(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது-தொடர்ச்சி)
இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள்
1938-ஆம் வருசம் முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன்.
1939-ஆம் வருசம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருசம் சென்னையிலிருந்து ஆயிரக் கணக்கான சனங்கள் வெளியூருக்குக் குடியேறின போது நானும் மைசூரில் போய் வசித்து வந்தேன். இக்காலத்தில் நாடகமேடை மறுபடியும் தலையெடுப்பது அசாத்தியம் என்று ஏங்கியிருந்தேன்.
இவ்வருசம் நான் மைசூரிலிருந்து திரும்பி வந்த போது கொஞ்சம் தைரியம் கொண்டேன். இவ்வாண்டில் ஆகத்து மாதம் மதுரையில் தமிழ் மகாநாடு கூடிய பொழுது என்னை மூன்றாவது தினமாகிய நாடகத் தமிழ் மகாநாட்டிற்குத் தலைவனாக இருக்க வேண்டுமென்று அழைத்தனர். அதற்கு நான் குதூகலத்துடன் உட்பட்டு மதுரைக்குப் போனேன். அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் நாடகத்தமிழைப் பற்றி ஒரு சிறு சொற்பொழிவு செய்தேன். இச்சயம் பல வருடங்களாகப் பாராதிருந்த என் மதுரை நண்பர்களைக் கண்டு சந்தோசித்தேன்.
மறு வருடமாகிய 1943-ஆம் ஆண்டில் ஈரோட்டில் நாடகத் தமிழ் மகாநாடு கூடியபோது அதற்கு நாடகத்தமிழ் கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அம் மகா நாட்டில் கனம் சண்முகம் செட்டியார் அவர்கள் அக்கிராசனம் வகித்தார். அன்றியும் இம் மகாநாட்டில் எனக்கு ‘நாடகப் பேராசிரியர்’ என்னும் பட்டம் அளிக்கப் பட்டது தெய்வத்தின் கருணையால், அன்றியும் ஈரோடு நகரசபையார் எனக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரமும் அளித்தனர். இச்சபையில் பேச வேண்டி வந்த போது “எனக்கு அரசினர் அளித்த இரண்டு பட்டங்களை விட நாடக அபிமானிகள் எனக்களித்த பட்டத்தையே நான் மேலாகக் கருதுகிறேன்” என்று சொன்னேன். இச்சமயம் ஈரோட்டுக்கருகிலுள்ள பவானி என்னும் சேத்திரத்திற்கு என்னை என் புதிய நண்பர்கள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள நாடக சபையின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கச் செய்தனர். அச்சமயம் நாடகக் கலையின் உயர்வைப்பற்றிப் பேசினேன்.
1944-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளிக் கூட நிதிக்காக ‘சபாபதி’ என்னும் நாடகத்தை ஆடினபோது நானும் அதில் ஒரு வேடம் தரிக்க வேண்டுமென்று எனது நண்பர்கள் கேட்க, அதற்கிசைந்து ஒரு காட்சியில் சபாபதி முதலியாராக நடித்தேன். அப் பொழுது எனக்கு வயது 71. இதைக் குறித்து அப்பள்ளியின் அறக்கட்டளையர்(டிரசுட்டிகள்) கூட்டத்தில் எனக்கும் எனது நண்பர் மருத்துவர் குருசாமி முதலியாருக்கும் நடந்த வேடிக்கையான சம்பாசணையை இங்கு எழுத விரும்புகிறேன். இயக்குநர்கள், நானும் இந்நாடகத்தில் நடித்தால் அதன் மூலமாக பொருள் அதிகமாகக் கிடைக்கும் என்று என்னை வற்புறுத்தியபோது “சபாபதி முதலியார் என்னும் நாடகப் பாத்திரம் சுமார் 17 வயது பிள்ளை யாச்சுதே, எனக்கு 71 வயதாகிறதே அதை நான் எப்படி நடிப்பது?” என்று ஆட்சேபிக்க, மருத்துவர் குருசாமி முதலியார் “அதில் தவறொன்றும். இல்லை, 71 என்னும் எண்ணை திருப்பினால் 17 ஆகிறது” என்று வேடிக்கையாய் பதில் உரைத்தார்! ஆயினும் அவ்வயதில் நான் சபாபதி முதலியாராக நடித்தது எனக்குத் திருப்தியாய் இல்லை. ஆயினும் நாடகத்திற்கு வசூல் மாத்திரம் 2000 உரூபாய்க்கு மேல் வந்தது. இது தான் சந்தோசம்.
