Sunday, April 25, 2021

தொல்தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தனித்துவச் சிறப்புகள்- ப. மருதநாயகம்



(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  26/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

27/ 69

தமிழ்ப்பண்பாட்டின் மாட்சிமை (The Glory that was Tamil Culture(2018)

18 அதிகாரங்கள் உடையது இந்நூல். தொல்தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தனித்துவச் சிறப்புகளை  மேனாட்டார் கருத்துகள் வழி விளக்கியுள்ளார். புறநானூறு, பதிற்றுப்பத்து, பரணர் பாடல், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம் முதலியவற்றின் மூலம் தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்புகளை விளக்குவதுடன் பல பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளார்.

இந்நூற் தலைப்புகள் வருமாறு:

  1. பண்டைய தமிழ்ப் பண்பாடு: இதன் தனித்துவம் (Ancient Tamil Culture: Its Uniqueness)
  2. இலக்கியமும் வரலாறும் : புறநானூறும் பதிற்றுப்பத்தும்(2. Literature and/as HIstory: Puranaanuuru and Pathitrupathu)

3.சங்கப்புலவர்களின் தனி உரிமைகள் (The prerogatives of Sangam poets)

  1. இறப்பு, புகழ் குறித்த உண்ணோக்கல்: புறநானூற்றுக் கையறுநிலைப்பாக்கள்(Meditations upon Death and Fame: Elegies in Puranaanuuru)
  2. பரணர் செய்யுள்: புதிய வரலாற்றாய்வை நோக்கி(The Poetry of Paranar: Towards A New Historicist Study)
  3. கலை எதிர் பாலியல்: அகநானூற்றிலிருந்து ஒரு படுக்கையறைக்காட்சி (Art versus Pornography: A Bedroom scene From Akanaanuuru)
  4. குறிஞ்சிப்பாட்டு : களவு மணமும் காந்தருவத் திருமணமும் (Kurinchipaattu:Kalavumanam and Gandharva marriage)
  5. நெடுநல் வாடையில் அரண்மனைப் பள்ளியறை(The Royal Bedchamber in Netunalvaatai)
  6. இந்தியக் காப்பியத் தோற்றம் : சங்கப்பாடல்களில் இருந்து குமாரசம்பவம் வரை(Birth of an Indian Epic : From Sangam Poems to Kumaracampavam)
  7. காப்பிய உவமம் கையாளுதல் : ஓமர், மிலிடன், சங்கப்புலவர்கள் (Employment of Epic Similes : Homer, Milton and the Sangam poets)
  8. மனித வாழ்வின் அவலம் :: சேக்சுபியரும் சங்கப் புலவர்களும்(On the Human Predicament: Shakespeare and the Sangam Poets)
  9. வாழ்வின் பொருளும் நோக்கமும்: பிளேட்டோவும் திருவள்ளுவரும்(On the Meaning and End of life : Plato and Thiruvalluvar)
  10. நட்பு : அரிசுட்டாட்டிலும் திருவள்ளுவரும்(On Friendship : Aristotle and Thiruvalluvar)
  11. திருக்குறள் : தன்னலமற்ற அன்பு நெறி(Thirukkural: Ethics of Altruistic Love)
  12. பழமொழி நானூறு: வாழ்வியல் கருவியாகப் பழமொழிகள்(Pazhamozhi Naanuuru : Proverbs as Equipment for Living)
  13. கவிதையாக மந்திரம்: திருமுலரின் திருமந்திரம்(Mantra as Poetry : Thirumuular’s Thirumanthiram)
  14. சிலப்பதிகாரம் : பத்தீனியன் ஆய்வு (Cilappatikaaram : A Baktinian Study)
  15. கவிதையாக மெய்ப்பொருள் :புத்தமும் மணிமேகலையும் (Philosophy As Poetry : Buddhism in Manimekalai)

இந்நூற்தலைப்புகளே இந்நூலின் பொருண்மையைத் தன்னளவில் விளக்குவனவாக அமைந்துள்ளன. தலைப்புகள் யாதாயினும் தமிழ்ப்பாடற் சிறப்புகளையும் தமிழ்ப்பண்பாட்டுச் சிறப்புகளையும் மேலை அறிஞர்களின் கண்ணோட்டங்கள் அடிப்படையிலும் ஆய்வு நோக்கிலும் இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69  )



Saturday, April 24, 2021

சமற்கிருத வாணர்களின் பொய்யுரைகளுக்கு மறுப்புரைகள் – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

25/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

26/ 69

கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்(2010)

மனுநூல் அறவுணர்வு சற்றுமில்லாத பண்பாடற்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாதவிதிகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே செல்லும். தமிழ் இலக்கியங்கள் அறவுணர்வு சார்ந்த பண்பாட்டுப் பகுத்தறிவுக் களஞ்சியமாக உள்ளன என்பதைக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு மூலம் விளக்குகிறார். பதினெட்டாம் நூற்றாண் டில் தமிழகம் வந்த ஐரோப்பிய அறிஞர்கள் தனித்தியங்கும் தமிழின் உயர்வையும்  தமிழுக்குக் கடன்பட்டு வாழும் சமற்கிருதத்தின் குறைகளையும் சுட்டியுள்ளனர். செம்மொழி இலக்கியங்களாகப் போற்றப்படும் கிரேக்க, உரோம இலக்கியங்களைவிடத் தமிழ்இலக்கியங்கள் உயர்ந்தும் சிறந்தும் உவகை அளிப்பதை அடுத்து விளக்குகிறார். இவர் கருத்துகளுக்கு மேனாட்டறிஞர்களின் ஆய்வு முடிவுகள் அரண் சேர்ப்பதையும் காணலாம்.

