Tuesday, September 13, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 7

 அகரமுதல





(உ.வே.சா.வின் என் சரித்திரம், 6 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 4

சில பெரியோர்கள்

ஐயாக்குட்டி ஐயர்

என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் முதலில் நன்றாக வேதாத்தியயனம் செய்தார்; பிறகு வடமொழியில் காவிய நாடகங்களைக் கற்றார்; இராமாயணம், பாரதம், பாகவதம், ஆலாசிய மாகாத்துமியம் முதலியவற்றைப் படித்து உபந்நியாசம் செய்யும் திறமை அவர்பால் இருந்தது; வைத்தியம், சோதிடம், மந்திரம், யோகம் இவற்றிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு, சங்கீதமும் வரும்; மலையாளத்தில் இருந்த ஒரு பெரியாரிடம் மந்திர உபதேசம் செய்துகொண்டார்.

ஒருவர் பின் ஒருவராக மூன்று மனைவியரை அவர் மணந்துகொண்டார். மூவரும் காலம் சென்றனர். அவருக்குக் குழந்தையொன்றும் பிறக்கவில்லை. குடும்பத்துக்குரிய நிலம் கடன் தொல்லையினால் போக்கியம் வைக்கப்பட்ட பிறகு அவர் உத்தமதானபுரத்தில் ஒருவித முயற்சியுமின்றி இருப்பதை விரும்பவில்லை. தம்முடைய தமையனார் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்த ஆரம்பித்ததை அறிந்தும் அந்தக் கிராமத்திலே அடைப்பட்டுக் கிடப்பது அவருடைய இயல்புக்கு விரோதமாக இருந்து வந்தது. புராணப் பிரசங்கம் செய்பவர்களுக்கு அந்தக் காலத்தில் இந்நாட்டில் நல்ல மதிப்பு உண்டு. ஆதலின் எங்கே போனாலும் தமக்கு சீவனத்திற்குக் குறைவில்லை என்பதை ஐயாக்குட்டி ஐயர் உணர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களுக்குச் சென்று புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.

அவரோ ஏகாங்கி; அதிக ஆசையற்றவர்; சனங்களுடைய மனத்தைக் கவர்வதற்கு வேண்டிய இயல்புகள் அவரிடம் நிரம்பியிருந்தன. அவருடைய பூசை மிகவும் சிறப்பாக இருக்கும். சிரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பூசையையும் அவர் செய்து வந்தார். அவர் பூசை செய்த விக்கிரகம் இப்பொழுது உத்தமதானபுரம் சிவாலயத்தில் வைக்கப்பெற்று ஆராதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்ற இடங்களிலெல்லாம் அவருக்குச் சிறப்பு உண்டாயிற்று. தெய்வ பக்தியும் சோதிடம், மந்திரம் முதலியவற்றில் மிகவும் உறுதியான நம்பிக்கையும் கிராமத்தில் உள்ளவர்களிடம் இருந்தன. ஆதலின் ஐயாக்குட்டி ஐயரை ஒரு பெரிய யோகியென்றும் ஞானியென்றும், ஆசாரியரென்றும் பலர் போற்றிப் பாராட்டி வந்தனர். அவர் மணி மந்திர ஒளடதங்களின் மூலமாகப் பலருக்கு உபகாரம் செய்து வந்தார்.

அவரை நான் நன்றாகக் கவனித்திருக்கிறேன். இடையிடையே சில காலங்களில் அவர் உத்தமதானபுரம் வந்து சில நாட்கள் தங்குவார். அக்காலங்களிலெல்லாம் அவரைச் சுற்றி சனங்கள் கூடிக்கொண்டேயிருப்பார்கள். ஒருவருக்குச் சோதிடம் சொல்வார்; மற்றொருவருக்கு மந்திரிப்பார்: வேறொருவருக்கு மருந்துச் சரக்குகளைச் சொல்வார். இரவில் புராணப் பிரசங்கம் செய்வார். பெரும்பாலும் தாமே சமையல் செய்துகொண்டு உண்பார்; அயலிடங்களில் உண்பதில்லை.

உத்தமதானபுரத்தில் குளத்தின் மேல்கரையில் இப்பொழுது பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு அதில் அவர் யோகாப்பியாசம் செய்து வந்தார். தினந்தோறும் காலையில் யோகப் பட்டையைத் தரித்து யோக தண்டத்தையும் ஊன்றிக்கொண்டு யோகம் செய்ய உட்கார்ந்து விடுவார். மணிக்கணக்காக அந்நிலையிலேயே அமர்ந்திருப்பார். மத்தியானத்தில் பூசை செய்யும்போது யாராக இருந்தாலும் அவரது தோற்றத்தைக் கண்டு ஈடுபடாமல் இருக்க முடியாது.

வானவெளியில் உற்சாகமாகப் பறந்து செல்லும் பறவையைப்போல் அவர் வாழ்ந்து வந்தார். மனைவியில்லை, பிள்ளை இல்லை என்ற கவலை சிறிதளவும் அவருக்கு உண்டாகவில்லை. அவர் ஒரு யோகி என்பதை அந்த நிலை காட்டியது. எழுபது பிராயத்துக்குமேல் அவர் வாழ்ந்திருந்தார். இறக்கும் வரையில் அவர் தலை நரைக்கவேயில்லை.

தமிழ் வித்துவான்கள்

எங்கள் பந்துக்களில் தமிழ் வித்துவான்களும் சிலர் உண்டு. முன்னே கூறிய என் பாட்டனாரின் மாமனாராகிய ஓதனவனேசுவரைய ரென்பவர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர். சங்கீதத்திலும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவர் தமிழில் பிரசங்கம் செய்யும் திறமையுடையவர். அடிக்கடி புதுச்சேரி முதலிய வெளியூர்களுக்குச் சென்று திருவிளையாடல், கம்பராமாயணம், பாரதம் முதலிய நூல்களைத் தொடர்ந்து சில நாட்கள் பிரசங்கம் செய்துவிட்டு ஊரார் அளிக்கும் சம்மானங்களைப் பெற்று வருவார்.

உத்தமதானபுரத்தில் லிங்கப்பையர் என்ற வித்துவான் ஒருவர் இருந்தார். அவரும் தமிழ்ப் புலமை மிகுந்தவர்; செய்யுள் இயற்றும் ஆற்றலும் உடையவர்; சங்கீதப் பயிற்சியும் பெற்றவர்; கம்பராமாயணப் பிரசங்கம் செய்வதிற் புகழ் வாய்ந்தவர்.

அவர் பல தமிழ்க் கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள சுவாமிமலை என்னும் சுப்பிரமணிய தல விசயமாக ஒரு குறவஞ்சி நாடகத்தை அவர் பாடி அரங்கேற்றினார். உத்தமதானபுரம் கோவிலிலுள்ள அம்பிகையாகிய சிரீ ஆனந்தவல்லி மீதும் மகாகணபதியின் மீதும் பல கீர்த்தனங்களை அவர் இயற்றியிருக்கின்றார். அவற்றை அக்காலத்தில் எங்கள் ஊரில் அவர் குமாரர்களும் பிறரும் பாடக் கேட்டிருக்கிறேன். இப்பொழுது ஒரு கீர்த்தனமும் கிடைக்கவில்லை.

சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் வல்ல வித்துவான்கள் பலர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்கள். பாடுவோரும் பாராட்டுவோரும் இல்லாமையால் வரவர அக்கீர்த்தனங்கள் மறைந்து போயின. ஆயிரக்கணக்கான தமிழ்க் கீர்த்தனங்கள் இந்நாட்டில் முன்பு வழங்கி வந்தன. கர்நாடக ராகங்களின் கதிக்கு மிகவும் பொருத்தமாக அவை அமைந்திருந்தன. அன்று நான் கேட்ட அவை, இன்று இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. “தமிழில் கீர்த்தனங்களே இல்லை” என்று கூறவும் சிலர் அஞ்சுவதில்லை. எல்லாம் சற்றேறக் குறைய அறுபது வருஷங்களில் நிகழ்ந்த மாறுபாடு. இந்த மாறுபாட்டின் வேகத்திலே லிங்கப்பையரின் சாகித்தியங்களும் அகப்பட்டு மறைந்தன.

லிங்கப்பையருக்குச் சேசு வையர், சாமிநாதையர் என்ற இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். தந்தையாரைப் போல் அவர்கள் தமிழிலும் சங்கீதத்திலும் பயிற்சியும் வாக்குவன்மையும் பெற்றிருந்தார்கள். ஊர்தோறும் சென்று அருணாசல கவியின் இராமாயணக் கீர்த்தனங்களைப் பாடிப் பொருள்சொல்லிக் காலட்சேபம் செய்து வந்தனர். அவ்வாறு சொல்லும்பொழுது இடையிடையே கம்ராமாயணத்திலிருந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செய்யுட்களை இசையுடன் சொல்லிக் கேட்போரை மகிழ்விப்பார்கள். அவர்களுடைய இனிய சாரீரமும், அருணாசலகவி இராமாயணக் கீர்த்தனங்களின் அமைப்பும், கம்பராமாயணச் செய்யுட்களின் பொருளாழமும் கேட்போர் மனத்தைக் கவர்ந்தன.

அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் இராமாயண, பாரத, பாகவதங்களிலும் புராணக் கதைகளிலும் சனங்களுக்கு அதிக விருப்பம் இருந்தது. புலவர்கள் புராணங்களைப் பாடுவதில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த பம்பரஞ்சுற்றி யென்னும் ஊரிலிருந்த சுப்பையரென்னும் வித்துவான் ஒருவர் மயில்ராவணன் சரித்திரத்தைத் தமிழில் கீர்த்தனங்களாகப் பாடியிருந்தார். அச்சரித்திரக் கீர்த்தனங்களையும் அவ்விரண்டு சகோதரர்களும் கற்றுக்கொண்டு சில சில இடங்களில் அவற்றைப் பாடிப் பொருளுரைத்து வந்தார்கள். இராமாயணக் கீர்த்தனத்தைப் பாடுகையில் இடையிடையே கம்பராமாயணச் செய்யுட்களைச் சொல்வதுபோல, மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனத்தைப் பாடிப் பொருள் சொல்லுகையில் உபயோகிப்பதற்கு அச்சரித்திர சம்பந்தமான செய்யுட்கள் இல்லை; ஆதலின் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி வேறு பொதுவான செய்யுட்களைச் சொல்லி வந்தார்கள். ஆனாலும் அச்சரித்திர சம்பந்தமான பாடல்கள் இல்லையே யென்ற குறை அவர்களுக்கு இருந்து வந்தது. “அப்பா இருந்தால் அவரைப் புதிய செய்யுட்களைப் பாடும்படி சொல்லலாம். இப்போது யார் நமக்குப் பாடித் தருவார்கள்?” என்று எண்ணி வருந்தினார்கள்.

இவ்வாறு இருக்கும்போது ஒரு சமயம் அவர்கள் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள பூவாளூர் என்னும் ஊருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே அவர்கள் சில நாள் தங்கி இராமாயணக் கீர்த்தன காலட்சேபம் செய்து காலங் கழித்தார்கள். இடையே ஒருநாள் அவ்வூருக்குத் திரிசிரபுரம் மகாவித்துவானாகிய சிரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வந்திருப்பதாகக் கேள்வியுற்றார்கள். பிள்ளையவர்கள் திரிசிரபுரத்தில் வசித்து வந்த காலம் அது. அவருடைய பெருமை அந்நகரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பரவியிருந்தது.

சேசுவையரும் சாமிநாதையரும் அப்புலவர்பிரான் வந்திருப்பது தெரிந்து நெடுநாட்களாகத் தங்கள் மனத்திலிருந்த குறையை நிறைவேற்றிக்கொள்ளலா மென்ற எண்ணத்தோடு சென்று அவரைக் கண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ் வித்துவான்களைக் கண்டால் உபசரித்து அன்போடு உபகாரம் செய்வது அப்பெரியாருடைய வழக்கம். தமிழ்க் கல்வியில் ஒருவருக்குச் சிறிதளவு அன்பிருந்தாலும் அதைப் பெரிதாகப் பாராட்டி ஊக்க மூட்டுவார்.

இரண்டு சகோதரர்களும் தம்முடைய வரலாற்றைக் கூறினார்கள்; தம் தந்தையார் இயற்றிய குறவஞ்சியிலிருந்து சில பாட்டுக்களைப் பாடிக் காட்டினார்கள்.

பிள்ளையவர்கள்:- எல்லாம் நன்றாக இருக்கின்றன. தமிழ் வித்துவானாகிய உங்களுடைய தந்தையாரை நான் பாராவிட்டாலும் உங்கள் இயல்பே அவருடைய பெருமையை விளக்குகின்றது. உங்களுக்கும் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டோ?

சகோதரர்கள்:- இல்லை; இனிமேல் பழகிக்கொள்வதும் இயலாத காரியம், தங்களிடம் ஒரு வேண்டுகோள் செய்துகொள்ள வந்திருக்கிறோம்.

பிள்ளை:- என்ன அது?

சகோ:- பம்பரஞ்சுற்றி யென்னும் ஊரினராகிய சுப்பையரென்பவர் இயற்றிய மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனங்களை நாங்கள் பாடிப் பொருள் சொல்வதுண்டு. அச்சரித்திர சம்பந்தமான செய்யுட்கள் இருப்பின் இடையிடையே சொல்ல அனுகூலமாக இருக்கும். தாங்கள் சில கவிகள் இயற்றித் தந்தால் இசையுடன் பாடி யாவரையும் மகிழச் செய்து பிழைப்போம்.

பிள்ளை:- அப்படியே செய்து தருகிறேன்.

இவ்வாறு சொல்லி அக்கவிஞர் அங்கிருந்தபோதே மயில்ராவணன் சரித்திரத்தை அவர்களைச் சொல்லச் செய்து கேட்டு அதனை நூறு செய்யுட்களாக எளிய நடையிற் பாடி அளித்தனர். அந்த இரண்டு வித்துவான்களும் அளவற்ற திருப்தியையும் சந்தோசத்தையும் அடைந்தார்கள். அதுமுதல் தங்கள் குறை நீங்கிய அவர்கள் மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனங்களைப் பாடும்போது அச்சரித்திரச் செய்யுட்களையும் இடையிடையே கூறிப் பொருள்விரித்து வந்தனர்.

