Tuesday, December 13, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 19

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 18 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 11
விளையாட்டும் விந்தையும்

விடுமுறை நாட்களில் நான் உடன்படிக்கும், பிள்ளைகளோடு விளையாடுவது வழக்கம். ஆயினும், என் தந்தையார் காணாமல் விளையாடுவேன். கண்டால் அடித்துவிடுவா ரென்ற பயம் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் எப்போதும் படிக்க வேண்டு மென்பது அவரது நினைவு.

என் சிறிய தகப்பனார் எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். அவர் நயமாகக் கற்பிப்பார். என் பாட்டனாரும் கற்பிப்பதுண்டு; அவர் வார்த்தைகளால் கடிந்துகொண்டு போதிப்பார்; சில சமயம் அடிப்பார். என் தந்தையாரோ கற்பிக்கும் போதெல்லாம் அடிப்பார்; வைவார்; அவரிடம் கற்றுக்கொள்வதைவிட அடிபடுவதுதான் அதிகமாக இருக்கும். அப்பொழுது என் தாயார் வந்து, “குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்? அடிக்க வேண்டாம்” என்று கூறுவார். அந்த வேண்டுகோள் என் தந்தையாருக்குப் பின்னும் கோபத்தையே உண்டாக்கும்.

பிள்ளைகளோடு பிள்ளையார் பந்துகிட்டுப்புள்பாண்டிபட்டம் விடுதல் முதலிய விளையாட்டுக்களை விளையாடுவேன்வீட்டிலிருந்தபடியே ஒட்டிபல்லாங்குழிபதினைந்தாம் புள்ளி முதலிய ஆட்டங்களும் ஆடுவேன்.

லகண்டம்

எனக்கு நீச்சல் தெரியாது. வாய்க்காலிலும் குளத்திலும் என் தோழர்கள் நீந்தி விளையாடுவதைப் பார்க்கும்போது எனக்கு அவர்களிடம் பொறாமை உண்டாகும். அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்ப்பதோடு நிற்பேன். ஆயினும் ஒருமுறை பிள்ளைகளோடு சேர்ந்து எங்கள் ஊர்க் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது ஆழத்திற்குச் சென்று மூழ்கி விட்டேன். ஒருவர் வந்து என்னை எடுத்தார். என் தாயார் என் சாதகத்தில் எனக்கு மூன்று சலகண்டங்கள் ஏற்படுமென்று இருப்பதாகச் சொல்வார். அன்று நான் மூழ்கியதே முதற் கண்டம். பிறகு பட்டீச்சுரத்திலும், அவிநாசியிலும் இரண்டுமுறை நான் சலகண்டத்திற்கு உட்பட்டு மீண்டேன்.

சங்கீத அப்பியாசம்

எனக்கு ஆறாம் பிராயம் நடக்கும்போதே சங்கீதத்தில் பிரியம் உண்டாயிற்று. எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான அந்த வித்தையில் இயல்பாகவே எனக்கு விருப்பம் இருப்பதை அறிந்து என் சிறிய தந்தையார் சரளி வரிசை சொல்லித் தந்தார் அவரும் என் தந்தையாரும் பாடுவதைக் கேட்டுக் கேட்டு அவ்வாறே பாட முயன்று பார்ப்பேன்.

சித்திரப் பழக்கம்

சித்திரம் எழுதுவதிலும் எனக்கு இயற்கையாகவே ஒரு முயற்சி இருந்து வந்தது. காகிதங்களைப் பலவிதமான பூக்களைப் போலக் கத்தரித்து அமைக்கும் பழக்கமும் உண்டாயிற்று. பலவகையான மிருகங்களையும் பறவைகளையும் போல எழுதுவேன்; அன்னபட்சி போலவும் யானை போலவும் வரைவேன். சில தெய்வங்களின் படங்களையும் எழுதுவேன். எந்தக் கோயிலுக்குப் போனாலும் அங்கேயுள்ள சித்திரங்களில் என் கருத்துச் செல்லும். ஒவ்வொன்றையும் கவனித்து ஆராய்வேன்.

இராத்திரி காலங்களில் எங்கள் ஊரில் நடைபெறும் புராணக் கதைகளைக் கேட்பதனாலும், என் சிறிய தகப்பனாரது போதனையினாலும் எனக்குச் சில புராண வரலாறுகள் தெரிந்தன. அந்த அறிவினால் கோயிலிலுள்ள சித்திரங்களைக் கண்டு தெளிந்து இன்புறும் உணர்ச்சி ஏற்பட்டது.

ஒரு சமயம் என் தந்தையார் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு சுவாமிமலைக்குப் போனார். அங்கே கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தோம். கோயிலில் பாவு கல்லிலே பல சித்திரங்கள் அழகாக எழுதப் பெற்றிருந்தன. நானும் தந்தையாரும் பிறரும் அவற்றைக் கவனித்து வந்தோம். ஒரு சித்திரத்தில் ஒரு பெரியவர் கை கட்டி வாய் புதைத்து வணக்கக் குறிப்புடன் நின்றிருந்தார். அருகில் ஒரு குழந்தை ஆசனத்தில் உட்கார்ந்திருந்தது. ‘இந்தப் படம் எதைக் குறிக்கின்றது?’ என்று என் தகப்பனார் யோசித்தபடியே அதை உற்றுக் கவனித்தார். நான், ‘சுப்பிரமணிய சுவாமி பரமசிவனுக்கு உபதேம் செய்ததாக இருக்கலாமோ?” என்று சொன்னேன். என் தகப்பனார் முகத்தில் சந்தோசம் பொங்கியது; என்னை எடுத்து அணைத்துக் கொண்டார். முருகக் கடவுள் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த அவசரமே சுவாமி மலையில் உள்ள ஐதியம்.
உத்தமதானபுரத்தில் இரண்டு நந்தவனங்கள் இருந்தன. நானும் வேறு சில பிள்ளைகளும் அங்கே சென்று எங்கள் வீட்டுப் பூசைக்குவேண்டிய பத்திர புட்பங்களை எடுத்துவந்து கொடுப்போம்.

