Tuesday, January 17, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 24

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 23 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 14 தொடர்ச்சி
சடகோபையங்காரிடம் கற்றது தொடர்ச்சி

மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வத்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவத்திரமாக உதவும். அவர் செல்லும்போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது; இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு, அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார்.

அவர் ஊட்டிய தமிழமுதம்

எந்த விசயத்தைச் சொன்னாலும் அதில் ஒரு தனியான சுவை உண்டாகும்படி சொல்வது அவர் வழக்கம். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுட்களே சொல்வார். ஆயினும் அச்செய்யுட்களின் பொருளை நல்ல உதாரணங்களோடும் உபகதைகளோடும் தெளிவாகச் சொல்லி மனத்தில் நன்றாகப் பதியும்படி செய்வார். பாட்டின் பொருள் வழியே தம்முடைய மனம் முழுவதையும் செல்லவிட்டுக் கேட்போரையும் இழுத்துச் செல்வார். ஏழாம் பிராயத்திலே அவர் சிறிது சிறிதாக ஊட்டிய தமிழமுதத்தின் சுவை இன்றும் எனக்கு மறக்கவில்லை.

முதற் பாடங்கள்

முதல் முதலில் சடகோபையங்கார் தாம் இயற்றிய ஆலந்துறையீசர் பதிகத்தை எனக்குக் கற்பித்தார். அரியிலூரிலுள்ள சிவபெருமான் விசயமாக அமைந்தது அது. சங்கீதத்திலும் அவர் இயற்றிய கீர்த்தனமொன்றையே முதலிற் சொல்லிவைத்தார்.

“இரவிகுல தாமனே-யதுகுல சோமனே
பரமபதி மாயனே-பாண்டவச காயனே

என்று ஆரம்பிப்பது அக்கீர்த்தனம்.

அக்கீர்த்தனம் சகானா ராகத்தில் அமைந்தது, அவர் முதலில் சொல்லித் தந்த அக்கீர்த்தனத்தோடு அதன் இராகமும் என் மனத்தைக் கவர்ந்தது. அதுமுதலே அந்த இராகத்தில் எனக்கு விருப்பம் வளர்ந்து வந்தது. இன்றும் அந்த விருப்பம் இருந்து வருகிறது.

கீர்த்தனம் பிறந்த வரலாறு

ஒரு கவிஞர் தாம் இயற்றிய செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் கற்பிக்கும்போது மற்றவர்களாற் சொல்ல முடியாத பல செய்திகளைத் தெரிவிப்பார். “ஒரு செய்யுள் கவிஞன் வாயிலிருந்து உதிப்பதற்கு முன் அதன் பொருளுக்குரிய கருத்து எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ந்தது? எவ்வாறு அதற்கு ஓர் உருவம் உண்டாயிற்று?” என்னும் வரலாறுகள் அக்கவிஞனால்தான் சொல்ல முடியும். அவை எவ்வளவோ சுவையுடையன வென்பதை யாவரும் அறிவர்.

சடகோபையங்கார் பாடம் சொல்லும்போது அவருடைய சொந்தப் பாட்டுகளைப் பற்றிய வரலாறுகளையும் சொல்லுவார். எனக்கு முதலிற் கற்பித்த சகானா இராகக் கீர்த்தனத்தின் பிறப்பைப் பற்றியும் அவர் சொன்னார்:-

மைசூர் சமத்தானத்திலே பட்சி என்ற பட்டம் பெற்ற சங்கீத வித்துவானாகிய வீணை சாம்பையரென்பவர் ஒருமுறை அரியிலூருக்கு வந்தார். அவர் வீணையில் சிறந்த வித்துவான். சிவ பக்தர். விரிவாகச் சிவ பூசை செய்பவர். பூசையின் இறுதியில் வீணையில் சில தோத்திரங்களைப் பாடி உருகுவார் அவ்வாறு பூசா காலத்தில் அவர் மனமொன்றிப் பாடும் கீர்த்தனங்களைக் கேட்பதற்குப் பலர் காத்திருப்பார்கள்.