1.) கபிலர் அறிவித்த தமிழ், 2.) உலக அறிஞர்கள் நோக்கில் தமிழ், 3.) செம்மொழிகளில் ஒரு கவிதை மொழி, 4.) சங்க இலக்கியத்தில் சிந்துவெளிப்பண்பாடு, 5.)  பத்துப்பாட்டு என்னும் பண்பாட்டு ஆவணம், 6.) சான்றோர் கவிதையும் காளிதாசனும், 7.) காளிதாசன்படைப்புகளில் சிலம்பின் ஒலி, 8.) பத்தி இலக்கியத்தின் மூலவேர்கள், 9.) உரைகற்களாக ஏழு கவிதைகள், 10.) பழமொழி நானூறு: இன்றைய நோக்கில், 11.) கவிதையில் வீர சைவம்: மணிவாசகரும் பசவண்ணரும்,12.) கம்பர் போற்றும் குறள், 13.) திறனாய்வாளராக நச்சினார்க்கினியர், 14.) பாரதியின் கவிதையியல், 15.) மீண்டும் பாவாணரின் எழுச்சி, 16.) கலைஞரின் காலப்பேழையும் கவிதைச் சாவியும், 17.) குலோத்துங்கனின் மானுட யாத்திரை,  18.)தமிழ் இலக்கியம் காட்டும் வாழ்வு நெறி  ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

இன்றைய மேலை விற்பன்னர்களின் சிந்தனைகளை முன்னிறுத்திப் பார்த்தோமானால், இந்திய இலக்கிய வரலாற்றில் சமற்கிருதத்தின் பங்கும் தன்மையும் மறுஆய்வு செய்யவேண்டிய ஒன்று. தமிழறிஞர்கள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் வெளிப்படாத உண்மைகள் இப்பொழுது வெளிவந்திருக்கின்றன. சமற்கிருத மொழி உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளிலும் தமிழின் தாக்கம் இருப்பதைப் போலவே அவ் வெல்லா இலக்கியங்களிலும் தமிழ் இலக்கியங்களின் தாக்கம் இருப்பதாகத் தெளிவுபடுத்துகிறார்.

முதல் கட்டுரை கபிலரின் குறிஞ்சிப்பாட்டு குறித்தது. இதில் கந்தருவ மணம் களவு மணத்தினின்றும் முற்றிலும் வேறுபட்டதாயினும் தமிழின் உட்பகைவர்களால் அ்வை இரண்டும் ஒன்றே எனக் காட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை் குறிப்பிடுகிறார். அறவுணர்வு சற்றுமில்லாத, பண்பாடற்ற, பகுத்தறிவுக்கொவ்வாத, மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலான விதிகளை யெல்லாம் மனுநூல் அடுக்கிக் கொண்டே செல்கிறது என்பதை விளக்குகிறார்.

இராபருட்டு தி நோபிலி(Robert De Nobile), சீகன் பால்கு (Ziegenbalg), எல்லீசன்(F.W.Ellis), வீரமா முனிவர்(Beschi), கால்டுவெல்(Caldwell), பரோ(Burrow, பிரான்சு வாகுரோ(Francois Gros), ஏ,எல்.பெக்கர்(A.L.Becker), கீத்து தெயிலர்(Keith Tailor), ஏ.கே.இராமானுசன், மாருட்டின் செய்மர், போப்பு அடிகளார்(Rev.G.U.Pope), சியார்சு ஆருட்டு(G.L.Hart), இலியன் ஆருடு(Leonhard), தாவீது சுலமன்(David Shulman), (R.E.Asher), பியர் மெயில்(Pierre Meile)  சுனிதி குமார்(சாட்டருசி), துபையான்சுகி(Dubiansky), வாசக்கு(Vacek), பக்கு(Buck), பெல்லகிரினி (Guido Pellegrini)போன்ற அறிஞர்கள் பலர் தமிழின் சிறப்புகளைக் குறித்து விளக்கியதை  எடுத்துரைக்கிறார்.

தெளிவான கவிதைக் கோட்பாடு, நீண்ட கவிதை மரபு, கவிதைக்கேற்ற மொழி வளர்ச்சி, விரிந்து பரந்த உயர்வற உயர்ந்த கவிதைப் பரப்பு எனும் தகுதியை எடுத்துக் கொண்டோமானால், மேலை விற்பன்னர்களின் கூற்றுப்படியே தமிழுக்குப் பிற செம்மொழிகள் இணையாகா என்பதை மூன்றாம் கட்டுரையில் உரைக்கிறார்.

