(உ.வே.சா.வின் என் சரித்திரம் 21 தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம் 13
தமிழும் சங்கீதமும்
என் தகப்பனார் சொற்படி பள்ளிக்கூடத்திற் படிப்பதைவிட்டு வீட்டிலேயே படித்து வந்தேன். தெலுங்கு சமசுகிருதம் இரண்டும் என்னைவிட்டுப் பிரிந்து நெடுந்தூரம் சென்றுவிட்டன.
ஒன்றுக்கும் உதவாதவனாக நான் போகக் கூடாதென்ற கவலையினால் நான் ஏதேனும் சீவனத்துக் கேற்ற வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று என் தந்தையார் விரும்பினார். அரியிலூரில் இருந்த தில்லைக் கோவிந்தபிள்ளை என்பவரிடம் என்னை ஒப்பித்துக் கிராமக் கணக்கு வேலையைப் பயிலுவிக்கும்படி வேண்டிக்கொண்டார். நான் அவரிடமிருந்து அவர் சொன்னபடியே நடந்து கணக்கையும் கற்றுவந்தேன்; அட்டையில் கொறுக் காந்தட்டைப் பேனாவால் எழுதும் பழக்கத்தையும் செய்து வந்தேன். இவ்வாறு எழுதிப் பழகுவது அக்காலத்து வழக்கம்.
“தீயினில் மூழ்கினார்”
இங்ஙனம் இருந்து வருகையில் ஒரு சமயம் பெரிய திருக்குன்றத்தில் என் அத்தை குமாரருக்கு உபநயனம் நடைபெற்றது. அதற்கு என் தாய், தந்தையரும் நானும் போயிருந்தோம். பந்துக்களில் பலர் வந்திருந்தனர்.
அந்த விசேடத்தில் ஒரு சங்கீத வித்துவான் வினிகை நடத்தினார். அவர் கோபாலகிருட்டிண பாரதியார் இயற்றிய கீர்த்தனங்களையும் பாடினார். தமிழ்நாடு முழுவதும் பரவி வந்த நந்தனார் சரித்திரத்திலிருந்தும் சில உருப்படிகளைப் பாடினார். கானடா இராகத்தில் உள்ள
“தீயினில் முழுகினார். திருநாளைப் போவார்
தீயினில் முழுகினார்”
என்ற கீர்த்தனத்தை மிக அழகாகப் பாடினார். அவர் பாடும் முறை என் மனத்தில் நன்றாகப் பதிந்தது. அக்கீர்த்தனமும் எனக்குப் பாடமாகிவிட்டது. என் தகப்பனார் கற்றுத் தராமல் சில உருப்படிகளை இவ்வாறு கேள்வியினாலேயே நான் அறிந்துகொண்ட துண்டு. அவற்றை நானே பாடிவருவேன்; வேறு யாரிடமேனும் பாடிக் காட்டுவேன். என் தகப்பனார் முன்னிலையில் மட்டும் பாடுவதற்கு அஞ்சுவேன். ‘சிறு பையன் பாடுகிறான்’ என்று சொல்லி மற்றவர்கள் என்னைப் பாராட்டி ஊக்கம் அளிப்பார்கள்.
ஒரு நாள் அந்த உபநயனத்திற்கு வந்திருந்த சிலரிடம் என்னுடைய ‘சங்கீதத் திறமை’யைக் காட்டிக் கொண்டிருந்தேன். “எங்கே, தீயினில் முழுகினார் என்பதைப் பாடு” என்றார் ஒருவர். எனக்கு அந்தக் கீர்த்தனத்தைப் பாடுவதென்றால் அதிகம் உற்சாகம் உண்டு. ஆதலின் அதைக் கூடியவரையில் நன்றாகப் பாடினேன். அதை மறைவிலிருந்தபடியே என் தந்தையார் கேட்டுக்கொண்டிருந்தார். எனது சங்கீத விருப்பமும், அதில் தனியே எனக்கு இருந்த பழக்கமும் அவருக்கு அப்போதுதான் புலப்பட்டன. தெலுங்கோடு சங்கீதத்தையும் மறந்து விடுவேனென்று அவர் நினைத்திருந்தாரோ என்னவோ அறியேன்; அன்று அவர் ஒரு புதிய திருப்தியை அடைந்தார்.
