நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : 10

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 9. தொடர்ச்சி)

3. ஔவையார்



இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயர் இத் தமிழ்நாட்டின்கண் அறிவுக்கே பரியாயநாமம்போலச் சிறந்து தொன்றுதொட்டே ஆண் பெண் இளையர் முதியர் என எல்லாரானும் வழங்கப்படுவதொன்று. ஒரோ ரினிய முதுமொழியை எடுத்தோதி, அதனை ‘ஔவை வாக்கு’ என்றும் ‘ஔவைவாக்குத் தெய்வவாக்கு’ என்றும், ‘ஆயிரம் பிள்ளை பெற்ற ஔவையார்’ என்றும் பலவாறாக வழங்குதல் இன்றைக்குங் காணலாம். ஈண்டு ஆயிரம் பிள்ளை யென்றது இவர் பாடியருளிய பலவாய பாடல்களையே குறிப்பதாகும். ‘செல்வப் புதல்வனே யீர்ங்கவியா’ என்றார் பிறரும். ஆயிரம் – உபலக்கணம். இனிய எளிய தொடரில் அரிய பெரிய உறுதிகளை அமைத்து யாவர்க்கும் புலங்கொள உரைப்பது இவர்க்கியல்பு என்பது, ‘அறஞ்செய விரும்பு’, ‘அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்’ என்பன முதலாக இவரருளிச்செய்த அறவுரைகளாற் றெற்றென விளங்கும். இத்தகைக் கல்விவண்மையானன்றே இவரைக் கற்றோரே யன்றி மற்றோரும் எளிதினறிந்து பாராட்டுவாராயினர். இவ்வாறு யாவரும் பரவும் மேவருஞ் சிறப்பினையுடைய ஔவையா ரென்னும் அருந்தமிழ்ச் செல்வரின் பெரிய வரலாற்றைப் பண்டைத் தண்டமிழ் நூல்களையே பெருந் துணையாக்கொண்டு யான் றெரிந்த அளவால் ஈண்டெடுத்தோதலுற்றேன்.

இவரது பிறப்பு வரலாற்றைப்பற்றி ஆராயுமிடத்துப் பழைய கதையொன்று காணப்படுவது. அஃதாவது, ‘யாளிதத்தன் என்னும் பார்ப்பானொருவன், தன்னாலே பார்ப்பனி யெனக் கருதிக்கொள்ளப்பட்ட புலைச்சி யொருத்தியை மணந்து, கபிலர் முதலாக எழுவர் மக்களை இவ்வுலகிற்றந்தனன்; அவருள் இவ்வெளவையாரும் ஒருவர் என்பது. இஃது இற்றைக்கு நானூறு வருடங்கட்கு முற்பட்டதென்று தெரியப்படுகின்ற ஞானாமிர்த நூலுள் ‘அறப்பயன் றீரின்’ என்னும் அகவலுள்,

‘யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி
காதற் சரணி யாகி மேதினி
யின்னிசை யெழுவர்ப் பயந்தோ ளீண்டே’

என்பதனானும், இதனுரையுள், ‘யாளிதத்தன் தனக்கு விகிர்தமாய்த் தன்னானே வெட்டுண்டு கிணற்றில் வீழ்த்தப்பட்ட அறிவில்லாத சண்டாளப்பெண்ணை ஒரு பிராமணன் எடுத்துக்கொண்டுபோய் உத்தரபூமியில் வளர்த்து, இவனுக்கே பின்னர்க்கொடுக்க, இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இந்நிலவுலகின் கண்ணே இனிய கீர்த்தி பெற்ற கபிலர் முதலிய பிள்ளைகள் எழுவரை ஈங்குப் பெற்றாள்’ எனக் கூறுதலானும் அறியப்பட்டது. இக் கபிலர் முதலாகிய எழுவர் இவரென்பது,

கபில ரதிகமான் காற்குறவர் பாவை
முகிலனைய கூந்தன் முறுவை–நிகரிலா
வள்ளுவ ரவ்வை வயலூற்றுக் காட்டிலுப்பை
[*] யெண்ணி லெழுவ ரிவர்.

[* ‘எள்ளி லெழுவர்’ எனப் பாடங்கொள்ளினும் இழுக்காது.]

என்னும் ஒரு பழைய வெண்பாவினால் நன்று தெளியப்படுவது. இவ்வெழுவருட் கபிலர் அதிகமான் வள்ளுவர் மூவரும் ஆண்மக்க ளெனவும், குறவர்பாவை முறுவை ஒளவை உப்பை நால்வரும் பெண்மக்க ளெனவும் கூறுப. இவ்வெழுவர்மக்களுட் கபிலர் அதிகமான் வள்ளுவர் ஒளவை என்னும் நால்வர்வரலாறுகளே பண்டைத்தமிழ் நூல்களான் ஒருவாறு உணரப்படுவன. இவர்கள் பெயர் பொறித்துள்ள பழைய பாடல்கள் சிலவற்றாலும் பிறவற்றாலும் இந்நால்வரும் வேறு வேறு குடியினர் இடத்தினர் என்பது செவ்வனதந் தெளியப்படுவது.

