Showing posts with label தமிழ்ப்பணிகள். Show all posts
Showing posts with label தமிழ்ப்பணிகள். Show all posts

Saturday, January 21, 2017

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 7/7


  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்; மனித வாழ்விற்கான இலக்கணம் தமிழில்மட்டும்தான் உள்ளது; கற்புநெறிப்படி ஆடவரும் வாழவேண்டும்; தமிழ்நெறியைத் தமிழருக்காக, தமிழ் முன்னோர்கள் மரபுவழிமட்டும் நின்று உரைப்பதே தொல்காப்பியம் என இலக்குவனார் விளக்கும் பல கருத்துகளையும் ஆய்வாளர் நமக்கு அளிக்கிறார்.
  திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடநூற் கருத்துகளை ஒட்டி உரை செய்தமையையும் இலக்குவனார் அதனை மறுத்துத் தமிழர் மரபுப்படி விளக்கி யுள்ளமையையும், “பரிமேலழகர் – சி.இலக்குவனார் உரை ஒப்பீடு” மூலம் ஆய்வாளர் இரா.உமாதேவி ஆராய்ந்தளிக்கிறார்; அதிகார வைப்புமுறையிலும் குறள் வரிசை முறையிலும் பரிமேலழகரிடமிருந்து இலக்குவனார் வேறுபட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.
  தொல்காப்பியருக்குப் பிற்பட்டகாலத்தவர் திருவள்ளுவர் என  ஆராய்ந்து பேராசிரியர் சி.இலக்குவனார் நமக்குத்  தந்துள்ளனவற்றை      முனைவர் இரா.செகதீசன் “தொல்காப்பியரா? திருவள்ளுவரா?”   என வினா தொடுத்து விடையாக விளக்குகிறார்; தொல்காப்பியர் தொகுத்தளிக்காத  அற்று, அனைய உவம உருபுகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பதுபோன்ற ஆதாரங்களை இலக்குவனார் தெரிவிப்பதை நமக்கு இவர் விளக்குகிறார்; காய்ப்பு உவப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் சமய அரசியல் கலப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் இன்றைய ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் இலக்குவனார் விளங்குவதையும் ஆய்வாளர் எடுத்துரைக்கிறார்.
    “வணிகவியல் பார்வையில் இலக்குவனார் கூறும் வாணிகம்”  எனச்  சங்கக்கால வணிகவியலை  நமக்கு இலக்கியம் வாயிலாக வழங்குவதை முனைவர் கோ.வீ.பிரேமலதா வணிகவியல் துறை நோக்கில் வடித்துத் தருகிறார். உள்நாட்டு வணிகம், அயல்நாட்டு வணிகம், போக்குவரத்து முதலியவற்றைப் பேரா. இலக்குவனார் விளக்கியுள்ளார்; இதன் மூலம் வணிகம் குறித்த பின்னாளைய வரையறைகளைப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது; என வணிகவியல் அறிஞர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டுக்கட்டுரை அளித்துள்ளார்.
 இலக்கிய வரலாற்றை ஆய்வுக்கண்கொண்டு அலசுகிறார்; புத்தம் புதுக் கருத்துகளை  வல்லமையுடன் எடுத்துரைக்கிறார்; இலக்கியம்பற்றியும் தமிழ்பற்றியும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறும் கருத்துகள்  வழி  ஆராய்கிறார்; இவ்வாறு  ‘பழந்தமிழ்’ நூல் படைத்துள்ளார்;  இவற்றைக் குறிப்பிட்டுச்,  “சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு” எனச் சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர்  வேல்முருகன் சிறப்பாக அளிக்கிறார்; சங்கப்புலவர்களின் படைப்புகளையும் மேனாட்டுஅறிஞர்களின் ஆய்வுகளையும்  நுணுகிக்கற்ற இலக்குவனார்,  ஆய்வுக்கண்கொண்டே எதையும் அலசுகிறார்; புதிய கருத்துகளையும் அளிக்கிறார்; யாவற்றையும் நெஞ்சம் கவரும் வண்ணம் எளிமையாக விளக்குகிறார் என்கிறார்.
  “இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம்” குறித்து ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’நூலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் க.தமிழமல்லன், விரிவாக ஆராய்ந்து அளித்துள்ளார்; பேராசிரியர் இலக்குவனார்  சில குறட்பாக்களை முறை மாற்றி அளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  பேரா.சி.இலக்குவனார், ‘திருக்குறள் – எளிய பொழிப்புரை’ வழங்கும் பொழுது குறட்பாக்களை  நடைமுறை வைப்பின்படியே அளித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ்த் திருக்குறள் கருத்துகளை ஆராயும் பொழுது, அத்தலைப்பிற்கேற்ப முறை மாற்றி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்கணத்தின் துணைக்கொண்டு இலக்குவனார் திருக்குறளின் பல இடங்களை அழகாக விளக்குகிறார்; மறுக்க  வேண்டிய இடங்களில் பரிமேலழகரின் கருத்துகளை மறுக்கிறார்; ஆரியச் சார்பிலான கொடிய கருத்துகளைத் தெளிவாக மறுக்கிறார்; தனித்தமிழில் படைக்கிறார்;பல்துறைப் புலமை கொண்டு திருக்குறளுக்குச் சிறப்பான உரை யளித்துள்ளார் என்று பல்வகைக் கண்ணோட்டத்தில் ஆய்வாளர் அளிக்கிறார்.
  பேராசிரியர் சி.இலக்குவனார் பல்வேறுநிலைகளிலும் பல்வேறு துறைகளிலும் முன்னெடுத்துக்காட்டான அரும் பணிகளை ஆற்றியுள்ளார். அவற்றில், கல்விப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்புப்பணி, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, காலஆய்வுப்பணி, சொல்லாய்வுப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி,  குறள்நெறிப் பரப்புரைப்பணி, இதழ்ப்பணி,  ஆற்றுப்படுத்தும் பணி, தமிழ்க்காப்புப்பணி, ஆகிய  சிலவற்றைத் தொகுத்துக் கருத்தரங்கத்தின் மையத் தலைப்புரையாக “இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்”  கட்டுரை அமைந்துள்ளது.
  கட்டுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளவாறு,   பேராசிரியரின் படைப்புகள் மேலும் விரிந்த ஆய்விற்குரியனவே!  பேராசிரியரின் ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’, எக்காலத்திற்கும்  ஏற்ற திருக்குறளுக்கு எக்காலத்திற்கும் ஏற்ற அறிவியல் அணுகுமுறையான விளக்கங்கள் கொண்டது. இது குறித்த  கட்டுரையை முனைவர் க.தமிழமல்லன் மட்டும் விரிவாக அளித்துள்ளார். இந்நூற்சிறப்பை ஆய்வாளர்கள் உணர்ந்து மாணாக்கர்க்குத் தெரிவிக்க வேண்டும்.
  பேராசிரியரின் முதல் படைப்பாகிய தனித்தமிழ்க் குறும்பாவியமான ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ ஆராய்ந்து போற்றுதற்குரியது.  தழுவல் ஆக்கத்திலும் தலை சிறந்தது.  இதில் இடம் பெற்ற கவிதைகள் குறிக்கப் பெற்றிருப்பினும் இப்பாவியம் குறித்த கட்டுரை இல்லை.  வாழ்க்கை நிகழ்வுப் பாவியமான  பேராசிரியரின் ‘துரத்தப்பட்டேன்’, ஆற்றுப்படை இலக்கணத்திற்கேற்ப எழுதப்பெற்ற பேராசிரியரின் ‘மாணவர் ஆற்றுப்படை’  முதலானவையும் விடுபட்டுள்ளன. இவை, சிறப்பான முறையில் ஆய்வு செய்திருக்க வேண்டிய நூல்களாகும். இதழியலறிஞர் பேராசிரியர் இலக்குவனார் எழுதிய தலையங்கங்கள் குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். பேராசிரியரின் ஆங்கில நூல்கள் குறித்த கட்டுரைகளும் இடம் பெறவில்லை. இவை போல்  இக்கருத்தரங்கத்தில் பார்க்கப்படாத நூல்கள் குறித்த ஆய்வுகள் இனி இடம் பெற வேண்டும். பேராசிரியர் நூல்களில் குறிப்பிட்ட சில பகுதிகளையே பலரும் ஆய்வுக்களன்களாக அமைத்துக் கொண்டது தற்செயல் நிகழ்வுதான். இனி, ஆய்வுத் தளங்களை வரையறுத்துக் கொண்டு  கருத்தரங்கங்கள் நடத்தப் பெற வேண்டும்.
   வாழ்க்கைக் குறிப்புகள் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்கப்பட்டு நீக்கலாம் எனப் பதிப்பாசிரியர் முதலில் கருதி,  அதன் பின்னர் அந்தந்தக் கட்டுரைஅளவில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீக்கவில்லை என அறிந்தேன். சில மேற்கோள்கள் திரும்பத் திரும்பக் கையாளப்பட்டிருப்பினும் பார்க்கும் கோணம் மாறுபடுவதால் கூறியது கூறலாக் கருத இயலவில்லை. நம் கருத்தில் ஆழப் பதிவதற்காக மீண்டும் மீண்டும்  இடம் பெற்றுள்ளன எனக் கருதலாம். எனவே, இவ்விரு இயல்பு நீங்கலாகப் பார்க்கும் பொழுது பேராசிரியரை அவரது படைப்புகள் வழியாகவும்  பணிகள் வாயிலாகவும்  நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளனர் எனலாம். ஆய்வாளர்கள் சிலர் தொடக்க நிலையில் உள்ளதால் அதற்கேற்ற நிலையில் படைப்புகள் உள்ளன. என்றாலும் பேராசிரியரை அறியாதவர் அறியச் செய்ய அவை உதவுகின்றன. எனவே, இக்கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு பாராட்டிற்குரியதாகவே உள்ளது. இதனைப் பாடமாக வைப்பதன் மூலம்  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் தமிழ்ச்சூழல், தமிழ்காக்கும் போர்க்களம், தமிழின் செம்மொழித் தன்மை, தொன்மை முதலான சிறப்புகள் ஆகியவற்றையும் இக்காலத்தலைமுறையினர் அறிய இயலும். அதற்கு ம.தி.தா.இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையினர் முயல வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஆன்றோர்கள் உரைகளையும் இடம் பெறச் செய்வது மேலும் சிறப்பாக இருக்கும்.