சடகோபையங்கார் அவர் பூசையைத் தரிசனம் செய்யச் சென்றார். அவருடைய பக்தியையும் பூசா விதானங்களையும் பார்த்தபோது அவரிடம் அதிக அன்பு உண்டாயிற்று. பூசையின் முடிவில் சாம்பையர் வீணையை எடுத்து வாசித்தார். சகானா இராகத்தை ஆலாபனம் செய்தார். சடகோபையங்கார் அதிலே கரைந்து நின்றார்.

“மகா தேவா மகா தேவா”

என்ற பல்லவியை அவர் தொடங்கினார். மனத்தைப் பலவேறு திசைகளில் இழுத்துச் செல்லும் பொருள் அந்தப் பல்லவியில் இல்லை. இறைவன் திருநாமம் மாத்திரம் இருந்தது. வெறும் இராகத்தில் ஓர் இனிமை இருந்தாலும் அதில் தூய்மையான அந்த நாம சப்தத்தின் இணைப்பு அந்த இனிமைக்கும் ஓர் இனிமையை உண்டாக்கிற்று. சகானா இராகமும் மகாதேவ சத்தமும் வீணா கானத்தில் இழைந்து ஒன்றி மனத்தைச் சிவானந்த விலாசத்திற் பதிய வைத்தன. மேலும் அந்த வித்துவான்

“சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
மகா தேவா”

என்பதைப் பக்தியில் தோய்ந்த உள்ளத்திலிருந்து உருகிவரும் இன்னிசையிலே எழுப்பினார். இராகமும் நாம சத்தமும் ஒருபடி உயர்ந்து நின்றன.  சடகோபையங்கார் அந்த இன்பத்தில் ஊறி இசையும் பக்தியும் ஒன்றிக் கலந்த வெளியிலே சஞ்சாரம் செய்தார். அதிலிருந்து இறங்குவதற்குச் சிறிதுநேரம் ஆயிற்று. கண்ணில் நீர் வர சாம்பையரை வணங்கினார்.

அன்றைய அனுபவம் சடகோபையங்காரைச் சும்மா இருக்கவிடவில்லை. அந்தச் சகானா இராகமும் கீர்த்தனத்தின் மெட்டும் அவர் நினைவில் பசுமையாக நின்றன. அந்த மெட்டிலே அவரும் ஒரு கீர்த்தனம் பாடினார். அதுவே, “இரவிகுல தாமனே” என்ற பாட்டு.

இந்த வரலாற்றை அவர் சொல்லிவிட்டுக் கீர்த்தனத்தைப் பாடினார். பாடும்போது பழைய ஞாபகங்கள் அவருக்கு வந்தன. கண்ணில் நீர் துளித்தது. அவர் மனம் சாம்பையரது வீணாகானத்தை அப்பொழுதும் கேட்டதென்பதை அவர் முகக்குறிப்பு விளக்கியது. “சங்கீதம் ஒரு தெய்விக வித்தை. அது யாவருக்கும் பூரணமாக வாய்ப்பது அரிது. அந்தக் கலை தெய்வ பக்தியோடு கலந்தால் நிறைவுற்று நிற்குமென்பதை சாம்பையரிடத்தில் நான் கண்டேன்” என்று சடகோபையங்கார் சொல்வார்.

வேறு பாடங்கள்

சடகோபையங்காரிடத்தில் வேறுபல கீர்த்தனங்களையும் கற்றுக்கொண்டேன். தமிழில் திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டேன் அந்தப் பாடங்களை யன்றி வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, January 15, 2023

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 அகரமுதல




(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3  தொடர்ச்சி)

