Saturday, October 19, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 109 – அத்தியாயம்-71, சிறப்புப் பாடல்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 108 – அத்தியாயம்-70 . புது வீடு-தொடர்ச்சி)

தருமபுர ஆதீனத்து அடியவருள் ஒருவரும் சிறந்த தமிழ் வித்துவானும் காசியில் சில வருடங்கள் வசித்தவருமான சிரீ பரம சிவத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் மிக்க பக்தியுடையவராகித் தருமபுர ஆதீனகர்த்தருடைய அனுமதி பெற்றுப் பெரும்பாலும் திருவாவடுதுறையிலேயே இருந்து வந்தனர். அவரிடத்தில் சுப்பிரமணிய தேசிகருக்கு விசேடமான அன்பு உண்டு. அவர் திருவாவடுதுறையில் இருந்த பொழுது சிறந்த நூல்களைப் படித்து ஆராய்ந்தும், மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டும் வந்தார்.

அவர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் சில தமிழ் நூல்களையும், சைவ சாத்திரங்களையும், மடத்தைச் சார்ந்த வடமொழி வித்துவான்களிடத்தில் வியாகரண நூலையும் படித்து வந்தார். அவர் நன்றாகப் பிரசங்கம் செய்வார். தமிழிற் செய்யுள் இயற்றும் ஆற்றல் அவர்பால் அமைந்திருந்தது. நுட்பமான அறிவுடையவர். மனத்தைக் கவரும் தோற்றமுடையவர். அவரிடம் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் நன்னூல் விருத்தியுரை முழுவதையும் ஒரு முறை பாடம் கேட்டோம் சம்சுகிருத வியாகரணம் படித்தவராதலின் சில நுட்பமான விடயங்களை விளக்கிச் சொன்னார். எவ்வளவு கற்றாலும் பூரணமாக அறிந்து கொண்டதாக யாரும் சொல்லிக் கொள்ள முடியாதென்பதை அவரிடம் பாடம் கேட்டபோது நாங்கள் தெரிந்து கொண்டோம்.

சுப்பிரமணிய தேசிகரிடத்தில் ஈடுபட்ட பரமசிவத் தம்பிரான் அவர் மீது ஒரு மும்மணிக் கோவை இயற்றினார். தேசிகருடைய முன்னிலையில் அப்பிரபந்தம் அரங்கேற்றப்பெற்றது. அது காப்புச் செய்யுளுடன் 31- பாடல்களை உடையது. அம்மும்மணிக் கோவைக்குப் பத்துப் பேர்கள் அளித்த சிறப்புப் பாயிரச் செய்யுட்கள்-2.6 அவை அப்பிரபந்தத்தோடு சேர்த்துத் தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராச பண்டிதரால் அச்சிடப் பெற்றன.

அக்காலத்தில் மடத்தில் இருந்த தம்பிரான்களும் மாணாக்கர்களும் சிறப்புப்பாயிரமளித்தனர். அந்த அந்தச் சிறப்புப் பாயிரத்திற்கு முன்பு அதனை அளித்தார் பெயர் அவருக்குரிய சிறப்புகளோடு வெளியிடப்பட்டது.

‘திருவாவடுதுறை யாதீனத்துச் சிசுய வருக்கத்துள் ஒருவரும் பாண்டிய நாட்டுள்ள மேலகரம் திரிகூட இராசப்பக் கவிராயரவர்கள் வம்சத்தருமாகிய சண்பகக் குற்றாலக் கவிராயரவர்களியற்றிய அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்’ என்பது போலத் தலைப்புகள் அமைக்கப்பட்டன.

நானும் இரண்டு செய்யுட்கள் சிறப்புப் பாயிரமாகச் செய்தேன். சுப்பிரமணிய தேசிகருடைய பேரன்பினால் எல்லா வகையான அனுகூலங்களையும் அடைந்த நான் அவர்பால் எனக்குள்ள நன்றியறிவைப் புலப்படுத்த வழிதெரியாமல் இருந்தேன். நல்ல வேளையாக இச்சிறப்புப் பாயிரம் அதற்குரிய சந்தர்ப்பத்தை உண்டாக்கியது. கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே உதவி வந்த தேசிகர் பெருமையை இரண்டாம் செய்யுளில் வெளியிட்டேன். அது வருமாறு:

“தேனாட்டு மலர்பொழிற்கோ முத்தியிற்சுப் பிரமணிய
தேவனென்னைத்
தானாட்ட விருபொருளு மொருங்கருள்த யாநிதியின்
சலசத் தாண்மேல்
வானாட்டி னமுதேய்ப்ப மும்மணிக்கோ வையைநவிற்றி
வனைந்தான் யாரும்
மேனாட்டு நயசுகுணப் பரமசிவ முனிவரவித்
துவசிங் கேறே”

[கோமுத்தி – திருவாவடுதுறை. என்னைத்தான் நாட்ட, இரு பொருள் – கல்வி, செல்வம். சலசம் – தாமரை. வித்துவசிங்க ஏறு – புலமையில் ஆண் சிங்கம் போன்றவன்.]

சிறப்புப் பாயிரத்திற்கு முன் என் பெயரை அமைக்கும் பொழுது ‘திருவாவடுதுறை ஆதீன வித்துவான்’ என்றும் போடும்படி சுப்பிரமணிய தேசிகர் சொன்னார். அவ்வாறு அமைப்பதில் எனக்குச் சம்மதம் இல்லை. “பிள்ளையவர்கள் ஆதீன வித்துவானாக விளங்கிய இந்த இடத்தில் நான் இப்பட்டத்தை வகிப்பதற்குச் சிறிதும் தகுதியுடையவனல்லன். சந்நிதானத்திடம் படிப்பவன் என்று போட்டால் அதனையே பெரிய பாக்கியமாகக் கருதுவேன்” என்றேன்.

“இப்பட்டத்தை அமைக்க நீர் தடை செய்தாலும் மற்றொரு விசயத்தை நீர் தடை செய்யமுடியாது” என்று தேசிகர் சொன்னார்.

“அந்த விசயம் என்ன?” என்று நான் கேட்டேன்.

“உம் பெயரைத் திருவாவடுதுறைச் சாமிநாதையரென்றுதான் அமைக்க வேண்டும்.”

“அதற்குத் தக்கவாறு சந்நிதானத்தில் என்னை ஆக்கிவிட்ட பிறகு அந்தப்படியே அமைப்பதில் என்ன குற்றம்?” என்று நான் கூறினேன்.

என் சிறப்புப் பாயிரத்திற்கு மேல், திருவாவடுதுறை ஆதீன மகா சந்நிதானத்திடத்துக் கல்வி கற்கின்றவரும், வேங்கடசுப்ப ஐயரவர்கள் புத்திரருமாகிய திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரவர்களியற்றிய அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்’ என்னும் தலைப்பு அமைக்கப்பட்டது.

என்னைத் திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரென்று வழங்குவது உறுதியாயிற்று. திருவாவடுதுறையென்பது ஊர்ப் பெயராக இருந்தாலும் அதை என் பெயரோடு சேர்த்தபோது எனக்கு ஒரு கௌரவப் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர், ஆதீன வித்துவான் என்று போடவேண்டுமென்று சொன்னதே எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கிற்று. அவர் என்னைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயத்தை அறிந்தேன். அப்பெயரை அப்பொழுது மும்மணிக் கோவைப் புத்தகத்தில் அச்சிடாவிட்டாலும், தேசிகர் பிற்காலத்தில் தம் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். நான் கும்பகோணம் கல்லூரியில் உத்தியோகம் பெற்ற பிறகு அவர் எனக்கு எழுதிய கடிதங்களிலும், அனுப்பிய புத்தகங்களின் முன் பக்கங்களிலும், “நமது ஆதீன வித்துவான்”, “ஆதீன மகா வித்துவான்” என்றெல்லாம் எழுதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.

அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்திலுள்ள கொலுமண்டபத்தின் முற்றவெளியானது கீற்றுப் பந்தலாகவே விசாலமாகவும் அழகாகவும் போடப்பட்டிருக்கும். அதைக் கோவிற் பட்டியிலிருப்பது போலவே மரக் கொட்டகையாகப் போடவேண்டுமென்று சவந்திபுரத்திலிருந்த பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் நினைத்து அதற்கு ஆக வேண்டிய முயற்சி செய்தார். அதையறிந்த சேற்றூர் சமீன்தாரும், சிவகிரி சமீன்தாரும் அதற்கு வேண்டிய தேக்கு மரங்களையெல்லாம் அனுப்பினார். திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல தச்சர்கள் வருவிக்கப்பெற்றனர். அவர்களுக்கெல்லாம் தலைவராகப் ’புதியவன் ஆசாரியார்’ என்பவர் இருந்து மிக்க கருத்தோடு எல்லாவற்றையும் நடத்தி வந்தார். ஒரு வருடம் அவ்வேலை நடைபெற்றது. தூண்கள் நாட்டாமல் ஒரே கவிப்பாக அம்மண்டபம் அமைந்தது. அம்மண்டபத்தைக் கட்டி முடிக்க வேண்டுமென்று ஊக்கத்தோடு முயன்றவர் வேணுவன லிங்கத் தம்பிரானாகையால் அதற்கு, ‘வேணுவன லிங்க விலாசம்’ என்னும் பெயர் வைக்கப்பட்டது.

ஈசுவர வருடம் தை மாதம் முதல் தேதி அதன் பிரவேச விழா நடைபெற்றது. அயலூர்களிலிருந்து பல கனவான்களும் வித்துவான்களும் அவ்விசேடத்திற்கு வந்திருந்தனர். அத்தகைய மண்டபம் சோழ தேசத்தில் இல்லாமையால் பலர் அதனைப் பார்க்கும் பொருட்டே வந்தனர். மண்டபத்தின் மேல் தட்டின் உட்பாகத்தில் நாயன்மார்கள் வரலாறுகளையும், திருவிளையாடற் கதைகளையும் புலப்படுத்தும் சித்திரங்கள் எழுதப்பெற்றன.

விசேடம் நடந்த தினத்தன்று மத்தியானத்தில் பிராமண போசனமும் மகேசுவர பூசை முதலியனவும், இரவில் பட்டணப் பிரவேசமும் நிகழ்ந்தன. தம்பிரான்களும் பிறரும் அம்மண்டபத்தைப் பாராட்டிச் செய்யுட்கள் இயற்றினர். பட்டணப் பிரவேசம் ஆனபிறகு சுப்பிரமணிய தேசிகர் ஒடுக்கத்திற்கு வந்து அமர்ந்தார். அப்போது அவர் விருப்பத்தின்படி வேணுவன லிங்க விலாசச் சிறப்புப் பாடல்களை நான் படித்துக் காட்டினேன். தம்பிரான்கள் முதலியோர் அங்கே கூடியிருந்தார்கள். அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக இருந்த சிரீ இராமலிங்கத் தம்பிரானென்பவரும் அங்கே வந்து உடனிருந்தார்.

தம்பிரான்களும் பிறரும் தனித் தனியே பாடல்கள் இயற்றியிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் தோற்றாத நயம் அமையப் பாட வேண்டுமென்று முயன்று பாடினார்கள். ஒவ்வொருவரும் தாம்தாம் இயற்றிய பாடல்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் கடைசி வரையில் மறைவாகவே வைத்திருந்தனர். திடீரென்று சபையில் வாசிக்கும் போது எல்லாரும் கேட்டு நயங்களை அறிந்து பாராட்டவேண்டு மென்பது அவர்கள் கருத்து. நானும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனே.

பரமசிவத் தம்பிரான், குமாரசாமித் தம்பிரான் முதலிய தம்பிரான்களும், மதுரை இராமசாமி பிள்ளை முதலியவர்களும் தாம் தாம் இயற்றிய செய்யுட்களை என்னிடம் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு நான் படித்துக்காட்டத் தொடங்கினேன். முப்பது பாடல்கள் இருந்தன. ஒவ்வொரு செய்யுளையும் இசையுடன் படித்து எனக்குத் தோற்றிய நயங்களையும் எடுத்துச் சொன்னேன். நான் இயற்றியிருந்த மூன்று செய்யுட்களையும் படித்துக் காட்டினேன். அவற்றுள் ஒரு பாடலில், “இந்த மண்டபத்தைக் காலில்லா மண்டபமென்று யாவரும் கூறுவார். அங்கே தென்கால் (தென்றற்காற்று) பலகாலும் விரவுதலால் நான் அங்ஙனம் கூறேன்” என்ற கருத்தை அமைத்திருந்தேன். கால் என்பதற்குத் தூண், காற்று என்று இரண்டு பொருள் படும்படி பாடிய அச் செய்யுளைக் கேட்டு யாவரும் இன்புற்றனர்.

எல்லாவற்றையும் கேட்ட சுப்பிரமணிய தேசிகர், “நன்றாயிருக்கின்றன; எல்லாம் பிள்ளையவர்களுடைய செய்யுட்களின் போக்கு” என்று தம் திருப்தியைத் தெரிவித்தார். அதைக்காட்டிலும் உயர்ந்த மதிப்புரை வேறு இருப்பதாக எங்களுக்குத் தோற்றவில்லை. அச்சபையில் பலர் முன்னிலையில் கிடைத்த மதிப்பு எங்களுக்கு அளவற்ற இன்பத்தை அளித்தது. பிள்ளையவர்களைப் பற்றிய நினைவுடனே அன்றிரவு நாங்கள் துயிலச் சென்றோம்.

(தொடரும்)

Sunday, October 13, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 108 – அத்தியாயம்-70 . புது வீடு

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 107 – இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை-தொடர்ச்சி)

திருவாவடுதுறையில் திருக்குளத்தின் வடகரையில் கீழ் மேலாக ஓர் அக்கிரகாரம் உண்டு. சுப்பிரமணிய தேசிகர் உத்தரவால் அதன் வட சிறகில் கீழைக்கோடியில் இரண்டு கட்டுள்ள வசதியான வீடு ஒன்று அமைக்கப் பெற்றது. மடத்திலிருந்து நல்ல சாமான்களை அனுப்பி அவ்வீட்டைத் தேசிகர் கட்டுவித்தார். அது கட்டி முடிந்தவுடன் தேசிகரே நேரில் வந்து அதனை ஒரு முறை பார்வையிட்டுச் சென்றார். “அவ்வீடு எதற்காகக் கட்டப்படுகிறது?” என்பது ஒருவருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. தம்பிரான்கள் மாத்திரம், “எங்கள் வேண்டுகோள் பலிக்கும் காலம் வந்துவிட்டது” என்று சந்தோசமுற்றார்கள். நானும் ஒரு வகையாக ஊகித்து அறிந்தேன்.

ஒருநாள் தேசிகர் என்னை நோக்கி, “உங்கள் தகப்பனார் ஊருக்குப் போய்விட்டு வருவதாகச் சொன்னார்களே; ஏன் வரவில்லை?” என்று கேட்டார். “அவர்கள் அப்பக்கங்களிலுள்ள அன்பர்களின் ஆதரவு பெற்று இருந்து வருகிறார்கள்” என்றேன்.

“அவர்களுக்கு உடனே கடிதம் எழுதி இங்கேயே வந்து விடும்படித் தெரிவியும். முதுமைப் பிராயத்தில் உம்மை விட்டு அவர்கள் இருப்பது சரியன்று” என்று தேசிகர் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். எனக்கும் அவர்களைப் பிரிந்திருப்பது வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்வதற்கு எனக்குத் தைரியம் இல்லை ஒன்று, நான் அவர்கள் உள்ள இடத்திற்குச் சென்று இருக்கவேண்டும்; அல்லது அவர்கள் நான் இருக்குமிடத்திற்கு வரவேண்டும். தேசிகர் கட்டளை எனக்கு உற்சாகத்தை உண்டாக்கியது. கடிதம் எழுதினேன். தாய் தந்தையர் ஒரு வாரத்தில் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தனர்.

தேசிகருடைய ஆலோசனை அப்பொழுதுதான் எனக்கு நன்கு விளங்கிற்று. தாம் கட்டுவித்த புது வீட்டில் என் தாய் தந்தையருடன் என்னை வசிக்கச் செய்யவேண்டுமென்ற அவர் அன்பு கனிந்த கருத்தை நான் உணர்ந்து உள்ளம் பூரித்தேன். அது மட்டுமா? நான் கிரமமாக இல்லறம் நடத்த வேண்டுமென்பதும், நிரந்தரமாகத் திருவாவடுதுறை வாசியாக வேண்டுமென்பதும் அவர் விருப்பமென்பதையும் தெரிந்து என் நல்வினையை வாழ்த்தினேன்.

இடம் பொருள் ஏவலால் நிரம்பிய தேசிகருக்கு உள்ளமும் தயையால் நிரம்பியிருந்தது. பிறருக்கு உபகாரம் செய்து இன்பம் அடைவது அவர் இயல்பு. பிறருக்கு ஈவதனால் அவ்வீகையைப் பெறுபவனுக்கு உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும் கொடுப்பவருக்கு உண்டாகும் இன்பம் அதிகம். திருவள்ளுவர் மிக அழகாக,

“ஈத்துவக்கு மின்பம் அறியார்கொல் தம்முடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்

என்று கூறியதன் பொருளைச் சுப்பிரமணிய தேசிகருடைய செயலால் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.

ஈசுவர வருடம் கார்த்திகை மாதத்தில் (நவம்பர், 1877) நாங்கள் புது வீட்டிற்குப் போய் வசிக்கலானோம். எனக்கு உண்டான சந்தோசத்தைக் காட்டிலும் என் தாய் தந்தையர் முதலியோருக்குப் பல மடங்கு அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. மாதத்துக்கு ஓர் ஊரும் நாளுக்கு ஒரு வீடுமாக அலைந்து நைந்து வாழ்ந்த அவர்களுக்கு திரமாக ஓரிடத்தில் வாழும்படி ஏற்பட்ட வாழ்க்கை இந்திர போகத்தைப் போல இருந்தது.

நான் இல்லற வாழ்வை மேற்கொண்டேன். எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பொருள்களெல்லாம் மடத்திலிருந்து கிடைத்தன. முதலில் மடத்திலிருந்து அதிகாரிகள் சிலர், “அயலூராருக்கு இவ்வளவு சௌகரியம் ஏற்படுவதா?” என்று, பொறாமை கொண்டனர். பெரிய இடங்களில் இப்படிச் சில பிராணிகள் இருப்பது இயற்கையே. அந்தப் பொறாமைக்காரர்கள் எங்களுக்குச் சில இடையூறுகளைச் செய்யலாயினர். புது வீட்டிலே குடி புகுந்தவர்களுக்கு வேண்டிய நவ பாண்டங்களை நிறுத்தி விட்டனர்.

இந்த விசயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட சுப்பிரமணிய தேசிகர், மடத்தில் (இ)ராயச வேலை பார்த்துக் கொண்டிருந்தவரும் என்னிடம் பாடங்கேட்டு வந்தவருமாகிய மு. பொன்னுசாமி செட்டியாரென்பவரை அழைத்து, “சாமிநாதையருக்கு எந்தச் சமயத்தில் என்ன வேண்டுமோ அதை விசாரித்து நம்மிடம் தெரிவித்து அதைச் செய்து கொடுக்க வேண்டும். அவர் வீட்டுக்கு வேண்டிய சாமக்கிரியைகளின் விசயத்தை எப்பொழுதும் நீரே விசாரித்துக்கொள்ள வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

பொன்னுசாமி செட்டியார் மிக்க விநயமும் என்பால் அன்பும் உடையவர். தமிழ் நூல்களை ஆழ்ந்து பயின்று இன்புறுவார். செய்யுள் இயற்றும் ஆற்றலும் அவருக்கு உண்டு. மடத்திற்குப் பல பெரிய மனிதர்கள் வந்து செல்வார்கள். அவர்களிடத்தில் எப்படிப் பழக வேண்டுமோ அவ்வாறு பழகுவதோடு தமக்கும் ஆதீனத்திற்கும் நல்ல பெயரை உண்டாக்குவார். அவருடம் எசமான விசுவாசமும், குருபக்தியும் சிறந்திருந்தன. தம் வாழ்நாள் முழுவதும் ஆதீனத்தொண்டராகி வாழ்ந்தார். அவர்பால் எங்கள் குடும்பப் பாதுகாப்பை ஆதீனத் தலைவர் ஒப்பிக்கவே அவர் மிகுதியான கவனத்தோடு தம் கடமையைச் செய்யலானார். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெரும்பாலும் குறிப்பால் அறிந்து அவற்றை அனுப்பிவந்தார்.

அவருடைய விசாரணையினால், இடையூறு செய்யப் புகுந்தவர்கள் முயற்சி ஒன்றும் பலிக்கவில்ல. தம்முடைய இயல்பு ஆதீனத் தலைவர்காதிற்கு எட்டினால் பெருத்த அபாயம் நேருமென்று அவர்கள் அஞ்சினர். வர வர அவர்களும் தம் பொறமையினின்றும் நீங்கினர். தினந்தோறும் மடத்திலிருந்து தக்க காலத்தில் எங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் பிறவும் குறைவின்றிக் கிடைத்து வந்தன.

ஒரு நாள் எங்கள் வீட்டு வாயிலில் மூன்று வண்டிகள் வந்து நின்றன. சில ஆட்கள் இரண்டு குதிர்களைக் கொணர்ந்து வீட்டில் வைத்தனர். சிலர் வண்டியிலிருந்த அறுபது கல நெல்லை முப்பது முப்பது கலமாக அவ்விரண்டிலும் கொட்டி மண் பூசிவிட்டு, “சந்நிதானத்தில் இங்கே சேர்ப்பிக்கும்படி உத்தரவாயிற்று” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அப்பால் பொன்னுசாமி செட்டியார் வந்தார். “தங்கள் வீட்டுச் செலவுக்கு அறுபது கலம் நெல் சேர்ப்பிக்கும்படி சந்நிதானத்தில் உத்தரவாயிற்று. அயலூரிலிருந்து வந்த விருந்தினர்களைப்போல நாள்தோறும் மடத்திலிருந்து சாமான்களைப் பெறுதல் உசிதமாக இராதென்றும், இனி நிரந்தரமாக இங்கே மடத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய ஸந்நிதானம் திருவுள்ளம் கொண்டுவிட்டது. மேற்செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி இந்தத் தொகையையும் கொடுக்கும்படி உத்தரவாயிற்று” என்று சொல்லி என் கையில் ஐம்பது உரூபாயைச் சேர்ப்பித்தார்.