அவ்விருவரையும் நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். பிற்காலத்தில் சாமிநாதையர் உத்தமதானபுரத்திலே சில வருஷங்கள் பள்ளிக்கூடம் வைத்திருந்தார். அவரிடம் நான் இளமையிற் சில காலம் படித்ததுண்டு. அவரே இவ்வரலாற்றை எனக்குச் சொன்னவர்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, September 11, 2022

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 2/3

 

அகரமுதல





(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 – சி. பா. தொடர்ச்சி)

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 2/3

27-6-1898இல் அடிகளாருக்குக் கொடிய நோய் ஒன்று, கண்டது. அதனைத் தீர்க்குமாறு திருவொற்றியூர் முருகனை அடிகள் வேண்டிக் கொண்டார். நோய் நீங்கியபின் முருகனை நினைத்து “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை” என்னும் அருள்நூலைப் பாடினார். சங்கப் பனுவல்களின் கருத்தும், நடையும் பொலிந்து விளங்கும் சிறந்த நூல் இது. தமக்குச் சைவ சித்தாந்த நூல்களை விளக்கிப் பாடம் சொன்ன சோமசுந்தர நாயகர் (22-2-1901) இயற்கை யெய்திய பொழுது. அவர் பிரிவு பொறாது “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்” என்னும் நூலை எழுதினார். அந் நூலில் தாமும் சைவவுலகும் அடைந்த துன்பத்தினைக் ‘கையறுநிலை’ ‘மன்னைக் காஞ்சி’யென்னும் பிரிவுகளாகவும், நாயகரின் வாழ்க்கைத் துணைவியார் பேதுற்ற நிலையினைத் ‘தாபத நிலையாகவும்’ அமைத்துள்ளார்.

சொற்பொழிவாளர்

கவின்மிகு கட்டுரையாற்றல் கைவரப்பெற்ற அடிகள், சுந்தரத் தமிழில் சொற்பெருக்-காற்றும் வல்லமையும் பெற்றிருந்தார். அடிகளாரின் பேச்சு அனைவரையும் காந்தம் போல் ஈர்க்கும் சக்தி உடையது. பெரும் பொருள் செலவுசெய்தும் அடிகளாரின் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூடினர். பேசுவதில் சில நெறிகளைப் பின்பற்றியவர் அடிகள். தாம் பேச எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகவும், ஆழமாகவும். அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லும் வல்லமை அடிகளுக்கு உண்டு. அடிகள் பேசுவதற்குச் சென்ற இடங்களிலெல்லாம், உணவு, இருக்கை முதலியவை பற்றி ஓர் ஒழுங்கைக் கடைபிடித்து வந்தார். இவர் பேச்சில் சைவப் பற்றும், தமிழ்ப்பற்றும் மிகுந்து இருக்கும். சைவத்தையும்,தமிழையும் தம் இரு கண்ணெனப் போற்றி வளர்த்தவர் அடிகள்.

இதழாசிரியர்

சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்த அடிகள் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்க எண்ணினார். 1902இல் ‘அறிவுக் கடல்’ என்னும் திங்கள் இதழ் தொடங்கப் பெற்றது. அறிவுக் கடல் தொடக்க நாளில் கொண்ட பெயர் ‘ஞானசாகரம்’ என்பதாகும். அந் நாளில் அடிகளாருக்குத் தனித் தமிழூக்கம் உண்டாகவில்லை. பின்னர் அனைத்தும் தனித்தமிழாயின; அவர் பெயர் முதற் கொண்டு அனைத்தும் தமிழாயின. அவர் எழுதிய கட்டுரைகளிலும், பேசிய பேச்சுக்களிலும் தனித்தமிழ்ச் சொற்களே இடம் பெறலாயின. அறிவுக்கடலின் உறுப்பினர்களில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரும் ஒருவர் என்ற செய்தி ஈண்டுக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

அடிகளாரை ஆசிரியராகக் கொண்டு ‘அறிவுக் கடல்’ ஆற்றிய தமிழ்ப்பணி அளப்பரியது. அறிவுக் கடல் ஆற்றிய அளப்பரிய தமிழ்ப்பணிக்கு அதன் முதல் இதழின் பொருளடக்கமே சான்று. அப்பொருளடக்கம் வருமாறு –

“சகளோபாசனை – தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா? தமிழ்ச் சொல்லுற்பத்தி – சைவம் – சைவ நிலை – காப்பியம் – தொல்காப்பியப் பரிசீலனம் – உள்ளது போகாது இல்லது வாராது – தொல்காப்பிய முழு முதன்மை-கேநோபநிடத மொழிபெயர்ப்பு—சமயப்பெருமை-இலக்கண ஆராய்ச்சி-நெஞ்சறிவுறுத்தல்-தமிழ் மிகப் பழைய மொழி-இறைய னாரகப் பொருளுரை வரலாறு – ஆநந்தக் குற்றம்—மாணிக்கவாசகர் கால நிருணயம்-மெய்ந்நல விளக்கம்-தமிழ் வேத பாராயணத்தடை மறுப்பு-நாலடியார் நூல் வரலாறு-முனிமொழிப் பிரகாசிகை-பரிமேலழகர் ஆராய்ச்சி முதலியன.”

சைவ சித்தாந்த மகா சமாசம்

சைவ சமய உண்மைகளை நாட்டிலே பரப்பச் ‘சைவ சித்தாந்த மகா சமாசம்’ என்னும் கழகத்தை 7-7-1905இல் தொடங்கினார் அடிகள். அறிஞர் பலர் இம் மகா சமாசத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். அடிகள் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் சிறக்கப் பணிபுரிந்தனர். முதலாண்டு நிறைவு விழா 1906ஆம் ஆண்டு சிதம்பரத்தில் கொழும்பு ஆனரபிள் இராமநாதன் துரை அவர்கள் தலைமையிலும், இரண்டாம் ஆண்டு விழா சிதம்பரத்திலே, மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவர் தலைமையிலும், மூன்றாம் ஆண்டு விழா நாகையில் சே.எம். நல்லசாமிப் பிள்ளை அவர்களின் தலைமையிலும், நான்காம் ஆண்டு விழா திரிசிரபுரத்தில் யாழ்ப்பாணம் ஆனரபிள் கனக சபையவர்கள் தலைமையிலும் அடிகளின் பெருமுயற்சியால் சிறப்புற நடை பெற்றன.

‘அறிவுக் கடல்’ இதழைத் தமிழில் நடத்திய அடிகள் ஆங்கிலத்திலும் ஓர் இதழைத் தொடங்க எண்ணினார். அடிகளின் எண்ணப்படி கீழ் நாட்டு மக்கள் வசியம் எனப்
பொருள்படும் ‘ஓரியண்டல் மிசுடிக் மைனா’ (The Oriental Mystic Myna) என்னும் ஆங்கில இதழை 1898இல் தொடங்கினார். ஆனால் இவ் ஆங்கில வெளியீடு பன்னிரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது.

சாதி, மத, பேதமகற்றி அன்பின் அடிப்படையில் வள்ளலார் வழியில் இறைவனைக் காணுதல் வேண்டும்—கண்டு வாழுதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் 22-4-1911 ஆம் நாள் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தார் அடிகள். இச்சங்கமே பின்னாளில் ‘பொது நிலைக்கழகம்’ எனப் பெயர் பெறுவதாயிற்று.

