Showing posts with label வெள்ளிவீதியார். Show all posts
Showing posts with label வெள்ளிவீதியார். Show all posts

Sunday, July 11, 2021

ஆதிமந்திபோல் உழன்ற வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 9.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 8. தொடர்ச்சி)

 

அகநானூறு

(12) வாட லுழுஞ்சில் வளைநெற் றந்துண

ராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக்

கோடை நீடிய வியன்பெருங் குன்றத்து

நீரி லாராற்று நிவப்பன களிறட்

டாளி லத்தத் துழுவை யுகளுங்

காடிறந் தனரே காதலர் மாமை

யரிநுண் பசலை பாஅய்ப் பீரத்

தெழின்மலர் புரைதல் வேண்டு மலரே

யன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்

றொன்னிலை முழுமுதற்  றுமியப் பண்ணிப்

புன்னை குறைத்த ஞான்றை வயிரிய

ரின்னிசை யார்ப்பினும் பெரிதே யானே

காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்

தாதி மந்தி போலப் பேதுற்

றலந்தனெ னுழல்வென் கொல்லோ பொலந்தார்க்

கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்

வான வரம்ப னடன்முனைக் கலங்கிய

வுடைமதி லோரரண் போல

அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே.

என்பது, வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (45)

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்

ஆடுகள பறையின் அரிப்பன ஒலிப்ப

கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து

நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு

ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்               

காடு இறந்தனரே காதலர் மாமை

அரி நுண் பசலை பாஅய் பீரத்து

எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே

அன்னி குறுக்கை பறந்தலை திதியன்

தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணி                   

புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்

இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே

காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து

ஆதிமந்தி போல பேது உற்று

அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார்   

கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்

வானவரம்பன் அடல் முனை கலங்கிய

உடை மதில் ஓர் அரண் போல

அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே ]

(13) பாம்புடை விடரபனிநீ ரிட்டுத்துறைத்
தேங்கலந் தொழுக யாறுநிறைந் தனவே
வெண்கோட் டியானை பொருத புண்கூர்ந்து
பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய
முருக்கரும் பன்ன வல்லுகிர் வயப்பிணவு
கடிகொள வழங்கா ராறே யாயிடை
யெல்லிற் றென்னான் வென்வே லேந்தி
நசைதர வந்த நன்ன ராள்
னெஞ்சுபழு தாக வறுவியன் பெயரி
னின்றிப் பொழுதும் யான்வா ழலனே
யெவன்கொல் வாழி தோழிநம் மிடைமுலைச்
சுணங்கணி முற்றத் தாரம் போலவுஞ்
சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பி
னிலங்குவெள் ளருவி போலவு
நிலங்கொண் டனவாற் றிங்களங் கதிரே.

என்பது, இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.(362)

பாம்பு  உடை விடர பனி நீர் இட்டு துறை

தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே

வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து

பைம் கண் வல்லியம் கல் அளை செறிய

முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு 

கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை

எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி

நசை தர வந்த நன்னராளன்

நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்

இன்று இப்பொழுதும் யான் வாழலெனே                 

எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை

சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்

சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின்

இலங்கு வெள் அருவி போலவும்

நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே ]

(14) ‘செய்யாமொழி’
(திருவள்ளுவமாலை-23)

பொருள் விரித்துணருந் தெருளுடைய மனத்தர்க்கெல்லாம் இப்பதினான்கு பாடல்களும் பதினான்குலகேயாம் எனின் அது வியப்பன்று; இத்துணையுங் கூறியவாற்றான் வெள்ளி வீதியார் வரலாறு ஒருவாறு உணரப்படும்.

(தொடரும்)

Saturday, July 10, 2021

கெடுநரு முளரோ? – வெள்ளிவீதியார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 8.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 7. தொடர்ச்சி)

 

(6) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
நிறுக்க லாற்றினே நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையி லூமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெ யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோண்டுகொளற் கரிதே.

இது கழற்றெதிர்மறை. (58)

 [இடிக்கும் கேளிர் நும் குறை ஆக

நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல

ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போல                                  

பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே]

(7) நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே.