பின்பு அவர் நேரே வந்தார். நான் அச்சத்தால் பாட்டை நிறுத்தினேன். “பயப்படாதே; பாடு. உனக்கும் சங்கீதம் நன்றாக வரும்போல் இருக்கிறதே!” என்று அவர் கூறினார். அவருடைய திருப்தி அந்த வார்த்தைகளிலும் முகமலர்ச்சியிலும் வெளிப்பட்டது. அன்றே என் தந்தையாருக்கு வேறு யார் மூலமாகவேனும் எனக்குச் சங்கீதமும் தமிழும் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.
தமிழ் விதை விதைத்தவர்
என் பிதாவுடைய நண்பராகிய அரியிலூர்ச் சடகோபையங்கார் சங்கீதத்திலும் தமிழிலும் வல்லவர். அவர் வீணையும் வாசிப்பார். சில சமயங்களில் என் தந்தையார் பாட அவர் வீணை வாசிப்பதுண்டு. இருவரும் சங்கீத சம்பந்தமாக அடிக்கடி மனங்கலந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவர் வீடு பெருமாள் கோயில் சந்நிதியில் வட சிறகில் உள்ளது.
சடகோபையங்காரே எனக்கு ஏற்ற குருவென்று எந்தையார் நிச்சயித்தார். அரியிலூருக்கு வந்தவுடன் ஒரு நாள் என்னை அவரிடம் அழைத்துச் சென்று, “இவனுக்குச் சங்கீதத்திலும் தமிழிலும் பிரியம் இருக்கிறது. மற்ற விசயங்களில் இவன் புத்தி செல்லவில்லை. நான் இவ்வளவு நாள் சொல்லிக் கொடுத்தேன். மேலே கற்பிக்க என்னால் இயலவில்லை, நீங்கள் இவனை உங்கள் மாணாக்கனாகக் கொண்டு இரண்டு வகையிலும் பயிற்சி செய்விக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே அவர் மிக்க அன்போடு என்னை ஏற்றார்.
என் பிதா சடகோபையங்காரிடம் என்னை ஒப்பித்ததற்கு முக்கியமான காரணம் சங்கீதத்தில் எனக்கு நல்ல பழக்கம் உண்டாக வேண்டுமென்றும், அதற்கு உதவியாகத் தமிழறிவு பயன்படுமென்றும் எண்ணியதே. ஆனால் என் விசயத்தில் அந்த முறை மாறி நின்றது. தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டி குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே.
சடகோபையங்கார் பரம்பரை
சடகோபையங்கார் பரம்பரையாக வித்துவான்களாக இருந்தோர் மரபிற் பிறந்தவர். அவர் பரம்பரையினர் யாவருக்கும் சண்பக மன்னார் என்ற குடிப்பெயர் உண்டு. அவர்கள் தென்கலை சிரீவைசுணவர்கள். அவர்களிற் பலர் சிறந்த கவிஞர்களாக விளங்கினர். அவர்களுக்குப் பாலசரசுவதி, பாலகவி என்னும் பட்டங்கள் உண்டு. அவர்களில் ஒருவர் ‘திருக்கல்யாண நாடகம்’ என்பதையும் மற்றொருவர் ‘சிவராத்திரி நாடகம்’ என்பதையும் இயற்றியிருக்கின்றனர். சடகோபையங்காருடைய பாட்டனாராகிய சிரீநிவாசையங்கார் என்பவர் சிறந்த ஞானி. அத்துவைத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். தமிழ்ப் புலமையும் மிக்கவர். அவர் நவராத்திரி நாடகம், சாரங்கபாணி நொண்டி நாடகம் முதலியவற்றை இயற்றியிருக்கிறார். அவருக்கு அவர் குடிப்பெயராகிய சண்பக மன்னாரென்பதே இயற்பெயரைப் போல வழங்கி வந்தது. அவரிடம் வேதாந்த சாத்திரங்களைப் பாடங்கேட்குத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் அங்கங்கே உள்ள ஊர்களில் மடங்களை அமைத்துக்கொண்டு அடக்கமாகக் காலங் கழித்து வந்த பரதேசிகள் பலர். அவரும் அரியிலூரில் தமக்கென ஒரு மடம் கட்டி அங்கேயே இருந்து பாடஞ் சொல்லி வந்தார். பிற்காலத்தில் அவருடைய குரு பூசை அரியிலூரிலும் அவர் மாணாக்கர்கள் இருந்த இடங்களிலும் வருடந்தோறும் நடந்து வந்தது. அவர் பேரராகிய சடகோபையங்காரை உட்கார வைத்து அந்தக் குரு பூசையில் சண்பக மன்னாராகப் பாவித்து வழிபடுவார்கள்.
