திருவள்ளுவர்: 1


சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து துணிதல் எளிதன்று. எனினும், சங்க நூல்களிலும் பழைய பாட்டுக்களிலும் கிடைக்கும் சில குறிப்புக்கள் வள்ளுவர் சரித முழுதையும் திரட்டித் தராவேனும், தற்காலத் தமிழுலகில் வழங்கிவரும் அவர் கதையின் உண்மையை ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவையிற்றை உற்றுநோக்குங்கால். பிரஸ்தாபக் கதைகளில் நம்பிக்கை நலிவடையக் காண்போம்.
வள்ளுவரின் காலம், ஊர், குடியிருப்பு, சமயம் முதலியவற்றைப் பலரும் பலபடியாகப் பேசிவருகின்றனர். இவை பற்றிய தற்காலச் செய்திகளுக்கு உள்ள ஆதரவுகளைச் சிறிது விசாரிப்போம்
 கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கப் புலவர் இறுமாப்பை யடக்கின அவதார புருடர் வள்ளுவர் என்பார் பலர். இறவாப் புகழுடைய தம் குறணூலைக் கடைச் சங்கத்தில் அரங்கேற்றவந்த வள்ளுவரைப் புறக்கணித்து, அவர் தம் அரிய நூலையும் அவமதித்த சங்கத்தாரை வள்ளுவர், தம் தெய்விகத்தன்மையாற் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி அலமரச் செய்ததாயும். புலவர்கள் வள்ளுவரையும் அவர்தம் குறணூலையும் புனைந்துபாடித் தம்முயிரை இரந்து பெற்றதாயும் குறட்புகழின் பிறப்பே சங்கப் புகழின் இறப்பாக முடிந்ததென்றும் கதைப்பார் பலர் கதைக்கின்றனர். சில தலைமுறையாகப் புலைமை இரத்தக் கலப்புடைய பார்ப்பான் ஒருவனுக்கும், புலைப்பிறப்பும் பார்ப்பன வளர்ப்புமுள்ள கீழ்மகள் ஒருத்திக்கும் பிறந்த சிறார் எழுவருள், கடைமகவே வள்ளுவரென்றும், குறிசொல்லுபவரும் பறையருக்குப் புரோகிதருமான் வள்ளுவ வகுப்பினரால் வளர்க்கப்பெற்றமையின் வள்ளுவரென்பது இவருக்குக் காரணப் பெயராயிற்றென்றும். இவர் மயிலாப்பூர் வணிகனான ஏலேலசிங்கனால் வறுமை வருத்தங்கள் நீக்கப்பெற்று வாசுகியென்னும் வேளாண் மகளை மணந்து வாழ்ந்து மதுரைச் சங்க வீறழித்துப் பேறுபெற்றாரென்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம். இவற்றுள் ஒன்றுக்கேனும் பழநூலாதரவு இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்குஞ் சில பண்டைக் குறிப்புக்களும் இக்கதைகளின் பொய்ம்மைகுறிக்கக் காண்கின்றோம்.
முதலில், வள்ளுவர் மூன்றாஞ் சங்கத்தை முற்றுவித்த வரலாற்றின் உண்மையைச் சிறிது துருவியாராய்வோம். குறட்சுவடிகளிற் காணப்படும் திருவள்ளுவமாலை எனும் புனைந்துரைப் பாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை நடக்கின்றது. வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப் புலவராற் பாடப்பட்டதுதானா? என்ற வினா நிற்க; அப்புலவர் பாக்களே வள்ளுவமாலையெனக் கொள்ளினும், சங்கப் புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால் வீறடக்கப்பட்டதற்கேனும், அவர் தம் இறவாக் குறணூல் அப்புலவர்முன் அரங்கேற்றப்பட்டதற் கேனும் ஆன்ற சான்று ஏதும் அவ்வள்ளுவமாலைப் பாக்கள் சுட்டக் காண்கின்றிலம். கடைச்சங்கப் புலவராற் பாராட்டிச் சேமித்துவைக்கப்பட்ட நூற்றிரட்டுக்களுள் அப்புலவர் சிலர் புனைந்துரைத்த பாக்கள் காணப்படுகின்றன. கடைச்சங்கத்தார் நூற்றிரட்டுக்களில் திருக்குறளும் ஒன்றென்பது தமிழர் யாவருக்கும் ஒப்பமுடிவதாகும். அத்திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவர் நூல் தலை சிறந்ததென்பதற்கு இடை நெடுங்காலம் பிற பல நூலும் வழக்கிழந்தொழியவும், என்றும் பிரபல நூலாகக் குறள் நின்று நிலவியதே போதிய சான்றாம்.
