(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 2/3தொடர்ச்சி)

7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 3/3

1945ஆம் ஆண்டில் ‘புதுமை வேட்டல்’, ‘கிறித்துவின் அருள் வேட்டல்’ என்னும் இரு நூல்களும் வெளிவந்தன. இந்நூல்கள் அவர்தம் சமரசப் பற்றினை விளக்க வல்லன. வாகும். 1940ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிவனருள் வேட்டலும்’ 1937ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கிறித்து மொழிக் குறளும்’ உளப் பண்பாட்டினை உயர்த்தும் உயரிய நூல்களாகும். ‘இருளில் ஒளி’ என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் வெளிவந்த நூலாகும். இந்நூலில் ‘எண்ணத்தின் உயர்வே வாழ்வில் ஏற்றத்தைத் தரும்’ என்பதனை நயமுறப் புலப்படுத்தியுள்ளதனைக் காணலாம். தேவைக்கு மேல் ஈட்ட வேண்டும் என்ற சிந்தனையே எல்லாச் சீரழிவுகளுக்கும் காரணம் என்பதனை இந்நூல் உணர்த்துகின்றது.

தேவைக்கு மேலெண்ணாச் சிந்தை உயர்வெண்ணம்
மேவிட உந்திவிடும் மேல்

தேவைக்கு மேல்நினையாச் சித்தம் செகமானால்
யாவும் ஒழுங்குபடும் அன்று
– 
புதுமை வேட்டல்

இந்த ஆண்டிலேயே ‘அருகன் அருகே அல்லது விடுதலை வழி’, ‘இருமையும் ஒருமையும்’ என்னும் இரு நூல்கள் வெளிவந்தன. அடுத்த ஆண்டில் அதாவது 1951ஆம் ஆண்டில் ‘சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்’, ‘முதுமை உளறல்’, ‘பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும்’ எனும் மூன்று நூல்கள் வெளிவந்தன. இவ்வாறு அவர்தம் இறுதிக் காலத்தில் உரைநடை நூல்கள் குறைந்து செய்யுள் நூல்கள் மிகுந்ததற்குக் காரணத்தை அவரே பின் வரும் பாடலில் புலப்படுத்தியுள்ளார்.

அந்த நாட்களில் சிந்தனைப் பொருள்களை
விழிகள் நோக்க எழுதுவன் கையால்;
அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப்
படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது;
பழைய வண்ணம் விழிகள் நோக்க
எழுதும் பேற்றை இழந்தவன் பாவி!
உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன்,
உளறலும் நூலாய் வெளிவரு கின்றது;
ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில்
பழம்பொருள் நூலைப் பகர்ந்தனன் உரையாய்
இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில்
இருளில் ஒளியைக் குறள்வெண் பாவால்
இருமையும் ஒருமையும் அருகன் அருகே
பொருளும் அருளும் மார்க்கிசு காந்தி,
சித்தத் திருத்தல் செத்துப் பிறத்தல்
என்னும் நூல்களைப் பண்ணினன் அகவலால்.
பழைய உரைநடை விழுமிய அகவல்
பின்னே யாப்பணி துன்ன வேய்ந்தது;
உளறும் என் அகவலும் ஒருவித உரையே;
பொழுது படுக்கையில் கழிக்க நேர்ந்தபின்
கடிதில் உரைநடை முடிதல் கண்டேன்;
பாவின் அமைப்போ ஓவியம் ஆகி
உருண்டும் புரண்டும் திரண்டும் நிற்கும்
மொழிநத பின்னும் அழிதல் அரிதாம்;
ஆதலின் பாவால் ஓதலைக் கொண்டேன்
– 
முதுமை உளறல்

‘முதுமை உளறல்’ என்ற நூலிற் காணப்படும் மேற்காணும் பாடல்வழி, திரு.வி.க. கண்பார்வை மங்கி, உடல் மெலிந்து, படுக்கையில் வீழ்ந்து கிடந்த போது அவருடைய சிந்தனை வேகமாகச் சிறகடித்துப் பறந்தபோது, எதுகை மோனையும் சீர் வரையறையும் உடைய செய்யுளில் தாம் எண்ணிய கருத்துகளை எடுத்தியம்புவது அப்பெரியாருக்கு எளிதாக இருந்தது. பார்வை பழுதுபட்ட பிறகு தாமே பேனாப் பிடித்து எழுத முடியாத நிலையில், எண்ணங்களை நெடுநேரம் நெஞ்சில் வைத்துத் தேக்கவும், அதை நினைவோடு காக்கவும், பின் தன்னைக் காண வந்தோரிடம் சொல்லி எழுத்துருவம் பெற வைக்கவும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது செய்யுள் நடையேயாகும். மேலும் திரு.வி.க. அவர்களது புறக்கண்களைப் படலம் மறைத்துப் பார்வை பழுதுற்ற நேரத்தில் இயற்றிய செய்யுள் நூலகள் அனைத்தும் ஒப்பரிய கருத்துகளை, விழுமிய எண்ணங்களை வெளியிடுவன வாகும். கண்ணொளி மங்கிய நேரத்தில் அவர் கருத்தொளி மிகுந்திருந்தது; புறவொளி பாழ்பட்ட நேரத்தில் அகவொளி அமைதியில் பிறங்கிற்று எனலாம். இதனை அவரே,

