(உ.வே.சா.வின் என் சரித்திரம் 57 : அன்பு மயம் – தொடர்ச்சி)
என் சரித்திரம்
- புலமையும் வறுமையும்
சூரியமூலையிலிருந்து என் பெற்றோர்களிடமும் மாதாமகரிடமும் அம்மான் முதலியவர்களிடமும் விடைபெற்று நான் மாயூரம் வந்து சேர்ந்தேன். வந்தபோது நான் பிரிந்திருந்த பத்து நாட்களில் ஒரு பெரிய இலாபத்தை நான் இழந்துவிட்டதாக அறிந்தேன். நான் ஊருக்குப் போயிருந்த காலத்தில் பிள்ளையவர்கள் சிலருக்குப் பெரியபுராணத்தை ஆரம்பித்துப் பாடஞ் சொல்லி வந்தார்.
பெரிய புராணப்பாடம்
தஞ்சை சில்லாவில் சில முக்கியமான தேவத்தானங்களின் விசாரணை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உண்டு. மாயூரத்தில் சிரீ மாயூரநாதர் கோயிலும் சிரீ ஐயாறப்பர் ஆலயமும் அவ்வாதீனத்துக்கு உட்பட்டவை. ஆதீனகர்த்தராகிய பண்டார சந்நிதிகளின் பிரதிநிதியாக இருந்து, அவர்கள் கட்டளைப்படி தேவத்தானங்களின் விசாரணையை நடத்தி வரும் தம்பிரான்களுக்குக் கட்டளைத் தம்பிரான்கள் என்றும் அத்தம்பிரான்கள் தம் தம் வேலைக்காரர்களுடன் வசிப்பதற்காக அமைத்திருக்கும் கட்டடங்களுக்குக் கட்டளை மடங்களென்றும் பெயர் வழங்கும். மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பிரதிநிதியாகப் பாலசுப்பிரமணியத் தம்பிரானென்பவர் மாயூரம் தெற்கு வீதியில் உள்ள கட்டளை மடத்தில் இருந்து கோயிற் காரியங்களை நன்றாகக் கவனித்து வந்தார். அவர் தமிழில் நல்ல பயிற்சி உள்ளவர். அவர் இருந்த கட்டளை மடம், பிள்ளையவர்கள் விடுதிக்கு அடுத்ததாதலால் அடிக்கடி அங்கே சென்று அவருடன் சல்லாபம் செய்து வருவார். அவருக்குப் பிள்ளையவர்களிடம் பெரியபுராணம் பாடம் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்தமையால் அவ்விதமே தொடங்கி முதலிலிருந்து பாடங் கேட்டு வந்தார். வேறு முதியவர் சிலரும் உடனிருந்து பாடங் கேட்டு வந்தனர். சவேரிநாத பிள்ளையும் கேட்டு வந்தனர்.
நான் சூரியமூலையிலிருந்து வந்த காலத்தில் எறிபத்த நாயனார் புராணத்துக்கு முந்திய புராணம் வரையில் நடைபெற்றிருந்தது. நான் வந்த தினத்தில் அப்புராணம் ஆரம்பமாயிற்று. பெரிய புராணத்தை நான் அதற்கு முன் பாடங் கேட்டதில்லை. நாயன்மார்களுடைய பெருமையை விரித்துரைக்கும் அந்நூலைப் பிள்ளையவர்கள் போன்ற சிவபக்திச் செல்வம் நிறைந்தவர்கள் சொல்லத் தொடங்கினால் இயல்பாகவே பக்தி ரசம் செறிந்துள்ள அப்புராணம் பின்னும் அதிக இனிமையை உண்டாக்கும் என்பதில் என்ன சந்தேகம்?
நான் பிரபந்தங்கள் பாடங்கேட்ட அளவில் நின்றிருந்தேன்; காவியங்களைப் பாடம் கேட்கும் நிலையை அதுவரையில் அடையவில்லை. ஆதலால் “நமக்கு இப்புராணத்தைப் பிள்ளையவர்கள் பாடம் சொல்வார்களோ” என்று ஐயமுற்றேன்! அன்றியும் அதைக் கேட்பவர்கள் தக்க மதிப்புடையவர்களாகவும் தமிழ்க் கல்வியிலும் பிராயத்திலும் என்னைக் காட்டிலும் முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உள்ளவர்கள். “இவர்களோடு ஒருவனாக இருந்து பாடம் கேட்பது முடியாது” என்ற எண்ணமே எனக்கு முன் நின்றது.
