ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33
வள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேச வந்த பெருங்கவிக்கோ இற்றைநாள் அமைச்சர்கள் குறித்துச் சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறியிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ்வரிகள். கவிஞர் பாடுகிறார்,
“அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம்
இமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக்
காப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத
தாழ்ப்பாள்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்!
சமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை
அமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்!
இல்லாதான் தன்னை எப்பொழுதும் வாய்வைத்துச்
செல்லாக் காசாக்கிச் செகப்புரட்சி செய்கின்றார்!
தூங்காமல் தூங்கி சுகம் பெற்றுத் தொழிலாளர்
ஏங்கும் நிலைவளர்த்து எத்திலே பிழைக்கின்றார்!
உழவர் பெருங்குடியை ஊஞ்சலாய்ப் பயன்படுத்தி
அழகாக ஆடி ஆர்ப்பரித்து வாழ்கின்றார்!
வாயடியால் கையடியால் வருகின்ற பொய்யடியால்
போயடித்து வெற்றிப் புன்னகையில் மிதக்கின்றார்!
தாமாளும் தகுதியும் தகுதியால் ஒழுக்கமும்
தூமணி போல் உள்ளமும் தொண்டுத் திருச்செயலும்
என்னவென்றே தெரியாத எத்தனையோ அமைச்சர்களை
முன்பு மிகக் கண்டோம்!
மூன்றிலொன்றை இன்று கண்டோம்!
கண்கெட்டான் சூரியனைக் கண்டு வணங்குமாப் போல்
ரெண்டுங் கெட்டாரெல்லாம் நீனிலத்தில் அமைச்சரின்று!
கட்சியெனும் முற்றத்தில் காலத்தின் இரதத்தினிலே
தட்டிப் பறித்ததுதான் சார்அமைச்சர் பதவிகளாம்!”
படித்தவர்களின் மோசமான போக்குகள் குறித்துப் பெருங்கவிக்கோ பல இடங்களில் சொற்சாட்டை சொடுக்கியிருக்கிறார். சொல் ஈட்டியாக அவர் வீசியுள்ள சில கவிதைகள் சுவைக்கப்பட வேண்டியவையாகும்.
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
No comments:
Post a Comment