மாதாமகர் உபதேசம்

இடையிடையே என் தாயார் தம்முடைய பிறந்தகமாகிய சூரியமூலைக்கு என்னை அழைத்துச் சென்று வருவார். அப்போது இடைவழியில் என் பெரியதாயார் இருந்த தியாகசமுத்திரத்திலும், சிறியதாயார் இருந்த கோட்டூரிலும் தங்கிச் செல்வோம். சூரியமூலையில் என் மாதாமகருடைய நித்திய கருமானுசுட்டானங்களையும் சிவ பூசையையும் சாந்தமான இயல்பையும் கவனித்தபோது எனக்கு அவரிடத்தில் பக்தி உண்டாயிற்று. அவர் பூசையை முடித்துக்கொண்டு பகல் இரண்டு மணிக்கு உண்பார்; அப்போது அவரோடு நானும் உண்பேன். அவ்வாறு உண்ணும்போது எனக்கு ஒருவித இன்பம் உண்டாகும்; உடம்பில் ஒரு புதிய வேறுபாடு தோற்றும். தெய்வப் பிரசாதத்தை உண்ணுகிறோமென்ற நினைவே அதற்குக் காரணம். அவருடைய தூய்மை என் உள்ளத்தைக் குளிரச் செய்தது.

விடியற்காலத்திலும் பிற்பகலிலும் இரவிலும் அவர் செய்து வந்த சிவநாம சிமரணை என் காதில் விழும்; அது மெல்ல மெல்ல என் உள்ளத்திலும் இடங்கொண்டது. நானும் அதில் ஈடுபட்டு ஓய்ந்த நேரங்களில் சிவ நாமத்தைச் சொல்லி வரலானேன்.

ஒரு நாள் நான் சிவ நாமம் சொல்லிக்கொண்டிருந்தபோது என் மாதாமகராகிய கிருட்டிண சாத்திரிகள் அதனை அறிந்து வியந்தார். அப்போது என்னிடத்தில் அவருக்குக் கருணை பிறந்தது. உடனே மிருத்தியுஞ்சய தோத்திர சுலோகங்கள் பதினாறையும் எனக்கு உபதேசித்தார்; மார்க்கண்டேயர் அந்த மந்திரத்தால் சிரஞ்சீவியாக வாழலானாரென்ற புராண வரலாற்றையும் கூறி, “அப்பா, இந்த மந்திரங்களைத்  தினந்தோறும் சூரியாத்தமனத்திற்குப் பின்பு ஒவ்வொரு சுலோகமாகச் சொல்லி ஈசுவரத் தியானம் செய்து நமசுகாரம் செய்வாயானால் நல்ல சௌக்கியம் ஏற்படும்; ஆயுர் விருத்தியும் உண்டாகும்” என்று கட்டளையிட்டார். அப்படியே நாள்தோறும் செய்யத் தொடங்கினேன் சில வருடங்களுக்கு முன்பு வரையில் நமசுகாரம் செய்ய முடிந்தது. சில காலமாகச் சுலோகத்தை மாத்திரம் சொல்லி வருகிறேன்.

இங்கிலீசு எழுத்துகள்

என் இளமைக் காலத்தில் கிராமங்களுக்கு இங்கிலீசு படிப்பு வரவில்லை, நகரங்களில் சில பள்ளிக்கூடங்களில் இங்கிலீசு கற்றுத் தந்தார்கள். இங்கிலீசு தெரிந்தவர்களுக்கு அளவற்ற மதிப்பு இருந்தது. அரைகுறையாகத் தெரிந்துகொண்டவர்களுக்குக்கூட எளிதில் ஏதேனும் வேலை கிடைக்கும்.

கிராமப் பள்ளிக்கூடங்களில் தமிழ் எண்களே வழக்கத்தில் இருந்தன. நான் இளமையில் அவற்றையே கற்றுக் கொண்டேன்.


உத்தமதானபுரத்தில் நாங்கள் இருந்தபோது எனக்கு உபாத்தியாயராக இருந்த சாமிநாதையர் வீட்டிற்கு அவருடைய பந்து ஒருவர் அடிக்கடி வருவார். அவருக்குச் சிவசுவாமி ஐயரென்று பெயர். அவர் இங்கிலீசு படித்தவர். அவர் வந்த காலத்தில் என் உபாத்தியாயர் அவரிடம் சொல்லி எனக்கு இங்கிலீசு எழுத்துகளை கற்பிக்கும்படி கூறினர். அப்படியே அவர் கற்பிக்க நான் அவற்றைக் கற்றுக்கொண்டேன். இங்கிலீசு எண்களையும் (1, 2 முதலியவற்றையும்) அவரிடமே தெரிந்து கொண்டேன்.

இங்கிலீசு எழுத்துகளைத் தெரிந்துகொண்ட போது எனக்குள் இருந்த பெருமிதம் இவ்வளவென்று சொல்ல முடியாது. அந்த எழுத்துக்கு அவ்வளவு பிரபாவம் இருந்தது. வெறும் எழுத்துகளைத் தெரிந்து கொண்ட மாத்திரத்தில் பெருமை பாராட்டுவதும், கையெழுத்து மாத்திரம் இங்கிலீசில்போடத் தெரிந்து திருப்தியடைவதும் அக்காலத்தில் அதிகமாகக் காணப்பட்டன.

எனக்கு இங்கிலீசு எழுத்துகளைச் சொல்லித் தந்த சிவசுவாமி ஐயர் பிற்காலத்தில் திருவனந்தபுரம் சமசுதானத்தில் தக்க உத்தியோகத்தைப் பெற்று வாழ்ந்தனர்.

பாட்டியார் பாட்டனார் பிரிவு

எனக்கு ஆறாம் பிராயம் நடந்தபோது என் பாட்டியார் மிக்க அசௌக்கியத்தை அடைந்தார். ரௌத்திரி வருடம் வைகாசி மாதம் (1860) அவர் தேக வியோகமானார். அதற்குச் சரியாக ஒரு வருடத்திற்குப்பின், அதாவது துன்மதி வருடம் வைகாசியில் (1861) என் பாட்டனார் உலக வாழ்வை நீத்தார். பாட்டனார் பாட்டியார் இருவரும் முதுமையும் தளர்ச்சியும் உடையவர்களாகவே இருந்தனர். பெரும்பாலும் பாட்டனாரே முந்தி இறந்துவிடுவார் என்று எண்ணினோம். நல்ல வேளையாகப் பாட்டியார் முந்திக்கொண்டார். சுமங்கலியாக இறந்து போவதைப் பெரும்பேறாகக் கருதுவது நம் நாட்டு வழக்கம் அல்லவா? என் பாட்டியாரது மரணம் அவருக்கு ஒரு புகழை உண்டாக்கியது; “கொடுத்து வைத்த மகராசி; தாலியோடும் மஞ்சள் குங்குமத்தோடும் போனாள்” என்று ஊரினர் சொல்லிக் கொண்டனர்.

