Showing posts with label தமிழறிஞர். Show all posts
Showing posts with label தமிழறிஞர். Show all posts

Wednesday, December 06, 2017

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – எழில்.இளங்கோவன்

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)

கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்:
“செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்”
யார் இந்தச் சேதுப்பிள்ளை?
“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை). சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் பங்குனி 20, 1927 – 1896ஆம் அண்டு மார்ச்சு 2 அன்று பிறந்தார் இரா.பி.சேதுப்பிள்ளை.
இவரின் அன்னையார் பெயர் சொர்ணம்மாள். தந்தையார் பிறவிப்பெருமாள்(பிள்ளை).
ஐந்து வயதுக்குமேல், அக்கால வழக்கப்படி இவரின் கல்வி திண்ணைப் பள்ளியில் இருந்தே தொடங்கியது.
அதைச் தொடர்ந்து இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத்தின் தலைவர் அருணாசல தேசிகரிடம்மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.
அதன்பின் பாளையங்கோட்டை தூயசேவியர் உயர் நிலைப்பள்ளியில் இவரின் தொடக்கக் கல்வி அமைந்தது.
நெல்லை இந்துக் கல்லூரியில் இவர் இடைநிலைத் (இன்டர்மீடியட்) தேர்வில் தேறினார்.
இளங்கலைப் பட்டத்தைச் சென்னை பச்சயைப்பன் கல்லூரியில் பயின்று பெற்றார்.
அன்று இவர் படித்த தூயசேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் சுப்பிரமணியமும், இந்துக் கல்லூரி பேராசிரியர் சிவராமனும் இவரின் தமிழார்வம் வளரத் தூண்டுகோலாக இருந்தனர்.
தொடர்ந்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞர் தேர்வில் தேறினார்.
1923 ஆம் ஆண்டு நெல்லையில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். அப்பொழுது இவர் நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலும் பணியாற்றியுள்ளார்.
ஆயினும் வழக்கறிஞர் தொழிலில் நாட்டமில்லா இவர் தமிழை ஆய்வு செய்யவும், அதுகுறிந்து இலக்கிய மேடைகளில் பேசவும் தொடங்கினார்.
இவர் படித்த பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியாக இருந்த இவரை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியராக அமர்த்தியது.
அப்பல்கலைக் கழகத்தில் அறிஞர் பெருமக்களான விபுலானந்த அடிகளார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் ஆறு ஆண்டுகள் பணி புரிந்து தன் தமிழ் அறிவை, புலமையை வளர்த்தெடுத்தார்.
1936ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பொறுப்பேற்ற சேதுப்பிள்ளை அங்கு ஆய்வுத்துறைத் தலைவராக இருந்து போராசிரியர் வையாபுரி(ப் பிள்ளை)யின் கீழ் பணியாற்றினார்.
வையாபுரியார் தலைமையில் தொகுக்கப்பட்டுவந்த  தமிழ்ப் பேரகராதிப் பணியில் பெரிதும் பங்காற்றினார் இவர். வையாபுரியாரின் ஓய்வுக்குப்பின்னர், அப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியவர் சேது(ப்பிள்ளை).
இவரின் முயற்சியினால் ‘திராவிடப் பொதுச் சொற்கள்’ – ‘திராவிடப் பொதுப் பழமொழிகள்’ ஆகிய இரு நூல்களை அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