கண்ணொளி பட்டதும் கருத்தொளி முன்னிலும்
மேலும் விளங்கலைச் சாலத் தெளிந்தேன்;
ஒருபுலன் ஒடுங்கின் மறுபுலம் விளக்கம்
அதிகம் அடைதலின் அதிசயம் இல்லை
– 
முதுமை உளறல்

என்று புலப்படுத்தியுள்ளார்.

அவர் உயிர் நீப்பதன் முன்னர் 1953ஆம் ஆண்டில் இயற்றிய நூல்-இறுதி நூல்-‘வளர்ச்சியும் வாழ்வும்’ என்பதாகும். இந்நூலில் அவர்தம் நைந்த உள்ளத்தினைக் காணலாம்.

மக்கள் வளர்ச்சியில் சிக்கல் உறுதலென்?
பகுத்தறி வுடைய வகுப்போ காரணம்?
செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான்
வளர்ச்சி வாழ்வில் தளர்ச்சி யடைநதது;
மனிதன் என்றோ சலித்து விட்டான்;
காலங் கணித்துக் கோலல் அரிதே
எத்தனை யுகமோஎத்தனை ஊழியோ?
இன்னும் அவன் வாழ் தொன்மை உலகம்
தெய்வ மயமாய் உய்ய வில்லை
சாந்தம் முற்றும் ஏந்த வில்லை
என்ன காரணம்உன்னிப் பார்க்க:
மனிதன் முதன்முதல் இனிது வாழ்ந்தான்
உழைத்தும் உழுதும் பிழைத்து வந்தான்
ஒருவன் பொருளை ஒருவன் கவரும்
கல்வி பயிலாச் செல்வம் பெற்றான்
பொய்யும் அற்ற மெய்யில் நின்றான்
சுரண்டல் வாழ்வில் புரண்டா னில்லை,
பின்னே கெட்டான்என்ன செய்வது,
ஒருவன் பொருளை ஒருவன் கவரும்
இழிவு வளரும் வழியைக் கண்டான்;
கொலையுங் களவுங் கள்ளுங் காமமும்
பொய்யும் வாழ்வில் மொய்த்துக் கொண்டன
சுரண்டல் வாழ்வு திரண்டு மதர்த்தது
செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான்
வளர்ச்சி வாழ்வில் உணர்ச்சி யற்றது.”
– 
வாழ்வும் வளர்ச்சியும்

இந்தப் பகுதியில் உலக மக்கள் இயற்கையைத் துறந்து, செயற்கையைப் பற்றி நின்று, அறந்துறந்து மறம் மிகுந்து வாழும் நெறியல்லா நெறியைக் கண்டிக்கிறார்.

இவ்வாறு திரு.வி.க. அவர்கள் 1931ஆம் ஆண்டு வரையில் இயற்றிய செய்யுள் நூல்களின் எண்ணிக்கை பதினான்காகும். இந் நூல்களில் அவர்தம் பொதுமையுணர்வும், இலக்கிய நெஞ்சமும் இனிது விளங்கக் காணலாம். திரு.வி.க. ஒர் உயரிய கவிஞர் என்பதனை இந்நூல்கள் தெரிவித்து நிற்கின்றன.

1953ஆம் ஆண்டு அவர் இறந்தபோது பி. சிரீ. அவர்கள், ‘பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம்தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம் என்ற கருத்துத் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அவர் ஆற்றிய பணியின் எல்லையை நன்குணர்த்துகிறது.

இலக்கியச் செல்வராய், சமய மறுமலர்ச்சியாளராய், செந்தமிழ்ப் பேச்சாளராய், தொழிலாளர் தலைவராய், நாளிதழ் நாயகராய், அரசியல் தூயவராய் விளங்கித் தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் சீரிய இடத்தைப் பெற்றுச் செம்மாந்து நிற்பவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களே ஆவர்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்