பாட்டனார் இறந்தபோது அபரக் கிரியைகளெல்லாம் முறையாக என் தந்தையார் செய்தார். தாய் தந்தை இருவருடைய மரணத்தாலும் அவருக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. “அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தாற், சொன்ன விசாரந் தொலையா விசாரம்” என்று பட்டினத்தார் கூறியிருக்கிறார். என் தந்தையார் நிலை அப்படித்தான் இருந்தது. குடும்ப சம்ரட்சணைக்கு வேண்டிய பொருளைத் தேடும் முயற்சிக்கு இடையிடையே விசேசஷச் செலவுகள் வந்துவிடுவதனால் கவலைக்கு உள்ளானார். தம் பெற்றோர்கள் ஊரில் இருக்கவேண்டுமென்று விரும்பியது காரணமாகவே உத்தமதானபுரம் வந்தவராதலின், அவ்விருவருடைய காலமும் ஆனபிறகு, “இனி நாம் பழையபடியே அரியிலூருக்குப் போய்க் காலட்சேபம் செய்தால் தான் ஒருவாறு இன்னல் நீங்கும்” என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

அரியிலூர்ப் பிரயாணம்

உறவினர்களெல்லாம் அவரிடம் பற்றுடையவர்கள். ஊரைவிட்டு அவர் செல்லுவதில் அவர்களுக்கு மனமில்லை. “மாதம் மாதம் செய்ய வேண்டிய கிரியைகளை இங்கே இருந்து நடத்தி ஆப்திக சிராத்தத்தையும் செய்துவிட்டுப் பிறகு போகலாமே” என்று சிலர் சொன்னார்கள்.

“அவை கிரமமாக நிறைவேற வேண்டுமானால் பணம் வேண்டாமா? அங்கே போனால் பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறி எந்தையார் தம் தம்பியாரை மட்டும் உத்தமதானபுரத்தில் வைத்து விட்டு என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அரியிலூரை நோக்கிப் புறப்பட்டனர்.

குடமுருட்டி நதியைக் கடந்து வடக்கே செல்லுகையில் எதிரே எங்கள் பந்துவாகிய முதியவர் ஒருவர் வந்தார். என் தந்தையார் ஊரைவிட்டுச் செல்வதைக் காண அவர் மனம் சகிக்கவில்லை. “நீ உங்கள் வீட்டைத் தம்பி கையில் ஒப்பித்துவிட்டுப் போவது சிரீ இராமன் இராச்சியத்தைவிட்டு அயோத்தியிலிருந்து சீதையோடும் இலட்சுமணனோடும் போனதைப் போல இருக்கிறது” என்று அவர் சொல்லி வருத்தமடைந்தார். என் தந்தையாருடைய இராமாயணப் பிரசங்கத்தில் அவர் ஈடுபட்டவர். அவருக்கு இராமாயணச் செய்தியே உபமானமாகத் தோன்றியது.


பெரிய திருக்குன்றத்தில் என் அத்தை இருந்தமையால் அங்கே நாங்கள் சில நாட்கள் தங்கினோம். அப்பால் துன்மதி வருடம் ஐப்பசி மாதம் (1861) அரியிலூர் போய்ச் சேர்ந்தோம்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Sunday, December 11, 2022

இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 3/6

 அகரமுதல




(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-2/6 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 3/6


இந்தி எதிர்ப்புப் போர்


1937 ஆம் ஆண்டின் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத் தேர்தல்களுக்கு நின்று, ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற இராச கோபாலாச்சாரியார் தனது பதவிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று படிவம் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாகக் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து மாநில மெங்கும் கிளர்ச்சி யெழுந்தது. காங்கிரசுக் கட்சியில் தமிழ் மொழிப் பற்றுத் தலைதூக்கி நின்ற சிலரும் இத்திட்டத்தை முழு மூச்சாக எதிர்த்தனர். அவ்வாறு எதிர்த்தவர்களுள் தலைமையேற்று நின்றவரும், தகவுடன் போரிட்டுப் பின்னாளில் வென்றவரும் நம் நாவலர் ஆவர். 5, 6-9-1937 இல் சென்னை மாநகரில் ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நிகழ்ந்தது. முதல்நாள் மாநாட்டுக் கூட்டத்திற்கு நாவலர் தலைமை தாங்கிச் சாதி, சமய, கட்சி வேறுபாடு இன்றித் தமிழர் அனைவரும் கட்டாய இந்தியை எதிர்ப்பது கடமையாகும் என்றார். அடுத்து 4-10-1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகச் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் வீறுடன் பேசினார். 20-11-1937இல் கருவூரில் அறிவுதயக் கழகச் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்திலும் பேசினார். 25-10-1937இல் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்கு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஒரு ‘வெளிப்படைக் கடிதம்’ (An open letter) எழுதினார். நாவலர் விடுத்த இக்கடிதத்தினாலும் நாடெங்கிலும் எழுந்த காட்டுத் தீ போன்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியினாலும் அரசு கட்டாய இந்தித் திணிப்புத் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் மீண்டும் 1948 ஆம் ஆண்டில், சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த அவினாசி விங்கம் செட்டியார் இந்தியைப் புகுத்த முற்பட்டார். அவருக்கும் 27-6-1948இல் ஒரு கடிதம் எழுதினார். மேலும் திருச்சி தமிழறிஞர் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கண்ட தமிழர் கழகத்தின் தலைவரானார். 14-2-1948இல் சென்னையில் கூடிய அகிலத் தமிழர் மாநாட்டின் தலைமையை நாவலர் ஏற்றார். பின்னாளில் தொடங்கப்பெற்ற தமிழகப் புலவர் குழுவின் முதல் தலைவராகவும் திகழ்ந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக அரும்பணி

 அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கண்ட செட்டிநாட்டு வள்ளல் அண்ணாமலை அரசர் அழைப்பின் பேரில் திங்கள் ஒன்றுக்கு ஈராயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்துக் குறைந்த வருவாயே கிட்டும் எனத் தெரிந்தும் 1933ஆம் ஆண்டில் இரண்டு நிபந்தனைகளின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அவர் விதித்த இரு நிபந்தனைகள் வருமாறு:

(1) தமது நிருவாகத்தில் எவரும் குறுக்கீடு செய்தல் கூடாது.

