Showing posts with label ப. சம்பந்த(முதலியா)். Show all posts
Showing posts with label ப. சம்பந்த(முதலியா)். Show all posts

Sunday, October 29, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் (1)

 








(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது-தொடர்ச்சி)

இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள்


1938-ஆம் வருசம் முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன்.

1939-ஆம் வருசம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருசம் சென்னையிலிருந்து ஆயிரக் கணக்கான சனங்கள் வெளியூருக்குக் குடியேறின போது நானும் மைசூரில் போய் வசித்து வந்தேன். இக்காலத்தில் நாடகமேடை மறுபடியும் தலையெடுப்பது அசாத்தியம் என்று ஏங்கியிருந்தேன்.

இவ்வருசம் நான் மைசூரிலிருந்து திரும்பி வந்த போது கொஞ்சம் தைரியம் கொண்டேன். இவ்வாண்டில் ஆகத்து மாதம் மதுரையில் தமிழ் மகாநாடு கூடிய பொழுது என்னை மூன்றாவது தினமாகிய நாடகத் தமிழ் மகாநாட்டிற்குத் தலைவனாக இருக்க வேண்டுமென்று அழைத்தனர். அதற்கு நான் குதூகலத்துடன் உட்பட்டு மதுரைக்குப் போனேன். அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் நாடகத்தமிழைப் பற்றி ஒரு சிறு சொற்பொழிவு செய்தேன். இச்சயம் பல வருடங்களாகப் பாராதிருந்த என் மதுரை நண்பர்களைக் கண்டு சந்தோசித்தேன்.

மறு வருடமாகிய 1943-ஆம் ஆண்டில் ஈரோட்டில் நாடகத் தமிழ் மகாநாடு கூடியபோது அதற்கு நாடகத்தமிழ் கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அம் மகா நாட்டில் கனம் சண்முகம் செட்டியார் அவர்கள் அக்கிராசனம் வகித்தார். அன்றியும் இம் மகாநாட்டில் எனக்கு ‘நாடகப் பேராசிரியர்’ என்னும் பட்டம் அளிக்கப் பட்டது தெய்வத்தின் கருணையால், அன்றியும் ஈரோடு நகரசபையார் எனக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரமும் அளித்தனர். இச்சபையில் பேச வேண்டி வந்த போது “எனக்கு அரசினர் அளித்த இரண்டு பட்டங்களை விட நாடக அபிமானிகள் எனக்களித்த பட்டத்தையே நான் மேலாகக் கருதுகிறேன்” என்று சொன்னேன். இச்சமயம் ஈரோட்டுக்கருகிலுள்ள பவானி என்னும் சேத்திரத்திற்கு என்னை என் புதிய நண்பர்கள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள நாடக சபையின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கச் செய்தனர். அச்சமயம் நாடகக் கலையின் உயர்வைப்பற்றிப் பேசினேன்.

1944-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளிக் கூட நிதிக்காக ‘சபாபதி’ என்னும் நாடகத்தை ஆடினபோது நானும் அதில் ஒரு வேடம் தரிக்க வேண்டுமென்று எனது நண்பர்கள் கேட்க, அதற்கிசைந்து ஒரு காட்சியில் சபாபதி முதலியாராக நடித்தேன். அப் பொழுது எனக்கு வயது 71. இதைக் குறித்து அப்பள்ளியின் அறக்கட்டளையர்(டிரசுட்டிகள்) கூட்டத்தில் எனக்கும் எனது நண்பர் மருத்துவர் குருசாமி முதலியாருக்கும் நடந்த வேடிக்கையான சம்பாசணையை இங்கு எழுத விரும்புகிறேன். இயக்குநர்கள், நானும் இந்நாடகத்தில் நடித்தால் அதன் மூலமாக பொருள் அதிகமாகக் கிடைக்கும் என்று என்னை வற்புறுத்தியபோது “சபாபதி முதலியார் என்னும் நாடகப் பாத்திரம் சுமார் 17 வயது பிள்ளை யாச்சுதே, எனக்கு 71 வயதாகிறதே அதை நான் எப்படி நடிப்பது?” என்று ஆட்சேபிக்க, மருத்துவர் குருசாமி முதலியார் “அதில் தவறொன்றும். இல்லை, 71 என்னும் எண்ணை திருப்பினால் 17 ஆகிறது” என்று வேடிக்கையாய் பதில் உரைத்தார்! ஆயினும் அவ்வயதில் நான் சபாபதி முதலியாராக நடித்தது எனக்குத் திருப்தியாய் இல்லை. ஆயினும் நாடகத்திற்கு வசூல் மாத்திரம் 2000 உரூபாய்க்கு மேல் வந்தது. இது தான் சந்தோசம்.