நான் மெய்ம்மறந்து போனேன். என் தந்தையார் தம்முடைய சிவபூசைக்காக அப்பொழுது சந்தனம் அரைத்துக் கொண்டிருந்தார். நான் பணத்தை அவர் கையிலே கொடுத்து இன்னது தான் சொல்வதென்று தெரியாமல் நின்றேன். அவர் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

“எல்லாம் பரமேசுவரன் திருவருள்” என்று சொல்லி நன்றியறிவு ததும்பும் பார்வையோடு பேச முடியாமல் நின்றார்.

அன்று பிற்பகலில் என் தந்தையார் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய தேசிகரைக் கண்டு நெல்லும் பணமும் கிடைத்ததைத் தெரிவித்து அளவற்ற சந்தோசமும் நன்றியறிவும் புலப்படச் சம்பாசித்தனர். அப்போது தேசிகர், “இந்த மடத்தில் பெரிய காரியத்தர்களுக்கே மாசம் ஐந்து கலந்தான் சம்பளம். அதற்கு மேல் தங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க மனம் இருந்தும் வழக்கத்துக்கு விரோதமாக ஒரு காரியம் செய்தால் அநாவசியமான வம்புக்கு இடமாகுமோயன்று அப்படிச் செய்யவில்லை. இதைக் கொண்டு உசிதமான செலவு செய்து வந்தால் வேண்டியவற்றை அப்போதப்போது அனுப்புகிறோம்; கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னார்.

தம்பிரான்களின் திருப்தி

நானும் என் தந்தையாரும் பிரிந்து வாழ்ந்து வந்த சங்கடம் தீர்ந்தது. திரமான இடமும், நிலையான வருவாயும், பெரிய இடத்துச் சார்பும் கிடைத்தன. நான் திருவாவடுதுறை மனிதனாகி விட்டேன். என்னிடம் படித்து வந்த மாணாக்கர்களெல்லாம் மிக்க திருப்தியை அடைந்தார்கள். திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவனென்பதை உறுதிப்படுத்தியதுபோல என் புது வாழ்க்கை அமைந்தமையால், “இனி இவர் இங்கிருந்து போகமாட்டார்” என்ற நினைவே அவர்களுடைய திருப்திக்குக் காரணமாயிற்று.

தந்தையாரின் பொழுது போக்கு

என் தகப்பனாரோ எல்லாக் கவலைகளையும் மறந்து சிவ பூசை செய்து கொண்டும், கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டும் சந்தோசமாகப் பொழுது போக்கி வந்தார். ஒரு பயனை எதிர்பார்த்துப் பாடும் அவசியம் ஒழிந்தது. அவருக்கு எப்பொழுது ஓய்வும் உற்சாகமும் உண்டோ அப்பொழுதெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார். மடத்தில் யாரேனும் சங்கீத வித்துவான்கள் வந்தால் அவரைப் பார்த்து விட்டுச் செல்வது ஒரு வழக்கமாயிற்று. மடத்தில் வினிகை நடைபெறுவதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என் தந்தையாரை அழைத்து வரச் சொல்லிக் கேட்கச் செய்வார்.

மகா வைத்தியநாதையர், திருக்கோடிகா கிருட்டிணையர் முதலிய வித்துவான்கள் வரும்போதெல்லாம் என் தந்தையாரைப் பாராமல் போகமாட்டார்கள். புதுக்கோட்டையிலிருந்து தியாகராச சாத்திரிகள் வந்து சுப்பிரமணிய தேசிகரிடம் பேசிவரும்போது திடீரென்று, “சரி; நான் அங்கே போய் அவர்களிடம் இரண்டு கீர்த்தனங்கள் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டுவிடுவார். “அதைச் சொல்லுங்கள்; இதைச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பார். கேட்பதோடு நிற்கமாட்டார்; ஒவ்வொன்றையும் வாயாரப் பாராட்டுவார். கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களை அவர் பிறரிடம் அதிகமாகக் கேட்டதில்லை யாதலால் பெரும்பாலும் அவற்றையே பாடச் சொல்லிக் கேட்பார். நாயக நாயகி பாவத்திலுள்ள பதங்களைக் கேட்டு, “என்ன அழகு! என்ன மெட்டு!!” என்று கொண்டாடுவார்.

திருக்கோடிகா கிருட்டிணையர் சிறந்த பிடில் வித்துவான். மகா வைத்தியநாதையருக்குப் பக்க வாத்தியம் வாசித்து வந்தவர். அவர் என் பிதாவிடம் கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்கள் பலவற்றை அறிந்து பாடம் பண்ணிக்கொண்டார். திருவாவடுதுறையில் இருந்த நாகசுர வித்துவானாகிய குழந்தை வேலனென்பவனும் சில சிறந்த கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிக்கொண்டு நாகசுரத்தில் வாசித்தான். அவற்றை அவன் வாசிக்கும்போது அவை புதிய பாணியில் இருப்பதை அறிந்த இரசிகர்கள் என் தந்தையாரிடமிருந்து அவை அவனுக்குக் கிடைத்தன என்பதை விசாரித்தறிந்து அவரிடம் வந்து சில கீர்த்தனங்களைக் கேட்டு உவப்பார்கள். கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களுக்குப் புதிய ‘கிராக்கி’ ஏற்பட்டது. இப்படி இறைவன் திருவருளால் எங்கள் குடும்பத்தில் எல்லாருடைய உள்ளத்திலும் ஒரு நிறைவு உண்டாகி எங்கள் வாழ்க்கையை இன்பமுள்ளதாக்கியது

(தொடரும்)

Saturday, September 28, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 107 – இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை-தொடர்ச்சி)

திருச்சிராப்பள்ளியில் என் ஆசிரியருக்கு மிகவும் பழக்கமான இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளையென்னும் கனவான் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவேட்டீசுவரன் பேட்டை. அவர் தமது கல்வித் திறமையாலும் இடைவிடா முயற்சியாலும் நல்ல ஒழுக்கத்தாலும் சிறிய உத்தியோகத்திலிருந்து படிப் படியாக அக்காலத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பெற்ற டிப்டி கலெக்டர் என்னும் பெரிய உத்தியோகத்தை அடைந்து புகழ் பெற்றார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவரிடத்தில் விசேடமான மதிப்பும், கீழ் உத்தியோகத்தர்களுக்குப் பயமும் இருந்தன. தமிழில் நல்ல பயிற்சியும் தமிழ் வித்துவான்களிடத்தில் உண்மையான அபிமானமும் உடையவர். எந்த இடத்திற்குப் போனாலும் ஆங்காங்குள்ள வித்துவான்களை விசாரித்து அறிந்து அவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்து இன்புறுவார். உத்தியோக முறையில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். ஆனால் உண்மையான உழைப்பாளிகளை முன்னுக்குக் கொண்டு வருவதில் சிறிதும் பின் வாங்கமாட்டார். வைணவ மதத்தர்; சிறந்த தெய்வ பக்தியுள்ளவர். ஏழைகள் பால் இரக்கமும் உபகாரச் சிந்தையும் கொண்டவர். அவர் மகா வித்துவான் பிள்ளையவர்களிடத்தில் மிகவும் ஈடுபட்டவர். அவர்கள் மூலம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையைப் பற்றியும், சுப்பிரமணிய தேசிகருடைய குண விசேடங்களைப்பற்றியும் அறிந்து கொண்டவர். நாங்கள் திருவாவடுதுறையிலிருந்தபோது அவர் திரிசிரபுரத்தில் உசூர் சிரேத்தராக இருந்தார். அவர் ஒரு நாள் சில அன்பர்களோடு திருவாவடுதுறைக்கு வந்தார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் பலருடன் பழகிப் பெரிய காரியங்களையெல்லாம் நிருவாகம் செய்யும் ஆற்றல் படைத்திருந்த பட்டாபிராமபிள்ளை அவ்வாதீனத்தின் அமைப்பையும் நாள்தோறும் ஒழுங்காகப் பூசை, தருமம், வித்தியாதானம் முதலியன நடைபெற்று வருவதையும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். “இங்கே போலீசு இல்லை; படாடோபம் இல்லை; ஆனாலும் காரியங்களெல்லாம் எவ்வளவு ஒழுங்காக நடக்கின்றன! வித்தியா விசயத்தில் இங்குள்ளவர்களுக்கு எவ்வளவு சிரத்தையும் அன்பும் இருக்கின்றன! தலைவரிடத்தில் எல்லாரும் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள்!” என்று விம்மிதமடைந்து பாராட்டினார். சுப்பிரமணிய தேசிகருடைய அறிவுத் திறமையையும் தூய ஒழுக்கத்தையும் அன்பையும் அறிந்து, “இவர்கள் இருக்கும் இடம் இந்த மாதிரி தான் விளங்கும். இவர்களைப் போல் தமிழ் நாட்டில் சிலர் இருந்தால் போதும்; நம்முடைய பாசை முதலியன பழைய காலம் போல் சிறப்பை அடையும்” என்று புகழ்ந்தார்.