(2) பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பிற பேராசிரியர்களைவிட உயர்ந்த ஊதியம் தருதல் வேண்டும்.

தமிழ்ப் பணி

மாணவர்க்கு இலக்கணமாயினும், இலக்கியமாயினும், இலக்கியத் திறனாய்வாயினும் பாங்குற ஐயந்திரி பிற்கிட மின்றி மாணவர் மனத்திற் பசுமரத்தாணியெனப் பதியும் வண்ணம் பாடஞ்சொல்லுதலில் நாவலர் வல்லவராயிருந்தார். மாணவர்களைத் தம் நண்பர்கள் போற் கருதி, நடத்தினார். இயற்றமிழ்ப் பேராசிரியராக இருந்து கொண்டே இசைத் தமிழ்த் தொண்டும் ஆற்றினார். தேவார திருப்புகழ் வகுப்புகளை அங்கு இசைக்கல்லூரியில் தொடங்கு வித்தார். இவ்வாறு மாட்சியுடன் தமிழ்ப்பணி புரிந்த நாவலர் 1938ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரிடம் கல்வி பயின்றோரிற் குறிப்பிடத் தக்கவர்கள் முனைவர் அ. சிதம்பரநாதன் (செட்டியார்), திருவாளர்கள் அ. ச. ஞானசம்பந்தன், க. வெள்ளைவாரணனார், பூ.ஆலாலசுந்தரஞ் (செட்டியார்), சி. ஆறுமுக (முதலியார்), இராசரத்தினம் அம்மையார், இராசமணி அம்மையார்,அ. மு. பரமசிவானந்தம், ப. சோதிமுத்து, ஆ, முத்துசிவன், எசு, உருத்திரபதி, பி. ஆர் மீனாட்சிசுந்தரம் முதலியோர் ஆவர்.

சுப்பிரமணிய பாரதியார் தொடர்பு

கவிஞர் பாரதியாரும் நாவலர் பாரதியாரும் பல வகைகளில் ஒற்றுமைப்பாடு உடையவர்கள், இருவரும் எட்டையபுரத்தினர்; இருவரும் கவிஞர்கள்; பாரதி பட்டம் பெற்றவர்கள்; ஒத்த வயதினர்; இளமையில் மணம் முடித்தவர்கள்: நாட்டுத் தொண்டில் திளைத்தவர்கள்; உணர்ச்சி மிக எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர்கள்; அஞ்சாமையும் வீறும் உடையவர்கள்; தமிழாசிரியர் பணி புரிந்தவர்கள்.

பாரதியார் கவிதையைப் பண்டிதர்கள் எள்ளி நகையாடிய காலத்தில் பாரதியார் கவிதையின் நயத்தை மேடை, கட்டுரை, செய்தித்தாள்கள் வாயிலாகப் பாமரரும் புரிந்து கொண்டு பாராட்டவைத்த தனிப்பெருமை நம் நாவலரையே சேரும்.

“பாரதியார் பாக்கள், கருத்துகளை வருத்தமின்றி விளக்கும், பண்டைப் பாவலர் பளிங்கு நடை பயின்று, இளகி ஒளிரும் வெண்பொன் ஒழுக்கும், இனிய ஓசையும், திட்டமும் சுவையும் உடையன, இப்புலவரின் நூல்களைப் படிப்பவருக்கு நிகண்டு, அகராதிகள் வேண்டா. கள்ளமற்ற உள்ளமும், ஊன்றிய கவனமும், தமிழில் ஆர்வமும் உடையார்க்கு இப்புலவர் இதயம் வெள்ளிடை மலையாம். எளிய இனிய இவர் கவிநடை நீரொழுக்கு உடையதேனும், வயிரத்தின் திண்மையும் ஒளியும் பெற்று நிற்கும். பாப்பாப் பாட்டு. முரசு கவிகளால் முழன்று, பள்ளும் கிளிப்பாட்டும் பயின்று விடுதலை, தாய்நாடு பாடி, பாஞ்சாலி சபதம் கூறி, கண்ணன் பாட்டு சிவன் முக்திகளில் வீறிய இவர் கவிதை நலம் பண்ணேறி விண்ணுயர்ந்து உலவுவதாகும். எனைத்தானும் தற்காலத் தமிழுலகில் இவர் ஒத்தாரைக் காண்பதரிது. மிக்கார் இலராவர்,”
என்பதே நாவலர் மதிப்பீடாகும்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, December 06, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 18

 அகரமுதல





(உ.வே.சா.வின் என் சரித்திரம் 17 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 10: இளமைக் கல்வி தொடர்ச்சி


பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் தானத்தில் இருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா. உபாத்தியாயர் எழுதித் தரும் ஏட்டுச் சுவடியிலிருந்து முதலில் நெடுங்கணக்கை (அரிச்சுவடியை)க் கற்றுக் கொள்வான் மாணாக்கன். அப்பால் எண்சுவடி முதலிய சுவடிகள் பெற்றுப் படிப்பான். ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் தெரிந்துகொள்வதற்குப் பல நாளாகும். சுவடியைப் பிரித்து ஒழுங்காகக் கட்டுவதற்குக்கூடப் பழக்கம் வேண்டும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக உபாத்தியாயர் ஓர் ஓலையில் எழுதித் தருவார்பிள்ளைகள் அதே மாதிரி எழுதிப் பழகுவார்கள்அந்த மூல ஓலைக்குச் சட்டம் என்று பெயர்.