செஞ்சொல் நடைவேந்தர்

‘நடை’ என்பது எழுத்தாளரின் இயல்பையும், சித்தனைப் போக்கையும் வெளிப்படுத்த-வல்லது என்பர். எளிமை, அமைதி, அடக்கம் இவற்றின் வடிவானவர் திரு.வி.க. ஆனால், அவர்தம் நடை வீறுகொண்டதாய், சிந்தனையைக் கிளறுவதாய். மிடுக்கு நிறைந்ததாய் விளங்கும் தெளிந்த நடையாகும். வாழ்வையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த திரு வி. க. வுடன் நெருங்கிப் பழகிய முனைவர் மு.வ. அவர்கள், அவர்தம் நடையில் காணப்படும் வியத்தகு கூறுகளைத் தம் கட்டுரை யொன்றில், “எழுதும்போது இருந்த பண்பாடும் பேசும்போது வந்தது. பேசும்போது அமைந்த மிடுக்கு எழுதும்போதும் அமைந்திருந்தது” என்று குறிப்பிட்டுள்ளமை கருதத் தக்கதாகும். பேசுவதைப் போன்று எழுதியும், எழுதுவதைப் போன்று பேசியும் வந்தவர் திரு.வி.க. இரண்டிலும் வேறுபாடுகள் காண முடியாத அளவுக்குச் செஞ்சொற்கள் விரவி விழிப்பூட்டும் வியப்பு நடையைக் கையாண்டார்.


“அருமைத் தமிழ் மாணவர்களே! உங்கள் நாட்டை நோக்குங்கள். அஃது எப்படி இருக்கிறது? அருமைத் தமிழ்நாடு சின்னாபின்னமாகச் சிதறுண்டு கிடக்கிறது. காரணம் என்ன? தலையாய காரணம் என்ன? தாய் மொழியைப் பேணிக் காப்பாற்றாமையாகும். அதன் பால் பற்றுளங் கொள்ளாமை, ஒருபோது முடியணிந்து கோலேந்திக் கலையணிந்து அரியாசனம் வீற்றிருந்த நம் பேரன்னை-இப்போது எந்நிலையில் இருக்கிறாள்? அவள் முடியிழந்து கோலிழந்து கலையிழந்து நலமெல்லாம் இழந்து கிடக்கிறாள். அவள் உடற்கூறுகள் எல்லாம் ஊறுபட்டுக் கிடக்கின்றன. அவள் முகமெல்லாம் குறு மறுக்கள் எழுப்பட அவள் எழிலைக் கெடுத்துவருகின்றன. அவளிருக்கத் துச்சிலும் இல்லை. அவளைத் தூறும் புற்றும்மூடிக் கொள்ளுமோ என அஞ்சுகிறேன்.” (இளமை விருந்து)

எளிய சொல்லாட்சிகளில் தெளிவும், தெளிவில் ஓர் அளவையியல் அணுகுமுறையும் அணுகுமுறையில் ஓர் உறுதியும் கொண்ட தன்மை மேற்காணும் நடையிலே காண முடிகிறது. எனவேதான் “இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி உரை நடையின் தந்தை”யென இவர் தனிச் சிறப்புடன் கருதப்படுகின்றார்.

 –
கவிதைப் பணி


தொடக்கக் காலத்திலேயே உரைநடை எழுதியது போன்று செய்யுள் எழுதும் திறமும் அவர்க்கு வாய்த்திருந்தது. ஆனால் ஒய்வு ஒழிவற்ற அவர்தம் சொற்பொழிவுகளும், நாள்தோறும் வாரந்தோறும் தம் ‘தேச பக்தன்’, ‘நவசக்தி’ இதழ்களுக்கு எழுதவேண்டும் என்ற கட்டாயமும், இவர்தம் செய்யுள் தொண்டிற்குத் தடை விதித்து வந்தன.

உரைநடை போலவே அவருடைய கவிதைகளும் மிகத் தெளிவாக இருக்கும். அவருடைய கவிதைகள் உள்ளத்து உணர்ச்சியை எழுப்புவன. ஆராய்ந்து எடுத்த எளிய சொற்களாலே ஆக்கப்பட்டன. கருத்தை வழுவாமலே கூறுவன.

தாம் எடுத்துக்கொண்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்தி உரைப்பது அவருடைய நடையின் சிறப்பு. அவருடைய கருத்துகள் இயற்கைக்கு மாறாகவோ, பகுத்தறிவுக்குப் பகையாகவோ இருக்கமாட்டா.


