நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 8.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 7. தொடர்ச்சி)

 

(6) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
நிறுக்க லாற்றினே நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையி லூமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெ யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோண்டுகொளற் கரிதே.

இது கழற்றெதிர்மறை. (58)

 [இடிக்கும் கேளிர் நும் குறை ஆக

நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல

ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போல                                  

பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே]

(7) நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே.

[* இதனானும் இவ் வெள்ளிவீதியார் தங்கணவனைத் தேடியுழன்றமை நன்குணரப்படும்.]

[நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரிற்

கெடுநரும் உளரோநம் காதலோரே.]

இது பிரிவிடையழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது: நீ யவர் பிரிந்தாரென் றாற்றாயாகின்றதென்னை? யான் அவருள்வழி யறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

ஒளியிழந்தமையினையும் விசும்பின் மீனிற் பலர்பிறரைக் கண்டும் அவ்விசும்பிற் றிங்கள் போன்ற தம் கணவனைக் காணாமல் உழன்றமையினையுமே இது குறிப்பதென்று கொள்க. இவ்வாறே தருமிக்குப் பொற்கிழியளிப்பான் வேண்டிச் செண்பகமாறன் உளக்கருத்தமைத்து இறையனாராற் பாடப்பட்ட ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னுஞ் செய்யுளும் இக் குறுந்தொகையிற் கோக்கப்பட்டு அகத்திணைக் கேற்ற துறைவகை பெறுவதும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க.

தோழி தூதுவிடுவாளாகத் தலைமகள் தனதாற்றாமையாற் கூறியதூஉமாம். (130)

(8) அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களொ
டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

[அம்ம வாழி தோழி நம் ஊர்

பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ

தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர்

நன்று நன்று என்னும் மாக்களொடு

இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே]

இது தலைமகன்றமர் வரைவொடு வந்து சொல்லாடா, நின்றுழி வரைவு மறுப்பவோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. (146)
(9) அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டமர்ந்தன்று மன்னே யினியே
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைநில் லாதே.

இஃது உடன்போக்குணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (149)

[அளிதோ தானே நாணே நம்மொடு

நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே

வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை

தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு

தாங்கும் அளவை தாங்கி                      

காமம் நெரிதர கை நில்லாதே]

(10) சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென விறீஇயரோ வைய மற்றியா
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல
வெமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.

இது கற்புக்காலத்துத் தெளிவிடை விளங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூஉமாம். (169)

[ சுரம் செல் யானை கல் உறு கோட்டின்

தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்

நும்மொடு நக்க வால் வெள் எயிறே

பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல

எமக்கும் பெரும் புலவு ஆகி                          

நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே]

(11) வெண்மணல் விரிந்த வீததை கானற்
றண்ணந் துறைவன் றணவா வூங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டு
மாலையோ வறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கனொடு
புலம்புடைத் தாகுத லறியேன் யானே.

இது பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்தது. (386)

[ வெண் மணல் விரிந்த வீ ததை கானல்

தண்ணம் துறைவன் தணவா ஊங்கே

வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும்

மாலையோ அறிவேன்-மன்னே மாலை

நிலம் பரந்து அன்ன புன்கணோடு                   

புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே]

(தொடரும்)