தேசிகரிடம் அவர் ஒரு முறை பேசுகையில் தமிழ்ப் பாசைக்கு நல்ல அகராதி ஒன்று வேண்டுமென்றும் பிள்ளையவர்களைக் கொண்டு அதனைச் சித்தம் செய்யச் சொல்லலாமென்றும் சொன்னார். தேசிகர் அப்படியே செய்யச் சொல்வதாகக் கூறியிருந்தார். ஆயினும் அது நிறைவேறவில்லை.

அது முதல் பட்டாபிராம பிள்ளை அப்பக்கம் வரும்போதெல்லாம் திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து அன்புடன் சல்லாபம் செய்து செல்வார்.

தாது வருடம் புரட்டாசி மாத ஆரம்பத்தில் (செட்டம்பர் 1877) ஒரு முறை அவர் திருவாவடுதுறைக்கு வந்தார். மாணாக்கர் கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்டு சந்தோசமடைந்தார். அவர்களுடைய கல்வித் திறமையைப் பரீட்சித்துத் திருப்தி அடைந்தார். தேசிகருடைய விருப்பத்தின்படி மாணாக்கர்களில் ஒவ்வொருவரும் அவர் விசயமாக ஒவ்வொரு செய்யுள் இயற்றிச் சொன்னோம். நான் இயற்றிக் கூறிய செய்யுள் வருமாறு:-

கார்நோக்கி நிற்கு மயில்போல நீங்கிய காதலன்றன்
தேர்நோக்கி நிற்கு மடந்தையர் போலத் திகைப்பறவிப்
பார்நோக்கி நிற்குநற் பட்டாபி ராம பராக்கிரம
நேர்நோக்கி நின்றனம் யாங்களெல் லாநின் னிகழ்வரவே.”

எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்த பட்டாபிராம பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்துத் தம்முடைய பழைய வேண்டுகோளை ஞாபகப்படுத்தினார். “இவ்வளவு மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். சந்நிதானம் மனம் வைத்தால் அகராதியை விரைவில் நிறைவேற்றலாம்” என்று விண்ணப்பம் செய்தார். “பிள்ளையவர்கள் இந்த உபயோகமான காரியத்தைச் செய்திருக்கலாம். அவர் எப்போதும் புராணங்களும். பிரபந்தங்களும் பாடியே தமது வாழ்க்கையைக் கழித்து விட்டார். பெரிய வித்துவான்கள் உலகத்திற்கு உபகாரமான காரியங்களைச் செய்ய முன் வந்தால் தமிழ் எவ்வளவோ விருத்தியடையும்” என்றார். தேசிகர் “பார்ப்போம்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.

பாட்டாபிராம பிள்ளை திரிசிரபுரம் சென்று தாம் திருவாவடுதுறைக்கு வந்திருந்த காலத்தில் தமக்கு உண்டான மகிழ்ச்சியைப் புலப்படுத்தியும் தம் வேண்டுகோளை நினைவுறுத்தியும் நான்கு பாடல்கள் எழுதி அச்சிட்டுச் சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பினார். அவை வருமாறு:-

  1. இனியதமிழ் நாடெங்கு மிங்கிலீசு பரவிதமிழ்க்
    கேற்ற மின்றிக்
    கனியகன்ற மாபோலக் கைவிடப்பெற் றிருப்பதையான்
    கண்டாற் றாது
    முனியினுருக் கொண்டவுன்றன் முன்றிலிடை முத்தமிழும்
    முழங்கு மென்றே
    தனியுறுசுப் பிரமணியத் தேசிகா நினையன்று
    தரிசித் தேனே.

    [மா – மாமரம். தனி – ஒப்பற்ற பெருமை]
  2. தரிசித்த வன்றுகண்டேன் றமிழ்மடந்தை தளிர்த்துலகில்
    தன்பேர் நாட்டிப்
    பரிசுபெற நினையடைந்து பலவாறாய் முயல்வதுவும்
    பாரின் மன்னர்
    தரிசிகா மணியேநீ தமிழ்மயிலைக் காப்பதுவும்
    தமிழர் யார்க்கும்
    பொருவில்பாண் டியன்சோழன் சேரனென வயங்குமுனைப்
    புனித னென்றும்.

[‘பரிசு – உலகத்தில் சிறந்த பாசையென்று மெச்சப்படுவதாகிய பரிசு’ (பட்டாபிராம பிள்ளையின் குறிப்பு.) பொரு – ஒப்பு.]

  1. அகராதி தமிழிலிணை யற்றதென் வியப்புறவொன்
    றான்றோர் யாரும்
    பகராதி ருத்தலினிப் பாரிலுள தமிழ்மடப்பண்
    ணவர்கட் கெல்லாம்
    நிகராதி ருக்குநெடும் பழியென்று முன்புகன்று
    நெடிய சீட்டுத்
    தகராதி ருக்குமொரு சிறுகுழையி லிட்டனுப்பித்
    தளர்வாய் நின்றேன்.

[மடப்பண்ணவர் – மடாதிபதிகள். பட்டாபிராம பிள்ளை அகராதி எழுத வேண்டுமென்ற வேண்டுகோளை எல்லா மடாதிபதிகளுக்கும் அனுப்பினாரென்று தெரிகின்றது. சீட்டு – கடிதம்.]

  1. தளர்ந்துருகிச் சமுசயத்தா லாற்றேனாய்த் திருமுகத்தைத்
    தரிசித் தேன்காண்
    வளர்ந்தோங்கு மதியுடையாய் ஞானிகட்கோர் தாயகமே
    வள்ள லேயுன்

கிளர்வசனத் தாற்றளர்ந்தேன் கெட்டியென நிச்சயித்தேன்
கேட்டுக் கொண்ட
வளம்வாய்ந்த வகராதி வருமென்றே திரும்பினன்காண்
வனப்பின் மிக்கோய்.