துறவு

சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து 30-4-1911இல் விலகிய அடிகள் 1-5-1911 முதல் பல்லாவரத்தில் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். சுய சிந்தனையும் நாட்டுக்கு உழைக்கும் நல்லுள்ளமும் சைவ சமயப் பணிக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட தகவுங் கொண்ட அடிகள், அரசியலில் ஈடுபடாமல் தமிழராக இருந்து நாட்டுக்கும் சமயத்திற்கும் தொண்டு புரிய வேண்டும் என்னும் தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டார். 27-8-1911, முதல் துறவு வாழ்வை மேற்கொண்டார் அடிகள். அன்று முதல் “மறைமலையடிகள்” எனவும் “சுவாமி வேதாசலம்” எனவும், ‘சமரச சன்மார்க்க நிலைய குரு’ எனவும் அழைக்கப் பெற்றார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, September 06, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 6

 

அகரமுதல


 



(உ.வே.சா.வின் என் சரித்திரம், 5 இன் தொடர்ச்சி)

என் பாட்டனார் (தொடர்ச்சி)

அப்போது மேலெழும் கோபத்தால் சிறிது நேரம் மௌனம் ஏற்படும். மறுபடியும் ஆரம்பிப்பார்: “அதை அம்மியிலே வச்சு நன்னா ஓட்டி ஓட்டி ஓட்டி ஓட்டி அரைக்கணும்”

அந்த ‘ஓட்டி’ என்னும் சொல்லை அவர் பலமுறைசொல்லுவார். அப்படிச் சொல்லும்போது அவர் கைகளின் அபிநயத்தைப் பார்த்தால் உண்மையாகவே கத்தரிக்காய்த் துவையலை அரைப்பவர்கள் கூட அவ்வளவு சிரத்தை கொள்ள மாட்டார்களென்று தோற்றும்.

தாத்தாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு கொஞ்ச தூரம் போவேன். அதற்குள் மறுபடியும் அவர், “டே, இங்கே வாடா” என்று கூப்பிடுவார். ”நான் சொல்றது தெரியறதா? நன்னா ஓட்டி ஓட்டி அரைக்கச் சொல்லு. உளுத்தம் பருப்பை அதிலே போடவேண்டாம்” என்று மறுபடியும் எச்சரிக்கை செய்வார். நான் கேட்டுக்கொண்டு அப்படியே என் தாயாரிடம் சொல்லி விடுவேன்.

இப்படி என் பாட்டனாருக்குப் பிரியமான கத்தரிக்காய்த் துவையலின் பக்குவத்தைப் பற்றியும் வேறு விசயங்களைப் பற்றியும் அவர் சொல்லும் சமாசாரங்களை என் தாயாரிடம் சொல்லும் வேலை எனக்கு அடிக்கடி நேரும். இந்த சம்பாசணையைக் கேட்டிருக்கும் அயலார்கள் எனக்கு அந்தப் பெயரை வைத்துவிட்டார்கள்.

அந்தக் காலத்தில் பெண்களுடைய நிலைதான் மிகவும் கடினமானதாக இருந்தது. மாமனார், மாமியார் நாத்தனார் முதலியவர்களால் அவர்கள் படுங் துன்பங்கள் பெரும்பாலான வீடுகளில் உண்டு. மற்ற எல்லா விசயங்களிலும் அக்கால வாழ்க்கை சிறந்ததாக இருந்தாலும், இந்த ஒரு விசயத்தில் மாத்திரம் குறைபாடாகவே இருந்தது.

எங்கள் பாட்டனார் அடிக்கடி கூறும் குறைகளைக் கேட்டுக் கொண்டு என் தாயார் மிக்க பொறுமையுடன் இருந்து வந்தார். ஒருநாள் என்னையும் அழைத்துக் கொண்டு ஓர் ஊருக்குச் செல்லுகையில் இடையே மணஞ்சேரியென்னும் கிராமத்தில் தங்க நேர்ந்தது. அப்பொழுது மாலை நேரம். நாங்கள் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் தாவளியைப் போர்த்துக்கொண்டு ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவர் சந்தியாவந்தனம் செய்வதற்காகத் தீர்த்தம் கொண்டு வரும்படித் தம் பேரனை ஏவினார். அவன் பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு வந்து வைத்துவிட்டு உத்தரணியைக் காணவில்லை என்றான். கிழவருக்குக் கோபம் வந்து விட்டது. ”போய் நான்னாத் தேடிப் பாரு. அவள் அங்கே வெந்நீரடுப்புக்குள்ளே சாம்பல்லே செருகியிருப்பா, பாரு” என்று சொல்லும் போதே அந்தத் தொனியிலே அவர் சினம் வெளிப்பட்டது. ‘அவள்’ என்றது அவருடைய மருமகளைத் தானென்பது நிச்சயம்.

அவர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் காதிலும் விழுந்தன; ”ஓகோ! அங்கேதான் இருக்கிறீரென்று நினைத்தேன்; இங்கேயும் இருக்கிறீரா?” என்று என் தாயார் அப்போது கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருவத்தில் எனக்குப் பொருள் விளங்கவில்லை; பிறகு விளங்கியது. அந்த வீட்டிலும் மருமகளைக் குறை கூறும் முதிய மாமனார் இருப்பதில் என் தாயாருக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்றென்றே எண்ணுகிறேன். இது மனித சுபாவந்தானே?

எங்கள் ஊரில் சிலர் முதிய பிராயத்தில் சந்நியாசம் வாங்கிக் கொண்டு சில காலம் இருந்து பிறகு சித்தியடைந்தார்கள். பிறகு அவர்கள் ஓரிடத்தில் சமாதியில் வைக்கப்பட்டார்கள். அவ்வாறுள்ள சமாதிகள் சில. ஆனால் அவை பாதுகாக்கப்படவில்லை. சில முதிய பெண்கள் அந்த இடத்தில் சாணி தட்டி உலர்த்துவார்கள்.

என் பாட்டனார் மிகுந்த அசௌக்கியமாக இருந்த போது, ஒரு வைதிகர் வந்து, “உமக்குத்தான் வயசாகி விட்டதே; ஆபத்சந்நியாசம் வாங்கிக் கொள்ளுமே” என்றார். அதைக் கேட்டபொழுது என் பாட்டனார் சந்நியாச ஆச்சிரமத்தின் பெருமையையோ, அவ்வாச்சிரமத்திற்குரிய ஒழுக்கங்களையோ எண்ணவில்லை. முன்பு சந்நியாசம் வாங்கிக் கொண்டவர்களுடைய சமாதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே, “ஐயையோ! வேண்டவே வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டால், சேட்சியும் குப்பிச்சியும் என் தலையில் சாணி துகைத்துத் தட்டுவார்கள்! அந்தப் பதவி எனக்கு வேண்டா!” என்று கூறினார். அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுரு பிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டிற்கு வந்திருத்தார். அவருக்கும் என்னுடைய தந்தையாருக்கும் பழக்கம் உண்டு. அதனால் அவர் எங்கள் வீட்டில் தங்கி ஆகாரம் செய்தார். செய்த பிறகு என் தந்தையார் அவரோடு பேசிக் கொண்டிருந்தார். பிறகு பாட்டனாரிடம், “இவர் தாசில்தார்; ஏதாவது நம் குடும்பத்துக்குச் சகாயம் செய்ய வேண்டுமென்று நீங்கள் கேட்டுக் கொண்டால் உபகாரம் செய்யக்கூடியவர். கொஞ்ச நாழிகை பேசிக் கொண்டிருங்கள்” என்று கூறி மரியாதையை உத்தேசித்து வெளியிலே இருந்தார்.

