Showing posts with label முனைவர் சி.பாலசுப்பிரமணியன். Show all posts
Showing posts with label முனைவர் சி.பாலசுப்பிரமணியன். Show all posts

Monday, May 08, 2023

சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3- முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 5/5 தொடர்ச்சி)

10. சான்றோர் பெருந்தகை மு.. 1/3


வடார்க்காடு மாவட்டத்திவ் வாலாசா என்னும் ஊர் உளது. அவ்வூரின் அருகில் அழகுற வேலமலை நிமிர்ந்து நிற்கின்றது. வேலமலையின் அடிவாரத்தே வேலம் என்னும் எழிற் சிற்றுார் அமைந்துள்ளது. அச்சிற்றுாரே சிற்றுாரும் பேரூரும் தமிழ்கூறும் நல்லுலகும் ‘முவ’ என்ற இரண்டு எழுத்துக்களால் ஒருமுகமாக மாண்புடன் போற்றும் முனைவர்மு. வரதராசனார் அவர்களின் சொந்த ஊராகும்.

பிறப்பு

சொந்த ஊர் வேலம் என்றாலும், முனைவர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும். 1912ஆம் ஆண்டிலே பிறந்த முனைவர் அவர்களின் தொடக்கக் கல்வி திருப்பத்துாரிலும், பின்னர் வாலாசாவிலும் கழிந்தது. இவர்களின் பாட்டியாரே இவர்களைப் பாராட்டிச் சீராட்டிச் செல்லமாக வளர்த்தவர்கள். இவர்களின் இனிய நினைவினை நினைவுகூர எழுந்ததே முனைவர்அவர்களின் ‘விடுதலையா?’ என்ற சிறுகதை. தம்மை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரை நினைத்துக் கொண்டால், முனைவர் அவர்கள் பழைய நினைவுகளையெல்லாம் உணர்ச்சியோடு பேசுவார். முனைவர் அவர்களின் குடும்பம் ஊரில் செல்வாக்காக விளங்கிய குடும்பம். மேலும் முனைவர் அவர்கள் குடும்பத்திற்கு ஒரே ஆண்மகனாராவர். உடன் பிறந்தவர் இருவரும் தமக்கையும் தங்கையும் ஆவர். தந்தையாரின் அறிவுத் திறமும் அன்னையாரின் உறுதி நெஞ்சமும் முனைவர் அவர்கள் பெற்ற குடும்பச் சொத்து ஆகும். முனைவர் அவர்கள் படிக்கும் நாளில் கணக்குப் பாடம் சிறப்பாக வந்தது. அப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து முதன்மையாகத் தேர்வு பெறுவார்கள். திருப்பத்துர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் 1928ஆம் ஆண்டு பெரும் பள்ளி இறுதித் தேர்வு (S.S.L.C) எழுதி வெற்றி பெற்றார்கள்.

முதற் பணி

அக்காலத்தில் இந்த நாள் போன்று ஆங்காங்கே கல்லூரிகள் அமைந்திருக்கவில்லை. கல்லூரிக் கல்வி யென்றால் சென்னைக்கே வந்து படித்தல் வேண்டும். வீட்டிற்கு ஒருமகன் என்ற நிலையில் முனைவர் அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கல்வி கற்க இயலவில்லை. குடும்பச் சூழல் காரணமாக வரி வருவாய்த்துறையில் (Revenue Department) எழுத்தராகச் (Clerk) சேர்ந்தார்கள். ஏறத்தாழ அப்பணியினைத் திறம்பட மூன்று ஆண்டுகள் ஆற்றினார்கள். உயர் அலுவலர்களின் ஒருமித்த பாராட்டுக்கு உரியவரானார்கள். மனச்சான்றை மதித்துக் கடமை உணர்வோடு பணியாற்றிய காரணத்தால் வேலைப் பளு இவர்களுக்கு மிகுதியாகத் தரப்பட்டது. இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வேலைப்பளுவும் அதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறையும் இவரை அந்தப் பணிக்கு ஒரு முழுக்குப் போடச் செய்தன. 1931ஆம் ஆண்டு முதல் 1934 வரை மூன்றாண்டுகள் ஊருக்கு வந்து ஓய்வு பெற்று உடல் நலத்தினைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

தமிழ்க் கல்வி

உடலை ஓம்பிய நேரத்தில் பேரறிஞர் கூன் இயற்கை மருத்துவம் பற்றிய நூல் ஒன்றினை இவர்கள் படித்தார்கள். அந்நூல் இவர்கள் வாழ்வில் நல்ல திருப்பத்தினைத் தந்தது. அதன்வழித் தம் உடல் நலம் காத்துக் கொண்ட இவர்கள் உளநலத்திற்குரிய தமிழ்க் கல்வியினை மேற்கொண்டார்கள். இளமை தொட்டே இவர்கள்பால் குறைவற நிரம்பயிருந்த தமிழார்வம் தொடர்ந்து தமிழ் நூல்களைக் கற்றுவரச் செய்தது. யாழ்ப்பாணம் திரு. முருகேச பண்டிதர் அவர்களின் மாணவர் திரு. முருகைய முதலியார் அவர்களிடம் இவர்கள் தமிழ் நூல்களைக் கற்று வரலானார்கள். 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் முதல்னிலைத் தேர்வு (Vidwan preliminary) எழுதி வெற்றி பெற்ற இவர்கள், திருப்பத்துார் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியரானார்கள். இருபத் திரண்டு வயதில் தமிழாசிரியர் பணி தொடங்கிய இவர்கள், மறு ஆண்டிலேயே (1935) வித்துவான் நிறைநிலைத் (vidwan Final) தேர்வு எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதலாமவராகத் தேறித் திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார்கள். ஆசிரியப் பணியோடு தேர்விற்கும் படித்துச் சிறப்பாகத் தேறியமை எடுத்த செயலைத் திறம்படச் செம்மையுற நிறைவேற்றும் இவர்கள் ஆற்றலை இனிமையுறப் புலப் படுத்தும். தொடர்ந்து கல்வி பயின்று பி.ஓ.எல். (B.O.L) தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்.