‘யானே, பரிசிலன் மன்னு மந்தணன்’ (புறம்.200)
‘அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே’ (புறம்.201)
‘புலனழுக் கற்ற வந்த ணாளன்’ (புறம்.126)

என்பனவற்றால் கபிலர் அந்தணராவர். ‘மழவர் பெருமகன்’ (புறம்.86), ‘அதியர் கோமான்’ (புறம் 91) என்பனவற்றால் அதிகமான் மழவரெனப் பெயரிய ஒருவகை வீரர்பாற்பட்ட அதியர் குடியின னாவன். வள்ளுவரென்னும் ‘பெயரானும், ‘மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை’ (திருவள்ளுவமாலை) என்பதனானும் வள்ளுவர் முரசறைந்து அரசாணை சாற்றும் முதுக்குடியினராவர். செய்தி சாற்றுதல் வள்ளுவர் குடித்தொழிலென்பது செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் (குறுந்தொகை-228) என்னும் பெயரானுந் தெளியப்படும். இக் ‘கபிலரதிகமான்’ என்னும் வெண்பாவானே இவ்வெழுவருள் ஒருவர் குறவர்குடியினர் என்பதும் அறியலாகும்.

‘மடவர லுண்கண் வாணுதல் விறலி
பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
வினவ லானாப் பொருபடை வேந்தே
யெறிகோ லஞ்சா வரவி னன்ன
சிறுவன் மள்ளரு முளரே யதா அன்று
பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பி
னதுபோ ரென்னும் என்னையு முளனே.’ (புறநானூறு.89)

 

[மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன  

சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண் கண் கேட்பின்,

‘அது போர்’ என்னும் என்னையும் உளனே]

இஃது அதிகமா னெடுமா னஞ்சியை ஔவையார் சிறப்பித்துப் பாடியது. இப்புறப்பாட்டினை ஔவையார் தம் பெயர் கூறாமலே தம்மை வினாவிய வேந்தற்கு விடையாகக் கூறியதெனக் கொள்ளலே ஏற்புடைத்தாகும். அங்ஙனம் கொள்ளின், ஔவையார், பாணர் விறலியர் என்னும் பகுதியினராவர். விறலியர் – விறல்பட ஆடலும் பாடலும் வல்லவர். இவர்க்குப் பாடலுஞ் சிறந்ததென்பது,

‘சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
பாரி வேள்பாற் பாடினை செலினே’ (புறம். 105)

என்னும் கபிலர் பாட்டானும் உணர்க. இவர் விறலியென்பதற்கேற்ப ‘வாயிலோயே வாயிலோயே’ என்னும் புறப்பாட்டினுள் (206), ‘காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை ‘ எனத் தஞ்செய்தி கூறியவாற்றான், இவர் யாழ் முதலிய இசைக்கருவியுடையராதலையும், அதிகமான் தூதுவிடத் தொண்டைமானுழைத் தூது சென்றமையினையும் (புறம்.95) ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. முற்காலத்துப் பாணர் கூத்தர் விறலியர் முதிலியோரெல்லாம் கல்விகேள்விகள் நிரம்பினவராய்ச் சுவை பெரிது பயப்பச் செய்யுள் செய்தலினும் வல்லவராயிருந்தனர். பாண்டிய னொருவன் கழைக்கூத்துப் பார்க்குமிடத்துப் பராமுகமாக, கூத்தாடினவள் கோபித்துக் கொண்டு விழுங்காற் பாடிய

மாகுன் றனையபொற் றோளான்
வழுதிமன் வான்கரும்பின்
பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப்
பார்த்திலன் பையப்பையப்
போகின்ற பள்ளினங் காள்புழற்
கோட்டம் புகுவதுண்டேற்
சாகின் றனளென்று சொல்லீ
ரயன்றைச் சடையனுக்கே.

[*இதனைப் ‘பாகொன்று சொல்லி’ என்னுந்தொண்டைமண்டல சதகச் செய்யுளானு முணர்க.]

என்னும் தமிழ்நாவலர்சரிதைப்பாட்டும் இக்கருத்தை வலியுறுத்தும்.

இனிக் கபிலர் வாதவூரிற்[+] பிறந்துவளர்ந்து பெரும்பாலும் பாரியுடைய பறம்பின்கண் வதிந்தனர்.

+++
    [+] ப்ரும்மஸ்ரீ உ.வே.சாமிநாதையரவர்கள் ஐங்குறுநூற்று முகவுரை, பக்கம் – 12]

+++

(தொடரும்)