பாட்டனார் தாசில்தாரிடம் போய் சேமச்சமாசாரங்களை விசாரித்தார். தாசில்தாரும் என் பாட்டனாரைப் பதிலுக்கு சேமம் விசாரித்தார். அப்போது சாதாரணமாக, “சௌக்கியமாகத்தான் இருக்கிறேன்” என்று அவர் சொல்லவில்லை. “ஒன்றும் சுகமில்லை. உடம்பே சரிப்படுவதில்லை. வாய்க்கு ஒன்றும் வேண்டியிருக்கவுமில்லை. வயிற்றுவலி இருக்கிறது. ஆகாரம் சீரணமாகவில்லை” என்று வரிசையாகத் தம்முடைய சொந்தக் குறைகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். குடும்பத்துச் சமாசாரத்தையே அவர் மறந்து போனார். சிவகுரு பிள்ளை அவர் கூறிய விசயங்களை அரையுங்குறையுமாகக் காதில் போட்டுக்கொண்டு போய்விட்டார்.

“அவரிடம் குடும்பத்துக்கு அநுகூலம் செய்ய வேண்டுமென்று கேட்கவில்லையே” என்று என் தந்தையார் பாட்டனாரைக் கேட்டார். “

மறந்து போய்விட்டேன். மற்றொரு சமயம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர் விடை கூறினார். மற்றொரு சமயம் வரவேயில்லை. என் பாட்டியார் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் பாட்டனாரும் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

அவர் மரணாவசுதையில இருந்தபோது வீட்டிலுள்ளவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவரவர்களுக்கு ஏற்ற வண்ணம் புத்தி சொல்லிக்கொண்டு வந்தார். என் தாயாரை அழைத்து, “நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய். நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன். வருத்தப்படாதே. நீ நல்ல பெண்” என்று சொல்லிவிட்டுத் தம் தலைமாட்டிலுள்ள சிறுமூட்டையை எடுத்தார். அதில் ஒரு முடிச்சை மெல்ல அவிழ்த்தார். “இவற்றை நான் நெடுநாளாக வைத்திருக்கிறேன். எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. இந்தா, என்னுடைய ஞாபகமாக இவைகளை வைத்துக் கொள். உனக்கு வேறு என்ன தரப்போகிறேன்! நீ சேமமாயிருப்பாய்” என்று இரண்டு பழைய ஊசிகளை எடுத்துக்கொடுத்தார். என் தாயார் அவற்றை பக்தியோடு வாங்கிக் கொண்டார். என் பாட்டனார் அடிக்கடி தம்முடைய வசுத்திரத்தை அந்த ஊசிகளைக் கொண்டு தைத்துக் கொள்வார். என் தாயார் அவற்றைப் பல வருடங்கள் வரையில் பாதுகாத்து வந்ததுண்டு.

அவருடைய முதுமைப் பருவத்தின் நிகழ்ச்சிகளைத்தான் நான் ஞாபகத்தில் வைக்க முடிந்ததென்றாலும் அவற்றைக் கொண்டே அவருடைய இயல்பை அறிந்துகொள்ள முடியாது. முதுமைப் பருவத்தில் சில இயல்புகள் எல்லாருக்குமே உண்டாவது வழக்கம்.

அவர் முயற்சியுள்ளவர். சீவனாதாரமாக இருந்த நிலத்தைப் போக்கியம் வைத்துக் கடனைத் தீர்த்தது அவருடைய தைரியத்தையும் மானத்தையும் வெளிப்படுத்தியது. அவர் பிறகு சீவனத்தின் பொருட்டுப் பள்ளிக்கூடம் வைத்து உபாத்தியாயராக இருந்து கௌரவமாக வாழ்ந்து வந்தார். இந்த விசயங்கள் அவருக்குப் பெருமையைத் தருவதற்குரியனவாகும். —

அடிக்குறிப்பு ஓதனவனேசுவரரென்பது திருச்சோற்றுத்துறை யென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருநாமம்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Monday, September 05, 2022

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 – சி. பா.

 அகரமுதல

  



(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3 தொடர்ச்சி)

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3


தமிழ் மலையென விளங்கியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாய் விளங்கி, மொழிக்கு வளம் சேர்த்தவர். தமது எழுத்தாலும் பேச்சாலும் சைவ சமயத்தின் பெருமைகளை நாடெங்கும் பரப்பியவர். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உரம் பாய்ந்த உடலும் உறுதி கொண்ட உள்ளமும் உடையவர். தமிழில் மட்டுமின்றி வடமொழி ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் புலமை நலம் சான்ற பெரியார் இவர். இவர்தம் எழுத்தும், பேச்சும், ஆய்வு நோக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் கிடைத்த அரிய செல்வங்களாகும்.

தோற்றம்

தஞ்சாவூர் மாவட்டம், நாகபட்டினத்திற்கு அருகில் இரண்டு கல் தொலைவில் உள்ள காடம்பாடி என்ற ஊரில் 18-7-1879ஆம் ஆண்டு, சொக்கநாதப்பிள்ளை சின்னம்மை ஆகியவர்களுக்கு மகனாகத் தோன்றினார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் வேதாசலம் என்பதாகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததன் காரணமாக இவர் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். சூரிய நாராயண சாத்திரியார் ‘பரிதிமாற் கலைஞன்’ ஆனது போல, சுவாமி வேதாசலம் ‘மறைமலையடிகள்’ ஆனார்.

இளமைப் பருவம்

அடிகள் இளமையிலேயே கல்வி கற்பதில் பேரார்வம் உடையவராக விளங்கினார். தம்முடைய முதல் பள்ளி வாழ்க்கையை வெசுலியன் மிசன் பள்ளியில் தொடங்கினார். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல அடிகள் பேச்சிலும், படிப்பிலும், ஒழுக்கத்திலும் இளமையிலேயே சிறந்து விளங்கினார். அடிகளுக்குப் பத்து வயது நிறைவதற்குள், அடிகளின் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை இயற்கையெய்தினார். ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனப் புறநானூறு உணர்த்தும் கடமையை இவர் தந்தையார் செய்ய இயலாமற் போயினும், மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றியினைச் சிறப்பாகச் செய்தவர் நம் அடிகளார் ஆவர்.

அடிகளாரது இளமைக் காலத்தில், நாகை-நீலலோசனி, பாசுகர ஞானோதயம், திராவிட மந்திரி போன்ற பல கிழமையிதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ‘முருகவேள்’ என்னும் புனைபெயரில் அடிகள் பல கட்டுரைகளை இவ்விதழ்களில் எழுதி வந்தார். அந்நாளில் நாகப் பட்டினத்தில் அமைந்திருந்த ‘இந்து மதாபிமான சங்க’த்திலும் சைவசமயம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். தம்முடைய பதினைந்தாவது வயதிலே பலரும் பாராட்டும் வகையில் கட்டுரை வரையும் வன்மையும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவான சொல்வன்மையும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தவர் மறைமலையடிகளார்.

வெ. நாராயணசாமிப் பிள்ளை, சோமசுந்தர நாயகர் முதலிய சான்றோர்களிடம் இலக்கிய, சமய நூல்களைக் கற்றுத் துறைபோய புலமை பெற்றார். மதுரை நாயகம் பிள்ளை அடிகளாரின் உயிரினிய நண்பர். பட்டத்திற்காகப் படிக்காமல், புலமை வேட்கைக்காகத் தமிழார்வத்தின் காரணமாகப் படித்து இளமையிலேயே பெரும் புலமை பெற்றார் நம் அடிகளார்.

மண வாழ்க்கை

அடிகளுக்கு பதினெட்டு அகவை ஆகும்போதே திருமணம் நடைபெற்றது. 1893-ஆம் ஆண்டு சவுந்தரவல்லி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். 1894-ஆம் ஆண்டில் சிந்தாமணி என்னும் பெண் மகவு பிறந்தது. இல்லற வாழ்வில் பொறுப்புகள் மிகுந்த காரணத்தால், 1894-ஆம் ஆண்டில் தம் பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அடிகளார்.

பள்ளிப்படிப்பை விட்டாலும், தமிழ் இலக்கியங்களைப் படிப்பதை விடாது மேற்கொண்டு வந்தார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையவர்களைத் தமது ஆசிரியர் நாராயணசாமிப்பிள்ளை அவர்களின் மூலம் கண்டு உரையாடி மகிழ்ந்தார் நம் அடிகளார். 2-12-1895 ஆம் ஆண்டு பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களிடமிருந்து ஒரு நற் சான்றிதழினையும் பெற்றார்.

ஆசிரியப் பணி

அடிகளின் ஆசிரியப்பணி முதன் முதலில் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியொன்றில் தொடங்கியது. ஆனால் இப்பணி இரண்டரைத் திங்கள் வரைதான் நீடித்தது. அடிகளின் உடல் நிலைக்குத் திருவனந்தபுரத்தின் தட்ப வெப்பநிலை ஒத்து வராததால் 1896 ஆம் ஆண்டு நாகைக்கே திரும்பிவிட்டார். நாகையில் இருக்கும்போது ‘துகளறு போதம்’ என்னும் நூலுக்கு உரையெழுதினார். ‘முதற் குறள் வாத நிராகரணம்’ என ஒரு மறுப்பு நூலெழுதினார். அக்காலத்தில் சித்தூரிலிருந்து ‘சித்தாந்த தீபிகை’ என்னும் திங்களிதழ், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரத் தொடங்கியது. சித்தாந்த தீபிகை என்பதற்கு ‘உண்மை விளக்கம்’ என்று பெயர். இவ்விதழின் தமிழ்ப் பகுதிக்கு அடிகளார் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 21-6-1897இல் முதல் இதழ் வெளியாயிற்று. திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆகியவற்றின் சில பகுதிகளுக்கு உரையும், அன்பு, அருள் என்னும் கட்டுரைகளும், ‘மூன்று கனவு’ என்னும் நான்கு (ஆங்கில) செய்யுட்களின் மொழிபெயர்ப்பும் வெளியாயின. ஐந்திதழ்கள் வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 9-3-1898இல் சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டதால் சித்தாந்த தீபிகையின் ஆசிரியர் பொறுப்பினை விட நேர்ந்தது.

தமிழ்ப் பேராசிரியர்

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக அடிகள் பணியாற்றிய காலமே அடிகளின் வாழ்க்கையில் பொன்னான காலமாகும். இக்காலக் கட்டத்தில் பல அரிய ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தன. 1898 ஆம் ஆண்டு சென்னைக்குக் குடியேறிய அடிகளின் வாழ்க்கை 1911 வரை ஏறத்தாழப் பதின்மூன்று ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்தது.

சமுதாயத்திற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைமாறி, பலனை எதிர்பார்த்துப் பணிபுரிகின்ற அளவிற்கு ஆசிரியப்பணி மாறிவிட்ட இக்காலம் போல் அல்லாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு தமிழுக்கும் மாணவர்களுக்கும் தொண்டு புரிந்தவர் நம் அடிகளார் ஆவர்

பத்துப்பாட்டு நூல்களான முல்லைப்பாட்டு பட்டினப் பாலை முதலியனவற்றுக்கு அரிய ஆராய்ச்சியுரைகளை எழுதினார். அடிகளாரின் ஆய்வுரையைக் கண்ட மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்து தம் செலவிலே அச்சிட்டுத்தர வேண்டி அதற்குரிய பொருளையும் திரட்டித் தந்தனர். இவ்வாறு மாணவர்களின் மனங் கொள்ளத்தக்க பேராசிரியராக அடிகள் விளங்கினார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Wednesday, August 31, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 5

 அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம், 4 இன் தொடர்ச்சி)

அத்தியாயம்-3
என் பாட்டனார்

என் பாட்டனாராகிய வேங்கடாசலையரென்பவர் வேங்கட நாராயணையருடைய மூத்த குமாரர். அவருக்கு ஐயாக்குட்டி ஐயரென்ற ஒரு தம்பி இருந்தார். வேங்கடாசலையருடைய மனைவி பெயர் செல்லத்தம்மாளென்பது. அந்த அம்மாளே என்னுடைய பாட்டியார்; அவருடைய தகப்பனாராகிய [1]ஓதனவனேசுவரரென்பவர் தமிழ்வித்துவான்; தாயார் கனம் கிருட்டிணைய ரென்னும் சங்கீத வித்துவானுடைய சகோதரி.

இங்ஙனம் சங்கீதமும் தமிழும் கலந்த குடும்பத்திலே பிறந்த என் பாட்டியார் நன்றாகப் பாடுவார். அவருக்குப் பல கீர்த்தனங்கள் பாடம் உண்டு. என் பாட்டனார் கடுமையாக நடத்தினாலும் பொறுமையுடன் அடங்கி நடப்பார். அவர் சாதம் பிசைந்து கையில் போட நான் சிறு பிராயத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.

என் பாட்டனார் காலத்தில் எங்கள் குடும்பத்தில் கடன் ஏற்பட்டமையால் அவர் தம்முடைய நிலத்தைப் போக்கியம் வைத்துப் பணம் வாங்கிப் பழைய கடனை அடைத்தார். நிலத்தை வைத்துக்கொண்டு பாதுகாத்து அதில் வரும் வருவாயினால் சுகமாக வாழ்ந்து வரும் நிலையிலிருந்த அவருக்கு அந்நிலத்தைப் போக்கியம் வைப்பதால் சீவனத்துக்குக் கசுட்டமுண்டாகுமென்று தெரியும். ஆனாலும் கடனை வைத்துக்கொண்டு உண்ணும் உணவு அவர் உடம்பில் ஒட்டவில்லை. ‘கடனில்லாச் சோறு கால் வயிறு போதும்‘ என்பது பழமொழி. ‘ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாம்; கடன் நிருப்பந்தம் மட்டும் கூடாது’ என்று எண்ணித் துணிந்து போக்கியத்துக்கு வைத்து விட்டார்.