1941-ஆம் வருசம் அண்ணாமலை சருவகலாசாலையார் என்னை நாடகக் கலையைப்பற்றி மூன்று சொற்பொழிவுகள் செய்யும்படிக் கேட்டனர் அதற்கிணங்கி இவ்வருசம் ஆகத்து மாதம் அண்ணாமலை நகருக்குப் போய் நாடகக் கலையைப்பற்றி சொற்பொழிவுகள் செய்தேன்.

1945-ஆம் வருசம் சென்னையில் தாபிக்கப்பட்ட இந்து மது விலக்கு சங்கத்தின் பொன் விழாவில் வினோத வேசப் போட்டியில் வேடம் தரித்து வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றேன். அன்றியும் இவ்வருசம் மார்ச்சு மாதத்தில் 31-ஆந் தேதியிலும் ஏப்பிரல் 1-ஆந்தேதியிலும் தஞ்சை மா நகரில் நடந்த இரண்டாவது நாடகத் தமிழ் மகாநாட்டில் தலைமை வகித்து தலைவர் உரையாகத் தமிழ் நாடகத்தைப்பற்றிச் சொற்பொழிவு செய்தேன். இவ்வருசம் தென்இந்திய உடற்பயிற்சி ஆட்டக்காரர் சங்கத்தின் (சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன்) கொண்டாட்டத்தில் வினோத வேடம் போட்டியில் வேடம் தரித்துப் பரிசு பெற்றேன். இவ்வருடம் சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘மருமகன்’ என்னும் தமிழ் பிரஃகசனத்தில் மருமகனுடைய குமாசுத்தா வேடம் தரித்தேன். மேலும் இச்சமயம் நடந்த இந்தி நாடகத்தில் பெய்லிப் (Bailiff) ஆகவும் காவல் ஆய்வாளராகவும் வேடம் பூண்டேன். மேற்கண்ட பல சிறு வேடங்கள் தரித்து நான் நடித்தது, அவற்றில் பெயர் எடுக்கவேண்டுமென்றல்ல. நாடகக் கலையின் சம்பந்தத்தை முதிர் வயதிலும் விட்டுப் பிரிய மனமில்லாமையே ஆகும்,

இவ்வருடம் வானொலி நாடகங்களில் நான்கு முறை பாகம் எடுத்துக்கொண்டேன். அந்நான்கு நாடகங்களும் நான் எழுதிய “சங்கீதப் பயித்தியம், இரசபுத்திர வீரன், மாண்டவர் மீண்டது, இடைச்சுவர் இருபுறமும்” என்பவையாம். இவற்றில் நான் நடித்தது எனக்கு ஒரு கடினமும் தரவில்லை. வேசம் போடாமலே பேசவேண்டிவந்தமையால், ஆயினும் மற்ற நடிகர்களுக்கெல்லாம் ஒத்திகை செய்யவேண்டியவனாய் இருந்தேன். இவ்வருசத்திற்கு முன்பாக ஊர்வசியின் சாபம், லீலாவதி சுலோசனா, சபாபதி முதலிய வானொலி நாடகங்களில் நடித்தேன். இவ்வருசத்திலும் இதற்கு முன்பாகவும் நாடக விசயங்களைப்பற்றி பன்முறை வானொலி மூலமாகப் பேசி யிருக்கிறேன்.