அந்நிலையில் என் அருமை ஆசிரியர் என்னை அழைத்து, “பெரியபுராணத்தை நீரும் இவர்களுடன் பாடங் கேட்கலாம்” என்று கூறினார்; அப்போது நான் மெய்ம்மறந்தேன். ஆனந்தவாரியில் மூழ்கினேன். சில நேரம் வரையில் ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.
ஒரு பெரிய விருந்தில் குழந்தைகளை விலக்கிவிடுவார்களா? அவர்களையும் சேர்த்துக்கொண்டுதானே யாவரும் உண்ணுகிறார்கள்? அப்பெரியபுராண விருந்தில் தமிழ்க் குழந்தையாகிய எனக்கும் இடம் கிடைத்தது.
நாயன்மார்கள் வரலாறு கதையாக இருத்தலினாலும் சேக்கிழார் வாக்கு ஆற்றொழுக்காகச் செல்வதாலும் பெரியபுராணம் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. என் ஆசிரியர் பாடம் சொல்லும் முறையினால் நான் அதை நன்றாக அனுபவித்துக் கற்று வந்தேன். பாடம் சொல்லி வரும்போது பிள்ளையவர்களிடமுள்ள சிவ பக்தித்திறம் நன்றாகப் புலப்பட்டது. அவர்களுடைய அந்தரங்கமான பக்தியைப் பெரியபுராணத்திலுள்ள செய்யுட்கள் வெளிப்படுத்தின. நான் அதைப் பாடங் கேட்ட காலத்தில் வெறுந்தமிழை மாத்திரம் கற்றுக்கொள்ளவில்லை; என்னுடைய மாதாமகர், தந்தையார் ஆகியவர்களது பழக்கத்தால் என் அகத்தே விதைக்கப்பட்டிருந்த சிவநேசமென்னும் விதை பிள்ளையவர்களுடைய பழக்கமாகிய நீரால் முளைத்து வரத் தொடங்கியது.
ஏட்டிற் கண்ட செய்யுட்கள்
பெரியபுராணப் பாடம் நடந்து வந்தது. ஒருநாள் திருவாவடுதுறையிலிருந்து கண்ணப்பத் தம்பிரானென்பவர் மாயூரத்துக்கு வந்தார். அவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் காறுபாறாக இருந்தவர். அவர் வந்த அன்று தற்செயலாகக் கண்ணப்ப நாயனார் புராணப் பாடம் கேட்டோம். கண்ணப்பத் தம்பிரானும் உடனிருந்து கேட்டு இன்புற்றார். கட்டளை மடத்திலே பாடம் நடைபெற்றது.
அன்றைக்கே அப்புராணத்தை முடித்துவிட வேண்டுமென்று சிலர் வற்புறுத்தினமையால் நாங்கள் வேகமாகப் படித்து வந்தோம். என் ஆசிரியரும் சலிப்பின்றிப் பாடஞ் சொல்லி வந்தார். நாங்கள் அக்காலத்திற் கிடைத்த அச்சுப் புத்தகத்தை வைத்துப் படித்து வந்தோம். கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புத்தகசாலையின் ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்.
நெய்யில்லா உண்டி
பிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.
அப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்துகொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரன் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச் சென்று போசனம் செய்துவிட்டு வந்தேன்.
ஆகாரமான பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடைபெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், “மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது” என்றார். அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடஞ் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.
வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும் துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை. “பெரிய கவிஞர். தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர். தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர். ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர். சில நாள் நெய் இல்லாமல் உண்டார். ஒருவேளை கட்டளை மடத்தில் உண்ட உணவு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விசயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.
‘எண்ணெய் இல்லை’
ஒரு நாள் காலையில் அவர் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணி ஒரு பலகை போட்டுக்கொண்டு அதன் மேல் அமர்ந்தார். ஒரு வேலைக்காரன் அவருக்கு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். அவன் உள்ளே சென்று தவசிப் பிள்ளையை எண்ணெய் கேட்டான். எண்ணெய் இல்லை.
என் ஆசிரியர் எந்தச் சமயத்திலும் பாடஞ் சொல்லும் வழக்கமுடையவராதலின் எண்ணெய் தேய்த்துக்கொள்ள உட்கார்ந்தபடியே பாடஞ் சொல்லத் தொடங்கினார். நானும் பிறரும் புத்தகத்தோடு அருகில் இருந்தோம். எண்ணெய் வருமென்று அவர் எதிர்பார்த்திருந்தும் பாடஞ் சொல்லும் ஞாபகத்தில் அதை மறந்துவிட்டார்.
