(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

23/ 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

மேனாட்டார் பெண்ணியம்பற்றிய சிந்தனை கொள்வதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணியக்கவிஞர்கள் தமிழகத்தில் இருந்த சிற்பபு நிலையை இவ்வாறெல்லாம் இக்கட்டுரையில் பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.  

ஒன்பதாவதாகக் கட்டவிழ்ப்புத்திறனாய்வு விளக்கம் பெறுகிறது.. தெரிடா(Jacques Derrida) கட்டவிழ்ப்புத் திறனாய்வு முறையின் தந்தையாக அழைக்கப் பெறுபவர். 1967இல் மூன்று நூல்கள் வாயிலாக மொழியும் பொருண்மையும் செயல்படுவது குறித்த தம் புரட்சிக்கருத்துகளை வெளியிட்டவர். தெரிடா தம் கோட்பாட்டை வேறுபாடு(Differance) என்று குறிப்பிட்டார். ஒரே பாடலில் இருவேறுபட்ட நிலைகளை உரைப்பதை இது குறிக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் புறநானூற்றுப் பாடல்கள் பல உள்ளன. ஒக்கூர் மாசாத்தியார், கபிலர், ஆவூர் மூலங்கிழார், இளங்கீரனார் முதலான புலவர்கள் வழங்கிய புறநானூற்றுப் பாடல்களைத் தந்து நமக்கு விளக்கமும் அளிக்கிறார்.

பத்தாவது கட்டுரையில் இடைப்பனுவலியம் ஆராயப்படுகிறது. தாக்கம் என்பது ஏற்பு அல்லது செல்வாக்கிலிருந்து இனம் பிரித்துக் காணப்படவேண்டிய ஒன்று

நேரடித்தாக்கம்(direct influence), மறைமுகத் தாக்கம்(indirect influence) ஆகிய இருவகைக்கும் புறநானூற்றுப் பாடல்களை எடுத்துக்காட்டுகளாகக் காணலாம். முன்னோர் கையாண்ட சொற்களையும் தொடர்களையும் உவமைகளையும் எந்த விதமான தாக்கக்கவலை(anxiety of influence)யோ குற்றவுணர்வோ இல்லாமல் எடுத்தாண்டு அவர்கள் கூறவந்த கருத்துகளையும் தெரிவிக்க எண்ணிய உணர்வுகளையும் வெளியிடும் போதும் தமக்கே உரிய ஆளுமை முத்திரையைப் பதிப்பதில் வெற்றியும் பெற்றனர் என்பதற்குச் சான்றாகப் பல கவிதைகளைப் பார்க்க இயலும்.  

உலகவிலக்கியங்கள் வேறெதிலுமில்லாத அரிய பல உவமைகளை அளித்துள்ள சங்கச்சான்றோர் சில பாடல்களில் வேறுபுலவர் கையாண்ட உவமையையே தம் தனித்தன்மை வெளிப்படுமாறு பயன்படுத்திய பாடல்களையும் நமக்கு விளக்கி அளிக்கிறார்.

பதினொன்றாவது கட்டுரை வாசகன்-எதிர்வினைத் திறனாய்வு குறித்தது.

புதுமைத் திறனாய்வாளர்களின் கருத்துகளைச்சாடி, தான்லி ஃபிசு என்பார் எழுதிய கட்டுரைகள்  வாசகன் – எதிர்வினைத் திறனாய்வைத் தோற்றுவித்தது. இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில்தான் இஃது உருவானது. ஒரு நூல் வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றியே இது பேசுகிறது. ஒரு புத்தகம் வாசிப்போனிடம் எதிர்பார்ப்பதையும் வாசிப்போன் அதனை உள்வாங்கிக் கொள்வதையும் இரு நோக்கமாக இவ்வணுகுமுறை கொண்டுள்ளது. பிசிராந்தையார், தொடித்தலை விழுத்தண்டினார், பெருஞ்சித்திரனார் முதலான  புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறி இத்திறனாய்வு முறையை விளக்குகிறார். இதன்மூலம் வாசகன்- எதிர் வினைத்திறனாய்வு அணுகுமுறையில் பல புறநானூற்றுப் பாடல்கள் ஒளிபெற்றுத் துலங்குவதை நமக்குப் பேரா.ப.ம.நா.காட்சிப்படுத்துகிறார்.

புதுவரலாற்றியத்திறனாய்வைப் பன்னிரண்டாம் கட்டுரை விளக்குகிறது.

 இத்தலைப்பு குறித்துப் பின்வருமாறு முன்னுரை அமைகிறது.

“புதுவரலாற்றியம்(New HIstoricism) என்றும் பண்பாட்டுத் திறனாய்வு(Culture Criticism) என்றும் அழைக்கப்பெறும் திறனாய்வு அணுகுமுறை குறுகிய கால அளவில் இலக்கியம், குமுகாய வரலாறு, கலை வரலாறு, படக்கலைக்கல்வி ஆகிய துறைகளிலெல்லாம் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியமாயினும் வேறு எத்தகைய கலைப்படைப்பாயினும் அதனை வரலாற்றுச் சூழலில்  வைத்துப் பார்ப்பது இவ்வணுகுமுறை. கலைப்படைப்பிற்கும் ஏனைய குமுகாயப் படைப்புகளுக்குமுள்ள இடைவெளியைப் பொருட்படுத்தாமல் எத்தகைய வரலாற்று ஆவணமாயினும் அதனை இலக்கியத்தினும் தாழ்ந்ததாகக் கருதாமல், பெரும்பாலும் ஒரே காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களையும் இலக்கியமல்லாதவற்றையும் இணைத்துப் பார்ப்பது இவ்வணுகுமுறையின் செயற்பாடு ஆகும். புது வரலாற்றியம் வரலாற்றின் பனுவல் தன்மை, பனுவலின் வரலாற்றுத் தன்மை(Textuality of history and historicity of texts) ஆகிய இரண்டிலும் ஈடுபாடு காட்டுகிறது.

திறனாய்வாளர்களின் கருத்துகளைக் குறிப்பிட்டு அவற்றின் அடிப்படையில் புது வரலாற்றுத் திறனாய்வு அணுகுமுறையில் புறநானூற்றுப் பாடல்களைக் கண்டு அவற்றின் சிறப்புகளை இக்கட்டுரையில் விளக்குகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 24/ 69 )