இவர் பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் இவர் தன் தமிழ்ப் பேச்சு நடையால் மாணவர்களை ஈர்த்தார். இளங்கலை மாணவர்களிடம், தமிழ் மொழி நூலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆற்றலுடன், மாணவர்களின் அறிவாற்றலைத் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் வளர்த்தெடுத்தார்.
குறிப்பாகப், பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சி குறித்த கல்வியைச் செழுமைப்படுத்தச் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய முதல் நூல் ‘திருவள்ளுவர் நூல் நயம்’. தலை சிறந்த இவரின் ஆய்வு நூல் ‘ஊரும் பேரும்’.
இவரால் எழுதப் பெற்ற நூல்கள் ஏறத்தாழ 34 இதில் வாழ்க்கை வரலாற்று நூல்கள் 3.
 இவரால் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் 4.
வானொலியில் ஆற்றிய சொற் பொழிவுகளின் பல, இவரின் நூல் தொகுப்புகளாயின.
பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் ஆற்றிய இவரின் உரைகளின் தொகுப்புகளும் நூல் வடிவங்கள் பெற்றுள்ளன.
சிலப்பதிகார நூல்நயம், தமிழின்பம், தமிழ் வீரம், தமிழ் விருந்து, வேலின் வெற்றி, வேலும் வில்லும், வழிவழி வள்ளுவர், தமிழ்க்கவிதைக்களஞ்சியம், செஞ்சொற்கவிக்கோவை, ஆற்றங்கரையினிலே ஆகிய இவரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன.
இதில் ‘தமிழின்பம்’ என்ற நூல், மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளது.
இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பெற்றுள்ளன.
அடுக்குமொழி, எதுகை – மேனை, உவமைநயம், இலக்கியத் தொடருடன் அமையும் இவரின் பேச்சால் சொக்கிப்போனவர்கள் ஏராளம்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் கம்பராமாயணம் குறித்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற சொற்பொழிவுகளில் சேது(ப்பிள்ளை)யின் சில சொற்பொழிவுகள் குறித்து அப்போது தமிழறிஞர்கள் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
அதன் தாக்கம்தான் சென்னையில் கம்பன் கழகம் உருவானது.
சென்னை கோகலே மன்றத்தில் சிலப்பதிகாரம் குறித்து ஆற்றிய உரையின் மாட்சியை, இவரின் ’சிலப்பதிகார நூல்நயம்’ என்ற நூலில் காணலாம்.
சென்னை தங்கசாலை தமிழ் மன்றத்தில் 5 ஆண்டுகள் இவர் திருக்குறள் வகுப்பு நடத்தியிருக்கிறார் என்பது குறிக்கத்தக்க செய்தி.
இவரின் பேச்சாற்றல் சொல்லாற்றலைக் கண்ட தருமபுர ஆதினம்இவருக்குச்  ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கியது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றிய சேது(ப்பிள்ளை)க்கு ‘முனைவர்’ பட்டம் வழங்கியதோடு, வெள்ளி விழாவும் எடுத்து, கூடுதலாக ‘இலக்கியப் பேரறிஞர்’ என்ற பட்டத்தையும் அப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
‘‘இரா.பி.சேதுப்பிள்ளையின் மொழிநடை ஆங்கில அறிஞர் அட்சனின் நடைபோன்றது’’ என்று வியந்து கூறுகிறார் சோமலே.
இப்படிப்பட்ட அறிஞர் பெருந்தகை, சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் சித்திரை 13, 1992 – 1961 ஏப்ரல் 25ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அப்போது அவருக்கு வயது 65தான்.
எழில்.இளங்கோவன்