ஈராசு பாதிரியார், சிந்துவெளிப்பண்பாடு இன்றும் தமிழகத்தில் உயிரோடிருப்பதை விளக்கியிருக்கும பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்கக்காலத்தில் அப்பண்பாட்டின் தொடர்ச்சி ஆளுமை பெற்றிருந்ததில் வியப்பில்லை என நான்காம் கட்டுரையில் தெரிவிக்கிறார்.

இவ்வாறு அனைத்துக் கட்டுரைகள் மூலமும் தமிழர்களின் ஓருலகக் கோட்பாட்டினையும் தமிழ்ப்பண்பாட்டுச்சிறப்புகளையும் தமிழ் இலக்கிய உயர்வுகளையும் தமிழின மேம்பாடுகளையும் தமிழ் மொழியின் ஒப்பற்ற செம்மையையும் பேரா.ப.ம.நா. சுட்டிக்காட்டுகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 27/ 69 )

 



Friday, April 23, 2021

நடுநிலையற்ற சமற்கிருத விற்பன்னர்கள்- ப. மருதநாயகம்

 அகரமுதல

     24 April 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 24/ 69  இன் தொடர்ச்சி)

 



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

25 / 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

பதினைந்தாவதாகப் புறநானூறு வரலாற்றுப்புதினமா என வினா எழுப்புகிறார்.

நடுநிலையற்ற சமற்கிருத விற்பன்னர்களும் தமிழ் உட்பகைவர்களும் தமிழ் இலக்கியங்களைப்பார்த்து உருவாக்கப்பட்ட சமற்கிருத இலக்கியங்களை முன்னதாகக் காட்டுவதற்காகச் சங்க இலக்கியக் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவதையும் எடுத்து அவர்களின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக மேலை இலக்கியக் கல்வியாளர்கள் சமற்கிருதக் கவிதையியலும் இலக்கியமும் தமிழ்க்கவிதையியல், இலக்கியம் ஆகியவற்றின் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு வருகிறார்கள். சமற்கிருத நூலாரின் தொனிக் கோட்பாடு தமிழரின் இறைச்சியிலிருந்து பெறப்பட்டது; காளிதாசன் பல கவிதை உத்திகளுக்குச் சங்கச் சான்றோர் கவிதைகளுக்குக் கடன்பட்டிருக்கிறான் என ஐயத்திற்கிடமின்றி நிலை நாட்டியுள்ளனர். இவற்றை நம் நாட்டு நடுநிலையான சமற்கிருத விற்பன்னர்கள்  ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இப்பொழுது சங்க இலக்கியம் பெற்றுள்ள பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுத் தமிழின் உட்பகைவர்கள் மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்;அவற்றுள் ஒன்று எர்மன் தீகென்(Herman Tieken ) எழுதிய ‘தென்னிந்தியாவில் காவியம்: பழந்தமிழ்ச்சங்கக் கவிதை’ எனும் ஆங்கில நூல்(Kavya in South India: Old Tamil Cangam Poetry) ஆகும். இதன் முதல் நோக்கம் சங்க இலக்கியம் இதுகாறும் கருதப்பட்டு வந்த காலத்திற்கு மிகப் பின்னதென்று காட்டுவதே என முன்னுரையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் முடிவின்படி சங்க இலக்கியம் எட்டாம்நூற்றாணடின் இறுதி அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முந்தியதாக இருக்க முடியாது. தமிழகத்தில் சமற்கிருத இலக்கியம் நுழைந்து பல காலம் சென்றே சங்க நூல்கள் தோன்றியிருக்க வேண்டுமென்றும் சங்கஇலக்கிய வகைகளெல்லாம் சில சமற்கிருதக் காவிய இலக்கிய வகைகளின் தழுவல்களே என்றும் சங்கப் பாடல் தமிழில் காவியம் எழுத மேற்கொண்ட முயற்சியின் விளைவே யென்றும் பொய்யுரை புகன்றிருப்பார். இவற்றை நமக்குப் பேரா.ப.ம.நா. எடுத்துரைக்கிறார். மேலும் இந்நூலின் ஆறாம் பகுதி புறநானூறு கற்பனையான சூழல்களையும் பாத்திரங்களையும் கொண்ட வரலாற்றுப் புதினம்(Puram as historical fiction) என்று கூறுவதையும் மறுக்கிறார்.

சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்புகள் மூலம் நுனிப்புல் மேய்ந்த தீகென் புறநானூற்றுப் பாடல்களில் எது இயல்பு, எது கற்பனை, எது உலக வழக்கு, எது நாடக வழக்கு, எது மரபு, எது கவிஞனின் படைப்பு என்பவை போன்ற வேறுபாடுகளை யெல்லாம் நுட்பமாக நோக்காமல் தெரிவித்த அடிப்படையான ஏழு கருத்துகளை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

எர்மன் தீகென்(Herman Tieken)  தெளிவாகவோ நிரல்படவோ கூறாமல் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லுதல், ஒரு கருத்தை முறையாக விளக்காமல் இன்னொன்றுக்குத் தாவிப் பின் மீண்டும் முன்னதற்குச் செல்லுதல், சான்றுகளை முறையாக விளக்கத் தெரியாமல் தடுமாறுதல், சங்கக் கவிஞர்களின் பெயர்களையும் தொடர்களையும் எழுத்துப் பிழைகளோடு தருதல் ஆகிய குற்றங்களைச் செய்துள்ளதைப் பேரா.ப.ம.நா. தெளிவுபடுத்துகிறார். சங்க இலக்கியச் சான்றோர் ஏ.கே.இராமானுசன், சியார்சு ஆர்த்து போன்றோர் கூறும் கருத்துகளை மறுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறெல்லாம் அவர் பிழை பட எழுதி யுள்ளார்.