பச்சையப்பன் பணி

1939ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியப் பணி ஏற்றார்கள். அக்காலை பின்னாளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் இலக்குமணசுவாமி முதலியார் அவர்கள் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார்கள். அவர்கள் இவர் தம் வளர்ச்சிக்கு வாய்ப்புத் தந்து ஊக்கமூட்டி வந்தார்கள். 1945ஆம் ஆண்டில் வினை சொற்களைப் (Verbs) பற்றி ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் (M.O.L.) பட்டம் பெற்றார்கள். அது பொழுது தமிழ்த் துறையினைத் தலைமை தாங்கி நடத்திய மோசூர் கந்தசாமி முதலியா ரவர்கள் இவர்கள்பால் பேரன்பு செலுத்தி இவர்களை வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் மறைவிற்குப் பிறகு 1946ஆம் ஆண்டில் இவர்கள் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப் பெற்றார்கள். 1948ஆம் ஆண்டில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ (The treatment of Nature in Sangam Literature) என்ற பொருள் குறித்து ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் ழுதன் முதலில் ‘முனைவர்(டாக்டர்)’ பட்டம் பெற்றார்கள்.

வகுப்பறையில்

முனைவர் அவர்கள் எந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை மாணவர் மனங்கொளக் கற்பிப்பார்கள். சங்க இலக்கியத்தில் நல்ல புலமை அவர் களுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. சங்க இலக்கிய மாந்தரின் நுண்மையான உள்ளத்தினை, அதிலும் குறிப்பாகத் தலைவியின் நெஞ்சப்பாங்கினை, அவர்கள் அமைதியோடும் உணர்ச்சியோடும் உணர்த்தும் பொழுது வகுப்பறையில் இருந்து கேட்கவேண்டும். இலக்கணப் பாடத்தைத் தெளிவாக நடத்துதல், மொழி நூலின் திறம் காட்டல், இலக்கிய ஆராய்ச்சியின் சிறப்பைப் புலப்படுத்துதல், ஆக இப்படிப் பல துறைகளிலும் அவர்தம் சொற்பொழிவு கருத்திற்கு விருந்தாக அமைந்தது. ஆரவாரமின்றி அமைதியாகக் கருத்துகளை எடுத்து மொழிவார். அவர்களுடைய சொற்பொழிவிற் கருத்தலைகள் வந்து போகும். நல்ல சிந்தனைச் சிற்பி. அவர்கள் வாழ்க்கையில் உணர்ச்சிக்கு அதிகம் இடம் கொடாமல் உண்மைக்கும் நடுவு நிலைமைக்கும், அறிவிற்கும் இடந்தந்து வாழ வேண்டும் என்பதனை அவர்கள் பெரிதும் வற்புறுத்துவார்கள். சுருங்கச் சொன்னால். அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் மன நலம் சேர்ப்பன வாகும். பொது மன்றங்களில் அமையும் இவர்தம் சொற் பொழிவுகளும் அவ்வாறே ஆரவாரத்திற்கிடமின்றி அமைதியுடன் கருத்தாழத்துடன் அறநெறியில் அமைந்து துலங்கக் காணலாம். 1953ஆம் ஆண்டு சென்னை-தேனாம்பேட்டை யில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவின் போது இலக்கிய அரங்கிற்குத் தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் திரு. நடேசப் பிள்ளை அவர்கள், இவர்களைத் ‘தமிழ்நாட்டின் இலக்கிய நோபெல் பரிசாளர்’ என்று அவையோருக்கு அறிமுகப்படுத்திய காட்சியும், அதுபொழுது இவர்கள் ‘செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி’ இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென, இல்லவர் அறிதல் அஞ்சி, மழலை மென்சொல் பயிற்றும் நாணுடை அரிவை என்ற அகநானுாற்றுத் தொடர்களை விளக்கிப் பேசிய இலக்கியப் பேச்சும், இன்றும் பலர் கண்களிலும் செவிகளிலும் நிறைந்துள்ளன. 1957ஆம் ஆண்டு கொண்டாடப் பெற்ற முதல் இந்தியச் சுதந்திரப்போர் நூற்றாண்டு விழாவில் சென்னை அரசு இயல்துறை வல்லுநரென இவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டும் பரிசும் வழங்கியது.

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Monday, April 24, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

      25 April 2023      அகரமுதல



(சொல்லின்செல்வர் சேதுப்பிள்ளை 3/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5


ஆய்வு நூல்கள்

நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள்,

உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப் பொருளை நுணுகி ஆய்ந்து, அதன் சொற்பொருள் நயங்களை யாவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் தெள்ளென வகுத்தோதி ஊக்கமூட்டும் செவ்விய உரைநடை நூல் ஒன்று இல்லாத குறையை நிறைவுசெய்த பெரும் புலவர் இத் ‘திருவள்ளுவர் நூல் நயம்’ எழுதிய திருவாளர் சேதுப்பிள்ளையேயாவர்.

திருக்குறட் பெருநூலை நன்கு கற்றாராய்ந்து உணர விரும்பும் மாணவர் யாவருக்கும் அந்நூற் சொற்பொருள் வளப் பண்டகசாலைக்கு நயமிக்க தோர் திறவுகோலாக இவ்வுரைநடைச் செந்தமிழ்ச் சீரிய நூலை இயற்றிய தமிழ்வாணர்க்குத் தமிழுலகு என்றும் கடப்பாடுடையது”

என்று அந்நூலுக்குத் தாம் வழங்கிய முன்னுரையில் போற்றியுரைக்கின்றார்.