நாம் அறிந்த சங்கத்திரட்டு நூல்களாவன: பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியன ஆம். இவையனைத்தும் கடைச்சங்கப் புலவரியற்றியனவும் அவர்க்கு முற்பட்ட புலவர் இயற்றியவற்றுள், சேமித்து வைக்கத்தக்க சிறப்புடையனவாகக் கடைச் சங்கத்தாரும், பிறரும் கண்டு திரட்டியனவுமாக முடியும். இத்திரட்டு நூல்களுள், தகவுமிகவுடைய திருக்குறளின் பெருமை நோக்கிச் சங்கப் புலவரனைவரும் இதனைப் புனைந்து பாடியிருக்கலாம். அன்றி, வேறு சில நூல்களுக்கும் இவ்வாறே அவரனைவரும் சிறப்புக் கவிகள் தந்திருப்பின் அந்நூல்கள் வழக் கிழந்த காலத்தே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இறப்பின் வாய்ப்பட்டும் இருக்கலாம். குன்றாவழக்குடைக்குறளொடு அதன் புகழ்மாலைப் பாக்களும் நின்று நிலவி வந்திருக்கலாம். இதனுண்மை எப்படியாயினும், திருவள்ளுவ மாலையில் வள்ளுவர் கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கத்தை வீறழித்த கதை சுட்டுங்குறிப்பு ஒன்றேனும் இல்லை. 
கடைச்சங்கக் கடைநாளிற் றோன்றித் தம் குறணூல் அரங்கேற்றுதலினிடையே வள்ளுவர் மதுரைச் சங்கத்தை அழித்த கதை மெய்யாமேல், புலவர் சங்கமிருந்து இயற்றிய பழம்பனுவல்களிற் குறளடிகள் குறிக்கப்படக் காரணமில்லை. மூன்றாஞ் சங்கப்புலவர் நூல்களிலேயே சுட்டப்படமுடியாத பின்வந்த திருக்குறளருந்தொடர்கள், அச்சங்கத்தாருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்து அவராற் பாராட்டிச் சேமித்துப் பாதுகாக்கப்பட்ட பழந்தொகைப் பனுவல்களிற் சுட்டப்படுமாறில்லை யென்பது ஒருதலை. ஆனால் மதுரைச் சங்கச் சதுரர் நூல்கள் பலவற்றுள்ளும், அவர் போற்றுதற்கான அவருக்கு முற்பட்ட மிகப்பழைய தமிழ்த் திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவரும் அவரற நூலும் பலவேறிடங்களிலும் பாராட்டப்பட நாம் காணுங்கால், வள்ளுவரை அப்படிப்பாராட்டியெடுத்தாளும், பாவலருக்கு அவர் சம காலத்தவராதல் வேண்டுவதொன்று; அன்றேல் முன்னோராதல் வேண்டுவதொன்று; இஃதன்றிக் காலத்தாற் பிந்தியவராகக் கருதற் கிடமில்லையன்றோ!
தமக்கு முற்பட்ட இடைச்சங்கச் செய்யுளும் பிறவுஞ் சேர்த்துக் கடைச்சங்கத்தார் திரட்டிய கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய நூல்களிலும் குறளை மதிப்புடன் எடுத்தாளக் காண்கின்றோம். குறளடிகள் இவ்வாறு கடைச்சங்கப் புலவராலும் அவர்க்கு முற்பட்ட புலவராலும் எடுத்தாளப்பட்டதுமட்டுமில்லை: குறள் வாக்கியங்கள் அறத்தெய்வக்கூற்றாயும் வள்ளுவர் மெய்த்தெய்வப் புலவராயும் அவர் பலராலும் வாயார வாழ்த்தப்படவும் காணும் நாம், வள்ளுவர் அவர்க்குச் சமகாலத்தவரென்று கொள்ளுதலினும் அவர்க்கு முற்பட்டவராகக் கருதலே சால்புடைத்தாம். புலவரெவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும் தாமியற்றிய நூலின் மெய்ப் பெருமைவலியாற் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவருலகியல்பு.
(தொடரும்)
நாவலர் சோமசுந்தர பாரதியார்