இவ் வருசம் சென்னையிலுள்ள சுழற்சங்கத்தார்(ரோடெரி கிளப்பார்) இந்திய ‘நாடக மேடை’என்னும் விசயத்தைப்பற்றிப் பேசும் படிக் கேட்க, அதற்கிசைந்து அவர்கள் பெரும்பாலோர் ஆங்கிலமே தெரிந்திருந்தபடியால் ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்யும்படி நேர்ந்தது. இவ்வருசம் திசம்பர் மாதம் நான் இரண்டு முறை திரைப்படத் தணிக்கைச் சங்கத்தில் ஒருவனாக அரசாரால் நியமிக்கப்பட்டேன்.

1946 –ஆம் வருசம் சனவரி பிப்பிரவரி மாதங்களில் “மனைவியால் மீண்டவன், சிக்ஃக நாதன்” எனும் நாடகங்களில் முறையே பாகம் எடுத்துக் கொண்டேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் சென்னையில் ஒற்றவாடை நாடகசாலையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் தமிழ்ப் பத்திரிகைக் காட்சியைத் திறந்துவைத்தேன். அன்றியும் இவ்வருசம் சுகுண விலாச சபையார் தசரா கொண்டாட்டத்தில் கபிர்தாசு என்னும் நாடகத்தில் இராம்சிங்கு வேசம் தரித்தேன்.

1947-ஆம் வருசம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன் கொண்டாட்டத்தின் வேசப் போட்டியில் பரிசு பெற்றேன். இவ்வருசம் எனக்கு 75-ஆவது வருடப் பிறப்பு நாளை சுகுண விலாச சபையார் கொண்டாடி எனக்கு ஒரு வந்தனோபசார பத்திரிகை அளித்தனர். இதை எனது பால்ய நண்பராகிய வி, வி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கரத்தினின்றும் பெரும் பாக்கியம் பெற்றேன் கடவுள் கிருபையால். அச்சமயம் சபையார் நடத்திய காலவரிசி என்னும் எனது நாடகத்தில் சுபத்திரையின் வேலையாளாக நடித்தேன்.

இவ்வருசம் வெலிங்குடன் திரையரங்கு சாலையில் வினோத வரியை (Entertainment tax) அரசினர் உயர்த்திய தற்காக ஆட்சேபனை செய்வதற்காக கூடிய கூட்டத்தில் தலைமை வகித்து முக்கியமாக நாடகங்களுக்கு வரியை போடலாகாது என்று பேசினேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் விக்குடோரியா பப்ளிக்கு ஃகாலில் ஆந்திரர்கள் காலஞ்சென்ற சீமான் இராகவாச்சார்லு அவர்களின் உருவப்படத்தைத்திறந்து வைத்தபோது என்னையும் அவரது நட்புத் திறமையைப்பற்றி பேசவேண்டுமென்று கேட்டபோது அவ்வாறே செய்து என் காலஞ்சென்ற நண்பருக்கு நான் செலுத்தவேண்டிய கடனைச் சிறிதளவு செய்தேன். ஏப்பிரல் மாதம் சுகுண விலாச சபையார் தெலுங்கில் நடத்திய துரௌபதி மான சம்ரட்சணம் எனும் நாடகத்தில் பிராதிகாரி என்னும் சிறு வேசம் பூண்டேன். இச்சபையின் இவ்வருசத்திய தசரா கொண்டாட்டத்தில் சகுந்தலை நாடகத்தில் கொத்தவாலாக நடித்தேன். தெலுங்கு பாசையில், இவ்வருடக் கடைசியில் எங்கள் சபையார் நடத்திய ‘நந்தனார்’ எனும் தமிழ் நாடகத்தில் என் பழைய வேடமாகிய கோமுட்டி செட்டியாராக நடித்தேன், இவ்வருசம் சவுத் இண்டியன் ஆத்லடிக் அசோசியேசன் நடத்திய வருடாந்திரக் கொண்டாட்டத்தில் சிரிப்புப் பாட்டுப் போட்டியில் ஒரு பரிசு பெற்றேன். இப்பாட்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்றும் கலந்ததாகும். இதே பாட்டைப் பாடி பல வருடங்களுக்குமுன் சுகுண விலாச சபையார் எற்படுத்திய வினோத வேசப் பார்ட்டியில் அமெரிக்காவிலிருந்து அதைக் காண வந்த லிவர் பிரதர்சு கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்றைப் பெற்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. 1949-ஆம் வருசம் பச்சையப்பன் கல்லூரியில் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஒரு நாள் நடத்திய சபாபதி நாடகத்தின் நான்காம் பாகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தேன்.