இதே ஆண்டில் வெளிவந்தது ‘சிலப்பதிகார நூல் நயம்’ என்ற மற்றொரு நூல். ஆசிரியர் பெருமை, அரச நீதியும் அரசியலும், ஆரிய அரசரும் தமிழரும், கண்ணகியின் கற்பின் திறம். வினைப்பயன், பண்டைத் தமிழ் மக்கள் நாகரிகம், சிலப்பதிகார நூல்நயம் என்னும் ஏழு தலைப்புகளில் இந்நூல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 1932ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வீரமாநகர்’ என்னும் நூல் கம்பராமாயணம் பற்றிச் செய்த அரியதோர் அருமையான ஆய்வு நூல், இந்நூலின் இனிமையை நூலுக்கு முன்னுரை வரைந்த வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள்,

பலர்க்கும் தெரிந்த பழங்கதைகளை, ஆசிரியர் தம் புலமைத் திறமையால் புதுமையானவையாக்கிப் படிப்பவர் மனத்தை மகிழ்விக்கிறார். கதைப் போக்கில் வரும் தக்க இடங்களில் தக்க அறிவுரைகள் இலக்கியச் சுவையோடு இனிது கலந்தூட்டி இன்பமும் பயனும் எய்தச் செய்தல் இந்நூலிற் பல இடங்களில் காணலாம். இதில் ஒவ்வொரு பக்கமும் இனிமையா யிருப்பதை வாசிப்போர் சில பக்கங்கள் வாசித்த அளவில் தெரிந்துகொள்வர் என்பது திண்ணம். இந்நூலின் இனிமை நுனியிலிருந்து நுகரப்படும் கரும்பின் இனிமை போன்றிருக்கின்றது.”

என்று எடுத்துரைக்கின்றார்.

அடுத்து 1945இல் வெளிவந்த ‘தமிழ் விருந்து’ தமிழர்தம் கலைத்திறன், தமிழரின் வாழ்க்கை மேன்மை, தமிழ் மொழி யின் செம்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை ஆகியவற்றை எடுத்தியம்புகிறது.

அடுத்த ஆண்டில் 1946இல் வெளிவந்த ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூல், இவர்தம் ஆய்வின் மணி முடியாகத் திகழ்வது. ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இந்நூலில் ஆய்விற்குட்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டு நூலாகவும் வரலாற்று நூலாகவும் இந்நூல் துலங்குகின்றது. இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின பரிசு பெற்ற பெருமை உடையது. திரு. வி. க. அவர்களின் மதிப்புரை இந்நூலின் தரத்திற்கும் ஆசிரியர்தம் ஆய்வுத் திறனுக்கும் உரை கல்லாக ஒளிாகின்றது.

“ஆசிரியர், நிலம்- மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-படை-குலம்-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு இந்நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர்பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புகளும் பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் சில ஊர்ப் பேர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும், மாறியும் தத்தம் முதல் நிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந்நூலுள் பொலிதரும் சில ஊர்ப் பேர்களின் வரவாறு, சாம்பியும் சோம்பியும், நலிந்தும் மெலிந்தும் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம் புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் சவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்.”

1947இல் வெளிவந்த ‘தமிழர் வீரம்’ என்னும் பெயரிய நூல் தமிழர்தம் போர்த் திறத்தையும், படைத் திறத்தையும் விளக்குகிறது.

அடுத்த 1948இல் வெளியிடப் பெற்ற ‘தமிழின்பம்’ பாரதப் பேரரசின் சார்பில் இயங்கும் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது. இந்நூலுக்கென வழங்கப்பட்ட ஐயாயிரம் வெண்பொற் காசுகளுடன் பத்தாயிரம் வெண்பொற் காசுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழக நிதி வளர்ச்சிக்காக இவர் கொடுத்தார். இதனால் பலரும் இவரைப் பாராட்டினர்.

ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் வந்த ‘வழி வழி வள்ளுவர்’ வள்ளுவரைப் பிற புலவர்கள் எடுத்தாளும் திறனை விளக்கி நிற்கிறது.

இறுதியாக 1958இல் வெளிவந்த ‘தமிழகம் அலையும் கலையும்’ தமிழ்நாட்டின் கலைச்சிறப்பையும். கலை வளர்த்த நகரங்களின் நல்லியல்புகளையும் ஆய்கின்றது.

ஆய்வு நூல்களாக அன்றிக் கட்டுரைத் தொகுப்புக்களாக வந்தவை ‘கடற்கரையிலே’, ‘ஆற்றங்கரையினிலே,’ வேலும் வில்லும்’ என்பன. ‘வேலும் வில்லும்’ என்ற நூல் கம்பரும் கச்சியப்பரும், மூவர் தமிழும் முருகனும், திருச்செந்துார் முருகன் என்ற மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கவிஞரும் கலைஞரும் உரையாடுவது போன்று அமைந்தது ‘கடற்கரையிலே’ என்ற நூல். விருதைத் தமிழ்க் கழகத்தின் சார்பில் வெளிவந்த தமிழ்த் தென்றல் என்ற இதழில் வெளி வந்த தொடர்கட்டுரைகள் இருபதின் தொகுப்பு நூல் இது. தமிழக ஆறுகளின் சிறப்பு, அவற்றின் கரைகளில் அமைந்த நகரங்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு இவற்றை எடுத்துக் கூறும் ‘ஆற்றங்கரையினிலே’ கல்கியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் நாற்பத்தெட்டின் தொகுப்பு நூல் ஆகும். இது 1961 இல் வெளிவந்தது.

‘வேலின் வெற்றி’, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற இரு நூல்களும் முறையே கந்த புராணத் திரட்டையும் திருக்காவலூர்க் கலம்பகத்தையும் தழுவி எழுதப்பட்ட உரை நூல்கள் ஆகும்.

