இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 கருத்திற்காக..
(மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)
மறைமலையடிகள் 5/5
‘நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள்.
அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவரது உடலை
எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும்
என்று அவருடைய மக்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி
“‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல்
எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக் கிறார்கள் அண்ணா” என்று கதறி
அழுதார்கள். நானும் கண்ணிர் சிந்தி சென்னையிலிருந்து அங்கு வந்த முனைவர்(டாக்டர்)
மு.வ. உட்பட ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கண்ணிர் சிந்திக்கதறி அழ, அழ,
அவரது உடலுக்கு எரியூட்டப்பட்டது. நானும் கீழ்க்காணுமாறு அழுதேன்:
என்று காண்போம்?
அன்பிற்கோர் நிலைக்களமே! ஆர்வலர்க்கோர்
ஆரமுதே! அடைந்தார் தம்மைத்
தன்பிறவி பெற்ற பயன் தம்மனோர் பெற
என்றும் தகவு கூறி
அன்புருவாய்த் திகழ்ந்துவந்த ஆன்ற பெரும்
மறைமலையே! மணியே! நின்றன்
இன்புருவத் திருபுருவைத் தமிழன்பை
இன் குரலை என்று காண்போம்?
பிறகு என்னுடைய தமிழர்நாடு இதழில் கீழ்க்காணும் பாடல்களைப் பாடி வெளியிட்டேன்.
மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!
கலையே! அறிவே! கடலே மறைந்தனையோ!
தலையே! தமிழே! தவமே அழிந்தனையோ!
இலையே! என நாங்கள் ஏங்கியழிப் போயினையோ!
தமிழும் அலறியழ! தமிழ்த்தாயும் குமுறி அழ!
தமிழிளைஞர் விழ்ந்து அழ தமிழ்ப்புலவர் புலமைஅழ
தமிழ்நாடு இழந்துஅழ தமிழ் நூல்கள் தனித்து அழ
தமிழ்த்தலைவா போயினையே! தமிழ்ளங்கு போய்ச் சேரும்?
நீசாய்ந்தாய் என்றாலும் நினதுநெறி சாயவிலை
நீமறைந்தாய் என்றாலும் நின்தொண்டு மறையவிலை
நீ அழிந்தாய் என்றாலும் நின் நூல்கள் அழியவிலை
நீஒழிந்தாய் என்றாலும் நின்நாடு ஒழியவிலை!
அன்பும் அறமும் அறிவும் அருந்தமிழும்
என்பும் உருகும் இன்குரலும் நற்பண்பும்
இன்சொல்லும் ஏற்காது இழிந்த தமிழ்நாட்டில்
இன்றுவரை வாழ்ந்துவந்த தெண்ணுங்கால்வியப் பன்றோ?
பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு
சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ்மண்ணில்
உரியார் புதைப்பர் என ஒர்ந்தும் அதற்கொப்பாமல்
எரிக்க உடலை, எலும்பெறிவிர் கடலினுக்கு என்றாய் அந்தோ!
தமிழ்ப்பகையை ஒழிக்காமல் தமிழ் அன்பையே ஒழித்தோம்
தமிழ்க்குறையை அழிக்காமல் தமிழ் நிறைவைத்தான் அழித்தோம்
தமிழ்மொழியை தமிழ் அறிவை தமிழ்க்கடலை வாழவைத்துத்
தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்!
பல்லாவரத்திலுள்ள அவரது நூல் நிலையத்தை
நான் பல முறை பார்த்திருக்கிறேன். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரது
குறிப்புகள் இருக்கும். இதனால் அவர் அத்தனை நூல்களையும் படித்து நன்கு
ஆராய்ந்திருக்கிறார் என்ப்து தெரியவரும். அவருக்குப்பின் அது ஒரு பெரிய
நூல் நிலையமாக அமையவேண்டுமென்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அஃது
இப்போது நிறைவேறி இருக்கிறது. சென்னை இலிங்கிச் செட்டித்தெரு 105 ஆவது எண்
உள்ள கட்டடத்தில் மறைமலையடிகளின் நூல்நிலையம்*
நன்கு அமைக்கப் பெற்றிருக்கிறது. வெளியூரிலிருந்து சென்னைக்குச் செல்லும்
ஒவ்வொருவரும் கட்டாயம் கண்டு களிக்கக் கடடியதாக மிகப்பெரிய கட்டடத்தில்
மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. இதற்காகப் பெரு முயற்சி எடுத்துக் கொண்ட
திரு. வ. சுப்பையா( பிள்ளை) அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். அடிகளாரின்
பிறந்த ஊராகிய நாகப்பட்டினத்தில் மறைமலையடிகளின் உருவச் சிலையொன்று புலவர்
கோவை இளஞ்சேரன் முயற்சியால் நல்லதோர் இடத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது.
இச் சிலைத் திறப்புவிழாவில் தமிழக முதல்வர் முனைவர்(டாக்டர்) கலைஞர் மு. கருணாநிதி தலைமை வகித்தார். நான் சொற்பொழிவு நிகழ்த்தி மகிழ்ந்தேன். தமிழக அரசு சென்னையில் கட்டியுள்ள ஒரு பெரிய பாலத்திற்கு மறைமலையடிகள் பாலம் என்று: பெயரிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. திருச்சிராப்பள்ளிப் பெரிய கடைவீதியில் வரதராசப் பெருமாள் கோவில் தெருவில் தமிழகப் புலவர் குழு தனக்கென ஒரு பெருங்கட்டடத்தை வாங்கி, அக்கட்டடத்தின் மன்றத்திற்கு மறைமலையடிகள் மன்றம் எனப் பெயரிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இவை போதா. நாடு முழுவதும் அவரது பெயரால் மன்றங்களை நிறுவியும், நகரம் முழுவதும் அவரது சிலைகளை எழுப்பி வைத்தும் வணக்கம் செலுத்தியாக வேண்டும். வாழட்டும் அவரது புகழ்! வளரட்டும் அவரது தொண்டு!
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்
No comments:
Post a Comment