1941-ஆம் வருசம் அண்ணாமலை சருவகலாசாலையார் என்னை நாடகக் கலையைப்பற்றி மூன்று சொற்பொழிவுகள் செய்யும்படிக் கேட்டனர் அதற்கிணங்கி இவ்வருசம் ஆகத்து மாதம் அண்ணாமலை நகருக்குப் போய் நாடகக் கலையைப்பற்றி சொற்பொழிவுகள் செய்தேன்.
1945-ஆம் வருசம் சென்னையில் தாபிக்கப்பட்ட இந்து மது விலக்கு சங்கத்தின் பொன் விழாவில் வினோத வேசப் போட்டியில் வேடம் தரித்து வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றேன். அன்றியும் இவ்வருசம் மார்ச்சு மாதத்தில் 31-ஆந் தேதியிலும் ஏப்பிரல் 1-ஆந்தேதியிலும் தஞ்சை மா நகரில் நடந்த இரண்டாவது நாடகத் தமிழ் மகாநாட்டில் தலைமை வகித்து தலைவர் உரையாகத் தமிழ் நாடகத்தைப்பற்றிச் சொற்பொழிவு செய்தேன். இவ்வருசம் தென்இந்திய உடற்பயிற்சி ஆட்டக்காரர் சங்கத்தின் (சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன்) கொண்டாட்டத்தில் வினோத வேடம் போட்டியில் வேடம் தரித்துப் பரிசு பெற்றேன். இவ்வருடம் சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘மருமகன்’ என்னும் தமிழ் பிரஃகசனத்தில் மருமகனுடைய குமாசுத்தா வேடம் தரித்தேன். மேலும் இச்சமயம் நடந்த இந்தி நாடகத்தில் பெய்லிப் (Bailiff) ஆகவும் காவல் ஆய்வாளராகவும் வேடம் பூண்டேன். மேற்கண்ட பல சிறு வேடங்கள் தரித்து நான் நடித்தது, அவற்றில் பெயர் எடுக்கவேண்டுமென்றல்ல. நாடகக் கலையின் சம்பந்தத்தை முதிர் வயதிலும் விட்டுப் பிரிய மனமில்லாமையே ஆகும்,
இவ்வருடம் வானொலி நாடகங்களில் நான்கு முறை பாகம் எடுத்துக்கொண்டேன். அந்நான்கு நாடகங்களும் நான் எழுதிய “சங்கீதப் பயித்தியம், இரசபுத்திர வீரன், மாண்டவர் மீண்டது, இடைச்சுவர் இருபுறமும்” என்பவையாம். இவற்றில் நான் நடித்தது எனக்கு ஒரு கடினமும் தரவில்லை. வேசம் போடாமலே பேசவேண்டிவந்தமையால், ஆயினும் மற்ற நடிகர்களுக்கெல்லாம் ஒத்திகை செய்யவேண்டியவனாய் இருந்தேன். இவ்வருசத்திற்கு முன்பாக ஊர்வசியின் சாபம், லீலாவதி சுலோசனா, சபாபதி முதலிய வானொலி நாடகங்களில் நடித்தேன். இவ்வருசத்திலும் இதற்கு முன்பாகவும் நாடக விசயங்களைப்பற்றி பன்முறை வானொலி மூலமாகப் பேசி யிருக்கிறேன்.
இவ் வருசம் சென்னையிலுள்ள சுழற்சங்கத்தார்(ரோடெரி கிளப்பார்) இந்திய ‘நாடக மேடை’என்னும் விசயத்தைப்பற்றிப் பேசும் படிக் கேட்க, அதற்கிசைந்து அவர்கள் பெரும்பாலோர் ஆங்கிலமே தெரிந்திருந்தபடியால் ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்யும்படி நேர்ந்தது. இவ்வருசம் திசம்பர் மாதம் நான் இரண்டு முறை திரைப்படத் தணிக்கைச் சங்கத்தில் ஒருவனாக அரசாரால் நியமிக்கப்பட்டேன்.