திரிசிரபுரம், கலி, 4978-தாது ௵ புரட்டாசி ௴ 13௳ ந (27-9-1877) [சமுசயம் – சந்தேகம். கெட்டி – திறமையையுடையோய்]

இந்தக் கடிதத்தைக் கண்டு நாங்களெல்லாம் வியப்புற்றோம். இப்பாட்டுகள் புலவர் பாடல்களைப் போன்றனவாக இராவிட்டாலும் பட்டாபிராம பிள்ளைக்கு எவ்வளவு தமிழன்பு இருந்ததென்பதை வெளிப்படுத்துகின்றன. ஓர் அரசாங்க உத்தியோகத்தர் அவ்வளவு அன்புடன் செய்யுள் இயற்றி விண்ணப்பம் செய்யும் திறமை படைத்திருப்பதே பெரிய ஆச்சரியமன்றோ?

அவர் கடிதம் வந்த சில நாட்கள் வரையில் சுப்பிரமணிய தேசிகரும் நாங்களும் அகராதியைப் பற்றிப் பேசினோம், வீரமா முனிவரென்னும் பெசுகி பாதிரியார் இயற்றிய சதுரகராதியின் அச்சுப் பிரதியும் ஏட்டுப் பிரதியும் வருவிக்கப்பட்டன. நிகண்டுகளை எடுத்துத் தட்டிக் கொட்டி வைத்தோம். இந்த உறசாகம் சில நாட்கள் வரையில் இருந்தது. பிறகு அகராதியைப் பற்றிய பேச்சே நின்று போயிற்று. பட்டாபிராம பிள்ளையைப் பற்றிய பேச்சு வந்தால் மட்டும், “திடீரென்று வந்து அகராதி எந்த மட்டில் இருக்கிறது?” என்று அவர் கேட்டால் என்ன செய்வது? என்ற யோசனை உண்டாகும்.

அக்காலத்தில் என்னிடம் படித்து வந்தவர்களுள் விசுவலிங்கத் தம்பிரான் முதலிய சிலர், சுப்பிரமணிய தேசிகர் பகற் போசனத்தின் பின் சிரமபரிகாரம் செய்து கொள்ளும்போது அவர் பாதங்களை வருடிப் பணிவிடை புரிவது வழக்கம். அவ்வாறு அவர்கள் செய்யும் பொழுது தேசிகர் நடைபெறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார்; பாடங்களுக்குப் பொருளும் அவற்றிற் கண்ட விசயங்களிற் சில கேள்விகளையும் கேட்பார். அவற்றிற்கு விடை கூறிய பின் தேசிகர் சந்தோசமாக இருக்கும் சமயம் பார்த்துத் தம்பிரான்கள் என்னைத் திருவாவடுதுறையிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் இருப்பதற்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் மாதச் சம்பளம் ஏற்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக் கொள்வார்களாம். தேசிகர் என்னைக் காணும்பொழுது, “என்ன ஐயா! உம்மைப் பற்றி உம்முடைய மாணாக்கர்களாகிய தம்பிரான்கள் சிபாரிசு செய்கிறார்கள். உமக்குச் சௌகரியம் பண்ணிவைக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்” என்று சந்தோசத்துடன் சொல்லி, “நன்றாய்ப் பாடம் சொல்லவேண்டும்” என்று கட்டளையிடுவார்.

அவ்வார்த்தைகள் என் உள்ளத்தைக் குளிர்விக்கும். அவர்கள் வேண்டுகோள் பலிப்பதைப் பற்றி நான் அதிகக் கவலை கொள்ளவில்லை. அவர்கள் என்பால் கொண்டிருந்த அன்பையும் என் உழைப்பு வீணாகவில்லை

(தொடரும்)

Friday, September 27, 2024

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல்

 




(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி)

மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை எண்ணப்பட்ட தமிழ்மொழி ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட உலக மொழிகளின் தாயாக உருமாற்றமெய்தும் வாய்ப்புக்கள் அரும்புவது மொழியியலாளர்களை வியப்படையச் செய்தது. நடு ஆசியாவில் தோன்றி மெல்ல மெல்ல பிராகுயி மொழி பேசப்படுகின்ற பலுச்சிசுத்தான் வழியாகத் தமிழ்மொழி நகர்ந்து சிந்து சமவெளி வழியாக இந்தியாவை வந்தடைந்திருக்க வேண்டும் என்பது கால்டுவெல்லின் கருத்து.

காலுடுவெல்லின் இந்தத் தொடக்கநிலை ஆய்வுகள் உலகளாவிய நிலையில் தமிழ்மொழி குறித்த பல்வேறு ஆய்வுகளுக்குப் பல புதிய களங்களை அமைத்துத் தந்தன. திராவிடவியலின் துணையின்றி இந்தியவியல் இயங்க முடியாது என்ற நிலைப்பாடு இந்தியவியலாய்வாளர்களிடம் மெல்லமெல்ல வலுப்பெறத் தொடங்கியது. காலுடுவெல்லின் தமிழாய்வு குறித்த முயற்சிகளில் பல குறைபாடுகளும் முரண்பாடுகளும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடக்கநிலைப் படைப்புகளில் இவை இயல்பானவையே. எனினும் இது வலிமைமிக்க காளையின் வேகத்தோடு இணைந்த முழுமையான ஒரு கன்னி முயற்சி என்பதில் ஐயமில்லை. உலக நாகரிகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஓர் இனத்தை – அடக்கு முறையால் நலிந்துபோன ஓர் இனத்தை, நானிலம் தொழும் அமரர்களாக எண்ணப்படும் நிலைக்கு உயர்த்திய கால்டுவெல்லின் இரசவாத முயற்சி-அற்புதத்திலும் அற்புதமான ஒரு புதுமை என்பதில் ஐயமில்லை.

சப்பானிய மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்பதை நிலைநாட்ட முடியாமல் சப்பானியர்கள் பல ஐயத்தை எழுப்பிக் கொண்டிருந்த காலம் அது. உருசிய தீபகற்பப் பகுதியில் பிறந்த உரல் அல்டெயிக்கு மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததுதான் சப்பானிய மொழி என்பதைக் காலுடுவெல் உறுதிப்படுத்தினார். சப்பானிய மொழி தமிழோடு உறவுடையது என்று 1856-இல் காலுடுவெல் வரைந்த குறிப்பு காலப்போக்கில் சப்பானிய-தமிழ்மொழி ஆய்வு மிகப்பெரிய களமாகப் பரந்து விரிய வித்திட்டது.

ஏறத்தாழ 120 ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாகக் கிடந்த காலுடுவெல்லின் இந்த சிந்தனைகள் 1974-ஆம் ஆண்டு சப்பானிய அறிஞர்களிடம் புத்துயிர் பெறத் தொடங்கியது. 1974-ஆம் ஆண்டு பேராசிரியர் சுசுமே சிபா என்பவர் திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்குமிடையில் காணப்பெறும் உறவுகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார். 1988ஆம் ஆண்டு திராவிட மொழிகளும் சப்பானிய மொழியும் (Dravidian Language and Japanese) என்ற தலைப்பில் விரிவான நூலினை இவர் வெளியிட்டார். இவற்றைத் தொடர்ந்து அகிரா பூசிவாரா அவர்களின் தமிழ்-சப்பானிய உறவு தொடர்பான 14 ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. இக்கட்டுரைகள் தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவுகளைப் பறைசாற்றின. இக் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்ட மினாருகோ என்னும் சப்பானியப் பேராசிரியர் அலுடெயிக்கு மொழிக் குடும்பத்திற்கும் சப்பானிய மொழிக்கும் இடையேயுள்ள உறவை ஆய்ந்ததோடு நில்லாமல் தமிழுக்கும் அலுடெயிக்கு மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகளையும் ஆராயத் தொடங்கினார்.