Words and their Significance. Dravidian Comparative Vocabulary, Common Dravidian Proverbs என்பன இவர் ஆங்கிலததில் எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகும்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Monday, April 17, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 2/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5


மேடைத் தமிழ் வளர்த்த மேன்மையாளர்

தம் ஆராய்ச்சித் திறத்தாலும், எழுத்தாற்றலாலும் தமிழ் ஆற்றலை வளர்த்ததைப் போன்றே மேடைப் பேச்சால் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் அறிவையும் பெருக்கிய பெருமை உடையவர் இரா.பி.சே. இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன.முனைவர்மு.வ. அவர்கள் ‘தமிழ் இலக்கிய அரங்கில் மாறுதல் செய்தவர் இரா.பி.சே.’ என்று போற்றுகின்றார்.
“தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்து கொண்டிருந்தனர். தம் முடைய சொற்பொழிவுகளின் மூலம் 50ஐ 50,000 ஆக்கித் தந்தவர் ஆவர்.”

– பூ. சா. கோ. கலைக்கல்லூரி மலர் 1958, பக். 58

இப்போற்றியுரை இரா. பி. சே. அவர்களின் பொழிவாற்றும் திறனை-உரனை விளக்கி நிற்கின்றது. நெல்லையில் வழக்கறிஞர் சேதுப்பிள்ளையாக இருந்தபோதும், அண்ணாமலையில் தமிழ்ப் பணியாற்றியபோதும் இவர் ஆற்றிய பொழிவுகள் பல. என்றாலும் சென்னையில் இவர் ஆற்றிய பொழிவுகளே மிகுதி. ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் வாரத்திற்கு ஒரு முறை எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கம்பராமாயணச் சொற் பொழிவாற்றினார். இதன் விளைவாகச் சென்னையில் ‘கம்பன் கழகம்’ ஒன்று தோற்றம் பெற்றது, அதன் தலைவராகச் சேதுப்பிள்ளையே விளங்கினார், கோகலே மன்றத்தில் ஞாயிறுதோறும் என மூன்று ஆண்டுகள் சிலப்பதிகாரப் பிழிவினைப் பொழிவாக்கினார். தங்கசாலைத் தமிழ்மன்றத்தில் வாரத்திற்கு ஒருநாள் என ஐந்து ஆண்டுகள் திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தி னார், கம்பரையும் கச்சியப்பரையும் இணைத்துப் பொழி வாக்கிய இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இப்பொழி வினை நிகழ்த்தினார். இதன் பயனாகக் ‘கந்தபுராணத் திரட்டு’ என்னும் நூல் பதிப்பிக்கப்பெற்றது, ‘வேலின் வெற்றி’, ‘வேலும் வில்லும்’ போன்ற நூல்கள் உருவாக்கப் பெற்றன. மேலும் புறநானூற்று மாநாடு, திருக்குறள் மாநாடு தமிழாசிரியர் மாநாடு போன்ற இலக்கிய மாநாடுகளில் தலைமை உரையும் ஆற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள் விழாவில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை யில் ‘குறளும் குறளாசிரியர்களும்’ என்ற தலைமையில் அரியதொரு சொற்பொழிவாற்றினார்.

நூலாசிரியர்

இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்கள் பல. இவை பதிப்பு நூல்கள், வரலாற்று நூல்கள். ஆராய்ச்சி நூல்கள் என்னும் முப்பெரும் பிரிவுக்குள் அடங்குகின்றன. ஆராய்ச்சி நூல்களுள் ஆய்வாக மலர்ந்தவை சில; கட்டுரை களின் தொகுப்புகளாக அமைந்தவை சில: பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை சில. இவையே அன்றி இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இன்னும் பல நூல்வடிவம் பெறாமலேயே இருக்கின்றன.

பதிப்பு நூல்கள்

இவர் பதிப்பித்த முதல் நூல் ‘கந்தபுராணத் திரட்டு’ என்பது 1944இல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் சென்னையில் கந்தகோட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் விளைவால் உருப்பெற்றது. கந்தபுராணத்தினின்றும் ஆயிரத்தைந்நூறு பாடல்கள் திரட்டிப் பொழிப்புரையுடன் எழுதப்பட்ட இந் நூல் மூன்று பகுதிகளாக வெளிவந்தது.

1957ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களில் சிறந்தன என்று இவரால் கருதப்பட்ட பாடல்கள் சிலவற்றின் தொகுப்பே ‘பாரதியார் இன் கவித்திரட்டு’ என்பது. இது சாகிததிய அகாதெமியின் வெளியீடு ஆகும்.

இதே ஆண்டில் வெளிவந்த ‘செஞ்சொற் கவிக்கோவை’ சங்கக்காலம் முதல் பாரதியார் காலம் ஈறாக உள்ள இலக்கியங்களின் சுவைமிக்க பாக்களின் தொகுப்பு நூல். 1960இல் பதிப்பிக்கப் பெற்ற ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலும், ‘செஞ்சொற்  கவிக்கோவை’யைப் போன்றே சுவைமிகக தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல் ஆகும். இவையே அன்றி, எல்லீசர் திருக்குறளுக்கு வரைந்த உரையையும் பதிப்பித்துள்ளார்.