1931ஆம் ஆண்டில் ‘உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் என்றொரு சிறு செய்யுள் நூலினை இயற்றினார்.

தமிழினைப்போல் உயர்ந்தமொழி
தரணியில்வே றெங்குமிலை
தமிழனைப்போல் மொழிக்கொலையில்
தலைசிறந்தோர் எவருளரோ.”
– உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்.

என்ற பாடலில் அவர்தம் மொழியார்வம் விளங்கக் காண லாம். அடுத்த ஆண்டில் அவர் இயற்றிய செய்யுள் நூல் முருகன் அருள் வேட்டல் எனும் நூலாகும். முருகன் அல்லது அழகு’ எனும் உரைநடை நூலினை 1925ஆம் ஆண்டில் எழுதினார் அவர். தம் மனத்திற்குப் பிடித்த இயற்கையில் இறைவனைக் கண்ட பாங்கில் எழுந்த நூலாகும் அது. 1938ஆம் ஆண்டில் ‘திருமால் அருள் வேட்டல்’ வெளியாயிற்று. தென்திருப்பேரை முதலாகத் திருமலை ஈறாகப் பல வைணவத் திருப்பதிகளில் கோயில் கொண்டுறையும் கோல நெடுமாலை வந்தித்து வழிபடும் நிலையில் இந்நூல் இயன் றிருக்கக் காணலாம். இப்பாடல்களில் ஒரு பொதுமை நோக்கு இலங்குவதைக் காணலாம்.

பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள்
பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம்
ஒன்றே அன்றோ நன்றே தெளியின்
ஒருவ நிற்கே மருவிய பெயர்கள்
பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி
எப்பெயர் நின் பெயர் எப்பதி நின்பதி
எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி
பேரெலாம் நீயே பேரிலான் நீயே
பதியெலாம் நீயே பதியிலான் நீயே
உருவெலாம் நீயே உருவிலான் நீயே
மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே
எல்லாம் நீயே
– 
திருமால் அருள்வேட்டல்.

என்று அவர் தென்திருப்பேரை யுறையும் திருமாலைப் பரவி நிற்கும் பகுதியில் பொதுமையும் இலக்கிய நுட்பமும் செறிந் திலங்கக் காணலாம்.

திருவரங்கத்தம்மானைத் துதிக்குமுகமாகத் திரு.வி.க. அவர்கள் பாடியுள்ள பின்வரும் பாடலில் செஞ்சொலின்பமும் நெஞ்சினிக்கும் நேயமும நிறைந்திருக்கக் காணலாம்.

மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய்
மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய்
அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய்
அமைதியளி திங்கள் பொழி ஆனந்த நிலவாய்
பணி கொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய்
பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை
பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின்
பெற்றியருள் செய்பாயோ பேரரங்க வேந்தே
– 
திருமால் அருள் வேட்டல்

1942ஆம் ஆண்டில் ‘பொதுமை வேட்டல்’ எனும் பெயரிய செய்யுள் நூலொன்றினை இயற்றித் தமிழுலகிற்கு அளித்துள்ளார். இந்நூலில் இயற்கை வாழ்வு, அருளின் பெருமை, நெஞ்சின் இயல்பு, சன்மார்க்க வாழ்வு முதலிய பொருள் குறித்து இவர் பாடியுள்ள பாடல்களைக் காணலாம். “திரு.வி.க. அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒரு நூலால் அறிய வேண்டின், அது “பொதுமை வேட்டல்” என்னும் இந்த நூல் எனலாம்” என்பர் பெருந்தகை மு.வ. அவர்கள்.

காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக்
கதைபேசித் தொழில்புரிந்து காசு தேடி
மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ
மக்கள் நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும்
மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ
விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங்
காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக்
கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத்தேவே!”
– பொதுமை வேட்டல்

என்று விண்ணப்பம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல் வாழும் நெறியை வகையுறப் புலப்படுத்தி நிற்பதாகும்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்