20-2—1949-இல் புரொக்ரெசிவ் யூனியன் பள்ளி மாணவர்கள் எனது மனோகரன் நாடகத்தை செயிண்மேரீசு அரங்கில் ஆடியபோது தலைமை வகித்து சிறுவர்கள் ஆடிய நாடகத்தைத் தக்கபடி புகழ்ந்துரைத்தேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12 – நாடக சம்பந்தமான நூல்கள்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது-தொடர்ச்சி)

12. நாடக சம்பந்தமான நூல்கள்

கீத மஞ்சரி :— நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுகள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம்.

நாடகத்தமிழ் :— இது நான் மிகவும் சிரமப்பட்டு ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலாம். இதற்காகச் சென்னை சருவகலாசாலையார் எனக்கு உரூபாய் 2250 கொடுத்தார்கள். இதை 1933-ஆம் வருடம் அச்சிட்டேன்.

நாடக மேடை நினைவுகள்:– ஆறு பாகம் எழுதியது 1927-36 இவற்றை 1932, 1933, 1935, 1936, 1937 வருடங்களில் அச்சிட்டேன்.

நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி:— நடிகர்களுக்கு உபயோகப்படும்படி. இதை 1936-ஆம் வருடம் அச்சிட்டேன்.
தமிழ் பேசும் படம்:– இதை 1937-ஆம் வருடம் அச்சிட் டேன்.

பேசும் பட அனுபவங்கள்:– இதை 1938-ஆம் வருடம் அச்சிட்டேன்.

கதைகள் வியாசங்கள் முதலியன:– (1) தீட்சிதர் கதைகள் (2) ஃகாசிய வியாசங்கள் (3) சிறு கதைகள் (4) ஃகாசியக் கதைகள் (5) கதம்பம் இக் கதைகள் எல்லாம் பெரும்பாலும் சுதேசமித்திரன், ஆனந்த விகடன் முதலிய பத்திரிகைக்களுக்காக எழுதியவைகளாம்.

————–

13. மத சம்பந்தமான நூல்கள்

சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்:– சிறு வயது முதல் ‘சிவாலய பயித்தியம்’ எனக்குண்டு. ஏறக்குறைய 4000 சிவாலயங்களைப் பற்றி பல ஆண்டுகளாக தொடுத்து 1945-ஆம் வருடம் முதல் 4 பாகங்களை அச்சிட்டேன். 5 ஆம் பாகம் 1948-ஆம் வருடம் அச்சிடப்பட்டது.

சிவாலய சிற்பங்கள்:– இதை 1946-ஆம் வருடம் அச்சிட் டேன். இதை அச்சிடுவதில் தமிழ் மொழிக்காக எப்பொழுதும் உதவி செய்து வரும் சிரீலசிரீ காசி அருணா நந்தித் தம்பிரான் சுவாமிகள், திருப்பனன் தாள் ஆதினம் பண்டார சந்நிதி அவர்கள் உரூபாய் 500 பொருளுதவி செய்தார்கள். இந்நன்றியை நான் என்றும் மறக்க முடியாது.