வரலாற்று நூல்கள்

வாழ்க்கை வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படா நிலையில், அத்துறையிலும் நூல்கள் பல உருவாவதற்கு வழிகோலியவர் இரா.பி. சே. ஆவர். ‘தமிழ்நாட்டு நவமணிகள்,’ ‘கால்டுவெல் ஐயர் சரிதம்,’ ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்ற மூன்றும் இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆகும். இவற்றுள் முதன் முதலில் வெளிவந்த நூல் ‘தமிழ்நாட்டு நவமணிகள்’ என்பது 1926ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற இந்நூல் (உ)லோகோபகாரி என்ற இதழில் வெளிவந்த ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும் ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந் தேவியார்,  மணிமேகலையார், கண்ணகியார், புனிதவதியார், மங்கையர்கரசியார், திலகவதியார் என்னும் தமிழ் நாட்டுப் பெண்மணிகள் ஒன்பதின்மரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல். கதைப்போக்கில் அமைந்தது இந்நூல். இந்நூலின் சிறப்பினை,

“பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சிறப்பை இக்காலத்துத் தமிழ்ச் சிறார்க்கு எடுத்தோதும் புத்தகங்களும், பண்டுதொட்டுச் சரித்திரவாயிலாகவும், பனுவல்கள் வாயிலாகவும் அறியக் கிடக்கும் நம் நாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தற்காலம் வெளிப்போந்துள்ள நூல்களும் காண அரியவாயினவே என்று நெடுநாளாகக் கருதியிருந்த ஒரு பெருங் குறையை இந்நூலாசிரியர் நிறைவு செய்துள்ளார்”

என்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் அமைச்சர் தி. நெ. சிவஞானம் பிள்ளை பாராட்டி யுரைக்கின்றார்.

1936இல் வெளிவந்த ‘கால்டுவெல் ஐயர் சரிதம்’ கால்டுவெல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புவது.

1946இல் வெளியிடப்பெற்ற ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூல் வீரமாமுனிவர், போப்பையர். கால்டுவெல், எல்லீசர். இக்னேசியசு ஐயர், வேதநாயகம் பிள்ளை, கிருட்டிணபிள்ளை போன்ற கிறித்துவர்கள் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டுகளின் விளக்கமாக அமைந்துள்ளது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Monday, April 10, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5 – – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 1/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5

வள்ளுவரிடம் ஈடுபட்ட இவர்தம் உள்ளம் கம்பனிடம் செல்லுமாறு திசைமாற்றியவர் சுப்பையா(முதலியார்) அவர்கள் ஆவர். கம்பனில் திளைத்தபின் இவருடைய ஆர்வம் கம்பன் கவி நலத்தை வெளிப்படுத்துவதில் முனைந்தது. தமிழுக்குக், கதியான கம்பரையும், வள்ளுவரையும் தெளிந்தவரின் உள்ளம் பாரதியாரின் பாநலத்திலும் ஈடுபட்டது. பாரதியின் கவிதையில் திளைத்ததன் பயனாகச் செந்தமிழ்நாடு, முப்பெருங்கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து முதலிய கட்டுரைகள் முகிழ்த்தன. பாரதியார் கண்ட புலவர்களில் இளங்கோவடிகளும் ஒரு சிறந்த புலவர் ஆதலின், இளங்கோவடிகளும் இவரைக் கவர்ந்தார். இவ்வாறு நெவ்லையில் இவர் ஆற்றிய அரிய கலைப் பணியைக் கண்ட நெல்லை மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்விக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகத் தெரிந்தெடுத்தார். அக்குழு நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு இளைஞர்கள் நன்மைக்கான நோக்கங்களை இவர் எடுத்துரைத்தார்.

நகர் மன்றத் தொடர்

1924ஆம் ஆண்டில் நெல்லையில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலின் பின் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் (1926,28) வாகை சூடியவர் இவரே. மூன்றாவது முறை இவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன். இவர் திறமையைக் கண்டு நகரமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். துணைத்தலைவராக இருந்தபோது. நெல்லை நகரத் தெருப் பெயர்களின் வரலாற்றை அறிந்து, அவற்றின் உண்மைப் பெயரை நிலை நாட்டிய பெருமை சேதுவுக்கே உரியதாகும்!

பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பணி

நெல்லை நகர்மன்றப் பணிபுரிந்த இரா. பி. சே. அவர்கள் 1930ஆம் ஆண்டு கா.சு. பிள்ளை அவர்களின் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். 1931 ஆம் ஆண்டில் தமிழ் ஆனர்சு வகுப்பு மாணவர்களுக்குக் கம்பராமாயணம்; மொழிநூல் ஆகிய பாடங்களை எடுத்தார். அந்நாளில் மொழி நூல் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. இவர்தம் மொழி நூல் புலமைக்கும் ஆங்கில அறிவிற்கும் உரை கல்லாகத் துலங்குவது ‘Words and their significance’ என்ற ஆங்கில நூல். அதே ஆண்டில் தமிழ் வித்துவான் பயிலும் மாணாக்கர்க்குத் திருக்குறள், சிலம்பு முதலிய பகுதிகளைக் கற்பித்தார். பல்கலைக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் பற்றிச் சொற் பொழிவாற்றினார். சொற்பொழிவினைச் செவிமடுத்த ஆங்கிலப் பேராசிரியர் சுந்தரம் அவர்கள்,

“அன்பர்.சேதுவே! தமிழ் என்றால் இனிமை இனிமை என்று இயம்புகின்றார்கள்; அது பற்றுக் காரணமாகக் கூறும் வெற்றுரை என்றே நான் இதுகாறும் எண்ணியிருந்தேன். இன்று தங்கள் தமிழ்ப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தமிழ் இனிமை என்பது முற்றிலும் உண்மையெனக் கண்டேன். இன்று முதல் நானும் நற்றமிழ் நூல்களைக் கற்று இன்புறுவேன்”
என்று பாராட்டினர். சொற்பொழிவின் தலைமை இடத்தை அணிசெய்த விபுலானந்த அடிகளார் :

“முன்பு சேரன் தம்பியாகிய இளங்கோ சிலப்பதிகார நூலைப் பாடினார். இன்று என் அருமைத் தம்பி யாகிய சேதுப்பிள்ளை சிலம்பின் ஒலி எல்லோருடைய சிந்தையிலும் செவியிலும் ஒலிக்குமாறு செய்தார்.”