  பேராசிரியர் இலக்குவனாரைப்பற்றிய பார்வை பலவாக இருப்பினும் படைப்பிலும் களத்திலும் தமிழ்ப்பரப்புப் பணியிலும் தமிழ்க்காப்புப் பணியிலும் சிறந்து நின்ற செந்தமிழ் அரிமா அவர் என்பதே அனைவரும் கண்ட கவினுறு காட்சியாகும்.
  சிறப்பான முறையில் கட்டுரை அளித்துள்ள கட்டுரையாளர்களுக்கும் இதற்குக்காரணமான கல்லூரி ஆட்சிக்குழுவினர், முதல்வர், தமிழ்த்துறைத்தலைவர், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறையினர், மணிவாசகர் பதிப்பகத்தார் என அனைவருக்கும் பாராட்டுகள்!
இலக்குவனார் புகழ் பாடி  இனிய தமிழ் வளர்ப்போம்!
நற்றமிழை நானிலமெங்கும் பரப்புவோம்!

இலக்குவனார்திருவள்ளுவன்

Saturday, January 14, 2017

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்




வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்
தொகுப்புரை 6/7

  “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த துணிவு, சங்க இலக்கியத்தை சமூகவியல் நோக்கில் முதன்முறை ஆராய்ந்து எழுதிய நுண்மாண்நுழைபுலம், சங்க இலக்கியப் பரப்புரையில் ஈடுபட்ட காரணம், தொல்காப்பியத்திற்கு விளக்கம்  தரும்  ஆழ்ந்த புலமை, அறிஞர்களின் பாராட்டுகளுக்குரிய சீர்மை எனப் பலவகைகளிலும் இலக்குவனாரை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார்.
  “சி.இலக்குவனாரின் சமூகப் பார்வை” திறனாய்வு வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று என அவரது படைப்புகள் வழி ஆய்ந்து தெரிவிக்கிறார் முனைவர் இள.தேன்மொழி, ஆரியத்தின் தீமைகளை உணர்த்தினாலும் பிராமண மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி செய்த பேருள்ளம், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகியவற்றிற்குப்  பெண்களை உயர்வுபடுத்தி விளக்கம் தரும் நடுவுநிலைமை, முதலானவற்றையும் விளக்கியுள்ளார்
  பேராசிரியரால் ஆய்ந்து தெளிவிக்கப்பட்டுள்ள “தொல்காப்பியர் காலத்தமிழர் மணமுறை – களவு”  குறித்து எடுத்துரைக்கிறார் ஆய்வாளர் அ.உரோகிணி; தமிழ்க் களவு, காதல் மணமுறை  ஆரியத்தின் காந்தருவ முறையைவிட உயர்ந்தது,  தொல்காப்பியர் காலத் தமிழர் நாகரிகத்தில் சிறந்திருந்தனர், காதல் மணம் தமிழரின் தனித்த அடையாளம் என  இலக்குவனார் விளக்குவதையும் விவரிக்கிறார்.
  “சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சியில் கற்புநெறி” திறம்பட விளக்கப்பட்டுள்ளமையைச் சீரியமுறையில் தருகிறார் முனைவர் எசு.பாத்திமா; கற்புநெறியை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவும் உரையாசிரியர்கள் கருத்து தவறானவை என விளக்கமாகவும் தமிழப் பெரியவர்களை ஐயர் என அழைப்பதைப் பார்த்த பிராமணர் தங்களை ஐயர் என அழைத்துக் கொண்டனர் என்பதையும் பொது, சிறப்பு, ஆராய்ச்சி என மூவகைக் கல்வி நிலைகள் இருந்தன என்பதையும் தமிழ்நெறிப்பட இலக்குவனார் ஆராய்ந்தளிக்கிறார் என்கிறார்.
 சங்கக்காலத்தமிழ்மக்கள் பொழுதுபோக்கு முறையிலும் மிக உயர்ந்த நிலையில் இருந்தனர் எனப் பேராசிரியர் ஆய்ந்து  தருவனவற்றை, ஆய்வாளர் கு. மேனகா “சங்கக்காலத்தமிழரின் பொழுதுபோக்குகள்” தலைப்பில் நமக்குத் தருகின்றார்சங்கக்காலத்தில் இருந்த அலவனாட்டு, நீர் விளையாட்டு, வண்டலயர்தல், பாவை விளையாட்டு,  ஆடவருடன் துணங்கைக் கூத்தாடல், கழங்காடுதல்,ஊசலாடுதல் முதலான மகளிர் விளையாட்டுகள் பொழுதுபோக்குகளையும் கானைக்கன்றுடன் ஆடல்,  தேர் விளையாடல், கிலுகிலு விளையாடல் முதலான சிறுவர் பொழுதுபோக்குகளையும் மற்போர் முதலான ஆடவர் பொழுதுபோக்குகளையும் ஆய்வாளர் நமக்குத் தெரிவிக்கிறார்.
      “தொல்காப்பிய ஆராய்ச்சியில் அகத்திணையியல் செய்திகள்”  மூலம் தொல்காப்பியர் கூறும் அகத்திணை இலக்கணத்தையும் பாகுபாட்டையும்   பேரா.இலக்குவனார் ஆராய்ந்து அளிப்பதை முனைவர் சே.சாந்தி நமக்களிக்கிறார்; தமிழரின் கடவுட்கொள்கை தமிழர்க்கே உரியது’ வடமொழியாளர்களிடமிருந்து தமிழர்க்கு வந்தது என உரையாசிரியர்கள் தரும்  பொருள் தவறானது’ வடமொழிப்புராணக் கதைகள் அடிப்படையில் விளக்கியதால் வந்த வினை எனச் சிறப்பாகத் தொல்காப்பிய அறிஞர் இலக்குவனார் விளக்குவதை எடுத்துரைக்கிறார். 
     மொழியின் தோற்றம், பயன், தமிழ் இந்நாட்டு மொழியே, தமிழ் மொழியின் சிறப்பு, எழுத்தின் தோற்றம், தமிழ்வரிவடிவம் பிற மொழிகளின் வரிவங்களின் தாய், மொழிக்குடும்பம் அமையும் முறை, தமிழ்மொழிக்குடும்பம் ஆகியவனவற்றைப் பேரா.இலக்குவனார் ஆய்ந்து தந்துள்ளார்;  இவற்றை முனைவர் இ.மா.இராமச்சந்திரன், “மொழியின் சிறப்பு” என்ற தலைப்பில் நமக்குத் தருகிறார்; தமிழர்கள் மொழிக்குமட்டும் இலக்கணம் படைக்கவில்லை வாழ்க்கைக்கும் இலக்கணம் படைத்தவர்கள். ஆரியர்கள் வரும் முன்னர் இந்தியா முழவதும் வழங்கிய மொழி தமிழே. இந்திய மொழிகளின் தாயும் தமிழே. உலக வழக்கு நூல் வழக்கைத் தழுவியே இருந்தால்தான் மொழி நிலைக்கும் முதலான இலக்குவனாரின் முடிபுகளையும்  எடுத்தாண்டு விளக்குகிறார்.
  “பேரா.சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூலில் ஆய்வுமுறை உத்திகள்”  குறித்துக் கிளாக்குளம் முக்கனி மு.பழநியப்பன் உரைக்கிறார்; அரிய பெரிய ஆய்வுச்செய்திகளைப் புதையலாக அள்ளி அள்ளிக் கொடையாக இலக்குவனார் அளித்துள்ளார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்பிற மொழிகளின் இலக்கியத் தொன்மையை அடுக்கடுக்காக எடுத்தியம்பி அவற்றினும் தமிழ்இலக்கியம் தொன்மை வாய்ந்தது எனவும் சிந்துவெளிச் சொற்கள் தமிழ்ச் சொற்களே எனவும் பேராசிரியர் இலக்குவனார் நிறுவுவதைப் பாராட்டுகிறார்.
   பரதகண்டம்  முழுவதும் பேசப்பட்டுவந்த மொழி தமிழ்;   ‘தமிழ்நாட்டில் எல்லாம் தமிழ்’ என்னும் நிலையை எய்தவேண்டும்; தமிழ்மொழியை ஒவ்வொரு தமிழனும் ஒல்லும்வகை வளர்க்க வேண்டும்;    எனப் ‘பழந்தமிழ்’ நூல் வழி ஆராய்ந்து அளிக்கப்படுவனபற்றி முனைவர் அருள்நிதி பி.கா.வீரவராசா, “சி.இலக்குவனாரின் தமிழ் மறுமலர்ச்சி”  மூலம்  தெளிவுபடுத்துகிறார். ஆங்கில நாட்டில் பிரெஞ்சும் இலத்தீனும் ஆட்சி  செய்ததையும் ஆங்கிலேயர் அதனை அகற்றி ஆங்கில மொழியை வாழ வைத்துள்ளதையும் அவர்களைப் போன்ற மொழிப்பற்று இருந்தால்தான் தமிழ் வாழும் என்றும்  இலக்குவனார் விளக்கியுள்ளார். தமிழைப் பயன்படு மொழியாக்கித் திருத்தமாகப் பேசவும் எழுதவும்  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார் எனவும் ஆய்வாளர் விவரிக்கின்றார்.
  ஐந்திணை மக்களின் வாழ்வியல் முறைகளை, ஆய்வாளர் செ.ஆமினா பானு, “தொல்காப்பியம் காட்டும் சமூகப் பின்புலம்: இலக்குவனாரின் நூல்வழிப் புரிதல்”   மூலம் வகைபட விளக்குகிறார்; மடலேறுதல் ஆண்களுக்கே உரியது எனத் தொல்காப்பியர் கூறுவதற்கான காரணத்தை இலக்குவனார் ஆராய்ந்து உரைப்பது ஏற்கத் தக்கதாக உள்ளது என்றும் தெரிவிக்கிறார்
   “உழைப்பால் உயர்ந்தவர் சி.இலக்குவனார்” என அவரின்  வாழ்வுக் களங்களை விளக்கி முனவைர் ப.செந்தில்நாயகம் சுருக்கித் தருகிறார்; அவரின் படைப்புப்பணி, ஆசிரியப்பணி, இதழ்ப்பணி, நிறுவனப் பணி, பரப்புரைப்பணி எனப் பலவற்றையும் விளக்கியுள்ளார். தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு முதலான பேராசிரியர்  வேண்டுகோளை நிறைவாகக்கூறி, நாம் அவற்றைப் பின்பற்ற வேண்டும் எனக் கட்டுரையை முடித்துள்ளார்.
  மொழிப்போர் மூலம் “முத்திரை பதித்த முதல்வர் இலக்குவனார்”   குறித்துப் பேரா.சிவ.சத்தியமூர்த்தி நமக்குப் பேருவகையுடன் அளிக்கிறார். நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் 1970 சூன் திங்கள் ஆசிரியர்க்கு ஊதியம் வரக்காலத் தாழ்வாயிற்று; முதல்வராக இருந்த  இலக்குவனார்  தொலைபேசியில் கல்லூரித்தலைவரை அழைத்து நாளை கண்டிப்பாக ஊதியம் வழங்கப்பட்டாக வேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறினார் ; மறுமுனை கருத்திற்குக் காத்திராமல் தொலைபேசியை வைத்து விட்டார். என  இலக்குவனாரின் நேர்மைக்கும் துணிவிற்கும் நெஞ்சுரத்திற்கும் சான்றான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களைத் தம் பிள்ளைகளாகக் கருதியவர் முனிவுற்றுத் தண்டிக்கும் நிலையிலும் எதிர்கால நலன் கருதி மன்னிக்கும் சால்பினர் என அவரின் பண்புநலன்களையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
 ‘‘தொல்காப்பிய வேற்றுமையியலில் இலக்குவனாரின் பன்முக உத்திகள்” குறித்துக்  கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கர வீரபத்திரன் செறிவாக வடித்தமைத்துள்ளார். தான்போற்றும் அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்தையும் அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியின் கருத்தையும் மறுத்தும் தெய்வச்சிலையார் கருத்தை ஒத்தும் பேராசிரியர்  வேற்றுமையியலை விளக்கியுள்ளார் என்கிறார்; ஒப்பீட்டு உத்தி, வழக்கு உத்தி, காரண – காரிய உத்தி முதலான உத்திகள் மூலம் பிற உரையாசிரியர்களின் கருத்துகளைச் சுட்டிக்காட்டிச் சிறப்பான முறையில்  இலக்குவனார் விளக்குகிறார் என்றும் சான்றுடன் நமக்கு அளித்துள்ளார்; நாஞ்சில் நாட்டு வழக்கத்தையும் எடுத்துக் காட்டிப் பேரா.இலக்குவனார் விளக்குவதால் எக்காலத்திற்கும் ஏற்ற விளக்கமாகப்  பேரா. இலக்குவனார் ஆய்வுரை அமைவதை நமக்கு உணர்த்தியுள்ளார்.
  “குறள்நெறிக் காவலர், கொள்கைக்குரிசில் இலக்குவனார்”  என அவரின் இதழ்ப்பணி மூலம் ஆய்வாளர் இராசாமுகம்மது இயம்புகிறார். 1969  ஆண்டு முழுமையும் திருவள்ளுவர் ஈராயிரமாண்டைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பேராசிரியர் இலக்குவனார் 12 வேண்டுகோள்கள் விடுத்தமை குறள்நெறி இதழில் வெளிவந்துள்ளது.  இதனைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர்.
 தொல்காப்பியத்திற்கு உரை எழுதியோர், அவரவர் காலத்தில் வழங்கிய ஆரியப்புராணக் கதைகளை உள்ளத்தில் கொண்டு உரை எழுதியுள்ளனர் என இலக்குவனார்  மெய்ப்பித்துள்ளார்; தமிழின் தொன்மைச்சான்றுகளைத் தருக்க முறையிலான ஆதாரங்கள் மூலம் நிறுவியுள்ளார்; தொல்காப்பிய ஆராய்ச்சிகளில் வடமொழிச்சார்பு கருத்துகள் திணிக்கப்பட்டமையைக் களைந்து தமிழ்மரபு வழி ஆராய்ந்து கூர்நோக்குடன் அளித்துள்ளார். இவ்வாறு, முனைவர் ஆ.செல்லப்பா, “தொல்காப்பிய ஆராய்ச்சிகளில் வடமொழித் தாக்கமும் தமிழ் அகமரபுச் சிந்தனைகளும்” என்னும் தலைப்பில் எடுத்தோதியுள்ளார்.
  “முனைவர் சி.இலக்குவனார் கூறும் தொல்காப்பிய உவமயியல்” குறித்து முனைவர் இரா.இந்துபாலா விளக்கியுரைக்கிறார்; வினை உவம உருபுகள், பயன் உவம உருபுகள், மெய்யுவம உருபுகள், உரு உவம உருபுகள் ஆகியவற்றை இலக்குவனார் விளக்கும் முறையையும் குறிப்பிட்டுள்ளார்.
  “சி.இலக்குவனாரின் எடுத்துக்காட்டுகளும் உவமைகளும்” நாட்டு நடைமுறைக்கேற்ப மன்பதை நோக்கில் அமைந்துள்ளமையை ‘அமைச்சர் யார்?’  நூலின் மூலம் ஆய்வாளர் செ.தங்கராசு அழகுபட விளக்கியுள்ளார்; உலகியல் அறிவும் தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பதை உணர்த்தும் வகையில்  இலக்குவனாரின் எடுத்துக்காட்டுகள்  பொருத்தமாக இருக்கின்றன என்கிறார்.
இலக்குவனார்திருவள்ளுவன்

Sunday, December 11, 2016

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-இலக்குவனாரின்தமிழ்ப்பணிகள், கருத்தரங்கம், தொகுப்புரை, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_thamizhpanigal_thokuppurai_ilakkuvanar-thiruvalluvan
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 3/7


“சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்;  தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை; குடுகுடுப்பைக்காரன் பிச்சை எடுத்த சோறு பலவகையாகக் கூட்டுச்சோறாக உள்ளதுபோன்ற கலப்பு மொழி தேவையில்லை; பிற நாட்டுப்  பொருள்களுக்குச் சுங்க வரி மூலம் தடை விதிப்பதுபோல், பிற மொழிச் சொற்களுக்கும் தடை விதிக்க வேண்டும்; திருத்தமான  இனிய தமிழையே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் எனப் பேராசிரியர் வலியுறுத்துவனவற்றையும்  தெரிவித்துள்ளார்.
  “சங்க இலக்கியச்  சொல்லோவியங்களில் இலக்குவனார் உத்திகள்” யாவை என  ஆய்வாளர் இல.திருப்பதி செல்வம் விளக்குகிறார். வகைப்பாட்டு உத்தி, சொல் விளக்க உத்தி,  நாடக  உத்தி  ஆகியவற்றை இலக்கிய விளக்கத்திற்குப் பயன்படுத்தும் புதிய முறை கையாளல்; பாலைத்திணைக்குப் புது விளக்கம்  தந்துள்ளதுபோல் புதிய விளக்கம் அளித்தல்; பதவுரை, சொல்லாராய்ச்சி, ஆராய்ச்சிக் குறிப்பு, குறிப்புகள், உவமை எனப் புதுவகை ஆராய்ச்சிக்கு வித்திட்டுள்ளமை;  ஆகியவற்றால் பேராசிரியரின் சங்க இலக்கிய விளக்கங்கள் மேலும் ஆய்விற்குரிய களமாகப் பரந்து அமைந்துள்ளன என்றும் தெளிவுபடுத்துகிறார். மேலும், இவர்,  “சொல்லுக்குச் சொல்விளக்கம் என்னும் பகுதியில் தெரியாத சொற்களுக்கு மட்டும் விளக்கம் தந்திருந்தால் போதுமானது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.  இச்சொற்பொருள் விளக்கப் பகுதியின் பெயர் ‘பதவுரை’ என்பதாகும். பதவுரை என்பது பாடலில் இடம் பெற்றுள்ள எல்லாப் பதங்களையும் விளக்குவதுதான். ஒருவருக்குத் தெரிந்த பொருள் மற்றவருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு காலத்தில் புரியும் சொற் பொருள் பிறிதொரு காலத்தில் புரியாமல் போகலாம். எனவே, இலக்குவனார் கையாண்ட  முறையே சிறந்தது என்பதை  அவர் உணர வேண்டும்.