ஏட்டுச் சுவடிகளில் மஞ்சள்ஊமத்தையிலைச்சாறுவசம்புக்கரி முதலியவற்றைத் தடவிப் படிப்பது வழக்கம், எழுத்துகள் தெளிவாகத் தெரிவதற்கும் பூச்சிகள் வராமல் இருப்பதற்கும் அவ்வாறு செய்வார்கள். ஏட்டுச் சுவடிகளுக்குக் குறிப்பிட்ட அளவு ஒன்றும் இல்லை. வெவ்வேறு அளவில் அவை இருக்கும். சுவடிகளில் ஒற்றைத் துவாரம் இருக்கும். ஒரு நூற்கயிற்றைக் கிளிமூக்கு என்ற ஒன்றில் முடிந்து சுவடியின் துவாரத்தின் வழியே செலுத்தி அதைக் கட்டுவார்கள். பனையோலையை நரம்போடு சேர்த்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கிளிமூக்குகளாக உபயோகப்படுத்துவார்கள். கிளிமூக்கிற்குப் பதிலாகப் பொத்தானையோ, துவாரம் பண்ணின செம்புக் காசையோ, சோழியையோ முடிவதும் உண்டு.

ஏடுகளின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சில சேர்த்திருப்பார்கள்.

எழுத்தாணிகளில் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என வெவ்வேறு வகை உண்டு. வாரெழுத்தாணிக்குப் பனையோலையினாலே உறைசெய்து அதற்குள் செருகி வைப்பார்கள். மடக்கெழுத்தாணிக்குப் பிடி இருக்கும்; மடக்கிக் கொள்ளலாம், அந்தப்பிடி மரத்தினாலோ தந்தத்தினாலோ மாட்டுக் கொம்பினாலோ அமைக்கப்படும்.

ஒரு பையன் புதியதாக ஒரு நூலைப் படிக்கத் தொடங்குவதைச் சுவடி துவக்கல் என்பார்கள். பனையோலையில் அந்த நூலை எழுதி மஞ்சள் தடவி விநாயக பூசை முதலியவற்றைச் செய்து பையனிடம் கொடுத்து உபாத்தியாயர் படிப்பிப்பார். அவன் வீட்டிலிருந்து வந்த காப்பரிசி நிவேதனம் செய்யப்படும். அது தேங்காய்த் துண்டு, எள்ளு, வெல்லம் இவை சேர்க்கப் பெற்று மிகச்சுவையாக இருக்கும். அதைப் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் விநியோகம் செய்வார்கள். அன்றைத் தினம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை நாளாகும்.

சுவடி துவக்கலென்றால் பிள்ளைகளுக்கு அளவற்ற ந்தோசம் உண்டாகும். புதிய நூலைக் கற்பதனால் உண்டாவதன்று அது; “காப்பரிசி கிடைக்கும்; பள்ளிக்கூடம் இராது” என்ற ஞாபகமே அதற்குக் காரணம்.

பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அட்டமியாகிய தினங்களில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அந்த விடுமுறை நாட்களை ‘வாவு’ என்று சொல்வார்கள். உவா என்பதே அவ்வாறு மருவியது. உவா என்பது பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் பெயர்.

ஒவ்வொரு பிள்ளையும் தினந்தோறும் உபாத்தியாயருக்கு ஏதேனும் ஒரு பொருள் கொண்டுவந்து கொடுப்பான்; ஒரு விறகோ, வறட்டியோ, காயோ, பழமோ தருவது வழக்கம். விசேச தினங்களில் அந்த விசேசத்திற்கு உபயோகப்படும் பொருள்களைத் தருவார்கள். விடுமுறை நாட்களில் பணமும் கொடுப்பதுண்டு. அதை ‘வாவுக் காசு’ என்று சொல்லுவர்.

உபாத்தியாயருக்கு மாதம் கால் உரூபாய் சம்பளம் ஒவ்வொரு பையனும் கொடுப்பான். பணக்காரர்கள் வருசாசனமாக நெல் கொடுப்பார்கள். விசேச காலங்களில் மரியாதையும் செய்வார்கள். நவராத்திரி காலங்களில் உபாத்தியாயருக்கு ஒரு வகையான வரும்படி உண்டு. அந்த உத்சவத்தை ‘மானம்பூ’ என்று சொல்வார்கள்; மகா நோன்பு என்னும் சொல்லே அந்த உருவத்தை அடைந்தது. அக்காலத்தில் பிள்ளைகள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்து பாட்டுப் பாடுவார்கள்; கோலாட்டம் போடுவார்கள். அதற்கெனவே தனியே பாட்டுக்கள் உண்டு. ஒவ்வொருவர் வீட்டுக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடச் செய்வது உபாத்தியாயர் வழக்கம். வெளியூருக்கும் அழைத்துச் செல்வது உண்டு. அவரவர்கள் தங்கள் தங்கள் நிலைமைக்குத் தக்கபடி பணம் தருவார்கள். இந்தப் பணம் முழுவதையும் உபாத்தியாயர் எடுத்துக் கொள்வார். மானம்பூ வருவாயினால்தான் உபாத்தியாயர்கள் தங்கள் வீட்டுக் கல்யாணம் முதலிய காரியங்களைச் சிறப்பாக நடத்துவார்கள்.

உபாத்தியாயருக்கு அக்காலத்தே கணக்காயரென்ற ஒரு பெயருண்டு. கிராமத்து ஜனங்கள் உபாத்தியாயரிடம் மரியாதையோடு பழகுவார்கள். பிள்ளைகளை அவர் என்ன செய்தாலும் அது குறித்து வருத்தமடைய மாட்டார்கள். அவரைக் கேட்கவும் மாட்டார்கள். வீட்டில் விஷமம் செய்யும் பிள்ளைகளை உபாத்தியாயரிடம் சொல்லி அடக்குவார்கள். இளமைப் பருவம் முழுவதும் பிள்ளைகள் உபாத்தியாயருடைய ஆட்சியின் கீழ் இருக்கவேண்டும்.

அவரையே தெய்வமாக மதிப்பதும் இன்றியமையாத வேளைகளில் அவர் வீட்டு வேலைகளைச் செய்வதும் மாணாக்கர்களுக்கு இயல்பு.

பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும்போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு. நான் ஒரு முறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச்செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர். அவ்விதம் நான் ஒரு முறை சவாரி செய்திருக்கிறேன்.