சப்பான் நாட்டு முதுபெரும் மொழியியல் பேரறிஞர் பேராசிரியர் சுசுமோ ஓணோ இத்துறையில் ஆழமான ஆய்வுகளை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைச் சார்ந்த தமிழ்ப்பேராசிரியர்களோடு இணைந்து மேற்கொண்டபோது மொழி என்னும் எல்லையைத் தாண்டி, இலக்கியம், சமயம், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல துறைகளைத் தழுவி, தமிழ்-சப்பானிய உறவு குறித்த ஆய்வுகள் மலர்ந்தன. சப்பானிய காதல் கவிதைகளின் பழந்தொகுப்பான மன்யோசு. சங்க அகப்பாடல்கள், தமிழர்களின் பொங்கல், சப்பானியர்களின் கோசகட்சு விழா ஆகியன தொடர்பான ஆய்வுகள் உலகையே வியப்பில் ஆழ்த்தின. தமிழிலிருந்து சப்பானிய மொழியானது வரலாற்றுக்கு முற்பட்ட காலமான நெல் பண்பாட்டுக் காலத்தில் (Age of Rice Culture)  தோன்றியிருக்கலாம் என்ற பேராசிரியர் சுசுமோ ஓணோவின் ஆராய்ச்சி முடிவு மொழியியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அரிய ஆய்வுக்களத்திற்கு அடிக்கல் நாட்டியவர் காலுடுவெல் என்பது குறிப்பிடத்தக்கது.

1856-இல் கொரிய-தமிழ் உறவு பற்றியும் காலுடுவெல் குறிப்பிட்டு அரிய இத்துறைக்கு கால்கோள் இட்டார். கொரிய-இந்திய அல்லது கொரிய-தமிழ்ப்பண்பாட்டு உறவு குறித்த ஆய்வுகள் வரலாற்று நிலையிலும் மொழியியல் கண்ணோட்டத்திலும் வளர்ச்சியடைய காலுடுவெல்லின் பார்வை ஓரளவிற்கு உதவியது எனலாம். பழைய கொரிய நாட்டு ஆவணங்கள் இந்திய நாட்டிலிருந்து வந்த பேரரசி ஒருத்தியால் கொரியப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது என்ற அரிய வரலாற்றுச் செய்தியைத் தருகின்றன. இதன் விளைவாகப் பல்வேறு அறிஞர்கள் இந்த வரலாற்றைத் தேடும் ஆராய்ச்சி முயற்சியில் இறங்கத் தலைப்பட்டனர். அயோத்தியில் இருந்து இந்த அரசி வந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் அயோத்தியில் அவருக்கு நினைவு மண்டபமும் இவர்களால் கட்டப்பட்டது. கொரிய-தமிழ்மொழி உறவு குறித்து ஆய்ந்த அறிஞர்கள் தென் தமிழகத்தின் நாகப்பட்டிணம் எனும் பகுதியிலிருந்து இந்த அரசி கொரிய நாட்டை நோக்கிப் பயணத்திருக்கலாம் என நம்புகின்றனர்.

மொழியடிப்படையில் கொரிய திராவிட உறவுகள் குறித்து விரிவாக ஆய்ந்து தம் ஆய்வினை 1905 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டுத் தூதுவராகக் கொரிய மன்னர்களிடம் பணியாற்றிய  எச்சு.பி.ஈபருட்டு என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் இத்துறையில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல காலங்களுக்குப் பின் 1990-இல் திரு காம் கில் ஊர் (Kang KiL-Ur) என்பவர் எழுதிய திராவிடமும் கொரிய மொழியும் என்ற நூலும் இந்த வரிசையில் மிகவும் சுட்டத்தக்கது. தற்போது பேராசிரியர் சங் -நம் கிம் என்பவரும் அவரைச் சார்ந்த பலரும் காலுடுவெல் தொடங்கி வைத்த இத்துறையில் பல்வேறு கோணங்களில் விரிவாராய்ச்சி செய்து  வருகின்றனர்.

(தொடரும்)

Saturday, September 21, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 105 – சந்திரசேகர கவிராச பண்டிதர்- தொடர்ச்சி)

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.

அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள் கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.

கோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென்பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு இராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.

மூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய சிரீ வைணவ ஆசாரிய புருசர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்குத் தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும் படி ஒரு காரியத்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடை பெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்துவானுடன் பழகிப் பல விசயங்களைத் தெரிந்துகொள்ளலாமென்ற உற்சாகம் எனக்கு இருந்தது.

திருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, “இவ்விடத்திலுள்ள அமைப்புகளையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறது” என்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை?” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.

நான் இராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. “இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா?” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி, “இப்படியல்லவா படிக்க வேண்டும்? உமக்குப் படிக்கத் தெரியவில்லையே!” என்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. “பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே” என்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். “இப்படியல்லவா படிக்க வேண்டும்!” என்று அவர் பாராட்டினார்.

தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த இராகம்கூட வரும்போல் இருக்கிறதே!” என்று சொல்லி நகைத்தார்.

“இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறது” என்று சொன்னேன். ‘இராகம்’ என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

கோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது. அவர் தொடர்ச்சியாகக் கம்ப ராமாயணத்திற்குப் பொருள் சொல்லி வந்தார். இடையிடையே அவர் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். மணிப்பிரவாள நடையிலுள்ள அவற்றைக் கேட்டுச் சுப்பிரமணிய தேசிகர் மிக்க சந்தோசத்தை அடைந்தார். அந்த வியாக்கியானங்களில் அவருக்கு விருப்பம் உண்டு. வைணவ நூல்களில் பயிற்சியுடையவர் யாரேனும் வந்தால் அவரிடம் அவ்வியாக்கியானங்களிலிருந்து சில பகுதிகளைச் சொல்லச் செய்து கேட்டு மகிழ்ந்து சம்மானம் வழங்குவார்.

ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகர் எங்களையெல்லாம் பரீட்சிக்கும் படி கோவிந்த பிள்ளையிடம் சொன்னார். அவர் அப்படியே இலக்கண இலக்கியங்களில் ஒவ்வொருவரையும் சில சில கேள்விகள் கேட்டார். என்னைப் பரீட்சிக்கையில் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ஓதக்கே ணெஞ்சே” என்னும் பாட்டைக் கூறிப் பொருள் சொல்லும்படி ஏவினார். நான் சொல்லி வரும்போது அதில் வரும் ‘அஞ்சை மாமணியைப் போற்று’ என்பதற்கு ‘அஞ்சை-பஞ்சா யுதத்தை, மாமணியை-திருமார்பில் அணிந்த சௌத்துபத்தை, போற்று-வழிபடு” என்று பொருள் சொன்னேன். உடனே அவர் கை மறித்து, “அதற்கு அர்த்தம் அப்படிச் சொல்லக் கூடாது. அஞ்சு ஐ மாமணியை என்று பிரித்து இருபத்தைந்து அட்சரங்களாலாகிய இருதலை மாணிக்கமென்னும் மந்திரத்தை என்று பொருள் சொல்ல வேண்டும்” என்றார். நாங்கள் கேட்டு வியந்தோம்.

“சம்பிரதாயம் தெரிந்தவர்களிடம் கேட்பதில் உள்ள பிரயோசனத்தைப் பார்த்தீர்களா?” என்று எங்களை நோக்கிச் சொல்லிவிட்டுத் தேசிகர் அவ் வித்துவானைப் பாராட்டினார்.