அவருக்குத் தமிழிலும் சமசுகிருதத்திலும், கணக்கிலும் நல்ல பழக்கம் இருந்து வந்தது. ஆகையால், ‘சீவனத்துக்கு என்ன செய்வோம்!’ என்று ஏங்காமல் ஒரு பள்ளிக்கூடம் வைத்துப் பல பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் பலர் படித்தார்கள். அந்தப் பிள்ளைகளின் மூலமாகக் கிடைக்கும் வரும்படியைக் கொண்டு அவர் செட்டாகக் குடித்தனம் செய்து வந்தார். அவருக்கு அம்மணியம்மாளென்ற ஒரு பெண்ணும், வேங்கட சுப்பையர், சிரீ நிவாஸையர் என்ற இரண்டு பிள்ளைகளும் முறையே பிறந்தனர். வேங்கட சுப்பையரே என்னுடைய தந்தையார்.

என் பாட்டனாரை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எனக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தவர் அவரே. எவ்வளவோ தெய்வத் தோத்திரங்களை வாய்ப் பாடமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவை இப்போது மறந்து போய்விட்டன. ஆனால் அவர் கொடுத்த பலமான அடிகளை மாத்திரம் நான் மறக்க வில்லை.

அவர் உபாத்தியாயராக இருந்த நிலை எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. அவரைத் தாத்தாவாக முதிய நிலையில் பார்த்த ஞாபகந்தான் இருக்கிறது. அவர் சீவந்தராக இருக்கும்போதே என் பாட்டியார் காலஞ் சென்றுவிட்டார். அதன் பிறகு எங்கள் பாட்டனாருக்கு வேண்டிய உபசாரங்களை என்னுடைய தாயார் செய்து வந்தார்.

அவருக்கு என் தந்தையாரிடம் மிகுந்த அன்பு இருந்தது. தம்முடைய மரணகாலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்பி அங்ஙனமே இருக்கச் செய்தார். இடையே சில மாதங்கள் என் தந்தையார் சிறிய தந்தையாருடன் வெளியூருக்குச் சென்றிருந்த போது என் பாட்டனார் மிகவும் கலக்க மடைந்திருந்தார். ஒவ்வொரு நாளும் என் தகப்பனாரது வரவை எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவர் ஊரிலிருந்து வந்துவிட்டாரென்றும், தெருக்கோடியில் வருகிறாரென்றும் தெரிந்தபோது மனத்தினுள் இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது; என்னைக் கூப்பிட்டு, “சாமா, உங்கப்பா வந்துட்டாண்டா!” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தார். தாயைப் பிரிந்திருந்த குழந்தை மீட்டும் தாயைக் காணும்பொழுது அழுவதுபோல இருந்தது அது. அன்பு எந்த உருவத்தில் இருந்தால்தான் என்ன? பிரிவினால் பெரிய துக்கத்தை உண்டாக்குவதில் எல்லாம் ஒன்றுதான்.

முதிய பருவத்தில் தம்முடைய மனைவியை இழந்த வருத்தத்தாலும் பிள்ளையை அடிக்கடி பிரிவதனால் உண்டாகும் துயரினாலும் அவருக்கு மனக்கலக்கம் இருந்தே வந்தது. தம்மை ஒருவரும் சரியாகக் கவனிக்கவில்லை என்ற எண்ணமும் இருந்தது. அவருக்கு இன்ன இன்ன வேண்டுமென்பதை என் தாயாருக்கு அறிவிக்கும் தூதனாக நான் இருந்தேன். என் பாட்டனாருக்குத் தூது செல்லும் உத்தியோகத்தினால் எனக்கு, ‘கத்தாரிக்காய்த் தொகையல்’ என்று இளமையில் ஒரு பெயர் கிடைத்தது. அதற்குத் தாத்தாவே காரணம்.

தாத்தா காலையில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில் வெயில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பார். தகப்பனார் ஊரில் இல்லாத காலம் அது. என் தாயார் என்ன சமையல் செய்வதென்று தாத்தாவைக் கேட்டு வரும்படி என்னை அனுப்புவார். அக்காலத்தில் எனக்கு ஆறு பிராயம் இருக்கும்.

நான் போய், “இன்றைக்கு என்ன சமையல் செய்கிறது?” என்று கேட்பேன்.

அவர், “சமையலா. . . . ..” என்று நீட்டுவார். அவருக்கு எல்லாம் வெறுப்பாகத் தோற்றும். “சமையல் தானே? மண்ணாங்கட்டி, தெருப் புழுதி, சாம்பல் கொழுக்கட்டை” என்பார். அவருக்கு இந்த உலகத்திலே உள்ள வெறுப்பின் அடையாளம் அந்த வார்த்தைகளென்று எனக்கு அப்போது தெரியாது.

குடுகுடுவென்று ஓடிப் போய்த் தாயாரிடம் தாத்தா சொன்னதை அப்படியே ஒப்பிப்பேன். “போடா பைத்தியம்! என்ன சமையல் பண்ணுவதென்று போய்க் கேட்டு வா” என்று மீண்டும் அன்னையார் அனுப்புவார். நான் மறுபடியும் போய்த் தாத்தாவைக் கேட்பேன்.

அவர் ஆர அமர யோசித்துவிட்டு, “கத்தாரிக்காய் இருக்கா?” என்று கேட்பார். அதற்கு ஒரு தடவை ஓடிப் போய்க் கேட்டு வந்து பதில் சொல்வேன்.

“பிஞ்சா இருக்கா?” என்று அடுத்த கேள்வி போடுவார். அதற்கும் ஒருமுறை ஓடிப் போய் வருவேன்.

“அந்தக் கத்தாரிக்காயைச் சுட்டுட்டு. . .” சிறிது நிறுத்துவார்.

“தெரியறதா? அதை நன்னாச் சுட்டுத் தாளிச்சுக் கொட்டி. . .”

அவர் சொல்லும் வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஊங்காரம் செய்துகொண்டே இருப்பேன். இல்லாவிட்டால் அவர் பேச்சு மேலே போகாது.

“தாளிச்சுக் கொட்டறப்போ உளுத்தம் பருப்பைப் போட்டுடுவா; அதைப் போடச் சொல்லாதே. எண்ணெயை அதிகமா விடச் சொல்லாதே”

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Wednesday, August 24, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 4

 

அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 3 இன் தொடர்ச்சி)

அத்தியாயம்-2
என் முன்னோர்கள்

‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராசா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போசனம் செய்வித்து மிகுதியான தட்சிணையும் கொடுத்து அனுப்பினார்.

அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விசயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம் பேருக்கு அன்னம் இடுவதாக இராசாவை ஏமாற்றி விசேடமான பொருளை வாங்கி வந்தீரே; இரண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்?” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போசனம் செய்வித்தேனே!” என்றார்.

கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது? இரண்டு பேருக்குப் போட்டுவிட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே!” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போசனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா?” என்று சமத்காரமாகப் பதிலளித்தார். குறை கூறியவருக்கு விசயம் விளங்கியது.

அசுட்ட சகசுரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீட்சிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம்.

இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்ததுண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியபடி அருத்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அட்டசகசுர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள்.

அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும்பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அட்டசகசுரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. சுமார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.