[* இதனானும் இவ் வெள்ளிவீதியார் தங்கணவனைத் தேடியுழன்றமை நன்குணரப்படும்.]

[நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரிற்

கெடுநரும் உளரோநம் காதலோரே.]

இது பிரிவிடையழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது: நீ யவர் பிரிந்தாரென் றாற்றாயாகின்றதென்னை? யான் அவருள்வழி யறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

ஒளியிழந்தமையினையும் விசும்பின் மீனிற் பலர்பிறரைக் கண்டும் அவ்விசும்பிற் றிங்கள் போன்ற தம் கணவனைக் காணாமல் உழன்றமையினையுமே இது குறிப்பதென்று கொள்க. இவ்வாறே தருமிக்குப் பொற்கிழியளிப்பான் வேண்டிச் செண்பகமாறன் உளக்கருத்தமைத்து இறையனாராற் பாடப்பட்ட ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னுஞ் செய்யுளும் இக் குறுந்தொகையிற் கோக்கப்பட்டு அகத்திணைக் கேற்ற துறைவகை பெறுவதும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க.

தோழி தூதுவிடுவாளாகத் தலைமகள் தனதாற்றாமையாற் கூறியதூஉமாம். (130)

(8) அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களொ
டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

[அம்ம வாழி தோழி நம் ஊர்

பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ

தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர்

நன்று நன்று என்னும் மாக்களொடு

இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே]

இது தலைமகன்றமர் வரைவொடு வந்து சொல்லாடா, நின்றுழி வரைவு மறுப்பவோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. (146)
(9) அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டமர்ந்தன்று மன்னே யினியே
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைநில் லாதே.

இஃது உடன்போக்குணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (149)

[அளிதோ தானே நாணே நம்மொடு

நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே

வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை

தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு

தாங்கும் அளவை தாங்கி                      

காமம் நெரிதர கை நில்லாதே]

(10) சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென விறீஇயரோ வைய மற்றியா
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல
வெமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.

இது கற்புக்காலத்துத் தெளிவிடை விளங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூஉமாம். (169)

[ சுரம் செல் யானை கல் உறு கோட்டின்

தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்

நும்மொடு நக்க வால் வெள் எயிறே

பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல

எமக்கும் பெரும் புலவு ஆகி                          

நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே]

(11) வெண்மணல் விரிந்த வீததை கானற்
றண்ணந் துறைவன் றணவா வூங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டு
மாலையோ வறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கனொடு
புலம்புடைத் தாகுத லறியேன் யானே.

இது பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்தது. (386)

[ வெண் மணல் விரிந்த வீ ததை கானல்

தண்ணம் துறைவன் தணவா ஊங்கே

வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும்

மாலையோ அறிவேன்-மன்னே மாலை

நிலம் பரந்து அன்ன புன்கணோடு                   

புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே]

(தொடரும்)

Friday, July 09, 2021

தங் கணவனைப் பிரிந்ததை வருந்திக் கூறும் வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 7.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 6. தொடர்ச்சி)


நற்றிணை

(1) சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறைபோ கறுவைத் தூமடி யன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே
யெம்மூர் வந்தெம் முண்டுறைத் துழைஇச்
சினைக்கெடிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி
யனையவன் பினையோ பெருமற வியையோ
ஆங்கட் டீம்புன லீங்கட் பரக்குங்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.

இது காமமிக்க கழிபடர் கிளவி – (70 )

[சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே

துறை போகு அறுவை தூ மடி அன்ன

நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே

எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ

சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி        

அனைய அன்பினையோ பெரு மறவியையோ

ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்

இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே]

(2) திங்களுந் திகழ்வா னேர்தரு மிமிழ்நீர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே
யொலிசிறந் தோதமும் பெயரு மலிபுனற்
பல்பூங் கானன் முள்ளிலைத் தாழை
சோறுசொரி குடவையிற் கூம்புமுகை யவிழ
வளிபரந் தூட்டும் விளிவி னாற்றமொடு
மையிரும் பனைமிசைப் பைதல வுயவு
மன்றிலு மென்புற நரலு மென்றிவ்
விரல்கவர்ந் துழந்த கவர்வின் யாழ
யாம முய்யாமை நின்றது
காமம் பெரிதே களைநரோ விலரே.