இவ்வாறு மாணாக்கர்கள் மனத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கல்வி புகட்டும் இந்த வழக்கம் இக்காலத்தில் யாவராலும் கண்டிக்கப்படுகிறது. அக்காலத்தில் பெரும்பாலான திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இந்த முறையில்தான் நிதழ்ந்து வந்தன. அடிக்குப் பயந்தாவது பையன் படித்து வந்தான். அவனுக்குப் பல விசயங்கள் மனனம் ஆகும்.

காகிதம், புத்தகம் என்பவை வழக்கத்தில் வராத அக்காலத்தில் மாணாக்கனுக்கு ஞாபகசக்தியை அபிவிருத்தி செய்வதற்கு உபாத்தியாயர்கள் சிரமப்படுவார்கள். ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கு அடிப்படையான விசயங்களை இளமையில் பள்ளிக்கூட வாழ்வில் மனப்பாடமாகத் தெரிந்து கொள்வான். எண்சுவடியிலுள்ள கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம் குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்ப்பாடுகள் பெரிய வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்துவதற்கும், சனங்கள் பெரிய உத்தியோகங்களை வகிப்பதற்கும் உரிய வழியைப் புலப்படுத்தின. எல்லாம் பெரும்பாலும் மனக் கணக்காகவே இருக்கும். அக்காலத்தில் பள்ளிக்கூடத்தில் பிரபவாச் சுவடி (பிரபவாதிச் சுவடி) என்ற ஒரு புத்தகம் பாடமாக இருந்தது. அதில் வருசங்கள், மாதங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், இராகு காலம், குளிகை காலம், யமகண்டம் முதலிய சோதிட விசயங்களும், லோகங்கள், சக்கரவர்த்திகள், மன்வந்தரம், தீவுகள் முதலிய பல விசயங்களும் இருக்கும். அவற்றை நன்றாக மனப்பாடம் பண்ணிக்கொண்ட மாணாக்கன் பிறகு பல சந்தேகங்களை ஆசிரியரின்றியே தெரிந்து கொள்ளும் சக்தியைப் பெறுவான். 

பண்டிகை நாட்களில் பிள்ளைகள் யாவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயிலுக்குச் செல்வார்கள். ஆடி மாதம் பதினெட்டாந் தேதியில் பழஞ்சுவடிகளை எல்லாம் சேர்த்து அழகான ஒரு சப்பரத்தில் வைத்து மேளதாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள். பிள்ளையார் சதுர்த்தியன்று ஏழு பிள்ளையாரைத் தரிசிக்க வேண்டுமென்பது ஒரு சம்பிரதாயம். சிரீ சயந்தியிலும் சிவராத்திரியிலும் பிள்ளைகள் சேர்ந்து பாடிச் சென்று வீடுதோறும் எண்ணெய் தண்டி இரவில் கண்விழித்துப் பாடிக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் வேடிக்கையாகப் பொழுது போக்குவார்கள்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, December 04, 2022

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 2/6

 அகரமுதல





(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-1/6 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 2/6

காங்கிரசு மாநாடுகள்

எவ்வகை விசாரணையுமின்றி எவரையும் தண்டித்தற்கு இடந்தரும் (இ)ரெளலட்டு சட்டத்தை ஆங்கில அரசு திணிக்க முயன்றது. இதனை எதிர்த்து அண்ணல் காந்தியடிகளார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் சுற்றுப் பயணம் செப்து, இச்சட்டத்தின் கடுமையை பொல்லாங்கைப் பொதுமக்களுக்கு விளக்கத் துணிந்தார். இதன் பொருட்டுச் சென்னை வந்தார். காந்தியடிகள் சென்னை வருவதையறிந்த நாவலர் பாரதியார் அவரைத் தூத்துக்குடிக்கு வரச் செய்தார். முதன் முதல் அண்ணல் காந்தியைத் தென் கோடித் தமிழகத்திற்கு வரவழைத்து சொற்பொழிவாற்ற வைத்த பெருமை நம் நாவலரையே சாரும். இரு நாள்கள் தூத்துக்குடியில் தங்கிய காந்தியார் நாவலர் வீட்டிற்கும் வந்து போனார். (இ)ரெளலட் சட்டத்தை எதிர்ப்பவர்களில் ஒருவராக நாவலர் அஞ்சாநெஞ்சத்துடன் கையெழுத்திட்டார்.

அடுத்து. நாவலர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், காந்தியடிகள் தம் காங்கிரசு கட்சி வளர்ச்சிக்குப் பொருள் சேர்க்கத் தென்னகச் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டிருந்தார். காந்தியடிகளை அண்ணாமலை நகருக்கு வருமாறு நாவலர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பலரும் காணிக்கை வழங்கிய கூட்டத்தில், மற்றவர்களுக்குத்தான் முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்று எண்ணித் தம் மகள்களான மீனாட்சி, இலலிதா ஆகிய இருவரும் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் இலலிதா பாரதி எனும் இளைய மகள் மேடைக்குச் சென்று காந்தியடிகளிடம் தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அடுத்து மேடைக்குச் சென்ற மூத்த மகள் மீனாட்சி பாரதி தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு மேடை யினின்று கீழே இறங்கிய பின்னர்த் தன் கையிலிருக்கும் வளையல்களையும் கழற்றித் தர வேண்டும் என்ற எண்ணம் மீதூரவும், மீண்டும் மேடையேறிச் சென்று தம் கையிலிருந்த வளையல்களைக் கழற்றிக் காந்தியாரிடம் தந்தார், “யாருடைய மகள் இச் சிறுமி?” என்று தம் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து வினவிக் கொண்டே, தம்மிடமிருந்த கதர் மாலை ஒன்றையெடுத்து மீனாட்சி பாரதி கழுத்தில் போட்டார் காந்தியார். அருகிருந்தோர் அடுத்திருந்த நாவலரைச் சுட்டிக்காட்ட, “பாரதியாரின் குழந்தையா! அப்படியானால் அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை” என்று காந்தியார் கூறினாராம். கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்ற நாவலர், தாம் கழுத்திலிருக்கும் சங்கிலியைக் கழற்றித் தரவேண்டும் என்று மட்டும் கூறியிருந்த அளவில், கை வளையல்களையுங் கழற்றித் தந்த தம் மகள் மீனாட்சியைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.

காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகிச் சிலர் சுயராச்சியக் கட்சி என்றதொரு புதிய கட்சியை உருவாக்கினர். பண்டித மோதிலால் நேருவும் சி.ஆர். தாசும் இந்தியர் ஒத்துழையாமை இயக்கத்தை விட்டு விட்டுச் சட்டமன்றங்களுக்குச் சென்று அங்கே போராடி உரிமைகளைப் பெறவேண்டும் என்றனர். 1926ஆம் ஆண்டில் சி. ஆர். தாசை மதுரைக்கு அழைத்துப் பொதுக்கூட்டத்தில் பேசச் செய்ததோடு, அவர்தம் பேச்சையும் நாவலர் தமிழில் மொழிபெயர்த்தார். சைமன் கமிசனை எதிர்த்து 1930ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் நாடெங்கும் நடைபெற்ற ‘உரிமை நோக்க நாள்’ பின்னாளில் சட்ட எதிர்ப்பு இயக்கத்திற்கும், உப்புச் சத்தியாகிரகத்திற்கும் வழி வகுத்தது. இதன் விளைவாகத் தலைவர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நாடெங்கும் நடந்த இக் கிளர்ச்சிக்குப் பணம் தேவைப்பட்டது. தென்னாட்டில் ஒரு திரளான நன்கொடை திரட்டித் தந்தவர்களில் நாவலர் குறிப்பிடத்தக்கவராவர். இம்மட்டோடன்றித் தாமும் தம் வருவாயிலிருந்து திங்கள்தோறும் நூறு உரூபாய் நன்கொடை அனுப்பி உதவினார். மேலும் நாவலர் குடும்பமே நாட்டுப் பணியில் தலைநின்றது எனலாம். காரணம் நாவலர் தம் இரண்டாவது மகன் இலட்சுமிரதன் பாரதி, மகள் இலக்குமி பாரதி, மருகர் கிருட்டிணசாமி பாரதி ஆகிய மூவரையும் காங்கிரசு தொண்டர்களாக்கி. அவர்கள் முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் பக்கபலமாக இருந்தார்.

தீண்டாமை ஒழிப்பு


“தாழ்த்தப்பட்டோருக்குத் திருக்கோயிலில் நுழையும் உரிமை இல்லை” எனும் இழிநிலையை எதிர்த்துக் காந்தியடிகள் 1933 மேத் திங்கள் 3ஆம் நாள் உண்ணா நோன்பு தொடங்கினார். இருபத்தொரு நாள்கள் நீடித்த இவ்வுண்ணா நோன்பின் விளைவாக அண்ணல் காந்தியடிகளால் அரிசனங்கள் என்று அன்புடன் அழைக்கப்பெற்ற மக்கள் கோயில் உள் நுழையும் உரிமை கோரினர். இயல்பிலேயே தாழ்த்தப்பட்டோரிடம் தாயன்பும் தனியன்பும் காட்டி வந்த நாவலர் அவர்கள் மாடமதுரையில் கோயில் நுழைவு இயக்கத்தைத் தொடங்கி, மதுரை மாவட்டத்தின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் முதல் தலைவராக விளங்கினார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்

Tuesday, November 29, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 17

 அகரமுதல





(உ.வே.சா.வின்என்சரித்திரம் 16 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம் 17

அத்தியாயம் 10

இளமைக் கல்வி

முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விசயத்தில் அவர் யாரிடமும் பட்சபாதம்  

காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று ஒருவன் இருந்தான். அவன் தகப்பனார் பணக்காரர். அதனால் அவனுக்குச் சிறிது கருவமும் தைரியமும் இருந்தன. உபாத்தியாயர் அடிக்கும்போது அவன் திருப்பி அடிக்க முயல்வான். முரட்டுத்தனத்தினால் குழந்தைகளை அடக்கியாள்வது கடினமென்பதை அந்த உபாத்தியாயர் தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு அவருடைய கைப்பிரம்பே செங்கோலாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளும் தம்முடைய தண்டனையை ஏற்றுக் கொள்ளும்போது பிச்சு மாத்திரம் எதிர்த்தால் அவர் சும்மா இருப்பாரா? மேலும் மேலும் கடுமையான தண்டனைகளை விதித்தார். அவன் சிறிதும் அடங்கவில்லை. பிறகு அவனைப் பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கிவிட்டார். “அவன் பெற்ற விடுதலை நமக்கும் கிடைக்காதா?” என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு.

பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு பிறகு படிப்பைப் பற்றி நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத்தவிர வேறு ஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப் பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்ன? இராவிட்டால் என்ன?

நாராயணையர் அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளைத்தான் கற்பிப்பார். அவரிடம் நான் கற்ற பின்பு சாமிநாதையரது பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். அங்கேதான் ஏட்டில் எழுதக் கற்றுக்கொண்டேன். அக்காலத்தில் காகிதம் பள்ளிக்கூடம் வரைக்கும் வரவில்லை. சிலேட்டும் இல்லை. முதலில் மாணாக்கன் மணலில் எழுதிப் பழக வேண்டும். பிறகு அவனே எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சாமிநாதையர் சங்கீதமும் சமசுகிருதமும் தெரிந்தவர். முன்பே அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு அவர் சம்சேப ராமாயணம், விட்ணு சகசுரநாமம், நீதி சாரம், அமரம் மூன்று காண்டங்கள் என்பவற்றைப் போதித்தார். அவ்வளவும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. தமிழும் கணக்கும் கற்பித்தார். அவர் நாராயணையரைப்போல் கடுமையானவர் அல்லர். ஆனாலும் அந்தக் காலத்துக் கிராம உபாத்தியாயர்களுக்குப் பிரம்பு ஆடாவிட்டால் மாணாக்கர்கள் படிக்க மாட்டார்களென்ற எண்ணம் பரம்பரையாக இருந்து வந்தது; அவருக்கும் அந்தக் கொள்கை உண்டு.


கிராமத்துப் பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்றும் சொல்லுவார்கள். அந்தப் பள்ளிக்கூடங்களில் மாணாக்கர்கள் பயிலும் முறையே வேறு. இப்போது அதனை எங்கும் பார்க்க முடியாது.