சுப்பிரமணியர் ஆலயங்கள்:– இந்நூலைச் சிவாலயங்களி னின்றும் வேறாக அச்சிட்டதற்குக் காரணம் இந்நூல் முகவுரையில் எழுதியுள்ளேன். இம் மூன்றையும் படங்களுடன் அச்சிடாதது பெருங்குறையாம். இக்குறை என் ஆயுள் முடியு முன் இறைவன் அருள் நிறைவேற்றி வைக்குமாக.

————-

14. மேற்சொன்ன நூல்களன்றி நான் அச்சிட்ட நூல்கள்

1. காலக் குறிப்புகள்:— நான் சிறு எழுத்தாள்னாக வேண்டுமென்று தீர்மானித்த பிறகு எனக்கு உபயோகப்படும் படியான பல காலக் குறிப்புகளை குறித்து வந்தேன். அவை மற்ற நூலாசிரியர்களுக்கும் உபயோகப்படும் என்று நினைத்து 1947-ஆம் வருடம் அச்சிட்டேன்.
2. சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்:– மேற் கண்டபடியே என் சொந்த உபயோகத்திற்காகச் சிறு வயது முதல் உணவுப் பொருள்களின் குணங்களைக் குறித்து வந்தேன். தாயுமானவர் “வாடித்திரிந்து நான் கற்றதும் கேட்டது அவலமாய் போதல் நன்றோ” என்று கூறியபடி இவை மற்றவர்களுக்கு உபயோகப்படக் கூடும் என்று எண்ணி இதை 1948-ஆம் வருடம் அச்சிட்டேன்.

நான் ஒரு எழுத்தாளனாகி 1942-ஆம் வருடம் வரையில் என் புத்தகங்களை அச்சிடுவதில் ஒரு கட்டமுமில்லை என்றே கூறவேண்டும். அதற்கப்புறம் நான் பல கடினங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவை பெரும்பாலும் இரண்டாவது உலக யுத்தத்தினால் நேர்ந்தவையென்றே சொல்லலாம். அவற்றில் சிலவற்றை இங்குத் தெரிவிக்கிறேன். முதலாவது 1942-ஆம் வருடம் பட்டணத்தைவிட்டு மைசூருக்கு குடும்பத்துடன் ஓடிப்போக வேண்டிவந்தபடியால் அதுவரையில் வருடா வருடம் சில புத்தகங்களையாவது அச்சிடும் பழக்கம் தடைப்பட்டது. இரண்டாவது அதுவரையில் என் புத்தகங்களை அச்சிட்டுக்கொண்டிருந்த டௌடன் நிறுவனத்தை வாங்கின பியர்லெசு பிரசு என்னும் அச்சுக்கூடம் எடுபட்டுப்போக, பிறகு என் நூல்களைப் பல அச்சுக்கூடங்களுக்குப்போய், வேண்டி அச்சிடவேண்டியதாயிற்று. மூன்றாவது என் நூல்களை அச்சிட காகிதம் கிடைக்காமற் போனது. காகிதக் கட்டுப்பாட்டாளர் (கண்டிரோலர்) அவர்களுக்கு எனக்கு காகிதம் வேண்டுமென்று மனு கொடுத்தால் “நீ அச்சிடும் புத்தகங்கள் பெரும்பாலும் நாடகங்கள் தானே. அவற்றைக் காகித நெருக்கடி சமயத்தில் அச்சிடவேண்டிய நிமித்தமில்லை” என்று காகித ஒதுக்கீடு (கோட்டா) கொடுக்க மறுத்துவிட்டார். கறுப்புச் சந்தையில் அதிகவிலை கொடுத்து காகிதம் வாங்கவேண்டியதாயிற்று. நான்காவது தொழிலாளிகளின் வேலைநிறுத்தத்தால் இரண்டு மூன்று மாதங்களில் அச்சிடும் புத்தகங்கள் 6 மாதத்திற்கு மேல் காலம் பிடித்தது. அச்சிட்டு வெளி வர. ஐந்தாவது அச்சுக் கூலியும் அதிகப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் சராசரி ஒரு பாரத்திற்கு 4 உரூபாய் கொடுத்தது போக தற்காலம் ஏறக்குறைய அதற்கு 4 மடங்கு கொடுக்க வேண்டியவனாய் இருக்கிறேன். காகிதத்தின் விலையும் அதிகப் பட்டதென்று நான் எழுதவேண்டியதில்லை. இதன் பயனாக என் நூல்களின் விலையை அதிகப்படுத்த வேண்டியதாயிற்று.