இது காமமிக்க கழிபடர் கிளவி: மீதூர்ந்த தலைமகள் சொல்லியது. (335)

 

[திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்

பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே

ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல்

பல் பூ கானல் முள் இலை தாழை

சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ              

வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு

மை இரும் பனை மிசை பைதல உயவும்

அன்றிலும் என்பு உற நரலும் அன்றி

விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்

யாமம் உய்யாமை நின்றன்று                          

காமம் பெரிதே களைஞரோ இலரே]

(3) நிலவே, நீனிற விசும்பிற் பல்கதிர் பரப்பிப்
      பான்மலி கடலிற் பரந்துபட் டன்றே
யூரே, யொலிமரூஉஞ் சும்மையொடு மலிபுதொகு பீண்டிக்
      கலிகெழு மறுகின் விழவய ரும்மே
கானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறுந்
      தாமமர் துணையொடு வண்டிமி ரும்மே
யானே, புனையிழை ஞெகிழ்த்த புலம்புகொ ளவலமொடு
      கனையிருங் கங்குலுங் கண்படை யிலனே
அதனால், என்னொடு பொருங்கொலிவ் வுலக
      முலகமொடு பொருங்கொலென் னவலமுறு நெஞ்சே.

இது வேட்கை பெருகத் தாங்ககில்லாளாய் ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. (348)

[நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி

பால் மலி கடலின் பரந்து பட்டன்றே

ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி

கலி கெழு மறுகின் விழவு அயரும்மே

கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்         

தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே

யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு

கனை இரும் கங்குலும் கண்படை இலெனே

அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்

உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே]

குறுந்தொகை

(4) ‘கன்று முண்ணாது………………………………..கவினே’

இது பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது. (27)

(5) [*] காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
யகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

இஃது இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. (44)
—————-
[*இதனை அகத்திணைக்கேற்ற துறைவகையின் அமைத்துக் கருத்துரை, கூறினாரேனும் வெள்ளிவீதியார் தங்கணவனைப் பிரிந்து தேடிச்செல்வுழித் தங்கால்கள் நடக்கலாகாது செலவு தப்பியமையினையும் தங்கண்கள் அவனையே தேடி**??]

(தொடரும்)

Thursday, July 08, 2021

நல்லிசைப் புலமையிற் சிறந்த வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 6.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 5. தொடர்ச்சி)

இனி, இவர் தந்தலைவனைப் பிரியலுற்றுழிப் பாடியருளிய இக் ‘கன்று முண்ணாது’ என்னுஞ் செய்யுளொன்றே இவரது நல்லிசைப் புலமையினை நன்கு புலப்படுத்தும். இது சொல்லானும் பொருளானும் சுவை பெரிது பயப்பதென்பது ஆய்ந்தறியத்தக்கது. கன்று வயிறாரவுண்டபின்னே கலத்திற் கறத்தல் அறமென்னுங் கருத்தாற் கன்ருண்டலை முன்னும் கலத்திற்படுதலைப் பின்னும் வைத்தோதினார். ‘கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்’ என மணிமேகலை துறவினும் (அறவணர்த்தொழுதகாதை), ‘கன்றருத்தி மங்கையர் கலநிறை பொழிதர’ எனச் சிந்தாமணியினும் (நாமகள் -110), கூறுதல் காண்க.

விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாட் டொட்டுச் சிறந்தன் றீம்பா
லறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்
[மணிமேகலை ஆபுத்திரன்றிற மறிவித்தகாதை.
விடுநிலம் – மக்களால் விளைவிற்குதவாமல் விடப்பட்ட நிலம்.]

