Thursday, August 13, 2020

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி

  அகரமுதல

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி

இன்றைய இளைஞர் கூட்டம் பெரும்பாலும் திரைக்கலைஞர்கள் பின்னால் சென்று நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளனர். பிறரில் பெரும்பான்மையர் கட்சிக் கொத்தடிமைகளாக இருந்து வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டுள்ளார்கள். சில இலக்கியக் கூட்டங்களில் இளைஞர்கள் இருவரோ ஒருவரோ பங்கேற்பது உண்டு. இன்றைய இளைஞர்களில் நல்ல படைப்பாளிகளைக் காண்பது அரிது. ஆனால் இவற்றுக்கெல்லாம் விலக்காக இளநங்கை ஒருவர் சிறப்பாகப் பெரும்பணி ஆற்றி வருகிறார். அவர்தான் செல்வி கு.அ.தமிழ்மொழி.

அகவை 27 ஐத் தாண்டவில்லை. அதற்குள் நூலாசிரியராகவும் கவிஞராகவும் கட்டுரையாளராகவும் பேச்சாளராகவும் நூற் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இதழாளராகவும் தமிழ்நலனுக்கான போராட்டக்காரராகவும் பன்முகப்பாங்குடன் திகழ்கிறார்.

அருந்தவச்செல்வியான இவரைப் பெறும் பேறு பெற்றவர்கள் அறிவியல் ஆசிரியர் பெ.குமாரி, நூலகர் சீனு.அசோகன் ஆகிய இணையர். இவரது இளவலாகப் பேறு பெற்றவர் இளங்களலை இயன் மருத்துவரான கு.அ.அறிவாளன்.

தமிழ்நெஞ்சன் என்னும் புனைபெயரில் அறியப்பட்ட எழுத்தாளர், கவிஞர், தனித்தமிழ்க்காப்பாளர் புதுவைத்தமிழ்நெஞ்சனின் திருமகள் என்ற முறையில் இவர் வளரும் பொழுதே தமிழ்ச்சூழலில் வளர்ந்தவர். எனவே தமிழ் இவர் வயமானதில் வியப்பில்லை.

 தொண்டுள்ளத்தால் செவிலித்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தந்தையின் நூலகப்பணி ஈர்ப்பால் நூலகம்-செய்தி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். எனினும் இவரது குரல் வளமும் நா நலமும் இவரை ஊடகத்தின்பக்கம் திருப்பியது. இருபதுக்கும் மேற்பட்ட நூல் வெளியீட்டு விழாக்களையும் கல்லூரி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். எனவே, அகில இந்திய வானொலி நிலையப் பண்பலை அறிவிப்பாளர் ஆகப் பணியாற்றுகிறார்.

அதுபோல் சுட்டி விகடன் மாணவ ஆசிரியர் (2008-2009) பொறுப்பில் இருந்துள்ளார். மூவடி துளிப்பா திங்களிதழ் செய்தி ஆசிரியர் ஆகவும் திகழ்கிறார்.   சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் விளங்குகிறார்.            :

இக்கால  இருபால் இளைஞர்களிடமும் தமிழ் ஆர்வம் என்பது குறைவாகவே உள்ளது. இவரோ தனித்தமிழ் ஆர்வலராக விளங்கித் தூய தமிழில் நூல்கள் இயற்றிப் பரிசுகளும் பெற்றுள்ளார்.

  1. சிறகின் கீழ் வானம் ( துளிப்பா )
  2. கல் ! நில்! வெல்! ( சிறார் பாடல் )
  3. புத்தனைத் தேடும் போதி மரங்கள் ( துளிப்பா )
  4. நினைவில் வராத கனவுகள் ( புதுப்பா )
  5. திரி திரி பந்தம் ( சிறார் பாடல் )
  6. பறக்கும் பூந்தோட்டம் ( சிறார் சிறுகதைகள்)

என்பன இவரின் நூல்களாகும்.

6 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே அதுவரை இவர் எழுதிய 660 துளிப்பாக்களில் இருந்து சிலவற்றைத் தொகுக்கப்பெற்ற இவரது நூல் ‘சிறகின் கீழ் வானம்’ வெளிவந்தது. கருவிலே திருவுடைய இவருக்கு இஃது எளிய செயலே! இந்நூல் 2007ஆம் ஆண்டில் நடுவண் அரசின் தேசியக் குழந்தை விருதினையும் கவிஞாயிறு தாராபாரதி சிறப்புப் பரிசையும் மாரியப்பன் சுந்தராம்பாள் அறக்கட்டளை பரிசையும் பெற்றுள்ளது.           

புத்தனைத் தேடும் போதி மரங்கள்’  என்னும் நூல் அனைந்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பரிசையும் சென்னை கன்னிமாரா வாசகர் வட்டத்தின் மதிப்புறு பரிசையும்(2017) சிகரம் இலக்கிய இதழ்(சேலம்) நடத்திய துளிப்பா நூல் போட்டியில் முதல் பரிசையும் பொதிகை மின்னல் (சென்னை)17 ஆம் ஆண்டு விழா முதல் பரிசையும் பெற்ற சிறப்பிற்குரியது.

மேலும் இந்நூல் குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலைத் தமிழ்ப் பட்டதிற்காக மாணவி   தே.அசுவினியா “புத்தனைத் தேடும் போதிமரங்கள் – ஓர் ஆய்வு”  என்னும் தலைப்பில் ஆராய்ந்து ஆய் வேட்டையும் அளிததுள்ளார்.

இந்நூலுக்கான மற்றொரு சிறப்பு, இதில் இடம் பெற்றுள்ள குறும் பாக்கள் சில, தி.இரா.நினவு(எசு.இராமசாமி) நினைவுக் கல்லூரியின் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குரிய “இக்காலக் கவிதையும், சிறுகதையும் சமய இலக்கியமும் புதினமும்” என்ற பாடநூலில் துளிப்பா (ஐக்கூ) பிரிவில் இடம்பெற்றுள்ளன.

புதுக்கவிதைகள், துளிப்பாக்கள் என்றாலே பிற மொழிச்சொற்களைக் கலந்து எழுதுவதையே பெருமையாகப் பெரும்பான்மையர் எழுதுகின்றனர்.  ஆனால், இவர் அயல்மொழிக் கலப்பின்றித் தன் பெயருக்கேற்ப தமிழ்மொழியை மட்டுமே பயன்படுத்துகிறார். இவர் பாடல்கள் மன்பதை நலம் சார்ந்தவையாக உள்ளன. சான்றுக்கு இரண்டு வருமாறு: –

 “அமைதிப் புறா

குண்டடிபட்டுச் சிவப்பானது

ஈழப் படுகொலை “

 

“புத்தனைத் தேடும்

போதி மரங்கள்

எண்திசையிலும் போர்க்குரல்”

 

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்பதைப் படிக்கும் பொழுதே உள்ளத்தில் பதித்துக் கொண்டார். எனவே, மாணவ நிலையிலேயே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்றுப் பரிசுகளும் சிறப்புகளும் பெற்றவர். பின்னரும் பரிசுகள் இவரை நாடி வந்தன.

புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் ‘எழுக தமிழினமே’ என்ற தலைப்பில் நடத்திய பாப் போட்டியில் முதல் பரிசு(2017), தி.தேவிதாசனார் அறக்கட்டளை ‘வாணிதாசன் பா வளம்’ என்ற தலைப்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம்பரிசு (2019)

உரோமன் உரோலண்டு நூலகத்தின் 175 ஆம் ஆண்டு நினைவுப் பேச்சுப் போட்டியில் இளையோருக்கான முதல் பரிசு, நூலகத் தந்தை அரங்கநாதன் பிறந்தநாள் விழாவில் கட்டுரைக்கான முதல் பரிசு, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் கட்டுரைக்கான முதல் பரிசு (பத்தாயிரம் உரூவா) முதலியன இவரது திறமையை உலகிற்கு உணர்த்துவன.

இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வந்துள்ளன. அவற்றில் குறிக்கத்தக்கன

1.தமிழ்ச்சிட்டு, 2. தாமரை, 3. மிகத் தெளிவு, 4. கங்கா காவேரி, 5. நெல்,   6. கரந்தடி, 7. உண்மை, 8. நற்றமிழ், 9. தமிழியக்கம், 10. மண்மொழி, 11. தை,  12. இனிய ஐக்கூ, 13. தச்சன், 14. நாளை விடியும், 15. நம்மொழி, 16. சூழல், 17. செம்பருத்தி, 18. பட்டாம்பூச்சிகள், 19. நாற்று, 20. தமிழர் கண்ணோட்டம், 21. தினகரன், 22. பெரியார் பிஞ்சு, 23. ஏழை தாசன், 24. மாந்தன், 25. பொதிகை மின்னல், 26. வானகமே வையகமே, 27. உங்கள் பாரதி, 28. கலை, 29. புதுவை பாரதி, 30. புதுவை பாமரன், 31. குட்டி, 32. சுட்டி விகடன், 33. தமிழ்த்தேசம், 34. அருவி, 35. மஞ்சரி, 36. நற்றிணை, 37. தமிழ்நெஞ்சம் மின்னிதழ், 38. ஆக்கம் மின்னிதழ், 39. மின்மினி, 40. கொலுசு மின்னிதழ், 41. இனிய உதயம், 42. காமதேனு, 43.பொம்மி, 44. மங்கையர் மலர், 45.பாவையர் மலர், 46. மகளிர் ஓசை, 47. பெண்மை டுடே,  48. சிறுவர் மணி, 49. மூவடி, 50. உங்கள் பாரதி

இவரது படைப்புகள் பின்வரும் தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.

  1. திசை எங்கும் ஐக்கூ, 2. சிநேகம் வளர்க்கும் புன்னகை, 3 .தொகுப்பல்ல துடிப்பு, 4. கவித் தோரணம், 5. பெண்பாப் பேரிகை, 6. கண்ணாடி மனசு, 7. பேச நிறைய இருக்கிறது, 8. உயிர்த் துளி, 9. மாமனிதர் அபுதுல் கலாம், 10. குடையின் கீழ் வானம், 11.நிலா சூடிய நெற்றி, 12. சாவி துவாரத்தில் சூரியன், 13. தென்றலின் சுவடுகள், 14.காற்றில் மிதக்கும் சொற்கள், 15. கவித்தோரணம், 16. பட்டுக்கோட்டை பவள விழா மலர், 17. கவிமாலை, 18. தொட்டில் வாசம், 19. விருப்பக் குறியீடுகளில் வளைந்து நிற்கும் சொற்கள், 20. காற்றில் மிதக்கும் சொற்கள், 21. தமிழினக் களப் போராளி பெ.பராங்குசம், 22. பிரெஞ்சிந்திய விடுதலைப் போராளி தோழர் இரா. சீனுவாசன், 23. தமிழ்மாமணி நற்றமிழ் ஆசிரியர் புலவர் மு.இறைவிழியனார் வாழ்வும் பணியும், 24. குறிஞ்சி விழா மலர், 25. தாய்மொழிக் கல்வி சிறப்பு மலர், 26. திசையெங்கும் தீப்பொறி 27. ஐக்கூ ஆயிரம் – இலக்கியக் கழகம் ( சாகித்திய அகாதெமி ), 28.பெண்ணென

இவரது செவ்விகளால்(பேட்டிகளால்) சிறப்புற்ற இதழ்கள் வருமாறு

முகம், பெண்ணே நீ, சுட்டி விகடன் , நறுமுகை, தடம், புதிய தலைமுறை, பெண், பாண்டி (இ)டைம்சு, தினகரன், தச்சன், காமதேனு, தெக்கான் கிரானிக்கிள்.

கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் காலைப் பேரவையில் மூன்று ஆண்டுகள் துளிப்பா சொல்லி மாணாக்கர்களுக்குக் கவிதை ஈடுபாட்டை ஏற்படுத்தினார். அதன் பின்னர்ப் பாட்டரங்கங்களிலும் பாஙகுடன் பங்கேற்றுத்தமிழ் மணம் பரப்பி வருகிறார். அவற்றுள் சில வருமாறு:

ஐக்கூ கவிதைத் திருவிழா – வந்தவாசி

மகளிர் மகா கவியரங்கம்

முழு நிலா பாட்டரங்கம்

திங்கள் பாவரங்கம்

சாகித்திய அகாதெமி பாடல் வாசிப்பு

குறிஞ்சி விழா – செஞ்சி

புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் நாள் விழா

புதுவைத் தமிழ்ச் சங்க வாணிதாசன் விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

பாட்டு நங்கை போராட்ட நங்கையாகவும் திகழ்கிறார்.இவர் பங்கேற்ற போராட்டங்கள் சில.

தமிழ்ப் பயிற்று மொழிப் போராட்டக் குழு சார்பில் 2000 இல் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவினர் அரசுப்பணியாளர்கள் தமிழில் கையெழுத்துப் போட வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டம்

தமிழர் நலக் காப்பணி சார்பில் ஆங்கில மழலை வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் கொண்டு வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் , மறியல்

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்கக்கோரித் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டம்

தாத்தா விடுதலை வீரர் புதுவை இரா. சீனுவாசன் வழியில் நாட்டுப்பணிகளில் ஈர்க்கப்பட்டார். ஆதலின், பொதுப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறார். மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தின் தலைவர், பூந்தோட்டம் சிறார் சிந்தனைச் சிறகத்தின் செயலர், செம்படுகை நன்னீரகம் , புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினர் என்ற முறைகளில் மக்கள் தொண்டாற்றி வருகிறார்.சுற்றுச் சூழல் விழிப்புணர்வு – பாதுகாப்பு குறித்த கள நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.ஆழிப்பேரலைக்காக 1500 உருவாய் புதுச்சேரி முதலமைச்சரிடம் மாணவர் பொது நலத் தொண்டியக்கத்தின் சார்பாகக் கொடுத்துள்ளார்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.   (திருவள்ளுவர், திருக்குறள் 594)

அஃதாவது ஊக்கமுடையவன்(ள்) இடத்திற்கு வழி கேட்டு ஆக்கம் அவனை (ளை)ச் சென்று சேருமாம். அவ்வாறுதான் ஊக்கமுடையவராக இவர் விளங்குகிறார். எனவே, பரிசுகளும் விருதுகளும் இவரை நாடி வருகின்றன. இவரது படைப்பாற்றலால் மகிழ்ந்த பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து மகிழ்ந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன

1.) சீவா விருது 2003, புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம்

2.) கவித் தென்றல் 2005, உலகத் தமிழ் மாமன்றம், திண்டுக்கல்

3.) மனிதநேய முரசு 2005 , பெரியார் காமராசர் பேரவை, சோலையார்பேபேட்டை

4.) சிறுவர் கலைச் சிறகம் 2006, குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்

5.) அரிமதி தென்னகனார் அன்னை கோவிந்தம்மாள் விருது 2007, இளைஞர் அமைதி மையம் புதுச்சேரி

6.) சிந்தனைச் செம்மல் விருது 2007, தமிழ்க் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சென்னை

7.) (இ)யுவ கலா பாரதி விருது  2007, பாரதி (இ)யுவ கேந்திரா, மதுரை

8.) தேசியக் குழந்தை விருது 2007, நடுவண் அரசு மகளிர் -குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுதில்லி

9.) துளிப்பாத் துளிர் விருது 2007, செம்படுகை நன்னீரகம் புதுச்சேரி

10.)சிந்தனைச் செல்வி விருது 2007, புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்

11.)இளம் படைப்பாளி விருது 2017, புதுவைத் தமிழ்க் கலை மன்றம்

12.) அரும்பணி ஆலயம் விருது 2017, புதுவைத் தமிழ்க் கலை மன்றம்

13.) நட்சத்திரக்கவி விருது 2018, கவி ஓவியா இதழ்

14.) சிங்காரவேலர் பற்றாளர் விருது 2018, மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம்

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்

(திருவள்ளுவர், திருக்குறள் 70)

என்பதற்கேற்ப பெற்றோர் மகிழும் வண்ணம் மட்டுமல்லாமல் தான் பிறந்த புதுவை மண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பல்துறை வித்தகராக விளங்குகிறார் செவ்வி கு.அ.தமிழ்மொழி.

பல உயரிய விருதுகள் இவரை அடைவதற்காக வழி கேட்டுக் காத்துக்கொண்டிருக்கின்றன. கவிஞர் கு.அ.தமிழ்மொழிபற்றிய இக்கட்டுரை அவருக்கான சிறப்பல்ல. அவரைப்பற்றி எழுதி வெளியிடுவதே இவ்விதழுக்குச் சிறப்பு.

அவரது தந்தை புதுவைத்தமிழ்நெஞ்சன் கூறுவதுபோல்

தமிழ்நிலம் காக்கத் தன்னறி வாலே
தக்க தெல்லாம் செய்திடுவாள் – கு.அ.
தமிழ்மொழி …………………………………

………………………………………              நாம்
முன்னம் வாழ்ந்த முத்தமிழ்க் குடியின்
மூச்சாய் இருந்து
காத்திடுவாள்!

புரடடாசி 24, 2012 / 10.10.1993 இல் பிறந்த பன்முகக் கலைஞராகத் திகழும் கவிஞர், ஓவியர், படைப்பாளர் செல்வி கு.அ.தமிழ்மொழி நலம், வளம், புகழ், உயர்வு, சிறப்பு அடைந்து தமிழுடன் நூறாண்டு வாழ்க ! வாழ்கவே!

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

 

Wednesday, July 22, 2020

காலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ! – இலக்குவனார் திருவள்ளுவன்





தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்

கோவை ஞானி காலமானார்!


திறனாய்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, தமிழ் அறம், தமிழ்த்தேசியம், மார்சியம், பெரியாரியம், சூழலியம், மெய்யியல், ஈழ ஆதரவு, ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், இதழியல்  முதலிய தளங்களில் கால்பதித்து, 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வந்த அறிஞர் கோவை ஞானி  இன்று(ஆடி 14, 2051 / 22.07.2020) காலமானார்.
முற்றிய நீரிழிவு நோயால் பார்வையை இழந்தும்(1988) தளராமல் முன்னிலும் மிகுதியாகப் படைப்புகளில் ஈடுபட்ட செயற்பாட்டாளரின் செயலுக்கு இயற்கை ஓய்வு கொடுத்து விட்டது.
கோவை என்றால் நினைவிற்கு வருபவர்களில் முதலாமவர் அறிவியலறிஞர் கோ.துரைசாமி(நாயுடு) என்னும் (ஞ்)சி.டி.நாயுடு. இரண்டாமவர் கோவை ஞானி என அடையாளம் காணப்பட்டவர், அடையாளத்தை நிலைக்கச் செய்து விட்டு மறைந்து விட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் கருமாத்தாம்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த சோமனூர் இவரின் பிறந்த ஊர்.  கிருட்டிணசாமி, மாரியம்மாள் ஆகிய பெற்றோரின் எண்மக்களுள் ஒருவர். ஆனி 17, 1966 / 1-7-1935 இல்  பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பழனிச்சாமி.
கி.பழனிச்சாமி நண்பரால் ஞானியானார். இவரின் இளமைக்கால நண்பர் துரைசாமி ஞானி என்னும் பெயரில் எழுதிக் கொண்டிருந்தாராம். அவர்  ஒருநாள், “இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்” என்றாராம். தத்துவத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரும் அன்று ஞானி எனப் புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். ஊரிலும் கோவையிலும் கல்விகற்ற பின்னர், அண்ணாமலைப்பல்கைலக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றார். தன் பார்வை இழப்புவரை தமிழாசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அது முதல் இவரின் காதல் மனைவியான, உடற்கல்வி ஆசிரியர் மு.இந்திராணி இவரின் ஒரு கண்ணாக விளங்கினார். அக்கண் பார்வையும் ஆவணி 20, 2043 / 5.09.2012 அன்று புற்றுநோயால் அவர் மறைந்த பின்னர் பறிபோனது. உதவியாளரைக் கொண்டே படிக்கச் சொல்லிக் கேட்டும் எழுதச் சொல்லிப் படைத்தும் வந்தார். உதவியாளர் துணையுடன் இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றார்.   பாரிவள்ளல், மாதவன் என மக்கள் இருவரும்   உசா, கவிதா என மருமக்கள் இருவரும் பேரன்மார்கள் விவேகானந்தன், சித்தார்த்தன் எனப் பேரன்மார் இருவரும் உள்ளனர்.
பொதுவுடைமைவாதிகள் பலர், தமிழின் சிறப்பைப் புறந்தள்ளுபவர்களாகவும் தமிழின்காலத்தை ஏற்காதவர்களாகவும் உள்ளனர். ஆனால், உண்மையான பொதுவுடைமைவாதியான அறிஞர் கோவை ஞானி, மார்சியத்தை ஏற்றாலும் தமிழ்த்தேசியத்தை மூச்சாகக் கொண்டார். தமிழையும் தமிழுக்கு மிகவும் பிந்தைய சமற்கிருதம் பற்றியும் கொண்டிருந்த அவரது பார்வைகளில் ஒன்று வருமாறு:
“இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்று அறிஞர் பெருமக்கள் உரிமை கொண்டாடினாலும், இந்திய நாகரிகம் என்பதன் அடிப்படைகள் அனைத்திற்கும் ஊடகமாக இருப்பது திராவிட/தமிழ் நாகரிகம்தான். இந்தியாவின் வேளாண்மை, அறிவியல், வணிகம், கட்டடம், சிற்பம், கணிதம், ஏரணம்(தருக்கம்), மெய்யியல், இசை, மருத்துவம் முதலிய அனைத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருந்தது தமிழ் நாகரிகம்.
சமற்கிருதம் என்பதன் பொருள் திருந்திய / திருத்தம் செய்யப்பட்ட மொழி . இரிக்குவேதம் முதலியவை கி.பி முதல் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமற்கிருதம் என்ற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தச் சமற்கிருதம் கிரேக்கம், பாரசீகம், தமிழ் முதலிய பல மொழிகளின் கலவை. சமற்கிருதம் என்ற மொழி இந்தியாவில் பல்வேறு வட்டாரங்களில் உள்ள அறிஞர்கள், தமக்கிடையில் உறவு கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை மொழி. சமற்கிருதம் என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்று இந்தியாவில் எவரும் இல்லை. சமற்கிருத மொழிக்கு என்று ஒரு மாநிலமோ, ஓர் ஊரோ கூட இல்லை. தமிழ் மொழியிலிருந்து தொன்மையான எத்தனையோ சாத்திரங்கள் சமற்கிருதத்தில் பெயர்க்கப்பட்டன. சமற்கிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தவர்கள் தமிழர்கள். பாணினி, சாணக்கியர், பரதமுனிவர், சங்கரர், மத்துவர் முதலியவர்கள் தமிழகத்தில்தான் வாழ்ந்தனர். சமற்கிருதத்தில் எத்தனையோ நூல்கள் எழுதப்பட்ட இடம் காஞ்சிபுரம். வேதங்களின் உள்ளும் தமிழ்ச் சொற்கள், கருத்துகள் நிறைய உண்டு. சில அறிஞர்கள் கூறுவதுபோல சமற்கிருதமும் தமிழர்கள் படைத்த மொழிதான். சமற்கிருதம் புனித மொழி என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய். இந்தியாவில் இந்தி முதலிய வடஇந்திய மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை இலக்கணம் தந்தது தமிழ்தான், சமற்கிருதம் இல்லை. அம்பேத்கர் கூறியபடி மேற்கிலிருந்து வந்த ஐரோப்பியர்தான் பிராமணர்களையும், சமற்கிருதத்தையும் மகிமைப்படுத்தினர். அவர்களே பின்னர் தங்கள் பொய்யை உணர்ந்து கொண்டனர்.” (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல் , ஆனந்து, கூடு இணைய இதழ்)
தமிழின் உண்மைச்சிறப்பைக் கூறியதுடன், சமற்கிருதம்பற்றிய சிறப்பு மாயையையும் உடைக்கும் இப்போக்கால்தான் போலிப்பொதுவுடைமை வாதிகள் இவரைப் புறக்கணித்தனர்.
பெரியாரியத்தைப் பழிக்கும் மார்சியர்களிடையே, பெரியாரியத்தின் மையம் சமதருமம். இந்தப் புள்ளியில்தான் மார்சுடன் பெரியாரை இணைக்கிறேன் என்றார் இவர்.
மார்சியர்கள், இம்மண்ணில் இருந்து கொண்டு வேறுமண்தழுவிய பண்பாட்டை விதைக்கப் பார்த்தார்கள். அதனால் எடுபடாமல் போயிற்று. இதனை அறிஞர் கோவை ஞானி,
“மார்சியர்களுடைய தோல்விக்கான முதன்மைக் காரணமே, இந்த மண்ணின் தன்மையை அவர்களால் பெற முடியாததுதானே? திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டி இருந்ததாலேயே தமிழ் மரபையும் அவர்கள் ஒதுக்கினார்கள். திராவிட இயக்கத்தோடு தோழமையுடன் மார்சியர்கள் உரையாடியிருக்க வேண்டும். தமிழ் மெய்யியலை மார்சியர்கள் காண முடியாமல் போனது தற்செயலானது அல்ல. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையைப் பிராமணத் தலைவர்கள் ஆக்கிரமித்திருந்ததன் விளைவையும், இங்கே பொதுவுடைமைக் கட்சிகளில் பிராமணியத்தின் தாக்கம் எப்படியெல்லாம் இருந்தது என்பதையும் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும்.” (இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி , சமசு, தமிழ் இந்து, 20.06.2018) என விளக்குகிறார்.
“ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் சாதியின், பிராமணியத்தின் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டேன்” என்று கூறி அதனைக் களைய கருத்துகளைப் பொழிந்தார். பிராமணீய ஆதிக்கத்தால் தமிழுலகு ம் இந்தியத் துணைக்கண்டமும் அடைந்த தீமைகளைத்தான் இவர் விளக்கினாரே தவிர, பிராமணர்களை எதிர்த்துக் கூறுவதில்லை. தன்னுடன் பணியாற்றும் ஆகிரியர்களுள் பிராமணர்கள் மிகுதி என்றும் அவர்கள் அன்பும் பண்பும் கொண்ட நல்லோர்கள் என்றும் போற்றுகிறார்.
மார்சியத் திறனாய்வாளராகவும் மார்சியக் கோட்பாட்டாளராகவும் திகழ்ந்தார். மார்சியக் கோட்பாட்டாளர்கள் குறைவு. அவர்களிலும் தமிழ்த்தேசிய உணர்வு கொண்டோர் சிலரே ஆவர். அச்சிலருள் அறிஞர் கோவை ஞானியும் ஒருவர். அவர், இந்தியத் துணைக்கண்டம் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்பினார் என்பதை, “இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்தியத் தேசமென்று சொல்வதில் உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள்/பலதேசிய இனங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு தேசமென படைத்துறை முதலியவற்றைக் கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன் மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.” (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல், ஆனந்து, கூடு இணைய இதழ்) என்னும் வரிகள் காட்டி விடும்.
1960 இல் ஈழத்தமிழர் இலக்கிய உறவு கிடைத்த பின்னர் ஈழத் தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் போற்றி வந்தார். புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான் இன்றைக்கும் உயிருள்ள தமிழிலக்கியம் என்று கூறி வந்தார். எனவே, ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவற்றின் காரணமாகத் தமிழக வாசகர்கள் ஈழ இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட உந்துதலாக இருந்தார்.
ஈழ விடுதலைப் போராட்டம் தமிழக மக்களின் இரண்டகத்தால் சிதைந்ததாகப் பெரிதும் வருத்தப்பட்டார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகச் சூழலில் ‘சுகமாக’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெயரளவிற்குப் போராட்டங்கள் நடத்துகிறோம். துப்பாக்கிச்சூடு நமக்குத் தெரியாது. மிதப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழ் விடுதலை, உலகில் தமிழர் என்ற முறையில் நமக்கும் பெரும் மரியாதையைத் தந்திருக்கும். இத்தகைய மரியாதையை நாம் இழந்துவிட்டோம். (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல் , ஆனந்து, கூடு இணைய இதழ்) என்கிறார் அவர். உண்மைதான் நாம் உறுதியாகவும் மனித நேயத்துடனும் நடந்து கொண்டிருந்தால் தமிழ் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும்.
தமிழ்த்தேசியம் குறித்த அவரது கருத்து வருமாறு:
“என்னுடைய தமிழ்த் தேசியமானது, தமிழ் மொழியின் தொன்மை வழியே எனக்குள் இறங்குகிறது. வள்ளுவரை நான் எனக்குள் காண்கிறேன்.. கணியன் பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்க்கிறார். ஆழ்வார்களோடும் நாயன்மார்களோடும் நானும் கலந்திருக்கிறேன். ஆண்டாளோடு சேர்ந்து நானும் கண்ணனைத் தேடுகிறேன். நான் குறிப்பிடும் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி என்பது தமிழ் நாகரிகத்தின் ஆட்சி. செழுமையான தமிழ்க் கல்வி, சூழலை நசுக்காத தமிழ் வாழ்க்கை, எல்லாரையும் அரவணைக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டது என்னுடைய தமிழ் தேசியம். சங்க இலக்கியம் தொடங்கித் தமிழ் நிலம் முன்வைக்கும் அறம்தான் அதன் மையம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி வேளாண்மை, கல்வி, மருத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என்று பல தளங்களிலும் இன்று நாம் முன்வைக்கும் திறனாய்வுகளுக்கு மாற்றை முன்வைக்கக் கூடியது அது. சங்க இலக்கியத்திலிருந்து இதற்கான மூலப்பொருளை நான் பெறுகிறேன். எனக்கு தேசப் பேதம் இல்லை; மொழிப் பேதம் இல்லை; சாதி – மதப் பேதம் இல்லை என்ற பேருணர்வைக் கொண்டது என்னுடைய தமிழ்த் தேசியம். பெரியாரிடத்திலிருந்து பெறும் தொலைநோக்கின் தொடர்ச்சி அது.” (சமசு, தமிழ் இந்து, 20.06.2018)
தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டு இதழாளராகவும் விளங்கினார். 
புதிய தலைமுறை (1968-70), பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (67 இதழ்கள் வெளிவந்தன;1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.
இவை தொடர்பில் எனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவலைக் கூற விரும்புகிறேன்.
அறிஞர் கோவை ஞானி அவர்களைச் சில முறை சந்தித்து உரையாடியுள்ளேன். சில முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அளவளாவியுள்ளேன். அவர் 2011 நவம்பரில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தமிழ்நேயம் சார்பில் மாதந்தோறும் ‘நானும் என் தமிழும்’ என்னும் தலைப்பில் அறிஞர்களின் தமிழ்ப்பணி வரலாற்றை நூலாகக் கொண்டு வருவதாகவும்  ஆட்சித்துறையில் நான் மேற்கொண்ட அளவிடற்கரிய பணிகளைத் தமிழுலகம் முழுமையாக அறிந்து கொள்ள 100 பக்கங்களில் நூலாக எழுதித் தரவேண்டும் என்றும் கூறினார். மேலும் தந்தையார் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் வாழ்க்கைப் பதிவுகளையும் சரியாக 100 பக்கங்களில் நூலாக வெளியிட எழுதித் தருமாறும் வேண்டினார். அவரவர் பணிகளைத்தான் அவரவர் எழுத வேண்டும். எனினும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழுக்கான போராட்ட வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் உங்களை எழுதச்சொல்கிறேன். தன் வரலாறாக இல்லாமல் தந்தையார் வரலாற்றை எழுதுவது, இரு நூல் எழுதுவது என உங்களுக்கு மட்டும்தான் இந்த விதி விலக்கான வாய்ப்பைத் தருகிறேன். மறுக்காமல் உதவவேண்டும் என்றார். நான் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துவிட்டு என்னைப்பற்றிய நூலைப் பிறிதொருமுறை எழுதித் தருவதாகவும் தந்தையார்பற்றி எழுதித் தருவதாகவும் கூறி ஒரு வேண்டுகோளும் விடுத்தேன். அவர் 2012 புத்தாண்டு(சனவரி) வெளியீடாக இந்நூலை வெளியிட வேண்டும் என்றார். நான், 2012 பிப்பிரவரியில் மகள் பொறி தி.ஈழமலர்-பொறி வா.பாலாசி திருமணம் நடக்க உள்ளதாகவும் அதை முன்னிட்டு வருகையாளருக்குத் திருமண அன்பளிப்பாக வழங்க 1000 நூற்படிகள் கூடுதலாக வேண்டும் என்றும் கேட்டேன். உறுப்பினர்களுக்கு மட்டும்தான் வழங்கும் வகையில் அச்சிடுவதாகவும் எனினும் ஆவன செய்வதாகவும் கூறி நான் எழுதிய ‘தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்’ நூலைத் தமிழ் நேயத்தின் 49 ஆவது இதழாக அச்சிட்டு வெளியிட்டுத் தந்தார். அவர் பேசும்பொழுது, தமிழ்த்தேசியத்திற்கு உண்மையான வழிகாட்டி பேராசிரியர் சி.இலக்குவனார் என்றும் அவர் கூறிய மொழிவழித் தேசியக் கூட்டமைப்பை காலப்போக்கில் இந்தியா ஏற்கும் என்றும்  தாம் அதைத்தான் இப்பொழுது பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.  அவர் தந்தையார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மீது கொண்டிருந்த உண்மையான மதிப்பையும் என் மீது கொண்டிருந்த அன்பையும் வெளிப்படுத்தினார்.இவற்றை மறக்க இயலுமோ?
“எனது எழுத்துகளில், என் வாழ்வும், பட்டறிவும் அடங்கியிருக்கின்றன” என்னும் இவர் கூற்று இவர் படைப்புகளுக்கான அறிமுகம் ஆகும். அந்த வகையில் இவரின் 48 படைப்புகள் விவரம் வருமாறு:
திறனாய்வு நூல்கள்

  1. மார்சியமும் தமிழ் இலக்கியமும் – 1988
  2. தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் – 1994
  3. எண்பதுகளில் தமிழ் நாவல்கள் – 1994
  4. படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் –
  5. தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் – 1997
  6. நானும் என் தமிழும் – 1999
  7. தமிழன் வாழ்வும் வரலாறும் – 1999
  8. தமிழில் படைப்பியக்கம் – 1999
  9. மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் – 2001
  10. எதிர் எதிர் கோணங்களில் – 2002
  11. மார்க்சிய அழகியல் – 2002
  12. கவிதையிலிருந்து மெய்யியலுக்கு – 2002
  13. தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் – 2003
  14. தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் – 2004
  15. வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் – 2004
  16. தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் – 2005
  17. தமிழன்பன் படைப்பும் பார்வையும் – 2005
  18. வள்ளுவரின் அறவியலும் அழகியலும் – 2007
  19. தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் – 2008
  20. நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் – 2009
  21. செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் – 2010
  22. தமிழிலக்கியம் இன்றும் இனியும் – 2010
  23. வானம்பாடிகளின் கவிதை இயக்கம் – 2011
  24. ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் – 2012
  25. அகமும் புறமும் புதுப்புனல் – 2012
  26. அகமும் புறமும் தமிழ்நேயம் – 2012
  27. ஞானியின் எழுத்துலகம் – 2005
  28. ஞானியோடு நேர்காணல் – 2012
 மெய்யியல்
  1. மார்சியத்திற்கு அழிவில்லை – 2001
  2. மார்சியமும் மனித விடுதலையும் – 2012
  3. இந்திய வாழ்க்கையும் மார்சியமும் – 1975
  4. மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு – 1976
  5. கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை – 1996
  6. நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் – 2006
 கவிதை நூல்கள்
  1. கல்லிகை – 1995
  2. தொலைவிலிருந்து – 1989
  3. கல்லும் முள்ளும் கவிதைகளும் – 2012
 தொகுப்பு நூல்கள்
  1. புதிய தரிசனங்கள் – கலையும் அரசியலும் – 1997
  2. தமிழ்த் தேசியம் : பேருரைகள் – 1997
  3. அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் – 1997
  4. மார்சியத்தின் எதிர்காலம் – 1998
  5. படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் – 1999
  6. மார்சியத்தின் புதிய பரிமாணங்கள் – 1999
  7. விடுதலை இறையியல் – 1999
  8. இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் – 2000
  9. மார்சியம் தேடலும் திறனாய்வும் – 2000
  10. நிகழ் நூல் திறனாய்வுகள் 100 – 2001
  11. பெண்கள் வாழ்வியலும் படைப்பும் – 2003
இவற்றுள் புதிய தரிசனங்கள் – கலையும் அரசியலும் – 1997 என்பது 1900 பக்க அளவில் 3 தொகுதிகளாக வெளிவந்துள்ள பொன்னீலனின் புதினம்.இதில் இப்புதினம் குறித்த மதிப்புரைகள், வாசகர் மடல்கள் முதலியவற்றையும் தொகுத்துத் தந்துள்ளார். பொன்னீலனின் படைப்பு என்றாலும் இவரது தொகுப்புப்பணியின் காரணமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
‘கல்லிகை’ என்னும் நெடுங்கவிதை/குறுங்காவியம், எழுபதுகளின் தொடக்கத்தில் கோவையில் தோன்றி வளர்ந்த வானம்பாடி இயக்கத்தின் தூண்டுதலால் உருவானது. கல்லான அகலிகையின் கதையைப் புதுக்கவிதை பாணியில் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன் முதலான சிலர் இக்கால நோக்கில் அகலிகை பற்றிக் கதைகள் எழுதியிருப்பினும் கவிதையில் சிற்பாக வந்த படைப்பாக இது போற்றப்படுகிறது.இக்கவிதை நூலில், எனக்குள் ஒரு வானம்’ என்ற இன்னொரு கதைக் கவிதையும் அடங்கியுள்ளது.
புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா – தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), தி.இரா.நி,(எசு.ஆர். எம். ) பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
 13-06-2013 அன்று கோயம்புத்தூரில் அறிஞர் கோவைஞானியின் அன்பர்கள் ஒன்று கூடி அவரது அனைத்துப்பதிப்புகளையும் இணைய வழியாகக் கட்டணமின்றித் தருதல், கோவை அறிஞர்களின் நூல்களைத் திரட்டுதல் முதலான பணிகளுக்காகத் தமிழ் நேயம் அறக்கட்டளையை உருவாக்கியதாக எழுத்தாளர் செயமோகன் வலைப்பூவில் ‘கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை – நண்பர்களுக்கு வேண்டுகோள்’ என்னும் தலைப்பில் ஓர் அறிவிப்புச் செய்தி வந்திருந்தது. முனைவர் கு.முத்துக்குமார் அறிிவித்திருந்தார். இதன் இப்போதைய நிலை தெரியவில்லை. அறிஞர் கோவை ஞானியின் நினைவாகஇதனைச் சிறப்பாகச்செயல்படத்த வேண்டுகிறோம்.
சங்கக்கால இலக்கியங்களையும் இக்கால இலக்கியங்களையும் இணைக்கும் பாலமாக விளங்கிய அறிஞர் கோவை ஞானிக்கு நாம் செலுத்தும் உண்மையான நிலையான அஞ்சலியாக இதுவே இருக்கும். 
இலக்குவனார் திருவள்ளுவன்
காண்க:
சுப்பிரபாரதிமணியனின் உரை, வ.ந.கிரிதரனின் பதிவுகள் தளம்
ஞானியின் உலகம்: என் நண்பர்கள்,என் எழுத்தும் எண்ணமும் தமிழ் இந்து, 15.04.2017
கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல், ஆனந்து, கூடு இணைய இதழ்
இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி, சமசு, தமிழ் இந்து, 20.06.2018
 கோவை ஞானியுடன் வீதியுலா, முருகபூபதி, பயணிகள் பார்வையில்–03,நோயெல்நடேசன் வலைப்பூ

முரண்பட்ட சிந்தனையாளர்களை ஒன்றிணைத்தவர் ஞானி!,செல்வ புவியரசன், தமிழ் இந்து 05.07.2020
கோவை ஞானி வலைப்பூ
கோவை ஞானி இணையத்தளம்
கோவை ஞானி, விக்கிபீடியா
ஞானி பேசுகிறார், தமிழ் இந்து
தமிழ் இந்து இதழில் ஞானியார் குறித்துமேலும் சில கட்டுரைகள் உள்ளன. கண்டறிக.
இதழுரை / அகரமுதல




திருவாட்டி இந்திராணி ஞானி

Thursday, May 07, 2020

திருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனார் 1/3 – முனைவர் கி.சிவா


திருக்குறள் தொண்டர்

பூவை.பிதயாபரனாரின் வாழ்வும் அறப்பணிகளும்

1/3

தமிழால் தமிழுக்காகவும் திருக்குறளால் திருக்குறளுக்காகவும் வாழ்ந்து அறப்பணிகள் ஆற்றிவரும் பெருமகனார்தான், திருச்சி மாவட்டம், திருத்தவத்துறை என்னும் இலால்குடியை அடுத்த பூவாளூர் என்னும் ஊரில் பிறந்து தற்போது புள்ளம்பாடியில் வாழ்ந்து வருகின்ற தயாபரனார் அவர்கள்.
ஆளாளுக்கு ஓர் ஆசை உண்டு. இவருக்கும் இவர்தம் குடும்பத்தார்க்கும் திருக்குறளைப் பரப்புவதில் மிகுந்த ஆசை. அத்தோடு அறப்பணிகள் செய்வதில் இவருக்கு மிகுந்த ஆசை.
இளமையிலேயே உள்ளத்தில் ஊறிய தமிழ்   
இவருடைய இளமைக் காலத்தில் பூவாளூரில் இவர் தந்தை முதலானவர்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ சித்தாந்த சங்கத்திற்கு வருகை தந்த ஏராளமான தமிழ்ச் சான்றோர்களுக்குத் தொண்டாற்றியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரையைச் சேர்ந்த பெரும்புலவர் செகவீர பாண்டியனார், பெரும்புலவர் வச்சிரவேலு (முதலியார்), “சைவசித்தாந்த சரபம்” அருணை வடிவேல் (முதலியார்), பெரும்புலவர் நடேச (முதலியார்), தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் மகன் மறை.திருநாவுக்கரசு, தொல்காப்பியச் செம்மல் பேரா.கு.சுந்தரமூர்த்தி, தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப.சுந்தரேசனார் முதலான பற்பலருக்கு ஊழியம் செய்துள்ளார். அவர்களின் வாய்ச்சொற்களைச் செவிமடுத்துள்ளார். பெரியவர்களின் அணுக்கம், தமிழார்வத்தை இளமையிலேயே இவர் நெஞ்சில் ஊறச் செய்துள்ளது.
இந்தத் தமிழார்வம், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் ஆசிரியர் தியாகராச செட்டியாரின் பெயரில் தமிழ்ப்பேரவை ஒன்றை நிறுவ இவருக்கு உதவியது. பூவாளூரில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின்வழி 13 ஆண்டுகள் அறிஞர்களை அழைத்துவந்து சங்க இலக்கியங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றச் செய்துள்ளார். குமரிமுதல் புதுதில்லிவரை பூவாளூரின் பெயரைக் கொண்டுசேர்த்த பெருமை இவரைச் சாரும்.
இலவசமாய்த் தமிழ் வகுப்புகள்
பூவாளூரில் தமது 20ஆம் அகவையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கண வகுப்புகளை இலவசமாய் நடத்தத் தொடங்கினார். பின்னர் திருக்குறளையும் ஏழிளந்தமிழ் எனப்படும் ஆத்திசூடி முதலான நீதி நூல்களையும் 48 ஆண்டுகளாகத் தொடர்ந்து கற்பித்து வருகிறார். இதற்காக ஏறக்குறைய 9500 மணி நேரத்தைச் செலவிட்டுள்ளார். கூடுதலாக 20 மணித்துளிகள் ஓகமும்(யோகாவும்) கற்றுத் தருகிறார்.
பெற்ற பிள்ளைகளைப் போல் மற்ற பிள்ளைகளும்
இவருடைய மகன் திருமூலநாதன் நான்கு அகவையிலேயே திருக்குறள் முழுமையும் கற்று உலகச்சாதனை படைத்தார்மேலும் 22 தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். இந்தியாவிலும் கடல்கடந்து சென்றும் ஏராளமான மேடைகளில் பாடியும் பேசியும் கவனகங்களைச் செய்தும் பல பதக்கங்களையும் எண்ணற்ற பரிசுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு நான்கு அகவையிலேயே மதிப்புறு முனைவர் பட்டத்தைக் கலிபோர்னியாவிலுள்ள World Academy of Arts and Culture என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
இவருடைய மகள் காந்திமதி ஏழு அகவையில் திருக்குறள் முதலாகப் பல இலக்கியங்களிலிருந்து பல நூறு பாடல்களைத் தம்பியுடன் சேர்ந்து கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.
தன்னுடைய பிள்ளைகளைப் போல அறிவார்ந்த பிற பிள்ளைகளும் இருக்கக்கூடுமே என்று நினைத்த இவர், தென்காசியை அடுத்த ஆய்குடியில், தன் மகன் பெயரில் ‘திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை’ என்ற ஓர் அறக்கட்டளையை 1997இல் தொடங்கி, 1330 குறள்களையும் கூறும் சிறுவர்களுக்கு உரூபா.1330-உம் திருக்குறள் செல்வன் / செல்வி விருதும் வழங்க ஏற்பாடு செய்தார். கடந்த 22 ஆண்டுகளில் தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பணமுடிப்பும் விருதும் பெற்றுள்ளனர்
கடந்த சில ஆண்டுகளாகப் பரிசுத்தொகை 2000 உரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவுகளுக்காக இதுவரை யாரிடமும் எந்த நன்கொடையும் இவர் பெற்றதில்லை.
கலைவல்ல துணைவியார்
இவருடைய துணைவியார் திருமதி  நாகவல்லி அம்மையார் பன்மொழி அறிவுடையவர்1330 அருங்குறளும் மனப்பாடம் செய்தவர். இந்தியிலும் சமற்கிருதத்திலும் பட்டங்கள் பெற்றவர். முதல் 15 ஆண்டுகள் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இவரிடம் 13ஆண்டுகள் இந்தி படித்த மாணவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். பல சிறுகதைகளை இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.   
(தொடரும்)

-முனைவர் கி.சிவா,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
காந்திகிராம ஊரக நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் – 624 302, பேசி: 97517 79791