நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 9.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 8. தொடர்ச்சி)
அகநானூறு
(12) வாட லுழுஞ்சில் வளைநெற் றந்துண
ராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக்
கோடை நீடிய வியன்பெருங் குன்றத்து
நீரி லாராற்று நிவப்பன களிறட்
டாளி லத்தத் துழுவை யுகளுங்
காடிறந் தனரே காதலர் மாமை
யரிநுண் பசலை பாஅய்ப் பீரத்
தெழின்மலர் புரைதல் வேண்டு மலரே
யன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
றொன்னிலை முழுமுதற் றுமியப் பண்ணிப்
புன்னை குறைத்த ஞான்றை வயிரிய
ரின்னிசை யார்ப்பினும் பெரிதே யானே
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதி மந்தி போலப் பேதுற்
றலந்தனெ னுழல்வென் கொல்லோ பொலந்தார்க்
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்
வான வரம்ப னடன்முனைக் கலங்கிய
வுடைமதி லோரரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே.
என்பது, வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (45)
[ வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகள பறையின் அரிப்பன ஒலிப்ப
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணி
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போல பேது உற்று
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார்
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனை கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே ]
(13) பாம்புடை விடரபனிநீ ரிட்டுத்துறைத்
தேங்கலந் தொழுக யாறுநிறைந் தனவே
வெண்கோட் டியானை பொருத புண்கூர்ந்து
பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய
முருக்கரும் பன்ன வல்லுகிர் வயப்பிணவு
கடிகொள வழங்கா ராறே யாயிடை
யெல்லிற் றென்னான் வென்வே லேந்தி
நசைதர வந்த நன்ன ராள்
னெஞ்சுபழு தாக வறுவியன் பெயரி
னின்றிப் பொழுதும் யான்வா ழலனே
யெவன்கொல் வாழி தோழிநம் மிடைமுலைச்
சுணங்கணி முற்றத் தாரம் போலவுஞ்
சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பி
னிலங்குவெள் ளருவி போலவு
நிலங்கொண் டனவாற் றிங்களங் கதிரே.
என்பது, இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.(362)
[ பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்
நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே ]
(14) ‘செய்யாமொழி’
(திருவள்ளுவமாலை-23)
பொருள் விரித்துணருந் தெருளுடைய மனத்தர்க்கெல்லாம் இப்பதினான்கு பாடல்களும் பதினான்குலகேயாம் எனின் அது வியப்பன்று; இத்துணையுங் கூறியவாற்றான் வெள்ளி வீதியார் வரலாறு ஒருவாறு உணரப்படும்.
(தொடரும்)
No comments:
Post a Comment