 – கருஞ்சட்டைத்தமிழர் திச.3,201

Monday, September 05, 2016

பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-இலக்குவனார் வழியில் செந்தமிழ்நடை-இல.திருவள்ளுவன் ;thalaippu_ilakkuvanarvazhiyil_senthamizhnadai_ila.thiruvalluvan

[1]


பேரா.சி.இலக்குவனார்  வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்!

  தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும்.
  பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர்  அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர் இலட்சுமணன் என்பதுதான். ஆனால், அறிஞர் சாமி சிதம்பரனார், கம்பர் வழியில் அவர் பெயரை இலக்குவன் எனக் குறிப்பிட்டார்.(இலக்குவன் என்னும் பெயரே இலக்குவனார் ஆனது). ஆசிரியர் இட்ட சிறு வித்து, பூத்துக் கனிந்து தமிழ்உலகிற்குப்பெரும்பயனாய் அமைந்தது.
  பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்  மூட்டிய தனித்தமிழ்ப்பொறி  அவரிடம் தமிழ்ப்பகைக்கு எதிரான பெரு நெருப்பை வளர்த்தது. அந்தப் பெருநெருப்பு வளையமே பல நேரங்களில் தமிழ்த்தாயை இன்னலில் இருந்து காப்பாற்றியது.
  பள்ளிப்படிப்பிலேயே பாடத்திற்கு அப்பாற்பட்டுப் பல நூல்களையும் படித்தார். திருக்குறளை முழுமையாகக் கற்றதுபோல் பிற இலக்கியங்களைப் படித்தார். கல்லூரிப்பருவத்தில் எண்ணற்ற  மொழியியல், திறனாய்வு, இலக்கியம் தொடர்பான ஆங்கில நூல்களையும் படித்தார். படிக்கப் படிக்கத் தமிழின்  சிறப்பை உணர்ந்து அதனைப் பரப்பும் பணியைத் தம் கடமையாக ஏற்றார். விடுமுறைக் காலங்களில் ஊர்ப்பொதுவிடத்தில் தனித்தமிழில் தமிழின் சிறப்புபற்றி உரையாற்றினார். சிறுவன் பேசுகிறானே, கேட்போம் என வந்த ஊர்ப்பெரியவர்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு ஊக்கப்படுத்தியது, தனித்தமிழ்ப்பாதையில் அவரை நடைபோடச் செய்தது.
  கல்லூரிப்பருவத்தில் இது  விரிந்து பெருகியது.  இதழ்களில் இவரது தனித்தமிழ்க் கட்டுரைகள் இடம்பெற்றன. மாணாக்கர்களின் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தம் அன்பு நண்பர்கள், அ.கிருட்டிணமூர்த்தி, அன்புகணபதி,  முருக இலக்குவன், ஆகிய மூவரையும் இணைத்துக் கொண்டு,  தூயதமிழ்ப்பரப்புரை மேற்கொண்டார். (பழைய)தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இவர்கள் ஊர் ஊராகச் சென்று தூய தமிழ்ப்பரப்புரை மேற்கொண்டனர். மாணவப்பருவத்திலேயே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியம் படைத்துச் சிறப்பு பெற்றார். மாணவப்பருவத்திலான  தூயதமிழ்ப்பரப்புரைப்பணி, ஆசிரியப்பணி தொடங்கியதும் நாடு முழுவதும் விரிந்தது;  எண்ணற்ற தனித்தமிழார்வலர்களைப் பெருக்கியது; தனித்தமிழ்ப் படைப்பாளர்களை உருவாக்கியது.
  மாணாக்கராக இருக்கும்பொழுது அல்லது ஒரு பருவத்தில் எழுச்சியாக உள்ள பலரும் பின்னர் அடங்கிவிடுவர். ஆனால்,  இலக்குவனாரோ தூய தமிழ்நடைக்கும் தமிழ்க்காப்பிற்குமான தம் பணியைத் தம் வாழ்நாள் இறுதிவரை, பல்வேறு இன்னல்களும் இடையூறுகளும் ஏற்பட்டும், நிறுத்தாமல் செயல்பட்டார். அதனால்தானே தமிழ்ப்போராளியாகப் போற்றப்படுகிறார்.
  பேரா.இலக்குவனார் தாம் பணியாற்றிய கல்விநிலையங்களில் மாணாக்கர்களுக்குத் தனித்தமிழ்ப்பற்றை ஊட்டினார். மாணாக்கர்கள் தனித்தமிழில் பேசுவதுடன், பிறர் பிறமொழிச்சொற்கள் கலந்து பேசினால் எதிர்ப்பும் தெரிவித்தனர். சான்றாக, ஒரு முறை  பேரா.சி.இலக்குவனார், ம.தி.தா.இந்துக்கல்லூரிக்கு நிகழ்ச்சி ஒன்றிற்காகச் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை அழைத்திருந்தார். அவர் பேசும் பொழுது அயற்சொல் வந்தது. உடன்மாணாக்கர்கள்  கேலிக்குரல் எழுப்பினர். அதற்கு அவர் ”உங்கள் உணர்வைப் புரிந்து  கொண்டேன். என்னாலும் தனித்தமிழில் பேச இயலும். இனி அவ்வாறு பேசுகிறேன்” எனக்கூறித் தனித்தமிழ்நடைக்கு மாறினார். அது மட்டுமல்ல! பேராசிரியர் இருக்குமிடமெல்லாம்,  “உள்ளேன் ஐயா” என வருகைப்பதிவில் தொடங்கி எல்லா நேரங்களிலும் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்று மாறியது. ஆகவே, தமிழ்ப்பற்று விளையாட்டுத்துறையையும் விட்டு வைக்கவில்லை. விளையாட்டு வகுப்பில் மாணாக்கர்கள் “லவ் ஆல்” என்பதை  விடுத்து “அன்பே கடவுள்” என்றனர். விளையாட்டுத்துறை ஆசிரியர்  “உங்கள் தமிழைத் தமிழ் வகுப்புகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியும் பேரா.இலக்குவனாரால் தமிழின்பால் ஈர்க்கப்பட்ட மாணாக்கர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.  இதனால்தான்  “இலக்குவனார் பணியாற்றும் இடங்களில் உள்ள படிக்கட்டும் பைந்தமிழ்  பாடும்” என்று அனைவரும் கூறுவர்.
  தாம் பணியாற்றிய ஊர்கள் தோறும் தமிழ்க்கழகங்கள் அமைத்துப் பொதுமக்களிடையேயும் தனித்தமிழ்ப்பற்றை விதைத்தார். தனித்தமிழ் இயக்கத்தின் எழுச்சியால் நிகழ்ந்த,  திராவிட இயக்கத்தின் தனித்தமிழ்ப்பெயர் சூட்டிக்கொள்ளும் நற்பணி பேராசிரியர் தொண்டால் எங்கும் பரவியது. ஆசிரியர்களாகப் பணியாற்றிய இவரின் உறவினர்கள், மாணவர்கள் பள்ளிச் சேர்க்கையின்பொழுது பயில வருவோருக்கு நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பேரா.இலக்குவனார் பிறந்த ஊரான வாய்மேட்டிலுள்ள இலக்குவனார் நடுநிலைப்பள்ளியின் தலைமைஆசிரியராகவும் தாளாளராகவும் திகழ்ந்த வெற்றியழகன்-தவமணி இணையர் இதில் முதலிடத்தில் இருந்தனர். இன்றைக்கு ஆரியப்பெயர்களைச் சூட்டுவதையே பெற்றோர்கள் பேரின்பமாகக் கருதும் அவலம் வந்துவிட்டது. பிறப்புப்பதிவின்பொழுதே  பெயர் குறிப்பிட வேண்டியுள்ளதால் அயற்பெயர்களே பதிவுகளில் இடம் பெறுகின்றன. இந்நிலையை மாற்றுவதே பேரா.இலக்குவனார்க்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் என நாம் எண்ணிச்செயல்படவேண்டும்.
  நானிலத்தில் நற்றமிழ் பரவவேண்டும், நிலைக்க வேண்டும் என அரும்பாடுபட்ட இலக்குவனாரின் நினைவுநாளில் அவரது படைப்பு வரிகள் சிலவற்றையாவது படிப்பது நம்மையும் நற்றமிழ்நடையின்பால் ஈர்க்கும்.
  ஒருவர் கருத்தை வெளிப்படுத்தும் பாங்கினைத்தான் நடை என்கிறோம். ஒருவரின் நடை உரைநடையிலும் செய்யுளிலும் மாறுபட்டதாக அமையும். பேரா.சி.இலக்குவனாரின் சில நடைப்பாங்கு மட்டும் இங்கே  குறிப்பிடப்படும். ஒவ்வொருவர் நடையும் ஒவ்வொரு வகையில் சிறப்பாகவே அமையும். எனவே, ஒப்பிட்டுக்கூறவில்லை. ஒப்பிட்டுக் கூறும்பொழுது சில வேளைகளில் ஒருவரின் நடையை உயர்த்தியும் மற்றவர் நடையைத் தாழ்த்தியும் கூறுவதுபோல் தோற்றமளிக்கலாம். எனவே அறிஞர்களின் நடையாராய்ச்சி இங்கே வேண்டற்பாலது.
  பேரா.இலக்குவனார் மாணவப்பருவத்திலிருந்தே எழுதியும் பேசியும் வந்துள்ளார். ஆனால் தொடக்கம் முதலே பிறமொழிக்கலப்பின்றி எழுதி வந்துள்ளார்; எளிய சொற்களைக் கையாள்வார்; ஆனால், உரைநடையே கவிதை நடையாகச் சிறப்பாக அமையும். இலக்கிய நூல்களில் காணும்  நடையை விட இதழுலகில் அமையும் நடை மேலும் எளிமையாக இருக்கும். எனினும் பிற சொற்கலப்பின்றி எழுதுவார்.  எடுத்துக்காட்டுகள் கூறி அயற்சொல்லை விளக்க வேண்டிய நேர்வுகளில், ஒற்றை மேற்கோள்குறிகளுக்குள் அச்சொல்லைக் குறிப்பார்.
  பேரா.இலக்குவனாரின் உரைநடைபோலவே அவரது பாடல்களும் பாவியங்களும் பா இலக்கியங்களும் செந்தமிழ் மணக்கும் எளிய நன்னடையாக இருக்கும். எனினும், அவரின் சில  உரைநடைக் கருத்துகளைப் பார்ப்போம்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
– இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, September 02, 2016