மேற்கண்ட துன்பங்களையெல்லாம்விட நான் தற்காலம் அநுபவிக்கும் பெருந்துன்பமென்ன வென்றால் என் கண் பார்வை மட்டிட்டு வருவதேயாம். இது என் வயதின் கொடுமையாம் எனக்கு நாற்பதாம் வயதில் மனிதர்களுக்கு வரும் சாலேசுவரம் வரவேயில்லை. நான் அச்சிடும் புத்தகங்களின் (Proof) பிழை திருத்தங்களைச் சரியாகக் கவனிக்க அசத்தனாய் இருக்கிறேன். சென்ற சில வருடங்களாக வெளிவரும் என் நூல்களில் பல அச்சுப் பிழைகள் குடி கொண்டிருக்கின்றன என்பதற்கு சந்தேகமில்லை.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, September 24, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி)

9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

  • தெய்வ பக்தி என்பது என்னுடன் பிறந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். என் தாய் தந்தையர் எனக்குச் சம்பந்தம் என்று பெயரிட்ட காரணத்தை முன்பே எழுதியிருக்கிறேன். தினம் பூசை செய்யும் அவர்கள் என்னைச் சிறு வயது முதல் பக்தி மார்க்கத்தில் செலுத்தினார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. நான் சுமார் 2 வயது குழந்தையாய் இருந்தபோது என் தகப்பனார் சிவபூசை செய்த பூக்களை யெடுத்து அவரது பாதக்குரடு ஒன்றை எடுத்து அதன் பேரில் என் தகப்பனார் செய்வதுபோல பூசை செய்ததாக என் தாயார் எனக்குப் பிறகு கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் இது நேர்ந்திருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் தாயார் பொய் சொல்லவேண்டிய காரண மில்லை.

எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி விளையாடுவோம்.

அன்றியும் என் தகப்பனார் சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோயிலுக்கும் தரும கருத்தாவாயிருந்தபடியால் அக்கோயில்களின் உற்சவங்களுக்கு என்னையும் என் தமையனையும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போன படியால் கோயில்களின் உற்சவங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது.

மேலும் எங்கள் கல்விப் பயிற்சிக்கு இன்றியமையாததாக எண்ணி எங்கள் தகப்பனார் எங்கள் பள்ளிக்கூடத்து, கோடை விடுமுறை தோறும் எங்களை வெளியூர்களுக்கு அனுப்புவார். அச்சமயங்களில் ஆங்காங்குள்ள கோயில்களைப் பார்ப்பதே எனக்குப் பெரிய ஆனந்தமாயிருந்தது. எனது 10 அல்லது 11 வயதில் நான் பார்த்த காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள பெரிய கோயில்களின் அழகிய, உருவங்கள் அப்படியே என் மனத்தில் பதிந்திருக்கின்றன. அக் கோயில்களையெல்லாம் ஒரு முறை பிறகு நான் பார்த்திருக்கிறேன் ஆயினும் அவற்றை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோசம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-ஆவது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்குச் சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமையனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருடம் மாவட்ட உரிமையியல்(முன்சீப்பாக) நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருடம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருடங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தருமகருத்தாக்களுடனாவது மேற்பார்வை(ஓவர்சியர்)களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வழக்கின்றி நடந்தேறிய தென்று சந்தோசத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் இலக்கினப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தருமகருத்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது, நேராகச் செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவத்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டுச் செலவெல்லாம் காசோலை மூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவற்றை மற்ற கோயில் தருமகருத்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவத்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என் காலத்தில் கோயிலுக்குக் கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில விவகாரத்தை எழுத விரும்புகிறேன்.

