பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார்

‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள்.
இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்.
தெய்வானை ஆச்சி, வ.சுப்பிரமணியன் இணையரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் அண்ணாமலை என்றாலும் மாணிக்கம் என்ற பெயரே நிலைபெற்று விட்டது.
தன் ஏழாம்  அகவை வரை நடேச(ஐய)ரிடம், குருகுலப் பாடம் படித்த இவர், ஏழாம் வயதில் புதுக்கோட்டை உயர்நிலைப்பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.
இவரின் 18ஆம் அகவையில் பருமாவுக்கு வேலைக்காகச் சென்றார். அங்கு வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்தாலும், தொடர்ந்து அங்கு நீடிக்காமல் தாயகம் திரும்பிவிட்டார்.
தமிழகம் திரும்பிய வ.சுப.மாணிக்கனாருக்கு, அறிஞர் பெருந்தகை பண்டிதமணி கதிரேசனார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
அதன் விழைவாய்த் தமிழ்மொழியின் மீது பெருநாட்டம் கொண்ட மாணிக்கனார். பண்டிதமணியின் ஊக்குவித்தலினால் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் வித்வான் தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
இப்பல்கலைக் கழகத்தில் இராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார்அ.சிதம்பரநாதன் ஆகியோர் மாணிக்கனாரின் ஆசிரியர்களாக விளங்கினர்.
1945ஆம் ஆண்டு கீழ்த்திசைமொழி இளங்கலைப் பட்டமும் (பி.ஒ.எல்), 1951 ஆம் ஆண்டு முதுகலை(எம்.ஏ.) பட்டமும் பெற்றார்.
பின்னர் ‘தமிழில் வினைச் சொற்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து கீழ்த்திசைமொழி  முதுகலைப்பட்டம் (எம்.ஓ.எல்.)பெற்ற இவர், ‘தமிழில் அகத்திணைக் கொள்கை’ என்ற தலைப்பை ஆய்வுக்கு எடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றார்.
1941 தொடக்கம் 1948 வரை மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 7 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியற்றினார். அப்பொழுது விரிவுரை பயின்ற குறிப்பிடத்தக்க இரு மாணவர்களில் ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன், மற்றொருவர் பேராசிரியர் க.அன்பழகன்.
1948 முதல் 1964 வரை 16 ஆண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
1964-1970 ஆகிய 6 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார் மாணிக்கனார். அப்பொழுது அக்கல்லூரியின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
பின்னர் 1970 தொடங்கி 1977 வரை 7 ஆண்டுகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, இந்திய மொழிப்புல முதன்மையாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றி இருக்கிறார்.
1979 முதல் 1982 வரை மூன்று ஆண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றினார்.
இங்கு தமிழ்மொழியின் வளர்ச்சி, அறிவியல் துறை வளர்ச்சிக்கான இவரின் பணியை அப்போதைய தமிழக அரசு பெரிதும் பாராட்டியுள்ளது.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற வ.சுப.மாணிக்கனார், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லூரியில் திராவிட மொழியியல் கழகத்தின் முதுபேராய்வாளராக இருந்து சிறப்பு வாய்ந்த இருநூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.
 அவ்விரு நூல்களுள் ஒன்று ‘தமிழ் யாப்பில் வரலாறும் வளர்ச்சியும். மற்றொன்று “தொல்காப்பிய ஆய்வு!’
பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் பல்வேறு நூல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில நூல்கள் வருமாறு:
எழுத்துச் சீர்திருத்தம் எங்கே போகிறது, – தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும்,- மொழி மரபும், – தொல்காப்பியப் புதுமை,  தொல்காப்பியத் திறன், – தொல்காப்பியக் கடல், வள்ளுவம், ஒப்பியல் நோக்கு,- திருக்குறள் சுடர், – திருக்குறள் தெளிவுரை  (மாணிக்கவுரை).
இம்மட்டுமன்று  The Tamil Concept of Love, A Study of Tamil Verbs, Collected Papers, Tamilology ஆகிய ஆங்கில, நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இவரின் நூல்கள் 2006 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
பேராசிரியர் மாணிக்கனார் அவர்கள் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகப் புலவர்குழுத் தலைவராக இருந்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுத்  தலைவராகவும் இருந்து இவைகளின் மூலம் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியிருக்கின்றார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரின் தமிழ்ப்பணிக்காக இவருக்குச் சிறப்பு முனைவர் (டி.லிட்.) பட்டம் வழங்கி உள்ளது.
முதுபெரும் புலவர் எனற விருதை குன்றக்குடி அடிகளார் வழங்கி இருக்கிறார்.
இவரின் சொந்த ஊரான மேலைச்சிவபுரியில் இயங்கி வந்த சன்மார்க்க சபை இவருக்குத் ‘தமிழச் செம்மல்’ என்ற சிறப்பு விருதை வழங்கி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் மறைவிற்குப் பின்னர், இவரைப் போற்றும் விதமாக இவருக்குத் ‘திருவள்ளுவர்’ விருதை வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
இவரின் மறைவுக்குப் பின்னர், இவர் எழுதிவைத்த இறுதிமுறியின்(உயிலின்)படி, சொந்த ஊரான மேலைச் சிவபுரி அறக்கட்டளைக்கு ஒருகுறிப்பிட்ட தொகை இவரின் சொந்தப்பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டு உள்ளது.
அதுபோல மேலைச்சிவபுரியில் சாதி மதவேறுபாடு இன்றி எல்லாக் குழந்தைகளின் உடல்நலம் பேண மருத்துவ உதவிக்காகவும் இவரின் பணத்தில் ஒரு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இதே வழியில் சாதி மத வேறுபாடு இன்றி குழந்தைகளின் கல்விக்காக உதவும் பொருட்டும் கணிசமான தொகை ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
இவரால் சேர்ந்து வைக்கப்பட்டிருந்த 4500 நூல்களைத் தான் பணியாற்றிய காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்.
 தன் ஆசிரியர் பண்டிதமணி கதிரேசனாரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக ஆக்கியவர். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் மூலம் பண்டிதமணியின் நூல்களைப் பதிப்பித்தவர். பண்டித மணியின் சொந்த ஊரான மதிபாலன் பட்டியில் அவருக்குச் சிலை அமைத்த அவரின் மாணவர் – தமிழுலகப் பேரறிஞர் பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தி.பிப. 2020 சித்திரை 13 ஆம் நாள் – 1989ஆம் ஆண்டு ஏப்பிரல் 25ஆம் நாள்,புதுவையில் இரவு 11 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
எழில்.இளங்கோவன்