  திராவிட இயக்க அறிஞரான “சி.இலக்குவனார் பார்வையில் காமராசர்” வரலாறு, கூறப்பட்டிருப்பதை ஆய்வாளர் செ.சத்தியமூர்த்தி நம் உள்ளத்தில் பதித்துள்ளார்; வெறும் புகழ்ச்சி நூலாக இல்லாமல், ஆட்சியின் குறைகளையும் அவற்றைப் போக்க வேண்டிய தேவைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்;  நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது போன்ற தமிழ்நல வேண்டுகோள்களையும் வலியுறுத்தியுள்ளார்; காமராசரின் வாழ்க்கை வரலாற்றினை மட்டுமல்லாமல், அக்கால அரசியல்,  மன்பதை நிலைகளையும் தெளிவாகக் காட்டியுள்ளார்; காய்தல் உவத்தலின்றி, நடுநிலையோடு, தமிழ்ப்புலமையுடன் கூடிய எளிமையான நடையில் பேராசிரியர் அளித்துள்ளார் எனப் பாராட்டுகிறார்.
  தொல்காப்பியரின் பேரறிவு, பேராற்றல், பெரும்புலமை முதலியவற்றைத் தம் ஆராய்ச்சிவன்மையால் சிறந்த எடுத்துகாட்டுகளுடன் நிறுவிய புலமை; தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவராதலால் எழுத்து, சொல், அதிகாரங்களின் மொழியியல் நுட்பங்களையும் பொருளதிகாரம் புகலும் சமுதாயக் கருத்துகளையும் திட்பநுட்பத்துடன் விளக்கும் வியப்புமிகு திறன்; செவ்விய திருக்குறட்பணி; தமிழ்காக்கும் களப்பணியாளர் என அவரது படைப்புகள், அமைப்புகள் மூலம்  “சி.இலக்குவனாரின் அமரவாழ்வும் அருந்தமிழ்த்தொண்டும்”  நாம் போற்றி வணங்கத்தக்கன என்பதை ஆய்வாளர் மு.வரதராசன் உணர்த்துகிறார்.
    “திருக்குறளில் பேரா.சி.இலக்குவனாரின் ஆளுமைத்திறன்”  வெளிப்படுவதை ஆய்வாளர் பொ.ஆறுமுகச் செல்வி புலப்படுத்தியுள்ளார்; வேறுபட்ட, மாறுபட்ட சொல்லைக் கொண்டு பொருள் சொல்லாமல்,குறளில் உள்ள அதே சொல்லைக் கொண்டு மக்கள் எளிதில் புரிந்து வகையில் பொருள் கொடுத்துள்ளார்;  எளிய நடை, இனிய சொற்கள், நல்ல எடுத்துக்காட்டுகள், பழமொழிகள், உரையாசிரியர்கள் உரை மேற்கோள் மூலம், தமிழ்மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார் என்று எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார்.
   “சி.இலக்குவனாரின் மொழி: பண்பாட்டின் அடையாளம்” என்பதையும் தமிழின் செம்மொழித் தன்மையை விளக்குவதையும் ஆய்வாளர் அ.செயந்தி ‘பழந்தமிழ்’ நூல் மூலம் பாங்குடன் விளக்கியுள்ளார்; மொழியின் தோற்றம், மொழியின் சிறப்பு,  தொடர் அமையும் முறை, பேச்சுமொழி, எழுத்துமொழி,  நூல்வழக்கு, உலக வழக்கு, திராவிடக் குடும்பம் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்பம் என்று சொல்ல வேண்டியதன் இன்றியமையாமை, இந்தியா முழுவதும் வழங்கிய மொழி தமிழே, சிந்துவெளிப் பழந்தமிழும் இன்றைய தமிழும் வேறல்ல எனப் ‘பழந்தமிழ்‘ நூல் வாயிலாக இலக்குவனார் விளக்குவதை நமக்கு எடுத்தியம்புகிறார்.
  வள்ளுவர் கூறும் இல்லறம் மூலம் “இலக்குவனாரின் பெண்ணியப் பார்வை”யைப் பெருமையுடன் ஆய்வாளர்  இரெ.சந்தான பாபி விளக்கியுள்ளார்; பெண்ணைக் குறிப்பது ஆணுக்கும்  மனைவியைக் குறிப்பது கணவனுக்கும் மகனைக் குறிப்பது மகளுக்கும் தாயைக் குறிப்பது தந்தைக்கும் பொருந்தும் எனச் சிறப்பாக இருபால்  சமத்துவத்தை ஆணித்தரமாக  ஆய்ந்துரைத்துள்ளார்; பெண்ணியத்திற்கு எதிரான பரிமேலழகர் கருத்தைக் கடுமையாகச் சாடுகிறார்; இவ்வாறு இன்றைய உலகின் சிறந்த பெண்ணியச் சிந்தனையாளராகப்  பேராசிரியர்  இலக்குவனார் விளங்குவதைப் பல எடுத்துக்காட்டுகள் மூலம்   அழுத்தமாகப் படம்பிடித்துள்ளார்.
