு வளம் சேர்க்கும்; கற்போர்க்கு நலன் பயக்கும்.
 நிறுவனம் சாராத் தமிழ்ப்பணிகள்
 தமிழ்க் கல்வி, தமிழ்வழிக் கல்வி, பிறமொழிக் கல்வி, தூய்மையான சுற்றுச்சூழல்,இயற்கையோடு  இயைந்த  வாழ்வு  போன்றவை  குறித்து  மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும்  நோக்குடன்  ‘தழிழ்ப்  பண்பாட்டுப்  பேரமைப்பு’  என்னும்  பெயரில்  தன்னார்வத் தொண்டு  நிறுவனம்  ஒன்றினை உருவாக்கிச்      செயலாளராகப்      பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.    அரியலூருக்கு    அருகில்    அமைந்துள்ள    வள்ளலார்    கல்வி நிறுவன வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார். இவர் துணையால், 2013 நவம்பரில் நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய கொ.இரா.விசுவநாதன்  நூற்றாண்டு  விழாவினை அன்றைய ஆளுநர் மேதகு கே.இராசய்யாவை வரவழைத்துச்   சிறப்பாக நடத்தினர்.
   2015 சூலை  17  அன்று     அரியலூரில்     முதல்  புத்தகத்     திருவிழாவினை  முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு    அப்துல்கலாமை    வரவழைத்துத் தொடங்கி வைத்ததுடன்   தொடர்ந்து   26   வரை   பல்வேறு   அறிஞர்களையும்   அழைத்துச் சிறப்பித்தார்.  பல்வேறு  கலைநிகழ்ச்சிகளுடனும்  பேரளவிலான  வாசகர்  வருகையுடனும் புத்தக    விற்பனையுடனும்    வெகு    சிறப்பாகப்    புத்தகத்    திருவிழா    நிறைவேறியது. அதுபோலவே  இரண்டாவது அரியலூர்ப்  புத்தகத்  திருவிழா  2016  சூலை  15  முதல்  24 வரை    மிகவும்    சிறப்பாகக்    கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும்அரியலூரில் புததகத்திருவிழா நடத்தப்பெற்று இவர் பணிச்சிறப்பை உணர்த்திக் கொண்டுள்ளது. தமிழ்ப்    பண்பாட்டுப்    பேரமைப்பின் மூலமாக மேலும் பல சமூகப் பணிகளை மேற்கொள்ள முனைந்து பாடுபட்டு வருகின்றார்.
  கன்னட   அறிஞர்களும்   ஒடிய   மொழி   வல்லுநர்களும்   இவரை      அடையாளங் கண்டு      தத்தம்      செம்மொழித்      திட்ட      வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தமிழ் மக்களில் பலர் இவரது செம்மொழித் தொண்டினைப் புரிந்துகொண்டுள்ளனர்.
  இந்திய    மொழிகளின்    வளர்ச்சிப்    பணிக்காக    டிஏவி    கல்வி    நிறுவனங்களால் தில்லியில்  ஏற்பாடு செய்யப்பட்ட  விழாவிலும்  (15.2.1993)  செம்மொழித்  தமிழ்ப்  பணிக்காக முன்னாள்     மத்திய     அமைச்சர்     திரு.அருசுன்(சிங்கு)     தலைமையில் முத்தமிழறிஞர்  கலைஞர்  கருணாநிதி  முன்னிலையில்  நடைபெற்ற  செம்மொழித்  தமிழாய்வு மத்திய     நிறுவனத்     தொடக்க     விழாவிலும்     (18.08.2007)     இவர்     பாராட்டப்பட்டுச் சிறப்பிக்கப்படடார் என்பது நினைவுகூரத் தக்கதாகும்.
குடும்பம்:  செம்மொழியாரின் இல்லத்தரசி திருவாட்டி மு.கல்யாணி கல்விப்பணியில் ஈடுபட்டவர். அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி விருப்பப் பணிநிறைவு பெற்றவர். நற்கல்வி பெற்ற நன்மக்கள் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர். மகன் திரு இரா.இனியன் ஐதராபாத்திலுள்ள அமேசான் பன்னாட்டு நிறுவனக்கிளையில் பொது மேலாளராகப் பணியாற்றிவருகிறார். மருமகள் திருமதி கீதாஞ்சலி தில்லி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக உள்ளார். மகள் மருத்துவர் இரா.அன்புக்கனி, அரியலூர் அரசு மருத்துவமனையில் தோல் மருத்துவராகப் பணிபுரிகிறார். மருமகன் மருத்துவர் க.கொளஞ்சிநாதன் அங்கேயே கண் மருத்துவராகப் பணியில் உள்ளார். அனிகா இனியன்(மகன்வழிப் பெயர்த்தி), கவின், முகில் (மகள் வழிப் பெயரன்கள்) என நற்பெயர் தாங்கிய பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
 மொழியியல் பேராசிரியர்களில் ஒரு சாரார் கொச்சை நடையை வாழும் மொழியாகக் கற்பித்து மொழிச்சிதைவிற்கு வழி வகுத்துவருகின்றனர். அவ்வாறில்லாமல் மொழியியல் அறிஞர் தொல்காப்பியர் வழிநின்று தமிழின்செம்மொழி மரபைக் காக்கத் துணை நிற்பவர் மொழியியலறிஞர் பேரா.க.இராமசாமி.
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பத் தொண்டாற்றியவர் பெரியார் ஈ.வெ.இராமசாமி.
தமிழ்மொழியின் செம்மொழித்தன்மையின் அறிந்தேற்பிற்குத் தொண்டாற்றிப் பரப்புதலுக்கும் தொண்டாற்றுபவர் செம்மொழி க.இராமசாமி.
செந்தமிழர் போற்றும் செம்மொழி இராமசாமி செந்தமிழ்போல் நீடு வாழ்க!
இலக்குவனார் திருவள்ளுவன்