தீகென் தந்த ஏழு பொய்யுரைகளுக்கும் தக்க மெய்யுரைகளையும் அளித்துள்ளார். புறநானூற்றில் இடம் பெறும் வரலாற்று மாந்தர்களைக் கற்பனைப் பாத்திரங்கள் எனக் கூறும் தீகெனுக்கு வநன்மையாக மறுப்பு அளித்துள்ளார். தீகென், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் பற்றி அவர் பெற்றுள்ள குறை அறிவை வைத்துக்கொண்டு ஆய்வு நூல்களை எழுதாமல் மூல மொழியிலோ மொழி பெயர்ப்பிலோ புறநானூற்றுக் கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்து மகிழச்சி காணவும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழுக்கு எதிராக இட்டுக்கட்டும் தவறான கருத்துகளைப் பரப்பியும் அத்தகைய போலிக் கருத்தாளர்களை உயர்த்தியும் வரும் கூட்டத்தார், ஆய்வுச் செம்மல் பேரா.ப.மருதநாயகத்தின் கருத்துகளைப் பரப்பியும் அவரைச்சிறப்பித்தும் போற்ற வேண்டும்.

பதினாறாவதாகவும் நிறைவாகவும் புறநானூற்றுப் பாடல்களின் மூன்று மொழி பெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆய்வுரை வழங்குகிறார்.

புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றிற்கு ஆங்கிலத்தில் கவிதையாகவும் உரைநடையாகவும் மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்த பின் வரும் மூன்று மொழி பெயர்ப்புகளைப் பேரா.ப.ம.நா.ஆய்விற்கு எடுத்துள்ளார்:

1.போப்பு அடிகளாரின் ‘தமிழ் வீரப்பாடல்கள்’(G.U.Pope, Tamil Heroic Poems. 1910).

2.ஏ.கே.இராமானுசத்தின் ‘காதலும் போரும் குறித்த பாடல்கள்’(A.K.Ramanujan, Poems of Love and War, 1985)

  1. சியார்சு ஆர்த்து, அங்குஎயிஃபெட்சு ஆகியோரின் ‘போரும் ஒட்பமும் குறித்த நானூறு பாடல்கள்’(George L.Hart & Hank Heifetz, The Four Hundred Poems of War and Wisdom, 1999)

  இவற்றுள் போப்பு அடிகளாரின் மொழி பெயர்ப்புத் தொகுதியில் 71 புறநானூற்றுப் பாடல்களும் ஏ.கே. இராமானுசத்தின் மொழி பெயர்ப்புத் தொகுதியில் 58 புறநானூற்றுப் பாடல்களும் சியார்சு ஆர்த்து – அங்கு எயிஃபெட்சு மொழி பெயர்ப்பில் புறநானூறு முழுமையும் கவிதை வடிவில் இடம் பெற்றுள்ளன.

மூவரின் மொழிபெயர்ப்புச் சிறப்புகளைப் பாராட்டும் பேரா.ப.ம.நா. சில பாடல்களின் மொழிபெயர்ப்புகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒப்பீட்டுரை வழங்குகிறார். எனவே, நிறைகளை மட்டும் குறிப்பிடாமல், குறைபாடுகள் காணுமிடங்களில் அவற்றைக் குறிக்கவும் தவறவில்லை. புறநானூறு தமிழருக்கு அறிமுகமான பொழுது மொழிபெயர்ப்பைச் செய்தவர் போப்பு அடிகளார். அதன் சிறப்புணர்ந்து அதனைத் தமிழர்க்கும் மேலையோர்க்கும் சொல்லும் பணியில் ஈடுபட்டார் அவர். மேலை இலக்கிய வுலகில் இன்று புறநானூற்றிற்கும் ஏனைய சங்க இலக்கியங்களுக்கும்  கிடைத்திருக்கும் செல்வாக்கிற்குப் பெரிதும் காரணமானவர் இராமானுசன். சங்க இலக்கியங்கள் யாவற்றையும் பயின்று  கவிஞர் ஒருவரின் உதவியுடன் புறநானூற்றுக்கு முழுமையான மொழிபெயர்ப்பு தந்தவர் சியார்சு ஆர்த்து. போப்பு அடிகளாரின் வழக்கிழந்த ஆங்கிலத்தையும் இராமானுசத்தின் சில கவர்ச்சியான உத்திகளையும் தவிர்க்க வேண்டுமென்று இவர்கள் கருதியது தெளிவு. மூலப்பாடலின் சந்த இன்பத்தை ஓரளவிற்கேனும் மொழி பெயர்ப்பில் கொண்டு வர முனைந்திருந்தாலும் கூட்டு முயற்சியில் விளைந்த இம் மொழிபெயர்ப்பு முற்றும் விளக்க முறை மொழி பெயர்ப்பாகி மூலத்தின் முருகியல் சிறப்பைக் கொண்டுவர முடியாமல் போனது குறித்த வருத்தத்தையும் பதிவு செய்கிறார் பேரா.ப.ம.நா.