  தொல்காப்பியர் காலத்தில் வருண வேறுபாடு இல்லை; கரணம் என்பதை வேள்விச்சடங்கு என நச்சினார்க்கினியர் கூறுவது தவறுஅக்காலத்திலேயே திருமணப் பதிவு முறை இருந்தது; எனப் பலவகையிலும், “பேராசிரியர் இலக்குவனார் பார்வையில் கற்பியல்” ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ நூலில் தமிழ் மரபிற்கேற்ப விளக்கப்பட்டிருப்பதை இளம் முனைவர் க.வீரம்மாள் விளக்கியுள்ளார்.
  நன்மாணாக்கராக, நல்லாசிரியராக, சிறந்த ல்லூரிமுதல்வராக, புகழார்ந்த இதழியலாளராக, சிறந்த நூலாசிரியராக, ஆராய்ச்சியாளராக, இணையற்ற மொழிபெயர்ப்பாளராக, ஆட்சிக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், பாடத்திட்ட உறுப்பினர் எனப்பல்வேறு கல்விநிலைப் பொறுப்பாளராக, இயக்கங்களை வழிநடத்துபவராகத் திகழும் “இலக்குவனாரின் பன்முகத்திறன்” குறித்து ஆய்வாளர் தி.உமாபதி சிவகுமார் பழுதற விளக்கியுள்ளார்; முதல்முறையாக அஞ்சல்வழிக்கல்வி தொடங்கியவர், நாளிதழ் தொடங்கிய முதல் மொழிப்பேராசிரியர், கொள்கைகளிலும் மொழிப்பற்றிலும் பிடிவாதமான உறுதியாளர், அஞ்சா நெஞ்சர் என்பனவற்றையும் நமக்கு நவின்றுள்ளார்.
  “பேரா.சி.இலக்குவனாரின் சங்கக்காலம் காட்டும் நாட்டு வளம்” குறித்து ஆய்வாளர் ப.கிருட்டிணம்மாள் இனிதே இயம்பியுள்ளார்.  இதன் மூலம்,  சங்க இலக்கியச் செய்திகளை எளிமையாகவும் சிறப்பாகவும் விளக்கியுள்ளார்; நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் முதிர்ச்சிக்காலம் சங்கக்காலம் எனப் பேராசிரியர் நிறுவியுள்ளார் என்கிறார்; நாடு, நகரம்,  இமயம் முதல் குமரி வரை தமிழகமாக இருந்த நாட்டின் எல்லை,பிற நாட்டு மக்களாலும் விரும்பத்தக்க நாட்டின் வளம், நாட்டின் வீரம் முதலானவற்றை இலக்குவனார் விளக்கியுள்ளதை எடுத்துஆள்கிறார்.
 சங்கக்காலமக்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் விருந்தோம்பலிலும் சிறந்து விளங்கினார்கள்; தட்பவெப்பநிலைக்கேற்பவும் செய்யும் வேலைக்கேற்பவும் மாற்றி மாற்றி ஆடை அணிந்தார்கள்; தலைமுதல் கால்வரை பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்த அணிகலன்களை அணிந்திருந்தனர்; அழகுக்கலையில் சிறந்திருந்தார்கள்; கலைநுணுக்கமிக்க மாளிகைகள், எழுநிலை மாடங்கள் கட்டிக் குடியிருந்தார்கள்; இவ்வாறு, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்‘ நூல்வழியாகப் பன்முக நோக்கில் “பேரா.சி.இலக்குவனார் விளக்கும் சங்கக்காலம் காட்டும் நாகரிகமும்  பண்பாடும்”  நயம்பட உள்ளதாக ஆய்வாளர் மு.வசந்தி திறம்பட விளக்கியுள்ளார்.
   இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ ஆய்வுநூல், செந்தமிழின் செம்மொழிச் சீர்மையை விளக்குகிறது; தேசிய நெறி, அரசு நெறி, தெரிவு நெறி, தூய்மை நெறி, எழுத்து நெறி, பயன்பாட்டு நெறி, உரிமை நெறி,  நூல் நெறி, போராட்ட நெறி,  கல்வி நெறி, காப்பு நெறி, ஆளுமை நெறி, கட்சி நெறி, குமுகாய நெறி, குறிக்கோள் நெறி  ஆகிய  பதினைந்து நெறிகளை வகுத்தளித்துள்ளார்; ஒவ்வொரு நெறி முறையிலும் தமிழ்ப்பற்று, தமிழ் மீட்புணர்வு மிளிர்கின்றது; எனப் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ்ப்படைப்புகள்” மூலம் இளம்முனைவர் பழ.இராசகோபாலன் பகுத்து விளக்குகிறார்; தமிழ், செம்மொழி என்னும் தகுதிப்பேற்றுக்குரிய அனைத்துச் சீரிய பண்புகளும் பெற்றிலங்குவதைப் பழந்தமிழ்  நூல் மூலம் இலக்குவனார் உணர்த்தியுள்ளார் எனவும் விளக்குகிறார்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
இலக்குவனார்திருவள்ளுவன்