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 – மறைமலை இலக்குவனார்




தலைப்பு-தலைமைப்போராளிஇலக்குவனார், மறைமலை ;thalaippu_thalaimiapoarali_ilakkuvanar_maraimalaithalaippu_ilakkuvanar_thamizhppani

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3

  தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றது, அரசு இலச்சினையில் விளங்கும் ‘சத்ய மேவ சயதே’ என்னும் இந்தித்தொடரை உடனே அகற்றி “வாய்மையே வெல்லும்” என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியவர் இலக்குவனாரே. சத்தியம் என்பதனை உண்மை என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர். ஆனால் மூதறிஞர் இராசாசி ‘வாய்மை’என்பதே பொருந்தும் எனக் கூறினார்.
  தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்று விட்டதால் உடனே அனைத்துக் கல்விநிறுவனங்களிலும் தமிழையே பயிற்சிமொழியாக ஆக்கவேண்டும் என இலக்குவனார் வலியுறுத்திய வேளையில் அப்போதைய கல்வியமைச்சர் நாவலர் ஆங்கிலத்தை அகற்றுவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகும் என விடையளித்தார். தமிழ்  நாவலராகத் திகழவேண்டியவர் ஆங்கிலக் காவலராகச் செயற்படலாமா என அமைச்சரிடம் நேருக்கு நேர் நேர்படக்கூறியதால் இலக்குவனார் தம் பதவியை இழந்தார்.
  1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு, அறிஞர் அண்ணா அவர்களின் மேற்பார்வையில் நடந்து வரலாற்றுப் புகழ் பெற்றது. (மெரீனாக்) கடற்கரையில் தமிழ்ச்சான்றோர்களின் சிலைகள் நிறுவப்பட்டன; பூம்புகார்த் திடலில் நாள்தோறும் கருத்தரங்கமும் கவியரங்கமும் பட்டிமன்றமும் நாடகங்களும் நடைபெற்று மக்கள் உள்ளத்தில் தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின
 அதே வேளையில் சென்னைப்பல்க்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் கூடிப் பல ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியும் விவாதித்தும் வந்தனர்.
 ஆய்வரங்கின் முதல் நாள் முதல் கட்டுரை ழீன் பீலியோசா என்னும் பிரெஞ்சு அறிஞரால் படிக்கப்பட்டது. நடப்பது உலகத்தமிழ் மாநாடு; கட்டுரையோ ஆங்கிலத்தில்; அதன் நோக்கமோ சமற்கிருதத்திற்கு முதன்மை வழங்குவது!
 இந்தியாவில் சமற்கிருதம்தான் ஆட்சிமொழியாக இருந்தது என அந்த அறிஞர் குறிப்பிட்டிருந்தார். இலக்குவனார் எழுந்தார். ”ஐயா! சமற்கிருதம் ஆட்சிமொழியாக இருந்தது எனக் கூறினீர்கள்’ எந்த நூற்றாண்டில் எந்த மன்னர் ஆட்சியில் எந்தப் பகுதியில் எனத் தெளிவுபடுத்துகிறீர்களா?” என்பதே அந்த வினா.
 அந்த மாநாட்டின் முதல் வினா அதுதான். கட்டுரையாளரால் விடையிறுக்க முடியவில்லை. தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்; மீண்டும் அந்த வினாவைக் கேட்குமாறு கூறினார். இலக்குவனாரும் கேட்டார். இந்த முறையும் விடை வரவில்லை. அந்த அமர்வு முடிவுற்றது.
 கருத்தரங்கின் மூன்றாம் நாள் ஐராவதம் மகாதேவன் என்னும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்(அப்போது உணவுத்துறைச் செயலர்) வழங்கிய கட்டுரையில் தமிழுக்கு எழுத்துகள் தோன்றியது கி.பி.இரண்டாம் நூற்றாண்டில்தான் என்பது கட்டுரையின் சாரம். இலக்குவனார் விடுவாரா? கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்தை அடிப்படையால்கக் கொண்டு கட்டுரையாளரின் கருத்துப் பிழையைச் சுட்டிக்காட்டினார்.