இவ்வாறு பதினாறு கட்டுரைகள் மூலம் புறநானூற்றுப் பாடல்களில் சொற்பொருள் விளக்கம், அணிநயம், உவமைநயம் முதலான சிறப்புகளையும் கருத்தாழங்களையும் மட்டும் பேரா.ப.ம.நா. காணவில்லை. இன்றைய திறனாய்வாளர்கள் பார்வையில் அவற்றை நமக்கு விளக்கிச் சிறந்த திறனாய்வுச் செம்மலாகத் தம்மை இந்நூல்வாயிலாக நமக்குக் காட்டுகிறார். சமற்கிருத வாணர்களின் பொய்யுரைகளுக்குத் தக்க மறுப்பாய்வைத் தெரிவித்துத் தமிழின் முதன்மைச் சிறப்பையும் நமக்குப் புலப்படுத்துகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 26/ 69 )

 



Thursday, April 22, 2021

பாரிமகளிர் இரங்கற்பாவும் வீரயுக இலக்கியமும் – ப. மருதநாயகம்

 அகரமுதல

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

23/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

24 / 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

 பதின்மூன்றாவது கட்டுரை பாரியின் இரங்கபாக்கள் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது.

புறநானூற்றில் நாற்பதுக்கும் மேற்பட்ட கையறுநிலைப் பாடல்கள் இருப்பினும் பாரிக்கான பாடல்களே மிகுதி; இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை கபிலரால் பாடப்பெற்றவை. வேர்துசுவொர்த்து கவிதையுடன்  கபிலரின் இரங்கற்பாவை ஒப்பாய்வு செய்து தமிழ்ப்பாக்களின் சிறப்பை விளக்குகிறார்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.(புறநானூறு 112)

இவ்வாறு பாரிமகளிர் தம் தந்தைக்காகப் பாடிய இரங்கற்பாவை உலக இலக்கிய வரலாற்றில் ஓர் அரிய இலக்கிய நிகழ்ச்சி என்கிறார்.

நண்பனை யிழந்தகவிஞன், மனைவியை யிழந்த கணவன், காதலியை யிழந்த காதலன், புரவலனை யிழந்த புலவன் ஆகியோர் தாமே பாடும் இரங்கற்பாக்கள் உலகவிலக்கியத்தில் பலவிருக்கலாம். தந்தை யிழந்த மகனோ மகளோ தானே பாடும் இரங்கற்பா புறநானூற்றிலுள்ள ஒன்றைத் தவிர வேறிருப்பதாகத் தெரியவில்லை.

ஈபுரு மொழியில் விவிலியத்தில் மகனையிழந்த தந்தையின் புலம்பல் உரைநடையில் இடம் பெறுகிறது. அதில் அவன் துயரம் செயற்கையான கவிதை உத்திகளும் அணிநலன்களும் இல்லாமல் இயல்பாய் அமைந்து நம் உள்ளத்தை உலுக்குகிறது. பிற மொழிகளில் உள்ள இதையும் பிற இரங்கற்பாக்களையும் நினைவில் கொண்டு பாரிமகளிரின் பாடலைப் பார்ப்போமானால் அதன் முழுமையான இயற்கைத் தன்மையை உணரமுடியும்.

மேலைக் கவிஞர்களான மிலட்டன், செல்லி, விட்டுமென் போன்றோர் தமது இரங்கற்பாக்களில் தனிமனித இழப்பை உலகின் துயரமாக விரிவுபடுத்த ஒரு பகுதியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், பாரிமகளிரின் கவிதை அதனையும் எளிதில் சாதித்து விடுகிறது.

பதினான்காம் கட்டுரை புறநானூறு வீரயுக இலக்கியமா என்பது குறித்து ஆராய்கிறது.

பல்வேறு அறிஞர்கள் வீரயுக இலக்கியம் குறித்துக் கூறும் வரையறைகள், கருத்துகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவற்றைப் பேரா.ப.ம.நா. அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார்.

மேலை வீரயுகக்கோட்பாட்டு அடிப்படையில் கைலாசபதி சங்கக்காலத்தை வீரயுகமாக அடையாளம் கண்டார்.  அவருக்கு முன்னோடியாக, 1927இல் தமது ‘இந்திய வீரயுகம்’ எனும் நூலில் என்.கே.சித்தாந்தா, 1952இல் வையாபுரியார் தம் ‘காவியக் காலம்’ நூலில், சாட்டுவிக்கு அறிவித்துள்ள வீரயுகப்பண்புக் கூறுகள் சில முற்சங்கக் கவிதைகள் காட்டும் மன்பதையில் காணப்படுவதாக அறிவித்தனர். 1958 இல் சே.ஆர்.மார்(எட்டுத் தொகை பற்றிய ஆய்வேட்டில்) சங்க இலக்கியப்பாடல்களை வீரயுகப்பாடல்களாகக் கண்டார். எனினும் தெ.பொ.மீ.(தமிழ் இலக்கிய வரலாறு சங்கக்காலம் – 1981) முதலான அறிஞர்கள் கைலாசபதியின் கருத்தை மறுத்தார்கள். இவற்றையும் பேரா.ப.ம.நா. நமக்கு எடுத்துரைக்கிறார்.