என்று பாராட்டினர். ஆறாண்டுகள் அண்ணாமலையில் அரும்பணி ஆற்றிய சேதுப்பிள்ளை அவர்களுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட அண்ணாமலை நகர்த் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட சுநீதி குமார் சட்டர்சி அவர்கள், அவர் உரையைக் கேட்டு,“தமிழின் இனிமையே உருவெடுத்து வந்தது
போல் இருக்கிறது தங்கள். பேச்சு”

என்று பாராட்டினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடன், அந்நாளில் இராமகிருட்டிண மடத்தில் சமயப் பணிபுரிந்த விபுலானந்த அடிகளாரின் முயற்சியால் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பணியினை ஏற்றார். அடுத்த ஆண்டில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவர் எசு. வையாபுரிப் பிள்ளை அவர்களின்கீழ் அத்துறைத் துணைத்தலைவர் ஆனார். அப்போது வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பேரகராதிப் பணியினை முடித்தலில் உற்ற துணையாயிருந்தார். வையாபுரிப்பிள்ளை அவர்களுக்குப்பின், அந்த இடத்தை சேதுப்பிள்ளை அணி செய்தார். இதன் பயனாகப் பல நூல்களை ஆழ்ந்து கானும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது,

நாளடைவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘இலாசரசு’என்பவரின் பெண் மக்கள் இருவர்.திம் கொடையால் உருவாக்கப்பட்ட ‘பேராசிரியர்’ இடத்தை முதன் முதலில் அணி செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைத் தேடிக் கொண்டவர் இவர். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரித் தமிழ் ஆனர்சு பயிலும் மாணவர்களுக்கும் முதுகலை மாணவர்களுக்கும் வகுப்பு எடுத்தார். எம்.லிட்,. பிஎச்.டி. பட்டங்கள் பெறுவவற்காக ஆய்வு செய்த மாணவர்கள் பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மேலும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மொழி, இலக்கிய நலம் கருதி நிபுணர் குழுக்கள் ஏழில் உறுப்பினராக இருந்தார். அவையாவன :

1. சென்னை அரசினர் நியமித்த கவி பாரதியார் நூல்கள் வெளியீட்டுக் குழு.

2. இந்திய அரசினர் அரசியலமைப்பை முக்கிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பொருட்டு அமைத்த அரசியலமைப்புச் சொற்கள் மொழியாக்க நிபுணர் குழு.

3. சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு, நிருவாகக் குழு. 4. தென்னிந்திய மொழிகள் புத்தக டிரசுட்டின் ஆலோசனைக் குழு.

5. சென்னை அரசினர் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தயாரித்த நிருவாகச் சொற்களை முடிவு செய்ய அமைத்த நிபுணர் குழு.

6. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயண ஆராய்ச்சிப் பதிப்புக் குழு.

7. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதியின் ஆலோசனைக் குழு.

இத்துடன் நில்லாமல், இந்திய மொழித்துறைகள் பலவற்றிற்கும் துணைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். 1937 முதல் 1955 வரை ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாடுகளில் கலந்துகொண்டு அரிய பொழிவுகள் பல ஆற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார். இவர் காலத்தில் வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள் 1. திராவிடப் பொதுச் சொற்கள் (Dravidian common Vocabulary) 2. திராவிடப் பொதுப் பழமொழிகள் (Common Dravidian Proverbs).

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Monday, April 03, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 


ஃஃஃஃ       04 April 2023      அகரமுதல



(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5

தோற்றுவாய்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்; ஆங்கில மோகம் கொண்ட அவர் காலத் தமிழரின் செவிகளில் சிந்தைக்கினிய செந்தமிழ் நடைகளை ஓதி அவர்தம் நெஞ்சக்களனில் தமிழ் உணர்வைப் பாய்ச்சியவர்; இத்தகு பீடுசால் பெருமைகளைத் தனக்கே உரியதாக்கிக் கொண்ட தமிழ்த் திருமகன்-தமிழிலக்கிய வானின் விடிவெள்ளி இரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றம் உடைத்து. அவர்தம் தமிழ்த்தொண்டு உரையிட்டுச் சொல்லொணா அருமை வாய்ந்தது.

தோற்றம்

திருநெல்வேலியில் நெல்லை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இராசவல்லிபுரத்தில் தோன்றியவர். 1895ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் துன்முகி ஆண்டு பூச நன்னாளில் பிறந்தவர். இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் கார்காத்த வேளாளர் மரபில் கொழுவடைக் கோத்திரத்தில் வந்த பிறவிப்பெருமாள் பிள்ளையும், அவர்தம் வாழ்க்கைத் துணையான சொர்ணத் தம்மாளும் ஆவர். தம் பெற்றோர்க்குப் பதினோராவது பிள்ளையாகத் தோன்றியவர். இவர்க்கு முன் தோன்றிய பதின்மரும் இவ்வுலகை நீத்து அவ்வுலகடைந்தனராதலின் பதினோராவது பிள்ளையானாலும் தவமிருந்து பெற்ற தவப்புதல்வர் இவர். பெற்றோர்க்கு ஒரு பிள்ளையாய் செல்லப்பிள்ளையாய்-செல்வப் பிள்ளையாய் வளர்ந்தவர்.

கல்வி

இரா. பி. சேதுப்பிள்ளையின் ஆரம்பக்கல்வி இராசவல்லி புரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே தொடங்கியது. அந்நாள் நண்பர் அழகிய கூத்தர் என்பவர். தொடக்கப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தவர்கள் அருணாசல தேசிகரும் செப்பறை அடிகளாரும் ஆவர். அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், ஆறுமுக நாவலரின் பாலபாடப் பகுதிகள் போன்றவற்றைப் பயின்றார். செப்பறை அடிகளார் சிவஞான மாபாடியத்தைப் பயிற்றுவித்தார்.

