நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 6.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 5. தொடர்ச்சி)
இனி, இவர் தந்தலைவனைப் பிரியலுற்றுழிப் பாடியருளிய இக் ‘கன்று முண்ணாது’ என்னுஞ் செய்யுளொன்றே இவரது நல்லிசைப் புலமையினை நன்கு புலப்படுத்தும். இது சொல்லானும் பொருளானும் சுவை பெரிது பயப்பதென்பது ஆய்ந்தறியத்தக்கது. கன்று வயிறாரவுண்டபின்னே கலத்திற் கறத்தல் அறமென்னுங் கருத்தாற் கன்ருண்டலை முன்னும் கலத்திற்படுதலைப் பின்னும் வைத்தோதினார். ‘கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்’ என மணிமேகலை துறவினும் (அறவணர்த்தொழுதகாதை), ‘கன்றருத்தி மங்கையர் கலநிறை பொழிதர’ எனச் சிந்தாமணியினும் (நாமகள் -110), கூறுதல் காண்க.
‘விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாட் டொட்டுச் சிறந்தன் றீம்பா
லறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்‘
[மணிமேகலை ஆபுத்திரன்றிற மறிவித்தகாதை.
விடுநிலம் – மக்களால் விளைவிற்குதவாமல் விடப்பட்ட நிலம்.]
தன்மைத்தாகலின் ‘நல்லான்’ என்றார். நல்லான் றீம்பால் கன்று முண்ணாமற் கலத்தினும்படாமல் வெறிதே நிலத்தே உகுந்தொழிந்தாற் போல எனது மாமைநிறத்தொடு கூடிய அழகு எனக்குமாகாமல் என் தலைவற்கும் உதவாமற் பசலையான் உண்டு கழிய வேண்டும் என்றார் என்க. என்னை என்பது,
‘என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்’
என்புழிப் போல, என்றலைவன் என்னும் பொருட்டு. பொருண்மேற் சேறல் முதலாயின மனைவியோ டில்லை என்பதனால், மகளிர்க்கு இவ்வரிய பிரிவுத்துயர் அநுபவித்தலே யுறுவது என்னுங் கருத்தால், ‘வேண்டும்’ என்று கூறினார். இவ்வாறு இவர் பாடியருளிய செவ்விய கூரிய தீஞ்சொல் வவ்விய பாடல்கள் நற்றிணையில் 3-ம், குறுந் தொகையில் 8-ம், நெடுந்தொகையில் 2-ம், திருவள்ளுவமாலையில் 1-ம், ஆகப் பதினான்குள்ளன. இவற்றுள், ‘வாடபடுபுல் – ஒருவர் முயற்சியானன்றித் தானே யுண்டாய புல். அப்புல்லும் விளைத்தாற்போல யாண்டும் ஒத்துண்டாகாமையான் ‘மருங்கின்’ என்றார். ஆர்ந்து-ஒருவர் கொணர்ந்திடுதலின்றித் தானே சென்று மேய்ந்து எ-று. ‘நெடுநில மருங்கின் மக்கள்’ என்றதனால் அங்ஙனம் விட்ட நிலமும் மிகச் சிறிதாதலறியப்படும். மக்கட்கெல்லாம் என்றது, குழவிமுதல் முதியோரிறுதியாக எல்லா மக்கட்கும் எ – று. பிறந்தநாட் டொட்டு அம்மக்கள் தோன்றிய நாட்டொடங்கி. இதனாற் சாந்துணையும் என்பது கூறாமலுணரப்படும். கொலையுந் துன்பமு மில்லாமல் எய்தவருந் தீவிய உணவாதலாற் ‘சிறந்ததன் றீம்பால்’ என்றார். தான் புல்லை யுண்டும் பிறர்க்கு இனிய பாலை யளித்தலின், ‘அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்’ என்றார் என வுணர்க.
‘லுழுஞ்சில்’ என்னும் நெடுந்தொகைச் செய்யுட்கண் இவர், திதியன் என்பவன் குறுக்கை யென்னும் ஊர்ப்புறத்து [*] அன்னியொடு பொருது அவ்வன்னியின் காவன்மரமாகிய புன்னையினை வேரொடு தடிந்த கதையினையும், காதலற்கெடுத்த ஆதிமந்தி கதையினையும், [#] சேரனொருவன் வேலாற் கடலோட்டிய கதையினையும் எடுத்துக்கூறியுள்ளார்.
———————————————————————————
[*] இவ்வன்னியுடைய ஊர் அன்னியூர். அது, தேவாரத் திருப்பதிகளுள் ஒன்று.]
[#] இவன் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன். (புறம். 366) ]
————————————————————————————
திருவள்ளுவமாலையுள்,
‘செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே–செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.’
என்பது இவர் பாடியது. இதன்கண் வேதத்தினைச் செய்யாமொழி என வழங்கியதனால், இவர் வேதம் நித்தியமெனவுங் கருதிய கோட்பாடுடையரென்பதறியப்படுவது. இவ்வெண்பாவானே இவர் வேதவழக்கொடுபட்ட கொள்கையினரென்பதும் எளிதினுணரத்தகும். திருக்குறளைப் பொய்யாமொழி என்னும் பெயரான் வழங்கினாரும் இவரே யாவர். இவர்,
‘காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதி மந்திபோலப் பேதுற்
றலந்தனெ னுழல்வேன் கொல்லோ’
(அகநானூறு-45)
என்பதனால், இவர் ஆதிமந்தியார்க்குப் பிற்பட்ட காலத்தவர் என்பதும், ஔவையார், ‘வெள்ளி வீதியைப் போல’ (அகநானூறு-147) என்பதனால் அவ் வௌவையாருக்கு முற்பட்ட காலத்தவரென்பதும் நன்குணரத்தகும். இவரது நல்லிசைப் புலமையின் பல்வளம் பலருமறிய இவரது இன்பப்பகுதியின் பொருட்பாடல்களை ஈண்டுத் தருகின்றேன். இவற்றானும் இவர் தங்கணவனைத் தேடி எங்கும் உழன்றமை ஆராய்ந்து கொள்க.
(தொடரும்)
No comments:
Post a Comment