கிரேக்க வீரயுகப் பாடல்கள் போர் வெறியையும் அழுக்காறு, பேராசை போன்ற தீக்குணங்களையும் பாராட்டுவன.போரின் கொடுமையையும் மடமையையும் எடுத்துரைத்து மன்னர்களைப் போரைத் தவிர்க்குமாறு வேண்டும் பாடல்கள் தமிழில் உள்ளன.

“புறநானூற்றுப் பாடல்களை மேலை நாட்டார் சுட்டுகின்ற வீரயுக இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் முருகியல் அணுகு முறையில் அவற்றின் கவிதைத் தரத்தை நுட்பமாகப் பார்த்தாலும் தமிழ் இலக்கிய வீரயுகம் புறநானூற்றுக்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவாகும்” என முடிவு கட்டுகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  25/ 69) 


Wednesday, April 21, 2021

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் பெண்ணியக்கவிஞர்கள்! – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

23/ 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

மேனாட்டார் பெண்ணியம்பற்றிய சிந்தனை கொள்வதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணியக்கவிஞர்கள் தமிழகத்தில் இருந்த சிற்பபு நிலையை இவ்வாறெல்லாம் இக்கட்டுரையில் பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.  

ஒன்பதாவதாகக் கட்டவிழ்ப்புத்திறனாய்வு விளக்கம் பெறுகிறது.. தெரிடா(Jacques Derrida) கட்டவிழ்ப்புத் திறனாய்வு முறையின் தந்தையாக அழைக்கப் பெறுபவர். 1967இல் மூன்று நூல்கள் வாயிலாக மொழியும் பொருண்மையும் செயல்படுவது குறித்த தம் புரட்சிக்கருத்துகளை வெளியிட்டவர். தெரிடா தம் கோட்பாட்டை வேறுபாடு(Differance) என்று குறிப்பிட்டார். ஒரே பாடலில் இருவேறுபட்ட நிலைகளை உரைப்பதை இது குறிக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் புறநானூற்றுப் பாடல்கள் பல உள்ளன. ஒக்கூர் மாசாத்தியார், கபிலர், ஆவூர் மூலங்கிழார், இளங்கீரனார் முதலான புலவர்கள் வழங்கிய புறநானூற்றுப் பாடல்களைத் தந்து நமக்கு விளக்கமும் அளிக்கிறார்.

பத்தாவது கட்டுரையில் இடைப்பனுவலியம் ஆராயப்படுகிறது. தாக்கம் என்பது ஏற்பு அல்லது செல்வாக்கிலிருந்து இனம் பிரித்துக் காணப்படவேண்டிய ஒன்று

நேரடித்தாக்கம்(direct influence), மறைமுகத் தாக்கம்(indirect influence) ஆகிய இருவகைக்கும் புறநானூற்றுப் பாடல்களை எடுத்துக்காட்டுகளாகக் காணலாம். முன்னோர் கையாண்ட சொற்களையும் தொடர்களையும் உவமைகளையும் எந்த விதமான தாக்கக்கவலை(anxiety of influence)யோ குற்றவுணர்வோ இல்லாமல் எடுத்தாண்டு அவர்கள் கூறவந்த கருத்துகளையும் தெரிவிக்க எண்ணிய உணர்வுகளையும் வெளியிடும் போதும் தமக்கே உரிய ஆளுமை முத்திரையைப் பதிப்பதில் வெற்றியும் பெற்றனர் என்பதற்குச் சான்றாகப் பல கவிதைகளைப் பார்க்க இயலும்.  

உலகவிலக்கியங்கள் வேறெதிலுமில்லாத அரிய பல உவமைகளை அளித்துள்ள சங்கச்சான்றோர் சில பாடல்களில் வேறுபுலவர் கையாண்ட உவமையையே தம் தனித்தன்மை வெளிப்படுமாறு பயன்படுத்திய பாடல்களையும் நமக்கு விளக்கி அளிக்கிறார்.

பதினொன்றாவது கட்டுரை வாசகன்-எதிர்வினைத் திறனாய்வு குறித்தது.

புதுமைத் திறனாய்வாளர்களின் கருத்துகளைச்சாடி, தான்லி ஃபிசு என்பார் எழுதிய கட்டுரைகள்  வாசகன் – எதிர்வினைத் திறனாய்வைத் தோற்றுவித்தது. இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில்தான் இஃது உருவானது. ஒரு நூல் வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றியே இது பேசுகிறது. ஒரு புத்தகம் வாசிப்போனிடம் எதிர்பார்ப்பதையும் வாசிப்போன் அதனை உள்வாங்கிக் கொள்வதையும் இரு நோக்கமாக இவ்வணுகுமுறை கொண்டுள்ளது. பிசிராந்தையார், தொடித்தலை விழுத்தண்டினார், பெருஞ்சித்திரனார் முதலான  புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறி இத்திறனாய்வு முறையை விளக்குகிறார். இதன்மூலம் வாசகன்- எதிர் வினைத்திறனாய்வு அணுகுமுறையில் பல புறநானூற்றுப் பாடல்கள் ஒளிபெற்றுத் துலங்குவதை நமக்குப் பேரா.ப.ம.நா.காட்சிப்படுத்துகிறார்.

புதுவரலாற்றியத்திறனாய்வைப் பன்னிரண்டாம் கட்டுரை விளக்குகிறது.

 இத்தலைப்பு குறித்துப் பின்வருமாறு முன்னுரை அமைகிறது.

“புதுவரலாற்றியம்(New HIstoricism) என்றும் பண்பாட்டுத் திறனாய்வு(Culture Criticism) என்றும் அழைக்கப்பெறும் திறனாய்வு அணுகுமுறை குறுகிய கால அளவில் இலக்கியம், குமுகாய வரலாறு, கலை வரலாறு, படக்கலைக்கல்வி ஆகிய துறைகளிலெல்லாம் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியமாயினும் வேறு எத்தகைய கலைப்படைப்பாயினும் அதனை வரலாற்றுச் சூழலில்  வைத்துப் பார்ப்பது இவ்வணுகுமுறை. கலைப்படைப்பிற்கும் ஏனைய குமுகாயப் படைப்புகளுக்குமுள்ள இடைவெளியைப் பொருட்படுத்தாமல் எத்தகைய வரலாற்று ஆவணமாயினும் அதனை இலக்கியத்தினும் தாழ்ந்ததாகக் கருதாமல், பெரும்பாலும் ஒரே காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களையும் இலக்கியமல்லாதவற்றையும் இணைத்துப் பார்ப்பது இவ்வணுகுமுறையின் செயற்பாடு ஆகும். புது வரலாற்றியம் வரலாற்றின் பனுவல் தன்மை, பனுவலின் வரலாற்றுத் தன்மை(Textuality of history and historicity of texts) ஆகிய இரண்டிலும் ஈடுபாடு காட்டுகிறது.

திறனாய்வாளர்களின் கருத்துகளைக் குறிப்பிட்டு அவற்றின் அடிப்படையில் புது வரலாற்றுத் திறனாய்வு அணுகுமுறையில் புறநானூற்றுப் பாடல்களைக் கண்டு அவற்றின் சிறப்புகளை இக்கட்டுரையில் விளக்குகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 24/ 69 )



Tuesday, April 20, 2021

சமற்கிருத இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் ஏற்பும் தாக்கமும்-ப. மருதநாயகம்

 அகரமுதல

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 21/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

22/ 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

  அடுத்து வரும் ஆறாவது கட்டுரையில் சமற்கிருத இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் ஏற்பும் தாக்கமும் உள்ளமையைச் சிறப்பாக விளக்குகிறார். சங்க இலக்கியங்களின் செல்வாக்குக் காளிதாசனின் காவியங்களில் இருப்பதை மேலை இலக்கிய விற்பன்னர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.  அவற்றின் ஒரு பகுதியாக இக் கட்டுரையில் காளிதாசனின் குமாரசம்பவம், இரகுவம்சம் முதலான காவியங்களில் புறநானூற்றுப்பாடல்களின் தாக்கம் இருப்பதை விளக்குகிறார்.

அடுத்துப் புறநானூற்றுப்பாடல்களிலும் கிரேக்கப்பாடல்களிலும் உள்ள ஒப்புமைக் கருத்துகளை எடுத்துக் காட்டுகிறார். இவற்றின் மூலம் புறநானூறு வீரயுக இலக்கியமன்றென்றும் தமிழ் இலக்கிய வரலாற்று வீரயுகம், இன்னும் பல நூற்றாண்டுகள் முந்தியதாக இருக்க வேண்டுமென்றும் கூறுகிறார். 

மேலும் பிற மொழி இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்களின் தாக்கம் இருப்பதை எ.கே.இராமானுசன் கருத்துகளை முன் மொழிந்து வழிமொழிகிறார். இந்தியத் தாய்மொழிகளிலுள்ள உயிர்த்தன்மையும் அவைகாட்டும் பரந்த மனப்பான்மையும் சமற்கிருதத்தில்  இல்லை என்றும் ்இந்திய மன்பதையில் எல்லா நிலையில் உள்ளவர்களையும் ஒருங்கிணைப்பவை அம்மொழிகளேயன்றிச் சமற்கிருதம் அன்று என்றும் கூறியுள்ளதையும் சுட்டுகிறார்.

சங்கச் சான்றோர் அகமாயினும் புறமாயினும் கூறவந்த கருத்திற்கேற்பச் சூழலை அமைத்துக் கொண்டு தம்மை நாடகத்திற்கு ஏற்ற ஒரு பாத்திரமாகப் பாவித்து ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களையோ முன்னிலைப் படுத்திப் பேசும் உத்தியைச் சிறப்பாகக் கையாள்வதை 7ஆம் கட்டுரையில் விளக்குகிறார்.