தன்மைத்தாகலின் ‘நல்லான்’ என்றார். நல்லான் றீம்பால் கன்று முண்ணாமற் கலத்தினும்படாமல் வெறிதே நிலத்தே உகுந்தொழிந்தாற் போல எனது மாமைநிறத்தொடு கூடிய அழகு எனக்குமாகாமல் என் தலைவற்கும் உதவாமற் பசலையான் உண்டு கழிய வேண்டும் என்றார் என்க. என்னை என்பது,
‘என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்’ 

என்புழிப் போல, என்றலைவன் என்னும் பொருட்டு. பொருண்மேற் சேறல் முதலாயின மனைவியோ டில்லை என்பதனால், மகளிர்க்கு இவ்வரிய பிரிவுத்துயர் அநுபவித்தலே யுறுவது என்னுங் கருத்தால், ‘வேண்டும்’ என்று கூறினார். இவ்வாறு இவர் பாடியருளிய செவ்விய கூரிய தீஞ்சொல் வவ்விய பாடல்கள் நற்றிணையில் 3-ம், குறுந் தொகையில் 8-ம், நெடுந்தொகையில் 2-ம், திருவள்ளுவமாலையில் 1-ம், ஆகப் பதினான்குள்ளன. இவற்றுள், ‘வாடபடுபுல் – ஒருவர் முயற்சியானன்றித் தானே யுண்டாய புல். அப்புல்லும் விளைத்தாற்போல யாண்டும் ஒத்துண்டாகாமையான் ‘மருங்கின்’ என்றார். ஆர்ந்து-ஒருவர் கொணர்ந்திடுதலின்றித் தானே சென்று மேய்ந்து எ-று. ‘நெடுநில மருங்கின் மக்கள்’ என்றதனால் அங்ஙனம் விட்ட நிலமும் மிகச் சிறிதாதலறியப்படும். மக்கட்கெல்லாம் என்றது, குழவிமுதல் முதியோரிறுதியாக எல்லா மக்கட்கும் எ – று. பிறந்தநாட் டொட்டு அம்மக்கள் தோன்றிய நாட்டொடங்கி. இதனாற் சாந்துணையும் என்பது கூறாமலுணரப்படும். கொலையுந் துன்பமு மில்லாமல் எய்தவருந் தீவிய உணவாதலாற் ‘சிறந்ததன் றீம்பால்’ என்றார். தான் புல்லை யுண்டும் பிறர்க்கு இனிய பாலை யளித்தலின், ‘அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்’ என்றார் என வுணர்க.

‘லுழுஞ்சில்’ என்னும் நெடுந்தொகைச் செய்யுட்கண் இவர், திதியன் என்பவன் குறுக்கை யென்னும் ஊர்ப்புறத்து [*] அன்னியொடு பொருது அவ்வன்னியின் காவன்மரமாகிய புன்னையினை வேரொடு தடிந்த கதையினையும், காதலற்கெடுத்த ஆதிமந்தி கதையினையும், [#] சேரனொருவன் வேலாற் கடலோட்டிய கதையினையும் எடுத்துக்கூறியுள்ளார்.


———————————————————————————
[*] இவ்வன்னியுடைய ஊர் அன்னியூர். அது, தேவாரத் திருப்பதிகளுள் ஒன்று.]
[#] இவன் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன். (புறம். 366) ]
————————————————————————————

திருவள்ளுவமாலையுள்,
‘செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே–செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.’

என்பது இவர் பாடியது. இதன்கண் வேதத்தினைச் செய்யாமொழி என வழங்கியதனால், இவர் வேதம் நித்தியமெனவுங் கருதிய கோட்பாடுடையரென்பதறியப்படுவது. இவ்வெண்பாவானே இவர் வேதவழக்கொடுபட்ட கொள்கையினரென்பதும் எளிதினுணரத்தகும். திருக்குறளைப் பொய்யாமொழி என்னும் பெயரான் வழங்கினாரும் இவரே யாவர். இவர்,

காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதி மந்திபோலப் பேதுற்
றலந்தனெ னுழல்வேன் கொல்லோ’
(அகநானூறு-45)

என்பதனால், இவர் ஆதிமந்தியார்க்குப் பிற்பட்ட காலத்தவர் என்பதும், ஔவையார், ‘வெள்ளி வீதியைப் போல’ (அகநானூறு-147) என்பதனால் அவ் வௌவையாருக்கு முற்பட்ட காலத்தவரென்பதும் நன்குணரத்தகும். இவரது நல்லிசைப் புலமையின் பல்வளம் பலருமறிய இவரது இன்பப்பகுதியின் பொருட்பாடல்களை ஈண்டுத் தருகின்றேன். இவற்றானும் இவர் தங்கணவனைத் தேடி எங்கும் உழன்றமை ஆராய்ந்து கொள்க.

(தொடரும்)