(உ.வே.சா.வின் என் சரித்திரம் 23 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 14 தொடர்ச்சி
சடகோபையங்காரிடம் கற்றது தொடர்ச்சி

மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வத்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவத்திரமாக உதவும். அவர் செல்லும்போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது; இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு, அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார்.

அவர் ஊட்டிய தமிழமுதம்

எந்த விசயத்தைச் சொன்னாலும் அதில் ஒரு தனியான சுவை உண்டாகும்படி சொல்வது அவர் வழக்கம். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுட்களே சொல்வார். ஆயினும் அச்செய்யுட்களின் பொருளை நல்ல உதாரணங்களோடும் உபகதைகளோடும் தெளிவாகச் சொல்லி மனத்தில் நன்றாகப் பதியும்படி செய்வார். பாட்டின் பொருள் வழியே தம்முடைய மனம் முழுவதையும் செல்லவிட்டுக் கேட்போரையும் இழுத்துச் செல்வார். ஏழாம் பிராயத்திலே அவர் சிறிது சிறிதாக ஊட்டிய தமிழமுதத்தின் சுவை இன்றும் எனக்கு மறக்கவில்லை.

முதற் பாடங்கள்

முதல் முதலில் சடகோபையங்கார் தாம் இயற்றிய ஆலந்துறையீசர் பதிகத்தை எனக்குக் கற்பித்தார். அரியிலூரிலுள்ள சிவபெருமான் விசயமாக அமைந்தது அது. சங்கீதத்திலும் அவர் இயற்றிய கீர்த்தனமொன்றையே முதலிற் சொல்லிவைத்தார்.

“இரவிகுல தாமனே-யதுகுல சோமனே
பரமபதி மாயனே-பாண்டவச காயனே

என்று ஆரம்பிப்பது அக்கீர்த்தனம்.

அக்கீர்த்தனம் சகானா ராகத்தில் அமைந்தது, அவர் முதலில் சொல்லித் தந்த அக்கீர்த்தனத்தோடு அதன் இராகமும் என் மனத்தைக் கவர்ந்தது. அதுமுதலே அந்த இராகத்தில் எனக்கு விருப்பம் வளர்ந்து வந்தது. இன்றும் அந்த விருப்பம் இருந்து வருகிறது.

கீர்த்தனம் பிறந்த வரலாறு

ஒரு கவிஞர் தாம் இயற்றிய செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் கற்பிக்கும்போது மற்றவர்களாற் சொல்ல முடியாத பல செய்திகளைத் தெரிவிப்பார். “ஒரு செய்யுள் கவிஞன் வாயிலிருந்து உதிப்பதற்கு முன் அதன் பொருளுக்குரிய கருத்து எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ந்தது? எவ்வாறு அதற்கு ஓர் உருவம் உண்டாயிற்று?” என்னும் வரலாறுகள் அக்கவிஞனால்தான் சொல்ல முடியும். அவை எவ்வளவோ சுவையுடையன வென்பதை யாவரும் அறிவர்.

சடகோபையங்கார் பாடம் சொல்லும்போது அவருடைய சொந்தப் பாட்டுகளைப் பற்றிய வரலாறுகளையும் சொல்லுவார். எனக்கு முதலிற் கற்பித்த சகானா இராகக் கீர்த்தனத்தின் பிறப்பைப் பற்றியும் அவர் சொன்னார்:-

மைசூர் சமத்தானத்திலே பட்சி என்ற பட்டம் பெற்ற சங்கீத வித்துவானாகிய வீணை சாம்பையரென்பவர் ஒருமுறை அரியிலூருக்கு வந்தார். அவர் வீணையில் சிறந்த வித்துவான். சிவ பக்தர். விரிவாகச் சிவ பூசை செய்பவர். பூசையின் இறுதியில் வீணையில் சில தோத்திரங்களைப் பாடி உருகுவார் அவ்வாறு பூசா காலத்தில் அவர் மனமொன்றிப் பாடும் கீர்த்தனங்களைக் கேட்பதற்குப் பலர் காத்திருப்பார்கள்.

சடகோபையங்கார் அவர் பூசையைத் தரிசனம் செய்யச் சென்றார். அவருடைய பக்தியையும் பூசா விதானங்களையும் பார்த்தபோது அவரிடம் அதிக அன்பு உண்டாயிற்று. பூசையின் முடிவில் சாம்பையர் வீணையை எடுத்து வாசித்தார். சகானா இராகத்தை ஆலாபனம் செய்தார். சடகோபையங்கார் அதிலே கரைந்து நின்றார்.

“மகா தேவா மகா தேவா”

என்ற பல்லவியை அவர் தொடங்கினார். மனத்தைப் பலவேறு திசைகளில் இழுத்துச் செல்லும் பொருள் அந்தப் பல்லவியில் இல்லை. இறைவன் திருநாமம் மாத்திரம் இருந்தது. வெறும் இராகத்தில் ஓர் இனிமை இருந்தாலும் அதில் தூய்மையான அந்த நாம சப்தத்தின் இணைப்பு அந்த இனிமைக்கும் ஓர் இனிமையை உண்டாக்கிற்று. சகானா இராகமும் மகாதேவ சத்தமும் வீணா கானத்தில் இழைந்து ஒன்றி மனத்தைச் சிவானந்த விலாசத்திற் பதிய வைத்தன. மேலும் அந்த வித்துவான்

“சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
மகா தேவா”

என்பதைப் பக்தியில் தோய்ந்த உள்ளத்திலிருந்து உருகிவரும் இன்னிசையிலே எழுப்பினார். இராகமும் நாம சத்தமும் ஒருபடி உயர்ந்து நின்றன.  சடகோபையங்கார் அந்த இன்பத்தில் ஊறி இசையும் பக்தியும் ஒன்றிக் கலந்த வெளியிலே சஞ்சாரம் செய்தார். அதிலிருந்து இறங்குவதற்குச் சிறிதுநேரம் ஆயிற்று. கண்ணில் நீர் வர சாம்பையரை வணங்கினார்.

அன்றைய அனுபவம் சடகோபையங்காரைச் சும்மா இருக்கவிடவில்லை. அந்தச் சகானா இராகமும் கீர்த்தனத்தின் மெட்டும் அவர் நினைவில் பசுமையாக நின்றன. அந்த மெட்டிலே அவரும் ஒரு கீர்த்தனம் பாடினார். அதுவே, “இரவிகுல தாமனே” என்ற பாட்டு.

இந்த வரலாற்றை அவர் சொல்லிவிட்டுக் கீர்த்தனத்தைப் பாடினார். பாடும்போது பழைய ஞாபகங்கள் அவருக்கு வந்தன. கண்ணில் நீர் துளித்தது. அவர் மனம் சாம்பையரது வீணாகானத்தை அப்பொழுதும் கேட்டதென்பதை அவர் முகக்குறிப்பு விளக்கியது. “சங்கீதம் ஒரு தெய்விக வித்தை. அது யாவருக்கும் பூரணமாக வாய்ப்பது அரிது. அந்தக் கலை தெய்வ பக்தியோடு கலந்தால் நிறைவுற்று நிற்குமென்பதை சாம்பையரிடத்தில் நான் கண்டேன்” என்று சடகோபையங்கார் சொல்வார்.

வேறு பாடங்கள்

சடகோபையங்காரிடத்தில் வேறுபல கீர்த்தனங்களையும் கற்றுக்கொண்டேன். தமிழில் திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டேன் அந்தப் பாடங்களை யன்றி வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.