தன்னுணர்ச்சிப் பாக்களிலும் நாடகத்தற்கூற்றுப் பாக்களிலும் பிறவற்றிலும் இரு பிளவாக்கப்பட்ட பேசுவோன் (Split addressor), இரு பிளவாக்கப்பட்ட பேசப்படுவோன்(Split addressee)ஆகிய பாத்திரங்கள் பொருள் மயக்கத்தை ஏற்படுத்திக் கவிதையின்பத்தை மிகுவிக்கும் என்பது உருசிய மொழியியல் மேதை விளக்கும் கருத்து. இவ் வுத்தியைக் கையாளும் முறை, சங்கச் சான்றோர் அகப்பாடல்களிலும்புறப்பாடல்களிலும் உள்ளதென்கிறார்.

புறநானூற்றுக் கவிதையில் கவிஞனும் வாசிப்போனும் பிளவுபடுத்தப்பட்ட பாத்திரங்களாக உருப்பெற உதவுவது பாடுபொருள் ஒருவர் மற்றவர்க்குச் சொல்லிய கூற்றாக நாடகப்படுத்தப் படுவதே. ஒரு சிறு கவிதையின் முன் பாதியில் சில சிறு மாற்றங்களைச் செய்து பின் பாதியாகத் தந்து வெற்றி பெறும் கவிதைகள் புறநானூற்றில் உண்டு.

மேலைநடையியல் வல்லுநர்கள் முற்படுத்திக்காட்டல்(fore grounding)எனும் உத்தி இலக்கியமொழிக்கே உரியதென்பர் எனும் பேரா.ப.ம.நா. இத்தகைய உத்தியைக் கையாளும் புறநானூற்றுப் பாடல்களையும் விளக்குகிறார். உயர்திணைக்குரிய பண்புகளை அஃறிணைப் பொருள்களுக்கு ஏற்றிக் காட்டலும் இவ்வுத்தியில் அடங்கும் என்பர். சான்றோர் செய்யுட்கள் பலவற்றில் அஃறிணைப் பொருள்கள் கேட்குந போலவும் கிளக்குந போலவும் படைக்கப்பட்டுள்ளமையையும் காணலாம். இவ்வாறு இக்கால மேலைநாட்டார் கூறும் நடையியல் அணுகுமுறையைப் புறநானூற்றுப்  பாடல்களால் அறிந்து கொள்ள முடியும்.

எட்டாவது கட்டுரையில் மேலைநாடுகளில் இன்று பேசப்படும் பெண்ணியத் திறனாய்வு கருத்துகளைக் குறிப்பிட்டுப் பழந்தமிழில் பெண்ணியப் புலவர்கள் உள்ளமையைப் பின்வருமாறு விவரிக்கிறார்.

“சங்கக்காலக் குமுகாயம் போருக்கும் போர்த்திறனுக்கும் பெறப்படும் புகழுக்கும் முன்னுரிமை அளித்த ஆண்மையக் குமுகாயம்தான். ஆனால் பெண்பாற் கவிஞர்களின் பாடல்களையும் பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருத்தலையும் பார்க்கும்போது அக்குமுகாயத்தில் அதன்காலத்து உலக நாடுகள் வேறு எதிலுமில்லாத அளவு உரிமைகள் பெண்ணினத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். சங்கக் காலம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதை மனத்தில் கொண்டோமானால் இவ்வளவு பெண் கவிஞர்களை வேறெந்தக் குமுகாயமும் அக்காலத்தே பெற்றிருக்கவில்லை என்பதை உணரலாம்.அறிவு நிலையிலும் கவிதை ஆற்றலிலும் இவர்கள் ஆண் கவிஞர்களுக்குச் சற்றும் தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையையும் காண இயலாது. பாடுபொருள்களில் எவ்வித வேறுபாடுகளோ கட்டுப்பாடுகளோ இல்லாமல் ஆண் கவிஞர்களைப் போன்று எப்பொருள்பற்றியும் முழு விடுதலையுணர்வோடு பாட வல்லார். ஆண்பாற் புலவர்கள்  தம்மைப் பெண் பாத்திரங்களாகப் பாவித்துப் பாடியுள்ள கவிதைகளும் உண்டு. பெண்ணின் உடலழகைப்பாடுவதில் இவர்கள் எத்தகைய தயக்கமும் காட்டுவதில்லை. குமுகாயத்தில் இவர்களுக்கிருந்த உயர்நிலையை அவர்கள் மன்னர்களை இடித்துக் கூறும் பாடல்களிலிருந்தும் அறம் உணர்த்தும் பாடல்களிலிருந்தும் அறியலாம். “

மேலைக்குமுகாயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலிருந்தே, பெண்ணியக்கத்தின் தோற்றத்திற்குப் பின்னரே பெண்கள் எத்தலைப்பிலும் தங்கள் தனித் துய்ப்புகள்பற்றிப் பேசலாம் என்னும் நிலை வந்தது என்றும் சங்கக்காலத்துப் பெண் கவிஞர்களுக்குப்பாடுபொருள்குறித்த கட்டுப்பாடு இருக்கவில்லை எனவும் பாடற்சான்றுகளுடன் விளக்குகிறார். புறநானூற்றில் பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒன்பது துறைகளின் கீழ்ப்பாடல்கள் உள்ளன எனப்பட்டியலிட்டும் தருகிறார். பெண்களுக்குத் துயரம் வந்தபொழுது அவர்களுக்காக இரங்கி அவர்கள் சார்பில் பாடிய புலவர்களின் பாடல்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 23/ 69 )