 இவ்வாறு ஆய்வரங்குகளில், மக்கள் மன்றங்களில், கல்விக்கூடங்களில் என வாய்ப்புக் கிட்டும் இடங்களில் எல்லாம் தமிழின் தலைமைப்பண்பை உணர்த்தவும் தமிழுக்கு நிகழும் தீங்குகளைக் கடிந்து களைந்திடவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர் இலக்குவனார்.
  அவருடைய கொள்கைவீறும் போர்ப்பண்பும் எந்த இடத்திலும் நிலையாகப் பணிபுரிய இயலாச் சூழலை ஏற்படுத்தின. அமைதியாகக் குடும்பவாழ்வு நிகழ்த்தும் வாய்ப்பின்றிக் காலமெல்லாம் ஊர்விட்டு ஊர் பெயர்ந்து நிறைந்த மக்கட்செல்வத்துடன் அல்லலுற்றாலும் தமது தமிழியக்கப் போரை நிறுத்திக்கொள்ளவில்லை. தி.மு.க.ஆட்சியிலும் அவருக்குத் தொல்லைகள் ஓய்ந்தபாடில்லை. ஐந்தாண்டுக் காலம் மாநிலக்கல்லூரியில் அவரைத் தலைமைப் பேராசிரியராகப் பணியமர்த்துமாறு அறிஞர் அண்ணா பரிந்துரைத்த பின்னரும் அப்போதிருந்த கல்வியமைச்சரும் உயர் அலுவலர்களும் அவரை ஓராண்டிலேயே பணிநீக்கம் செய்துவிட்டனர். தமது சொந்த முயற்சியால் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணி ஏற்றார் இலக்குவனார்.
  1968-ஆம் ஆண்டு சூன் மாதம் அவர் ஐதராபாது சென்றபோது அங்கிருந்த தமிழர்கள் கண்ணீர் மல்க வரவேற்றார்கள். காலமெல்லாம் திராவிட இயக்கக்கோளரியாகச் செயற்பட்ட செந்தமிழ் அரிமா இலக்குவனார், தி,மு.க.ஆட்சி மலர்ந்த சூழலிலும் பிழைப்புக்காக ஐம்பத்தைந்து அகவையில் வெளி மாநிலத்திற்கு வரவேண்டுமா என்னும் வினா அவர்கள் நெஞ்சைப் பிழிந்தது.
  கனிந்த நட்பும் ஆழ்ந்த அன்புள்ளமும் கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள்  விரும்பியபோதும், இலக்குவனார் தமிழக அரசுப்பணியில் திகழ்வதை ஏனையோர் விரும்பாத சூழலில் அண்ணாவுக்கு மனச்சோர்வு அளிக்காத வண்ணம் தமிழ்நாட்டை விட்டே வெளியேறுவது இலக்குவனாருக்குப் பிடித்திருந்தது. தமது பெரிய குடும்பத்தைப் பிரிந்து இரண்டாண்டுகள் ஐதராபாது நகரில் இருந்த இலக்குவனார் அங்கும் தமிழ்ப்பணிகள் ஆற்றினார்.
  தி.மு.க.ஆட்சியைப்போல ஐதராபாது உசுமானியாப் பல்கலைக்கழகம் ஒராண்டுப் பணியுடன் விரட்டிவிடவில்லை. ஐந்தாண்டுகள் வாய்ப்பு அளித்தது. ஆனால் அகவை மூத்தநிலையில் குடும்பத்தைப் பிரிந்து வெளிமாநிலத்தில் நெடுநாள்கள் இருக்க இயலாமல் இரண்டாண்டுகள் சென்றதும் 1970 சூன் திங்களில் தமது பணியைத் துறந்தார். 1970 திசம்பர் வரை நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வர் பணியாற்றினார்.
  அங்கிருந்து ஓய்வு பெற்றபின் மீண்டும் ‘குறள்நெறி; இதழை நடத்தினார்; தமிழ்க்காப்புக்கழகப் பணிகளைத் தொடர்ந்தார். தி.மு.க.ஆட்சி தமிழுக்கு எதுவும் செய்யவில்லை என்னும் மனக்கசப்பில் இருந்தவர் அண்ணா தி.மு.க. நிறுவிய எம்ஞ்சியார். அவர்களுடன் இணைந்தார். ஆனால் அவரது தமிழியக்கப் பணிகளுக்கு அரசியல் சூழல் இயைந்துவரவில்லை.
 தாம் இறக்கும்வரை இலக்குவனார் தமிழ்வளர்ச்சியே தம் வளர்ச்சியாகக் கருதிப் பணிவாய்ப்பையோ பொருள்வளத்தையோ கருதாது தமிழ் உரிமைப் போர்ப் படைத்தலைவராக—தமிழியக்கத் தலைமைப் போராளியாகத் திகழ்ந்தார்.
தமிழியக்கநூற்றாண்டு கொண்டாடும் இவ்வேளையில் அவரது போர்ப்பண்பைப் பின்பற்றி நாம் உழைத்தால் தமிழ் மீண்டும் தலைமையேற்குமாறு செய்யலாம் அல்லவா?
பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்
மறைமலைஇலக்குவனார் ; maraimalai_ilakkuvanar
முத்திரை-புதியபார்வை ; muthirai_puthiyapaarvai