1946 –ஆம் வருசம் சனவரி பிப்பிரவரி மாதங்களில் “மனைவியால் மீண்டவன், சிக்ஃக நாதன்” எனும் நாடகங்களில் முறையே பாகம் எடுத்துக் கொண்டேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் சென்னையில் ஒற்றவாடை நாடகசாலையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் தமிழ்ப் பத்திரிகைக் காட்சியைத் திறந்துவைத்தேன். அன்றியும் இவ்வருசம் சுகுண விலாச சபையார் தசரா கொண்டாட்டத்தில் கபிர்தாசு என்னும் நாடகத்தில் இராம்சிங்கு வேசம் தரித்தேன்.
1947-ஆம் வருசம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன் கொண்டாட்டத்தின் வேசப் போட்டியில் பரிசு பெற்றேன். இவ்வருசம் எனக்கு 75-ஆவது வருடப் பிறப்பு நாளை சுகுண விலாச சபையார் கொண்டாடி எனக்கு ஒரு வந்தனோபசார பத்திரிகை அளித்தனர். இதை எனது பால்ய நண்பராகிய வி, வி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கரத்தினின்றும் பெரும் பாக்கியம் பெற்றேன் கடவுள் கிருபையால். அச்சமயம் சபையார் நடத்திய காலவரிசி என்னும் எனது நாடகத்தில் சுபத்திரையின் வேலையாளாக நடித்தேன்.
இவ்வருசம் வெலிங்குடன் திரையரங்கு சாலையில் வினோத வரியை (Entertainment tax) அரசினர் உயர்த்திய தற்காக ஆட்சேபனை செய்வதற்காக கூடிய கூட்டத்தில் தலைமை வகித்து முக்கியமாக நாடகங்களுக்கு வரியை போடலாகாது என்று பேசினேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் விக்குடோரியா பப்ளிக்கு ஃகாலில் ஆந்திரர்கள் காலஞ்சென்ற சீமான் இராகவாச்சார்லு அவர்களின் உருவப்படத்தைத்திறந்து வைத்தபோது என்னையும் அவரது நட்புத் திறமையைப்பற்றி பேசவேண்டுமென்று கேட்டபோது அவ்வாறே செய்து என் காலஞ்சென்ற நண்பருக்கு நான் செலுத்தவேண்டிய கடனைச் சிறிதளவு செய்தேன். ஏப்பிரல் மாதம் சுகுண விலாச சபையார் தெலுங்கில் நடத்திய துரௌபதி மான சம்ரட்சணம் எனும் நாடகத்தில் பிராதிகாரி என்னும் சிறு வேசம் பூண்டேன். இச்சபையின் இவ்வருசத்திய தசரா கொண்டாட்டத்தில் சகுந்தலை நாடகத்தில் கொத்தவாலாக நடித்தேன். தெலுங்கு பாசையில், இவ்வருடக் கடைசியில் எங்கள் சபையார் நடத்திய ‘நந்தனார்’ எனும் தமிழ் நாடகத்தில் என் பழைய வேடமாகிய கோமுட்டி செட்டியாராக நடித்தேன், இவ்வருசம் சவுத் இண்டியன் ஆத்லடிக் அசோசியேசன் நடத்திய வருடாந்திரக் கொண்டாட்டத்தில் சிரிப்புப் பாட்டுப் போட்டியில் ஒரு பரிசு பெற்றேன். இப்பாட்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்றும் கலந்ததாகும். இதே பாட்டைப் பாடி பல வருடங்களுக்குமுன் சுகுண விலாச சபையார் எற்படுத்திய வினோத வேசப் பார்ட்டியில் அமெரிக்காவிலிருந்து அதைக் காண வந்த லிவர் பிரதர்சு கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்றைப் பெற்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. 1949-ஆம் வருசம் பச்சையப்பன் கல்லூரியில் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஒரு நாள் நடத்திய சபாபதி நாடகத்தின் நான்காம் பாகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தேன்.
20-2—1949-இல் புரொக்ரெசிவ் யூனியன் பள்ளி மாணவர்கள் எனது மனோகரன் நாடகத்தை செயிண்மேரீசு அரங்கில் ஆடியபோது தலைமை வகித்து சிறுவர்கள் ஆடிய நாடகத்தைத் தக்கபடி புகழ்ந்துரைத்தேன்.
(தொடரும்)
பம்மல் சம்பந்தம்
என் சுயசரிதை
No comments:
Post a Comment