ஐந்தாம் வகுப்புவரை இராசவல்லிபுரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்ற இவர் தம் உயர்நிலைக் கல்வியைத் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டையில் கத்தோலிக்கப் பாதிரிமார்களால் நடத்தப்பெறும் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அப்பள்ளியில் இவர் தம் செல்லப் பெயர் இரும்பு மனிதர். இவர்தம் திண்மையைக் கண்டே மாணவர்கள் இவ்வாறு அழைத்தனர். உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தவர் சுப்பிரமணியப் பிள்ளை என்பவர். உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புப் பயிலும்போது நல்லொழுக்கப் பரிசாகத் திருக்குறள் நூலினைப் பெற்றார். பெற்றவர் ஊர் வந்தபோது தொடக்கப்பள்ளி ஆசிரியரான செப்பறை அடிகளாரின் அறிவுரையால் நாள்தோறும் திருக்குறளை மனனம் செய்தார். இதுவே பின்னாளில் திருக்குறள் வல்லுநராக இவர் திகழ்தற்குக் காரணமாகியது. பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பாளையங்கோட்டைக்குச் சைவ சபைத் தொண்டர்படைத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரால் சிறுத்தொண்டன்’ என்று பாராட்டப் பெற்றார். பதினைந்தாம் ஆண்டில் தம் பள்ளி வாழ்க்கையை முற்றுவித்த இவர், அதே ஆண்டில் தம் அருமைத் தாயையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்த இவர் திருநெல்லிவேலி இந்துக் கல்லூரியில் தம் இடைக்கலை (Indermediate) வகுப்பினைத் தொடர்ந்தார். இடைக்கலையில் இவருக்குத் தமிழ் பயிற்று வித்தவர் தொல்காப்பிய வல்லுநர் சிவராமபிள்ளை என்பவர். இந்துக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தலைவராகத் திகழ்ந்த இவர், முதலாண்டில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதன்மையாக வெற்றி பெற்றார். இதனால் அரசினரால் வழங்கப்பட்ட உதவிப்பணத்தையும், நூல்களுக்கெனத் தனியாக ஐம்பது வெண்பொற்காசுகளையும் பெற்றார். இடைக்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இடைக்கலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் 1915 ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தம் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கினார். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் வரலாறும் பொருளாதாரமுமே இவர் தம் விருப்பப் பாடங்களாக அமைந்தன. காரணம் அந்நாளில் தமிழுக்குத் தனியிடம் இல்லை. பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த அடுத்த ஆண்டில் 1916இல் கல்லூரி மன்றத்தில் நடை பெற்ற தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதன்மையாக நின்றார். அப்பேச்சுப் போட்டியில் இவர்தம் உரையினைச் செவிமடுத்த கல்லூரி முதல்வர், ஆங்கிலப் பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர் திருமணம் செல்வக் கேசவராய முதலியார், நடுவர் சதாசிவ ஐயர் ஆகியோர் அனைவரும் போற்றினர். இதன் விளைவாக இளங்கலை முடித்த உடனேயே பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் சிற்றா சிரியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிட்டியது. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைச் சிற்றாசிரியர் (Tutor)சேதுப்பிள்ளை சட்டக் கல்லூரி மாணவராகச் சேர்ந்து சட்டக் கலையினையும் பயின்றார், இரண்டாண்டுகளில் சட்டக் கல்வியையும் வெற்றியுடன் முடித்துக் கொண்டு நெல்லை சென்றார்.

மகட் கொடை மன்றல்

நெல்லை சென்ற இவர் நெல்லையில் பிள்ளையன் மரபில் தோன்றிய நெல்லையப் பிள்ளை என்பவருக்கும் அவர்தம் இரண்டாவது மனைவி பருவதத்தம்மாள் என்பவருக்கும் மகளாகத் தோன்றிய ‘ஆழ்வார் சானகி’ என்பவரைத் தம் இருபத்து மூன்றாவது வயதில் வதுவை நன்மணம் புரிந்து கொண்டார்.

வழக்கறிஞர் பணி

திருமணம் முடிந்தபின் வழக்கறிஞர் தொழிற் பயிற்சிக்காகச் சென்னை சென்றார். அங்கு முன்னாள் மாநில அமைச்சரும், புகழ்பெற்ற வழக்கறிஞருமான எசு. முத்தையா (பிள்ளை) அவர்களிடம் இரண்டாண்டுகள் வழக்கறிஞர் தொழிற்பயிற்சி பெற்றார். 1923இல் நெல்லை மீண்டு தனியாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்தினார். இத் தொழிலை நடத்தியபோது இவர்தம் தமிழார்வம் தணிய வில்லை. நெல்லை மாணவர் சங்கத்தில் குறள் பற்றி உரை நிகழ்த்தியவர். வள்ளுவரை மேலைநாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டு அவரின் தனித்தன்மையை வெளிப்படுத்தினார். குறள் பற்றிய விளக்கத்துடன் அமையாமல் சைவ சமய இலக்கியங்கள் குறித்தும் சொற்பொழிவாற்றினார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Monday, March 27, 2023

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 








(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3  தொடர்ச்சி)

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3

‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர், விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார்.

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”
– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி,

என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்’ என்று கைம்மைப் பழியினைக்களைய முனைகிறார் கவிஞர்.

‘மனைவியை அவள் முதிய பருவத்திலும் அவள் கணவன் அன்பு செய்து வாழ வேண்டும் எனும் அறிவுரை சங்க இலக்கியங்களிலே காணப் பெற்றாலும் கூடப் பாரதிதாசன் அக்கருத்தைக் கூறும் நயம் போற்றற்குரியது. குடும்ப விளக்கில் முதியோர் காதற் பகுதியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

புதுமலர் அல்லகாய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம்  வட்கு
வறள்நிலம்குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள்” என்ப தொன்றே
– குடும்பவிளக்கு : முதியோர் காதல்.