நான் அதைக் கவனித்தேன். எண்ணெய் இல்லையென்பதை அறிந்துகொண்டேன். உடனே மெல்ல ஏதோ காரியமாக எழுபவன் போல எழுந்து வேகமாகக் காவிரிக் கரையிலுள்ள கடைக்கு ஓடிப்போய் என்னிடமிருந்த உரூபாயிலிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டு வந்து சமையற்காரனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பாடஞ் கேட்பதற்கு வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்துக் காய்ச்சின எண்ணெய் வந்தது. அவர் தேய்த்துக்கொண்டார்.
இப்படி இடையிடையே நிகழும் சில நிகழ்ச்சிகளால் அவருடைய நிலையை அறிந்தபோது என் மனம் புண்ணாகிவிடும். “புலமையும் வறுமையும் சேர்ந்து இருப்பது இந்நாட்டிற்கு வாய்ந்த சாபம் போலும்!” என்று எண்ணினேன்.
அவர் வாழ்க்கை
பிள்ளையவர்கள் பெரும்பாலும் சஞ்சாரத்திலேயே இருந்தமையால் குடும்பத்தோடு ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை. அவர் தம் மனைவியையும் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையையும் திரிசிரபுரத்தில் தம் சொந்த வீட்டிலேயே இருக்கச் செய்திருந்தார். அவ்வப்போது வேண்டிய செலவுக்குப் பணம் அனுப்பி வருவார். மாயூரத்தில் இருந்தபோது அவருடன் இரண்டு தவசிப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு மாதம் இரண்டு கலம் சம்பளம் திருவாவடுதுறை மடத்திலிருந்து அளிக்கப்பெற்று வந்தது. அவர்களது ஆகாரம் முதலிய மற்றச் செலவுகள் பிள்ளையவர்களைச் சார்ந்தன.
தவசிப் பிள்ளை
அந்த இருவர்களுள் பஞ்சநதம் பிள்ளை என்பவன் ஒருவன். தான் மடத்தினால் நியமிக்கப்பட்டவனென்ற எண்ணத்தினால் அவன் முடுக்காக இருப்பான். “இந்தப் பெரியாருக்குப் பணிவிடை செய்ய வாய்த்தது நம் பாக்கியம்” என்ற எண்ணம் அவனிடம் கடுகளவும் இல்லை. தமிழ் வாசனையை அவன் சிறிதும் அறியாதவன். “ஊரில் இருப்பவர்களையெல்லாம் சேர்த்துக் கூட்டம் போட்டுப் பயனில்லாமல் உழைத்துச் செலவு செய்து வாழ்கிறார்” என்பதுதான் பிள்ளையவர்களைப் பற்றி அவனது எண்ணம். பிள்ளையவர்கள்பால் பாடம் கேட்கும் மாணாக்கர்களிடம் அவனுக்கு வெறுப்பு அதிகம். பிள்ளையவர்கள் தம்மிடம் யாரேனும் மரியாதையாக நடந்து கொள்ளாவிட்டால் அதை அவர் பொருட்படுத்த மாட்டார்; அவனோ மாணாக்கர்களெல்லாம் தன்னிடம் மரியாதை காட்டவேண்டுமென்று விரும்புவான். அவனுக்குக் கோபம் உண்டாக்கிவிட்டால் அதிலிருந்து தப்புவது மிகவும் கடினமாக இருக்கும். அவனுடைய குணங்களை முன்பு நான் அறிந்திலேன்.
நான் படிக்க வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் அவனை, “பஞ்சநதம்” என்று அழைத்தேன். அவன் பதில் பேசாமலே போய்விட்டான். நான் அவ்வாறு அழைத்ததைக் கவனித்த என் ஆசிரியர் அவன் இல்லாத சமயம் பார்த்து என்னிடம், “அவனை இனிமேல் பஞ்சநதமென்று கூப்பிட வேண்டாம்; பஞ்சநதம்பிள்ளையென்று அழையும். நீ என்று ஒருமையாகவும் பேச வேண்டாம்; நீர் என்றே சொல்லும்; நீங்கள் என்றால் பின்னும் உத்தமம். அவன் முரடன்; நான் அவன் மனம் கோணாமல் நடந்து காலம் கழித்து வருகிறேன்” என்று கூறினார். மனித இயற்கைகள் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றனவென்று அறிந்து அது முதல் நான் சாக்கிரதையாகவே நடந்து வரலானேன்.
(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.
No comments:
Post a Comment