(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 3/4 – சி.பா. தொடர்ச்சி)
சான்றோர் தமிழ்
5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா.
சொற்பொழிவாளர் மு. இராகவையங்கார்
எழுத்தாளராக இருந்த மு. இராகவையங்கார் அவர்கள் சொற்பொழிவாளராகவும் துலங்கியிருக்கின்றார்.
1929ஆம் ஆண்டு பதிப்பு வேந்தர் அறிஞர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியம், சாசனம் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார், இப்பொழிவே பின்னர் ‘சாசனத் தமிழ்க் கவி சரிதம்’ என்ற நூலாகத் தோற்றம் பெற்றது.
1966-இல் காரைக்குடி கம்பன் விழாவில் தலைமை வகித்து, தலைமை உரை ஆற்றினார், 1959ஆம் ஆண்டில் பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் அழைப்பின் காரணமாகத் ‘தெய்வப் புலமை’ என்னும் பொருள் பற்றிச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஓர் உரை நிகழ்த்தினார்.
திருவிதாங்கூர் பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்தபோது சர்.சி.வி. இராமன் அவர்கள் தலைமையில் ‘காந்தளூர்ச்சாலை’ என்னும் பொருளில் முதல் நாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் பல சரித்திர ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துகளை எடுத்துக் காட்டித் தம் கருத்துகளைச் சான்றுகளுடன் நிறுவினார். தொடர்ந்து நிகழ்ந்த பொழிவுகளை அற்றை நாள் கல்வித் துறை வல்லுநரான கோபால மேனன் அவர்கள் தலைமையில் நிகழ்த்தினார். இச்சொற்பொழிவே பின்னாளில் soap , ‘Some Aspects of Kerala and Tamil Literature” என்ற பெயரில் இரண்டு பகுதிகளாக நூல் வடிவம் பெற்றது.
கவிஞர் மு. இராகவையங்கார்
இவர் கவிபாடும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந் துள்ளார். இளமை முதல் முதுமை வரை இவர் பாடிய கவிதைகள் பலவும் செந்தமிழில் வெளியாகி உள்ளன.
பொதுச் செய்திகள்
இவர் தாமே பல நூல்கள் இயற்றித் தமிழ்த் தொண்டாற்றியதுடன் நில்லாமல், பல தமிழ் நூல்கள் வெளிவருவதற்கும் காரணமாக அமைந்தார். இதில் குறிப்பிடத்தக்கவை எசு. வையாபுரிபிள்ளை அவர்களின் பணவிடு தூதும், வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய மூன்றாம் குலோத்துங்க சோழனும் ஆகும். இராமச்சந்திர தீட்சிதரின் சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பு முழுமையும் மு. இராகவையங்கார் அவர்களின் துணை கொண்டே உருவம் பெற்றது.
மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றிக் கூறும்போது எசு. வையாபுரிப் பிள்ளை அவர்கள்,
“பெரும்பாலும் ஆசிரியரது கருத்துகள் கொள்ளத் தக்கனவாகவே உள்ளன”
என்கிறார். (தமிழ்ச் சுடர் மணிகள்; ‘மு. இராகவையங்கார்.’ ப. 397). இவர் தம் நடையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘தெளிந்த நடை’ என்பர்
“பாண்டித்திய படாடோபமென்பது இவர்கள் நடையில் சிறிதும் இல்லை. இவர்கள் உரை நடையிலேயே ஓர் அபூர்வமான கனிவும் இனிமையும் வெளிப்படுகின்றன.”
(எசு. வையாபுரிப் பிள்ளை: தமிழ்ச்சுடர் மணிகள் : ப. 397,)
பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் நடையில் மட்டும் எளிமை உடையவர் அல்லர். வாழ்க்கையிலும் எளிமையைக் கடைப் பிடித்தவர். தம்முடன் பணியாற்றுப வர்களுடன் இனிமையாகப் பழகும் ஆற்றலும் மிக்கவர், இதனை அவருடன் பணியாற்றிய ஆர். வீரபத்திரன் அவர்கள் கூற்றால் தெளியலாம்.
‘சேரவேந்தர் செய்யுட் கோவை’யில் முதற்பகுதி அச்சாகி முடிந்த தறுவாயில் அந்நூல்பற்றிப் பேராசிரியரிடம் நான் கூறியிருந்த செய்தி ஒன்று நினைவிருக்கிறது. நூலில் ஆங்கில முன்னுரை, தமிழ் முன்னுரை, சேர வேந்தர் சரித்திரச் சுருக்கம் முதலிய பல செய்திகள் இடம் பெற்றிருக்க, வேறோர் முக்கியச் செய்தி காணப் பெறாதிருப்பது ஒரு குறையாக எனக்குத் தோன்றியது. திருவிதாங்கூர் மன்னர் பெருமானாரால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்தில், வள்ளல் அழகப்ப செட்டியார் அளித்த நன்கொடையால் உருவான தமிழ் ஆராய்ச்சித் துறையிலிருந்து முதன் முதலாக வெளிவரும் சேர வேந்தர்களைப் பற்றிய நூலில், அக்குலத்தில் தோன்றி அப்பொழுது மாமன்னராகத் திகழ்கிற சித்திரைத் திருநாளைப் பற்றியும், அழகப்ப வள்ளலைப் பற்றியும் வாழ்த்துரைகள் தக்க இடத்தில் அமைய வேண்டியதன் இன்றியமையாமையைப் பேராசிரியர்க்குப் பணிவோடு எடுத்துக் கூறினேன். அதைக் கேட்ட பேராசிரியர் ‘நீங்கள் கருதியது தக்கதே; மறந்திருந்த எனக்கு அதனை நினைப்பூட்டியது நன்று’ என அன்புரை கூறிப் பின்னர் மன்னர்க்கு ஒன்றும் வள்ளற்கு ஒன்றுமாக இரண்டு பாக்களை வாழ்த்தாகப் பாடி நூலில் இணைத்துக் கொண்டார்கள்.”
இப்பகுதி மு. இரகவையங்கார் அவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களாயினும் அவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாக இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடாமல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் உயர் பண்பாளர் என்பதை உணர்த்தி நிற்கின்றன.
முகவுரை
இவ்வாறாக ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழா சிரியராகவும், உரையாசிரியராகவும், சொற் பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்து மு. இராகவையங்கார் அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு அளவிடற் கரியது. அவர் சென்ற நெறி தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய நெறியாகும்!
(தொடரும்)
சான்றோர் தமிழ்
சி. பாலசுப்பிரமணியன்
No comments:
Post a Comment