இப்பெரிய வேலையை ஆரம்பித்தபோது கோயிலில் இதற்காக ஒரு சன்னியாசி சேமித்து வைத்த 5000 உரூபாய் தானிருந்தது. இதை முடிக்க வேண்டுமென்று நான் ஆரம்பித்த போது மைலாப்பூர்வாசிகளில் பலர் இப்பெரிய வேலைக்கு குறைந்தபட்சம் ஓர் இலட்சமாவது பிடிக்குமே, இவரால் என்ன முடியப்போகிறது என்று கூறினார்கள். “சுவாமி யிருக்கிறார்” என்று அவர் மீது பாரத்தைச் சுமத்தி இவ்வேலையை ஆரம்பித்தேன். இதற்காகப் பணம் சேர்ப்பதற்குப் பல உபாயங்கள் தேடினேன். பல செல்வவந்தர்களிடம் யாசித்தேன். தம்பிடி காலணா உண்டியில் மாத்திரம் சுமார் 8000 உரூபாய்கள் சேர்த்தேன். எதிலும் போதுமான வரும்படி வரவில்லை. ஒருநாள் பரமசிவத்தின் கருணையினால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் படி படியின் செலவின் பொருட்டு 108 உரூபாய் கொடுப்பவர்களுக்கு அவர்கள் பெயரால் ஒரு கல்வெட்டு படித்துறையில் போடப்படும் என்று பிரசுரம் செய்தேன். உடனே விரைவில் குளத்தை முற்றிலும் கருங்கல்லாய் ஆக்கவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டது!

ஒருமுறை ஆளுநர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து சில துரைசானிகளும் துரைகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் மயிலை கபாலீசுவரர் கோயிலைப் பார்க்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர்கள் கோயிலுக்குள் கொடிமரம் வரையில் பார்க்கலாமென்றும் அன்றியும் கோயிலுக்குள் நுழையும் முன் அவர்கள் தங்கள் காலணிகளைக் களைந்துவிட்டுத்தான் வரக்கூடும் என்று பதில் சொல்லி அனுப்பினேன், என்னிடம் கடிதம் கொண்டு வந்த ஐரோப்பியர் இரண்டாவது நிபந்தனைக்கு அவர்கள் உடன்படுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு நான் அப்படி செய்யா விட்டால் அவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று மறுத்தேன். பிறகு அமெரிக்கச் சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் பாதரட்சைகளைக் களைந்துவிட்டே கோயிலுக்குள் வந்தனர்.

இன்னொருமுறை பிரம்மோற்சவத்தின்போது ஐந்தாம் நாள் (இ)ரிசபவாகன உற்சவத்தைப் பார்க்க மாடவீதியில் ஒரு வீட்டின் மெத்தையின் பேரில் ஆளுநரும், அவரது மனைவியும் சில சிநேகிதர்களுடன் வந்திருந்தனர். சுவாமி அவ்வீட்டிற்கு எதிரில் வந்தபோது சுவாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்தபுறம் திருப்பிக் காட்டவேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் கேட்டார். அப்படி செய்யமுடியாது அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கீழே இறங்கிவந்து நேராகத் தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விசயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று தற்பெருைமயாகச் சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை நகராட்சித் தலைவர் (Municipal chairman) ஆக இருந்த ஓர் ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிசு சாலை வழியாக அடையாறு மன்றத்திற்கு(கிளப்புக்கு)ப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வரப் பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி, சுவாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காகத் தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த காவல் ஆய்வாளர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியைப் பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருடம் எனக்குச் சிறிய நீதிமன்ற நீதிபதி வேலை யானபோது ‘உன் நீதிமன்றத்திலேயே ஏதாவது கோயில் விவகாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தருமகத்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. இராமசுவாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனத்துடன் மயிலை கபாலீசுவரர் கோயில் தருமகருத்தா வேலையினுன்றும் விலகினேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை