சங்கக்காலச் சான்றோர்கள்   4

வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய் (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன் மலை. அரணின் ஆற்றலும் மலையின் வளனும் ஒருபுறமிருக்க, பாரியின் படை வலியும் நெஞ்சுரனும் மாற்றார் நெஞ்சை நடுங்கச்செய்யும் தகைமையன. ஆம்! கலைஞர்கள் நடுவண் கருணையே வடிவெடுத்துக் காட்சி தரும் பாரி, பகைவர் நடுவண் இருள் கொல்லும் கதிரவன்போல விளங்கும் இயல்பினன். அதனாலன்றோ அவன், ‘அண்ணல் யானை வேந்தருக்கு இன்னானாகி அப் ‘பண்பிற் பகைவர் ஓடுகழற் கம்பலை கண்ட செரு வெஞ்சேஎய்’ ஆகவும்,
ஆளிடூஉக் கடந்து வாளமர் உழக்கி
ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி ‘         (அகம். 78)
ஆகவும் காட்சியளித்தான்? இத்தகைய ‘கூர்வேற்குவை இய மொய்ம்பு’டைய வேள் பாரியின் பெரும்பெயர்ப் பறம்பை அவன் அருமை அறியாது மூவேந்தரின் வலம் படுதானை பண்பின்றிப் பல்லாண்டுகள் முற்றுகையிட்டது. முற்றுகையிட்ட மூவேந்தரின் படை அளவிலும் ஆற்றலினும் மிக்கதாயிருப்பினும், அது குறித்துப் பாரியோ, அவன் நாட்டு மக்களோ, நெஞ்சு கலங்கினாரில்லை. ‘கைவண் பாரியின் வெள்ளருவி கறங்கும் நெடு வரை, உழவர் உழாமலே நான்கு பயனுடைத்து,’ என்பது வையக மெல்லாம் அறிந்த வாய்மை அன்றோ? அம் மலை வாழ் பறவைகளும் அச்சமின்றிக் காலையில் பறந்து சென்று மாலையில் செந்நெற்கதிர்களைச் சேர்த்துக் கொணரும். இக்காட்சியினை,
… …. ‘பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினங் காலப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇய ரோராங்(கு)
இரைதேர் கொட்பின ஆகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு         (அகம், 303)
என்று ஒளவையாரும் அழகுறப் பாடியுள்ளார். இவ்வாறு ஒரறிவு உயிர்களும் ஆறறிவு உயிர்களும் அச்சமின்றி இருந்த அந்நிலையில் நெடுமாப்பாரியின் உயிரனைய நட்புடைய கபிலர் பெருமானார் பாரி வேளின் பறம்பு மலையை முற்றுகையிட்டிருந்த பகை மன்னரை நோக்கிக் கூறியவற்றை அறிவிக்கும் பாடல்களைப் படிக்குக்தோறும் நம் மனம் எத்துணை இறும்பூது எய்துகின்றது!
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், 
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், 
தாளிற் கொள்ளலிர், வாளிற் றாரலன்; 
யானறி குவனது கொள்ளு மாறே : 
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி 
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர 
ஆடினிர் பாடினிர் செலினே 
நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே.’         (புறம், 109) 
‘கடந்தடு தானை மூவிருங் கூடி 
உடன்றணி ராயினும் பறம்புகொளற் கரிதே! 
முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு; 
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்; 
யாமும் பாரியும் உளமே; 
குன்று முண்டுநீர் பாடினிர் செலினே.’         (புறம்.101)
‘அளிதோ தானே பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே!
நீலத் திணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே.’         (புறம்.111) 
என்று கபிலர் பாடும் பாடல்களில், ‘முந்நூறு ஊர்களை உடையது தண்பறம்பு நன்னாடு. அம்முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர்,’ என்றும், எஞ்சியிருப்பவர் தாமும் பாரியும் குன்றுமே என்றும், ‘அக்குன்றினைக் கைப்பற்றப் பரந்து கிடக்கும் பார் முழுதும் தேரைப்பரப்பியும் மரந்தோறும் களிற்றைப் பிணித்தும் எத்துணை அரும் பாடு பட்டாலும் தேர்வண்பாரி கூர்வேலுக்கஞ்சி அதை ஒரு நாளும் கொடுக்கமாட்டான்,’ என்றும், ‘ஆனால், வாளையும் வேலையும் வீசி எறிந்துவிட்டு, வாள் பிடித்த கையால் வையத்தின் நெஞ்சுருக்கும் யாழ் பிடித்து, நீல மலர் போலும் கோல விழி படைத்த விரையொலி கூந்தல் விறலியர் பின் வர ஆடியும் பாடியும், பொன்னும் மணியும் முத்தும் பவளமும் தேனும் பலாவும் சிந்திக் கிடக்கும் அவன் முற்றத்திற்குச் சென்றால், நாட்டையும் குன்றையும் எம்மையும் எம் தலைவனையும் ஒருங்கே பெறலாம்,’ என்றும் எத்துணை இறுமாப்புடன் இகல் வேந்தர் சிறுமையும், இசை வள்ளல் பாரியின் பெருமையும் தோன்ற அவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்!
ஆயினும், என்ன பயன்? பாரியோ, ஒருவன். ‘அழுக்காறு என ஒரு பாவி’ படைத்த பேரோ, மூவர். முற்றுகையோ, பல காலம் நடைபெற்றது. என் செய்வர் மாந்தர்! ‘பாறையும் குவடும் பாதுகாப்பாய் விளங்க, பிறை மதியின் வளைவு போலும் கரையுடைய தெளிந்த நீர் படைத்த சிறுகுளம் உடைந்து நாசமாவது போல நம் நாடும் வாழ்வும் ஆகுமோ!’ என்று அஞ்சிக் கலங்கினர். இந்நிலை கண்டான் வேள் பாரி; ஆற்றொணாக்கோபம் கொண்டான். ஓவத்தன்ன தன் வினை புனை நல் இல்லினைத் துறந்து, புலியெனப் பாய்ந்து, போர்க்களம் சென்றான்; ஒருவனை எதிர்க்க மூவராய் ஒருங்கு வந்துள்ள பொறாமைப் பேயர்களை எதிர்த்துப் போர் முரசு கொட்டினான்; வீரப் போர் புரிந்தான்; மாண்டான்! ஆம்! அறத்தை நம்பினான் பாரிஅந்த அறத்தினாலேயே வீழ்ந்தான் அழியாப் புகழ் பெற்றான். அம்பை நம்பினர் அம்மூவேந்தர்; அதனாலேயே வென்றனர்; அழியாப் பழியும் எய்தினர்
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள்