Monday, November 14, 2016

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : இலக்குவனார்திருவள்ளுவன்


வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை  1/7


   செந்தமிழ்மாமணி, செம்மொழிச்சுடர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பிறந்தநாள் பெருமங்கல நூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து (2009) விழாக்கள் நடத்தப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், அ.இ.வானொலி நிலையம்,  சாகித்திய அகாதமி எனப்  பல்வகைத் தரப்பினராலும் தமிழ்நாட்டில் நூற்றாண்டு விழா, கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் முதலானவற்றில் தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், குவைத்து, துபாய், அமெரிக்கா, முதலான வெளிநாடுகள் பலவற்றிலும் இலக்குவனார் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன. நூற்றாண்டு முடிந்த பின்னரும் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் விழா எடுப்பதன் மூலம் தமிழன்பர்கள் இன்றும் உள்ளனர்! எங்கும் உள்ளனர் என அறியலாம்.  அந்த வகையில் திருநெல்வேலியில் இவ்வாண்டு மாசித்திங்கள் (மாசி 12,13,14 தி.பி 2045/ பிப் 24,25,26.2014 ஆகிய  3 நாளும்), பேராசிரியர் இலக்குவனார் தமிழ்ப்பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
  ம.தி.தா.இந்துக்கல்லூரி என அழைக்கப்பெறும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி. இக்கல்லூரியில் தமிழ்த்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறை சார்பில், 1983ஆம் ஆண்டிலிருந்து வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய(முதலியா)ர் பெயரில் வெ.ப.சு.தமிழியல்  ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்றும் பயிற்றுவித்தும் சென்றிருக்கும் செந்தமிழ்ச் சான்றோர்க்கு விழாக்கள் கொண்டாடி மகிழ்வதில் இக்கல்லூரி முன்னோடியாகத் திகழ்கிறது. அவ்வகையில் இக்கல்லூரியில் பணியாற்றித் தமிழ்ச்செம்மலாகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் இன்றமிழ்ப்பணியை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாள் விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
  கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் செ.மீனாட்சிசுந்தரம், செயலர் மு.செல்லையா, பொருளாளர் தளவாய் தீ. இராமசாமி, பிற ஆட்சிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் ப.சின்னதம்பி, தமிழ்த்துறைத் தலைவர் முதல்வர் ஆ.செல்லப்பா, ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கர வீரபத்திரன் ஆகியோர் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். ஏனெனில் பிற கருத்தரங்கங்களில் சிறப்பு அழைப்பாளர்கள் உரைதான்  பெரும்பாலும் இடம் பெற்றன. இங்கு முப்பெரு விழாவாக நடத்தியதுடன், எழுபதின்மருக்கு மேற்பட்ட கட்டுரைகளை இடம் பெறச் செய்து, பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் படைப்புப் பணிகளையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.
  கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்வடிவம் பெறும்பொழுதுதான்  கருத்தரங்கத்தின் நோக்கம் நிறை வேறுவதாக அமையும். அந்த வகையில்,  கருத்தரங்கக் கட்டுரைகளை  அச்சிட்டு வெளியிடும் மணிவாசகர் பதிப்பகமும் அதன் பொதுமேலாளர் திருவாளர் குருமூர்த்தி அவர்களும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள்.
  சிறப்பான இக்கருத்தரங்கத்திற்கெனப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முனைவர்கள், ஆய்வுநிறைஞர்கள், தமிழ்த்துறையினர், பிற துறையினர், ஆய்வு மாணாக்கர்கள், பணி நிறைவுற்ற தமிழ்ப்பேராசிரியர்கள் என்ற வகையில் பலநிலையினரும் கட்டுரைகள் அளித்துள்ளனர்.
  இக்கருத்தரங்கில், பேராசிரியரின்  ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ குறித்து 15 கட்டுரையாளர்களும், ‘பழந்தமிழ்’, மொழியியல் கருத்துகள் குறித்து 14 கட்டுரையாளர்களும் ‘(சங்க) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ குறித்து 12 கட்டுரையாளர்களும் திருக்குறள் உரை வளம் குறித்து 10 கட்டுரையாளர்களும் தமிழ் வளர்ச்சிக்காகப் போராடிய வாழ்க்கைச் சிறப்பு குறித்து 5 கட்டுரையாளர்களும் இதழியல் குறித்து 1 கட்டுரையாளரும் கவிதை குறித்து 1 கட்டுரையாளரும் ‘கருமவீரர் காமராசர்’ நூல் சிறப்பு குறித்து 1 கட்டுரையாளரும் பிறர் பொதுவான  ஆய்வுத் திறன் முறையிலும் கட்டுரை அளித்துள்ளனர். திருக்குறள் உரைவளம் பற்றிக்  குறிப்பிடும் பொழுது் அவரின் ‘வள்ளுவர் கண்ட இல்லறம்’  நூற்சிறப்பு அடிப்படையில் மூவர் கட்டுரை அளித்துள்ளனர்; ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’ குறித்து இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  சங்க இலக்கியச் சிறப்பு என்னும் பொழுது ஒருவர்  வணிகவியல் துறை நோக்கில் அளித்துள்ளது சிறப்பிற்குரியது.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
இலக்குவனார்திருவள்ளுவன்

Thursday, November 10, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை –   தொடர்ச்சி

 கல்லூரியின் முதல்வராக இருந்த வேதாந்த(ம் ஐயங்கா)ர் ஓய்விற்குப் பின்பு பி.சா.சுப்பிரமணிய(சாசுதிரி) முதல்வராக வந்தார்; ஆராய்ச்சி ஆர்வம் மிக்கவராக இருந்தாலும் சமசுகிருதப் பற்றால் தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துவார். ‘இலக்குவன்’ என்னும் பேராசிரியரின் தமிழ்ப் பெயரையே விரும்பாத முதல்வர் இவரைச் சமசுகிருத வெறுப்பாளராக எண்ணினார். தமிழின் தொன்மை, தூய்மை முதலானபற்றிய தவறான கருத்துகளை அவர் தெரிவிக்கும் பொழுதெல்லாம் சான்றுகளுடன் பேராசிரியர் மறுக்கத் தவறுவதில்லை. “இவ்வாறு எவர் தவறு செயினும் துணிவுடன் எடுத்துக் காட்டி எதிர்க்கும் திறன் அன்றே இலக்குவனாரிடம் இயல்பாக அமைந்திருந்தது. கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் மட்டுமல்ல. அது பிற்காலத்திலும் ஏன்? வாழ்வின் இறுதிவரை இந்த நெஞ்சுரம் இருந்தே வந்தது..” இவ்வாறு, பேராசிரியர் இலக்குவனார் புலவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் ஒன்றாகப் பயின்ற முதுபுலவர் சி.இராமசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புலவர்மணி இரா.இளங்குமரன்: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்: பக்கம் 27)
  வகுப்புகளில் மாணவர்கள் ஐய வினா தொடுப்பது இயற்கையே. சிலர் கிண்டலாகக் கேள்வி கேட்பதும் தன்னலம் சார்ந்து ஆசிரியர்களை எதிர்த்துப் பேசுவதும் உண்டு. ஆனால், பேராசிரியரின் வினாக்கள் தமிழ் எதிர்ப்பைச் சாய்க்கும் கணைகளாகும். தமிழாசிரியர்களே தொல்காப்பியத்தைப் பற்றி முழுமையாக அறிந்திராத அக்காலத்தில் நன்கு அறிந்து முதல்வரின் தமிழ்ப்பகைக் கருத்துகளை வீழ்த்துவனவே அவை. உடன் பயிலும் மாணவர்கள் தவறாக உருவானால் பின்னர் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்களும் திசைமாறித்தானே போவர். வகுப்பு நடைபெறும் முன்னரே பாடக் கருத்துகளை நன்கு படித்திருந்ததால்தான் அவரால் தெளிவாகப் பேச முடிந்தது. தமிழின் உயர்வையும் சிறப்பையும் மறைத்தும் இழித்தும் பழித்தும் வகுப்பு எடுக்கப்படும் பொழுது, வெறும் வினாக்கள் எழுப்பினால் மழுப்பலான விடைகளால் அமர்ந்து அமைதி காக்கும் நிலை வரலாம். எனவே, கேள்வியுடன் நில்லாமல், தக்க சான்றுகளுடன் மறுத்து விளக்கி உள்ளார். இதனால் முதல்வரின் மறைமுக எதிர்ப்புகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளானாலும் பேராசிரியர் மனங்கலங்காமல், துணிவுடன் தமிழ் காக்கும் அறிவுப் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு, ‘கெடல் எங்கே தமிழின் நலம், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்’யும் போராளியாகப் படிக்கும் பொழுதே பேராசிரியர் திகழ்ந்துள்ளார்.
 களத்தில் போராடுபவர்கள் கல்வித்தளத்தில் காலூன்றத் தவறி விடுகிறார்கள். கல்வியில் கரைகாண எண்ணுபவர்கள் கல்வி மக்களுக்காக என்பதை உணராமல் களத்தை மறந்து விடுகிறார்கள். பேராசிரியர் கல்வியிலும் கருத்து செலுத்தினார். களத்திலும் நின்று வென்றார்.  எனவேதான் பள்ளி வாழ்க்கையில் அவ்வப்பொழுது  சொற்பொழிவாற்றியதை விரிவாக்கினார். தம் அன்பு நண்பர்கள் அ.கிருட்டிணமூர்த்தி, அன்பு கணபதி, முருக இலக்குவன் ஆகிய மூவருடனும் இணைந்து தூயதமிழ்ப்பரப்புரை மேற்கொண்டார். இதனால் தமிழ்க்குரவர் என இந்நால்வரும் அழைக்கப் பெற்றனர். ஊர் ஊராகத் தெருத் தெருவாகச் சென்று மேற்கொண்ட பரப்புரை நற்பயனையே விளைவித்தது. படித்த முதியவர், படிக்கும் இளையர் என எல்லாத் தரப்பினரும் கேட்டு உணர்வு பெற்றனர். தன்னைப் பற்றி எண்ணாமல் நாட்டு மக்களைப்பற்றி எண்ணிச் செயல்படுபவன்தானே போராளி. அந்த வகையில் பேராசிரியரின் பரப்புரைப் பணியும் அவரின் போராட்ட வாழ்க்கையின் ஒரு பகுதிதான் எனலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, November 05, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்




முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி


  மேனாடுகளில் படிக்கும் பொழுதே பணியாற்றிக் கல்விச்செலவைத் தம் உழைப்பால் ஈடுகட்டும் நிலையை இக்காலத்தில் பார்க்கின்றோம். ஆனால், அக்காலத்திலேயே அதுவும் பள்ளிமாணவ நிலையிலேயே பேராசிரியர் கல்வி மீதுள்ள ஆர்வத்தினாலும் உழைப்பின் மீதுள்ள மதிப்பாலும் இந்நிலையை மேற் கொண்டார். பிறருக்குக் கல்வி கற்பித்து அதனால் பெறும் வருவாயைக் கல்விச் செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார். தம் தமிழாசிரியர் பெரியவர் பொன்னண்ணாக் களத்தில் வென்றார் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்து அவர் தரும் உதவிகளை ஏற்றுக் கொண்டார். ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்னும் பொழுது உழைத்து ஈட்டிக் கற்பது மேலானதன்றோ! பேராசிரியர், வாய்ப்பு உள்ள பொழுதெல்லாம் ஊர் மக்களிடையே தமிழுணர்வையும் தமிழ் இலக்கியச் சிறப்பையும் பகுத்தறிவினையும் தன்மானத்தையும் ஊட்டத் தவறவில்லை. தொடக்கத்தில் சிறுவன் பேசுகின்றான், கேட்போம் என வந்தவர்கள் எல்லாம் பின்னர் அவர் பொழிவுத்திறனையும் ஆழ்ந்தகன்ற கல்வியையும் அறிந்து ஈடுபாடு காட்டினர்.
 பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் வேலைக்குச் செல்லுமாறு அண்ணனின் தூண்டல். ப.இ.வ. தேர்ச்சி பெற்றிருந்ததால், தொடக்கப்பள்ளி ஆசிரியராகலாம் அல்லது அரசு துறைகளில் எழுத்தராகப் பணியாற்றி மேலும் மேலும் உயர்நிலை அடையலாம் என்பது நண்பர்களின் அறிவுரை. ஆனால், அவர் உள்ளம் அதற்கு இடம் தரவில்லை. தமிழறிஞர்களால் போற்றிப் புகழப்பட்ட தமிழ் உணர்வு தமிழின் பக்கமே அவரைத் திருப்பியது. தம் தமிழாசிரியர் பெரியவர் பொன்னண்ணாக் களத்தில் வென்றார் அறிவுரைக்கிணங்கத் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியில் தமிழ் பயில விரும்பினார். தன் முயற்சியில் அங்குச் சென்று சேர்க்கைக்காக வேண்டினார்; இடமும் கிடைத்தது; தங்கிப் படிப்பதற்கான ஏற்பாடுகளுக்காக ஊர் திரும்பினார். வந்த இடத்தில் ‘சாம்பவான் ஓடை’என்னும் ஊரில் தொடக்கப்பள்ளியில் பயிற்சி பெறாத ஆசிரியப்பணி கிடைத்து அங்கே பணியில் சேர்ந்தார். தன் மடியில் தவழ வேண்டிய தவமகன் இங்கே உழல்வதைத் தமிழ்த்தாய் விரும்புவாளா? ஆய்வாளர் ஒருவர் பயிற்சி பெற்றவரையே நியமிக்க வேண்டும் எனக் கூறியதால் இவ்வேலை போயிற்று. எனவே, திருவையாற்றுக்குத் திரும்பி அரசர் கல்லூரியில் உவகையுடன் புலவர் படிப்பில் கவனம் செலுத்தினார்.
 இக்கல்லூரியின் பெயர் வரலாறு, தமிழ்ப்பகைவர்கள் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் செயல்படுவதால் தமிழன்பர்கள் அவர்களினும் மிகுதியாக விழிப்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்ற உண்மையை உள்ளத்தில் பதித்தது. உயர்திரு பன்னீர் செல்வம் அவர்களும் தமிழவேள் உமாமகேசுவரம் (பிள்ளை) அவர்களும் அரசர் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பை ஏற்படுத்தினர். இதனால் சமசுகிருதம் பயிலும் பிராமணர்கள் நிறைந்த இக்கல்லூரியில் தமிழ் படிக்கத் தமிழ் மாணவர்கள் சேர்ந்தனர். படிப்படியாகத் தமிழ்மாணவர் எண்ணிக்கை பெருகியது. இதனால் பொறாமையுற்ற பிராமண மாணவர்கள் சிலர் சமசுகிருதக்கல்லூரி என்னும் பெயர் உள்ள கல்லூரியில் தமிழுக்கு இடம் தந்தது தகாது எனப் போர்க்கொடி தூக்கினர். இக்கல்லூரியை நிறுவிய சரபோசி மன்னர் தம் அறக்கட்டளை ஆவணத்தில் என்ன குறித்திருக்கின்றார் என ஆராய்ந்து தமிழ் கற்பிக்க நிறுவப்பட்ட கல்லூரி எனக் கண்டறிந்தனர். உடனே சமசுகிருதப் பற்றாளர்கள் உள்ளதும் போய்விடும் என்ற அச்சத்தில் தமிழ், சமசுகிருதம் என இரண்டுமே கற்பிக்கப்படட்டும் என மன்றாடினர். இரக்கமுற்றுத் தமிழ்த் தலைவர்கள் உடன்பட்டாலும் இதே பெயர்  இருந்தால் என்றேனும் ஒருநாள் மீண்டும் தொல்லை தருவர் என உணர்ந்தனர்; எனவே, தமிழ், வடமொழி கற்பிக்கும்  அரசர் கல்லூரி எனப் பெயர் மாற்றினர். இதனைப் பேராசிரியர் தம் வாழ்க்கை வரலாற்று நூலிலேயே குறிப்பிட்டுள்ளார். பெயரில் என்ன இருக்கின்றது என இளக்காரமாகக் கருதுவது தவறு என்பதற்கு இதுவும் ஒரு சான்று அல்லவா?
 பெரும்புலவர் உலகநாதர்(பிள்ளை), கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் (பிள்ளை) முதலான அருந்தமிழ்ப்புலவர்கள் ஆசிரியர்களாக வாய்த்த காரணத்தால் பேராசிரியரின் தமிழ்ப் புலமை சுடர்விடலாயிற்று. கல்லூரி நூலகத்தில் இருந்த, அறிஞர் கால்டுவெல் அவர்களின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதலான மொழியியல்பற்றிய ஆங்கில நூல்கள் அனைத்தையும் கற்று மொழி ஆராய்ச்சி அறிவையும் அதனை ஆங்கிலத்தில் புலப்படுத்தும் திறனையும் வளர்த்துக் கொண்டார். கவிதைகளிலும் சொற்பொழிவுகளிலும் கருத்து செலுத்தி வந்தவர் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை இலக்கிய இதழ்களில் எழுதினார். எனவே, தஞ்சாவூரில் மணம் வீசிய அவர் புகழ்ப்பூ தமிழகமெங்கும் மணம் வீசத் தொடங்கியது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்