பிள்ளைகள் யாவரும் விடியற்காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சுவடித்தூக்கோடு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடவேண்டும். சுவடிகளை யெல்லாம் வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித்தூக்கென்று பெயர். அந்தத் தூக்கு ஒருவகை உறியைப் போல இருக்கும். தூக்கைப் பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டிவிட்டுப் பிள்ளைகள் முறைப்படி இருந்து முதல் நாள் நடந்த பாடங்களைப் பாராமல் ஒப்பிக்க வேண்டும். அதற்கு முறை சொல்லுதல் என்று பெயர். அப்போது உபாத்தியாயர் வீட்டிற்குள் படுத்துக் கொண்டிருப்பார்; அல்லது வேறு ஏதேனும் செய்து வருவார். அவரை எதிர்பாராமல் பிள்ளைகள் பாடங்களை முறை சொல்ல வேண்டும். அதை அவர் உள்ளே இருந்தபடியே கவனிப்பார். பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் உபாத்தியாயரது வீட்டுத் திண்ணையிலேயே இருக்கும்.


ஆறு மணிக்குமேல் பிள்ளைகளெல்லாம் வாய்க்கால் அல்லது குளம் முதலிய இடங்களுக்குப் போய்த் தந்த சுத்தி செய்து தங்கள் தங்கள் குலத்திற்கேற்ற சின்னங்களைத் தரித்துக்கொண்டு சந்தியா வந்தனமோ வேறு அனுசுட் டானமோ செய்வார்கள். பிறகு தங்கள் வசுதிரங்களில் மணலை எடுத்துக்கொண்டு மூசிகவாகனம், சரசுவதி தோத்திரம் முதலியவற்றைச் சொல்லிக்கொண்டே பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள். முன்பிருந்த பழைய மணலை அகற்றிவிட்டுப் புதிய மணலைப் பரப்புவார்கள். எழுதுவதற்குரியவர்கள் அதில் எழுதுவார்கள்; மற்றவர்கள் தங்கள் பாடங்களைப் படிப்பார்கள்.


ஒன்பது மணிக்குப் பிள்ளைகளைப் பழையது (பழைய அமுது) சாப்பிடவிடுவது வழக்கம். அப்பொழுது உபாத்தியாயர் ஒரு பக்கத்தில் வீற்றிருந்து ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் பிரம்பால் அடித்து அனுப்புவார். பழைய சோற்று ருசியில் பள்ளிக்கூட ஞாபகம் மறக்கக் கூடாதென்பதற்காக அங்ஙனம் செய்வார் போலும்!

பிள்ளைகளுக்குள்ளே கெட்டிக்காரனாகவும் பலசாலியாகவும் இருப்பவனை உபாத்தியாயர் சட்டாம் பிள்ளையாக நியமிப்பார். அவன் புத்திசாலியாக இராவிட்டாலும் பலசாலியாக இருக்க வேண்டியது அவசியம். உபாத்தியாயருக்குப் பிரதிநிதியாகப் பிள்ளைகளை அடக்கி யாள்வதும் பாடம் ஒப்பிக்கக் கேட்பதும் அவன் வேலைகள். அவனிடம் எல் லா ரும் அடங்கி நடக்க வேண்டும். சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய தின்பண்டங்களைக் கொடுத்துத் தம் வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும் சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்.

மாணாக்கர்களுக்குள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பதும் பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்று.

பன்னிரண்டு மணிக்குமேல் மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிள்ளைகள் வீட்டுக்குச் செல்வார்கள். பிறகு மூன்று மணிக்கு மீண்டும் பாடம் தொடங்கப்படும். இரவு ஏழு மணி வரையிற்கூடப் பள்ளிக்கூடம் நடைபெறுவதுண்டு.

வ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களது ஞாபக சக்தியை விருத்தி செய்விப்பதற்காக ஒவ்வொருவருக்கும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொல்ல வேண்டும். ‘மறந்து போய்விடுவோமோ’ என்ற பயத்தால் சில பிள்ளைகள் வீடு சென்றவுடன் தமக்கு உபாத்தியாயர் சொன்ன பொருள்களின் பெயர்களைத் தம் தாய் தகப்பனாரிடம் சொல்லி விடுவார்கள். மறுநாள் விடியற்காலையில் அவர்களிடம் அவற்றைத் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சொல்வார்கள்.


பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் துணைக்கு யாரையேனும் பிள்ளைகள் அழைத்து வருவார்கள்; பெரும்பாலும் முதிய பெண்களை அழைத்து வருவதே வழக்கம். நேரம் கழித்து வந்தால் பிரம்படி பலமாகக் கிடைக்குமே என்ற பயத்தால் ஒவ்வொருவனும் எல்லாருக்கும் முன்பே வந்துவிட முயல்வான். இவ்வாறு வருவதன் பிரயோசனம் பழையதுக்கு உபாத்தியாயர் வீட்டுக்கு விடும்போது தெரியும். வழக்கப்படி பிள்ளைகளைப் பிரம்பினால் அடித்து அனுப்பும்போது, முதலில் வந்தவன் கையில் பிரம்பினால் தடவி விடுவார்; இரண்டாம் பையனை மெல்ல அடிப்பார். வரவர அடி அதிகமாகும்; பலமாகவும் விழும். இதனால், முதல் நாள் பலமான அடி வாங்கினவன் அதற்குப் பயந்து மறுநாள் எல்லாருக்கும் முன்பே வந்து விடுவான். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். வேற்றான் என்னும் சொல்லே அவ்வாறு வந்தது. மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவனென்பது அதன் பொருள். உபாத்தியாயரது கைக்கோலின் அடியைப் பெறாமல் தடவுதலை மாத்திரம் பெறுவது ஒரு தனிப்பெருமை யல்லவா?


சில சமயங்களில், ‘நாமே இன்று முதலில் வந்து விட்டோம்’ என்ற பெருமிதத்தோடு ஒரு பிள்ளை தன் துணைக்கு வந்த பாட்டியோடு பள்ளிக்கூடத்தில் நுழைவான். ஆனால் இவனுக்கு முன்பே ஒருவன் அங்கே இருப்பான். இருட்டில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனாலும் தான் முன் வந்ததாக எண்ணி இவன் சந்தோசப்படக் கூடாதென்னும் நினைவினால் அங்கிருப்பவன் இவன் புகுந்தவுடன் சிறிது கனைப்பான். அப்போது இவனுடைய மகிழ்ச்சி எங்கோ பறந்து போய்விடும்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.