இன்று விரிவாக, விளக்கமாக விளம்பரமாகப் பேசப்படும் குடும்பக்கட்டுப்பாட்டினையும் அன்றே கவிஞர் கூறியிருக் கின்றார் என்பதும் அறியத்தக்கது. பகுத்தறிவுப் புரட்சி

இருட்டறையில் உள்ளதடா!
உலகம்சாதி
இருக்கின்ற தென்பானும்
இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர்
வாழ்கின் றாரே!
வாயடியும் கையடியும்
மறைவ தெந்நாள்
சுருட்டுகின்றார் தம்கையில்
கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று
சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே!
இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும்
ஒன்றே யாகும்
– பாண்டியன் பரிசு; இயல் 36—3

இதனால் பகுத்தறிவின் பான்மையும் சிறப்பும் புலப்படும். பெண் குழந்தைத் தாலாட்டில்,

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”

என்றும், ஆண் குழந்தைத் தாலாட்டில்,

“ ‘எல்லாம் அவன் செயலே
என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி
விழுங்கும் மனிதருக்கும்
காப்பார் கடவுள் உமைக்
கட்டையில் நீர் போகுமட்டும்
வேர்ப்பீர் உழைப்பீர்
என உரைக்கும் வீணருக்கும்
மானிடரின் தோளின்
மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே
என்செந்தமிழே கண்ணுறங்கு

என்றும் மூடத்தனத்திற்குச் சாவுமணி அடிக்கிறார். மேலும் அவர்,

மதம் எனல் தமிழ் வையத்தின் பகை!
ஆள்வோர் என்றும் அடங்குவோர்
என்றும் பிறந்தார் என்பது சரடு
தனிஒரு மனிதன் தன்விருப்பப்படி
இனிநாட்டை ஆள்வ தென்பதில்லை
மக்கள் சரிநிகர்……………….”
– கடல்மேற் குமிழிகள் 35

என்கிறார்.

தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம்
சரிநிகர் எல்லோரும் என்றோம்
பொய்க்கதை மறையெனல் புரட்டே
புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே
– இறுதி அடிகள்

மேலும்,

உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்

என்றும்,

ஒருகடவுள் உண்டென்போம்!
உருவணக்கம் ஒப்போம்
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்
மதம் ஒழிந்தால்
திருக்கோயில் தொழிற்சாலை

என்றும்,

நமது கொள்கை மக்களெல்லாம் நிகர்
நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே

என்றும்,

இந்நிலத்துப் பெருமக்கள் ஓர் கடல்
இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்

என்றும்,

நால்வகுப் பென்பது
நூல்வகுப்பா தமிழ்நாட்டில்!
நற்றமிழ் மக்கள் ஒரே வகுப்பே
தமிழ் ஏட்டில்

என்றும் கூறும் அடிகளில் புரட்சித் தீயின் நாக்குகளை நன்கு காணலாம்.

பொதுவுடைமைப் புரட்சி

சாதி சமய பேதங்களைத் தகர்த்தெறிந்து, மூடப் பழக்கங்களை முறியடித்து, கண்மூடி வழக்கங்களை மண் மூடிப் போகச் செய்து ஒரு புத்துலகம் காண அவாவுகின்றார் கவிஞர்.

சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்
பின்னர் ஒழித்திடுவோம்புதியதோர் உலகம் செய்வோம்.”

ஏழை பணக்காரர் அற்ற சமத்துவ சமுதாயங் காண அவர் அறிவுறுத்தும் வழி வருமாறு :

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”

பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ‘மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில்’ என்கிறார்.

எல்லோர்க்கும் தேசம்,
எல்லோர்க்கும் உடைமைளலாம்!
எல்லார்க்கும் எல்லா
உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி
சுகாதாரம் வாய்ந்திடுக!
வல்லார்க்கும் மற்று முள்ள
செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும்
மனப்பான்மை போயொழிக!”

என்று பாரதிதாசன் அவர்கள் ‘பொதுவுடைமைச் சமுதாயம் ஒன்று பூக்க வேண்டும்’ என்று பூரிப்போடு பாடுகின்றார்.

தன்பொருட்டு வாழ்வானோர் ஏழைமக்கள்
தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன்.”
– பாண்டியன் பரிசு : இயல்; 57: 18

என்று ஏழை பணக்காரன் பற்றிப் புதியதொரு புரட்சி விளக்கத்தினைத் தருகின்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இதுகாறும் எடுத்துக்காட்டப்பெற்ற செய்திகளால் பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் என்பதும், அவர் பாடல் களாகிய தோட்டத்தில் புரட்சி மலர்கள் பல பூத்துக் குலுங்குகின்றன என்பதும் பெற்றாம். புரட்சிக் கவிஞர் அவர்கள் மறைந்தபொழுது சான்றாண்மைக்கு ஆழியெனத் திகழும் பேராசிரியர்முனைவர்மு. வரதராசனார் அவர்கள், பாரதிதாசன் பற்றிக் கூறிய சொற்களை ஈண்டு நினைவிற் கொள்ளல் இக்கட்டுரைக்குப் பொருத்தமாகும்.

“புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறிக்காமல் பாரதிதாசன் ஒருவரையே குறிக்குமாறு தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்றுவிட்டார். சிறந்ததை மிகமிக விரும்பிப் போற்றுதலும், தீயதை மிகமிக வெறுத்துத் தூற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டில் புகுந்து, சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீய பழக்க வழக்கங்களையும் முடக்கருத்துகளையும் கடிந்து பாடிப், படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுகளில் விழுமிய கற்பனையும் உண்டு. வேகமான உணர்ச்சியும் உண்டு; பழந்தமிழ் மரபும் உண்டு. புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர்தம் வாழ்வுக்கு அவர் தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்து வந்தன.”

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்