+++++

குறிப்பு : அயல் பிராமணர் எனக் குறிப்பிட்டதற்குத் தமிழ் ஆர்வலராக இருப்பினும் சாதிப்பற்று மேலோங்கியமையால் அன்பிற்குரிய இருவர் கொதித்தனர். இங்கே வட நாட்டில் இருந்து எண்ணாயிரம் பிராமணைர வரவழைத்ததை அறிஞர் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். நம் நாட்டில் ஏழைகளே இல்லையா? பிறகு ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்.

+++++

இந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப்பிரிவுகள் வழங்கப்பெறும். நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை. அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு முதலிய இடங்களில் இருக்கின்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு வடகிழக்கே மூன்று கல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் தலத்துக்கு அருகிலும் உள்ளது; அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது. அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கிருந்த அட்ட சகசுரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று சீவித்து வந்தார்கள்.

அத்தியூரென்பது தென்னார்க்காடு சில்லாவில் உள்ளது. அதில் உள்ளவர்கள் சாத்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வ பக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார்.

அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்?” என்று கேட்டான்.

அவர், “இந்த ஊர்தான்” என்று கூறினார்.

காவற்காரன் அதை நம்பவில்லை; “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்” என்றான்.

அந்தப் பிராமணர், “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” என்றார்.

“இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!” என்றான் அவன்.

இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா?

அத்தியூர்ப் பிரிவினராகிய அட்ட சகசுரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர். இவர்களில் ஒருவர் உத்தமதானபுரமென்று பின்பு வழங்கிய பழையகரத்தில் வந்து குடியேறினர். அவர் திருப்பதி சிரீ வேங்கடேசப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உடையவர்; அப்பெருமாளையே குலதெய்வமாகக் கொண்டவர். அப்பெருமாளைப் பிரார்த்தித்து, தமக்குப் பிறந்த பிள்ளைக்கு வடமலையப்பன் என்னும் பெயரை வைத்தார்; வடமலை யென்பது திருவேங்கடம்; அப்பனென்பது வேங்கடாசலபதியின் திருநாமம். அந்தத்தமிழ்ப் பெயரே வடமலை யாஞ்ஞானென்றும் வழங்கும். ஆஞ்ஞானென்பதும் அப்பனென்பதும் ஒரே பொருளுடையன. வடமலையப்பருக்கும் திருப்பதி வேங்கடாசலபதியினிடம் அளவற்ற பக்தியிருந்தது.

அவர் காலந் தொடங்கி இந்த வமிசத்திற் பிறக்கும் பிள்ளைகளுக்கு வீட்டில் அழைக்கும் பெயர் வேறாக இருந்தாலும், உபநயனம் ஆகும் பொழுது வைக்கப்படும் சரும நாமம் வேங்கடாசலம், வேங்கடநாராயணன், வேங்கடராமன், வேங்கட சுப்பிரமணியன், சீநிவாஸன் முதலாகத் திருப்பதிப் பெருமாளின் பெயர்களுள் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். பிராமணர்களை இருபிறப்பாள ரென்று வழங்குவர்; உபநயன காலத்துக்கு முன் ஒரு பிறப்பென்றும் அதற்குப் பின் ஒரு பிறப்பென்றும் சொல்லுவர். வடமலை யாஞ்ஞானது பரம்பரையினரோ, இரு பிறப்பாளராக இருந்ததோடு பெரும்பாலும் இரு பெயராளராகவும் இருந்து வருகின்றனர்.

இந்தக் குடும்பத்திலுள்ள ஆண், பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் சுநானம் செய்து ஈரவசுத்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிட்சை எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த அரிசியை வீட்டிற்குக், கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமசுகாரஞ் செய்து அதையே சமைத்துச் சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம். இந்த வழக்கத்தை நாளடைவில் இவ்வூரில் மற்றக் குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினர். இன்னும் உத்தமதானபுரத்தில் இது நடைபெற்று வருகின்றது.

வடமலையப்பருடைய குடும்பம் நல்ல பூசுதிதியுடையதாக இருந்தது. அவருக்குப் பின் வந்தவர்களுள் சிரீநிவாசையரென்பவர் ஒருவர். அவருக்கு வேங்கட சுப்பையரென்றும் வேங்கட நாராயணையரென்றும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் இவ்விருவருள் வேங்கட சுப்பையரென்பவர் தம்முடைய மாமனார் ஊராகிய சுரைக்காவூருக்குச் சென்று தம் மனைவிக்கு ஃசுதிரீதனமாகக் கிடைத்த நிலங்களை வைத்துக் கொண்டு அவ்விடத்திலே நிலையாக வாழ்ந்து வரலாயினர். வேங்கட நாராயணையரென்பவர் உத்தமதானபுரத்திலேயே தம்முடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு சௌக்கியமாக வசித்து வந்தார்.

இவ்வூரிலிருந்த எல்லாரும் தேகபலம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உடலுழைப்பும் சுத்தமான வாழ்க்கையும் அவர்களுக்குப் பின்னும் பலத்தைத் தந்தன. மேற்கூறிய வேங்கட நாராயணையர் மாத்திரம் மெலிந்தவராக இருந்தமையின் அவரது மெலிவு விளக்கமாகத் தெரிந்தது. அவரது மெலிவான தேகமே அவருக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அதனால் “சோனன்” என்று அவருக்கு ஒரு பட்டம் கிடைத்தது. சோனி யென்றும் சோனனென்றும் மெலிந்தவனை அழைப்பது இந்நாட்டு வழக்கமென்பது பலருக்கும் தெரிந்த செய்திதானே? அவர் இருந்த வீட்டைச் ‘சோனன் ஆம்’ (சோனன் அகம்) என்று பிற்காலத்தாரும் வழங்கி வருவதுண்டு. அந்த வீடுதான் எங்கள் வீடு. அவரே என்னுடைய கொள்பாட்டனார்; என்னுடைய பாட்டனாருக்குத் தந்தையார்.

வீரர்கள் இறந்தால் கல் நாட்டி வழிபடுவது பழைய வழக்கம். அந்தக்கல்லை வீரக்கல் என்று சொல்வார்கள். இப்படியே பதிவிரதைகள் இறந்த இடத்தையோ அவர்கள் ஞாபகத்தையோ குறிக்கும் கல்லை மாசதிக்கல் என்று கூறுவர். இறந்த பிறகு அவர்களை இந்தக் கல்லெல்லாம் ஞாபகப்படுத்துகின்றன. எங்கள் கொள் பாட்டனார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஞாபகத்திற்கு அடையாளமாக ஒரு கல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கல் இன்றும் உள்ளது. அது மற்ற அடையாளக் கற்களைப்போல உபயோகப்படாமல் இல்லை. எல்லாருக்கும் உபயோகப்பட்டு வருகிறது.

எங்கள் ஊர் குளத்துப் படித்துறையில் “சோனப் பாட்டா கல்” என்ற ஒரு கல் இருக்கிறது. குளத்தில் நீராடிவிட்டு வழு வழுப்பாயிருந்த அந்தக் கல்லிலேயே வேங்கடநாராயணஐயர் வேட்டி துவைப்பாராம். அதனால் அந்தக் கல்லுக்கு அப்பெயர் நிலைத்து விட்டது. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா? இன்றும் அந்தக் குளத்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாசனமில்லாத இந்த வெறும் கல் நம் கொள்பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கைபட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.