மறுநாட் காலையில் கோவிந்த பிள்ளை என்னைப் பார்த்து, “நான் சிறிது தூரம் வெளியே போய் வரவேண்டும். சகாயத்துக்கு யாரையாவது வரச்சொல்லும்” என்றார். அப்பொழுது என்னிடம் படித்துக் கொண்டிருந்த இராமகிருடடிண பிள்ளை என்பவரை அவருடன் அனுப்பினேன். அம்மாணாக்கர் திருமண் அணிபவர்; வைணவ சம்பிரதாயத்திலே பற்றுடையவர். பாடம் கேட்கும்போது விட்ணு தூசணையாக உள்ள பகுதிகள் வந்தால் மிகவும் கடினப்படுவார். “இப்படிதான் ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரைத் தூசிப் பார்கள். நாம் அதைக் கவனியாமல் இலக்கியச் சுவையைமட்டும் அனுபவிக்க வேண்டும்” என்று நான் சமாதானம் சொல்வேன்,

சைவ மயமாயிருந்த அங்கே வைணவ சம்பந்தமே இல்லாமையால் அவர், “யாரேனும் வைணவர் வரமாட்டாரா?” என்ற ஏக்கம் பிடித்தவராக இருந்தார். கோவிந்த பிள்ளை வந்தபோது மிக்க தாகமுடையவன் பானகத்தைக் கண்டது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். அந்த வித்துவான் எங்கே போனாலும் அவரோடு நிழல் போலச் செல்வார். அவர் எதைச் சொன்னாலும் பரம சந்தோசத்தோடு கேட்பார்.

அவர் கோவிந்த பிள்ளையைப் பயபக்தியோடு அழைத்துச் சென்றார். “ஒருவரும் வராத இடமாக இருக்கட்டும்” என்று கோவிந்த பிள்ளை சொல்லவே, “அப்படியே ஆகட்டும்” என்று வழிகாட்டிச் சென்றார். கோவிந்த பிள்ளை காலைக் கடன்களை முடித்துக் கொள்ள எண்ணினாரென்பது இராமகிருட்டிண பிள்ளையின் கருத்து. அவரோ, “இன்னும் எங்கே போகவேண்டும்?” என்று அடிக்கடி அவசரமாகக் கேட்டுக் கொண்டே நடந்தார்.

“இதோ வந்துவிட்டோம்” என் சொல்லியபடியே ஒரு கல் தூரத்துக்கு அப்பாலுள்ள இலட்சத்தோப்பென்னும் இடத்துக்கு அவரை அம்மாணாக்கர் அழைத்துச் சென்றார்.

அவ்வளவு தூரம் நடந்து வந்த சிரமத்தால் அம்முதியவருக்கு மிகுதியான கோபம் உண்டாயிற்று. “சுருட்டுக் குடிப்பதற்குத் தனியான இடம் வேண்டுமென்று கேட்டால் நீ சமீபத்தில் ஓர் இடத்தைக் காட்டாமல் இவ்வளவு தூரம் அழைத்து வந்தாயே” என்று சொல்லித் தம் கையில் இருந்த தடியினால் அவரை அடிக்க ஓங்கினார்.

இராமகிருட்டிண பிள்ளை, “அட பாவி! நீர் சுருட்டுக் குடிப்பது யாருக்கையா தெரியும்?” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓடி வந்து விட்டார். கோவிந்த பிள்ளை தம் காரியத்தை முடித்துவிட்டு மீண்டு வந்தார். அவர் கோபம் அப்போதும் ஆறவில்லை. “என்னுடன் இவ்வளவு முட்டாளையா அனுப்புவது? மிகவும் சிரமப்படுத்தி விட்டானே” என்று வந்தவுடன் என்னைக் கேட்டார். முன்பே வந்த இராமகிருட்டிண பிள்ளை மூலமாக விசயத்தை அறிந்து கொண்ட நான் ஒருவாறு அவருக்குச் சமாதானம் சொன்னேன். ஏறுவெயிலில் மரமில்லாத சாலை வழியே நடந்து வந்த சிரமத்தால் அவர் களைப்புற்றிருந்தார். அவர் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை.

அன்று பிற்பகலில் தேசிகரைப் பார்க்க அவர் வந்து இருந்த போது தடியை எடுத்துக்கொண்டு நான்கு பக்கங்களையும் பார்த்தார். “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். “அந்தப் பயல் இருக்கிறானா என்றுதான் பார்க்கிறேன்: சந்நிதானத்திடம் சொல்லி அவனைத் துரத்திவிடச் சொல்கிறேன்” என்றார். நான் குறிப்பாக அவரை மௌனமாக இருக்கச் செய்துவிட்டு இராமகிருட்டிண பிள்ளையிடம் போய், “இவர் கண்ணிலே படவேண்டா” என்று எச்சரிக்கை செய்தேன். பாவம்! அம்மாணாக்கர் நெடுங்காலமாகத் தம் மனத்தில் அடக்கி வைத்திருந்த குறைகளையும் எண்ணங்களையும் இந்த வைணவரிடம் சொல்லி ஆற்றிக் கொள்ளலாமென்று எவ்வளவோ ஆவலாக இருந்தார். அவர் விருப்பம் நிறைவேறாமல் விபரீதமாக முடிந்தது. தேசிகருக்கும் விசயம் பிறகு தெரிந்தது.

கோவிந்த பிள்ளை திருவாவடுதுறையில் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் சொல்லி வந்தார். வைணவ சம்பிரதாய விசயங்களைச் சொல்லும்போது அவை புதியனவாக இருந்தன. மற்ற எங்களுக்கு அவரிடம் மதிப்பு உண்டாகவில்லை. சில சமயங்களில் தம்பிரான்கள் அவரிடம் வேறு நூல்களில் சந்தேகம் கேட்பவர்களைப் போலவே சில கேள்விகள் கேட்பார்கள். அவர் சொல்லத் தெரியாமல் மயங்குவார்; இல்லையெனின் வேறு எதையாவது சொல்வார். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டோமென்ற கருவத்தால் இப்படி அம்முதியவரைச் சில சமயங்களில் தம்பிரான்கள் கலங்க வைத்தார்கள்.

முதிர்ந்தவராகிய அவர், இளமை முறுக்கினாலும் படிப்பு மிடுக்கினாலும் தம்பிரான்கள் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் மயங்கி, “நீங்களெல்லாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள். அவர் திரிசிரபுரத்தில் இருந்தபோதே நன்றாகப் படித்திருந்தார் இங்கே வந்து சிவஞான சுவாமிகள் முதலியவர் இயற்றிய நூல்களைப் படித்து விருத்தியடைந்தார். உங்களுக்குப் பாடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்களே ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்வார்.

“பிள்ளையவர்கள் தங்களிடம் படித்தார்களென்று சொல்லுகிறார்களே. உண்மைதானா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை; அது பொய். அவர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் பெரியவர், படிப்பிலும் சிறந்தவர்” என்று அவர் கூறினார்.

வைணவராகிய அவருக்குச் சைவ சமூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது. அதனாலும் தம்பிரான்கள் கேள்வி கேட்டமையாலும் அவருக்கு அங்கே தங்கியிருக்க விருப்பமில்லை. ஊருக்குப் போகவேண்டுமென்று தேசிகருக்குச் சொல்லியனுப்பினார். அவரது குறிப்பறிந்து சுப்பிரமணிய தேசிகர் சால்வை மரியாதையும் தக்க பொருள் சம்மானமும் செய்து, “அடிக்கடி வந்து போகவேண்டும்” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார். அவர் மீண்டும் கபித்தலம் போய்ச் சேர்ந்தார்.

(தொடரும்)