ஐயாவையங்கார்
சண்பக மன்னாருடைய மூத்த குமாரராகிய ஐயாவையங்கா ரென்பவரே சடகோபையங்காருடைய தந்தையார். அவரிடம் பரம்பரை இயல்புகளாகிய தமிழ்ப் புலமையும் துறவுணர்ச்சியும் விளங்கின. சமீன்தாரது ஆசுத்தான வித்துவானாக அவர் சில காலம் இருந்தார். தியானம் செய்தல், தெய்வ கைங்கரியம் புரிதல் முதலியவற்றிலேதான் அவர் அதிகமாக ஈடுபட்டிருந்தார். அதனால் மற்றவர்களைப் போல சமீன்தாருக்குத் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ள முடியவில்லை. தம்முடைய வயிற்றுக்காக ஆத்தும நாயகனது கைங்கரியத்திற்குக் குறை உண்டாக்கிக் கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. இறுதியில் சமீன் உத்தியோகத்தை விட்டுவிட்டு ஆண்டவன் அடித்தொண்டே கதியென்றெண்ணி அதில் முனைந்து நின்றார்.
அரியிலூர்ப் பெருமாள் கோயில் தசாவதார மண்டபத்தில் உள்ள நரசிங்கமூர்த்தியை அவர் உபாசித்து வந்தார். அரண்மனை உத்தியோகத்தினின்றும் நீங்கியது சிறையினின்றும் விடுபட்டது போன்ற உணர்ச்சியை அவருக்கு உண்டாகியது; ‘முன்பே இந்தக் காரியத்தைச் செய்யாமல் இருந்தோமே!’ என்று அவர் உருகினார்;
“வஞ்ச மாரும் மனத்தரைக் காவென்று
வாழ்த்தி வாழ்த்தி மனதுபுண்ணாகவே
பஞ்ச காலத்திற் பிள்ளைவிற் பார்கள்போல்
பிரபந்தம் விற்றுப் பரிசு பெறாமலே
நெஞ்சம் வாடி இளைத்துநொந் தேனையா!
நித்த நின்மல நின்னடி தஞ்சங்காண்
செஞ்சொல் நாவலர் போற்றவெந் நாளிலும்
செழித்து வாழரி யில்நர சிங்கமே“
என்ற பாட்டைக் கூறிக் கதறினார். பஞ்சகாலத்திற் பிள்ளை விற்பார்கள் போல் கவிதையை மனிதருக்கு வீணே அருப்பணம் செய்த குறை நீங்க அவர் தம் வாழ்வு முழுவதையும் நரசிங்க மூர்த்தியின் சேவையிலே போக்கி இன்புற்றார்.
ஐயாவையங்காருக்கு ஐந்து குமாரர்கள் இருந்தார்கள். எல்லோரிலும் இளையவரே சடகோபையங்கார். அந்த ஐவரும் தமிழிலும் சங்கீதத்திலும் பயிற்சி யுடையவர்களே!
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
No comments:
Post a Comment